சோவியத் குடியரசைத் துண்டுகளாக்கியதில் வெற்றி பெற்றன மேற்கு நாடுகள். அதுவும் போதாதென்று அவற்றையெல்லாம் தம் கூடாரத்துக்குள் இழுத்துக்கொண்டு, ரஷ்யாவை மேலும் பவீனப்படுத்தி, உலக அரசியலில் ஓரங்கட்ட முயற்சி செய்ததன் விளைவுதான் உக்ரைனை நேட்டோவுக்குள் கொண்டு வரும் முயற்சி. அது இன்னும் ரஷ்யாவைப் பலவீனப்படுத்தும். அதன் தேசிய நலன்களுக்கும் எதிரானது; ஆபத்தானது. உக்ரைன் மட்டும் தான் ஒருபோதும் நேட்டோவுடன் இணையப்போவதில்லையென்று அறிக்கை விட்டிருந்தால் இந்தப்போர் தவிர்க்கப்பட்டிருக்கும். தான் ருஷ்யாவுக்கு மிக அருகிலிருப்பதால், ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களுடன் தான் பின்னிப்பிணைந்திருக்கின்றேன் என்பதை உணர்ந்து தனது பூகோள அரசியலை அது நடத்தியிருந்தால் இப்போர் தவிர்க்கப்பட்டிருக்கும். அதே சமயம் போர்கள் அவை எக்காரணங்களால் நடந்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. அது மிகவும் துயரமானது.
இன்று உருவான போரை நிற்பாட்டுவதற்குரிய வழிகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதில், உக்ரைனை மேலும் மேலும் தூண்டி விட்டு, தம் நலன்களுக்காகப் போரைப்பற்றி எரியச் செய்திருக்கின்றன மேற்கு நாடுகள். இதனை உக்ரைனும் உணரவில்லை. அதுமேலும் தன்னை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்கப்போராடுகின்றது. அதே சமயம் மேற்கு நாடுகளின் ஊடகங்கள் எவையும் இத்தருணத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் நடத்திய குண்டுமாரி பொழிதல்களைப்பற்றி, ஏற்பட்ட மனித அழிவுகளைப்பற்றி , மனித உரிமை மீறல்களைப்பற்றி மூச்சே விடுவதில்லை. ஆனால் உலக நாடுகள் பல அவற்றை நன்றாகவே உணர்ந்திருக்கின்றன. உலகப்பொருளாதாரம் மேற்கு நாடுகளின் கைகளில் இருப்பதால் அவை அவற்றில் தங்கவேண்டிய நிலையிலுள்ளன. அதனால் அவை மெளனம் காக்கின்றன.