இன்று விசேட காட்சியாக காண்பிக்கப்பட்ட 'தேன்கூடு' திரைப்படம் பல செய்திகளை நமக்குத் தந்தது. புருவங்களை மீண்டும் ஒருமுறை உயர்த்திய திரைப்படம் என்பேன். ஈழத்துத் திரைப்படம் ஒன்றைப் பார்த்த உணர்வு எதுவித மாற்றுக் கருத்தின்றியே அனைவராலும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கதைக்கரு கிழக்கு மாகாணம் ஒன்றில் ஆரம்பித்து பின்னர் வன்னிக்கூடாக இந்தியா வரை நகர்ந்து மீண்டும் ஈழம் நோக்கிப் பயணிக்கிறது. இரண்டு கதாபாத்திரங்களூடாக கதை நகர்த்திச் செல்வது பாராட்டக்கூடியது. சிறு சிறு பாத்திரங்கள் வந்து போனாலும் கதையைச் சிதைத்து விடாமல் பார்த்துக்கொள்ளுகின்றன. இந்தியாவில் சந்தித்து கதா நாயக/நாயகிக்கு உதவும் நண்பனாக சந்திரன் பாத்திரம் நாம் சந்தித்த சில நல்ல நண்பர்களை ஞாபகப்படுத்துகின்றது. இன்னும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை சந்திரன் பாத்திரம் ஊடாகக் கதாசிரியர் சொல்லிச் செல்கிறார். பாத்திரப் பொருத்தம் கவனமெடுக்கப்பட்டதில் பட இயக்குனரின் தெரிவு சிறப்பானது.
இந்திய சினிமாக்களிலிருந்து மாறுபட்டு தேவை கருதி தயாரிக்கப்பட்டிருக்கிறது. காட்சிக்கேற்ப சூழல்களை/ இடங்களை கண்டெடுத்து அதற்கேற்ப மனித அவலங்களை ஒரு பார்வையாளன் ஒன்றித்துப்போகும்படி அமைத்ததில் ஒருமித்த கவனிப்புக்கு தேன்கூடு நல்ல படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனலாம். கதாநாயகன், கதாநாயகி, இவர்களின் பெற்றோர்கள், சந்திரன், போராளிகள், இப்படி பல சிறு பாத்திரங்களுக்கப்பால் சொல்லப்பட்டிருக்கிற மெல்லிய காதல் இயல்பாகவே அமைந்துள்ளது.
கதாநாயகனாக நடித்தவர் ஈழத்தைச் சேர்ந்தவர் என்பதனால் மனித உணர்வுகளை/ஈழத்து ரனங்களை வெளிப்படுத்துகையில் நாம் இருக்கையில் உறைந்து போகிறோம் .நாயகியும் ஈடுகொடுத்து நடித்துள்ளமை பாராட்ட வேண்டியது. காதலை, பாசத்தை, கடமை உணர்வை, உயிரினங்கள் மீதான நேசத்தை வெளிப்படுத்துகையில் அனுபவம் பளிச்சிடுகின்றது. கிராமத்துக் கோயில், பூஜைகள், திருமணம், குடும்ப உறவுநிலை, இராணுவக் கெடுபிடிகள், தாக்குதல்கள், மனித உயிரிழப்புக்கள் நாமே பார்வையாளர்கள் என்பதை மறந்து ஒன்றிப்போகின்றோம். இங்கு தான் தேன்கூடு வெற்றி காண்கிறது. சொல்லப்படவேண்டியவற்றை சொல்வதில் நம்முடன் வாழ்ந்து அனுபவித்தவராலேயே உணர/ எழுத முடியும். அந்த வகையில் ' தேன்கூடு' திரும்பிப் பார்க்கவைத்துள்ளது எனலாம்.
எமது வழக்கு மொழியை யார் யாரோவெல்லாம் கையிலெடுத்துப் பார்த்திருக்கிறார்கள். நாடக மேடையை அலங்கரித்தவர்கள் வெறும் ஹாஸ்ய, நகைச்சுவைகளாக்கி அல்லது துணுக்குத் தோரணங்களாக்கி குதூகலம் அடைந்த போதும் பலராலும் கிண்டல் பொருளாக்கியதில் வருத்தம் உண்டு. வரணியூரான் போன்றோர்களின் சில நாடக உரையாடல்கள் திரும்பிப் பார்த்ததையும் மறுக்க முடியாது.
மாறாக, நிதர்சனம் தயாரித்த ஈழத்துச் சினிமா உறங்காத கண்மணிகள், எல்லாளன் வரை மண்ணின் மணம் செறிந்த படங்கள் வந்துள்ளன. அவைகள் மண்ணின் மொழி பேசின. அதனால் தான் மக்கள் மனதில் நிறைந்தவையாகவும், இன்றும் பேசவும் வைக்கின்றன.இரு இனத்தின் மொழியின் வலியை சொல்லுகிற எந்த ஊடகமும் அந்த பேசும் மொழியூடாக சொல்லுகின்ற பாத்திரங்கள் அமையவேண்டும். தமிழகம் நமக்குத் தந்திருக்கிற சில படங்கள், பாத்திரங்கள் ஈழத்து மொழியில் நல்ல பதிவைத் தரவில்லையே என்கிற ஆதங்கம்/கவலை உண்டு. ஆனால், தேன்கூடு அதனை தகர்த்திருக்கிறது என்பேன். படத்தின் சாராம்சமே கவிதை போன்றமைகிறது. ஒரு இனத்தின் களப் பாத்திரங்கள் பேசும் மொழி அன்னியப்படுமானால் அங்கு இனம் அல்லது கதாபாத்திரம் அழிந்தே போகும். இங்கு ஈழக் கதைக்களம் அன்னியப்பட்டுவிடாதபடி படமெடுத்ததிற்கு நன்றிகள்.இவை ஈழத்தின் கதை,ஈழத்தின் மாந்தர்,ஈழத்தின் வலி,ஈழத்தின் மொழி.இன்று ஐ.நா வரை அதிர்வைத் தந்திருக்கிற ஈழத்தமிழினத்தின் தேசிய மொழி. போராளிகள் பேசிய மொழி.கல்லறைகள் பேசும் மொழி.
எனவே, மொழி,நமது வழக்கு மொழியை அழிந்துவிடாதபடி படத்தை தந்தவர்க்கு பாராட்டுக்கள். ஒலி/ஒளித் தொகுப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள்..இடையிடையே வரலாற்றுப் பதிவுகளை கதைக்கேற்ப, காட்சிக்கேற்ப இணைத்திருப்பதில் சிறப்பைத் தருகின்றது. நீர்த்துப்போன உரையாடல்கள் தென்படவில்லை. காட்சிகளில் தொய்வு இல்லை என்றே சொல்ல வேண்டும். வெறுமனே- பாகிஸ்தான் தீவிரவாதிகளையே சுற்றிச் சுற்றிக் கதை பண்ணிக் காசாக்கும் தமிழகத் திரைப்படங்களிடையே இப்படியும் சிந்திக்கும் போது இவர்கள் துணிந்திருப்பது பாராட்ட்டத்தான் வேண்டும். சோர்ந்து போன மன நிலையில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையைத் தருகிற இறுதிக் காட்சி எம் கண்களில் கண்ணீர் .மனதில் எழுந்துவிட்டதான நிமிர்வு. சேதாரமில்லாத நம்பிக்கை ஒளி தேன்கூடு.
தேன்கூடு படத்தின் தலைப்பு அர்த்தமுள்ளதாய் உள்ளது. இலங்கை, இந்திய இராணுவ எதேச்சாதிகார போக்கின் விளைவு, தொடர் மரணம், ராஜிவ் கொலை, தமிழ் நாட்டு சூழல் மாற்றம், நட்பு, ஈழம் பற்றிய கனவுடன் மகனைத் தயார் செய்தபடி தன் மரணம் பற்றித் தெரிந்தே தெரிவு செய்த வாழ்வை நகர்த்தியபடி மரணிக்கிற போது இயக்குனரின் சிறப்பான நெறியாழ்கை அற்புதமானது. தேன்கூடு திரைப்படத்திற்கு நல்லாதரவை வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். இலங்கையில்,இந்தியாவில் திரையிட முடியாத சூழ்நிலை. இங்கிலாந்து மாத்திரமல்ல உலகம் பூராவும் வாழ்கின்ற தமிழ் உறவுகள் கைகொடுப்பதன் மூலம் நமது வரலாற்றை திரைமொழியிலும் எழுதும் எழுச்சியைப் பெறுவோம்.. தேன்கூட்டைக் கலைத்து விடாதிருப்போமாக.
21/04/2013
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.