Sidebar

பதிவுகளில் தேடுக!

பதிவுகள் -Off Canavas

இலங்கையென்னும் நாட்டில் அனைத்து மக்களும் சரிக்கு சமமாக இணைந்து வாழ்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்.  நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையினை நீக்குவோம்.  புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம். அதுவரை மாகாண சபையினை இயங்க வைப்போம். அரசியல் கைதிகளை விடுவிப்போம். '  இவ்விதம் பல வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளைக் கேட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு இன, மத, மொழி பேதமின்றி மக்கள்  2/3 அறுதிப் பெரும்பான்மையினை வழங்கியிருக்கின்றார்கள். பெரு வெற்றியை ஈட்டிய அவருக்கும் , ஏனையோருக்கும் வாழ்த்துகள். அநுர குமார திசநாயக்கவுக்கு இனித்  தன் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்குத் தடைகள் எவையுமில்லை. அவர் அவற்றை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம்.

அவருக்குப் பெரு வெற்றியைக் கொடுத்த தமிழ் மக்கள் மட்டக்களப்பு மூலம் எச்சரிக்கையொன்றையும் கொடுத்திருக்கின்றார்கள். தன்னை நம்பி வாக்களித்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம். மகிந்த ராஜபக்சவுக்குக் கொடுக்காத வெற்றியை அநுர குமார திசாநாயக்கவுக்கு  மக்கள் வழங்கியுள்ளார்கள். இவ்வெற்றியைப் படிக்கல்லாக வைத்து நாட்டின் அனைத்துப் பிரச்னைகளையும் அவர் தீர்க்க வேண்டும். தீர்த்தால் வரலாற்றில் சரித்திர புருசனாக நிலைத்து நிற்பார். தவறின் வரலாறு மீண்டுமொரு  தடவை சுழலும் பழைய இடத்தை நோக்கி.

நான் எதிர்பாராத ஒருவர் யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார். அவர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன்.  இவர் தன் செயல்கள் மூலம் தன் வாய்ப்புகளைக் கெடுத்து விட்டதாகவே எண்ணியிருந்தேன்.   இந்த வெற்றியும், அரசியல் அனுபவமும் இவருக்கு நிதானத்தைக் கொடுக்கட்டும். எடுத்ததற்கெல்லாம் உணர்ச்சி வசப்படும் இவர் போக்கு  நீங்கி அரசியல், அனுபவம் முதிர்ச்சி அடைய உதவட்டும்.

இவரது வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று  கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்தது, வாக்குகளைக் கேட்ட விடாமுயற்சி. வேறெவரும் இவ்விதம் கேட்டிருப்பார்களோ தெரியாது. அநுரா பெரும் மாற்றத்தை உருவாக்கினால் , அர்ச்சுனாவும் சிறியதொரு மாற்றத்தை உருவாக்கியுள்ளார். நீண்ட காலம் தமிழ் அரசியலில் இருந்த பலரைப் பின் தள்ளி , எவ்வித அரசியற் பின்புலமும் இல்லாமல் , மிகக்குறுகிய கால அரசியல் அனுபவத்துடன் உள்ளே நுழைந்துள்ளார். வெற்றி பெற்றிருக்கின்றார். இவரது இந்த வெற்றி இளைஞர்கள் பலருக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். முன்மாதிரியாக விளங்கும். இளையவர்களைத் தம் உழைப்பை முதலாகக்கொண்டு அரசியலில் நுழைய வழி வகுக்கும்.

அதே சமயம் சமூக ஊடகங்களின் வலிமையினையும் எடுத்துக்காட்டியிருக்கிறது இவரது வெற்றி.  இவரது வெற்றிக்கு முக்கிய காரணிகளில் ஒன்று சமூக ஊடகங்கள். பிரதான  ஊடகங்களும் , அரசியல் ஆய்வாளர்களும் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையில் சமூக ஊடகங்களே , அவ்வூடகங்களில் இயங்கும் இளம் ஊடகவியலாளர்களே இவரை மக்களைச சென்றடைய வைத்துள்ளார்கள்.  வாழ்த்துகள்.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட எம். ஏ. சுமந்திரன் அதிக விருப்பு வாக்குகள் கிடைக்காத நிலையிலும், யாழ் மாவட்டத்தில் கட்சி ஓர்  இடத்தையே பெற்ற நிலையிலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் தேசியப் பட்டியல் மூலம் செல்லும் வாய்ப்பு உள்ளது. அவர் அவ்விதம் செல்ல விரும்பவில்லையென்று கூறியிருந்தாலும், கட்சியின் செயற்குழுவின் முடிவை ஏற்பேன் என்றும் கூறியிருக்கின்றார்.  தமிழரசுக் கட்சியின் வெற்றியில் சுமந்திரனுக்கும் முக்கிய பங்குண்டு. கட்சி தேசியப்பட்டியல் மூலம் இவருக்கு இடத்தை வழங்கினால் , அதை ஏற்கும்படி கூறினால் இவர் ஏற்பார் என்றே நினைக்கின்றேன்.

மேலும் தமிழரசுக் கட்சியில் , யாழ் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பொறுத்தவரையில் அவருக்கே இரண்டாம் இடம். தேசியப் பட்டியலில் தெரிவு செய்வது சட்டரீதியானது. அவருக்கே அத்தெரிவும் கிடைக்க வேண்டும்.

தற்போது இலங்கையில் நடந்துள்ள ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களும், முடிவுகளும் முக்கியமானவை.  இச்சூழலில் ஜனாதிபதி புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதாகவும் வாக்குறுதி அளித்துள்ள நிலையில் , பாராளுமன்றத்தில் தமிழர் சார்பில் சட்டத்துறையில் அனுபவமும், பாண்டித்தியமும் மிக்க ஒருவராக சுமந்திரன் ஒருவரே இருக்கின்றார்.  தமிழர் அரசியலில் சட்டத்தரணிகள் பலர் இருந்தாலும் அவர்களில் தனது சட்டத்திறமையினை வெளிப்படுத்தி , அதன் மூலம் பொதுவெளியில் நன்கறியப்பட்டவர் இவர் ஒருவரே.இந்நிலையில் இவர் பாராளுமன்றத்தில் இருப்பது நல்லது. முக்கியமானது என்பது என் தனிப்பட்ட கருத்து.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்