தக்ஷிலா ஸ்வர்ணமாலி ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பின்மூலம் தமிழ் வாசகவுலகில் அறிமுகமானவர். இந் நாவலின் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்ப்பாளராகவும் படைப்பாளியாகவும்கூட நன்கறியப்பட்டவர். இது, ஆதிரை வெளியீடாக ஜனவரி 2022இல் வெளிவந்த இந்த நாவலின் விமர்சனமல்ல. சில நாவல்களை அவ்வாறாக எடைபோடுவதும் எது காரணத்தாலோ சுலபத்தில் கூடிவருவதில்லை. முன்னோடிகளான நாவல்களுக்கு அவ்வாறான இடைஞ்சல்களை முன்பும் சிலவேளை சந்தித்திருக்கிறேன். இதனை சரியாகச் சொல்வதானால் விமர்சிப்புக்கான ஒரு பாதையை அமைத்தலெனக் கூறலாம். அண்மையில் நான் வாசித்த நல்ல நாவலாக ‘பீடி’ இருக்கிறவகையில், அவ்வாறான விருப்பம் எனக்கு ஏற்பட்ட காரணத்தை, எழுதுவதன் மூலம் எனக்காகவேயும் கண்டடையும் ஆர்வத்தில் இந்த முயற்சி. அதனால்தான் மேற்குலக நாவல் விதிகளின்படி அல்லாமல் அதை அதுவாகப் பார்க்கும் ஒரு ரசனைப் பாணியில் இந்த நாவலை நான் அணுகியிருக்கிறேன். என்றாலும் அதற்கு முன்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டிய சில விஷயங்கள், ‘பீடி’ நாவலைப் பொறுத்தமட்டிலன்றி பொதுவாகவே தற்கால நாவல்கள் குறித்து, உள.
சமீப காலமாக எழுத்தின் புதுமாதிரியாக இலக்கண விதிகளை மீறிய வேற்றுமை உருபுகளின் பயன்பாட்டை அதிகமாகக் கவனிக்கமுடிகிறது. ‘ஒரு’, ‘ஓர்’ ஆகிய ஒருமைச் சொற்களின் பேதமற்ற பயன்பாடு கவனமற்றுப் போகுமளவு பழக்கமாகியும் விட்டது. யாரும் அவ்வளவாகப் பொருள்செய்வதில்லை இப்போது. இன்னோர் அம்சம், வசனத்தில் எழுவாயை மறைத்துவிடுவது. வினையை யார் ஆற்றினாரென்பதைக் கண்டுபிடிப்பது வாசகருக்கு ஒரு மினக்கேடாகவே ஆகிவிடுகிறது. இயல்பிலும் பேச்சுத் தமிழையொட்டியும் வரும் மாற்றங்களை ஒப்புக்கொள்ள முடிகிற அதேவேளை, வலிந்த அவ்வாறான முயற்சிகள் வாசிப்புக்கு இடைஞ்சல் தருவதை ஒதுக்கிவிட முடிவதில்லை. இவையெல்லாம் வாசக அவதானத்தை கூர்மைப்படுத்தவென ஒரு சமாதானம் சொல்லப்படுவதுண்டு. அதை யோசனைக்கு எடுக்கலாம்.
- எழுத்தாளர் தக்ஷிலா ஸ்வர்ணமாலி -
‘பீடி’ நாவலில் அவ்வாறான பல உத்திகள், பின்னால் சேர்க்கப்பட்ட ஓவியங்கள் உட்பட, கையாளப்பட்டுள்ளன என்பது வெளிப்படை. வடிவ உத்தியாகவோ, வாசக அவதான உத்தியாகவோ இருக்கமுடியுமெனினும், இவைபற்றிய அச்சொட்டான முடிவுகளை இப்போதே கூறிவிட முடியாது. இவ்வாறான பிரதிகள் அமைந்துவரும் பாங்கில் காலத்தால் மட்டுமே புதுவகை நாவல்களின் விதியமைப்பைச் செய்யமுடியும். வாசக விமர்சகர் அதுவரை முடிவுசொல்ல இயலாதவர். இதை ஞாபகம்கொண்டு மேலே தொடரலாம்.
‘பீடி’ நாவலின் சிறப்பை வெளிப்படுத்துவதெனில் அதன் சாதக அம்சங்களைமட்டுமன்றி, அதன் பலவீனமான அம்சங்களையும் குறிப்பிட்டாகவேண்டும். அப்போது பலவீனமான அம்சங்களே அதிகமாய் இருப்பதான தோற்றம் தென்படும். நல்ல நாவலென்று அடையாளப் படுத்தப்பட்ட பின்னால் இப்படியான சுட்டுகை முரண்நகையாகத் தோன்றும். ஆனால் அந்த நாவல் எவ்வாறு சிறப்பான இடத்தை எய்தியது என்பதை உணர்த்த அதுவோர் எளிய உபாயமாகும்.
வாசிக்கத் துவங்கியதும் முதல் இடறலைச் செய்தது, நாவலின் பாத்திர உரையாடல்கள் தமிழக பேச்சு வழக்கில் இருந்தமையாகும். மூலப் பிரதியில் உரையாடல்கள் கதை நிகழ் பிராந்திய உரையாடலாக இருந்திருந்தாலும், இந்தியத் தமிழ்ப் பேச்சு மொழி மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் பேச்சுமொழிகூட பொருந்திப்போகாது. இந்நிலையில் தமிழக உரையாடற் பாங்கை மொழிபெயர்ப்பாளர் தேர்ந்துகொண்டதன் காரணம் விளங்கவில்லை. மொழிபெயர்ப்பு, மொழித் தழுவலென்ற மொழியாக்கத்தின் இரு கூறுகளில் எந்தப் பாங்கினைப் பயன்படுத்தியிருந்தாலும் பேச்சுவழக்கில் அவ்வகையான பாவிப்பு பிழையானது.
இதை நெருடலென்று குறிப்பிட்டிருந்தாலும், அது வாசகரிடத்தில் நெடுநேரம் நின்று நிலைப்பதில்லை. நாவல் தன் கட்டமைப்பால், கதையை நகர்த்தும் விதத்தால், தேர்ந்துகொண்ட நடையால் அந் நெருடல்களை வாசகர் சுலபத்தில் கடந்துசெல்ல வைக்கின்றது.
நாவலின் முக்கியமான அம்சம் அல்லது அம்சங்களிலொன்று அதன் நடையென்றே எனக்குப் படுகிறது. அது வித்தியாசமானது. அந்த நடை ஆரம்பத்தில் நாவலின் வேகத்தையும் சுவையையும் முன்னெடுத்துச் செல்வதாயில்லை. இந்த நடையை கதாப்பிரசங்க நடையென அனுபவபூர்வமாகக் சொல்ல விரும்புகிறேன். கதாப்பிரசங்கங்களைக் கேட்டிருப்பவர்களுக்கு எழுத்து வடிவ பிரதியொன்றின் அதுபோன்ற நடை எவ்வாறாய் இருக்குமென்பது தெரிந்திருக்கக்கூடும். அது வளவளவென்று மிகவும் விவரணையாய் இருப்பதோடு, எழுந்துசெல்ல முயல்பவர்களை இழுத்துவைத்து கதை சொல்வதுமாதிரியான ஒரு தன்மையும் கொண்டது.
ஆரம்பத்தில் கொஞ்சம் தொளதொளப்பிருந்தாலும், அது நூலை மூடிவைக்கிற அளவு உந்துதலை ஏற்படுத்தவில்லை. நாவலின் பக்கம் முப்பதில் நயனாநந்த கூற்றாக ‘நான் எனது எழுத்துக்களை இழுக்காமல் விரைவாகக் கூறிமுடிப்பதாக தடுமாற்றமேதுமின்றி உங்களிடம் உறுதியளிக்கிறேன்…’ என வருவதை படைப்பாளியின் உத்தரவாதமாகவும் வாசகரால் கொள்ளமுடியும். அந்தப் பக்கத்தின் மேலே செழுமை கூடிய அந்த நடையுத்தியில் நாவல் ஆழம்பெற்றுவிடுகிறது. 224 பக்க நூலின் பாதிக்கு மேலே நாவல் கலாபூர்வமாக படிநிலை வளர்ச்சியை அடைகிறது.
நாவலின் ஆரம்பம் இவ்வாறு இருக்கிறது: ஒரு புயற்காற்றின் வீச்சில் ஒரு கிராமத்தின் முதிர் பெரும் ஆலமரமொன்று பாறி விழுந்துவிடுகிறது. அந்த ஆலமரத்தின் அடியிலேதான் நயனாநந்தவின் மாமா புல்லாங்குழல் இசைத்து தன் அந்திப் பொழுதுகளைக் கழிக்கிறார். ஆலமரம் சாய்ந்து உக்கிப் போய் சில விஷமிகளால் தீ வைத்து எரிக்கும்வரை அந்த இடத்தில் வந்தமர்ந்து மௌனமாய் தூர வெளியைப் பார்த்துக்கொண்டிருப்பதும் அவரால் தவறாது செய்யப்பெறுகிறது."
அவர் புல்லாங்குழல் ஊதிவிட்டு பொழுது சாயும்வேளை அவ்விடம் நீங்க, அந்த மரத்தின் கிளையொன்றில் அவனது பெரியம்மா ஏறியமர்ந்துகொண்டு கவிதை பாடத் தொடங்குகிறாள். கடைசியில் புயலில் வீழும் ஆலமரத்துள் அகப்பட்டு உயிர் துறப்பவளும் ஆகின்றாள்.
ஒருவகையான வாழ்முறை பரம்பரை பரம்பரையாய்ச் சுவறிப்போன ஒரு குடும்பத்தின் அங்கம் அவள். நயனாநந்தவின் மாமாவும் அவ்வாறானவரே. தம் வாழ்முறையால், தம் சமகால சமூக இறுக்கங்களால் சுமையாகிப்போன வாழ்வின் தளர்வுக்கான செயற்பாடுகளாக அவர்களின் புல்லாங்குழல் ஊதலையும், கவிதை பாடலையும் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்களது செயற்பாடுகளைச் சூசகங்களாய்க் கொண்டால், அதிலிருந்து பல கிளைகள் துளிர்விட்டுக் கிளம்புகின்றன. சமூக பொருளாதார கலாச்சார அற விழுமியங்கள் ஒரு காலகட்டத்து வரலாற்று மாற்றங்களின் விளைவானவை. .
கொழும்பு பம்பலப்பிட்டியவில் அக் குடும்பம் வசித்தபோது நயனாநந்தவின் பாட்டியான மெட்டில்டாவின் குணநல விஸ்தரிப்புகளை பறங்கியினத்தவரில் அதிகமானவர்களின் மேல்நாட்டு நாகரிக பாதிப்பின் விளைவாக எடுத்துக்கொள்ளலாம். அவள்மீது ஏறியிருந்த கடன் சுமையின் அர்த்தம் அந்த வாழ்முறையின் ஆழ்ச்சிதான்.
கலாச்சார, அற நிலைமை மட்டுமல்ல,, பொருளாதார நிலையுமே மிக மோசமாக அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது.
கடந்துபோன இரண்டாம் உலக யுத்தமும், சுதந்திரத்தின் உடனடிப் பின்னான நாட்டின் அரசியல் ஸ்திரமின்மையும் விழுத்திய பொருளாதார நெருக்கடியில் நகரங்கள், மாநகரங்கள் நசித்துக்கொண்டிருந்தன. கிராமங்களுக்குத் திரும்புதல் என்பது தொடர்ந்தேர்ச்சியாக மக்களின் தேர்வாக இருந்தது. அக்கால இலக்கியப் போக்கும் அது குறித்த நாமத்தைக் கொண்டிருந்தது. இந்தியாவில் 1936இல் வெளிவந்த பிரேம்சந்த்’தின் ‘கோதான்’ நாவல் இதன் தொடக்கமாக விமர்சகர்களால் கருதப்பட்டது. இலங்கையில் இவ் வகைத்தான நாவலுக்கு மார்டின் விக்கிரமசிங்ஹவின் 1944இல் வெளிவந்த ‘கம்பெரலிய’ நாவலைச் சொல்வார்கள். அத்தனைக்கு ‘Back to the Soil’ என்ற கோஷம் உரமாகவும் உறுதியாகவும் இருந்தது. அது சில தசாப்தங்களை அளாவி பயில்விலிருந்தது என்பார்கள் இலக்கிய விமர்சகர்கள்.
புயற்காற்றில் ஆலமரம் பாறி விழுதல் பழமையின் வீழ்ச்சியாகக் கொண்டாலும், உருவாகும் புதிய சமுதாயமும் மக்களுக்கு அவ்வளவாக வசப்பட்டுப் போய்விடவில்லை என்பதையே நாவலின் தொடரும் நிகழ்வுகள் தெளிவுறுத்துகின்றன. இவை நாவலில் எங்கும் வெளிப்படையாக விவரணமாவதில்லை. எனினும் தேர்ந்த வாசகர் அதன் வெளிகளில் சரித்திரத்தின் இந்தப் பக்கங்களை தவறாது காணக்கூடியதாக இருக்கின்றது.
- மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரிப் -
நகரத்து பரம்பரைச் சொத்தை விற்றுவிட்டு கிராமத்துக்கு (அது கேகாலையில் ஹிக்கொட பிரதேசத்துக்கு அண்மித்த ஒரு கிராமமென ஊகிக்க முடிகிறது) வரும் பனங்கல ஆரச்சிகே குடும்பம் அங்கே கொள்ளும் வாழ்வியற் சிக்கல்கள் கனவுகள் ஆகியவையே கதையாக விரிகின்றன. நயனாநந்த, அவன் தங்கை நயனாநந்தி, நண்பன் வஜ்ரசேன, நயனின் அம்மா சுமனாவதி, அவனது பெரியம்மா, மாமா, பாட்டி மெட்டில்டா, நயனாநந்தவின் விருப்பம் விழும் ப்ரியம்வதா, சேலை கட்டிய பெண், அஞ்சலிகா மற்றும் சமரதுங்கவென கையடக்கமான சில பாத்திரங்ளைக்கொண்டு நாவல் தன் கருவையும் கதையையும் சிறப்பாகவே விரித்துரைக்கிறது.
நயன் தன் கற்பனையில் மயானவெளிக்கு அடுத்துள்ள வயற் பரப்போடு நிற்கும் காஞ்சிரை மரத்திலேறி அதன் கிளையொன்றில் அமர்ந்துகொண்டு புத்தருடனும், மற்றும் ரோஹண விஜேவீர, சொலமன் டயஸ் பண்டாரநாயக்க போன்றவர்களுடனும் உரையாடல் நிகழ்த்துவதை, நாவல் தன் யதார்த்தப்போக்கிலிருந்து திமிறி மாயாயதார்த்த பிரதியாக ஆக முயல்வதன் அடையாளமெனக் கொள்ளமுடியும். அது வாசிப்பில் .வெகு ரசனையையும் தருகிறது. பிரதியின் இந்த இரட்டைத் தட நகர்ச்சியை இலை காய் விதைகளில் விஷமுள்ள காஞ்சிரை மரத்தைநோக்கி ப்ரியம்வதா ஒரு கட்டு காராம்புல் கதிருடனும், ஒரு கட்டு பீடியுடனும் வரும்பொழுதே வாசகரால் புரிந்துகொள்ளப் பட்டுவிடுகிறது.
நயன் தன் வாசிப்பை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டாலும், அவனது தங்கை நயனாநந்தி அதைத் தொடரவே செய்கிறாள். அதனால்தான் நவீன கலை விஷயங்களான இசை, ஓவியம், கவிதைபோன்ற விஷயங்களில் பிரதியால் கணிசமானவளவு உள்நுழைய முடிந்திருக்கிறது. அது நாவலுக்கு ஒரு கனதியைத் தருகின்றது.
இதையோர் அரசியல் பிரதியாகச் சொல்லமுடிவதில்லை. சமகால அரசியல்பற்றிய நயனின் விமர்சனக் குரலையும், அவனது ஓவிய நண்பன் வஜ்ரசேனவின் கருத்துக்களையும் படைப்பாளியின் பார்வையையும் ஆளும் கட்சியின் மேலான அச்சமற்ற விமர்சனங்களாய்க் கருத முடியுமாயினும், இது அரசியல் நாவலல்ல. சில சமகால அரசியலின் அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன, அவ்வளவே. பிரதி யசோதராவையும், புத்தர் சம்பத்தப்பட்ட வரலாற்றையும்கூட மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறது. அப்போது அது மறுவாசிப்புப் பிரதியுமல்ல.
ஆனால் அவை எல்லாவற்றிற்குமான வெளி இந்த நாவலில் இருக்கிறது. பன்முக வாசிப்புப் பிரதியென்பார்கள் இதை.
ஜனநாயகம் பலஹீனமாக உள்ள ஒரு நாட்டில் அரசியல், மதம்பற்றிய விசாரணைகள் அச்சந் தருபவை. அதை பிரதி தயங்காமல் செய்திருக்கிறது. அத்துடன் அரசியல் அழுத்தத்தினால் சீர்கெட்ட மனித வாழ்வுபற்றிய துயரங்கள் கோபங்களின் பதிவாகவே அவை முதன்மையாய்த் தென்படவும் செய்கின்றன.
நயன் தன் மூன்று காதல்களையும் விளக்குமிடத்தில் ‘பீடி’ தனித்துவமான விவரணைப் பாங்கினைக் கொண்டிருக்கிறதெனச் சொல்லலாம். அவனது முதலாவது விருப்பத்துக்குரியவளாக ப்ரியம்வதா இருக்கிறாள். இரண்டாமவள் சேலை கட்டிய பெண். மூன்றாவதாக அவனது அத்தையின் அழகற்ற பெண் அஞ்சலிகா. அவளையே நயன் இறுதியில் திருமணம் செய்துகொள்கிறானென்பது கவனிக்கப்பட வேண்டும்.
வாழ்வியற் கனவுகளிலிருந்து நயன் மீண்டுவிட்டதன் அறிகுறியாக இதைக் கொள்ளலாம். பல்கலைக் கழக பட்டதாரியாகி தொழில் பார்க்கும் நயனாநந்தியின் தொழிற்சங்க வாதியும் பழைய தோழனுமான வசந்தனுடனான திருமணமும் அதையே மெய்ப்பிக்கிறது. ஒரு வகையில் கனவுரீதியான வாழ்விலிருந்து நீங்கி யதார்த்தமாய் வாழும்விதத்தை நாவல் வற்புறுத்துகிறதோ என்றும் ஒரு வாசகரை எண்ணத் தூண்டுகிறது.
‘பீடி’ என்ற இந்த நாவலின் தலைப்புபற்றி கனவுபற்றிய பிரஸ்தாபம் வரும் இந்த இடத்தில் கவனிப்பது பொருத்தமாயிருக்கும்.
ஒரு கட்டு காராம் புல் கதிரும், ஒரு கட்டு பீடியும்கொண்டு நயன் ஏறி அமர்ந்திருக்கும் காஞ்சிரை மரத்தைநோக்கி ப்ரியம்வதா வரும்போதே கனவும், அதிலிருந்து ஒரு பாய்ச்சலாய் யதார்த்த கட்டுமான மீறுகையும் பிரதியில் ஆரம்பித்து விடுகிறது. நயனின் அதீத கற்பனைகள் வளரும் இடமாக இருப்பது இந்த இடம்தான். ‘பீடி’ உயிர்ச்சத்தல்ல, அதுவொரு மயக்கப் பொருள் சிறிதாவோ பெரிதாகவோ. அதனால்தான் நயனின் அதீத கற்பனைகளும் அங்கே விரிகின்றன.
சாதாரண மனநிலையில் அபத்தமாய்க் கணிக்கப்படக் கூடிய அவனது யசோதராபற்றிய கேள்வியும் சாதாரண மனநிலையில் ஒருவருக்கு இலகுவில் கூடிவிடாது. அதற்கு ஒருவகை ஊக்கி வேண்டும். அந்த ஊக்கியாக ‘பீடி’ இருப்பதாய்க் கொள்வதில் தவறிருக்காதெனத் தோன்றுகிறது. ஆக,ஒருவகை மயக்கத்தின் அடையாளமாக பீடி இருப்பதால் நாவலும் ‘பீடி’யாயிற்று.
இந்த நாவலின் முக்கியமான அம்சமொன்றில் இனி கவனம் செலுத்தவேண்டும்.
கீழைத் தேயத்தினளவு தாய்மை ஒரு புனிதமான பிம்பமாக எங்கேயும் கொண்டாடப்படுவதில்லை. தமிழ்ச் சமூகத்தில் குடும்ப அசைவியக்கத்தின் முக்கிய அம்சமாகவும் தாய்மை கருதப்படுகிறது. ஆயினும் இப் புனித பிம்பத்தின்மீது இலக்கியரீதியான உடைப்புகள் ஏற்கனவே தமிழில் நடந்துவிட்டன. ‘அம்மா வந்தா’ளில் தி.ஜானகிராமன் அதைச் சாதித்திருக்கிறார் என்பர்.
ஆனால் ‘பீடி’யில் வரும் நயனின் அம்மாவும் வித்தியாசமானவளாக இருக்கிறாள். தன் அம்மாவை நயன் சிரித்தே கண்டிருக்கவில்லை. நயனின் பார்வையிலேயே அவனம்மா ‘வாயாடியாக, சிங்காரியாக, கடுமையான மோசமான பெண்ணாக’த் தென்படுகிறாள்.
எனினும் அவளது சமரதுங்கவுடனான உறவுக்கு நவீன இலக்கியம் அங்கீகாரமே கொடுக்கும். அவளது குணவியல்புகளும் ஒழுகலாறுகளும் அவளது தாய் மெட்டில்டாவினதில் இருந்து வித்தியாசமானவை. அவளது கவிதை பாடிய தமக்கையிலிருந்துகூட. அதை மேல்நாட்டார் விட்டுச்சென்ற எச்சமென அபவாதமாய்ச் சொல்லி தப்பித்துவிட முடியாது. அதை, நவீன சமூகம், வாழ்வியலின் சுதந்திரமான இயங்கியற் கதவென முன்மொழிகிறது. இத் தனிமனித சுதந்திரத்தையே இருத்தலியல் முக்கியமாய் வற்புறுத்துவதும்.
தன் சுகத்தைமட்டுமே குறியாகக்கொண்டு ஓர் அதிகாரப் போக்குடன் தனது பிள்ளைகளான நயனிடமும் நயனாநந்தியிடமும் சொல்லாமல் சுமனாவதி நடந்தாளென்று வேண்டுமானால் குற்றம்சொல்லலாம். தன் பிள்ளைகளிடம் அவள் அதைப் பிரஸ்;தாபித்து இருக்கவேண்டியது அவசியமாகவே இருந்தது. ஏனெனில் அவர்கள் அந்த வீட்டில் வசிப்பவர்கள்; போதுமான வயது வந்தவர்கள்; அறிவார்த்தமாய்ச் சிந்திப்பவர்கள்.
ஊருக்கும் தெரிந்து பிள்ளைகளுக்கும் தெரிந்தவிதமாய் நீண்ட கால உறவுகொண்டிருந்த சமரசிங்கவை எதுவித முன்னறிவித்தலுமின்றி வீட்டிற்கு அவள் வரவைக்கிறாள். அங்கேயே தங்கவைக்கிறாள். அதுதான் பிழையாகிறது அது அவளை தன் பிள்ளைகளிடமிருந்து பிரித்தும்விடுகிறது.
எவ்வாறாயிருந்தாலும் சமரதுங்க இரண்டாவது தடவையாகவும் அவளிடமிருந்து ஓடவே செய்கிறார். அவளும் மனநிலை குழம்பியவளாக மயானத்துக்கும் வயலுக்கும் அப்பாலிருந்த வெளிபார்த்து நிற்கிறாள்.
இவ்வாறான பழைய அற விழுமியங்களின் சரிவும், புதிய விழுமியங்களின் நிமிர்வும் சமூக இயங்கியற் கோட்பாட்டில் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றன என்பதே நாவலின் இறுதிக்கட்டத்தில் வரும் காஞ்சிரை மரத்தைத் தறிப்பதற்கும், அதைத் தடுப்பதற்கும் எடுக்கப்படும் முயற்சிகளாக விரிவுகொள்கின்றன.
தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன்மாதிரி மீண்டும் தன் மாயா யதார்த்தப் போக்கில் காலடி பதித்து நிறைவுறுகிறது நாவல்.
அதன் வாசிப்பை முடிக்கும்போது ஓரிரு பாத்திரங்களுடன் அஞ்சலிகா வளர்த்த நாய்கள் ‘ஹீங்காமி’யும் ‘சபீதா’வும்கூட நினைவில் எஞ்சுகின்றன. கூட சபீதாபற்றிய நகைச்சுவையும்.
ஹீங்காமி இறந்துபோக வீதியில் அகப்படும் வேறொரு நாய்க் குட்டியினை வளர்க்கத் துவங்குகிறாள் அஞ்சலிகா. அதற்கு என்ன பெயர் வைக்கலாமென அஞ்சலிகாவும் நயனும் யோசிக்கிறார்கள். அந்தக் குட்டி பயந்துபோய் இருந்ததால் அதற்கு பயப்படுபவள் என்ற அர்த்தம் வரும்படியான சபீதாவென்று பெயர் வைக்கலாம் ; சபீதாவென்று ஒரு நடிகையும் இருந்தாள் என்கிறான் நயன்.
‘ஆமா, அவளோட சாயலும் இருக்கு இதுக்கு’ என (பக் : 97) கல்மிஷமற்று அஞ்சலிகா சொல்கிறாள்.
இவ்வாறான நகைச்சுவைகள் அபூர்வமானவை.
‘பீடி’ நாவலின் பல் விகாசமெடுக்கும் அதன் அர்த்த வியாப்தி முக்கியமானது. அந்த அந்த அர்த்த வியாப்தி ஒவ்வொரு வாசகருக்கும் வெவ்வேறு வாசல்களைத் திறந்துவிடுவது வெகு சிறப்பு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.