- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப்பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள் -
பாப்பா சொல்லும் கதை - 1
1. கறுப்புப் பூனையும் காவல் வீரனும்..!
வீட்டுக் கரசன் நான்தானே
வீட்டைக் காக்கும் காவல்காரன்
வெளியே இருந்து காக்கின்றேன்
வீரன் யாரு தெரியாதோ... ..
காவல் காரப் பெரியவரே
கனக்க வீரம் காட்டுகிறீர்
நானும் வித்தையில் வல்லவனே
நீரும் என்னை அறிவீரோ... ..
வீட்டுக் குள்ளே புகுந்திருப்பீர்
வேளை முழுதும் உறங்கிடுவீர்
அடுப்பங் கரையில் படுத்திருக்கும்
உமக்கு என்ன வீரம்தான்... ..
பெரிதாய் புளுகும் நாயண்ணா
பக்குவம் வேண்டும் மனதினிலே
மற்றோரை மதித்திடப் பழகிடுவீர்
மனதில் அமைதி கொண்டிடுவீர்...
எதிரே நின்று சீறுகின்றீர்
எலியைப் பிடித்து தின்னுகிறீர்
என்ன திறமை கொண்டுள்ளீர்
எதுவோ சொல்லும் பூனையாரே... ..
இவ்வளவு சொல்லும் நாயண்ணா
என்னை வெல்ல முடிந்திடுமோ
சின்னப் பூனை நானண்ணா
செயலில் பெரியவன் தானண்ணா...
இந்தா பாரும் என்னைத்தான்
உம்மால் முடிந்தால் காட்டிவிடும்
ஓடி மரத்தின் உச்சியிலே
ஏறும் அணிலைப் பிடித்திட்டேன்...
அதிகம் பேசிப் பயனென்ன
எதையும் செயலில் காட்டிவிடும்
அணிலைப் பிடித்த வீரன்யார்
அண்ணாந்து என்னைப் பாரண்ணா...
சிறியவர் என்று மற்றோரை
சிறிதும் ஏளனம் செய்யாதீர்
செயலில் வீரம் காட்டுகின்ற
சிறியவர் எல்லாம் பெரியவரே..!
பாப்பா சொல்லும் கதை - 2
2. புலியாரும் புள்ளி மானும்..!
அழகிய பச்சைக் காடாம்
அருகே பெரிய குளமாம்
தண்ணீர் குடிக்க மிருகங்கள்
தேடி அங்கே வருமாம்..
ஒட்டகம் எருமை யானை
ஓநாய் கரடி எனவே
காட்டில் மிருகம் பலவாம்
குயிலும் மயிலும் உண்டாம்..
சிவப்புக் கண்ணை உருட்டி
சீறிப் பாயும் புலியாம்
காட்டில் ராஜா என்றே
கர்ச்சனை செய்யும் சிங்கமாம்..
தண்ணீர் குடிக்கும் மானை
தாவிப் பிடிக்கப் புலியாரும்
பதுங்கிப் பதுங்கி வந்தாராம்
பார்த்து விட்டது மான்தானே..
என்ன புலி அண்ணாவே
எதற்கு நீரும் பதுங்குகிறீர்
எவரைப் பிடிக்கப் பார்க்கின்றீர்
அந்த மானும் கேட்டதுவே..
அப்படி ஒன்றும் இல்லையே
அழகிய குட்டி உன்னிடம்
பேசிப் பார்க்க வந்தேனே
புள்ளி மானே நம்பிடுவாய்..
பாரும் இங்கே புலியாரே
புள்ளி மான் குட்டிதனை
எப்படி வந்தது குளத்திற்குள்
இறங்கி நீரும் பிடித்திடுவீர்..
பாய்ந்து குளத்தில் குதித்திட்டார்
புலியார் சேற்றில் புதைந்திட்டார்
தப்பிப் பிழைத்தேன் நானென்று
தூர மறைந்தது மான்குட்டி..
அபாயம் வந்த போதினிலே
உபாயம் ஒன்று தேடித்தான்
புலியிடம் இருந்து தப்பியதே
புத்தி உள்ள மான்குட்டி..!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.