தமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்!
- சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், லக்பிம நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட் (Lakbima Newspapers ) நிறுவனத்தில் பணிபுரிபவரும் , கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ (Kathyana Amarasinghe) தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது அங்குள்ள மக்கள் மொழி காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். மிகவும் பயனுள்ள கட்டுரை. இது போன்ற கட்டுரைகள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதால், புரிந்துணர்வுக்கு வழி வகுப்பதுடன் , பிரச்சினைகளின் பக்கம் அரசியல்வாதிகளின் கவனத்தையும் திருப்பும் சாத்தியமுண்டென்பதால் வரவேற்கத்தக்கவை. கட்டுரையினைப் பெற்று 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பிய நண்பர் ஜெயக்குமாரனுக்கு (ஜெயன்) நன்றி. -
யாழ்ப்பாணத்துக்குச் சென்று, அங்கு ஒரு டாக்ஸி வாகனத்தில் ஏறியதும், அதன் சாரதி அப்போதுவரை ஒலித்துக் கொண்டிருந்த தமிழ்ப் பாடல் இறுவட்டை நீக்கிவிட்டு, சிங்களப் பாடல்களடங்கிய இறுவட்டை இட்டு ஒலிக்கவிட்டார். கேட்டதுமே தலைவலியை உண்டாக்கும் விதமாக மோசமான அர்த்தங்களையுடைய சிங்களப் பாடலொன்று அதிலிருந்து ஒலிக்கத் தொடங்கியது. அது அருமையான சிங்களப் பாடலொன்று என்றும், அதனை ஒலிக்க விடுவதன் மூலம் இலங்கையின் தென்பாகத்திலிருந்து வந்திருக்கும் எம்மை மகிழ்விக்க முடியும் எனவும் சிங்கள மொழியை அறியாத அந்த அப்பாவி சாரதி எண்ணியிருக்கக் கூடும். இறுதியில் அப் பாடலை ரசிக்கவே முடியாதவிடத்து தமிழ்ப் பாடல்களையே ஒலிக்க விடச் சொல்லி பாடல் இறுவட்டை தமிழுக்கு மாற்றச் செய்தேன். பின்புறம் திரும்பிப் பார்த்த சாரதி தமிழ்ப் பாடல்களை ரசிக்கும் எம்மை வியப்புடன் பார்த்து புன்னகைத்தார்.
‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் எவை?’
எனக்கு அக் கணத்தில், முகநூல் சமூக வலைத்தள விவாதத்துக்குக் காரணமான அக் கேள்வி நினைவுக்கு வந்தது. எனது இனவாத நண்பர்கள் அதில் மாறி மாறிச் சொன்ன விடயம் என்னவென்றால், ‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் பிரச்சினைகள் எவையும் இலங்கையில் இல்லை’ என்பதாகும். அவ்வாறானதொரு நண்பன் முகநூலில் கிண்டலாக எழுதியிருந்த விதத்தில் (அவர் புரிந்து கொண்டிருக்கும் விதத்தில்) தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் என்பவை ஈழத்துக்கென தனியானதொரு தேசியக் கொடி, தேசிய கீதம் இல்லாமலிருத்தல், தனியான காவல்துறை இல்லாதிருத்தல் போன்ற சில ஆகும்.
“தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் சிக்கல்கள் பற்றிக் கேட்கிறீர்கள். கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. வேறெதற்காகவும் இல்லை. நாங்கள் தமிழர்களாக இருப்பதுவே சிக்கலுக்குரியதாகத்தான் இருக்கிறது.”
நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழர்கள் அநேகரது பதிலும் இவ்வாறுதான் இருந்தது. எனது தேசப்பற்று மிக்க தோழன் எண்ணிக் கொண்டிருக்கும் விதத்தில் தனியான தேசியக் கொடி, தனியான தேசிய கீதம் போன்ற சில்லறைக் காரணங்களை விடவும், தமிழர்களுக்கு – விஷேசமாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு தாம் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் பல இருக்கின்றன. அதில் பிரதானமானது மொழிப் பிரச்சினையாகும். பொதுவாக தமிழர்கள் எனும்போது தெற்கில் வாழும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் அறிந்திருக்கும் தமிழர்களை மாத்திரம் நினைவில் கொள்பவர்கள், மூன்று தசாப்த காலமாக சிங்கள சமூகத்திலிருந்தும் முற்றுமுழுதாகத் தூரமாகி வாழ நேர்ந்திருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களைக் குறித்து எண்ணிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள்.