'அலை'சஞ்சிகையில் வெளிவந்த நீண்ட ஆசிரியத் தலைங்கம் இதுதான். அதற்குக் காரணமும் இருக்கின்றது. மே 31, 1981 தொடங்கிய வன்செயல்களின் காரணமாக ஜூன்1, 1981 இரவு யாழ் பொது நூலகம், ஈழநாடு பத்திரிகை ஆகியவை எரிக்கப்பட்டன. அவை ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு இவ்வாசிரியத் தலையங்கம். யாழ் பொது நூலக எரிப்பு பற்றிய தொகுப்புகளில் தவறாமல் உள்ளடக்க வேண்டிய கட்டுரை இந்த ஆசிரியத் தலையங்கம். ஆவணச் சிறப்புள்ள ஆசிரியத் தலையங்கம்.
நூலகர் என்.செல்வராஜா நிச்சயம் வாசிக்க வேண்டிய ஆசிரியத் தலையங்கமிது. இதுவரை காலமும் ஜூன் 1 இரவு நூலகம் எரிக்கப்பட்டதைத் தனது கட்டுரைகளில் வலியுறுத்தி வந்த அவர் அண்மையில் மீள்பதிப்பாக தேசம் பதிப்பகம் வெளியிட்ட "Rising from the AshesTragic Episode of the Jaffna Library(A Reference Guide for Researchers By Thesam Publications (2021)" நூலுக்கு எழுதிய அறிமுகக் குறிப்பில் "During the District Development Council Election period between end of May and early June 1981 there was mass unrest and tension in the North. An unofficial curfew was in place and violence erupted. As a result to this day, there is still confusion over the exact date of when the Jaffna Public Library was burnt down. 3rd January 2021" என்று சந்தேகமடைந்திருக்கின்றார். அதாவது நடைபெற்ற வன்செயல்கள் காரணமாக நூலகம் எரிக்கப்பட்ட தினத்தை அறிவதில் குழப்பமுண்டாம்.
பொதுமக்களுக்கு வேண்டுமானால் சந்தேகமிருக்கலாம். ஆனால் மாநகரசபையில் ஜூன் 1 பணி புரிந்துகொண்டிருந்த காவலாளி விமலேஸ்வரனுக்குச் சந்தேகம் வந்திருக்காதல்லவா. அப்போது மாநகர ஆணையாளராகப் பணிபுரிந்த மாநகர ஆணையாளர் க.சிவஞானம் அவர்களுக்கு அவ்விதமான சந்தேகம் வந்திருந்தால் தீயணப்புப்படை வாகனங்களை ஜூன் 1 இரவு தகவலைத் தொலைபேசியில் அறிந்ததும் அனுப்பியிருப்பாரா? (ஆதாரங்கள்: 1981 ஜூன் மாத ஈழநாடுப் பிரதிகள்)
இவ்வளவுக்கும் மேற்படி நூலைத் தொகுத்தவர் அவர். அத்தொகுப்பிலுள்ள ஆவணங்கள் பலவும் நூலகம் ஜூன்1, 1981 இரவு எரிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன. பாராளுமன்றக் ஹன்சார்ட்டில் (9.6.1981) வெளியான 'பாராளுமன்ற விவாதங்களில்' கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் தெளிவாகவே ஜூன் 1, 1981 இரவு நூலகம் எரிக்கப்பட்டதைத் தெரிவித்திருக்கின்றார். மேற்படி ஆவணம் அவர் தொகுத்த தொகுப்பிலுள்ளது.
யூன் 1981 வெளியான ஈழநாடு பத்திரிகைப்பிரதிகளில் மாநகரசபை ஆணையாளர் க.சிவஞானம், காவலாளி விமலேஸ்வரன் ஆகியோர் அளித்த சாட்சியங்கள் ஜூன் 1, 1981 இரவு நூலகம் எரிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன. வர்தர் வெளியீடாக வெளியான , செங்கை ஆழியான் நீலவண்ணன் என்னும் பெயரில் எழுதிய 'மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது' நூல் முக்கியமானதொரு நூல். இந்நூல் நூலகம் ஜூன் 1 இரவு எரிக்கப்பட்டதை விபரிக்கிறது.
இந்நிலையில் இவருக்கு இச்சந்தேகம் வந்திருக்கின்றது. சந்தேகம் வந்தது தவறில்லை. ஆனால் இதுவரை காலமும் அவர் கொண்டிருந்த முடிவினை மாற்றும் வகையில், ஏனைய சாட்சியங்களின் கூற்றுகளின் உண்மைத்தன்மையினை மறுக்கும் வகையில் சந்தேகம் வந்திருப்பதால் அவர் அச்சந்தேகத்துக்கான காரணங்களை முன் வைக்க வேண்டும். அப்படி முன் வைக்கும்போது ஏன் மேற்படி சாட்சிகளின் சாட்சியங்கள் தவறானவை என்பதை ஆதாரங்களுட்ன நிரூபிக்க வேண்டும். அப்படி முன் வைப்பது, நிறுவுவது அவரின் கடமை. சும்மா மக்களைத் திசை திருப்புவதற்காக இவ்விதமானதொரு ஆவணச்சிறப்புள்ள தொகுப்பு நூலின் முன்னுரையில் இவ்விதம் சந்தேகத்தினைக் குறிப்பிடுதல் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மிகவும் பொருட்செலவில் வெளியான மேற்படி தொகுப்பு நூலுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் சந்தேகம் அது. பாலுக்கு ஒரு துளி விஷம் போதும். ஒரு தொகுப்பு நூலின் ஆவணச்சிறப்பைக் களங்கப்படுத்தும் சந்தேகம். இந்நிலையில் அவரது சந்தேகத்துக்கான காரணங்களை அவர் வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
அவரது சந்தேகங்களுக்கான காரணங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இருக்குமானால் வரலாற்றுத்தவறொன்றினை நேர்செய்த மகா ஆய்வாளராக அவர் பாராட்டப்படுவார். நாமும் உண்மையினை அறிய வழியேற்படுத்தியதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்போம். ஆனால் எவ்வித ஆதாரங்களுமற்று சும்மா இவ்விதமான சந்தேகத்தை அவர் வெளியிட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வரலாற்றுத் திரிப்பாகவே கருத வேண்டும்.
'அலை'யில் வெளியான கட்டுரையை முழுமையாக வாசிக்க: https://noolaham.net/project/10/990/990.pdf
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.