'பாலியல் இலஞ்சம்'
- நடிகை ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகளால் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் ஆளுமைகள் பலர் நிலை கலங்கியுள்ளார்கள். ஆணும், பெண்ணும் புரிந்துணர்வுடன் நட்பு கொள்வதென்பது வேறு. பயன் ஒன்றுக்காகப் பெண்ணொருவரை ஆண் ஒருவர் தன் அதிகார நிலை காரணமாகப் பயன்படுத்துவது என்பது வேறு. அதுதான் நடிகை ஶ்ரீ ரெட்டியின் விடயத்திலும் நடத்துள்ளது. இவர் செய்தது சரியா தவறா என்று பார்ப்பதற்குப் பதிலாக இவரை இவ்விதம் பயன்படுத்திய ஆளுமைகள் செய்தது சரியா தவறா என்று பார்க்க வேண்டியதே மிகவும் முக்கியம். ஏனெனில் இத்துறையில் ஆயிரக்கணக்கில் ஆர்வமுள்ள பெண்கள் நுழைந்துகொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் ஏனைய துறைகளைப்போல் இத்துறையில் நுழைவதற்கு ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகள் விடயத்தில் இந்தியச் சட்டட்த்துறை போதிய கவனம் எடுக்க வேண்டும். விசாரணைகளை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நண்பர் ராகுல் சந்திரா இது பற்றி நல்லதொரு கட்டுரையினை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். ஶ்ரீ ரெட்டிக்கு ஏற்பட்ட நிலையினைப் 'பாலியல் இலஞ்சம்' என்று கூறியிருக்கின்றார். ஆம்! சரியான சொல்லாடல் அது. பாலியல் இலஞ்சம் கொடுத்தும் அதற்குரிய பலனை அவர் அடையவில்லை. இலஞ்சம் வாங்குவது தவறானதொரு செயல். பாலியல் இலஞ்சமும் இலஞ்சத்தில் ஒரு வகையே. ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் அவரது சொந்தக் கதையினை மட்டும் விவரிக்கவில்லை. தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நிலவும் சமூக விரோதச் செயல்களையும் வெளிப்படுத்துகின்றன. இவ்விதமான சமூக விரோதச் செயல்களைப் புரிபவர்கள் யாராகவிருந்தாலும் சட்டத்தின் முன் தப்ப முடியாது என்னும் நிலை ஏற்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மேலும் பெண்கள் பலர் முன்னுக்கு வந்து தம் அனுபவங்களையும் கூறக்கூடும். திரையுலகினைச் சீராக்க வேண்டிய காலகட்டமிது. பெண்கள் எவ்விதத் தயக்கமுமின்றி நடிப்புத் துறையில் ஈடுபடுவதற்குரிய சூழ்ழலை ஏற்படுத்த வேண்டும். அதற்குச் ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் வழி வகுக்கட்டும். - பதிவுகள் -
நடிகை ஶ்ரீ ரெட்டியுடைய வீடியோ விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாகவே சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துக்களும் பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.ஆரம்பத்திலிருந்தே நான் இந்தவிதமான செய்திகளை hype பண்ணுவதை அசட்டை செய்யவே விரும்பினேன். இப்போது எனக்கு நெருக்கமான பலரும் தமது கருத்துக்களை முன்வைத்த நிலையில், நான் மௌனமாக இருப்பது “சாமி குத்தமாயிடும்” இல்லையா. ஆதலால் இந்த விடயம் தொடர்பாக எனது அபிப்பிராயங்களையம் முன்வைப்பது அவசியமானது என்று கருதி இதனை எழுதுகிறேன். எனக்கென்னவோ இதனை ஒரு பாலியல் இலஞ்சம் தொடர்பான விடயமாக பார்ப்பதே சரியானதாக இருக்கும் என்று படுகிறது. ஏன் என்பதை பார்ப்போம்.
எல்லா ‘அதிகாரபடிநிலை சமுதாயங்களை’ (Hierarchical Societies) போலவே, ஆணாதிக்க சமுதாயத்தில், சமூகத்தின் பொதுவான வளங்கள், வாய்ப்புகள், அதிகாரங்கள் போன்றவை ஆண் - பெண் ஆகிய இரு தரப்பினரிடையே சமமாக பங்கிடப்படுவதில்லை. இவற்றை தமது கரங்களில் குவித்து வைத்துக்கொண்டுள்ள ஆண்கள், இவற்றில் தமக்கு உரிய பங்கை பெற முனையும் பெண்களை தடுக்க முனைகிறார்கள். Gate Keepers போல செயற்படும் இவர்கள், பெண்கள் இவற்றை பெறுவதை தடுக்கிறார்கள். அவற்றை பெண்கள் பெறுவதை தாம் அனுமதிப்பதாயின், அதற்கு தமக்கு பெண்கள் பாலியல் இலஞ்சம் தரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.
பாடசாலை மாணவிகள், பல்கலைக்கழக ஆய்வு மாணவிகள், வீட்டு வேலை முதல் கட்டிட வேலை, சுத்தம் செய்தல் போன்ற அனைத்து அடிதட்ட மட்டத்திலும் பணியாற்றும் ஏழை உழைக்கும் பெண்கள், நடிகைகள், படை வீராங்கணைகள், விளையாட்டு வீரர்கள், அலுவலக ஊழியர்கள், அரசியலில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்… என்று எல்லா வர்க்க, இன, சாதிய பின்னணிகளில் இருந்து வரும் பெண்களும் இந்த விதமான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். முதலில் இது ஒரு அப்பட்டமான பாலியல் அத்துமீறல் என்பதனை குறித்துக்கொள்ள வேண்டும்.