- சென்னை எதிராஜ் பெண்கள் கல்லூரிக்கு அர்ப்பணித்த, ஆங்கிலச் சொற்பொழிவின் தமிழ்ப் பதிவு.13.7.20 -
என்னை இந்த அமைவுக்கு அழைத்து எதிராஜ் கல்லூரி பேராசிரியை திருமதி அரங்க மல்லிகா அவர்களுக்கும்,இங்கு என்னை அழைப்பதற்கு முன்னோடியாகவிருந்த முன்னாள் முனைவர் திருமதி பிரேமா ரத்தினவேல் அவர்களுக்கும் நிகழ்வுக்கு வந்திருக்கும் மாணவிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள். இன்று,கோவிட் 19 கிருமியின் கொடிய தாக்கத்திலிருந்து தப்புவதற்கு, உலகத்தின் 200க்கும் மேலான தொகையுள்ள நாடுகளின்,உலக மக்களின் சனத் தொகையான 7.8 பில்லியன் மக்களில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளில் அடைபட்டுக் கிடக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மனிதர்கள், காட்டுவாசிகளாக இருக்கும்போது கூட இப்படி வாழ்ந்திருக்க மாட்டார்கள்.அவர்கள் பாதுகாப்பு காரணமாகக் கூட்டமாகக் குகைகளில் வாழ்ந்திருப்பார்கள்.மிருகங்களிடமிருந்து தப்பி வாழவும் மனித இனத்தின் பாதுகாப்புக்காவும் அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் அளவிடமுடியாத விஞ்ஞான அறிவு பல துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருக்கும் இக்கால கட்டத்தில்,கண்களுக்குத் தெரியாத எதிரியான கொரோணா வைரசால், மனிதர்கள் மந்தைகளாகப் பூட்டப்பட்ட வீடுகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களிற் சில ஆண்கள் நாகரீகமற்ற காட்டுவாசிகளைவிடக் கேவலமாகப் பெண்களிடம் நடந்து கொள்வது பல மனித உரிமை ஸ்தானங்களின் கவனித்திற்கு எடுக்கப் பட்டிருக்கிறது.
கோவிட்-19 தாக்கத்தில் முதலாவது நோயாளி, சீனா நாட்டின் வூஹான் மகாணத்தில் 2019 மார்கழி மாதத்தில் அடையாளம் காணப்பட்டார்.அன்றிலிருந்து,இன்றுவரை இந்த உலகம் இதுவரை காணாத, அனுபவிக்காத ஒரு கொடிய நோயின் பல்விதமான தாக்கங்களால்; மக்கள் துயர்படுகிறார்கள்.
இதுவரை பல கட்டங்களில், இயற்கை அனர்த்தங்கான, சுனாமி,சூறாவளி.பூமி அதிர்ச்சி,ஆளுமையை நிலை நாட்ட மனிதர்களால் தொடங்கப்பட்ட கடந்த நூற்றாண்டில் நடந்த இரு உலகப்போர் போன்றவற்றில், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு, ஒரு குறிப்பிட்ட தொகையான மக்கள் பல்வித அல்லல்கள் பட்டிருக்கிறார்கள்.இடம் பெயர்ந்து துன்பப் பட்டிருக்கிறார்கள். உடமைகளையிழந்து கண்ணீர் வடித்திருக்கிறார்கள்.சொந்தங்களையிழந்து ஆறாத்துயரை அனுபவித்திருக்கிறார்கள். சில காலகட்டங்களில் தங்கள் வாழ்வாதாரனமான விவசாயம் கொடிய இயற்கை அனர்த்தங்களால் அழிந்ததால் பட்டினியாற் துடித்திருக்கிறார்கள். சில இடங்களில்,சின்ன அம்மை, காசநோய் ஏற்பட்டு பல அழிவுகள் நடந்திருக்கின்றன. 1347-51ம் ஆண்டுகளில் 'ப்ளக் டெத்' அதாவது 'கறுப்பு மரணம்'; என்ற நோயால் கிட்டத்தட்ட 25-200 கோடி மக்கள்,ஐரோப்பாவிலும் வட ஆபிரிக்காவிலும் இறந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. 1918-19 கால கட்டத்தில் அமெரிக்காவில் தொடங்கிய 'ஸ்பானிஸ் புளு+'என்ற நோயால், 50 கோடி மக்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.அதில் பெரும்பாலானவர்கள் 20-40 வயதுக்கும் இடைப்பட்ட இராணுவத்தில் வேலை செய்த ஆண்களாகும். 1980ம் ஆண்டின் நடுப்பகுதி தொடக்கம் உலகைத் திகில் கொள்ள வைத்த எயிட்ஸ் நோயால் 37.9 கோடி மக்கள் தாக்கப் பட்டு 2018ம் ஆண்டுவரைக்கும் 770.000 மக்கள், பெரும்பாலும் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் (ஆண் பெண்கள்,குழந்தைகள் உட்பட) இறந்திருக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது. ஆனால் இன்று உலகை ஆட்டிப் படைக்கும் கோவிட்-19 என்ற நோயினால் வந்திருக்கும் பேரழிவை இதுவரை மனித இனம் எதிர்கொள்ளவில்லை. (லண்டன் கார்டியன்,12.7.20) இதுவரை 567.000 மேலான தொகையில் மக்களைப் பலிகொண்டிருக்கிறது. 12 கோடிக்கு மேலானவர்கள் நோயுற்றிருக்கிறார்கள்,7கோடி மக்கள் சுகமடைந்திருக்கிறார்கள்.ஆனால், இந்தக் கொடிய நோய் எவ்வளவு தூர காலம் மக்களை வதைக்கப் போகிறது என்று எந்த விஞ்ஞானியாலும் கணிப்பிட முடியாதிருக்கிறது.பெரும்பாலும் ஆண்களைத் தாக்கும் இந்நோய், கணிசமான தொகையில் பெண்களையும் குழந்தைகளையும் தாக்கியிருக்கிறது. சாதி,மத,இன,நிற,வர்க்க பேதமின்றி மனித இனத்தைப் பலிவாங்க வந்த வெறியுடன் கோவிட்-19 உலகெங்கும் பரவுகிறது.
உலகத்தில் எந்தப் பிரச்சினை வந்தாலும் அதில் அதிகம் தாக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளுமாகும். உதாரணத்திற்கு,இலங்கையில்1983-2009 வரை,தமிழ்ப் போராளிகளுக்கும் அரசுக்கும் நடந்த போரில் பல்லாயிரம் தமிழ் மக்கள் இறந்தார்கள,பல தமிழ்ப் பெண்கள் பாலியல் கொடுமைக்காளாக்கப் பட்டார்கள். பல வருடங்களாக,நையீரியா போன்ற ஆபிரிக்க நாடுகளில் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால்; தொடரும் பயங்கரவாதத்தால் பல பெண்கள் கடத்தப்படுகிறார்கள் பல வதைகளுக்குள்ளாகிறார்கள். 2014 கால கட்டத்தில் 'இஸ்லாமிக் ஸ்டேட்' பயங்கர வாதிகளால் ஈராக் பகுதியிலுள்ள சின்ஜார் இடத்திலுள்ள யஷிடி இனமக்களில் இனவொழிப்பு செய்யப்படார்கள். அந்தச் சம்பவத்தில்,யஷிடி இனப் பெண்கள் பட்ட துயரை உலகுக்குச் சொல்லி நோபல் பரிசை 2018ல் பெற்ற நாடியா முராட் என்பவர் சொல்லும்போது,'; பெண்களைப் பாலியல் வதை செய்யும் வன்முறை என்பது,அவளுடைய எதிரியால் அவளுக்கெதிரான ஆயுதமாகப் பாவிக்கப் படுகிறது' என்றார்.
இன்று கோவிட்-19 காரணமாக,தனியாக அடைபட்டுக் கணவர்களினதும் சில குடும்பங்களில்உறவினர்களாலும் இம்சைக்குள்ளாகும் பல பெண்களும்,உடல்,உள,பொருளாதார அத்துடன் பாலியல் ரீதியான பல கொடுமைகளை அனுப்விப்பதாக உலகம் பரந்த விதத்திலிருந்து பல தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. பெண்கள் என்று சொல்லும்;போது,இளம்பெண்கள்,முதிய பெண்கள்,திருமணமான பெண்கள்,அவர்களில் கர்ப்பமான பெண்கள் உட்பட பல பெண்கள் பல வன்முறைகளை முன்கொடுக்கிறார்கள் என்பது வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வுகளிலிருந்து தெரிகிறது.
கோவிட்-19 அடையாளம் காணப்பட்டு பத்து நாட்களிலேயே,பெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்முறைகள் பற்றிய செய்திகள் பல நாடுகளிலுமிருந்து வரத் தொடங்கி விட்டன. மனித வாழ்க்கையின் முக்கிய அம்சமான 'குடும்ப அமைப்பை' கோவிட்-19ன் வரவு அதிரப் பண்ணி விட்டது. சட்டென்று வேலையிழந்தவர்கள்,பொருளாதார நிலை குலைந்தவர்கள்,இடமற்று அலைபவர்கள் என்று பலகோடி மக்கள் பல திண்டாண்டங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். அதன் எதிரொலியாகப் பல தரப்பட்ட குடும்பப் பிரச்சினைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது.கோவிட் தாக்கத்தில் மிகவும் பாதிக்கப் பட்ட நாடான அமெரிக்காவில் பல மக்கள் அதனால் இறந்து கொண்டிருக்கிறார்கள்.பல கோடி மக்கள் வேலையிழந்தார்கள். பலர் வறுமையில் வாடுகிறார்கள். பல துப்பாக்கிச் சூட்டுக் சம்பவங்கள் நடக்கின்றன. வறுமை தொடக்கம், பெண்களுக்கெதிரான வன்முறைகள் பற்பல காரணங்களால் உலகின் பல நாடுகளிலும் நடப்பது மட்டுமல்லமல் நூற்றுக் கணக்கான பெண்கள் ஒவ்வொரு நாளும் கொலையும் செய்யப் படுகிறார்கள்.இதில் பெரும்பாலானவை,பொருளாதார விருத்தி பெறாத ஆபிரிக்க நாடுகளில் நடைபெறுகின்றன.
11.7.20 வெளியிட்ட 'ஒக்ஸ்பாம்'; நிறுவனத்தின் அறிக்கையின்படி இதுவரை இந்த உலகத்தில் ஒரு நாளைக்கு 12.000 மக்கள் பட்டினியால் இறந்துகொண்டிருக்கிறார்கள். தொடரும் கோவிட்-19 காரணமாக இந்தத் தொகை பலமடங்காகப் பெருகப் போகிறது என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஹங்கர் புறஜெக்ட் றிப்போர்ட்டின் படி இந்த உலகத்தில் போதியளவு உணவில்லாமல் வாழ்பவர்களில் 60 விகிதமானவர்கள் பெண்கள் என்று சொல்லப் படுகிறது. பசி, பட்டினி, நிச்சயமற்ற வாழ்க்கை நிலை வரும்போது அதன் கொடிய எதிர்விளைவாகக் குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும்.அந்த மாற்றத்தின் வக்கிரப் பலன்களை பெரும்பாலும் அனுபவிப்பவர்கள் பெண்களாகும்.உலகம் பரந்த விதத்தில்,பல பெண்கள் கோவிட் வந்து சொற்ப காலத்திலிருந்து தாங்கள் படும் அனுபவங்களை,சீனா நாடு தொடக்கம் மேற்கத்திய நாடுகள் பரந்த விதத்தில் விபரிக்கிறார்கள்.ஸ்பெயின் நாட்டில். வன்முறைக்காளாகிய பெண்கள் உதவி; கேட்கும் டெலிபோன் அழைப்புக்கள் 18 விகிதமாக் கூடியிருப்பதாச் சொல்லப் படுகிறது. பிரான்ஸ் நாட்டில் 30 விகிதத்தில் கூடியிருக்கிறதாம்.அந்நாட்டு உள் அமைச்சர் ஒரு டி.வி. நேர்காணலில்.தனது உத்தியோகஸ்தர்கள் இந்த விடயத்தில் உடனடியாக மிகக் கவனம் எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
கோவிட்- 19 தனிமைப்படுத்தலால்,ஒவ்வொருத்தரும் அவர்களின் சினேகிதர்கள், பெற்றோர்கள் ,உறவினரிடமிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் துணைவரின் முற்று முழுதான அன்பிலும்,பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் வாழவேண்டிய நிலையிலிருக்கிறார்கள். ஆனால் பெண்களைத் தங்கள் 'ஆண்மை' என்ற ஆளுமையால் அடக்கி வைக்கும் ஆண்கள், இந்தச் சந்தர்ப்பத்தில் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற விதத்தில் பெண்களை நடத்துகிறார்கள்.
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த.யூடித் ஹேர்மா என்ற,'மனத்துயர்' பற்றிய ஒரு நிபுணர் கூறும்போது,'இந்த சந்தர்ப்பத்தில் சில ஆண்கள், ஒரு பெண்கடத்தற்காரன் ஒரு பெண்ணைக் கடத்தித் தனிமையில் வைத்துத் தன் தேவைகளுக்கு அவளைப் பாவிக்க என்ன முறைகளைக் கையாள்வானோ அதே மாதிரிச் சில 'துணைவர்கள் (இன்டிமேட் பார்ட்னர்ஸ்-கணவர்,காதலர்),கோவிட்-19 தனிமைப்படுத்தப்பட்ட தங்கள் மனைவியை அல்லது காதலியைக் கையாள்வதாகச்; சொல்கிறார்.
'இன்ரப்பிரட்டர்'(6.4.20) என்ற பத்திரிகைப் பதிவில், பிறிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெண்டா ராகுப்,மெரியானா ஹெஷ் என்பவர்கள், 'பெண்களுக்கான வன்முறைகள், ஒரு சில குடும்பங்கள்,சில தருணங்களில் அதாவது நத்தார் விடுமுறை. அல்லது ஹொலிடேய் போன்ற தருணங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரேயடியாகச் சேர்ந்து வாழவேண்டிய நிலைவரும்போது, மிக அதிகமாகவிருக்கும்' என்கிறார்கள். மேற்கத்தைய நாடுகளில் கணிசமான மணமுறிவு நத்தார் பண்டிகையை அடுத்த மாதங்களில் நடக்கும் என்பதிலிருந்து,குடும்ப ஐக்கியம் என்பது எல்லோரும் தனிமைப்பட்டிருக்கும்போது அவர்களின் உண்மைத் தன்மையை வெளிப் படுத்துகிறது என்பது தெரியும்.
பாதுகாப்பான இடமென்ற குடும்ப அமைப்பில்,சொந்தக் கணவராலோ அல்லது காதலராலோ, ஒவ்வொரு வருடமும் 30.000 பெண்கள் இந்த உலகில் கொலை செய்யப்படுகிறார்கள் என்றும்.மேலும்,20.000 பெண்கள் அவர்களின் உறவினர்களால் கொலை செய்யப் படுவதாகவும்.பி.பி.சி.(.25.11.2019) குறிப்பிட்டது.பெண்களைக் கொலை செய்யும் நாடுகளில் ஆபிரிக்கா முதலிடம் வகிக்கிறது.
வீடு என்பது,எல்லோருக்கும் பாதுகாப்பான, முக்கியமாகப் பெண்களுக்குப் பாதுகாப்பான இடமல்ல என்பது, இங்கிலாந்து போன்ற பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு கிழமைக்கு இரு பெண்கள் என்றாலும் அவளுடைய கணவர்,காதலனால் கொலை செய்யப்படுகிறாள் என்பதிலிருந்து புரியும். இந்தியா போன்ற நாடுகளில்,வீடுகளில் பெண்; எதிர்நோக்கும் வன்முறைகள் அவளுடைய கணவரால் மட்டுமல்ல,கணவனின் குடும்ப அங்கத்தவர்களாலும் நடத்தப் படுகிறது என்று ஆய்வுகள் பல சொல்கின்றன. அண்மையில் ஐக்கியநாடுகள் சபைக் காரியதரிசி ஜெனரல்,அன்டொனியோ குற்ரறேஸ்,'கோவிட்-19 கால கட்டத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை அளவுக்கதிகமாக நடக்கின்றன. அதைத் தடுக்கப் பெண்களுக்கான பாதுகாப்பை உலகநாட்டு அரசுகள் அத்தனையும் மிகக் கவனமாக முன்னெடுக்கு வேண்டும்' என்று அறிக்கை விட்டிருக்கிறார். அந்த அளவுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது. உலகில் பல பாகங்களிலும் தொடரும் பொருளாதார வீழ்ச்சி இந்த நிலமையை மோசமாக்கும் என்ற அச்சம் எல்லோர் மனதிலும் பதிகிறது.
கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்து விட்டார்கள், பெரும்பாலும்; ஆண்கள் ஆனாலும், கணிசமானவர்கள் பெண்கள். இதனால்,சாதாரண வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அசாதாரணமாக மாறியதின் அதிர்ச்சியால் மக்களின் வாழக்கையின் அத்திவாரமான 'குடும்ப இணைவில்' பல அதிர்வுகள் இடம் பெறுகின்றன. இந்த மாற்றங்களுக்குப் திருப்பங்களும் அவர்களுக்கெதிரான வன்முறைகளும் பெண்களின் சாதாரண வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதை இந்தச் சிறு கட்டுரை விளக்க முயல்கிறது.
சாதாண காலகட்டத்தில்,தனது சாதாரண வாழ்க்கையைச் சுமுகமாகத் தொடர ஒரு பெண் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பல. 'அவள்' அதாவது,''பெண்' என்ற அடையாளமே,மனிதர்கள் அத்தனைபேரும், சமத்துவமாக வாழவும்,முன்னேறவும்,நிம்மதியான வாழ்க்கையைத் தொடரலாம்; என்ற கோட்பாட்டைத் தொடரத்; தடையாகவிருக்கிறது. 'பெண் உடல்' என்பது ஆண்களின் தேவைக்கான ஒரு பண்டமாகப் பல வழிகளில் பாவிக்கப்படுகிறது.அதற்கு, ஆண்களால் கட்டமைத்த சட்டதிட்டங்கள், கலாச்சார, சமய நம்பிக்கைகள் உதவுகின்றன. ஒரு பெண், ஒரு ஆணின்,தாயாக,சகோதரியாக,சக தொழிலாளியாக,வேலைக்காரியாக மட்டுமல்லாமல் அவனின் பாலியல்,ஆசைகளைப் பூர்த்தி செய்யும் பாலியற் தொழிலாளியாகவும் சமுதாயத்தில் எதிர்பார்க்கப் படுகிறாள்.இன்றைய கோவிட்-19 தாக்குதலால் ஒட்டுமொத்த மக்கள் எல்லோரும் தனித் தனியாக அடைபட்டிருக்கும்போது, கோவிட்-19 என்ற பயங்கர வைரஸ் மட்டுமல்ல ஒரு பெண்.அன்புடனும் ஆதரவுடனும் நடத்தப்படவேண்டிய குடும்ப சூழ்நிலையே அவளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் என்பது மிகவும் துக்கமான விடயம்.
கோவிட்-19, வைரசின் முதற் தாக்கம் சீனாவில மார்கழி மாதம் 2019ஆரம்பித்தது.அதன்பின் அங்கு பல இடங்களில் மக்கள் தனிமைப் படுத்தப்பட்டார்கள். பல தரப்பட்ட பிரச்சினைகள் தலை தூக்கின. பெண்களுககெதிரான வன்முறை அதிகரிக்கும் தகவல்கள் வந்தன. சீனாவின் கிழக்குப் பகுதியொன்றில், 1.3.2020. அன்று, 'லேலே' என்ற பெண் அவளது துணைவரால் மிகக் கொடுமையாக, நாற்காலி ஒன்றினால்,அவர்களின் 6 வயது மகனுக்கு முன்னால்த் தாக்கப்படாள். திருமணமாகி ஆறுவருடங்களாக அவன் தன்னை இப்படிக் கொடுமை செய்வதாகச் சொன்னாள்.'கோவிட்-19 காரணமாகத் தனிமைப் படுத்தப்பட்டதால் இவனிடமிருந்து தப்பி என்னால் வெளியாலும் ஓடமுடியாது.சண்டைகள் ஒவ்வொருதரமும் பெரிதாகிக்கொண்டு வந்து இப்படியான நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறது.'என்றாள். கோவிட்-19 காரணமாக அவள் எந்த பெண்கள் பாதுகாபகத்திற்கும் போகமுடியவில்லை. அவனிடமிருந்து பிரிய ஒரு வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டாலும் சமுக நிர்;வாக நிலை சரிவராதவரை அவள் தன்னைக் கொடுமைப் படுத்தும் கணவருடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறாள்.
லண்டன் கார்டியன் பத்திரிகைத் தகவலின்படி,'உலகமெங்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் கோவிட்-19 கால கட்டத்தில் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. பெண்களுக்கான வன்முறைகள்,இன்று கோவிட்-19 தாக்கத்தில் உலகத்தில் இரண்டாவது இடத்திலிருக்கும் பிரேசில் நாட்டில் 50 விகிதமும்,ஸ்பெயின் நாட்டில் 20 விகிதமும், தனிமைப்படுத்தல் அமுலாகிச் சில நாட்களில் சைப்பிரஸ் நாட்டில்,30 விகிதமும கூடியிருக்கிறது. தனிமைப்படுத்தல் அமுலாகி ஒரு கிழமையில்,பிரித்தானியாவில்,25 விகிதமும்கூடியிருக்கின்றன'.
பி.பி.சி.யின். தகவலின்படி, வன்முறைக்குத் தப்பித் தஞ்சம் தேடும் பெண்கள் பாதுகாப்பகங்களின் வலைத்தளங்களில் தேடுதல்கள் 150 விகிதம் கூடியிருப்பதாகச் சொல்கிறது. நியுசிலாந்தில், பெண்களுக்கு மட்டுமல்லாது. குழந்தைகள், முதியவர்களுக்கு எதிரான வன்முறைகளும் கூடியிருப்பதாகச் சொல்லப் படுகிறது. கோவிட்-19 தாக்கத்தைத் தடுக்க, 'எல்லோரும் வீட்டில் இருக்கவும்' என்று அரசு ஆணையிடுகிறது. ஆனால் வன்முறையைக் கையாளும் துணைவனுடன் வாழ்வது பல பெண்களுக்குப் பிரச்சினையாகவிருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் தனிமைப் படுத்தல் அமுலுக்கு வந்த 5 நாட்களிலேயெ ஒரு பெண் அவளது குழந்தைக்கு முன்னால்.அவளது துணைவரால் கொலை செய்யப் பட்டாள். இதே போல் பல நாடுகளில் கொலைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டு வருகிறது. இந்த விடயங்களைக் கையாளும் போலிஸ், சோசியல் சேர்விஸ் போன்ற ஸ்தானங்கள், பெருகிக் கொண்டு வரும் பெருந்தொகையான வன்முறைகளை எப்படிக் கையாள்வது என்ற திணறுவது ஆச்சரியமல்ல. இத்தாலி நாட்டில் ஆபத்தான நிலையிலிருக்கும் பெண்களுக்கு இடம் கொடுக்க ஹொட்டேல்களைத் திறந்து விடச்சொல்லப்பட்டிருக்கிறது. லண்டனில் வீடற்று தெருவில் வாழும் பெண்களுக்கு அப்படி உதவிகள் கிடைத்திருக்கின்றன.
தங்களுக்கெதிரான வன்முறைகள் பற்றி,வெளியிற் சொல்லி உதவிகோரும் பெண்களின் தொகை மிகக் குறைவாகும். பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் குடும்ப கௌரவம் காரணமாக வெளியில் சொல்வதில்லை.கணவனிடம் அடிவாங்குவதாகச் சொல்வது தங்களின் சுயமரியாதைக்கு இழுக்கு என்ற பல பெண்கள் நினைப்பதால் பல ஆண்கள் தங்கள் கைவரிசையை அவர்களிடம் தொடர்ந்த காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த மாதிரியான பெண்களின் நிலை கோவிட்19 காலத்தில் மிகவும் வருந்ததத்தக்கதாக இருக்கும்.
இந்திய நாஷனல் ஹெல்த் அன்ட் பமிலி 2005 கணக்கெடுப்பு, '14-49 வயதுக்குட்பட்ட பெண்களுக்கெதிராக வீட்டில் நடக்கும் வன்முறைகள்.33.5 விகிதம்,அதில் பாலியல் வன்முறைகள்.8.5 விகிதம்' என்று சொல்கிறது.(இந்தியாவின் சனத்தொகை 135 கோடி மக்கள் (2018). அமெரிக்காவில,100.00 பெண்களில் 590 பெண்கள் வன்முறைக்கு முகம் கொடுக்கிறார்கள்.அமெரிக்காவின் சனத்தொகை,32 கோடி (2019). 2014ம் ஆண்டு' லான்செட்'தகவலின்படி,இந்தியாவில்,27.5 லட்சம் பெண்கள்,தங்கள் வாழ்நாளில் ஒருதரம் என்றாலும் வன்முறைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்று பதிவிட்டிருக்கிறது. இந்தியாவில் சீதனக்கொடுமைக்கு எதிரான சட்டம் 1961 ம்;ஆண்டு வந்தாலும் இன்றும் சீதனக்கொடுமையால் பெண்கள் கொலை செய்யப் படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள்
அசிட் வீசுதல்,,மார்பகங்களைத் தடவுதல்-திருகுதல,சினேகிதமான சந்திப்பில் வன்முறை,வீடுகளில் வன்முறை,(எந்த வயதிலும்) கர்ப்பகால வன்முறை,பகிடிவதை, முஸ்லிம் நாடுகில் பெண்ணுறுப்பை வெட்டுதல்,பட்டினி போடுதல், அல்லது உணவைக் குறைத்துக் கொடுத்தல்,பெண்களுக்குப் பிடிக்காதவற்றை,கட்டாயப்படுத்திச் சாப்பிடக் கொடுத்தல். கர்ப்பக் கலைப்பு செய்ய மிரட்டுதல்,கட்டாயத் திருமணம் செய்தல்,கடத்திக் கொண்டு போய்த் திருமணம் செய்தல்.பாலியல் வன்முறை செய்தவனைத் திருமணம் செய்தல்,மணப்பெண்ணை எரித்தல்,சீதனக்கொடுமை செய்தல்;,கொலை செய்தல்,கௌரவக் கொலை செய்தல்,உடன் கட்டையேறப் பண்ணல்,தற்கொலைசெய்யத் தூண்டுதல்,
பாலியல் வன்முறைகள்: பல்கலைக்கழகப் பாலியல் சேட்டைகள்(பகிடிவதைகள்),பெண்ணை வற்புறுத்திப் பாலியல் செயற்பாடு (றேப்). கணனிவழியான-சமுகவலைகள,சார்ந்த பாலியல் தொல்லைகள். பாலியல் தொழிலுக்கு உட்படுத்தல்;, அடிமையாக வேலைசெய்யக் (பணியாளர்வேலை) கடத்துதல்,குழந்தை பாலியல் கொடுமைகள்,சில சமயச் சடங்குகள், (இனிசியெசன்ஸ்),
இந்தியாவில் 1995ம் ஆண்டு நடத்திய கணிப்பின்படி. கிராமங்களைச் சேர்ந்த 10 விகித பெண்களும்,நகரத்தைச்சேர்ந்த 6 விகிதப் பெண்களும் பாலியல் வன்முறைகளுக்கு முகம் கொடுப்பதாகச் சொல்லப்பட்டது. கல்வித்தராதரம் உள்ள மத்தியதரக் குடும்பப் பெண்கள் குறைந்த விகிதத்தில் பாதிக்கப்படுகிறார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2013,பி.பி.சியின் கணிப்பின்படி,பெண்களுக்கெதிராக நடத்தப்படும் குற்றச் செயல்களில் 309546 கிட்டத்தட்ட 118 866 குற்றங்கள் வீடுகளில் நடப்பதாகும் என்று கணிப்பிட்டது. இன்று கோவிட்-19 தாக்கத்தால் 'சாத்திய கதவுகளுக்குப் பின்னாலும் மூடிய ஜன்னலுக்கள்ளும்; வீட்டில் அடைந்து கிடக்கும்போது,பெண்களின் நிலை எப்படியிருக்கும் என்பது சிந்திக்கத் தக்கது.
ஆண்களால்,பெண்கள் தங்கள் வீடுகளில் முகம் கொடுக்கும் உடல்சார்ந்த வன்முறைகள், -கன்னத்தில் அடித்தல், தள்ளி விழுத்தல்,உதைத்தல்,கடித்தல்,அடித்தல்,பொருட்களால் தாக்குதல்,கழுத்தை நெரித்தல்,கடுமையான விதத்தில் தாக்குதல்,ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்துதல், எனப் பலவாகும். உலகம் பரந்த விதத்தில் இந்நிகழ்சிகள் தொடர்கின்றன். வைத்தியசாலை.போலிஸ் ஸ்டேசன், பெண்கள் காப்பகங்களில் வேலை செய்பவர்கள் இவற்றைப் பார்த்திருப்பார்கள். இவை கோவிட்-19 காலகட்டத்திலும் நடந்தால் அவர்களின் குடும்பத்தில் ஒருநாளைக்கு மிகவும் பாரதூரமான விளைவையுண்டாக்கும்.இதைப் பார்க்கும் குழந்தைகளின் மனநிலை எதிர்காலத்தில் பாதிக்கப்படும்,படிப்பு குழம்பும்.
உளம் சார்ந்த வன்முறைகள்
இவை வெளியில் தெரியாத காயங்கள். கணவரால் அல்லது மற்றவர்களால்,நடப்பது: -தொடர்ந்து நச்சரித்தல், தொடர்ந்து பிழைபிடித்தல்,-முட்டாளாக நடத்துதல்,-தரம்கெட்ட கீழ்த்தரமான வார்த்தைகளைப் பிரயோகித்தல்.குரலையுயர்த்தி மிரட்டுதல்,
-பார்வையால்,சைககளால் மனைவியை ஒரு அசிங்கமான பிராணியாய் மதித்தல்.
மேற்குறிப்பட்ட செயல்கள் கோவிட்-19 காலத்திலும் தொடர்ந்தால், அவை ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தடம் மாறச் செய்பவை.
மனத்தைக் குத்திப் பிளக்கும் உளம் சார்ந்த வன்முறைச் செயல்களால் ஒருபெண் தனது சுயமரியாதையை இழக்கிறாள்.தாங்க முடியாத மனத்துயரால் உடல்நோய்களும் தொடரும். உதாரணமாக, ஒரு கணவன் தொடர்ந்து ஒரு மனைவியைப் பிழைபிடித்துக் கொண்டிருந்தால் அவள் என்ன செய்தாலும் தனது செயல்களில் அவளுக்கே சந்தேகம் வரத் தொடங்கும்.ஓயாத பிரச்சினையால் நித்திரை வராது அதனால் தலையிடி வரும் அதைத் தொடர்ந்து மறதியும் வரலாம்.
கணவன் மனைவியை ஒரு முட்டாளாக நடத்தினால் அவள் மற்றவர்களுடன் பழகக் கூச்சப் படுவாள். அதனால் அவர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடத்தில் மற்றத் தாய்களுடன் மனம் விட்டுப் பேசிச் சினேகிதமாகப் பழக முடியாததால் அவள் சமுகத்திலிருந்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்கிறாள்.அல்லது அவள் வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களுடன் அதிகம் பேசிக் கொள்ளாத மிகவும் மௌனமானவளாகக் காணப்படுவாள்.
-டைனமிக்ஸ் யுனிசெவ்ஸ் குலொபல் றிப்போர்ட் கார்ட் ஒன் அடலசன்ட் 2012:பதிவு
இந்தியாவில்,'57 விகித ஆண்குழந்தைகளும் 53 விகிதமான பெண்குழந்தைகளும் தங்கள் தாயைத் தங்கள் அடிப்பதில் காரணங்கள் இருக்கிறது என்று சொன்னார்கள்' என்று சொல்கிறது. கணவனால் தொடர்ந்து கொடுக்கப்படும்; உளக் கொடுமைகள் தாங்காது 7.5 விகிதமான பெண்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதுமுண்டு.
கோவிட்-19 கால கட்டத்தில் ஒன்றிரண்டு குழந்தைகளுடன்,மாமா,மாமி போன்ற முதியவர்களுடன் வாழ்க்கை நடத்தும் ஒரு பெண்ணின் நிலையைக் கற்பனை செய்து பார்ப்பதே தாங்கமுடியாததாகவிருக்கிறது.
அடுத்தது, ஒரு பெண்ணுக்கு எதிராக அவள் வீட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகள். மனைவிக்கு விருப்பமில்லாத காலகட்டத்தில் அவளைப் உடல்; உறவுக்கு வற்புறத்துவதும், வன்முறையாக உடலுறவைத் தொடர்வதும் பிரித்தானியா போன்ற நாடுகளில் பெருங்குற்றம். ஒரு பெண்ணின் 'மனித'உரிமையைப் பங்கம் செய்வதாகக் கருதப்படுகிறது. மற்ற நாடுகளில் கலாச்சார. சமயக் கோட்பாடுகளின்படி மனைவி கணவனின் தேவையை மறுக்கக் கூடாது. பல பிரச்சினைகளுடனும் மாரடித்துக் கொண்டிருக்கும் கோவிட்-19 காலகட்டத்தில் தனிமைப்பட்ட சில தம்பதிகளுக்குள் இந்த விடயம் ஒரு பிரமாண்டமான பிரச்சினையைக் கொண்டு வரும் என்பதில் ஆச்சரியமில்லை.
கௌரவக் கொலைகள். குடும்பத்தாரின் விருப்பத்தை மீறி ஒரு பெண் தான் விரும்பியவனைத் திருமணம் செய்தால் கௌரக் கொலை செய்வது பல நாடுகளில் நடக்கின்றன. ஐக்கியநாடுகள் சபையின் கணிப்புப்படி,5000 கௌரவக் கொலைகள் இந்த உலகத்தில் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றன என்று குறிப்பிடுகிறது. மத்திய தரைக்கடல் நாடுகள்.தென்னாசிய நாடுகளான, இந்தியா பாகிஸ்தான், பங்களதேஷ், அத்துடன், பிரேசில், கனடா, ஈரான், இத்தாலி, எகிப்து, சிரியா, உகண்டா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தக் கொலைகள் தொடர்கின்றன.
-2010ம் ஆண்டு, சுப்றிம்கோர்ட் ஒவ் இந்தியா, 'கௌரவக்'கொலைகள் பற்றிய தகவல்களை,பஞ்சாப்,ஹரியானா,பீகார்,உத்தர பிரதேஷ்,ஜார்ஹான்ட்,ஹிமால்சல் பிரடேஷ்.மத்திய பிரதேஷ் போன்ற இடங்களிலிருந்த எடுக்கச் சொன்னதாகத் தகவல்கள் சொல்கின்றன. கட்டாயத் திருமணங்கள்: உலகில் பல நாடுகளில் தாய்தகப்பனின் விருப்பப்படி பெரும்பாலானவர்கள்,தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் சொத்து. அவள் திருமணத்தின் மூலம் 'பண்ட மாற்று' செய்யப் படுகிறாள். ஆபிரிக்காவின் பல நாடுகளில், பெண்ணுக்கு ஆண் சீதனம் கொடுத்துத் திருமணம் செய்வார்கள். இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் பெண்கள் சீதனம் கொடுத்து ஆணை வாங்குவார்கள்.
கல்யாணங்கள், தாய்தகப்பனால் நிர்ணயிக்கப் படுவதால்,அங்கு பெண்ணின் சம்மதம் ஒரு பொருட்டில்லை. அவள் விரும்பாவிட்டாலும் அவளைக் கட்டாயக் கல்யாணம் செய்து கொடுப்பார்கள். இது ஒரு பெண்ணின் 'மனித உரிமைக்கு' எதிரான விடயமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின்,2012ம் ஆண்டு தகவலின்படி,இந்திய சட்டம் ஒரு பெண்ணின் திருமண வயது 21 என்று சொல்கிறது,ஆனால் இந்தியாவில்,47 விகிதமான பெண்களுக்கு; 18 வயதுக்கு முன்னரே திருமணம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேறு சில நாடுகளில் ஒரு பெண்ணுக்கு 8 வயதாகவிரக்கும்போதோ திருமணம் செய்து வைக்கிறார்கள்
சீதனக் கொலைகள்: பெண்களுக் கெதிராக நடக்கும் வன்முறையாகும்.2010ம் ஆண்டு 8391 கொலைகள் நடந்தன. ஆமிரிட் டிலோன் என்பவர் 18.7.2018 ல் எழுதிய கட்டுரையில்,இந்தியாவில் சீதனக் கொடுமையால்.6.634 கொலைகள் நடந்ததாகச் சொல்கிறார். இவை, அவளின் புகுந்த வீட்டாரால் நடத்தபடுவது மட்டுமல்ல, சிலவேளைகளில், அவள் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளுமளவுக்குக் கட்டாயப் படுத்தப்படுகிறாள் என்று சொல்லப் படுகிறது.பெண்ணிடம் எதிர்பார்க்கும், பணம், நகை, உடமைகள். போன்றவையால் உண்டாகும் பிரச்சினையால் இந்தக் கொடுமைகள் தொடர்கினறன. கோவிட்-19 கால கட்டத்தில் இந்தப் பிரச்சினைகளுடன் ஒரு இளம் மணப் பெண் அவளின் மாப்பிள்ளை வீட்டில் தனிமைப்பட்டிருக்கும்போது எத்தனையோ பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கலாம்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது அவர்களுக்கான வன்முறைகள்
கனடியன் சுகாதார சேவை ராஸ்க் போர்ஸ்-அறிக்கையின்படி: பெண்களைக் கொடுமைப் படுத்தும் துணைவர்கள் அவள் கர்ப்பவதியாயிருக்கும்போதும் தங்கள் கைவரிசைகளைக் காட்டாமல் விடுவதில்லை. கர்ப்பவதிகளில் பலர், உடல் உளம் சார்ந்த வன்முறைகளுக்க முகம் கொடுக்கிறார்கள்.
-25 விகிதமானவர்கள் அடிகள் வாங்கி வதைபடுகிறார்கள்.
-20 விகிதமானோர்,கழுத்தை நெரித்து வதை செய்யப்படடிருக்கிறார்கள்.
-20 விகிதமானோர் பாலியல் கொடுமைகளுக்கள்ளாகியிருக்கிறார்கள்.
-40 விகிதமானோர் படுகாயங்கள் அடைந்திருக்கிறார்கள்.
-15 விகிதமானோர் வைத்திய உதவியை நாடியிருக்கிறார்கள்.
இதையும் விட,
-19 விகிதமானோர் உளரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது,கணவனின் பாதூரமான கட்டுப்பாட்டு விதிகளை முகம் கொடுத்தல்,பொருhதார ரீதியான வன்முறைகள்.
;பிரித்தானிய மெடிகல் இன்ஸ்டிரியுட்';.என்ற அமைப்பின் பதிவில், ரெஸா றோசிபூம் என்பவர் 15.6.20ல் எழுதும்போது,' கோவிட்-19 பண்டமிக்' காலகட்டத்தில்,வாழ்க்கையமைப்பில் வந்த மாறுதல்களால்; தனிமைப்பட்டிருக்கும்போது,தங்கள் துணைவர்களால் பன்முகக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இதன் காரணமாக அவளின் கர்ப்பகாலத்தில் பன்முகத் தன்மையான பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.
-சரியான நேரத்திற்கு முந்திப் பிள்ளை பிறக்கலாம். இப்படி நடந்தால் அந்தக் குழந்தை எடை குறைந்த குழந்தையாக மட்டுமல்ல வேறுபல பிரச்சினைகளும் அந்தச் சிசுவுக்;கு வரலாம். குழந்தைக்கு, தனக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்விருக்கலாம். வன்முறையான குடும்ப அமைப்பில் பிறந்த குழந்தைகள்,வளரும்போது,உடல் உள வளர்ச்சிப் பிரச்சினையால் பாதிக்கப்படலாம். சட்டென்று கோபம் வருவது. உணர்ச்சி வசப்படுவது, மற்றவர்களுடன் பழகத் தெரியாதது, என்பனவும் இருக்கலாம்' என்கிறார்.
முதிய பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
வயதுபோன காலத்தில் தங்களின் குடும்பத்தின் தயவில் வாழுவேண்டிய வயதில் பல முதியவர்கள் அவர்களின் குடும்பத்தால் வேண்டாதவர்களாக நடத்தப்படுகிறார்கள்.முதிய வயதுப் பெண்கள் பல வீடுகளில் பணிப் பெணகள் மாதிரி நடத்தப்படுவதுண்டு. பல முதியவர்கள் பணவசதியற்றவர்கள்.பலர் பட்டினியால் வாடுகிறார்கள்.பலர், உடல், உள வன்முறைக்காளாகிறார்கிறர்கள்.இந்த உண்மை எங்கள் பலருக்குத் தெரியும்.
முதியோர்களுக்கான வன்முறைபற்றி.133 நாடுகளில் ஆய்வு செய்த,உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி, முதிய பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமைகள் வெளிவருவதில்லை. 24:1 வன்முறைகள்மட்டும்தான் முறைப்பாடு செய்யப்படுகின்றன.59 விகிதமான நாடுகளில் முதியோருக்கெதிராகக் கொடுமை செய்வதைத் தடுக்க சட்டமிருக்கிறது. ஆனால் 39 விகிதமான நாடுகள்தான் அவற்றை அமுல் படுத்துகின்றன' என்று சொல்கிறது.
'ஹெல்ப் த ஏஐ;' என்ற நிறுவனத்தின் அறிக்கையின்படி,கடந்த 12 மாதங்களில்,முதிய பெண்களுக்கான வன்முறை:
-மொஷாம்பிக் நாடு:75 விகிதம்
-பேரு,83 விகிதம்
-கிறிகிஸ்தான்:39
-ஐந்து ஐரோப்பிய நாடுகளில (50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்);:28 விகிதம் நடந்திருக்கிறது. ஆபிரிக்காவின் சில நாடுகளில் முதிய பெண்களை; 'சூனியக்காரியாகக்'குற்றம் சாட்டி கொலைசெய்வப் படுவதுமுண்டு.
பெண்களுக்கெதிரான பல வித வன்முறைகளால் தொடர்ந்தால் கோவிட் காலகட்டத்தில் பெண்கள் அனுபவிக்கும் உடல் நலப் பிரச்சினைகள்
-அடிகாயங்களால் தோலில் ஏற்படும் சிதைவுகள்,எலும்பு முறிவுகள்,
-பாரதூரமான உதைபோன்ற வன்முறையால் உள்ளுறப்பு சிதைவுகள்,
-பாலியல் வன்முறையால்,பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேண்டாத கர்ப்பம்,
பெண்ணுறுப்பு,கர்ப்பப்பை சம்பந்தமான் பிரச்சினைகள்.
-பாலியல் நோய்கள்,கொனோறியா,கிலமீடியா,ஹெப்பரைட்டிஸ்,கருச்சிதைவு,-இடுப்பு அழற்சி,-தொடர்ந்த இடுப்பு வலி,தலையிடி,பெரினியல் குறைபாடுகள்.
ஆஸ்த்மா
,-எரிச்சல் கொண்ட குடல்;,
-சுய காயங்களை ஏற்படுத்துதல்
-புகை பிடித்தல்,-பாதுகாப்பற்ற உடலுறவு:
மன நோய்ப் பிரச்சினைகள். மனச்சோர்வு, பயம்,குறைந்த சுய மரியாதையுணர்வு, .பாலியல் செயலிழப்பு,உணவு உண்பதில் பிரச்சினைகள்,பிடிவாதம்.
-கட்டாயக் கோளாறுகள் ( கொம்பல்சிவ் டிசோடர்ஸ்)
-அதிர்ச்சிக்குப் பிந்திய கோளாறுகள் (போஸ்ட் ட்ரோமற்றிக் டிசொடர்ஸ்)
- தற்கொலையுட்பட்ட அபாயகரமான விளைவுகள்,(பேட்ரல் எபக்ட்)
-கொலைவெறி.
-தாய்மையின் இறப்பு,
-எச் ஐ.வி,எயிட்ஸ்.
பெண்களுக்கெதிரான வன்முறையால் பெண்கள் எதிர்நோக்கும் பல மருத்துவப் பிரச்சினைகளை மேலே காட்டப்பட்டிருக்கின்றன. மருத்துவசேவை கோவிட் காலகட்டத்தில் பொது மக்களின் மற்ற நோய்களைப் பார்த்துப் பராமாரிக்க வசதியோ நேரமோ இல்லாமல திண்டாடுகிறது.இந்தப் பிரச்சினைகள் கோவிட்-19 காலத்தில் நடக்கும்போது ஒருபெண்ணுக்கு உதவி கிடைப்பது என்பது மிகவும் கடின விடயமாகவிருக்கும்.
ஷாலு நிகம்-என்பவர்.(இன்டிபென்டன்ட்) ( சவுத் ஆசியா ஜேர்ணல்- எழுதிய கட்டுரையில் குறிப்பிடுவதாவது,
1990ம் ஆண்டிலிருந்து, இந்தியாவில்,சமுக முற்போக்கு,உலகமயப்படுத்தல்,தனிமனித மேம்பாடு என்பன அறிமுகப்பட்டது.ஆனால் சமுகத்தில் பெண்களுக்கான சமத்துவம் இன்னும் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. அவர்களுக்கெதிரான பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன.பல கோடி பெண்கள் கோவிட் கால கட்டத்தில் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.
பெரும்பாலான மக்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ள இன்றைய கோவிட்-19 கால கட்டத்தில் மத்தியதரக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் அவர்களின் வீடுகளில் வன்முறைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
சேரிகளிலும் தெருக்களிலும் வாழும் அடிமட்ட ஏழைப்பெண்கள் இருப்பதற்கே ஒரு இடமில்லாமல் பல துன்பங்களையும் வன்முறைகளையும் எதிர்நோக்குகிறார்கள். வேலை தேடி இடம் பெயர்ந்த இந்திய ஏழைப் பெண்கள்,தங்கள் குழந்தைகளுடன், நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து தங்கள் ஊருக்குப் போகவேண்டியிருக்கிறது. இதில் பலர் கர்ப்பிணிப் பெண்கள், வீதியருகில் பிரசவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். இடம் பெயர்ந்தவர்கள் ஊர் திரும்பும்போது பல ஆண்கள் இறந்திருக்கிறார்கள்.அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பசி பட்டினி அத்துடன் பாதுகாப்புமின்றி அல்லற் படுகிறார்கள்.
இதே நேரம் அரசு மதுக் கடைகளைத் திறந்து விட்டிருக்கிறது. பொருளாதாரத்தில் எடுக்கும் கவனம் பெண்களின் வாழ்க்கையில் பெரிதாகவில்லை. மதுக்கடைகள் திறப்பதால், குடிகாரக் கணவர்களின் வன்முறையால் பல பெண்கள் திண்டாடுகிறார்கள்.பலகோடி ஏழைப்பெண்கள் இப்படிப் பல வன்முறைகளை எதிர் நோக்குகிறார்கள என்று குறிப்பிடுகிறார்.
அமெரிக்கன் நாஷனல் மெடிகல் லைன் லப்ரரியின் பதிவாக, சில இந்திய நிபுணர்கள் எழுதியிருப்பதாவது:
- கோவிட்-19 தாக்கத்தால், மக்கள் தனிமைப் பட்டிருக்கும் கால கட்டத்தில், பெண்களுக்கான வன்முறை உலகம் பரந்த விதத்தில் கூடியிருக்கிறது. -ஹாஸ்ராக் டொமஸ்டிக் வயலென்ஸ் சமுகவலைத்தளத்தில்,பெண்களுக்கெதிரான வன்முறை விடயங்கள் பற்றிய தேடல்கள் 3000 எண்ணிக்கையில் சீனாவிலிருந்து வந்திருக்கிறது. -நாஷனல் கொமிஸன் ஒவ் வுமன் இன் இந்தியா (என்.சி.டபிளியு) அமைப்பு,மாசி மாதத்திலிருந்த சித்திரை மாதம்வரை பெண்களுக்கெதிரான வன்முறைபற்றிய முறைப்பாடுகள் 100 விகிதம் அதிகரித்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது - உழைக்காத ஏழைப் பெண்கள் தொடக்கம் உழைக்கும் படித்த பெண்கள் வரை பல பெண்கள் அவர்களின் துணைவர்களால்' பொருளாதாரக்' கட்டுப்பாட்டையும்.வன்முறையையும் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. -தனிமைப்படுத்தப்பட்ட கால கட்டத்தில் மதுபாவிப்பு அதிகரித்திருக்கிறது. -பாலியல்; வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. ஆபாசம் சம்பந்தப்பட்ட பொருட்கள் பெரும் விற்பனை நடக்கிறது. பெருமளவில், விற்பனையாகும், ஆணுறைகள், செக்ஸ் விளையாட்டுப் பொருட்கள் என்பவைப் பற்றிப் பார்க்கும்போது பாலியல் வன்முறைகள் அதிகரிக்கும் சந்தர்பங்கள் தெரிகின்றன. - பெண்களைப் பாதுகாக்க 2005ல் ஏற்படுத்தப் பட்ட சட்டங்கள் இந்த முக்கியமான காலகட்டத்தில் அமுல் நடத்தப்படவேண்டும். -பெண்களுக்கெதிராக எடுக்கப்படும் வன்முறைகளைத் தடுப்பது பற்றி,டி.வி அல்லது பத்திரிகைகள் வாயிலாகப் பொது ஜனங்களுக்கு பிரசாரம் செய்யப்படவேண்டும். - வன்முறையை எதிர் நோக்கும் பெண்களுக்கு, உதவி செய்யும் லைன்களும்,தற்காலிக காப்பகங்களும்,சட்ட ஆலாசனைகளின் உதவியும் உடனடியாகக் கிடைக்க ஆவன செய்யப்பட வேண்டும். -சில இடங்களில்,சுகாதார உத்தியோகத்தர்கள்,ஆஷா நிறுவனப் பணியாளர்கள், போன்றவர்கள் தற்போது வீட்டுக்கு வீடுசென்று,வீடுகளில் பெண்களுக்கெதிராக நடக்கும் வன்முறைகள் பற்றி மறைமுகமான விதத்தில் தகவல்களைச் சேகரிப்பது மிகவும் விவேகமான விடயமாகும்.
உலகத்தில் பல நாடுகளில் நடப்பதுபோல் நான் வாழும் இங்கிலாந்திலும் கோவிட்-19 காலகட்டத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. 27.5.20 காலகட்டத்தில் இங்கிலாந்தில்,வீட்டு வன்முறைபற்றி முறைப்பாடுகள் 66 விகிதம் அதிகரித்திருக்கிறது.
ஆங்கிலேயப் பெண்கள் மட்டுமல்லாது,அகதிகளாக வந்து குடியுரிமைப் பிரச்சினை போன்றவையுடன் கணவர்களின் வன்முறைகளாலும் பல பெண்கள் துயர் படுகிறார்கள். அதைத் தடுக்கவும் உடனடி உதவி செய்யவும் பல முயற்சிகள் எடுக்கப் பட்டாலும் பிரச்சினையை முற்று முழுதாக நிவர்த்திசெய்வது மிகவும் கடினமானவேலை என்று பெண்கள் காப்பகங்களில் பணிபுரிவோர் கூறுகிறார்கள்.அதுவும், சிறுபான்மையினப் பெண்கள் கோவிட்கால கட்டத்தில் பல தரப்பட்ட வன்முறைகளை அவர்களின் வீடுகளில் எதிர்பார்க்கிறார்கள். நியுகாஸில் என்ற இடத்தில்,பெண்களுக்கான 'ஆன்ஞெலோ சென்டர்' என்ற இடத்தில் வேலை செய்யும் றேசி லு+யிஸ் என்ற பெண்மணி. '25 விகிதமான சிறுபான்மையினப் பெண்களுக்கு,அவர்களுக்கென்று தனியாக ஒரு டெலிபோன் கூடக்கிடையாது. அவர்களின் குடியுரிமைப் பிரச்சினை போன்றவை அந்தப் பெண்களின் உதவி கிடைக்கத் தடங்கலாகவிருக்கிறது' என்று சொல்கிறார்,
-கோவிட்-19 தாக்கத்தால் பெண்கள் அதிகப்படியான வன்முறைகளால் துயர்படுகிறார்கள் என்பதால், பிரித்தானிய உள்நாட்டமைச்சர் செல்வி.பிரிட்டி பட்டேல் அவர்கள்,' யு ஆர் நொட் அலோன்' என்ற பிரசாரத்தைப் பெண்களுக்காக முன்னெடுத்தார்.அனால் அது, ஆங்கில மொழியில் மட்டுமிருந்ததால் ஆங்கிலம் தெரியாத சிறுபான்மையினப் பெண்களால் அதைப் புரிந்த கொள்ள முடியவில்லை.
- பெண்கள் காப்பகங்களுக்கு அரசாங்க பொருளாதார உதவி 2019 காலத்திருந்து, 38-45விகிதம் குறைந்திருக்கிறது. இதனால், தற்போது, கோவிட் 19 காலகட்டத்தில் வீடுகளில் நடக்கும் வன்முறையிலிருந்து தப்பிச் செல்ல பெண்களுக்குப் போதிய இடமில்லாதிருக்கிறது.
இலங்கை
மனித உரிமை அமைப்பு சார்ந்தவர்களால் எடுக்கப் பட்ட தகவல்களின்படி,(25.5.18) 124 நாடுகளை வைத்து ஆய்வு செய்ததில், உலகத்தில் 25-35 விகிதமான பெண்கள் வாழ்க்கையில் ஒரு தடவை என்றாலும் ஆண்களால், ஏதோ ஒரு வன்முறைக்காளாகிறாள் என்று சொல்லப் படுகிறது. 'தற்போது,இலங்கையில் படித்த பெண்கள் 90 விகிதத்திற்குக்கூட இருக்கிறார்கள். ஆனால், ஆணாதிக்கத்தை முன்னெடுக்கும் இலங்கை சமுதாயத்தில் வன்முறைகளுக்கெதிராக அவர்களால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியாதிருக்கிறது. 90 விகிதத்திற்கு மேலான இலங்கைப் பெண்கள் பொது பிராயண வாகனங்களிலேயே பாலியல் தொந்தரவுக்குள்ளாவது நாளாந்த விடயம்.' என்றும், ' இலங்கையில் கிட்டத்தட்ட 32 பெண்கள் ஒவ்வொருநாளும் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள்'என்றும் சமுகவலைத் தளத்தில் பதிவுகள் வருகின்றன.
சமயம் சார்ந்த பாரம்பரியத்தில் மிகவும்; மத உணர்வு கொண்ட குடும்ப அமைப்பில் இலங்கைப் பெண்கள் தங்களின் கணவரால் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்லி உதவி தேடுவது மிகக்குறைவு. 32 விகிதம் மெடிகல் உதவியை நாடியிருக்கிறார்கள். 10 விகிதம் தங்கள் குடும்பத்தாருக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
1978ம் ஆண்டிலிருந்து, நீண்ட காலமாகப் பெண்களின் விடயங்களைக் கவனிக்க ,பெண்களுக்கான மந்திரியிருக்கிறார். பல பெண்கள் நிறுவனங்கள் இருக்கின்றன. பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராகக் குரல் கொடுக்கிறார்கள். 1993ல் பெண்களின் உரிமை பற்றிய சாசனம் எழுதப்பட்டது.
1995ம் ஆண்டு பீகிங் நகரில் நடந்த பெண்கள் மகாநாட்டில் பெண்களின் மேம்பாடுகள் பற்றிய பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து,1996ம் ஆண்டு,(திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த கால கட்டம்) இலங்கையிலும்'நாஷனல் பிலான் ஒவ் அக்ஸன் போர் வுமன் கொமிட்டி' உருவாக்கப்பட்டது. 1995-98ம் ஆண்டு காலகட்டத்தில் வீடுகளில் பெண்களுக்கெதிராக நடக்கும் வன்முறைகள்.கணவனால் முன்னெடுக்கப்படும் பாலியல் கொடுமைகள்,'கிரிமினல்' விடயங்களாக எடுத்தாலும் அவைக்கு எதிராக சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின்பின் இலங்கையில் பல என்.ஜி.ஓ.நிறுவனங்கள் பெருகின. 2005ம் ஆண்டு வீடுகளில் பெண்களுக்கெதிராக நடக்கும் வன்முறைகளைப் பெண்களின் ஆரோக்கியத்துடன் சேர்த்து முன்னெடுக்கு முடிவெடுக்கப்பட்டது.
வன்முறைகளுக்கெதிராகப் பெண்கள் அமைப்புக்கள்,' பெண்களின் மனித உரிமை' பற்றிப் பேசினால், பெரும்பாலான இலங்கை அரசியல்வாதிகளோ,மதத் தலைவர்களோ அதை ஏற்றுக் கொள்வதாயில்லை. பெண்களுக்கான 'மனித உரிமை' என்பது மேற்கு நாட்டுக் கூப்பாடு என்கிறார்கள்.குடும்பத்தில் கணவன் மனைவி பிரச்சினை இயல்பானது என்ற வாதாடுகிறார்கள்.கோவிட-19 கால கட்டத்தில், பொருளாதாரப் பிரச்சினை, தொழில் இழப்பு, அதிகப்படியான மதுபாவிப்பு என்பவற்றால் வீடுகளில் பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரிகரித்திருக்கிறது என்ற பல தகவல்கள் வருகின்றன. ஆனால் அவை பற்றிய முழுவிபரமும் வெளிவரவில்லை.
பெண்களுக்கெதிரான வன்முறைகளால், பெண்கள் படும் உள, உடல் நலப் பிரச்சனைகளை,'பெண்களுக்கான மருத்துவ தேவைகள்' என்ற முறையில் அணுகி, 'பெண்களுக்கான வன்முறை' சார்ந்த தடயங்களை முன்வைத்து மருத்துவத் துறையில் உதவிபெறப் பல முயற்சிகள் நடக்கின்றன.
30 ஆண்டுகள் தொடர்ந்த போரினால், பல்லாயிரக்கணக்கான தமிழ் விதவைகள் பரிதாபமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கோவிட் 19 கால கட்டத்தில் அவர்களின் நிலை படுமோசமாகவிருக்கிறது. அவர்களுக்கெதிரான வன்முறைகள் ஏராளம். வேலியே பயிரை மேய்வதுபோல், அவர்கள் உதவி கேட்கப்போகும் இடங்களிலேயே சிலவேளைகளில் ஆபத்தான அனுபவங்களை அவர்கள் முகம் கொடுக்கவேண்டியுமுள்ளது.
சில வருடங்களுக்கு முன் லண்டனுக்கு வந்த தமிழ் அரசில்வாதி ஒருத்தரிடம்,போரினாற் துயர்பட்ட தமிழ்ப் பெண்களின் புனர்வாழ்வுக்கான உங்கள் திட்டங்கள் என்ன என்று கேட்டேன். அப்படி ஒரு திட்டமும் கிடையாது என்பது அவரின் மறுமொழியாகவிருந்தது. ஆணாதிக்கம் கொண்ட எங்கள் நாடுகளில் சாதாண காலத்திலேயெ பெண்களுக்கான வன்முறைகளைத் தடுக்க ஒரு நல்ல திட்டமில்லை.,
இப்படி ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கோவிட்-19 காலத்தில் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையால், 1975ம் ஆண்டு பெண்களுக்கான வருடமாகப் பிரகடனப்படுத்துப் பட்டது. அப்போது அங்கு பலர், பெண்களின் சமத்துவம், முன்னேற்றம் விடுதலை போன்ற பல விடயங்களைப் பேசினார்கள். அதைத் தொடர்ந்து பல மகாநாடுகள் பல இடங்களில் நடந்தன. இதுவரையும் பெரிய மாற்றங்கள் நடந்ததாகத் தெரியவில்லை.
இன்றைய கால கட்டத்தில், பெண்களுக்கான,கல்வி,தொழில்,வாய்ப்புகள் ஐப்பது வருடங்களுக்கு முன் இருந்தததைவிட அதிகமாகவிருக்கிறது.ஆனால் அவர்கள் பாதுகாப்பாக வாழும் வீடுகளில் அவர்கள் முகம் கொடுக்கும் பன் முக வன்முறைகளும் குறைவதாக இல்லை.
கோவிட்-19 உலக யதார்த்தை மாற்றியிருக்கிறது. நேற்றைய கோட்பாடுகளுடன் நாளைய சமுதாயம் மேம்பட முடியாது என்பதை கோவிட்-19 தாக்கம் காட்டியிருக்கிறது. இந்த கோவிட்-19 எவ்வளவு காலம் மக்களின் வாழ்க்கையுடன் தனது கோரவிளையாட்டைத் தொடரும் என்று எந்த அறிஞராலும் சொல்ல முடியாதிருக்கிறது.சமுகங்கள் இதுவரை பேணிவந்த சிந்தனைகள் தவிடுபொடியாகின்றன. எதிர்காலத்தில் இதுவரை மனிதர்கள் எதிர்பார்த்திராத கொடிய நிலையை உருவாக்கப் போகிறது. மொத்த மக்களும் பங்கெடுக்காத அரசியல் அமைப்பு ஒருநாளும் அந்த நாட்டை முன்னேற்றாது. ஏனவே அதற்கான நடவடிக்கைகளை மனித உரிமைவாதிகளும்; சமூகநலவாதிகளும் முன்னெடுக்க வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.