அண்மையில் நண்பர் தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலை வாசித்தேன். மேற்படி நூலின் தலைப்பு அவ்விதமிருப்பதால்தான் இப்பதிவை எழுத வேண்டிய தேவையேற்பட்டது. சில காரணங்களால் தவிர்க்கப்பட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி ஆவணப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்பதால்தானிந்த பதிவு. 'பதிவுகள்' இணைய இதழ் நூலகத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே அது பற்றிய செய்திகளை வெளியிட்டு அதன் முயற்சிகளுக்கு ஆதரவு வெளியிட்டு வருகின்றது. உலகளாவியரீதியில் தன் வாசகர்கள் மத்தியில் அது பற்றிய செய்திகளை எடுத்துச்செல்ல உதவி வருகின்றது. தனிப்பட்டரீதியிலும் எனது நூல்கள்,மின்னூல்கள் ,தனிப்பட்ட சேகரங்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளேன். என் நாவலான 'குடிவரவாளன்' நாவலையும் வழங்கியுள்ளேன். ஆனால் அவை தனிப்பட்ட ஒருவரின் பங்களிப்பு என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதொன்றல்ல. இது போல் எழுத்தாளர்கள் பலர் , தனிப்பட்டவர்கள் பலர் தம்மிடமிருந்த நூல்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளார்கள். ஆனால் 'பதிவுகள்' என்னும் இணைய இதழ் நூலகத்திட்டம் பற்றிய தகவல்களைப்பிரசுரித்து உலகளாவியரீதியில் அது பற்றிய விபரங்களை எடுத்துச் சென்றிருப்பதால் நூலில் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது.
நூலின் தலைப்பு 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்றிருப்பதால் , திண்ணை போன்ற இணைய இதழ்களெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதால் ,'பதிவுகள்' பற்றியும் ஒரு வரியாவது குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது. கோபி வேண்டுமென்றே தவிர்த்திருக்க மாட்டார். சில வேளை ஆரம்பகாலப் பதிவுகளில் வெளியான தகவல்கள் அவருக்கு முக்கியத்துவமில்லாமலிருந்திருக்கலாம் அல்லது ஞாபகத்திலில்லாமலிருந்திருக்கலாம். 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலின் தலைப்புக்கேற்ப 'பதிவுகள்' இணைய இதழும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய தன்னைப்பற்றிய தகவலைத் தான் தான் ஆவணப்படுத்த வேண்டுமென்ற நிலையில் இப்பதிவை முன் வைக்கின்றது. அதற்கொப்ப 2000ஆம் ஆண்டிலிருந்து பதிவுகள் இணைய இதழில் நூலகம் பற்றி வெளியான தகவல்கள் சிலவற்றைக் கீழே தருகின்றோம்.
நூலகம் தளத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. நூலகம் தளம் இல்லாவிடின் பல இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய தகவல்கள் பலவற்றை என்னால் பெறவே முடியாது போயிருக்கும். இதன் வளர்ச்சிக்காக உழைத்த , உழைக்கும் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.
மேற்படி 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூற் தலைப்பில் சிறியதோர் இலக்கணத்தவறுள்ளது. இருந்தாலும் இத்தவறுடனேயே வழக்கில் பலர் பாவிப்பதால் அது என்னைப்பொறுத்தவரையில் முக்கியமான தவறல்ல. ஆனால் நூலகம் பற்றிய நூலொன்றில் இவ்விதமான இலக்கணத்தவறு ஏற்படாமலிருந்திருக்கலாமென்று தோன்றியதால் சுட்டிக்காட்டுவது அவசியமானது. தலைப்பில் நமது என்று பன்மை வருவதால் நூலின் தலைப்பு " 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்" என்று வந்திருக்க வேண்டும்.
* தில்லைநாதன் கோபிநாத் - 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' : http://noolaham.net/project/750/75000/75000.pdf
பதிவுகள் இணைய இதழ் கடந்த இருபது வருடங்களாக வெளிவருகின்றது. முகவரி: https://www.geotamil.com | https://www.pathivukal.com பதிவுகள் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக்கொடுத்துள்ளது. பதிவுகளில் எழுதியவர்கள் பலர் தம் படைப்புகளை நூலாக்கும்போது பதிவுகளைக் குறிப்பிட்டு நன்றி பகர்ந்திருப்பார்கள். சிலர் மறந்து விட்டிருப்பார்கள். ஆனால் இவற்றை எதிர்பார்த்துப் பதிவுகள் இயங்குவதில்லை. ஆனால் ஆவணப்படுத்தப்பட வேண்டிய தகவல்களை ஆவணப்படுத்தபட வேண்டுமென்பது அவசியமென்பதால் இப்பதிவினையிடுகின்றேன்.
இன்னுமொரு விடயம். என்னுடைய 'குடிவரவாளன்' நாவலை நூலகம் தளத்துக்குச் சில வருடங்களின் முன்னர் நண்பர் அருண்மொழிவர்மன் மூலம் கொடுத்திருந்தேன். அது இதுவரையில் அங்கு பதிவேற்றப்படவில்லை. நூல் தொலைந்திருந்தால் அறியத்தாருங்கள். இன்னுமொரு பிரதியைத் தருகின்றேன்.
நூலகம் பற்றிப் பதிவுகள் இணைய இதழில் வெளியான தகவல்கள் சில கீழே:
பதிவுகள்.காம் மே 2006 இதழ் 77
நூலகக் குழுவிலோர் கருத்துப் பரிமாறலும், விளக்கமும்!
அண்மையில் பதிவுகளில் நூலகம்.நெற் பற்றி எழுதப் போக அது அங்கு பலத்த வாதப் பிரதிவாதங்களைத் தோற்றி விட்டது. ஆனால் அவை காழ்ப்புணர்ச்சி கொண்டவையல்ல. ஆரோக்கியமானவை. மேலும் அவ்வாதங்கள், கருத்துப் பரிமாறல்கள், விவாதங்களினூடு நூலகம்.நெற், நூலகத் திட்டம் மற்றும் விக்கிபீடியா பற்றியெல்லாம, அவற்றிற்குப் பின்னாலிருந்து தம் பயன்கருதாக் கடும் உழைப்பினை வழங்கும் அனவைரையும் அறிந்து கொள்ள முடிந்தது. அதனைப் பதிவுகள் வாசகர்களும் அறிந்து கொள்வதும் பயன்மிக்கதே என்ற எண்ணத்தின் விளைவாக நூலகக் குழுவில் பகிர்ந்து கொள்ளப்பட்ட மடல்களிலிருந்து பயனுள்ள சில பகுதிகளை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். இத்திட்டங்களில் கலந்து கொண்டு பங்களிக்க விரும்பினால் கோபி, நக்கீரன், ஈழநாதன், மயூரன் போன்றோருடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களது மின்னஞ்சல் முகவரிகள் பின்வருமாறு: கோபி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ; ஈழநாதன்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.; மயூரன்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. நக்கீரன்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். . மேலும் நூலகம் குழு பற்றிய மேலதிக விளக்கங்களை http://groups.google.com/group/noolaham என்னும் முகவரியிலுள்ள வலைத்தளத்தில் வாசித்துக் கொள்ளலாம். மேலும் கீழே அக்குழுவில் அண்மையில் பதிவுகள், திண்ணையில் நூலகத் திட்டம் பற்றித் தெரிவிக்கப்பட்ட கருத்துகளையொட்டித் தெரிவிக்கப்பட்ட கருத்துகளையே கீழே தந்துள்ளோம்.
கோபியின் மடல்களிலிருந்து சில பகுதிகள்:
கடிதம் 1; சனி ஏப்ரல் 22, 2006 காலை 5.29
'அன்புடன் அனைவருக்கும், ஐயரும் ஈழநாதனும் நூலகத்துக்கு நூல்களைச் சேர்ப்பதில் தொடர்ந்தும் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார்கள். ஐயரின் முயற்சியால் விடியலிடம் பெறப்பட்ட இரு நூல்கள் விரைவில் இணைக்கப்படவுள்ளன. விடியல் பதிப்பகத்தினர் மேலும் சில நூல்களை தரச் சம்மதித்துள்ளனர். அவர்களுக்கு நூலகம் சார்பில் நன்றிகள். மேலும் காலச்சுவடு பதிப்பகத்தினரும் தாம் வெளியிட்ட ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களைத் தரச் சம்மதித்துள்ளனர்.
சுவிஸ் ரவி மிகுந்த ஆர்வத்துடன் நூலகம் திட்டத்தில் பங்கெடுக்கிறார். அவர் எமது மடலாடற் குழுவில் இணைக்கப்பட்டுள்ளாரா என்று தெரியவில்லை. இப்பொழுது சரவணனும் தன்னாலான பங்களிப்பைத் தர முன்வந்துள்ளார். யாழ். பல்கலைக்கழக நூலகத்தில் பணியாற்றும் அருளானந்தம் சிறீக்காந்தலட்சுமி மின்னூலாக்கத்தில் பங்குபற்றத் தொடங்கியிருப்பது நூலகத்திற்கு மேலும் வலுவூட்டுவதாக அமைகிறது.
பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் திரு. பூ. சிறீதரசிங் நூலகம் திட்டம் வலையேற்றப்பட முன்பிருந்தே ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். அவரது பங்களிப்பால் மூன்று நூல்கள் நூலகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
ஈக்குவலிற்றி அச்சகத்தினரும் நூலகத்துக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். நூலகம் திட்டத்திற்காகவென்றே இதுவரை ஏழு நூல்களை அவர்கள் தட்டெழுதித் தந்துள்ளார்கள். மேலும் அவர்களால் அச்சடிக்கப்பட்ட நான்கு புத்தகங்களின் மின்வடிவங்களையும் தந்துள்ளார்கள். பெருமளவு நூல்களை அவர்கள் வெளியிட்டுள்ள போதிலும் கணனிகள் அண்மையில் செயலிழந்தமையால் அந்நூல்களின் மின்பிரதிகள் எதுவும் அவர்களிடம் இல்லை. ஆயினும் இறுவட்டுக்களிலிருந்து மேலும் சில நூல்களைத் தேடி எடுக்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஈக்குவலிற்றி அச்சகத்தின் உரிமையாளர் திரு. வெ. ஜசிகரன் மற்றும் முகாமையாளர் திரு. ரஞ்சகுமார் ஆகியோருக்கு நூலகம் திட்டத்தின் சார்பில் நன்றிகள்.
நூலகம் திட்டம் இன்றைய நிலைக்கு வர கால்கோள் இட்டவர்கள் தேசிய கலை இலக்கியப் பேரவையினர். ஆக ஐந்து நூல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில் ஒரு பெரும் கனவுடனும் திட்டத்துடனும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தேவராஜாவை நானும் மயூரனும் சந்தித்த போது சுமார் ஒன்பது நூல்களின் மின்வடிவங்களைத் தந்தார். அந்த ஆதரவே எம் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லத் துணை நின்றன.
மேலும் சி. சிவசேகரம் அவர்கள் தனது நூல்களை இணைக்க எமக்கு அனுமதியளித்த முதல் எழுத்தாளர். அதுவே அவரது நூல்கள் பலவற்றை நூலகத்தில் இணைப்பதில் நான் காட்டும் ஆர்வத்திற்குக் காரணம்.
ஈழத்து இலக்கியம் தொடர்பான தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பெருமளவு சேர்க்கப்பட்டுள்ளன. இது மயூரன் செய்த அறிமுகத்தாலேயே சாத்தியமாகியது. மயூரன், கோபி, ஈழநாதன், கனக சிறீதரன், கிரிதரன் ஆகியோர் நூலகம் திட்டத்தினூடாகவே விக்கிப்பீடியாவில் இணைந்ததாகத் தெரிகிறது. நூல்களைத் தட்டெழுதுவது மற்றும் ஒப்புநோக்குவது திட்டத்தின் எல்லா உறுப்பினருக்கும் சாத்தியமற்றதெனினும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது எல்லோருக்கும் சாத்தியமானதே என்பதை சுட்டிக்காட்டிய மயூரனுக்கு எனது பாராட்டுக்கள்.
பிரதீபா தில்லைநாதன், மதி கந்தசாமி ஆகியோரும் நூலகம் வலையேற்றப்பட முன்பிருந்து குறிப்பிடத்தக்க பங்கெடுத்து வருகின்றனர். மேலும் கலைவாணி, சாத்விகா, வி.என் .எஸ். உதயசந்திரன் உட்படப் பலர் தொடர்ந்தும் பங்காற்றி வருகின்றனர். அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
நூலகம் தனிநபர்கள் எவருக்கும் சொந்தமானதல்ல. ஆகையால் நூலகம் உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. ஆகையால் நூலகத்திற்குப் பங்களிக்க எவரும் தயங்க வேண்டியதில்லை.
"நூலகம் திட்டத்துக்குப் பங்களிப்புச் செய்ய விரும்புவோர் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள், ஈழத்திலிருந்து வெளிவந்த நூல்கள், ஈழம் தொடர்பான நூல்கள் என்னும் வகைகளுள் அடங்கும் எந்த ஒரு நூலையும் மின்னூலாக்கலாம் ஆனால் சமகால எழுத்தாளரின் நூல்களாயின் குறித்த எழுத்தாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது முக்கியமானது ." என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட வகைகளில் அடங்கும் நூல்களை எந்த ஆர்வலர் மின்னூலாக்கி அனுப்பினாலும் அது நூலகத்தில் வெளியிடப்படும்.
நூலகம் திட்டத்தில் பங்கெடுக்கும் அனைவருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்கள் அனைவரதும் தொடர்ந்த பங்களிப்பே நூலகம் திட்டத்தின் வெற்றிக்குத் துணை நிற்கும். தோழமையுடன் - கோபி'
கடிதம் 2; சனி ஏப்ரல் 22, 2006 காலை 5.31
அன்புடன் அனைவருக்கும், நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்ற மடலின் பின் குறிப்பு இது. தி. கோபிநாத் என்கிற நான் ஒரு தமிழனாகப் பிறந்தேன் என்கிற காரணத்தைத் தவிர வேறெதுவும் என் தமிழார்வத்திற்குக் காரணமல்ல. நான் வளர்ந்த சூழலில் நிறையப் புத்தகங்களும் வாசகர்களும் இருந்தமையே எனது வாசிக்கும் ஆர்வத்திற்குக் காரணம். நான் கையில் கிடைத்த எல்லாவற்றையும் வாசித்தேன். எனக்குப் போதிய ராஜேஷ்குமார் பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோரது நூல்கள் கிடைக்காமையே நான் இலக்கிய நூல்களையும் வாசிக்கக் காரணம்.
நான் எக்காலத்திலும் ஒரு இலக்கியவாதியாகவோ எழுத்தாளனாகவோ தமிழ்க் காவலனாகவோ (?) இருந்ததில்லை; இருக்க வாய்ப்புமில்லை. நான் ஒரு நல்ல வாசகன் கூட இல்லை. நூற் தெரிவில் எனது போதாமைகளைப் பற்றி நான் அறிவேன். நான் வாசித்த தரமான நூல்கள் மிகக் குறைவே.
ஆயினும் புத்தகங்களெனது அடிப்படைத் தேவைகளிலொன்றாக உணர்கிறேன். 2001 இல் நான் கொழும்பு வந்தபின் என்னிடம் புத்தகங்கள் எதுவுமில்லை. வாங்குவதும் சாத்தியமாகவில்லை; வைத்திருக்க இடமுமில்லை. அப்போது மதுரைத்திட்டத்தின் அறிமுகம் மயூரன் மூலமாகக் கிடைத்தது. குட்டன்பேர்க் திட்டத்தையும் கண்டடைந்தேன். தொடர்ச்சியான இணைய இணைப்பு இல்லாததால் மதுரைத்திட்டத்தின் அனைத்து நூல்களையும் குட்டன்பேர்க் திட்டத்திலிருது 1600 நூல்களையும் பதிவிறக்கினேன். அவற்றை ஒழுங்குபடுத்தி இணைப்புக்கள் கொடுத்து வைத்திருக்கிறேன்.
மதுரைத்திட்டத்தின் தளத்தில் இருந்த போதாமைகள் பற்றி அவர்களுக்குச் சில மடல்களை எழுதினேன். திருப்தியில்லை. Mackintosh இற்கு யுனிக்கோட் வரும்வரை மதுரைத்திட்டமும் யுனிக்கோட்டுக்குக் காத்திருக்க வேண்டியிருப்பதை உணர்ந்தபோது சலிப்படைந்தேன். (மதுரைத்திட்டம் இன்னமும் முழுமையாக யுனிக்கோட்டுக்கு மாறவில்லை.) அப்போது ஈழத்து நூல்களுக்கான தனியான திட்டம் ஒன்றைத் தொடங்குவது பற்றி எண்ணினேன். அது தொடர்பில் மயூரனுடன் ஆலோசித்தபோது உருவானதே 'ஈழநூல்' திட்டம். அதன் பின்னரான நூலக வரலாறு உங்களுக்குத் தெரிந்ததே.
[இங்கு நூலகத்தில் என் பங்கு தொடர்பாகவே குறிப்பிட்டுள்ளேன். இதனை நூலகம் கோபியால் தொடங்கப்பட்டது என்றவாறு விளங்கிக் கொள்ளத் தேவையில்லை. 2001 / 2002 அளவிலேயே ஏறத்தாழ 40 நூல்களை தட்டெழுதிய ஐயர், ஆரம்பத்திலிருந்தே நூலகம் திட்டத்தை வரையறுக்க உழைத்துவரும் மயூரன், நூலகத்துக்கான இணையத்தளத்தினை உருவாக்கி பரவலான தொடர்புகளை ஏற்படுத்தித் தந்த ஈழநாதன் ஆகியோரின் பங்களிப்பு இல்லையேல் எதுவுமே சாத்தியமாகியிராது. இது ஊர் கூடி இழுக்கும் தேர்]
நூலகம் கடந்த தைப்பொங்கலன்று பகிரங்கமான அறிவிக்கப்பட்ட பிறகு அது தொடர்பாக வெளிவந்த அறிமுகங்கள்/ குறிப்புக்கள் என்ற வகையில் என் பார்வைக்குக் கிடைத்தவை நான்கு. முதலிரண்டு மயூரன், மதி எழுதியது. மற்றையது வீரகேசரிக் குறிப்பு. கடைசியாகக் கிடைத்தது கிரிதரனுடையது.
கிரிதரனது குறிப்பை வாசித்த போது நான் மிகுந்த பதற்றமடைந்தேன். என் பதிலில் இருந்த நான் பொதுவாக வெளிப்படுத்துவதற்கு மாறான சொற்களும் அம்மடலை நான் பதிவிலிட்ட இடங்களும் அதனை வெளிக்காட்டின. அது கிரிதரனுக்கு மனவேதனை அளித்திருந்தால் அதற்காக என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயினும் இப்போதுள்ள நூலகத்தில் பத்மநாப ஐயரதும் என்னுடையதும் நூற்தெரிவுகள் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்துவதாக எனக்குப் படுகிறது. நூலகத்தை ஈழத்தின் இணைய நூலகம் என்று கருதப்படத்தக்கதாக அமைப்பதற்குப் பரவலான கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் பங்களிப்பு தேவை என உணர்கிறேன். (நூலகம் தொடர்பில் எதுவித பாராட்டுக்களையும் நான் எதிர்பார்க்கவில்லை. நூலகத்தில் எனது பங்களிப்பு நானும் ஏதாவது இணையத் தமிழுக்குப் பங்களிக்க வேண்டுமென்ற என் சுயநலம் சார்ந்தது.)
நூலகம் திட்டம் மூலம் மின்னூலாக்கப்படும் நூல்களைப் பயன்படுத்தும் உரிமை எனக்கு எவ்வளவு உள்ளதோ அந்த அளவு உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நூலகம் திட்டம் எவராலும் எக்காலத்திலும் தனிப்பட்ட நலன்களுக்காகவோ அல்லது எதுவித வணிக நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தப்பட முடியாதவாறே அமைக்கப்படுகிறது. நூலகம் திட்டம் உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. ஆக உங்கள் ஒவ்வொருவருக்காகவும் கடந்த ஓராண்டில் எனது வாசிப்பு நேரத்தை முழுமையாக இழந்து நூலகம் திட்டத்துக்கு உழைத்துள்ளேன். அந்த உரிமையுடன் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது யாதெனில் நூலகம் தொடர்பில் அதனை தொடர்ந்து வளர்த்தெடுத்துச் செல்வதில் உங்களது ஆலோசனைகளை நீங்கள் ஒவ்வொருவரும் விரிவாகக் கூறுங்கள். உங்களில் ஒரு 20 பேர் ஆளுக்கு இரண்டு மணிநேரத்தை ஒதுக்கி எனது இந்த மடலுக்குப் பதிலெழுதினால் அதுவே நூலகத்தை இன்னுமொரு பாய்ச்சலுக்கு தயார்ப்படுத்தப் போதியதாக இருக்கும் என நினைக்கிறேன்.
இப்போதுள்ள நூலகத்தின் குறை நிறைகள், செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் மின்னூலாக்கப்பட வேண்டிய நூல்கள் மற்றும் நூலகம் தொடர்பில் உங்களுக்குத் தோன்றுவதை எல்லாம் எழுதுங்கள். (சிறு வட்டங்களுள் வளைய வந்து திருப்திப்படாது முழு ஈழத்தமிழுலகின் பிரதிபலிப்பாக நூலகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய கிரிதரனுக்கு என் நன்றிகள்.)
கோபியின் கடிதம் 3: சனி, ஏப்ரல் 22, 2006 காலை 8.17
வணக்கம் கிரிதரன், நீங்கள் நூலகத்திற்கும் விக்கிப்பீடியாவிற்கும் பங்களிக்க முன்வந்திருப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி. ஈழநாதன் குறிப்பிட்டது போல விக்கிப்பீடியா தொடர்பான உங்களது சந்தேகங்களை விக்கிப்பக்கங்களிலேயே தெரிந்து கொள்ளலாம். மயூரன் குறிப்பிட்டது போல நூலகமும் விக்கிப்பீடியா போன்றதொன்று தான். ஆனால் இங்கு ஈழத்து நூல்களும் சஞ்சிகைகளுமே வெளியிடப்படுகின்றன. ஆதலால் இங்கே மாற்றங்கள் செய்வதற்கான அனுமதிகள் இல்லை. நாம் வெளியிடும் வகைகளுள் அடங்கும் பதிப்புரிமைச் சிக்கல்கள் இல்லாத நூல்கள் சஞ்சிகைகளை எவரும் இத்திட்டத்தில் சேர்க்கலாம். குழுவில் இணைந்து குழுவுக்கு குறித்த மின்பதிப்புக்களை அனுப்பும் போது குறித்த மின்பதிப்பு உரிய காலத்தில் பதிவேற்றப்படுவதை உறுதி செய்து கொள்ளலாம்.
அடுத்து பத்மநாப ஐயர் பற்றிய ஒரு சிறு குறிப்பு. பத்பநாப ஐயர் என்பவர் ஒரு நிறுவனம் அல்லர். சில நண்பர்களின் உதவி கொண்டு ஈழத்து இலக்கியத்துக்கு தன்னாலான பங்காற்றிவரும் ஒருவர். அவரால் இயன்ற அளவில் தான் அவரது பணிகள் அமையும். மேலும் அவரது நண்பர்கள், இணைந்து செயற்படுவோர் தொடர்பான பதிப்பு முயற்சிகளிலேயே அவர் அதிகம் செயற்பட்டிருப்பார் என்பதில் என்ன தவறிருக்கிறது? நாங்கள் நூலகப் பக்கங்களில் முறைப்படி அறிவிக்காவிட்டாலும் நூலகம் திட்டத்துக்கான ஆலோசகராக அவரே செயற்படுகிறார். நூலகம் பக்கங்களில் விரைவில் நூலகத்துக்குப் பங்களிப்போர் தொடர்பான பக்கங்கள் சேர்க்கப்படும். குறித்த பக்கங்களை சேர்ப்பதில் நான்தான் தயக்கம் காட்டி வருகிறேன். நூலகம் திட்டம் குறித்த குழுவினருடையது என்பதான கருத்து ஏறபடாமலிருக்க வேண்டும் என விரும்புகின்றோம். அவ்வாறு ஏற்பட்டால் நூலகத்துக்கான பரவலான பங்களிப்புக் கிடைக்காமற் போய்விடுமோ என்பதே தயக்கம். மதுரைத்திட்டத்தில் ஈழத்து நூல்கள் தொடர்ந்தும் சேர்க்கப்படாமல் தனியானதொரு திட்டமாக நேரிட்டது போல் எமக்கும் நேரிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
நடைமுறையில் நூலகம் திட்டமும் noolaham.netஉம் ஒன்று தான் என்றாலும் கொள்கையளவில் அவை ஒன்றல்ல. கொள்கையளவில் நூலகம் திட்டம் என்பது ஈழத்தமிழர்களுடையது. நூலக்ம் திட்டம் மூலம் வெளியிடப்படும் மின்னூல்கள் எந்தத் தனிநபருக்கும் உரியனவல்ல. ஆனாலும் எவரால் குறித்த மின்னூல் ஆக்கப்பட்டது, எத்திட்டம் மூலம் வெளியிடப்பட்டது போன்ற தகவல்கள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். அத்துடன் எந்த வணிக நோக்கங்களுக்காகவும் எமது மின்னூல்கள் பயன்படுத்தப்படக்கூடாது.
இத்தகைய ஒழுங்குமுறையில் இணைந்து பணியாற்ற எவருக்கும் தயக்கம் இருக்க வாய்பில்லைத்தானே? மேலும் சந்தேகங்கள் இருப்பின் எமது மடலாடற் குழுவுக்கு எழுதுங்கள். உங்களது பங்களிப்பை ஆவலோடு வரவேற்கிறோம். மு.கு. நீங்கள் ஏதாவது நூலை தட்டெழுத ஆரம்பிக்க முன் அதுபற்றி நூலகம் குழுவுக்கு அறியத்தாருங்கள். தோழமையுடன், கோபி.
ஈழநாதனின் மடல்; வெள்ளி ஏபரல் 21, 2006 மாலை 7.34
வணக்கம் நண்பர்களே நூலகத்திற்கு நல்வரவு கிரிதரன். தொடரும் முன் கிரிதரன்,மயூரன் மற்றும் நண்பர்களுக்கு சிறு விளக்கம்.நூலகம் மற்றும் விக்கிபீடியா இரண்டும் தனித்தனியான தன்னார்வச் செயற்பாடுகள் நூலகத்திற்கும் தனியான விக்கி அமைப்பதாக முன்னர் தீர்மானித்திருந்தோம் உரையாடல்களின் பின்னர் தனியான விக்கி ஒன்றினை அமைப்பது தேவையற்றது என்பதும் பிரதான விக்கி தளத்திற்கு நூலகம் உறுப்பினர்கள் பங்களிப்பதென்பதும் முடிவாகிற்று.
இருந்தும் நூலகம் திட்டத்தின் நோக்கம் செயற்பாடுகள் பற்றிய பக்கங்களை வளர்த்தெடுக்க வேண்டி விக்கியில் சில பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன அவை மட்டுமே நூலகம் விக்கியின் செயற்பாடு.காலப்போக்கில் பக்கங்கள் முழுமை பெற்றதும் அவை நூலகத்தின் உதவிப் பக்கங்களாக மாற்றப்படும். விக்கிபீடியாவில் ஈழத்து இலக்கியம் பற்றிய பக்கத்திற்கு நூலகம் உறுப்பினர்கள் பங்களிப்பு செய்தாலும் அவை நூலகம் திட்டத்தின் செயற்பாடுகள் இல்லை ஆகவே விக்கிபீடியா பற்றிய விவாதங்கள் நூலகத்தையும் நூலகம் பற்றிய விவாதங்கள் விக்கிபீடியாவையும் பாதிக்காத வகையில் செயற்படவேண்டியது அவசியம்.
கிரிதரன் நூலகத்திற்கான பங்களிப்பு இந்த மடலாடற் குழு மூலம் மட்டுமே நடைபெறுகின்றது நூலகம் விக்கி உதவிப் பக்கம் மட்டுமே. கட்டுரைகளை அங்கே இணைக்க முடியாது. எவ்வித ஆக்கங்களையுமிம் மடலாடற் குழுவில் பகிர்ந்துகொண்டால் அவற்றை நூலகத்தில் கால ஒழுங்கில் சேர்த்துக் கொள்வோம்
அதேவேளை விக்கியிலும் மயூரன்,கோபி,நக்கீரன் முதலியோர் நூலகம் திட்ட உறுப்பினர்கள் பங்களித்து வருகிறார்கள். தற்போது நானும் பங்களிக்க ஆரம்பித்துள்ளேன். ஈழத்து இலக்கியம் பற்றிய கட்டுரைகள் விக்கியில் வளர்த்தெடுக்கப்பட்டு காலப்போக்கில் எமது ஆவணக்காப்பகத்தில் இணைக்கப்படும். உங்களுக்கு நக்கீரன்,மயூரன் முதலிய நண்பர்கள் விக்கிபீடியாவில் உதவுவார்கள் என நம்புகிறேன்.நூலகம் பற்றிய சந்தேகங்களை இங்கே தெரிவிக்கலாம். அன்புடன் ஈழநாதன்'
மே 2006 இதழ் 77 -
https://www.geotamil.com/pat…/noolagam_forum_discussion.html
பதிவுகள்.காம் 15 January 2020
நூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..
நூலகம் நிறுவனம் இப்பொங்கல் திருநாளன்று பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்து பதினாறாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கின்றது. மனம் நிறைந்த வாழ்த்துகள். தற்காலச்சூழலில், இலங்கைத்தமிழர்கள் அழிவுகள் பலவற்றைச் சந்தித்து மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ள சூழலில் நூலகம் நிறுவனம் ஆற்றிவரும் சேவை மகத்தானது. நூலகம் நிறுவனம் பற்றிய சுருக்கமான ஆணால் தெளிவான அறிமுகத்தை நூலக நிறுவன இணையத்தளத்திலுள்ள அதன் அறிமுகக் குறிப்பிலிருந்து அறிந்துகொள்ளலாம். அவ்வறிமுகக் குறிப்பில் அது தன்னைப் பற்றிப்பின்வருமாறு கூறுகின்றது:
"நூலக நிறுவனமானது இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்து இலவசமாகத் திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் முக்கிய பணியை செயற்படும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்."
ஆரம்பத்தில் நூலக நிறுவனமானது எண்ணிம நூலகச் செயற்பாட்டையே பிரதானமாகக் கொண்டிருந்தாலும் , இன்று அதன் சேவைகள் சேகர அபிவிருத்தி , பள்ளிக்கூடம்), உசாத்துணை வளங்கள் , எண்ணிம ஆவணகம், சுவடி ஆவணகம் , பல்லூடக ஆவணகம், நூலக நிறுவன நிகழ்ச்சிகள் & ஆய்வு அடிப்படையிலான செயற்பாடுகள் என்று பரந்த அளவில் விரிவடைந்துள்ளது அதன் பிரமிக்கத்தக்க வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகின்றது.
நூலகம் நிறுவனத்தின் பிரதான பகுதியான எண்ணிம நூலகம் நான் அடிக்கடி பாவிக்கும் நூலகம். ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் , வாசகர்கள் எனப்பல்வகைப்பட்ட்ட மானுடர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும் எகையில் வளர்ந்துள்ளது. பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த அரிய பல நூல்கள் சஞ்சிகைகள, பத்திரிகைகள், பிரசுரங்கள், நினைவு மலர்கள், சிறப்பு மலர்கள் எனப் பல்வகை நூல்களையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளார்கள். தனிப்பட்டரீதியில் நான் நூலக நிறுவன இணையத்தளத்தின் எண்ணிம நூலகத்திலிருந்து மிகுந்த பயனை அடைந்திருக்கின்றேன். பல அரிய நூல்களை, சஞ்சிகைகளை & பத்திரிகைகளை அங்கு வாசித்திருக்கின்றேன், இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகள் பலரின் ஆக்கங்கள் பலவற்றை இந்நூலகம் வாயிலாகப் பெற்றுப்பயனடைந்திருக்கின்றேன். கட்டுரைகளில் சான்றாதாரங்களாகப் பாவித்துள்ளேன்.
நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தின் முக்கியமான பயன்களாக நான் கருதுவது:
1. ஆவணச்சேகரிப்பு
2. இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றினை வெளிப்படுத்தும் சான்றுகளின் சேகரிப்பு.
3. இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களின் சேகரிப்பு.
4. போர்ச்சூழலில் தொலைந்த படைப்புகளை எழுத்தாளர்களுக்கு மீண்டும் வழங்குதற்கு, அவர்கள் அவற்றை நூல்களாக்கும் பொருட்டு அவர்கள்தம் படைப்புகளின் சேகரிப்பு.
5. ஆய்வு மாணவர்களுக்குரிய உசாத்துணை விபரங்களின் சேகரிப்பு.
6. இலங்கைத்தமிழர்களின் சமூக, பொருளியல் மற்றும் அரசியல் மாற்றங்கள் பற்றிய தகவல்களின் சேகரிப்பு
இவ்விதமாக ஆக்கபூர்வமாகச் தன்னார்வத்தொண்டு நிறுவனமாகச் சேவையாற்றிவரும் நூலக நிறுவனம் பதினாறாவதாண்டில் காலடி வைத்துள்ளது. தன் வரலாற்றுப்பங்களிப்பை இந்நிறுவனம் சிறப்பாகவும், பெருமைப்படத்தக்க வகையில் செய்து வருகின்றது.. மேன்மேலும் நூலகம் நிறுவனம் பெரு வளர்ச்சி கண்டிடட்டும், உலகத்தமிழர்கள் அனைவரும் இதன் மூலம் பயன் அடைந்திடட்டும். மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
பதிவுகள்.காம் 24 November 2012
ஈழநாதனின் வலைப்பதிவுகளும், கணித்தமிழ் இலக்கியச் செயற்பாடுகளும்!
அண்மையில் மறைந்த ஈழநாதனின் வாழ்நாள் குறுகியது. இளம் வயதில் அவரது இழப்பு அவரது குடும்பத்தவருக்கு பேரிழப்பு. அவரது கலை, இலக்கிய உலக நண்பர்களுக்கும் பேரிழப்பே. 'நூலகம்' தளம் இன்று முக்கியமானதோர் ஈழத்துத் தமிழ நூல்களின் ஆவணச் சுரங்கமாக விளங்குகின்றது. இத்தளத்தின் தோற்றத்திற்கும், ஆரம்பகால வளர்ச்சிக்கும் ஈழநாதன் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. நூலக நிறுவனத்தின் மாதாந்த செய்திக் கடிதத்தின் அண்மைய பதிப்பு ஈழநாதன் நினைவிதழாக வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழநாதனின் பங்களிப்பு இன்னுமொரு வகையிலும் நினைவு கூரத்தக்கது. பல்வேறு படைப்பாளிகளின் இணையத்தளங்கள், வலைப்பதிவுகளில் வெளியாகும் படைப்புகளை வாசிப்பதோடு மட்டுமல்லாது அவற்றுக்குக்கான பின்னூட்டங்களில் தன் கருத்துகளையும் பதிவு செய்திருக்கின்றார். கூகுள் தேடுபொறியில் அவரது பெயரையிட்டுத் தேடினால் அவ்விதமான சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர அவர் வலைப்பதிவுகள் சிலவற்றையும் நடாத்தி வந்தார். அவற்றைப்பற்றி பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஈழநாதனின் வலைப்பதிவுகள்!
1. ஈழநாதம் அல்லது ஈழநாதம் குடில்: ஈழநாதம் என்பது அவரது பிரதானமான வலைப்பதிவு. அதன் இணையத்தள முகவரி: http://eelanatham.blogspot.ca/ தற்பொழுதும் இந்த வலைப்பதிவு இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றது. இந்த வலைப்பதிவின் குறிக்கோள் அறிக்கையாக 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு,நூல் விமர்சனங்கள்,அறிமுகங்கள், காலத்தால் அழியாத படைப்புகள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது வலைப்பதிவின் நோக்கம் பற்றிய குறிப்பொன்றினையும் மேற்படி வலைப்பதிவினில் காண முடிகின்றது. அக்குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது: - முழுமையாக வாசிக்க: https://www.geotamil.com/index.php…
பதிவுகள்.காம் 02 October 2012
நூலக அறக்கட்டளை: ஈழநாதன் காலமானார் – துயர் பகிர்கிறோம்
[நூலகத் திட்டத்தின் முக்கிய பங்களிப்பாளர்களிலொருவரான புவனேந்திரன் ஈழநாதனின் மறைவுச் செய்தி கேட்டுத் துயருற்றோம். அவருடன் நேரடித் தொடர்பில்லாவிட்டாலும் , ஆரம்ப காலகட்டத்தில் மின்னஞ்சல் மூலம் தொடர்புகள் கொண்டிருந்தோம். இவரது இழப்பு நூலகத் திட்டத்தைப் பொறுத்தவரையில் பேரிழப்பே. அவரது அகால மறைவால் துயருறும் நூலக அறக்கட்டளைக் குழுவினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் 'பதிவுகள்' தனது ஆழ்ந்த அநுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவு பற்றிய நூலக அறக்கட்டளையினர் வெளியிட்ட செய்தியினையும் பதிவுகள் தனது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்]
- அக்டோபர் 2, 2012 - நூலகத் திட்டத்தின் தொடக்க உறுப்பினர்களுள் ஒருவரும் நூலக நிறுவனத்தின் முக்கிய பங்களிப்பாளருமான புவனேந்திரன் ஈழநாதன் அவர்கள் 30.09.2012 அன்று அகால மரணமடைந்ததை முன்னிட்டு நூலக நிறுவனம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. நூலகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் பங்கு கொண்டு தனது உழைப்பைச் செலுத்தியவர் ஈழநாதன் அவர்கள். மிகச் சிறிய அளவிலிருந்த நூலகத் திட்டத்துக்கு வளங்களைத் திரட்டியும் பெருமளவு பங்களிப்பாளர்களை இணைத்தும் அதன் செயற்பாடுகளைச் சாத்தியமாக்கியவர் ஈழநாதன். அவரது பங்களிப்பு கிடைக்காது போயிருந்தால் நூலகத் திட்டமானது கொள்கையளவிலேயே நின்று போயிருக்கக் கூடும்.
நூலகத்திற்கான முதலாவது வழங்கி, முதல் நிதிப் பங்களிப்பு போன்றவற்றை வழங்கியதுடன் நூலகத்தினை ஈழத்தமிழர்கள் வாழுமிடங்களுக்குக் கொண்டு சென்று சேர்த்தமையும் நூலகத்திற்கு உலகெங்குமிருந்து புலம்பெயர் தமிழர்களுடைய பங்களிப்பைக் கொண்டு வந்து சேர்த்தமையும் ஈழநாதனது முக்கிய பங்களிப்புக்களாகும். இன்றும் கூட ஈழநாதன் வாங்கியளித்த வழங்கியிலேயே நூலகம் இயங்குகிறது. நூலகம் தொடர்பான திட்டமிடல், உரையாடல்களிலும் முக்கிய பங்களித்த ஈழநாதன் நூலகத் திட்டம் 2008 இல் நூலக நிறுவனமாக இயங்கத் தொடங்கியபோது முதலாவது அறங்காவலர் சபையிலும் இடம்பெற்றுப் பங்களித்தார்.
ஈழத்தமிழர்களுடைய வாழ்வியல் முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் ஈழத்தமிழ் ஆளுமைகள் வரலாற்றில் அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டும் என்பதிலும் மிகப்பெரும் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தார். பல்வேறு ஆவணவியலாளர்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களுக்குச் சகல விதங்களிலும் உதவி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, சிங்கப்பூரில் நூலகத்திற்கான அலகொன்றைத் தொடங்கி ஈழத்தமிழர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுடன் தொடர்புடைய ஆவணங்களை பெற்று ஒழுங்குபடுத்துவதோடு ஆவணப்படுத்தித் திறந்த அணுக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருந்தார்; அதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.
இவ்வேளையில் அவர் அகால மரணமடைந்திருப்பது நூலகத்திற்கும் ஆவணப்படுத்தல், நூலகவியல் சார்ந்த செயற்பாட்டாளர்களுக்கும் பேரிழப்பாகும். நூலகம் அவருக்கான அஞ்சலியைத் தெரிவிக்கும் நேரத்தில் அவருடைய விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளது.
http://www.noolahamfoundation.org/blog/?p=472