[ 1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் 'கடல்புத்திர'னும் ஒருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து 'வெகுண்ட உள்ளங்கள்' நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றோம். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது 'வெகுண்ட உள்ளம்' நாவலில் காண முடியாது. 'வெகுண்ட உள்ளங்கள்' என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது. கூடவே அமைப்புகள் எவ்விதம் செயற்பட்டன, அவற்றின் கட்டமைப்புகள் எவ்விதமிருந்தன என்பவற்றையும் வெளிப்படுத்துகின்றது. - பதிவுகள் -]
அத்தியாயம் ஐந்து!
"பகைமை இயக்கத்திற்கு வழமை போல் இது பொறுக்காத விடயம். அவர்களும் இதைப் போல் ஒன்றைத் தாமும் தயாரிக்க முற்பட்டார்கள் சரியாக அமையவில்லை. ஆயுத இருப்பு இருப்பதால், எல்லாம் மிஞ்சப் போனால் இயக்க மோதலை தொடங்கி விடுகிற, சேட்டைகளைப் புரிவதாக அது மாற்றம் பெற்று விடும். நெருக்கடியான காலகட்டம். அச்சமயம் அவர்களிற்கு வேற புதிய பிரச்சனைகளும் ஏற்பட்டதால் இதை பெரிதாக எடுக்காமல் விட்டு விட்டார்கள். திரும்ப எப்ப சூழ் கொள்ளும் என அறிய முடியாது? அதனால் எல்லா ஏ.ஜி.ஏ. அமைப்புகளுக்கும் கணிசமாக பணம் தேவையாயிருந்தது. குறைந்த பட்சம் ஒரிரு ஏ.ஜி.ஏ அமைப்புகளையாவது பலமானதாக வைத்திருப்பது நல்லது என்று ஜி.ஏ. கருதியது. அனைத்து இயக்கங்களுக்கும் கடை விற்பனை முகவர் நிலையங்களில் எல்லாம் பொருட்களுக்கு வரி விதித்ததால் மக்களிடமிருந்து முன்னைய மாதிரி உதவியை எதிர்பார்க்க முடியாது. எனவே இப்படி பல்வேறு வழிகளில் சேரும் பணமே இயக்கத்தை இயக்க உதவின."
திலகன் விபரித்துக்கொண்டு போனான்.
செல்வமணி அவளர்களிருவரையும் அம்மா கூப்பிடுவதாக வந்து சொன்னாள். அவளை கள்ளமாக அளவிடுகிற திலகனின் பார்வை கனகனுக்குப் புரிந்தது. இவன் விரும்புகிறான்.மனதில் பச்சாத்தாபம் எழுந்தது. இவனைப் பற்றி நான் சரிவர அறியவில்லை எனவும் தோன்றியது.
கூழ் காய்ச்சியிருந்தார்கள். இருவருக்கும் மணி சிறிய குண்டாளக் கோப்பையில் ஊத்திக் கொடுத்தாள். கமலம் ஏதோ தையல் வேலையில் மண்குந்திலிருந்து மும்முரமாக மூழ்கியிருந்தாள். சென்னை வானொலியில் அன்று காற்றாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்கள். அதிகமாக அப்படியான அறிவிப்பு அந்தப் பகுதிக்கும் சரியாக இருப்பது வழக்கம். அதனால் யாரும் தொழிலுக்குப் போகவில்லை. லிங்கன் வந்து அன்டனையும் நகுலனையும் கூட்டிக்கொண்டு போயிருந்தான். அவன் பாடுபட்டு எழுதிய கடிதம் அன்டனோடு போய் விட்டிருந்தது. நாலைந்து நாட்களுக்கு முன் எழுதியது. அவளிடம் போய் சேராமல் இழுபடவே அவனுக்கு அந்தரமாக இருந்தது. இருளத் தொடங்கியிருந்தது.
"வாவன்ரா. காம்பில தமிழன் சிந்திய ரத்தம் வீடியோ கசட் இருக்கு. சுந்தரம் வீட்டு ரிவில போட கேட்டிருக்கிறம். ஒம் என்றவையள்’ என்று அவனை திலகன் கூப்பிட்டான். அவளின் நினைவை விரட்ட உதவியாயிருக்கும் என்று புறப்பட்டான். காம்பில் யாரும் இருக்கவில்லை. சுவரோடு அகன்ற இரு வாங்குகள் போடப்பட்டிருந்தன. ஆளுக்காள் ஒவ்வொன்றில் ஃபிரியாக ஏறி கால்களை நீட்டினார்கள். படுத்துக் கிடந்தபடி கதையளப்பில் ஈடுபட்டார்கள்.
வாங்கில் கிடந்த புத்தகங்களை அவன் கிளறிப் பார்த்தான். சமூக விஞ்ஞான வெளியீடு மனதைக் கவர்ந்தது. உதைப் போல் நிறையப் புத்தகங்கள் வெளிவர வேண்டும் என்று நினைத்தான். புத்தகங்களை புரட்டியபோது அவன் எதிர்பார்த்தது போல் சாதி பற்றிய கட்டுரை ஒன்றும் இருந்தது.
திலகன் எழும்பி ரூ இன் வண் கசட்டில் இதயக்கோவில் கசட்டைச் செருகினான். காம்ப் முழுவதையும் சோகத்தோடு கூடிய பாட்டுக்கள் ஆக்கிரமித்தன. அவன் மனநிலையில் கேட்க நல்லாயிருந்தது. “இந்த வீடியோவை முன்னம் பார்த்திருக்கிறாயா?” என்று திலகன் கேட்டான். பெரும்பாலும் உள்ளுக்க ஒடின படம் என அன்டன் சொல்லியது ஞாபகம் வந்தது. இல்லை என தலையாட்டினான்.
"இந்த முறை கலவரத்தால் கொழும்பிலயிருந்து பல கப்பல்கள் அகதித் தமிழர்களை நிறைத்துக் கொண்டு வந்தன. லங்காராணி, மேரி இப்படி கடைசியாக இந்திய சுற்றுலா சிதம்பரக் கப்பலும் வந்திருந்தன. கே.கே.எஸ்.துறைமுகத்தில் அவர்கள் இறக்கப்பட்டதையும் அயலிலுள்ள நடேஸ்வராக் கல்லூரி காயப்பட்டவர்களை பராமரிக்கும் ஆஸ்பத்திரியாக செயற்பட்டதையும், அவர்களின் சிறிய பேட்டிகளும் வீடியோவாக்கப் பட்டிருந்தன. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் முழுமையாக பங்களித்திருந்தார்கள். அதோடு பழைய கலவர புள்ளி விவரங்களை இணைத்து’மிதவாத அரசியல் செயற் பாட்டை விபரித்ததும் இப்பிரச்சனைகளின் காரணிகள் எவை என்பது பற்றி விளக்கம் கொடுத்ததுமாக. நல்லமுறையில் படமாக்கியிருக்கிறார்கள்” என்று சிறிய விளக்கமே கொடுத்தான்.
“நீ அருளர் எழுதிய ‘லங்காராணி’ புத்தகம் வாசித்திருக்கிறாயா?” என்று மேலும் அவன் கேட்டான். அவன் அப்புத்தகம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறானே தவிர, காணவில்லை. “இல்லை” என்றான்.
திலகனுக்கும், தானும் இயக்கத்தில் இழுபடாவிட்டால் வாசித்திருக்க மாட்டேன் என்பது சட்டென புரிய, தவறை உணர்ந்து கொண்டான்.
“77 கலவரத்தின் போது கொழும்பிலிருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் லங்காராணி. அந்த கப்பலில் வந்தவர்களில் ஒருவராக இந்த அருளர் இருக்க வேண்டும். அந்த கப்பலில் இருந்தவர்களைக் கொண்டு எமது மக்களின் அபிலாஷைகளையும் ஊசலாட்டங்களையும் இளைய மட்டத்தினரின் குமுறல்களையும் தத்ரூபமாகவும் அழகாகவும் படைத்திருந்தார்” என பெரிய விளக்கமே கொடுத்தான்.
“அந்தக் கதை ஒரு சாம்பிள் அதைவிட மோசமான இம்முறை அவலத்தையும் களஞ்சியப்படுத்தும் முயற்சியாக தமிழன் சிந்திய ரத்தம் வீடியோவை எடுத்திருக்கிறார்கள்” என்று மேலும் சொன்னான். "உனக்குப் படம் பார்த்தா விளங்கும்” என்றவன் பாட்டுக் கசட் ஒரு பக்கம் முடிந்திருக்கவே மாற்றிப் போட எழும்பினான்.
“டீ ஏதும் குடிக்கப்போறியோ. எனக் கேட்டான்.
“போட்டால் குடிக்கிறதுக்கு என்ன” என்றான் கனகன். திலகன், "நீயும் என்ர கேஸ் தான்"சொல்லி சிரித்துக் கொண்டு உள்ளே சென்றான்.
அவனுக்கு அந்தப் பெரிய கட்டுரையை வாசித்து முடிக்க முடியாது என்று பட்டது. மூடி பழைய இடத்தில் வைத்தான். அலுப்படிக்கவே, அவனும் எழும்பி உள்ளே போனான். ஹோலின் ஒரு மூலையில் ஒன்றிரண்டு கிரனேட்டுக்கள், எம் 80 பிளேட்டுகளுடன் கூடிய தகரக்கூடுகள், சிறிய வயர்க்குவியல், சற்றுத் தள்ளி பேப்பர் புத்தகக் கட்டுகள், சுவரில் பல நோட்டீஸ் படங்கள் என இருந்தன.
கனகன் வியப்புடன் அவற்றைப் பார்த்தவாறு நின்றான். ஒருவித அறியும் ஆர்வம் அவனுள் எழுந்தது. டீயுடன் வந்த திலகன் ஒரு படத்தைக் காட்டி "இவனை உனக்குத் தெரியுமா” என்று கேட்டான். தெரியாது என அவன் தலையை ஆட்டினான். “ஒரு தடவை இங்கிருக்கும் அகதி முகாம் ஒன்றுக்கு இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்களை படகில் ஏற்றி வந்த போது நேவியால் சுட்டுக் கொல்லப் பட்டு விட்டான்”.
அவனோடு கூட இறந்தவர்கள் படங்களும் அந்த நோட்டீசில் இருந்தன. “சிறந்த ஒட்டி. அவனுடைய இழப்பு எங்களுக்கு எல்லாம் பெரிய பாதிப்பு” என்றான்.
அவர்களின் வாழ்க்கை இன்னொரு விதமானது என்பது கனகனுக்குப் புரிந்தது. அதில் பெருமைப் படுவது, கல்யாணம் கட்டி வாழ்வதில்லை. அரசியல் பிரச்சனைகளுக்கு உயிரைத் துறப்பதுதான். சாதாரணமாக எல்லாருக்கும் உள்ள கடமைகளை மறந்து விட்டதால் இப்படி ஒரு சிலரின் மேல் போராட்டம் பொறிந்து விட்டது. முன் விராந்தைப் பக்கம் பழையபடி இருவரும் வந்தமர்ந்தார்கள்.
பனை மரங்களிலிருந்து இதமான காற்று தவழ்ந்து வந்தது.
“எப்படியடா.உன்ரை ஆள்? என்ன சொல்றாளடா?” என்று திலகன் நக்கல் சிரிப்புடன் கேட்டான். அவனுக்கு ஒட்டை வாயன்’ என்று அன்டனைத் திட்டவேண்டும் போல் தோன்றியது.
‘எந்த விதமாக இயக்கத்துக்குப் போனான்’ என்பதை அறிய நல்ல சந்தர்ப்பம் என கனகனுக்குப் பட்டது. “என்னை விடடா. உனக்கு எப்படியடா இதில் இன்ரரஸ்ட் வந்தது” என்று கேட்டான்.
“எதைக் கேட்கிறாய்” என விளங்காமல் திலகன் அவனைப் பார்த்தான். மணியைப் பற்றிக் கேட்கிறானோ என்று நினைத்தான்.
கனகன், “இயக்கத்துக்குப் போனதைக் கேட்கிறேன்” என்ற போது மூச்சு வந்தது.
ஒ! அதுவா.ஒருவிதத்தில் உங்க நடந்த பிரச்சனைதான் காரணம் என்று சொல்லலாம்” தொடர்ந்தான். "அக்கா தற்கொலை செய்ய முயற்சித்ததை அறிந்த போது வீட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சின்னக்கா அண்ணனை ஏசினாள். கடைசியில் என்னைப் போகச் சொன்னார்கள். சாதியைத் தூக்கி பிடிப்பதும் அதன் காரணமாக அக்காவை வெறுப்பதும் எனக்குப் பிடிக்காமல் இருந்தது. இங்க வந்த போது எனக்கு உங்கள் எல்லாரையும் பிடிச்சுப் போச்சு. திரும்பிய போது எல்லாரும் என்னைச் சூழ்ந்து கொண்டு ஆவலாக செய்திகள் கேட்டார்கள். இருந்தாலும் சின்னக்கா அடிக்கடி போறதை விரும்பவில்லை.
அண்ணன் ஏன் அப்படி மாறினானோ தெரியவில்லை. துப்பரவாக போவதை விரும்பவில்லை. சின்னதுகள் அக்காவைப்பற்றிக் கேட்க ஆசைப்பட்டதுகள். அடுத்த கிழமை நானாகவே இங்கு வர வெளிக்கிட்டேன். அக்காவை பார்க்கப் போகிறேன், ஏதாவது சொல்ல வேணுமா என்று விசமத்துக்குக் கேட்டேன். அண்ணன் என்னை அடிச்சு அறையில் பூட்டி வச்சுட்டான்.
இந்த இயக்கத்தைச் சேர்ந்த குமார் என் பள்ளி நண்பன். என் பிரச்சினையை அவனோடு ஏற்கனவே கதைத்திருந்தேன். அவன் ஒரு ஐடியா தெரிவித்தான். “டேய் நீ வந்து எங்க காம்ப்பிலே இரண்டு நாள் நிண்டிட்டுப் போ. உன்னை இயக்கத்திற்குப் போனவன் என்று நினைப்பினம். பிறகு உன்னோட யாரும் சோலிக்கு வரமாட்டினம்’ என்றான்.
தம்பி மூலமாக அவனுக்கு செய்தி அனுப்பினேன்.
அவன் வீட்டில் வந்து என்னைக் கூப்பிட்டான். அண்ணனுக்கு இயக்கம் என்றால் சிறிது பயம். பேசாமல் கதவைத் திறந்து விட்டான். எங்கட ஏ.ஜி.ஏ. பிரிவில் வேலை செய்வது நல்லதில்லை என பட்டதால் இங்கே வந்தேன். இப்ப என் மனசுக்கு ஆறுதல். அக்காவை வெறுக்கிறதுக்கு சரியான காரணமில்லை. சாதி கெளரவப் பிரச்சினைகளை எவ்வளவு காலம் வைத்திருப்பார்கள் பார்க்கலாம்.”
கனகனுக்கு கேட்க படு ஆச்சரியமாக இருந்தது.
மாலை எட்டு மணிக்கு பெடியள் செட் காம்பிற்குள் புகுந்தது. சுந்தரத்தின் வீட்டில் வீடியோ போட்டுப் பார்க்கும் போது அன்டனும் நகுலனும் வந்து விட்டார்கள்.
படம், யாழ்ப்பாண மக்களுக்கு உண்மைகளை சிறிதளவாவது உணரவைக்கும் தன்மை படைத்ததாக இருந்தது. அரசாங்கமும் தமிழ் தலைவர்களும் ஏமாற்றியதை கோர்வைப்படுத்தி விளக்கமாக தெரியப் படுத்தினார்கள்.
"இந்த வகைப் படங்களையும் செய்திகளையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்ப்பதால் தான் எங்களுக்கு ஒரளவு மக்களைப் பற்றி அறிய முடிகிறது. சிந்திக்க முடிகிறது. மக்கள் நல ஆய்வுத் திட்டங்களை வரையறுத்து செயல் படுத்த ஊக்கம் பெறுகிறோம்".திலகனின் பேச்சு சிறிது அசர தான் வைத்தது. இயக்கம் ஒரு தாயாய் ‘இரு கை நீட்டி கூப்பிடுவது’ போல் பிரேமை தோன்றியது. விலங்கிடப் பட்ட தமிழன்னை விடுதலைக்காக கூப்பிடுவது போலப்பட்டது.
படம் முடிந்தபிறகு பெடியள் கலைய அவர்கள் காம்ப்பிற்கு திரும்பினார்கள்.
வீடியோக் கசட்டை வைத்து விட்டு பொறுப்பாக நிற்கிற ரவியோட கதைத்துக் கொண்டு சமையலுக்கு உதவி செய்தார்கள். அங்கேயே சாப்பாட்டையும் முடித்துக் கொண்டார்கள். கருவாட்டுக் குழம்பும் சோறும் ருசியாக இருந்தது. புழுக்கமாக இருக்க.”ரவி, நாங்க போயிட்டு நாளை வாறம். அக்கா வீட்ட தங்கியிடு வேன்’ என்று விடை பெற்றான். திலகன் வரும் போது காற்று அடங்கி விட்டிருந்தது.
மன்னி வீட்டு வளவில் சாக்கையும் பாயையும் போட்டு படுக்கை விரித்தார்கள். கனகனும் அவர்களோட வந்திருந்தான். வசந்தி கடிதம் தர அந்தரப்பட்டதையும் வேலை அலைச்சலில் பிறகு வருகிறேன் என காய் வெட்டிப் போனதையும் அன்டன் தெரிவித்தான். திலகன் சிரித்தான். “இதை நீ …சொல்லாமலே விட்டிருக்கலாம்” என்றான்.
“ஏன் கனகு நீ அவயள் வீட்டில் நேரே போய் கேட்டுக் கட்டிக் கொள்ளன். எங்களைப் போல நீ இயக்கமில்லையே” என்று நகுலன் கேட்டான். திலகனுக்கு அப்பவே அன்டனின் நிலைமை புரிந்தது. பாசறை வகுப்புகள் நடைபெறும் போது சுயவிமர்சனம் கடைசியாக நடைபெறும் ஒவ்வொருவரும் தம்மைப்பற்றிய பல விசயங்களை அதிலே தெரிவிப்பார்கள். தம்மைப் பாதித்த சாதி, சுய, பெண் பிரச்சனைகள் எல்லாவற்றையும் கணிசமான அளவு சொல்வார்கள். அன்டனும் தன்னுள் மறைத்து வைத்திருந்த வசந்தி மேலுள்ள காதலைத் தெரிவித்திருந்தான். காலம் வர தெரியப்படுத்தலாம் என காத்திருந்தான். இயக்கம் என வெளிக்கிட்ட பிறகு, காதலாவது, குடும்பமாவது?? அவனில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஆபத்தை முதலில் எதிர்நோக்கிப் போகிறவர்களாக இருப்பதால் வாழ்வைப் பற்றி திடமாக நினைக்க முடியாதிருந்தது. கனகன் அவளை விரும்பிய போது உதவி செய்திருக்கிறான்.
திலகனுக்கு அன்டன் மேல் அனுதாப உணர்வு பிறந்தது. யார்யார் மேல் அனுதாபப் படுவது. வெறுப்புடன் சிரித்துக்கொண்டான்.
“டேய், நகுலன் சொல்றது சரிதான். காலத்தைக் கடத்தாமல் வீட்டில் நேரே போய் கதைத்துப் பார். இல்லாவிட்டால் நாங்கள் கதைக்கிறமடா" திலகன் கூறினான்.
ஆச்சரியத்துடன் கனகன் அவர்களைப் பார்த்தான். ‘இயக்கம் பொதுவாக பலரை மாற்றி விட்டது. சிந்தனை வீச்சையும் செயல் துடிப்பையும் சிறிது கூட்டி விட்டது. புரிந்தது. சிறியவர்களை பெரியவர்களாக்கி விட்டது .பெடியள் அணியில் திலகனைத் தவிர மற்றவர்கள் உள்ளூர். அவன் சம்பந்தப்படுவதை நல்லபடியாகப் பார்க்க மாட்டார்கள். அண்ணா உட்பட பலர் இந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்தி விடுவார்கள். பாவம் அண்ணி. அவட ஒரே இரத்த உறவாய் வந்து நிற்பவன் இவன். தன் விடயத்தால் அக்கா தம்பியின் உறவு பாதிக்கப்பட வேண்டாம். கணநேரத்தில் ஒடிய சிந்தனையால் “மச்சான் நேரம் வரேக்கை நானே கேட்கிறேன்” என்றான்.
ஐயனார் திருவிழா அங்கு விசேடமாக நடக்கிறதொன்று. வருசத்தில் ஒருநாள் வருகிற அன்று ஆடு வெட்டும் வேள்வி சிறப்பாக நடை பெறும். எல்லாரையும் மகிழ்ச்சி பற்றிக் கொள்ளும். ஆண்பகுதியினர் வீட்டிலே கசிப்பு. கள் போத்தல்களைச் சேர்ப்பார்கள். பெண்கள் வீடு மணக்க ஆட்டுக்கறி சமைப்பார்கள். ஒவ்வொரு வள்ளக்காரர்களும் இரவில் தம்மொடு தொழிலுக்கு வந்தவர்களை. வருபவர்களை, நண்பர்களை விருந்துக்கு அழைப்பார்கள். செல்லன் அப்படி கனகனைக் கூப்பிட்டிருந்தான். வீட்டுக்குள் நுழைகிற போது ருசியான மணம் அவனை மயக்கியது. அவன் வயசு மட்டத்தில் ராஜன், குகன், சபேசன் போன்ற பெடியளும் செல்லன் வயசு மட்ட ஆட்களுமாக பலர் இருந்தனர்.
ராஜன் அண்மைக்காலமாக ஊரால் விமர்சிக்கப்பட்டு வருபவன். குலனைப் பகுதியில் மணம் முடித்தவன். மனைவியைத் தினமும் அடித்துத் துன்புறுத்துவதாக அவனைப்பற்றிச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. வதந்திகள் பல. அதனால் பொதுவாக அவனை பலருக்குப் பிடிக்காதிருந்தது.
வெறியில் இருந்த அவன் கனகனை விமர்சிக்க வெளிக்கிட்டான். “பெரிய இயக்கப்பிரபு வந்திட்டார்’ நீ அவனின் (திலகனின்) கையாள்தானேடா” என சேட்டைப் பற்றினான். “என்னைப் பற்றிக் கதைக்க உனக்கு என்னடா இருக்கிறது. பொத்தடா வாயை" என அவனைப் பிடித்துத் தள்ளினான். அவன் தொடர்ந்து தாக்க முயற்சிக்கவே கனகனுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டது. உருட்டித் தள்ளினான். பலருக்கு இவன் அவர்களுடன் சேர்வது பிடிக்காமல் இருந்தது. அந்த நினைப்பினாலும் மறிக்க வந்தவர்களையும் உதைத்துத் தள்ளினான். செல்லன் பாய்ந்து இவன் திமிரப் பிடித்தான். மற்றவர்கள் ராஜனை அமுக்கினார்கள்.
“வளர்ந்து விட்டவன்’ என்ற நினைப்பு செல்லனுக்கு உறைத்தது. தனியாளாக தொழில் செய்யக்கூடிய வல்லமை படைத்தவன். ராஜனைப் பார்த்தான். அவன் சிறிது மோடன்.
மருண்டு நின்ற கமலத்தையும் செல்லமணியையும் பார்த்தான். அவனுள் ஏதோ யோசனைகள் எழுந்தன. ஒருமாதிரி இருவரையும் சமாதானப் படுத்தி சாப்பிட வைத்தான். பரிமாறுகிற போது கமலம் கனகனை அனுதாபத்துடன் பார்த்தான்.
கை கழுவியதோடு அவன் விடைபெற்றுக்கொண்டு போய் விட்டான்.
மனசு குழம்பியிருந்தது. நேரே வீட்டை போய் சேர்ந்தான். நேரம் சாமத்தை எட்டுவதாக இருந்தது. கதவு சாத்தியிருந்தது.
தட்டி எழுப்ப மனம் இல்லாததால் முன்னால் இருந்த மண் விராந்தையில் காலை நீட்டிப் படுத்தான். குளிர் தரை மனசுக்கும் இதமாக இருந்தது. முகிற் கூட்டங்களின் அசைவும் நட்சத்திரங்களின் மினுமினுப்பும் சிந்தனை ஒட்டத்தைத் தீவிரப்படுத்தியது. கூடுதலாக உழைப்பைப் பெற வழிபார்க்க வேண்டும். எப்படி முயலலாம். தற்போதைய நிலையில் வீட்டுச் செலவுக்கு முப்பது முப்பதைந்தே வருகிறது. அதோடு கொஞ்சம் கறிக்கும் வருகிறது. சிறிய வள்ளங்களில் தொழில் நடப்பதால் அங்கே வளப்பம் நிலவவில்லை. பெரிய வள்ளம் இல்லாதிருந்தும்,கடல் வலயச் சட்டங்களும் அவர்களைப் பெரிதாகப் பாதித்திருந்தன.
‘சுயமான தொழில் ஒரளவு பரவாயில்லை போல பட்டது. பகலிலே கடையும் ஒன்று போட்டால் ஒரளவு சமாளிக்கலாம் என நினைப்பு திடப்பட்டது.
அப்படியே கிடந்தவன் தூங்கிப் போனான்.
அடுத்தநாள் தொழிலுக்குப் போக அலுப்பாக இருந்தது. வாசிகசாலைக்குப் போய் பேப்பரைப் பார்த்து விட்டு.செல்லன் வீட்டுக்குப் போனான். விருந்தின் குப்பைகள் துப்புரவாக்கப் படாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தன. வலையை எடுத்துப் போட்டு சரி பார்க்கத் தொடங்கினான். திருவிழாவின் போதும் நண்பர் செட்டைக் காணவில்லை. பிறகும் கண்ணில் படவில்லை. ‘எங்கே போய் தொலைந்துவிட்டார்கள்?” அவனால் யோசிக்க முடியவில்லை.
அண்ணி வீட்ட போகாமல் வந்திருந்தான். கமலம் தேத்தண்ணி கொண்டு வந்து வைத்தாள். அவளுடன் கதைத்துப் பார்த்தால் என்ன? என்று தோன்றியது. மன்னியிட சினேகிதி . இவளுக்கு திலகனைப் பற்றி எதுவாச்சும் தெரிந்திருக்கும்.
“மச்சான் ஆட்களை காணவில்லை. உனக்கும் ஏதும் தெரியுமா” என்று கேட்டான். அவள் அவனைப் பார்த்து முறுவல் பூத்தாள். நேற்று நடந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது.
“அவயள் காம்பை வீட்டை திரும்ப கொடுத்திட்டினமாம் என்றாள். மேற் கொண்டு கேட்க தயக்கமாக இருந்தது. மன்னியிட்ட ஒருக்கா போய் வருவது நல்லது போலப்பட்டது. "அப்பா வந்தால் சொல்லு. மன்னி வீட்டை நிற்கிறேன்” என்று விட்டு கப்பை அவளிடம் கொடுத்து விட்டு எழும்பினான்.
அங்கே. அண்ணி சமைத்துக் கொண்டிருந்தார். “உன்ரை கொண்ணரை காணலை. இண்டைக்கும் ஏதும் புதுப் பார்ட்டி நடக்கிறதோ?” என்று கேட்டார். அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. செல்லனையும் காணவில்லை. ஒருவேளை இருக்குமோ என்று நினைத்தான். தெரியவில்லை என பதிலளித்தான்.
, இண்டைக்கு தொழில் இருக்காது போல தோன்றியது. "மச்சான் ஆட்கள் எல்லாம் எங்கே அண்ணி” என்று விசாரித்தான். “போட் ஒட்டத்தை கையளிக்கினம்’ என்றான். 'நீ காணலையா?” என்றார். "அப்பா வந்திட்டார். உன்னை வரட்டாம்” என்றாள் அண்ணியிடம் வந்த கமலம். தொழிலுக்குப் போகப் போறார் என்று புரிந்தது. படலையைத் திறந்து கொண்டு உள்ளே போகிற போது செல்லன் வலையை ஒழுங்கு பண்ணுவதில் மும்முரமாக இருந்தான்.
தொழிலில் ஈடுபடுற போது.சுயநினைப்புகள் பறந்து போகிறது.
வலையை இழுத்து கடலில் போட்ட பிறகு சிறிது ஒய்வு கிடைத்திருந்தது. செல்லன் பீடி ஒன்றை எடுத்து பத்த வைச்சான். கனகன் அவனிடமிருந்து வெத்திலை பாக்கை வாங்கி வாயில் போட்டுக் கொண்டான். நிலா வெளிச்சம் இரவை பகலாக்கியது. கோட்டைப் பக்கமிருந்து அடிக்கப்பட்ட ஒரு குண்டு எங்கேயோ விழுந்து வெடிக்கிற சத்தம் கேட்டது. கடற்கரைப் பக்கமிருக்கிற அந்தக் கோட்டையால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அயலில் இருந்த குடியிருப்புகளும் கடை கண்ணிகளும் அதிகமாகக் கதி கலங்கின. "சரிதான். இவங்கட கொட்டத்தை அடக்கினால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்” செல்லன் அலுப்புடன் பெருமூச்சு விட்டான்.
சத்தம் அடங்கிவிட இயல்பான போக்கில் கதைக்கத் தொடங்கினார்கள்.
ராஜனைப் பற்றிப் பேச்சு வந்தது. இவனைப்பற்றிய விமர்சனம் வாலையம்மன் பகுதி முழுதும் பரவியிருந்தது. ‘இவயள்ட பெடியன் இன்னொரு பகுதியில் முடிச்சுவிட்டு தலைகீழா நிற்கிறான்’ என்ற போது ஊரே திட்டியது. குலனைக்கும் இவர்களுக்கும் இரத்தத் தொடர்பு இருந்தது. அங்கே.அவர்களின் ஒரு வேர்ப்பகுதி (சகோதரர்களின் பிள்ளைகள் என) வேரூன்றி படிப்பு உத்தியோகம் என இவற்றில் வெகுவாக முன்னேற்றம் அடைந்துவிட்டிருந்தது. எழுபது எழுபத்தைந்து குடும்பங்கள் இருந்தபோதும் பார்க்கிறபோது எண்பது வீதத்துக்கு மேற்பட்டவர்கள் படித்தவர்களாக இருந்தார்கள்.
தொழில் செய்பவர்கள் ஒன்றிரண்டு பேராக அருகிக் கொண்டு போய்க் கொண்டிருந்தது .அந்த அருகிற வீதத்தில் அகப்பட்ட ஒரு குடும்பம். அவளுடைய அப்பன் கடலுக்குப் போய் வந்து கொண்டிருந்தவன். அவனுக்கு புத்தியும் சிலவேளை சுகமில்லாது போய் விடும். அவளின் சித்தப்பன் அண்ணனின் போக்கைக் கவனித்து விட்டு நல்ல பெடியன் என்று ராஜனுக்கு கட்டி வைத்திருந்தார். படிப்பறிவுக்கு வாலையம்மன் பகுதி , அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. அதனால் அவன் உடம்பு வளர்ந்திருந்த காட்டு மனிதன் போல இலகுவில் பொறுமையிழப்பவனாய் இருந்தான்.தொழில் செய்கிறவன் மகள் என்பதால் அவளை முடித்திருந்தான். இளவயதிலே தாய் இறந்து போனதும், தகப்பன் தாய் மேல் வைத்திருந்த அளவுக்கு அதிகமான அன்பும் வேறு அப்பனைக் குடிகாரனாக்கி விட்டிருந்தது. விதி, அவளை மோசமான நிலைக்குத் தள்ளி விட்டது. அதனால் அவள் பிரச்சனைக்குள்ளான போது அனாதரவானாள்.
.அவள் பெட்டையாய் வேறு இருந்தாள். வயசு வித்தியாசம் கூட அதிகம்.இவன் எதிர்பார்ப்புக்கும் அவளுக்கும் பெரிய இடைவெளி இருந்தது. அதை அறியும் வயசும் அவளுக்கு இருக்கவில்லை.அது இருவர் வாழ்வையும் குட்டிச் சுவராக்கி விட்டது.
“உவன் மனிசியைப் போட்டு அடிக்கிறானாம்” கனகனின் பேச்சைக்கேட்டு விட்டு செல்லன் சிரித்தான்.
“ஊர் உலகத்தில் நடக்காததா?” உனக்கு அவன் மேல் ஆத்திரம்” என்றான். தொடர்ந்து “குடும்ப விசயம் பாரு. மோசமானாலும் யாரும் கதைக்கேலாது” என்றான்.
"வாசிகசாலைக்குழு தலையிடலாம் தானே” என்றான் அவன். “தம்பி உவயளோட சேர்ந்து இப்படிக் கதைக்கிறாய்” என்றான். இப்படித் தர்க்கித்துக் கொண்டிருக்கிறபோது பிளாஸ்டிக் படகு ஒன்று தீவுப்பக்கமாக நோக்கி இரைந்துகொண்டு வந்தது.
கூப்பிடு தொலைவில் வந்தபோது அன்டன் மோட்டரைப் பிடித்திருப்பது தெரிந்தது.அவன் ‘அன்டன்’ என்று கத்திக் குரல் கொடுத்தான். அவனும் சிலோ பண்ணி.திருப்பிக் கொண்டு வள்ளத்திற்க கிட்ட ஒட்டி வந்தான். அவனோடு நகுலனும் திலகனும் இருப்பது தெரிந்தது. “என்னடாப்பா விசயம் பெரியவர் ஒருத்தரையும் ஊர்ப்பக்கம் காணலையே' என்று கேட்டான்.
“அக்கா சொல்லியிருப்பாவே' என்றான் திலகன்.
“கொடுத்துவிட்டாச்சா?” என்று கேட்டான்.
ஒம்” என்ற திலகன் இவனும், அவனும் இனி அக்கரையிலிருந்து போர்ட் அன்டன் சோகமாக.செல்லனுக்கும் திலகன் மேல் அனுதாபம் பிறந்தது. “தம்பி அக்காவைப் பார்க்க அடிக்கடி வருவியோ?” என்று கேட்டார். “வராமல் அண்ணை.கிழமையிலே ஒரிரு நாள் வரக்கூடியதாகயிருக்கும். இந்த ஏ.ஜி.ஏ.யிலே தொடர்ந்து வேலை செய்யக் கேட்டிருக்கிறேன். ஒம் என்றவர்கள்’ என்று விளக்கமளித்தான்.
“எங்களை எல்லாம் மறந்து விடுவியோ?” கனகு கேட்டான். “எப்படி மறக்க முடியும்?” என கண்கலங்க பதிலளித்தான்.
“சரி, கனகு நாங்கள் தீவு ஏ.ஜி.ஏ.யை சந்தித்து விட்டு திரும்பவும் வேண்டும். பிறகு சந்திக்கிறோம்” என்று விடைபெற்றான். கையசைவோடு பிரிந்து சென்றார்கள். நட்பை சுமந்த அவர்களின் நடத்தைகளை சூழவுள்ளவர்கள் எப்படி விமர்சித்தாலும் தொடரவே செய்யும்.
படகு விரைந்தது.
மூன்றுநாள் கழித்து திலகன் வந்தான். எல்லாப் பகுதியிலும் வடிவேலின் இறப்புச் செய்தி பரவியிருந்தது. “என்னடாப்பா! அவனைக் கொன்று போட்டார்களாம்’ என்றான்.
"நீ என்ன புதிதாய் அறிந்தாய்” என்று கனகன் கேட்டான்.
ஒவ்வொரு பெரிய மரணங்களின் போது பலவித கதைகள் உலவுவது வழக்கம். “பெரிய” என்றது ஒரளவு அநியாயத் தன்மை கொண்டதைக் குறிக்கும். “கரையில் பறிகொடுத்தது. பற்றிய விசாரணைதான் அவனை சாவில் தள்ள விட்டதுபோல் படுகிறதடா.” என்றான்.
வடிவேலுக்கும் யாழ் பிரதேசப்பொறுப்பாளருக்கும் மத்தியில் முன்னமே கசப்புகள் இருந்தன. இந்த சந்தர்ப்பத்தில் விசாரணை, அது இது என அவமானப் படுத்தி அவனை வெகுவாக வெருளச் செய்து விட்டார்கள். அதிருப்தியுற்ற அவன் விலகல் லெட்டரை கையளித்திருக்கிறான். அவன் அந்த இயக்கத்திற்கு விசுவாசமாக உழைத்தவன். ஒருமுறை இவர்களுக்கு போட்டியாக முளைக்க முயன்ற சிறுகுழுவோடு முழுக்க டீல் பண்ணியவன் இவன் என்பர். போஸ்ட் ஒஃபீஸ், வங்கிக் கொள்ளை, சிவில் நிர்வாகம் குழப்பல் இவற்றில் சுறுசுறுப்பாக இயங்கிவந்த குழுக்களில் குமரனின் குழுவும் ஒன்று. அவன் வடிவேலனின் இயக்கத்தை குரு பீடத்தில் வைத்து மரியாதை செலுத்தி வந்தவன்.
ஐக்கியமின்மையால் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் தன் குழுப் போக்கிலே இயங்கி வந்தான். வளர்ச்சியின் ஒரு கட்டமாக அரச படைகள் வருகிற பாதையில் கண்ணிவெடி வைத்து விட்டு அருகிலிருந்து பனங்காணியில் பல நாளாய் காத்துக் கிடந்தான். ஊர் அவன் முயற்சியை அறிந்திருந்தது. மோதிரக்கையால் குட்டு வாங்கணும் என்ற விசித்திர ஆசை அவனைப் பிடித்திருந்தது. நிலக் கண்ணி வெடிப்பில் சாதனை படைத்த அவ்வியக்கத்திற்கு அழைப்பு அனுப்பினான். 'வந்து வெடி ஏற்பாடுகளை பார்வையிட்டுக் குறைந்திருந்தால் தெரிவிக்க’ச் சொல்லி கேட்டான்.
அந்த நேரம் இந்த வடிவேலின் தலைமையிலே ஒரு குழுவை இயக்கம் அனுப்பியது. எல்லாவற்றையும் சரி பார்த்தது. “திறமாக வைத்திருக்கிறீர்கள்” என்ற கருத்து தெரிவித்தவன், எதிர்பாராத தருணத்தில் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து குமரனை, நேரே சுட்டு விட்டு அகன்றான். சினிமாப் பட உலகம் போல இங்கையும் ….நடக்கிறது.
அவனை காம்பிலே வந்து பதிலளிக்கச் சொல்லி பொறுப்பாளர் கட்டாயப்படுத்திய போது அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவன் அந்த பொறுப்பாளர் சேர முதலே இவன் இயக்கத்தில் சேர்ந்தவன், சீனியரிட்டி. அவனை தோழர்கள் நெருங்கிய போது சயனைட்டைக் கடித்து செய்தியாகி விட்டான். அதன் எதிரொலியாக அப்பகுதியிலிருந்து பல நண்பர்கள் விலகல் லெட்டரைக் கையளித்தார்கள். ஒரு வாரத்திலே கோட்டையாக இருந்த அப்பகுதி மறுப்பைக் காட்டி நிற்கிறது.
எல்லா இயக்கங்களிலும் உள்ளுக்குள் இப்படி நடக்கும் குழப்பங்களை தடுத்து நிறுத்த ஒரு பலமான மேல் அல்லது ஐக்கிய அமைப்பு கட்டப்படாமலே…. இருந்தது. எனவே கட்டுப்பாடற்ற போக்கில் நிகழும் குழப்பங்கள் தொடர்ந்தன. விடுதலைக்கான நம்பிக்கையை அது பெருமளவில் சிதைத்தது.
மணி இருவருக்கும் தேத்தண்ணி கொண்டு வந்தாள். வெளிய வந்த அவளின் அம்மா, "தம்பியைக் கண்டு கனகாலம்” என்று முகமன் விசாரித்தார்.
"இங்காலை அவ்வளவாக அலுவல் இருக்கவில்லையக்கா" என்று மரியாதையாகப் பதிலளித்தான். மணியை அவன் ஏக்கத்தோடு பார்ப்பதை கனகன் பார்த்தான்.
அவள் அழகு திலகனை மயக்கியது. கழுத்தில் முடிச்சுப் போட்டு வாழும் காலம் வருமா? என்ற எண்ணம் அவனை வாட்டியது.
வலையில் நாட்கள் போவது வேகமாகப் பட்டது.
அவன் வலையை கிளறிக் கொண்டிருந்த போது செல்வமணியும் தாயும் வாசிகசாலையில் படம் ஒடினம் என கிளம்பினார்கள். கமலம் அண்ணி விட்டை போயிருப்பாள் என நினைத்தான்.
வீடு அமைதியாகவிருந்தது. உல்லாசமாக வாய் காதல் பாட்டொன்றை முணுமுணுத்தது. செல்லன் சிறிது தள்ளாட்டத்தோடு வந்தான். நிறைய ‘கள் அடித்திருக்க வேண்டும்’“தம்பி இண்டைக்கு சிறிது உள்ள போய் (ஆழ்கடல்) போடணும். சுறுக்காய் முடி’ என அவனும் குந்தி வலையை இழுத்து செக் பண்ணினான். சாகப் போறானா? கடல் மனிதன் இல்லையா?எவ்வளவு அடித்தாலும் கம்பு போலவும் (நிமிர்ந்து) நிற்கிறான்.“அட பெரிய ஒட்டையாய் கிழிந்திருக்கிறதே" என்றவன் “நூல் முடிஞ்து 'தம்பி, உள்ளுக்க போய் யன்னல் கட்டிலே வைச்சிருக்கிற நூலை ஒருக்கா எடுத்துவா” என்று கூறினான்.
‘ஒருவேளை கமலம் இருப்பாளோ? என்ற சந்தேகம் எழ, கால்கள் தயங்க நின்றான்.“யாருமில்லை போய் வா தம்பி” என்று அவன் வற்புறுத்த உள்ளே சென்றான். யன்னல் கட்டை தடவுற போது வெளிக் கதவை செல்லன் அறைந்து பூட்டியது கேட்டது. சடாரெனத் திரும்பியவன் “என்ன வேணும்” என்ற கமலத்தின் குரலைக் கேட்டான். அவள் சட்டை ஒன்றைத் தைத்துக் கொண்டிருந்தாள். ‘கர்மம் பிடிச்சவள், இருட்டிலே இருந்து என்னத்தைத் தைத்துக் கொண்டிருக்கிறாள்? அவளிலே கோபமும் வந்தது. வெளியில் அவளுடைய அப்பனின் கூப்பாடும் கேட்டது. “முருகேசு, சுப்பன், தியாகு, நடேசு, ஒடிவாருங்கள். உவனெல்லோ கதவை அடைச்சுப்போட்டு என்ரை வீட்டில் இருக்கிறான்” உடனே, சனம் கூடி விட்டது. கனகன் அவமானத்தோடு கதவைத் திறந்து வெளியே வந்து நின்றான். பின்னாடி கமலமும் வெளியே வந்தாள்.
இப்படி ஒரு சிலர் தம் மகளை கரை சேர்ப்பது அங்கே வழக்கமாக இருந்தது. "சீ என்னை இப்படி மாட்டி வைச்சு விட்டினமே மனசடிப்புடன் வாயடைத்து நின்றான். அவனுடைய நண்பர்கள் இருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. மச்சான் சொன்ன போது ‘உண்டு இல்லையா’ என வசந்தி விடயத்திலே அணுகியிருக்க வேணும். பாழாய் போன நிதானம். இப்ப மண்டையை உடைக்க வைக்கும் போல இருந்தது.
கமலம் கண்கள் கலங்க விழித்தபடி நின்றாள். ‘அப்பன் இப்படி ஒரு பிளான் வைச்சிருக்கிறான்’ என்று அவள் எதிர்பார்க்கவில்லை. புனிதம் வளவுக்குள் நின்றபடி அவளை
அனுதாபத்தோடு பார்த்தாள். ‘அக்கா’ என ஒடிப்போய் அணுக முடியாது என்பது புரிந்தது. அம்மாவும், தங்கச்சியும் படத்திற்கு போனதற்கு உள்ளுக்குள் திட்டித்தீர்த்தாள்.
வாசிகசாலைக் குழு அடுத்தநாள் விசாரிப்பதாக அறிவித்தது. அன்றிரவு அவனும் செல்லனும் தொழிலுக்குப் போகவில்லை.அடுத்த நாள் விசாரணையின் போது அன்ரன், நகுலன் எல்லோரும் கூட்டத்தில் இருந்தார்கள். நண்பனை அநியாயமாக செல்லண்ணை மாட்டி விட்டிருந்தது அவர்களுக்குப் புரிந்தது. நெடுக அங்கேயே இருந்து வலை சிக்கெடுப்பது, செப்பனிடுவது என்று இருக்கிறவன். விரும்பக்கூடிய சாத்தியங்களே வெளியில் தெரிந்தன.“நீ என்ன சொல்கிறாய்?” பரமேஷ் அவனைக் கேட்டான்.
அவள் கழுத்தில் ஐயனார் கோவிலில் வைத்து தாலியைக் கட்ட வைச்சு விட்டார்கள். அவனுள் பூகம்பம் வெடித்தது. 'உன்னை என்ன செய்கிறேன் பார்’ என அவளை வெறுப்புடன் பார்த்தான்.
பிரேமைக்காதலி வசந்தியின் ஒவியம் அவனுள் அழிய முடியாமல் கிடந்து படபடத்தது. அவன் உள்ளுக்குள் அழுத அழுகை எழுத்தில் வடிக்க முடியாது. செல்லன் கோயில் பக்கமிருந்த தனது நான்கு பரப்பு வளவில் வாசிகசாலைப் பெடியள் உதவியுடன் மண் வீடு ஒன்ற கட்டி ஒலையால் வேய்ந்து கொடுத்தான். கனகனின் நிலைமை புரிந்ததால் அன்டனும், நகுலனும் அவனைச் சந்திப்பதைத் தவிர்த்தார்கள். சோகத்தில் மிதக்கவே கனகன் வீட்டை விட்டு வெளியேறி கோவிலுக்குப் போனான். திரும்பும் போது நிறையக் கள்ளைக் குடித்து விட்டு போனான்.
கன நேரத்திற்கு பிறகே சுய நினைவு வர தானும் ஒரு மிருகம்’ என்பதை உணர்ந்தான். அவனுக்கு வாழ்க்கை வெறுத்துப் போயிற்று. அவளை ஏறெடுத்து பார்க்கவே வெட்கப்பட்டான்.
அடுத்தநாள் அண்ணியும், அண்ணரும் வீட்டுக்கு வந்தார்கள்.
அவளால் ‘அக்காவிடம் முறையிட முடியவில்லை. கண்கள் சிவந்திருந்தவளை ‘கிடைச்ச வாழ்வை நல்லபடியாய் அமைச்சுக் கொள்” என்று அவர் தேற்றினார். உள்ளே இருவரும் சென்ற போது அவள் தன்னையறியாமல் அண்ணியின் தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள். அவன் அண்ணனோடு கதைத்துக்கொண்டு வெளியில் இருந்தான். ‘அண்ணி’ என உள்ளே வந்தபோது அவள் அழுதது அவனை குற்றவுணர்வில் தள்ளியது. 'டீ வைச்சுக் கொண்டு வா’ என்று அவளிடம் சொல்ல வந்தவன் “ஒன்றுமில்லை அண்ணி, சும்மா வந்தேன்” என்று விட்டு வெளியேறினான். அண்ணி இருவருக்கும் தேநீர் ஊற்றிக் கொண்டு வந்தார். இவர்கள் இருவரையும் பகிடி பண்ணி கதைத்து விட்டு விடைபெற்ற போது “அக்கா” என கமலம் அவர் கையைப் பற்றினாள். “எடியே, என்னடி விசயம்" என்று அவளை இழுத்தனைத்து ரகசியமாக அவள் கண்களில் உருண்டு வந்த கண்ணிரை துடைத்துவிட்டார். அவருக்கு உதவியாக நின்ற அவளின் பழைய ஞாபகங்கள் வந்தன.
"சீ என்னடா வாழ்வு’ என அவனுக்கு மனம் வெந்து போய் கிடந்தது.
செல்லனோடு தொழில் பார்ப்பதை விட்டு விட்டான். அவளுடன் முகம் கொடுக்க முடியாமையால் நேரம் சுமையாய் பொறிந்தது. நண்பர்களைப் பார்க்க கரைப் பக்கம் வெளிக்கிட்டான்.
அன்டன் போர்ட்டிலே ஆட்களை நிறைத்துக் கொண்டு நின்றான். நகுலன் அவுட்போட் மோட்டரோடு இருந்தான். அவன் கனகனையும் போர்ட்டில் ஏறச்சொல்லி கையசைத்தான்.சிறிய அலைகளைக் கிழித்துக் கொண்டு லாவகமாக போர்ட் விரைந்தது. இதமான காற்று வீச கனகன் பண்ணைப் பக்க நீர்ப்பரப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான்.
டிக்கட் காசை சேர்த்தபிறகு அன்டன் அவனுக்கு பக்கத்தில் வந்தமர்ந்தான்.
“என்னடா விசயம்" என்று விசாரித்தான்.
‘டேய் கடையொன்று போட விரும்புறன். நீங்க தான் உதவி செய்யணும்" அவன் கேட்டான். அன்ரனுக்கு கண்கள் கலங்கின. எங்கோ பார்த்துச் சமாளித்துவிட்டு ‘அவனை நேரில் பார்த்துச்சொன்னான். “டேய் உனக்கில்லாததாடா மச்சான்” என்று அவன் தோள் மீது கையை வைத்தான். “ஞாயிற்றுக் கிழமை நேரம் வருமடா, அப்ப வாறமடா" என்றான். அரசியல் பற்றியும் திலகன் பற்றியும் கதைத்துவிட்டு அவன் விடைபெற்றான்.
வீடு வந்தவன் “தொழில் இல்லாது நெடுக இருக்க முடியாது’ என்று பலமாக யோசித்தான். ‘நண்பர்களிடமோ உறவுகளிடமோ கடன் வாங்கியாவது …சமாளிக்க வேண்டும்.அவனைக் கண்டால் சிறிது பயத்துடன் ஏறெடுத்துப் பார்க்கிற அவளிடமும் நேரடியாக மன்னிப்புக் கேட்கிறது நல்லது போல் கேட்டது.கமலம் என்று கூப்பிட்டான். அவன் குரல் கம்மியிருந்தது. விளக்கை ஏற்றிக் கொண்டிருந்தவள் திரும்பி அவனைப் பார்த்தாள். அவள் கண்களைக் கொஞ்ச நேரம் பார்த்தான்.
“உங்கப்பாவோட இனிமே தொழில் பார்க்கப் போறலை” என்றான். அவளுக்கு அக்கரையில்லாத விசயம் போல குசினிப் பக்கம் போக முயன்றாள். "அப்ப, எனக்கிருந்த குழப்பத்தில் கண்மண் தெரியாமல் குடித்துப் போட்டு வந்து .என்னை மன்னித்து விடு' என்று எங்கோ பார்த்துச் சொன்னான். மிருகம் என நிரூபித்த பின் மனிதன் என்று சொல்கிறான். அவளுக்கு வேடிக்கையாகப் பட்டது . அவள் எழுந்து போனாள். சாப்பிட்ட போதும் அருகருகே படுத்திருந்த போதும் அவர்கள் மத்தியில் புதுமணத் தம்பதிகள் என்ற நினைவு நிலவவில்லை. மாறாக பெரிய திரையே விழுந்து கிடந்தது.
வீட்டின் முன்புற வேலியோடு சேர்த்து சிறிய கொட்டில் ஒன்றை நண்பர் உதவியுடன் போட்டான். தாலியை கட்டச் சொல்லி மும்முரமாக நின்ற வாசிகசாலையோ மற்றவர்களோ உதவிக்கு முன் வரவில்லை. கசப்பு சூழ்ந்திருந்தது. அன்டன் வீட்டினர் கொஞ்சம் பணம் மாறி கடனாகக் கொடுத்தனர். முருகேசும், செல்லனும் கூட உதவினார்கள்.
அவன் நவாலி ஆட்களிடம் இருந்து சிறிய வள்ளமும் வலையும் வாங்கினான். கடையையும் ஒரே நேரத்தில் திறந்தான். மாப்பிள்ளை தன்னோடு சரிப்படா விட்டாலும் சூரன் என்று செல்லன் பெருமையோடு சொல்லிக் கொண்டான். அவனின் இடத்திற்கு ராஜனை புதிதாக சேர்த்துக் கொண்டான். அன்ரனின் தம்பி நடேசன் கனகனோடு உதவிக்கு வந்தான். கூலியாக இருக்காமல் பங்காளியாக இருக்கலாம்’ என்று அவன் விருப்பம் தெரிவிக்கவே, அவர்கள் கடனாகக் கொடுத்ததை பங்காக எடுக்கச் சொன்னார்கள். பிடிபடும் மீனில் அரைவாசியாக இருவரும் பிரித்தார்கள். வியாபாரம் ஒரளவு நடக்க அவன் ஒரு புள்ளியானான்.
காலையிலேயே தொழிலால் வந்த கையோடு குளித்துவிட்டு சங்கானைச் சந்தைக்கு ஒடினான். ஒவ்வொரு நாளும் மரக்கறிகள், மற்றும் மளிகைச் சாமான்களை வாங்கி சைக்கிளில் கட்டிக் கொண்டு வந்தான். பத்து மணிக்கெல்லாம் அவன் கடையில் புதிய மரக்கறிகள் வாங்கலாம் என்று கடைக்கு நல்ல பெயரும் கிடைத்தது.
ஒருநாள் அண்ணி சாமான் வாங்க கடைக்கு வந்த போது திலகனும் கூட வந்தான். இரவில் தொழில் பார்த்த அசதியோடு சந்தையில் இருந்து வந்த கையோடு வீட்டில் குந்து போல் கட்டப்பட்டிருந்த மண் விராந்தையில் படுத்துக் கிடந்தான். கடையில் சனம் குறைந்திருந்தது. அண்ணி “எடியே கமலம், எப்படியடி வாழ்க்கை?” என்று கேட்டாள். அவள் முகமலர்ச்சியற்றிருக்கவே “ஏதும் பிரச்சினையோ” என்று ஆதரவாக கேட்டாள். அவளால் என்ன சொல்ல முடியும்? வெறுமனே சிரித்தாள்.
கனகன் ஒரு மிருகம் என்றால் நம்புவாளா? அவளே கூட நம்ப எப்படிக் கஷ்டப் பட்டாள்? உவன் இப்படி நடந்துகொள்வான் என்று யாரும் முன்னர் சொல்லியிருந்தால் அவளும்கூட கடைசிவரை நம்பியிருக்க மாட்டாள்.
திலகன் அவனோடு கதைத்த போது “என்னடாப்பா. நானும் உங்களைப் போல் வந்திருக்கலாம்” என வருத்தத்துடன் சொன்னான். “உன்ரை மகனை வளர்த்து எங்களிட்ட அனுப்பன்" என்று திலகன் சிரித்தான். அவனோட கதைத்த பிறகு கனகனுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. விடைபெற்ற பிறகு யோசித்தான். மனதில் குழப்பம் அதிகமாகிக்கொண்டுபோவதை விட எல்லாவற்றையும் அவளிடம் கொட்டி விடுகிறதே நல்லது. விசயங்களை தெரிந்தே வெறுக்கட்டும்.
தொழிலால் வருகிற அவனை அணைக்க வேண்டியதில்லை. ஒரளவாவது முகம் கொடுத்து பேசினால் போதும். இருக்கிற விடுமுறை நாளிலும் குழப்பம் அதிகமானால் அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.
காற்று அன்று பலமாக வீசவே.வந்த நடேசனையும் திருப்பி அனுப்பியிருந்தான். பொதுவாக யாருமே தொழிலுக்கு போகவில்லை. வேளைக்கே கடையைப் பூட்டி விட்டு கமலமும் வந்தாள். தேநீர் வைத்துக் கொண்டு வந்து பக்கத்தில் வைத்தாள். அதை எடுத்து அவன் ஒரு புறமாக வைத்தான். “கமலம்” என கூப்பிட்டான். என்ன? என்று கிட்டே வந்து அவள் நின்ற போது கையைப் பிடித்து இழுத்தான். அவள் அவன் மேல் சரிந்து விழுந்தாள். 'கள்ளு மணம் வீசுகிறதா?” என மூச்சை கவனமாக இழுத்து கவனித்தாள்.
“கமலம் உனக்கு நான் என்ரை நிலையைச் சொல்லப்போறன் அதற்குப் பிறகு உன் இஷ்டம். உன்னை உன் விருப்பமில்லாமல் வற்புறுத்த மாட்டன்" அவள் அவனை சிறிது வியப்புடன் பார்த்தாள்.“உன்னை பிடிக்காமல் பேச முடியும். ஆனால் நான் சொல்ற முழுதையும் கேளாமல் ஒடி விடுவாய் என்றதாலை பிடித்திருக்கிறன். உனக்குத் தெரிய நியாயமில்லை. நான் ஒரு பெண்ணை விரும்பினனான். அவளும் என்னை விரும்பினாள். அவள் எழுதிய கடிதங்களை எரிப்பதற்காய் எடுத்து வச்சிருக்கிறன். உனக்கு விருப்பமென்றால் நீயே எரிச்சு விடு". அவன் மூலையில் கிடந்த சிறிய பிரவுண் பேப்பர் பையைக் காட்டினான். “உன்னை திடீரென கட்டி வைச்சு விட்டார்கள். மனக் குழப்பத்தில் குடிச்சுப் போட்டு வந்து பழிவாங்குறது போல் நடந்திட்டன். என்னைப் பொறுத்த வரையில் இனி நீ தான் எல்லாம்!, ஆறுதலாக இருக்க வேணும்” அவளை விடுவித்தான்.
அவள் அந்தப் பையை ஒரு தடவை பார்த்தாள். கடல் மனிதர்கள் ஒன்றில் முரடர்களாயிருக்கிறார்கள். அல்லது பலவீனர்களாயிருக்கிறார்கள். ஒரளவு படிப்பறிவு பெற்றவர்கள் கூட விதிவிலக்கில்லை. அவன் மார்பின் மேல் அவள் சாய்ந்து கொண்டாள். அவன் கண்களில் சூடான கண்ணிர் வந்தது. சமூகத்தை மேம்பாடாக்கணும். அல்லது ஒரு இயக்கத்திற்கு ஒடி சமூகத்தை எதிர்நோக்கியிருக்க வேண்டும்.அவள், அணைப்பில் இருந்து விடுபடாது அப்படியே கிடந்தாள். அவன் மனம் சிறிது ஆறுதல்பட தூங்கிப் போனான்.
அவன் அண்ணி வீட்டபோனபோது மச்சானும் இருந்தான். வளவு வேலிக்கு மேலாக அவனைக் கண்டு விட்டு செல்லமணி ஒடி வந்தாள். "அத்தான் அக்கா எப்படியிருக்கிறார்? வயிறு ஊதியா?" எனப் பகிடியாக கேட்டாள். பாபுவோடு இருந்த திலகனையும் அவள் கடைக் கண்ணால் பார்த்தாள்.‘இருவரையும் எப்படிச் சேர்த்து வைப்பது? என்று கனகன் யோசித்தான். கமலம் தான் சரியானவள்.
“நல்லாய் இருக்கிறாள்” என்றவன் ‘அண்ணி, மச்சானையும் குடும்பமாக பார்க்கவேண்டாமா?” என்று கேட்டான். தொடர்ந்து "இவளைப்போல ஒரு குட்டியைப் பார்த்து” என்று சொன்ன போது மணி "அக்கா வாறன்" என ஒடிவிட்டாள். தம்பியும் இவளை விரும்புகிறானோ? என்று சந்தேகத்துடன் புனிதம் அவனைப் பார்த்தாள். திலகன் சோகமாக சிரித்தவன் ‘உன்ரை வாழ்க்கை எப்படியடா போகிறது?” என்றான்.
“என்னத்தைச் சொல்லிறது?" அவன் அலுத்துக் கொண்டான்.
"பரவாயில்லை. நீயும் குடும்பக் காரன் மாதிரி கதைக்கப் பழகி விட்டாய்” என்று சொல்லி அண்ணி சிரித்தாள். அண்ணன் வர கொஞ்ச நேரம் இருக்க கதைத்துவிட்டு விடைபெற்றான்.
கடையை மூடி விட்டு கமலம் சமையலில் ஈடுபட்டிருந்தாள். அவள் மூன்று மணிக்கு பின்பே கடையைத் திறப்பாள். அந்த நேரம் கடையில் அவனும் உதவியாய் இருந்து விட்டு வலைக்கு வந்து விடுவான். சில சமயம் வாசிகசாலைப் பக்கம் போய் வருவான். பிறகு நடேசனோடு சிக்கலெடுப்பதிலும் பொத்தல்கள் அடைப்பதிலும் நேரம் சரியாகி விடும்.
சாப்பிட்டபிறகு அவளை அணைத்துக்கொண்டு படுத்தவன் மச்சான் விசயத்தை சொல்ல விரும்பினான்.“கமலம்' என்றான். இப்ப அவளுக்கு அவன் மேல் வெறுப்பு அவ்வளவாக வரவில்லை.
“மணியை மச்சான் விரும்புகிறான். எப்படி காரியத்தை வெல்லலாம் என்று தான் தெரியவில்லை” என்றான். அவள் சிறிது எழும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். “அவயள் வேற சாதி. ஒத்துக்கொள்ள மாட்டினம்" என்றாள் தயக்கத்துடன். "அண்ணியும் எங்கண்ணாவும் வாழவில்லையா?” என்று அவன் கேட்டான்.
‘எப்படி? அவளுக்கும் குழப்பமாக இருந்தது."உங்க நண்பர்கள் இயக்கத்தை விட்டு வெளிய வர முடியுமா?" என்று கேட்டாள்.‘சந்தேகம்’ எனப்பட்டது. “கேட்டுப்பார்க்க வேணும்” என்றான். அன்ரன், நகுலன் கூடவும் கதைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது.
கனகன் கடலால் வந்து குளிக்கிறபோத பூமணி படலையைத் திறந்து கொண்டு ஓடிவந்தாள். “அண்ணை தெரியுமே சுலோ செத்திட்டாளாம்” என்று கத்திவிட்டு “கமலம், கமலம்” என்று உள்ளே ஒடினாள்.
அவனுக்கு அந்தரமாக இருந்தது. பரபரவென சைக்கிளை ஒழுங்கு படுத்தி விட்டு காசையும் எடுத்துக் கொண்டு ஒடினான்.அவன் சந்தைக்கு போற வழியில் குவனை இருந்தது. சுந்தரம் மாஸ்டரின் தோட்டக் காணியில் இருந்த பாழுங்கிணற்றில் இருந்து பிரேதத்தை எடுத்து அருகில் வைத்திருந்தார்கள். காலைப் போதில், தண்ணிர் இறைக்க வந்த மாஸ்ரரின் மக்களே முதலில் கண்டு விட்டு ஆட்களைக் கூட்டினார்கள். அவர்களுக்கு அதிர்ச்சியில், செத்து மிதக்கிறாள் என்பது புரியவேயில்லை. 'தத்தளிக்கிறாள்’ என்று நினைத்தார்கள். பிறகு தான் இறந்து விட்டது தெரிந்தது.
அக்கிணற்றிலிருந்து உடலை எடுக்க சிறிது தயக்கம் நிலவியது. முன்பும் யாரோ ஒருவன் அதில் விழுந்து தற்கொலை செய்திருந்தான். அதனால் ‘பேய்க்கிணறு’ என்று சொல்லப்பட்டது. மாஸ்ட்ரும் வேறு ஒரு கிணறு பக்கத்தில் தோண்டியிருந்தார். அப்பகுதியில் நல்ல தண்ணிர் வந்ததால் ஊரார் குளிப்பதற்கு அங்கே வருவது வழக்கமாக இருந்தது. பழைய குளிக்கிற கிணற்றில்.என செய்தி பரவிய போது சனம் அங்கே திரண்டு விட்டது.
அக்கின்ணற்றில் யாரோ ஒருத்தன் இறங்கி அவள் இடுப்பில் உருகுதடம் மாட்டி, அவளை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வர மனிதத்தனம் செத்துவிட்டது வெளியே எடுத்தார்கள்.
எதிர்ப்புறத்தில் தன்னுடைய மரவள்ளிப் பாத்தியில் இருந்து சிவகாமியம்மா கத்தினாள். “இங்கே இரத்தக்கறை, தடிகள் முறிந்து கிடக்கு. எடியே விசாலாட்சி உவங்கள் பிள்ளையை இங்கை போட்டு மல்லுக் கட்டியே இழுத்துக் கொண்டு போய் கிணற்றில் போட்டிருக்கிறாங்கள்” விசாலாட்சியும் “ஓமணை, பெடிச்சியை கொன்றுதான் போட்டாங்கள்” என்றாள்.
சுலோவின் அயல்வீட்டுக்காரி சரசம்மா முணுமுணுக்கிற மாதிரி தெரிவித்தாள். “நேற்றிரவு பிந்தியே இவன் வந்தான். ஒரு பன்னிரண்டரை ஒண்டு இருக்கும். சண்டை நடந்தது. பெட்டைச்சி அழுது கொண்டிருந்தாள். பாண் வாங்கியாடி என்று அவன் சத்தம் போட்டான். அர்த்த சாமத்தில் மூர்த்தி கடைக்கு வெளிக்கிட்டவள் இப்படிக் கிடக்கிறாள்" வருத்தப் பட்டாள்.
மூர்த்தி அவ்விடத்தாள் தான். சிறிய வயல் வெளியைக் கடக்கிற அடுத்த கிராமத்தில் வீடு ஒன்று மலிவாகக் கிடைக்க வாங்கி குடியிருப்பை மாற்றிக் கொண்டவர். அதிலேயே சிறிய கடையும் வைத்திருந்தார். சிகரெட், மற்றும் இரவில்,அவசரத்திற்கு சாமான் வாங்க அவர் கடைக்கே குலனை ஆட்கள் ஒடுவார்கள். ஒரளவு நியாயமாய் விற்றதால் கடைக்கும் நல்ல பேர். பெரிதாக லாபம் வைத்து விற்காததால் கடை வருமானம் போதியதாக இருக்கவில்லை. எனவே பகலில் பலரைப் போல் அவரும் மேசன் வேலைக்குப் போய் வருவார். குண்டு வீச்சு நடக்கும் போது மேசன் வேலை எங்கே நடக்கும்? கடையில் தான் பெரும்பாலும் நின்றார். தமது கடைப் பெயர் அடிபட “பெட்டைச்சி என்ரை கடைக்கு சாமத்தில் வரவில்லை” என்றார். “அதற்கிடையில் தான் கொன்று விட்டார்கள்” என்று சரசம்மா தளதளத்தாள்.
ராஜன் தலையைக் கவிழ்த்திருந்தான். ராணி, “என்ரை சுலோ, ஐயோ.சுலோ. என்னடியம்மா இப்படிச் செய்து விட்டாய்” என்று கரைந்து அழுது கொண்டிருந்தாள். கனகனுக்கும் துயரமாக இருந்தது.'கொலை, கொலை என்று ஊர் அழுத்திச் சொல்லிற்று. அதில் அவர்களுக்கு இருந்த ஆத்திரம் தெரிந்தது.
ராணியின் புருசன் பஞ்சன் செய்தியை விஜயனுக்குத் தெரியப்படுத்தினான். வானிலே பெடியளுடன் வந்திறங்கிய அவன் முன்னெச்சரிக்கையாக வாசிகசாலைக் குழுவை அணுகினான். அவன் இன்னொரு இயக்கப் பிரதிநிதி.
“நாங்க பிரேதபரிசோதனை செய்ய விரும்புறம் அனுமதி தரவேணும்” தலைவர் வாயைப்பொத்திக்கொண்டு அழுதார். “எங்களை மீறின விசயங்கள்” என்றார்.
“இரண்டு இரண்டரைக்கிடையில் திருப்பி ஒப்படைப்பம்" என்றவன் “டேய் வானில் ஏற்றுங்கடா" என கட்டளையிட்டவன். ராஜனைம் கைது செய்து முன் சீட்டில் ஏத்தினான். சனம் கலையத் தொடங்கி விட்டது.
கனகன் அப்படியே சந்தைக்கு போய்விட்டான். "சீ என்ன கொடூரம்? அவனுக்கு கமலம் மேல் இனம்புரியாத காதல் வந்தது. சாமான் வாங்க வந்தபோது நகுலனைக் கண்டான். அவனும் அண்ணன்ர கடைக்கு சாமான்கள் வாங்க வந்திருந்தான். சைக்கிளில் வைத்துக் கட்டிக் கொண்டு இருவரும் திரும்பினார்கள். வழியில் “டேய், நீ யாரையும் விரும்பிரியா? என்று கேட்டான். அவன் சிரிக்க, “ டேய் யாரையும் காதலிச்சிடாதை பிறகு கஷ்டம்” என்றான் கனகன்.
“டேய் உன்ர மாமன் வீட்டில் கசிப்பு பார்ட்டி நடந்ததாக கதைக்கினம். உண்மையோ?” என்று நகுலன் கேட்டான். ஃப்ரெண்ட் ஆனாலும் அவன் இயக்கத்தில் இருப்பவன். அவன் கடமைகள் வேறு என்றது கண நேரத்தில் நினைப்பு வர, “தெரியலையே” என்று பதிலளித்தான்.
வீட்டுக்கு வந்தபின் “கமலம் நேற்று உங்கப்பன் தொழிலுக்குப் போகலையா?” என்று கேட்டான்.‘போயிருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். நான் சொன்ன போதே. உங்க நண்பர்களிட்ட சொல்லியிருக்கலாம். ராஜன் அங்கே தான் இருந்திருப்பான்” என்றாள்.
நாட்டு அரசியலை விட குடும்ப அரசியல் மோசமானதாகப் பட்டது. ஒருவேளை நகுலனுக்குச் சொல்லியிருந்தால் சுலோ தப்பியிருப்பாளோ? அல்லது அவள் அப்பாவியாக தானே போய் அந்த முடிவைத் தேடிக் கொண்டாளோ?
விஜயனும் அச்செய்தி அறிந்து அவர்கள் வாசிகசாலைக்கு வந்தான். “யார் வீட்டில் இருந்து கசிப்படித்தவன் என்று தெரியுமோ?” எனக் கேட்டான். “தெரியாது” என்று குழு சொன்னது.
“டேய், உங்களுக்காவது ஏதாவது தெரியுமா” என கனகன் தொட்டு நின்ற பெடியள் செற்றைப் பார்த்துக் கேட்டான். அவர்களும் துப்புக் கொடுக்க விரும்பவில்லை. அவன் மெளனமாக இருந்துவிட்டு வீட்டே வந்தான்.
பெண் பிரதிநிதி போல் கமலம் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கனகனால் சொல்லமுடியவில்லை. “உண்மையில் அவள் கொல்லப்பட்டால் எவரும் ஒன்றும் செய்யப்போவதில்லையா?” சமூகக் கட்டுப்பாடுகளை என்னால் மீறமுடியவில்லை என கழிவிரக்கமாக நினைத்தான்.
“பெண்கள் அமைப்பு என்று ஏதாவது அமைத்து வழக்கு மன்றம் நடத்தாத வரைக்கும் உடந்தையாக இருப்பது தொடரப் போகிறது” என்றான் அவன். அவள் துயரத்துடன் சிரித்தாள்.
பின்னேரம், சவம் வந்துவிட்டதாக செய்தி வந்தது. மனம் கேளாமல் அவனும் செத்த வீட்டுக்கு போனான். ராஜனை கிரியைகள் செய்ய அனுமதித்திருந்தார்கள். அங்கே நகுலன், திலகன், லிங்கன் என நண்பர்களைப் பார்த்தபோது அந்த விசயம் எல்லோரையும் பாதித்துவிட்டது தெரிந்தது.
“மச்சான், அண்ணி உன்னைக் கூப்பிட்டவ. போகேக்கை வந்திட்டுப்போ” என்றான் கனகன்.
புனிதத்துக்கு தம்பியை கனநாளைக்குப்பிறகு கண்டபோது கண்ணிர் வந்தது. அவன் வீட்டுக்கு துப்புரவாகப் போறதில்லை, என்று அறிந்தபோது அவளுக்குத் துயரமாக இருந்தது. "நீயும் என்னைப் போலாகிவிட்டாய்” என்று கரைந்தாள்.
அவன் என்ன பதில் சொல்வான்? கனகனைப்பார்த்து மெல்லச் சிரித்தான். அவர் குசினிக்குள் நுழைந்து தண்ணிரை அடுப்பில் வைத்தார்.
அவர்கள் திறந்த மண்விராந்தையில் இருந்தார்கள். பாபு அவன் மேல் ஏறி பிச்சுப் பிடுங்கிக்கொண்டு இருந்தான். கலாவை கனகன் தூக்கி சமாளித்தான். படலையடியில் செல்வமணி அவர்களை அனுதாபத்தோடு பார்த்துவிட்டு கடந்துபோனாள். தொழிலுக்கு ஆயத்தம் செய்திருந்த முருகேசு "தம்பி இண்டைக்கு கடலுக்குப் போகலையோ?” என்று கேட்டான்."மனசு சரியில்லை அண்ணை, போகேலை" என்றான். அவன் திலகனை ஆதரத்துடன் பார்த்தான் 'தம்பி தீவுப்பக்கமோ இப்போ?" என்று விசாரித்தான். ‘ஓம்’ என்று தலையாட்டியவன் பார்வை செல்வமணியைத் தொடர்ந்து போவதைப் பார்த்து கனகன் பெருமூச்சு விட்டான்.
முருகேசு போன பிறகும் கனநேரமாய் அங்கே கதைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையில் ஏதும் தனிப்பட கதைக்க விரும்பலாம் என்ற நினைப்பு வர “அப்ப திலகன் நான் வாறன்’ என்று விடைபெற்றான்.
அடுப்படி அலுவல்களை முடித்துவிட்டு வந்த கமலம் "அக்காவும், தம்பியும் என்னவாம்?” என்று கேட்டாள். “வேறென்ன அவவுக்கு அவன் மேல் பாசம் கூட!” என்றான்.
“இயக்கத்தைவிட்டு இவயளால் விலக முடியாதா?” என்ற பழைய கேள்வியைத் திரும்பக் கேட்டாள். “அவயள், விலகிறதை ‘பிழை’ என அரசியல் ரீதியாக விளக்கம் குடுக்கிறாங்கள். அப்படி வந்தாலும், சூழல் நல்ல படியாய்யா இருக்கிறது? என்ன?, சரியான முறையில் போராடா விட்டாலும் எதிரியால் சாகமுன், இவங்கள் ஒருத்தருக்கொருத்தர் அடிபட்டே செத்துப் போயிடுவாங்கள்” என்றான். “’சமூக விரோதிகள்’ என்று ஆயுதப் பலம் மிக்க ஒன்று ‘குற்றச்சாட்டை’ வேறு வைத்து அடிக்கத் தொடங்கும். கள்ளர், பல்வேறு , குற்றக்காரர்கள் , பிடிக்காதவர்கள், மற்ற இயக்கக்காரர்கள் எல்லோரையும் ஒரு மட்டையிலே “சமூகவிரோதி இவர் என்றும், ஒரு பட்டியலையும் எழுதி… மட்டையிலே எழுதி ,தொங்கப் போட்டு விட்டு பரவலாகச் சுட்டு கொல்றது தான் நடை பெறுகின்றது . ‘இயக்கம்’ என்றால் எதிர் வினையாற்றும் என்ற சிறிய தடங்கல் இருக்கிறது. விலகினால் அதுவும் இல்லை. ஏன்? தான் இப்படி பகைமை யை பாராட்டுறாங்களோ தெரியவில்லை ? இதனால், மக்கள், பெடியள் உறவுகள் முறிகின்றன. சனங்கள் முற்போக்காக செயற்படாட்டி… சீரழிவு தான்” . அட,நான் கூட அரசியல் பேசுகிறேனே? என்றும் நினைத்தான்.அவன் பேசுவது ஒன்றுமே விளங்காததால் அவள் அவன் அணைப்பில் உறங்கிப் போனாள்.
அடுத்தநாள், அயலுக்குள் ஒரே களேபரமாக இருந்தது. இரபுபோல, தீவுச் சென்றிக்கு சென்ற திலகன் எம் 80 கண்ணிவெடியை செக் பண்ணும்போது தற்செயலாக ஒன்று வெடித்ததில் படுகாயமடைந்திருந்தான். அவனோடு நின்ற ஒருத்தன் இறந்துபோனான். சீரியசான அவனை அவசர அவசரமாக பெரியாஸ்பத்திரிக்கு கொண்டோடினார்கள். தீவுப்பெடியள் சிலர் திரும்பும் போது புனிதத்துக்கு செய்தியை தெரியப்படுத்தினார்கள்.
அண்ணி அழுதுகொண்டிருந்தாள். வாசிகசாலையும் முருகேசுவும் காரைப் பிடித்துக் கொண்டு அவளை ஏற்றிக் கொண்டு விரைந்தார்கள். கனகன், அன்டன், நகுலன் இன்னும் பலர் சைக்கிளில் பறந்தார்கள். அந்தப் பகுதி முழுவதுமே பரபரப்பாகி இருந்தது.
ஆஸ்பத்திரியிலும் அண்ணி அழுதது பலருக்கு துயரமாக இருந்தது.
வார்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட திலகனை பார்க்க அனுமதித்தார்கள்.
மெல்ல கண் திறந்த அவன் "அக்கா, நீசந்தோசமாயிருக்கணும்" என்றான். கனகனைப் பார்த்தான். "மச்சான் உனக்கு மகன் பிறந்தால் என்ரை பெயரை வையடா?” என்று கேட்டவன் பதிலை எதிர்பாராமல் முருகேசுவை நோக்கினான். அன்டன் கையைப் பிடிச்சுக் கொண்டவன் அப்படியே கண்கன் செருக மூச்சடங்கிப் போனான்.
செத்த வீட்டை வாலையம்மன் பகுதியில் நடத்த அனுமதித்தார்கள். மற்ற சகோதரர்கள் எல்லோரும் வந்தார்கள். ரத்தப் பாசம் சாதியங்களை எல்லாம் மீறியது.
வாசிகசாலையும் பெடியளும் தோரணம் கட்டி விமரிசையாக நடைபெறச் செய்தார்கள்.மணியைப் பார்க்கும்போது கனகனுக்கு துக்கம் வந்தது. அவளுக்குத் தெரியாமலே ஒரு காதல் புதைந்து போனது. சிலவேளை, அவளுக்கும் சாடை மாடையாக புரிந்தும் இருக்கலாம்.
லிங்கன், அன்டன் எல்லோரும் கனகன் வீட்டிலே கனநேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் விடைபெற்ற போதும் துயரச்சூழல் குமைந்தேயிருந்தது. தெரிந்தவர்,அறிந்தவர்,உறவினர், இறந்தால் அந்த வலி லேசிலே மறைவதில்லை.
சுலோவின் கொலையை துப்புத் துலக்க எந்த அமைப்பும் முன் வராததால் விஜயனுக்கு ஒன்றும் செய்ய முடியாதிருந்தது. ‘சந்தர்ப்பம் வரும்போது கவனிக்கிறமடா’ என்று ராஜனைக் குறித்து ஆத்திரப்பட்டான், கறுவிக் கொண்டான்.
அநியாயத்தை அறிந்தோ அறியாமலோ வாசிகசாலை அமைப்புகள் ஆதரிக்கும் வரையில் சந்தர்ப்பங்களும் லேசில் வரப்போவதில்லை. மற்றத் தோழர்கள் ராஜனை அடியாமல் தடுக்க, அவன் ‘கண்டிப்பை’ வேறு கையாளவேண்டியிருந்தது.
இரண்டு மூன்று நாள் கழிய ராஜனை விட்டுவிட்டார்கள்.
ராஜன் குலனையை விட்டு வாலையம்மன் பகுதிக்கே வந்து விட்டான்.
பின்னேரம் போல, கரைப்பக்கமிருந்து வேறு ஒரு களேபரம் ஏற்பட்டது. அக்கரையிலிருந்து இயக்கப் பெடியள் சிலர் ஆயுதங்களுடன் தனிபோர்ட்டில் ஏறினார்கள். தூரத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஹெலி அவர்களைக் கவனித்து விட்டு …விர்ரென்று விரைந்து வந்தது.
மாலை, மங்கி வருகிற நேரத்தில்… அது, அராலித்துறையில் நெருப்பு மழையைப் பொழிந்தது. கூட்டம் விழுந்தடித்து ஒடியது.யாரோ ஒருவன் நிலத்தில் படுத்ததைப் பார்த்துவிட்டு பலர் நிலத்தில் படுத்தார்கள். மினிபஸ் ஒன்று ரிவேர்சில் குடிமனைப் பக்கம் வந்து நின்றது. 'போட்டில் வந்த பெடியள் மினிபஸ்ஸில் ஏறி தப்பிவிட்டார்கள். வாடிப்பக்கம் பதுங்கிய வர்த்தகர் ஒருவரின் மகன் வயிற்றில் சூடுபட்டு இறந்தான். இருவர் காயமடைந்தார்கள். இந்த சம்பவங்களால் இரவு கடலில் தொழிலுக்கு யாரும் செல்லவில்லை.
‘மணியை ராஜனுக்கு கட்டிக்கொடுக்க இருக்கினம்’ என்ற செய்தியை கமலம் கொண்டு வந்தாள். “அவள் என்ன சொல்கிறாள்?" என்று முட்டாள் தனமாக கேட்டான். கமலம் நூதனமாகப் பார்த்தாள். “அவளும் கழுத்தை நீட்டுறாள்" என்றாள்.
அவர்களுக்கு அறிவிக்காமலே ஊருக்கும் பரவலாகத் தெரியாமல் ஒரு சிலரோடு ஐயனார் கோவிலில் தாலி கட்டல் நடந்தது. கனகனுக்கு சொல்வதை வேண்டு மென்றே தவிர்த்துவிட்டார்கள்.
'வாசிகசாலை இளிச்சவாயாய் இருக்கிறதால தான் இப்படி எல்லாம் நடக்கிறது’ என்று நினைத்தான். ஒவ்வொரு செயலிலும் முற்போக்கைக் கடைப்பிடிக்கிற முறையில் வாசிகசாலையை பலமான அமைப்பாக மாற்ற வேண்டும். அது நியாயமற்ற செயல்களுக்கு காவடி தூக்கிறதை அறவே ஒழிக்கவேணும். “நானும் பொதுச்சேவையில் ஈடுபட்டால் தான் இதெல்லாம் முடியும்!..” எனப் பட்டது.
தலைவர் பரமேசிலும் ஒரளவு அநியாயத்தை எதிர்க்கிறபோக்கு இருந்தது. இங்கிருக்கும் வாசிகசாலை குலனை வாசிகசாலை மற்றும் தொழில் பார்க்கிற இடத்திலுள்ள வாசிகசாலை எல்லாவற்றையும் தொடர்புபடுத்தி ஒரு இணைப்பைக் கண்டாகவேண்டும். ஒரு ‘பொதுவான கமிட்டி’யை உருவாக்கவேண்டும். ஆதவைத் திரட்டுவதன்மூலமே அதை சாதிக்கமுடியும் என்று நம்பினான்.
அன்டனும் நகுலனும் தமக்கு தெரிந்த நண்பர், உறவினர் என கதைத்து ஆதரவைத் திரட்டினர். அவனும் சந்தைக்கு வருபவர்கள் மூலமாக முயன்றான். தொடர்புகளை செப்பனிட்டான்.பரமேசுடன் கதைத்தபோது ஆச்சரியப்பட்டான். அவனுக்கும் அவன்ரை நண்பர்களுக்கும் கல்யாணத் தொடர்புகள் பரவலாக இருந்தன. அவர்கள் முயற்சிக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக கூறினான்.
நாடகம், கடல் பாடல்களை சேகரிப்பது, வாசிகசாலையில் பெண்கள் தையல் வகுப்பு, கயிறு திரித்தல் போன்ற வேலை வாய்ப்புகள் வைப்பதுமாக. அவர்கள் திட்டம் விரிவாகவிருந்தன.
கூடவே, அயலிலிருந்த பள்ளிக்கூடத்திற்கு சிறுவர்களை அனுப்பிவைக்கும் போராட்டம் இவையெல்லாம் நடைபெறலாயின. முன்னர் சாதுரியமான வழிமுறைகளைக் கடைப்பிடித்த சாதியினர் இவர்களின் எதிர்ப்பின் முன்னால் பின்வாங்க வேண்டியிருந்தது.
இனிவரும் சந்ததி, பழைய கஷ்டங்கள் சிலவற்றைப் பெறாதுபோல் படுகிறது. பல நம்பிக்கை விதைகள் உரமாக விதைக்கப்பட இருவரின் மரணங்கள் காரணமாகின.
சுலோவின் படத்தை குலனை, வாசிகசாலையில் மாட்டியது. மலர் மாலையுடன் அப்படம் பேப்பர் வாசிக்கும் பகுதியில் பார்வையில் படக்கூடிய முறையில் இருந்தது. இதில் பிறந்த திகதி, கொலையுண்ட திகதி, என குறிப்பிட்டிருந்தது. ‘ஆண் பெண் வாதத்தை கடைப்பிடியாது வாசிகசாலை அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும்’ என்ற இளைஞர்களின் குரலுக்கு செவிசாய்த்திருந்தது.
‘சாதித்தன்மையை வெறுத்தவன்’ என்பதால் திலகன்ரை படத்தை இவர்கள் வாசிகசாலையில் மாட்ட வைத்திருந்தான்.
அந்தப் படங்களைப் பார்க்கிறபோது அவனுக்கு பழைய ஞாபகங்கள்…. மீண்டன! உடலில் அஞ்சலிக்கும் பரவசம் ஒடி மறைந்தது.
- முற்றும் -