இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த முக்கியமான பெண் ஆளுமைகளிலொருவரான பத்மா சோமகாந்தன் அவர்கள் நேற்று மறைந்த செய்தியினை அச்சூடகங்கள், சமூக ஊடகங்கள் , எண்ணிம ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். வருந்தினேன். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சுதந்திரனில் புதுமைப்பிரியை என்னும் பெயரில் சிறுகதைப்போட்டியில் முதற் பரிசினைப் பெற்றதன் மூலம் தன் பக்கம் இலக்கிய உலகின் கவனத்தைத்திருப்பியவர். புனைவு, அபுனைவு என்னும் பிரிவுகளில் பல நூல்கள் இவரது படைப்புகளைத்தாங்கி வெளியாகியுள்ளன.
இவர் தன் கணவர் எழுத்தாளர் ஈழத்துச் சோமுவுடன் (சோமகாந்தன்) கனடாவுக்கு வருகை தந்தபோது அவர்கள் தங்கியிருந்த மிஸ்ஸிசாகா நகருக்கு எழுத்தாளர் கடல்புத்திரனுடன் சென்று சந்தித்தேன். சுமார் இரு மணி நேரம் இருவருடனும் பல்வேறு விடயங்களைப்பற்றிக் கலந்துரையாடிவிட்டுத் திரும்பினோம். அவர்களுடன் உரையாடியதை ஒலிப்பதிவு செய்திருந்தேன். ஆனால் அவ்வுரையாடல் ஒழுங்காங்கப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. ஆழமான கிணறொன்றுக்குள் இருந்து பேசினால் எப்படியிருக்குமோ அப்படி ஒலிக்கும் நேர்காணலாக அமைந்து விட்டது. இடையில் பல இடங்கள் விடுபட்டும்போய்விட்டன. ஒலிப்பதிவுக் கருவியின் தவறாகவிருக்க வேண்டும். இருந்தும் அவர்கள் குரல்களைப் பதிவு செய்துள்ள ஒலிநாடாக்களை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.
சோமகாந்தன் தன் எழுத்துலக அனுபவங்களை , தான் எழுதிய பல்வகை நூலுருப்பெற்ற படைப்புகளைப்பற்றி (இலக்கிய நினைவலைகள், இலங்கைத்தமிழர்தம் அரசியல் பிரச்சினை, முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாறு, நாவல்கள் பற்றி ) உரையாடினார். அன்றிருந்த பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி போன்றவர்களைப் போன்ற ஆளுமைகளைத் தற்போது இலக்கிய உலகில் காண முடியவில்லை என்று அவர் கூறியதுடன் பேராசிரியர் கைலாசபதியுடனான அனுபவங்களையும் நினைவு கூர்ந்தார். கூடவே தான் பிறந்த இடத்து அவரது சமூகத்தின் நலிந்த நிலையினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள தன் நாவல் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன் வீரகேசரியில் தான் எழுதிக்கொண்டிருந்த பத்தி எழுத்துகள் பற்றியும் எடுத்துரைத்தார். சோமகாந்தன் அவர்களின் குரல் மிகவும் மென்மையானது. உள்ளத்தை வருடிச்செல்லும் தன்மை மிக்கது. தனித்துவமான குரலும் கூட. ஒருமுறை கேட்டாலும் மறக்க முடியாத குரல்.
பத்மா சோமகாந்தன் அவர்களும் தன் ஆரம்ப கால இலக்கிய அனுபவங்களிலிருந்து அன்று வரையிலான தனது இலக்கிய அனுபவங்கள், எழுதிய நூல்கள், வீரகேசரியில் பெண்களின் உளவியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எழுதும் கேள்வி-பதில் பகுதி, எழுதிய புனைகதைகள் எனப் பல விடயங்களைப்பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவரும் பேராசிரியர்களான கலாநிதி க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் மேல் பெரு மதிப்பு கொண்டிருந்தார். பேராசிரியர் சிவத்தம்பியுடன் உரையாடும் சமயங்களிலெல்லாம் அவரது உரையாடல்கள் தனக்குத் தெளிவினையும், மகிழ்ச்சியையும் தந்ததாகவும், அவை சரியான திக்கைச் சுட்டிக்காட்டியவையாக அமைந்ததாகவும் நினைவு கூர்ந்தார்.
கூடவே ஒருமுறை ஞானம் ஆசிரியர் ஞானசேகரனின் 'குருதிமலை' நாவலுக்கு வானொலியில் விமர்சிக்க ஞானசேகரன் அவர்கள் வேண்டியபோது பத்து நிமிடங்களுக்குள் தான் விமர்சன உரையினைத் தயாரித்து வானொலியில் உரையாற்றியதாகக் குறிப்பிட்டார். அதற்குப் பேராசிரியர் சிவத்தம்பி தனக்கு எடுத்துரைத்த கருத்துகளே காரணமென்றும் நினைவு கூர்ந்தார். அத்துடன் தான் எழுத்துலகில் இறங்கியப்போது பெண் என்ற காரணத்தால் தன் சமூகத்தில் தனக்கேற்பட்ட பல்வகைத் தடைகளைப்பற்றியும் , எவ்விதம் தான் அவற்றையெல்லாம் முறியடித்து தொடர்ந்தும் இலக்கிய உலகில் நீடிக்க முடிந்தது என்பது பற்றியும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
கூடவே வடகிழக்குத் தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக்கு ஆலோசனை கூறும் தனது வீரகேசரி கேள்வி-பதில் பகுதியினைக் குறிப்பிடுகையில் , கிழக்கில் போர்ச்சூழலால் அதிக அளவில் விதவைப்பெண்கள் இருப்பது பற்றியும், குடும்பத்தலைவர்களாகவிருந்து அவர்கள் வழி நடத்துவது பற்றியும், அதன் காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
இலங்கைத் தமிழ் முற்போக்கு எழுத்தாளர் எழுத்தாளர் சங்க வரலாற்றுடன் இவர் தன் கணவர் எழுத்தாளர் சோமகாந்தனும் பின்னிப்பிணைந்ததொன்று. இறுதிவரை இலக்கியமே மூச்சாக வாழ்ந்த ஒருவர் என்று இவரைக் கூறினால் அது மிகையான கூற்றல்ல.
இவரது பிரிவால் வாடும் அனைவர்தம் துயரிலும் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது.
பத்மா சோமகாந்தனின் சிறுகதைத்தொகுப்பு: 'புதிய வார்ப்புகள்' - http://noolaham.net/project/359/35859/35859.pdf