- எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார். \ பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-
அத்தியாயம் ஒன்று: பயிற்சி முகாமில்..
இரண்டரை, மூன்று ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பனைமரங்களுடன் ,வடலியும் புதர்களையும் கொண்ட காடு பத்தியக் காணி.நெருக்கமான பனை மரங்களையே தூண்களாக்கி தென்னோலைக்கிடுகினால் கூரையும்,கதவுகளும் ,தட்டிகைகளுமாக வாடி போல அமைக்கப்பட்ட நீளக்கொட்டில். இது தான் பயிற்சி எடுப்பவர்களின் தங்குமடம்.கூரையில் பச்சைப் பனை ஓலைகளும் பரப்பி இருக்கிறார்கள்.மேலே இருந்து பார்ப்பவர்கள் கண்டறிய முடியாமல் இருப்பதற்கான மறைப்பு. இந்த முறை பயிற்சி எடுக்க வந்தவர்களில் பதினான்கு,பதினைந்து பேர்கள் , அராலி அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மிகுதியானவர்கள் ,பொன்னாலை, றாத்தலடி, சுளிபுரம், நிற்சாமம்,ஆனைக்கோட்டை ,சங்கானை...என பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள். மொத்தம் நாற்பது பேர்களாவது இருப்பார்கள். பயிற்சி அளிக்கிற சிவா ஆசிரியர் அவர்களோடு தங்கப் போகிறவர். பயிற்சிகளிற்கு உதவியாக சங்கானை அமைப்புப் தோழர்கள் வர இருக்கிறார்கள். ஆனால், அங்கே அவர்களோடு தங்கப் போகிறவர்கள் இல்லை.
" தோழர் சின்ன நேசன், உங்களுக்கு சிலதைச் சொல்லுவார்" என்று அவரைக் காட்டி விட்டு ஆசிரியர் சிரித்தார். "ஹா! ஹா!" என்று சிரித்து விட்டு கொட்டிலின் கிழக்குக் கோடிக்கு பெடியளை அழைத்துச் சென்றார். அடுப்பங்கரை எனத் தெரிந்தது. "இதை முதலில் நீங்கள் சுத்தப்படுத்த வேண்டும்" என்றார். முதலில் பயிற்சி முடித்தவர்கள் கரிகளுடன் அப்படியே விட்டுச் சென்றிருந்தனர். ஓர் ஈர்க்கில் விளக்குமாறையும், சிறிய சாக்குத் துண்டை ஒன்றையும் கொடுத்தார். குப்பையை கூட்டி அள்ளுவதற்கு ஏதுவாக சவல் போன்ற சிறிய கைபிடியுடனான பிளாஸ்டிக் துண்டு. தோழர்கள் ஐந்து நிமிசத்தில் சுத்தப்படுத்தி விட அதை வெளியில் கொண்டு போய்க் கொட்ட கிட்டத்தில் இருந்த ஓலைத் தட்டியையும் தூக்கித் திறந்தார். "அடுப்பை சிலசமயம் இப்படி சுத்தப்படுத்தி விட்டு சமைக்க வேண்டும் " என்றார். தொடர்ந்து" இண்டைக்கு இரவு உங்களுக்கு ஓசிச் சாப்பாடு வரும். நாளையிலிருந்து தான் நீங்கள் தான் சமைத்து சாப்பிடப் போறீர்கள். காலையிலே பாணும் சம்பலும் அடிக்கடி கொண்டு வருவோம். சிலவேளை பட்டினி கிடக்கவும் நேரிடலாம்" என்று சிரித்தார்.
தோழர் செழியன் , "உங்களுக்கு கிழமையில் ஒருநாள் அரிசி, பருப்பு கறுவாடு ...கொண்டு வருவோம். இரண்டு நாள்களுக்கு ஒரு தடவை மரக்கறிகள் வரும். ஒருநாள் மீன். நீங்கள் தாம் அளவைப் பார்த்துச் எடுத்துச் சமைக்க வேண்டும். ஏதும் தேவைப்பட்டால் சொல்ல வேண்டும். சமையலுக்குப் பொறுப்பானவர் தோழர் ராகவன். நீங்கள் எங்கள் எவரிமும் சொல்லலாம். நாம் அவரிடம் தெரியப்படுத்தி விடுவோம் " என்றார்.மத்தியானச் சாப்பாட்டைக் கவனிக்கிறது உங்களின் முழுப் பொறுப்பு. இரவிலே அதிகமாகப் பாணையே கொண்டு வருவோம். குளம்பு, சொதியை வைக்க வேண்டியிருக்கும். போகப் போகப் புரிந்து கொள்வீர்கள்" என்றவர், " சரி வாருங்கள் ஆசிரியரைச் சந்திப்போம் " எனக் கூட்டிக் கொண்டு நடுப்பகுதிக்கு வந்தார்.
வெளியில் சென்றவன் அமைப்பினருடன் ஆசிரியரையும் கூட்டி வந்தான். " உங்களுக்கு எண்கள் இடப்படுகிறது. தோழர், உங்கடப்பேரைச் சொல்லிப் போட்டு (புனைப்பெயர்) ஒன்று, இரண்டு என எண்ணையும் ஒவ்வொருவராகச் சொல்லி வாருங்கள் " என்ற தோழர் மதன், குறிப்புப் புத்தகத்தில் (கொப்பியில்) சொல்லச் சொல்ல எழுதத் தொடங்கினான். முடிந்ததும், " சரி முதல் எட்டுப் பேர்களும் முன்னால் வாருங்கள் " என்று ஆசிரியர் அழைத்தார். எண்களைச் சொல்ல தோழர்கள் முன்வர " நீங்கள் முதலாவது சமையற் குழு " என்றார். வந்தவர்களை புறம்பாக நிறுத்தி விட்டு,அடுத்த எண்மர், இரண்டாவது குழு. அப்படியே ஏழு நாட்களுக்குமாக நேர அட்டவணையும் தயாரிக்கப்பட்டது. 38 பேர்களே இருந்தார்கள். இரண்டு குழுக்களிலே ஒவ்வொருவர் குறைவாக இருந்தார்கள். எப்படியும் எண்களின்படி இலகுவாக நகரக் கூடியது தானே. நாள்கள் மாறி, மாறி வரப் போகிறது .
தோழர் ராகவன் , " உங்களுக்கு கொஞ்சம் விறகுகளை நாம் போட்டிருக்கிறோம். மிச்சதை நீங்கள் தான் இந்த வளவில் விழுந்து கிடக்கிற பாளை,(காய்ந்த) செடிகொடிகளின் தடிகளைப் பொறுக்கிச் சேர்த்து சமையலைச் செய்ய வேண்டும் " என்றான் ..கைக்காவலுக்கு மரத்தூள் , உமி அடுப்புகள் ஒவ்வொன்றும் ஒன்றும் வைத்திருக்கிறோம் . தேனீரை அவ்வடுப்புக்களிலே தயாரியுங்கள். பயிற்சி நிலைகளில் மாற்றுற போது கழிக்கிற பழைய மரத்தூளை,உமியை அடுப்பிலே அடைந்து பாவியுங்கள். கரி, உமிச்சாம்பலை பல் விளக்க பற்பொடிகளாக பாவிக்கலாம். இரண்டொரு பூவரசமரங்களும் இருக்கின்றன. குச்சிகளை ஒடித்தும் சப்பியும் கூடப் பயன்படுத்தலாம். உங்கள் விருப்பம் " என்றார். கூட நின்ற பாரித் தோழர் " இதுவரையில் நீங்கள் செய்திராத மகாப் பிரச்சனை ஒன்று இருக்கிறது. பரந்த வளவு தெரியும். பற்றைகள் , பூண்டுகளும் புற்களும் இருக்கின்றன. என்னச் சொல்ல வாரேன் என்பது புரிந்திருக்கும். ஆம் !, கொல்லைக்கு போறல். இயற்கை உபாதைக் கழித்தல். சிறுபேணிகள் கிணற்றடிப்பக்கம் இருக்கின்றன. கழித்தப் பிறகு இலைகளால் வடிவாத் துடைத்து விட்டுத் தான் கிணற்றடிப் பக்கமிருக்கிற மறைப்புப்பின்னால் பேணித் தண்ணியால் கழுவ வேண்டும். நல்லாய்த் துடைத்தீர்கள் என்றால் கழுவவும் தேவையில்லை தான் " என்று கூறிச் சிரித்தான்.
தோழர் செந்தில் " இன்னொரு விசயம் ! . இந்த முகாம் ஒரு மாசமளவில் நடைப்பெற இருப்பது. யாருமே முகாமை விட்டு ஓட முடியாது. ஓடினால் உங்களுக்குத் தெரியுமோ தெரியாது. முகாம் தண்டனை வழங்கும். ஓடுறதுக்கு பெரும்பாலும் சில்லறைக் காரணங்களே இருப்பவை. எனவே ஓடும் எண்ணத்தை விட்டு விடுங்கள். பொறுமையாய் இருந்து பயிற்சிகளை எடுங்கள்"என்று எச்சரிக்கைச் செய்தார்.
ஆசிரியர் சிவா " இவை சம்பிரதாயமாகச் சொல்லப்படுற விசங்கள். கவனமாகக் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்" என்று எல்லாரையும் பார்த்தார்.
இரவுச் சப்பாட்டைக் கொடுத்து விட்டு அமைப்பினர் அகன்று விட்டார்கள். ஆசிரியர் சிவா மட்டும் அவர்களுடன் தங்கி இருந்தார். தோழர்களில் சிலர் " ஆசிரியர், நாம் பாட்டுப் பாடலாமா?" எனக் கேட்டனர். " தாராளமாக " என்றவர், " காதையும் கொஞ்சம் திறந்து வைத்திருக்க வேண்டும் " என்றவர் , " கெலியின் (இறக்கைச் ) சத்தம் அதிலிருப்பவர்களிற்கு வெளியில் இருக்கிற சத்தத்தை வெகுவாகக் குறைத்து விடும். இருந்தாலும் நாமும் காது கொடுத்து எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் அல்லவா ! . இப்பத் தானே புதுக் கருவிகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. எதிரி கம்பி ஒன்றை தொங்க விட்டும் கேட்டு விடுவான். சத்தமில்லாத கெலி இன்னமும் கண்டு பிடிக்கவில்லை. அந்தளவில் நாம் அதிருஸ்டசாலிகள் " என்றார். சுற்றுததை அமைப்பும் கவனிக்கும். இவர்களிடம் தொடர்பாடல்க் கருவிகள் இல்லை .சைக்கிள் ஓட்டத்திலே பரிமாற வேண்டி இருந்தன. கருவிகள் இருந்தாலும்... ஜி.பி.எஸ் ஆல் மிகப் பெரிய ( ஆபத்தானவை என்ற ) பலவீனத்தையும் காவி இருக்கின்றன .
முதலில், வட்டுக்கோட்டைத் தோழர் அருட்சுனன் பாடினான். என்ன பாட்டைப் பாடினான்? நினைவுப்படுத்திப் பார்த்தான், வரவில்லை.நல்ல குரல் வளம். எழுபது புள்ளிகள் விழுந்தன. அராலியும் வட்டுக்கோட்டையும் நெருங்கிய சம்பந்தமுடையவை. அடுத்ததாக குளறி பாடினான். பரவாயில்லை. 'பாட்டின் ஏற்ற இறக்கத்தை நுணுக்கமாகக் கவனித்து பாட வேண்டும் ' என்பது தான் முக்கியமானது . அதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தான். ஆனால், அவனுக்கு இளையராஜா போல குரல். சில பாடல்களுக்கு மட்டும் தான் எடுப்பாக இருக்கும். ஜெயராமனின் பாட்டு போல பொருந்தாமையும் தட்டுப்படக் கூடியது. அவனுக்கு ஐம்பது புள்ளிகளைப் போட்டார்கள். " இயக்கப் பாட்டுக்களையும் பாடுங்கடா " என்று ஆசிரியர் சிவா சொன்னார். ஆனால் தோழர்களுக்கு அந்தப் பாட்டுக் கசட்டுகள் கிடைத்திருக்கவில்லை போல இருக்கிறது. பாடவில்லை. சிவாவுக்கு ஒன்று, இரண்டு வரிகள் தான் தெரியும். அதை இழுத்து விட்டு நின்று விட்டார். முழுமையாக தெரிந்திருக்கவில்லை. ஜீவன் "வீட்டிலே கசட் இருக்கிறது.முகாம் முடிய தாரேன். பாடிப் பழகுங்கடா" என்று இருவரிடமும் கூறினான்.
இருவருமே அயலவர்கள்; தோழர்கள். ஆறேழு சினிமாப் பாட்டுகளை பாடி இருப்பார்கள். தியாகுவும், ரஜனியும் தாளம் என்று எதையோ தட்டினார்கள். ஒரு கலையை கற்றே இருக்க வேண்டும் என்பதைப் பலர் உணரவே செய்தார்கள். ஜீவனுக்குக் கற்பதுக்கு வாய்ப்பிருந்தது. ஊக்குவிக்கப்படவில்லை. சமுதாயம் முட்டாள் தனமானக் கருத்துக்களை வைத்திருப்பதால் சமூகங்களும் தம் திறமைகளை புறம் தள்ளிக் கொண்டு வருகின்றன. இக்கரைகளுக்கு காலனிப்பச்சையிலும் கூடுதல் மயக்கங்கள் வேறு இருக்கின்றன. பாட்டுக்குப் புள்ளிகளைப் போட்டவர்கள் ஆனைக்கோட்டைத் தோழர்கள். அதுவும் ஓய்ந்து போனது. " அண்ணை ..." என்று விளித்து அராலித் தோழர்கள் ஆனைக்கோட்டைத் தோழர்களிடம் நிறைய கேள்விகளைக் கேட்ட போது சிரித்த முகத்துடன் பொறுமையாக பாசமாக பதிலளித்தது ...நிறையப் பிடித்துப்போக உடனேயே கேட்டு விட்டார்கள். "அண்ணை முகாம் முடிய உங்க ஊருக்கு வந்து உங்களைச் சந்திக்கலாமா?". உடனே ஒரு தோழர் நிலத்தில் குந்த ஒருவர், கூரையிலிருந்து குச்சி ஒன்றை ஒடித்துக் கொடுக்க " அப்பன் ,இங்கே பாருங்கள் . இது தான் சந்தி. இந்த ஒழுங்கையாலே சிறிது தூரம் வர வேண்டும். தவறினாலும் , மூன்று வளவுகள் சேர்ந்த வீடு என்றால் காட்டுவார்கள். எங்கள் மூவரின் வீடுகளும் ஒரே வளவாக, உள்ளே உள்ள வேலிகளை எடுத்து விட்டிருக்கிறோம்". ஒரு தோழரைக் காட்டி இவனின் அம்மா ஆசிரியை, சமூக சேவையாளர். அயலவர்களுக்கும் நிறையப் பிடிக்கும். தவற மாட்டீர்கள். தாராளமாக வாருங்கள் "என்று கூறி ஒரு தோழரின் உண்மைப் பெயரையும் கூறினார்கள். வீட்டாருக்கு குழப்பம் ஏற்படக் கூடாது அல்லவா. அது அராலிப் பெடியள்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஜீவன் தன் பெடியளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். . "உன்ர பெடியளுக்கு நல்லாய் சொக்குப் பொடி போட்டு விட்டார்கள்" என்று தியாகு கூறிச் சிரித்தான்.
இரண்டாம் நாள் ஜீவனின் கிராமத்தைச் சேர்ந்த கோமதி ஆசிரியையின் மகன் விமலும் முகாமிற்கு வந்து சேர்ந்தான். ஜீவனின் அம்மாவும் ஆசிரியை. இருவரும் வேறு நெருங்கிய சிநேகிதிகள். அவன் வீட்டுச் செய்திகள் எல்லாம் அம்மா மூலமாக ஜீவனுக்கு எப்படியும் தெரிந்து விடும். விமல் மச்சம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவன். ' மச்சம் ' என்றால் மீன் தான். அவனுக்கு உடம்பு வைத்தது போல தோன்றியது. மரக்கறிக்கு மாறி விட்டான். பகிடி என்னவென்றால் மாலையில் தமக்குள் ஜாரி பிரித்து கால்பந்து விளையாடுறவர்கள். இப்படி மாறிய பிறகே ஒன்று, இரண்டு கோல்களும் கூட அடித்தான். பெடியள்கள் "மரக்கறி தான் ஸ்ரோங்" என்று பகிடி பண்ண நிரந்தரமாகவே மாறி விட்டான். ஜீவனின் அம்மாவோ சிறிய வயதிலிருந்தே காந்தியைப் போல மரக்கறி. கோமதி ஆசிரியை வீடு அப்படி இல்லை.இப்படி மாறி விட்டதால் அவருக்கு நிறை உணவுக்காக கட்டாயம் பருப்புக்கறி வைத்தேயாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. மீன் சாப்பாடே உண்மையிலே திறமான சாப்பாடு. எளிமையான நிறையுணவு. குழப்பி விட்டால்...பருப்பு மட்டுமா, இன்னும் மரக்கறிகள் எல்லாம் தேட வேண்டி இருக்கும். ஜீவன் வீட்டிலே பெண்பிள்ளைகள்தான் தான் கூட. அவர்களுக்கு மரக்கறி சரி. கொஞ்சம் உடம்பு வைக்கிற மாதிரி நினைப்பு வந்தாலே சறுக்கிப் போய் மரக்கறியிலே விழுந்து விடுவார்கள்.
விமலின் அப்பா தமிழரசுக்கட்சியின் தீவிரத் தொண்டர். கூட்டணிக் குடும்பம். எல்லாக் கிராமங்களிலும் பொதுவாக ஒன்றோ,இரண்டோ கூட்டணிக் குடும்பங்கள் இருப்பதே வழக்கம். அராலிக் கிராமத்திலோ எல்லாச் சமூகங்களிலுமே கூட்டணிக் குடும்பங்கள் இருந்தன. அதனால் "அமைதிக்கிராமம்" என்றே வெளியார் அராலியை நெடுக அழைத்தனர். எந்தப்பகுதியில் பிரச்சனைத் தீ பிடித்தாலும் வாசிகசாலைகளில் கூடி அணைத்து விடுவார்கள் . அதனால், மக்கள் முதலில் கதைப்பது இவர்களோடு தான். இவர்கள் சொல்வதை எவரும் கேட்பார்கள். முற்போக்கானவர்கள். விமல்,அவன் அப்பாவிடம் நேரிலே நின்று " என்ர நண்பர்கள் எல்லாரும் பயிற்சிக்குப் போய் விட்டார்கள். நானும் போகப் போறேன் " என்று அடுத்த நாள் கேட்டிருக்கிறான். அவர் "போ" என்று அனுமதி கொடுத்திருக்கிறார். அப்படி வீட்டிலே கேட்டு வந்த ஒரே ஒரு தோழர் அவன்.
தாய்மார்கள் தான் உள்ளே குமைந்தார்கள் .ஜீவனின் அம்மாவிடமே வந்து கோமதி ஆசிரியை தன் ஆற்றாமையைக் கொட்டினார். " இந்த மனுசன் கண்டித்து வைக்க வேண்டாமா? இப்படி இருக்கிறாரே ? ".அம்மா " விடுங்கள் ரீச்சர், நம்பிள்ளைகள் எல்லாம் திசை தெரியாமல் குழம்புற பறவைகள். அதுகள் பறந்து களைத்து திரும்பி வருங்கள். காலத்தோடு ஒத்தது என மனதைச் சமாதானப் படுத்த வேண்டியது தான் " என்று பதிலளித்திருக்கிறார். " இந்தச்சிங்கள இனவாதத்தால் இன்னும் என்னென்னப் படப் போகிறோமோ ? பிள்ளையாரப்பா, முருகா நீ தான் காப்பாற்ற வேண்டும்" என அவர் கடவுளைக் கும்பிட்டுக் கொண்டார்.
அதே நாள் தான் ஐயரும் வந்து சேர்ந்தார்.அவரை ஜீவனுக்கு முதலிலேத் தெரியும். ஐயர் இயக்கத்தில் இழுபட்டவரில்லை. அவருடைய தம்பி தான் பாடசாலையிலிருந்து மாணவர்கள் அள்ளுப்பட்ட போது சேர்ந்து போய் இருந்தான். இரண்டு கிழமைக்கு முதல் தான் அந்த பிரிவினர் பயிற்சி முடித்து இருளில் வள்ளத்தில் திரும்பி வருகிற போது படையின் கண்ணில் அகப்பட , துரத்துப்பட்டு கவிழ்ந்து ஓட்டிகளைத் தவிர எல்லோருமே இறந்து போய் விட்டார்கள். ஈழநாடு பத்திரிகை ஒன்று மட்டுமே பெரிய துயரச் செய்தியை முன்செய்தியாய்ப் போட்டு கவலைப்பட்டு தலையங்கமும் எழுதி இருந்தது. வேலைக்கும் போகாது பித்துப் பிடித்தவர் போல ஐயர் இருந்திருக்கிறார். மாலித் தோழர் தான் " நீ இப்படியே இருந்தால் தட்டிக் கிட்டிப் போய் விடுவாய். போய் பயிற்சியை எடு " என்று அனுப்பி இருக்கிறார். காலை உடற்பயிற்சியில் நின்ற போதே இருவரையும் பாரி கொண்டு வந்து சேர்த்தான். செழியன் ஆசிரியருடனே நின்றிருந்தான். பாரியோடு வந்தவர்கள் உமி ஏற்றி வருவதற்கு சிவா ஆசிரியரிடம் கேட்டு பயிற்சித் தோழர்களிடமிருந்தும் மூன்று பேர்களைப் பெற்றுக் கொண்டுச் சென்றார்கள். அன்று மழைக் குணமாக இருக்கவில்லை. தோழர்களை கை ,கால்களை அலம்ப அனுப்புற போது " இன்றைக்கு நண்பகல் பயிற்சி இல்லை, முதல் தடைப் பயிற்சி செய்யப் போவதால் உங்களுக்கு ஒய்வு விடப்படுகிறது " என்று தெரிவித்தார்.
இரண்டு மணியிலிருந்து மூன்றரை வரைக்கும் நடைபெறுகிற அப்பயிற்சியில் ஸ்பிரிங் கணக்கில் ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி இருந்து எழும்புறதும், இரு கால்களையுமே நீட்டி இருக்க முயல்வதும் அடக்கம். கவடு விரியணும், கவடு உடையணும் என்றதுக்காக செய்யப்படுகின்றன. கராட்டியில் நடைபெறுகிற பயமுறுத்தலான பயிற்சிகள். உண்மையில் உடையிறதில்லை, 'இளகிறது' என்று தான் சொல்ல வேண்டும்.குழந்தைப் பிள்ளைகள் அசலாகச் செய்யும். அப்ப இருந்தே விளையாட்டுப் பயிற்சிகளை பழக்கிக் கொண்டு வர வேண்டியதொன்று. படிப்பை , வேலை வாய்ப்புக்களைக் கடினமாக்கியதால்....நம்முன்னோர் வெற்றி பெற்றிருந்த பல நல்ல விசயங்களை தவற விட்டு விட்டிருக்கிறோம். இப்ப வந்து செயிற போது ...வளைய மறுக்கின்றன .
ஈழப்பகுதியில் ஐயர்களின் வாழ்வாதாரங்கள் செழிப்பானவை இல்லை. வறுமைக் எதிராக போராடிக் கொண்டிருக்கிறவர்கள். இப்படி ஒவ்வொரு தோழருக்குமே கதைகள் இருக்கின்றன. இங்கே ஒரே சகோதரமாகி விடுகிறார்கள். துயரம் இவர்களுடையதாகி விடுகின்றது. இரவுகளில் நெடுகவா பாடப் போறார்கள்? தமது சுமைகளை இறக்கி வைக்கிறதும் நடக்கின்றது. பூஸாவிற்குப் போய் வந்த சங்கர் , தன் காதைக் காட்டி ஐயரிடம், முகத்தையும் சுளித்துக் கொண்டு " அவங்கள் அடித்ததிலே இது அவுட். கேட்கிதில்லை. உன்ர செய்தி கவலையாய் இருக்கிறது " என்றான். 83ம் ஆண்டு கலவரத்தின் கதறல்கள் நிச்சியம் ஐயருக்கும் நினைவு வந்திருக்கும். பாதிக்கப்பட்டவர்களின் துயரம் தனிக்குடும்பமாகவே அடைந்து பெரிதாய் ஆட்டிப் படைக்கின்றது. மறதி என்பது உண்மையிலே ஒரு மருந்து தான் . இழப்போ, மோசமான விபத்தோ... நாம் அவற்றை விரைவில் மறக்கவே முயல வேண்டும். யோசிக்க வெளிக்கிட்டோம் என்றால் நம்மை இழந்து விட வேண்டியதே. 'இன்றிருக்கிற நான், நாளை இல்லை' என்று இருந்தால் எப்படி இருக்கும் ? என நினைத்து தான் நம் மனதை ஆற்ற வேண்டியிருக்கிறது. சங்கரைப் பிடித்த போது பாபுத் தோழர் வீதியில் ஓடிக் கொண்டிருக்கிற போது படையினரின் சூடு பட்டு வீழ்ந்து விட்டிருக்கிறார். அவரை உயிரோடு எரித்தார்களா?... அது பற்றிய செய்திகள் எதுவுமே பிறகு தெரியவரவில்லை. பாபுவின் அம்மாவிற்கு மூளை குழம்பி பிறகு தான் தெளிவானவர் எனக் கேள்வி. அதோடு ஒப்பிடுற போது இவன் அதிருஸ்டசாலி தான். வெளியில், ஈவு இரக்கமில்லாத மனித அறுவடை அல்லவா நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது .
படையினரிடம் அகப்படும் சிறுவர் கிழவர் எவருமே மீண்டு வருவார்களா என்பது சந்தேகம். அத்தனை பயத்தை வயிற்றில் கட்டிக் கொண்டிருக்கிற கொடூரமான கோழைகள். இனப்பற்றாளாரராக இருந்தாலும் மனிதநேயத்தை மதிக்கிறவர்களும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு வலி தெரியும். அவர்களாலே சுழி ஓடப்பட்டு ,பணவர்தனையும் தேவைப்பட்டது தான், கொடுக்கப்பட்டும் சிலர் வெளியில் கொண்டு வரப்பட்டனர். சங்கரும் கடனை உடனைக் கொடுத்தோ வெளியில் ..வந்திருக்க வேண்டும். அரச ஊடகங்கள் "பூமிக்குள்ளே தேடிப்பாருங்கள்" என்று சொல்லுறதைப் பார்க்கிற போது படையினரின் தொழிலும் வெகு நல்லாவே புரிகின்றது.
முகாம் ஐயரை ஆற்றியது.
புருஸ்லி, நோஞ்சான் உடம்புடன் இருந்து உடம்பை முறுக்கேற்றவில்லையா. பழமொழிகள் எல்லாமே முடிந்த முடிவுகளும் அல்ல. தீவிரப் பயிற்சிகளால் இளகிறது நடந்து கொண்டே தான் இருக்கின்றது. ருக்குமணி தேவி , பரத நாட்டியத்தை 25, 30 வயதிற்குப் பிறகு தானே கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அவரால் தானே பரத நாட்டியம் திரும்பவும் உயிர் பெற்றது. சாதனையாளர்கள் உங்கள் சொல்லம்புகளிற்கெல்லாம் கட்டுப்படாதவர்கள். தோழர்களுமே சாதிக்க வேண்டியவர்கள் .ஒருபுறம் இனவாதம் கவிந்திருகிற போது நம் பாடசாலை ஆசிரியர்களில் பலருக்கோ விளையாட்டுகளின் முக்கியத்துவம் தெரியவில்லை என்பது தான் துரதிஸ்டம். அதனால் நோஞ்சான்களான படித்த மாணவர்களே உற்பத்தி செய்யப்படுகிறார்கள். விடுதலைக்காக போராடும் வலு அற்றவர்களாக இருக்கிறார்கள்.
சிவா ஆசிரியர் பறிக்கப்படுற உமியைப் பார்க்கப் போனார். பாரியும் ஆசிரியரோடு கூடச் சென்றான். செழியன் தோழர்களுடனே முகாம் பகுதிக்கு வந்திருந்தார். எப்பவுமே யாரோ ஒரு தோழரின் கண்காணிப்பிலேயே பட்டி அவிழ்த்து விடப்படுகின்றது . சமையல் மணத்தை நுகர்ந்து கொண்டு தோழர்கள் முகாமில் இருந்த போது இருவருமே கை,கால்களைக் கழுவிக் கொண்டு திரும்பி விட்டார்கள். பொதுவாக அமைப்புத் தோழர்கள் கொட்டிலிக்குள் வருவதில்லை அவர்கள். அப்படியே கழன்று விட்டார்கள்.
அன்றைய சமையற் குழுவில் வட்டுகோட்டைக் குட்டித் தோழர் சேகர் இடம் பெறுகிறார். "நளமகராசன்" என்கிறார்கள்.அவனுடைய அம்மா, அவனை இடுப்பிலே வைத்திருக்கிற போதே "செல்லம் கொஞ்சி இப்படிச் சேர்க்க வேணும்...எனச் சொல்லிச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் தெரியுமா? என்கிறார்கள். பார்க்கத் தான் போகிறார்கள். அந்தக் குழுவில் கதை எழுதக் கூடிய தோழர்கள் இருக்கிறார்கள் போல இருக்கிறது. பின்னே, இப்படி நீட்டிக் கதைக்க யாருக்கு வரும். கூறியவன் உடம்புக்காரனான தியாகு. கற்றுக் கொடுத்தார் ,கற்றுக் கொடுக்கவில்லை....எப்படி இந்தச் சிறுவன் இயக்கத்துள் ஓடி வந்தான் ?, அம்மாக்காரி என்னப் பாடு படப் போறாள் ? என்று நினைக்க ஜீவனுக்கு கவலையாக இருந்தது. இவனைப் போல மேலும் மூவர் இருக்கிறார்கள். எதிர்பார்ப்பைக் கூட்டியதில் தோழர்களுக்கும் பசி இரண்டு மடங்காகி விட்டிருந்தது.
கைப்பக்குவத்திற்குச் சேகர் தான். வீட்டிலேக் கூட அப்படி சமைத்திருப்பார்களோ...தெரியாது, ருசியாய் சமைத்திருந்தார்கள். எல்லோரும் சப்புக் கொட்டிச் சாப்பிட்டார்கள். மச்சம் எதுவும் இல்லை.மரக்கறியிலே இப்படி சமைக்க முடியும் என்றால்...இவனும் விமலைப் போல இருக்கத் தயார் தான். அவனைப் பாராட்ட அவன் குழந்தைத் தனமாகச் சிரித்தான். சில வீடுகளிலே குட்டித் தம்பி என்று இருப்பார்களே, அந்த உயரத்தில் இருந்த வட்டு அது. திறமைகள் வயசு வித்தியாசப்பட்டதில்லை என்று ஜீவன் இயக்கத்திலே கண்டு கொண்டே வருகிறான். மாலித்தோழர் இவனுடைய பிரதான குருஜி. அவர் ஒரு வயசு மூத்தவர். ' ஜி.ஏ. ' ப்பிரிவு சின்ன டேவிட்டும் இவனுடைய குருஜி தான். அவருக்கு அவனை இரண்டு வயசு குறைவு. ஏன் சமயக்கதைகளிலேயே சிவன் முருகனிடம் காதைக் கொடுத்து கடிபடவில்லையா ?. ஒளவையார் எட்டு முழக் குரலெடுத்து முருகனைத் தானே பாடுகிறார். பார்த்தால் சிறீதேவியே குழந்தைத் தனமாக சிரித்துக் கொண்டு எல்லாப் படங்களிலும் முருகனாக நிற்கிறாள். மனிதரில் ஆற்றல் இருக்கிறது தான் . அது சிறுசிலே இருக்கிறது, பெரிசிலே இருக்கிறது என்ற அவசியமில்லை. நாம் தாம் அதை ஒப்புக் கொள்ள வெட்கப்படுகிறோம்.
நல்ல சாப்பாடு, நீண்ட ஒய்வு. ஆறுதலாக சிவா ஆசிரியர் மூன்று மணி போல அவர்களை முதலாவது தடைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். " நல்லபடியாய் செய்ய முயலுங்கள் " என்றார்.மெல்லிய மண்மூட்டைகள் ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டடி உயரத்திற்கு வைக்கப்பட்டிருந்தன. அதற்குப் பிறகு ஆறு அடி நீளமும், ஐந்தடி அகலமான கிடங்கில் உமி கொட்டிப் பரப்பப் பட்டிருந்தது. ஆசிரியர் கண்ணைக் காட்ட ரஜனி தூரவாகச் சென்று நீளம் பாய்வது போல ஓடி வந்தான். குறுக்கே குந்துக்கு மேலாக பாய்ந்து காற்றிலே கரணம் அடித்து கால்கள் முதலில் உமியில் விழ விழுந்தான். எழும்பி பின்புறத்தை தட்டிக் கொண்டு வந்தான். அடுத்ததாக சிவா ஆசிரியரே ஓடி வந்து உமியில் இருந்து எழும்பி வந்தார். தியாகுவும் , ஆனைக்கோட்டைத் தோழர்களும் கூட கரணம் அடித்தார்கள். ஒரு காது கேளாத சங்கரும் அடித்து விட்டிருந்தான்.
அடுத்ததாக அராலித் தோழர்கள் ஜீவனைப் பார்க்க, ஆசிரியர் "போ" என்றார் .ஓடி வந்து அடித்தான்.அது எங்கே விழுந்தது. தலை உமியில் விழ காற்றில் அல்ல, நிலத்தில் தான் கரணம் அடித்திருக்கிறான். வாய், மூக்கெல்லாம் உமி நுழைய வெளிய துப்பினான். அராலித் தோழர்களுக்கும் சரி வரவில்லை. விழுந்து எழும்பி வந்தார்கள். சிறுவர்களிற்கும் சரி வரவில்லை. இரண்டாவது முறை தொடங்கியது. சரியாக அடித்தவர்களும் கூட திரும்பவும் அனுப்பப்பட்டு கரணம் அடிக்கச் சொல்லப்பட்டார்கள். ஜீவனுக்கு இந்த முறையும் நம்பிக்கை இல்லை. ஓடி வர கிட்டவாக வர ரோபேர்ட் கீச்சுக்குரலிலே "அடி அண்ணை ", " அடி அண்ணை " என்று துள்ளிக் குதித்துக் கத்தினான்.
அவனை, நிற்சாமம் செட்டுக்கும் கூடப் பிடிக்கும்.சேகரின் சமையலை மனமார பாராட்டியதுடன் " டேய் முகாமிற்குப் பிறகு படிப்பிலேயும் கவனம் செலுத்து .உன்னால் எங்களைப் போல் இல்லாமல் நிச்சியமாக கோல் அடிக்க முடியும் " என்றான். அப்படிக் கூறியது என்னவோ அந்தச் சிறுவர்களையும் கவர்ந்திருக்கின்றன போலப் படுகின்றது.
[தொடரும்]