சமஷ்டி அந்தஸ்து ஆட்சேபிக்க முடியாதது! - ‘நாங்கள்’ இயக்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சல்
சர்வதேச அரங்கில் சிறீலங்கா அரசானது, மற்றைய அரசுகளோடு செய்யும் ஒப்பந்தங்களால் தமிழ்மொழி பேசும் மக்களின் தனி அதிகாரம் பற்றிய சமஷ்டி ஆட்சி அந்தஸ்தை கட்டுப்படுத்த முயல்கிறது. இத்தகைய ஒப்பந்தங்களால் சிறீலங்கா அரசு தன்னைச்சட்டபூர்வமாக கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமே தவிர, மனித உரிமை பற்றிய உலகப்பிரகடனத்தை கட்டுப்படுத்த முடியாது என்று வலியுறுத்தி கூறியுள்ள வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள மாற்று அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய ‘நாங்கள்’ இயக்கத்தினர்,
தனி அதிகாரம் பற்றிய சமஷ்டி ஆட்சி அந்தஸ்து குறித்த தமிழ்மொழி பேசும் மக்களின் பொதுஅபிப்பிராயத்தை தெரிந்துகொள்ள வேண்டிய காரியபூர்வமான, தார்மீகமுறையிலான கடப்பாட்டிலிருந்து வழுவி, ஐக்கியநாடுகள் சபை தவறிழைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்று (02.03.2015) ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும், கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள்-பிரதிநிதிகளுக்கும் அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சலிலேயே ‘நாங்கள்’ இயக்கத்தினர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.