நினைவு தினம் இம்மாதம் 11 ஆம் திகதி
இலங்கையில் வடக்கே உடுவில் – மானிப்பாய் பங்குகளில் சமயப்பணிகளில் ஈடுபட்டுவந்த தம்பதியர் சாமிநாதர் குருசாமி பத்திநாதன் - செலின் அன்னரத்தினம் பத்திநாதன் ஆகியோரின் புதல்வனாகப் பிறந்த ஜேம்ஸ் அவர்கள் பிறந்த கதையும் பின்னாளில் அவர் வணக்கத்திற்குரிய மதகுருவாக வளர்ந்த கதையும் சுவாரசியமும் ஆன்மீகமும் உணர்ச்சியும் கலந்திருப்பது.
1945 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அருட் தந்தை ஜேம்ஸ் அவர்கள் தனது முதல் திருப்பலியையும் பிரசங்கத்தையும் மானிப்பாய் பங்கிலுள்ள மல்வம் தேவாலயத்திலேயே நிகழ்த்தினார். இந்த புனித நிகழ்வு 1970 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 06 ஆம் திகதி நடந்தது. சுமார் அரைநூற்றாண்டு காலத்தின் பின்னர், கடந்த 2019 ஆண்டு ஜூலை மாதம் இதே காலப்பகுதியில், யாழ்ப்பாணம் பெருந்தேவாலயத்தில் (Cathedral) அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடல், அவரது குடும்ப அங்கத்தவர்கள், ஊர்பொதுமக்கள், வணக்கத்துக்குரிய பிதாக்கள் புடைசூழ கண்ணீர் அஞ்சலியைப்பெற்றது. அவரது குடும்பத்திலிருந்து எதிர்பாராத சூழ்நிலையில் குருத்துவம் கற்கச்சென்று, தங்கு தடையின்றி இறைபணியைத் தொடர்ந்து, மக்களுடனேயே வாழ்ந்து, அவர்கள் பணியே மகேசன் பணியென அன்புருவாக வாழ்ந்தவரின் வாழ்வும் பணிகளும் முன்மாதிரியானவை.சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தமது முதலாவது பிரசங்கத்தை நடத்தியது முதல், கடந்த ஆண்டு, மக்களிடமிருந்து நிரந்தர ஓய்வுபெற்று இறையிடம் தன்னை ஒப்படைக்கச்சென்ற காலம் வரையில் நிகழ்ந்த சம்பவங்கள், சமயப்பணிகளுடன் மாத்திரமல்லாமல், நாட்டு நிலைமையுடனும் விடுதலைப்போராட்டங்களுடனும் இரண்டறக்கலந்தவை. இவற்றைப்பிரித்துப்பார்க்க இயலாது.
அருட்தந்தை ஜேம்ஸ், தான் சார்ந்த மறையை மக்களுக்கு போதித்து வளர்த்து வளம்படுத்தும் பணியில் மாத்திரம் தனது இறைபணியை வரையறுத்துக்கொள்ளவில்லை. அதற்கும் அப்பால் சென்று மனிதநேயத்தையும் அவர் வளர்த்தார். மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்று, மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக இறை அன்பு என்பதை உதட்டளவில் சொல்லாது, அன்பு செலுத்தி உணரவைத்தார். அதன் பெறுபேறாகத்தான் அன்றைய தினம் அவருடை இறுதி நிகழ்வில் மக்கள் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றுகூடி இறுதி அஞ்சலி செலுத்திய காட்சியை அவதானிக்கமுடிகிறது. தமிழர்கள் – சிங்களவர் இவர்கள் மத்தியிலிருந்து இந்துக்கள், கத்தோலிக்கர், பௌத்தர்கள் , இஸ்லாமியர்களின் மனங்களையெல்லாம் வென்றவராக மனநிறைவான இறைபணியை மேற்கொண்டவராகவே அன்று மக்களிடமிருந்து அவர் விடைபெற்றார்.
அவரது தன்னலம் கருதாத சேவைதான் மக்களை இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைத்தது என்றும் கருத முடிகிறது. மக்கள் யாரை நேசிக்கிறார்கள்..? யாரை நம்புகிறார்கள்..? யாரை முன்மாதிரியாக ஏற்கிறார்கள்..? என்பதையெல்லாம், நேசிக்கத்தகுந்த – நம்பத்தகுந்த – முன்மாதிரியாக கொள்ளத்தகுந்த ஒருவரின் இறுதிபிரியாவிடையில் சிந்தும் கண்ணீரிலிருந்து புரிந்துகொள்ளமுடியம்.
அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் உறவுமுறையில் எனக்கு சகலனாக இருந்தபோதிலும், குடும்ப உறவுக்கு அப்பால், இன அடக்குமுறைக்கு எதிராக என்னுடன் புரிந்துணர்வோடு பழகியவர். அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களும் நானும் சமய நம்பிக்கைகளுக்கு அப்பால், மிகவும் புரிந்துணர்வோடு எமது நட்பை பேணிவந்தோம். இந்த நல்லுறவு அவரது மறைவுவரையில் நீடித்திருந்தது. எனக்கும் அவரது தங்கைக்கும் 1976 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதனையடுத்து எதிர்பாராத வகையில் எமது நாட்டில் 1977 இல் மூண்ட இனவாத வன்முறைக்கலவரத்தில் தென்னிலங்கையிலும் மலையகத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி , இக்காலகட்டத்தில் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் ( T. R. R.O) தோன்றியது. பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி வளாகம் அகதிகளின் முகாமாக மாறியது. தமிழ் அகதிகளை கல்லூரி வளாகத்தில் வைத்திருப்பதற்கான காலக்கெடு நெருங்கியிருந்த நிர்க்கதியான சூழலில்தான், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு பகுதிகளில் ஐந்து ஐந்து – ஐந்து ஏக்கர் காணிகளில் மக்கள் குடியேறாமல் தரிசு நிலங்களாகக் காணப்பட்டன. அந்தக் காணிகளில் எமது மலையக மக்களை குடியமர்த்தினோம்.
இவ்வாறு குடியமர்த்தப்பட்ட மக்களின் தேவைகளை தமிழ் இளைஞர் பேரவையினர் கவனித்தனர். தமிழ்க்குடும்பங்களை பரவலாக குடியமர்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கிய காந்தீயம் அமைப்பினைச்சேர்ந்த மருத்துவர் ராஜசுந்தரத்தின் நெறிகாட்டலின் கீழ் சில குடும்பங்கள், செட்டிகுளம், செவிடன் குளம், குஞ்சன் குளம், பாலமோட்டை முதலான பகுதிகளில் குடியேறுவதற்கு முன்வந்தன. இக்காலகட்டத்தில்தான் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் செட்டிகுளத்தின் பங்குத்தந்தையாக இறைபணியாற்றிக்கொண்டிருந்தார். நான் அவரை தொடர்புகொண்டு, பங்கின் பணிகளையும் முன்னெடுத்தவாறு, அப்பகுதியில் குடியமர்த்தப்பட்ட மக்களையும் பொறுப்பேற்க முடியுமா..? பராமரிக்க முடியுமா..? எனக்கேட்டேன்.
யாழ். மறைமாவட்டத்தின் அனுமதியைப் பெறுவதற்காக, அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நானறிவேன். அவரிடம் இயல்பாகவே குடியிருந்த மனிதநேய உணர்வுதான், தான் சார்ந்திருந்த மதத்திற்கு அப்பாலும், பாதிக்கப்பட்ட எந்த இன, மத மக்களுக்கும் உதவவேண்டும் என்ற தூண்டுதலைத் தந்திருக்கவேண்டும். அவரது அர்ப்பணிப்பான சேவையினால், காந்தீயத்தின் பணிகளை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிரதேசங்களிலும் முன்னெடுக்க முடிந்தது.
1978 – 1979 ஆம் ஆண்டுகாலத்தில், தமிழ் இளைஞர் பேரவையினரும் இந்த குடியேற்றத்திட்டங்களுக்கு அனுசரணை வழங்கியதன் மூலம் வளர்ந்தனர். இந்த வளர்ச்சியை அன்றைய அதிகார வார்க்கமும் ஆயுதப்படைகளும் கண்காணிக்கத் தொடங்கின. தமிழ் எல்லையோரக் கிராமங்களில், மலையகத் தமிழ் மக்களை, யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞர்கள் அத்துமீறிக்குடியேற்றுகிறார்கள் என்ற எண்ணப்பாடு அரச மற்றும் ஆயுதப்படையினர் தரப்பில் எழத்தொடங்கியது. அந்தக்குடியேற்றங்களுக்குத் தேவையான நிதிவளம் வெளிநாடுகளிலிருந்து பெறப்படுகிறது என்ற தகவலையும் அரச சார்பு ஊடகங்கள் வெளியிடத்தொடங்கின. அதில் ஓரளவு உண்மை இருந்தது என்பதற்கும் மாற்றுக்கருத்து இல்லை. முன்னைய கல்லோயா சிங்கள குடியேற்றம் முதல், அதன்பின்னர் மகாவலி திசைதிருப்பத்தின் பேரில் நடந்த அரசின் குடியேற்றங்களை நாம் மறந்துவிட முடியாது.
அருட்தந்தை ஜேம்ஸ், செட்டிகுளம், வவுனியா அகதிகளின் நலன்கள் தேவைகளுக்காக அனைத்து மதத்தினருடனும் சிநேகபூர்வமாக உறவாடி அனைவரதும் நன்மதிப்பினையும் பெற்றிருந்தார். அவரது அந்த உன்னதமான நோக்கினால், கத்தோலிக்கத் திருச்சபையிடத்திலேயே, தேவனுக்கான சேவை தேவாலயங்களில் மாத்திரம் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை, மானுடத்தின் மேம்பாட்டிலும் தங்கியிருக்கிறது என்ற செய்தியை வழங்கினார். அதனால் சில இளம் பாதிரிமாரும் கன்னியாஸ்திரிகளும் யாழ். மாவட்டத்திலிருந்து பயணித்து தமிழர் குடியேற்றங்களில் தன்னார்வத்தொண்டர்களாக இயங்கினார்கள். மறை மாவட்டத்தின் HUDEC என்ற உதவிக்கரத்தின் மேற்பார்வையாளராக பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறை செலுத்தினார். முதலில் கிளிநொச்சி மாவட்ட பங்கு குருவாக பொறுப்பெடுத்து, அங்கு முக்கியமாக “ ஆரோபணம் “ ஆசிரமத்தை வழிநடத்தி, அதனை விஸ்தரித்தார். அவரின் ஏற்பாட்டில், லண்டனிலிருந்து புலம்பெயர் தமிழர், போரினால் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்து தவித்த சிறார்களின் பராமரிப்புக்காக ஆரோபணத்தை நிறுவினார்கள்.
இலங்கையில் தமிழ் இளைஞர்களை உள்ளடக்கிய அமைப்பொன்றை நிர்வகிப்பது அன்றைய போர்ச்சூழலில் அபாயகரமானது. இயக்கங்களின் கெடுபிடிகள், ஆட்சேர்ப்புக்கு அழைத்துச்சென்றவர்களை விடுவித்தல், ஆயுதப்படைகளின் மிரட்டல்கள், மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புதல் முதலான பலதரப்பட்ட சிக்கல்களையும் அவர் சமாளிக்க நேர்ந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில், அருட்தந்தை ஜேம்ஸின் பூதவுடல் யாழ்நகருக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது, செல்லும் வழியில் சில நிமிடங்கள் ஆரோபனத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அந்த நிமிடங்களில், ஆரோபணத்திலிருந்து பராமரிக்கப்பட்டு படித்து வெளியேறிய இளைஞர்களின் உணர்ச்சிமிக்க அஞ்சலி அங்கிருந்த எல்லோரையும் மனமுருகச்செய்து, மனிதநேயம் என்பது எவ்வளவுதூரம் பாயும் என்பதையும் பறைசாற்றியது.
மக்கள் அவரை மறை விசுவாசியாகப் பார்க்கவில்லை. மறையின் உதாரணமாகவே அன்பை சொல்லவல்ல, அன்பை பரிபூரணமாக தந்து உணர்ந்தவராகவே பார்த்தனர். முல்லைத்தீவு பொறுப்புகள், அவரை அவ்விடத்தில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து , புலிகளுடன் இணைந்து இயங்கவேண்டிய தேவையையும் ஏற்படுத்தியது. அவர்களின் மேல்மட்ட தலைவர்களுடன் சேர்ந்து, மக்களின் பொதுவாழ்விற்கான பணிகளில் ஈடுபட்டார். அத்துடன் சர்வதேசத்திற்கு மக்களின் நிலையை எடுத்துரைப்பதிலேயே அவர் கவனம் செலுத்தினார். யுத்தம் மக்களை கிரமம் கிரமமாக குடிபெயரவைத்து நிர்க்கதியாக்கிற்று.
வன்னிமாவட்டத்திற்கு குடிபெயர்ந்த 350, 000 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பழைய மாத்தளன், பொக்கனி, முள்ளிவாய்க்கால் முதலான சிறிய பிரதேசங்களுக்குள் வழியின்றி அடைந்து கிடந்தார்கள். அவை பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்தப்பட்டதால் நம்பிக்கையின்பேரில் மக்கள் இதற்குள் அடைந்தார்கள். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமுமே, நிராதரவாக இவர்களோடு முடங்கியது. போரில் கொல்லப்பட்டவர்களை புதைப்பதற்கும் பிரத்தியேக இடங்களில்லாது, அவர்கள் மரணித்த அந்தந்த இடங்களிலேயே புதைத்தார்கள். அவ்வாறு இறந்தவர் எம்மதத்தைச்சேர்ந்தவராக இருந்தாலும், சககுருவானவர்களுடன் சேர்ந்து இரவு பகல் பாராது ஆராதனை நடத்தி இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு முன்னின்று உழைத்தார்.
2009 ஆம் ஆண்டு ஏப்ரில் 22 ஆம் திகதி, அதிகாலை வலைஞர்மடத்திலிருந்த தேவாலய குருமடத்தில் அருட்தந்தை ஜேம்ஸ் இருந்தவேளையில் ஷெல் தாக்குதலுக்கு ஆளாகி காயமடைந்து உடனடியாக புல்மோட்டை ஆஸ்பத்திரிக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த ஆஸ்பத்திரியிலிருந்து சிகிச்சை பெற்ற அவர் வவுனியாவுக்கு திரும்பியபோது யுத்தம் முடிவுற்றிருந்தது. அதுவரையில் அவரோடு இருந்த மக்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். உடனடியாகவே தாமதிக்காமல், அந்த பாதிக்கப்பட்ட மக்களின் மனச்சுமைகளை தணிப்பதில் அவர் இறங்கினார்.
அவர்களுக்கு மாற்றுடைகளும் துணிமணிகளும் உலர் உணவும் சேகரித்துக் கொடுப்பதிலும் புலிகள் இயக்கத்திலிருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் தடுப்பிலிருந்தவர்களையும் சந்தித்து, அவர்களுக்கும் வாராந்தம் உடைகள், உணவு, சவற்காரம், பற்பசை, முதலான அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொடுப்பதிலும் மதவழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்துகொடுத்தார்.
2010 இல் அவர் மாங்குளத்திற்கு வந்தபோது, மனிதநேயப்பணி பன்மடங்காகியது. போரினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து, வானம்பார்த்து நின்ற மக்கள், அவர்களோடு இன்னும் நிர்க்கதியாக நின்ற மக்கள் என்று பலர் அபயக்கரம் நீட்டினார்கள். மக்கள் கூடுவதற்கும் தஞ்சம் புகுந்து படுத்துறங்கவும் இடிந்து கிடந்த மாங்குளத்திலிருந்த சென். அக்னஸ், வவுனிக்குளத்திலிருந்த வேளாங்கன்னி தேவமாத கோவில்களை திருத்துவித்தார்.
அதேபோன்று மறை மாவட்டத்தின் நிதியுதவியோடு, பணிக்கன்குளம், வடகாடு குழந்தை யேசு கிராமம் அம்பாள்புரம், போன்ற கிராமங்களில் சிறு சிறு தேவாலயங்களை நிறுவி, மரங்களுக்கு கீழே குடியிருந்த மக்களை ஆதரித்தார். அநாதைகளான பெண்பிள்ளைகளை பராமரிக்க குட்ஷெப்பர்ட் பிள்ளைகள் நிலையத்தை (Good Shepherd Children Home) தொடங்கினார். அவ்வாறுதான், கிராமங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை அனைவரதும் புரிந்துணர்விலும் அங்கீகரிப்பிலும் முன்னெடுத்து, அனைவரிடத்திலும் நம்பிக்கையை வளர்த்தார். இவ்வாறு அவர் மேற்கொண்ட பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அவருடைய 50 ஆம் ஆண்டு குருத்துவப்பட்ட நிறைவு விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டுமென்ற அவரது உடன்பிறப்புகளும், மறைமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் விரும்பினர். எனினும் அக்காலங்களில், தான் தியானத்திற்கு போகவிருப்பதாகவும் விழாவுக்காக செலவிடப்படவுள்ள நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும்படியும் அவர் வேண்டினார். ஆனால், அவரது குடும்ப உறவுகளோ விடவில்லை. நச்சரித்துக்கொண்டே ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர். ஆனால், அவையெல்லாவற்றுக்கும் முன்னர் ஆண்டவர் அவரை நித்திய துயிலோடு மக்கள் எல்லோரையும் பரிதவிக்கவிட்டு அழைத்துச்சென்றார். அவருடைய பூதவுடல், விதைக்கப்பட்ட சமாதியில் யாழ். மறைமாவட்ட பங்கைச் சார்ந்த அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் ( தலைவர் - Global Tamil Forum ) சில குருவானவர்களுடன் இணைந்து, பின்வரும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை பதித்தார். “ கிறிஸ்துவின் பணியாளனாக நீர் மக்களை முக்கியமாக துன்பத்திலிருந்தவர்களை நேசித்தீர். உமது இறைபணியின் முழுக்காலத்தையும் அவர்களுடன் இருப்பதற்காகவும், அவர்களின் தேவைகளை பார்ப்பதற்காகவுமே ஈடுபடுத்தினீர். தேவன் உமக்கு நித்திய சந்தோஷத்தை தருவானாக. “
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்கள் நினைவுகளாக என்றும் எம்முடனும், எந்த மக்களுக்காக அவர் வாழ்ந்தாரோ அம்மக்களின் நினைவுகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பார். அவருடைய நினைவாக அவர் பணியாற்றிய வன்னி பெருநிலப்பரப்பில் போரினாலும் வறுமைக்கோட்டினாலும் பாதிக்கப்பட்ட சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதற்கு ஏற்ற அறக்கட்டளை உருவாக்கப்படல் வேண்டும். அதுவே அன்னாரின் தன்னலம் கருதாத மக்கள்சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஏற்ற சிறந்த ஆக்கபூர்வமான பணியாகும்.
- அனுப்பியவர்: முருகபூபதி -