*அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!
எந்நாளும் எந்தையர் நாள்தான் எமக்கு எந்தையே!
இரவு கவிந்திருக்கும் பொழுதுகளில்
இல்முன் சாய்வு நாற்காலியில்
அண்ணாந்து படுத்திருப்பாய்.
அப்பொழுதுன் சாறத்தைத்தொட்டிலாக்கி
அதில் நானுன்னுடன்
அண்ணாந்து படுத்திருப்பேன்.
அகன்று விரிந்திருக்கும் சுடர்கொட்டிக்கிடக்கும்
ஆகாயத்தைப் பார்த்தபடி படுத்திருப்பேன்.
சுடர்களை, செயற்கைக்கோள்களை, நீண்டவால்
வெள்ளிகளைப் பற்றியெல்லாம் அப்போது
விளக்குவாய். விரிவாக எடுத்துரைப்பாய்.
அப்பொழுதுகள் மறக்க முடியாத பொழுதுகள்.
பாலர் பருவத்து நினைவுகளில்
படிந்துவிட்ட சித்திரங்கள்!
அவை அழியாத கோலங்கள்!
வானியற்பியலில் விருப்பெனக்கு. என்
விருப்புக்கு மூலம் அப்பொழுதுகளே.
அப்பொழுதுகளில் அறிந்தவையே!
அவையே இன்றென் ஆர்வத்துக்கு
அடிப்படை.
பாலர் பருவத்தில் நூல்களால், சஞ்சிகைகளால்,
பத்திரிகைகளால் வீட்டினை நிறைத்தாய் நீ!
வளர்கையில் நாமும் வளர்வதற்காய் நீ
வாங்கி வைத்தவை அவை.
வளரும் பருவத்தில் வாசிக்கும் ஆர்வம் தந்தாய்.
வளரும் பருவத்தில் எழுதும் ஆர்வம் தந்தாய்.
வளர்கையிலென் எழுத்துகளை
விமர்சித்தாய். - மேலும்
வளர வைத்தாய்.
வளர்கையிலென் வாசிப்பை
விமர்சித்தாய்- மேலும்
வளர வைத்தாய்.
நீ
இருந்தவரை நாம் அடைந்ததெல்லாம்
இன்பமே! இன்பமே! இன்பமே!
எம்மிளம் பருவத்தே எமைவிட்டு
ஏன் சென்றாய் என்று நான்
எண்ணுவதுண்டு.
இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால்
இருப்பிலெம் வளர்ச்சி கண்டு நீ
இருந்திருக்கலாம்.
இருப்பினும்
இவ்விருப்பிலுனை
நாமெம் எந்தையாய்ப் பெற்றது
நாம் பெற்ற பெரும் பாக்கியமே!
இருப்புள்ளவரை நினைவுகளில் நீ
இருப்பாய்! நிலைத்திருப்பாய்!
தந்தையர் தினத்தில் மட்டுமல்ல
தந்தையே , எந்தையே!
என்றுமே , எந்நாளுமே
எம் இருப்புள்ளவரை
எம் நினைவுகளில் நீ இருப்பாய்!
எம் நினைவுகளில் நீ இருப்பாய்!
எம் நினைவுகளில் நீ இருப்பாய்!
எந்நாளும் எந்தையர் நாள்தான்
எமக்கு எந்தையே!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.