வரலாற்றுச் சுவடுகள்: 'வெள்ளி'யில் வெளியான இரசிகமணி கனக செந்திநாதனின் 'பசுமை நினைவுகள்'
இலங்கையில் ஒரு பத்திரிகை தனது மாணவர் பகுதிக்கு எழுதிய இளம் எழுத்தாளர்களுக்கு விழாவெடுத்துப் பரிசுகள் கொடுத்துக் கெளரவித்துள்ளது. அந்தப்பத்திரிகை ஈழகேசரி. ஈழகேசரி அதிபர் நா.பொன்னையாவை இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
இவ்விழா பற்றிய அரியதோர் ஆவணச்சிறப்பு மிக்க கட்டுரையொன்றினை இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள் வரதர் வெளியிட்ட 'வெள்ளி' சஞ்சிகையில் (செப்டம்பர் 1 , 1972) தான் எழுதிய 'பசுமை நினைவுகள்' தொடரில் 'இளமைக் கும்மாளம்' என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். எழுதியுள்ளார். அக்கட்டுரையின் பக்கங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
அவ்விழா 20.5.1939 அன்று வண்னை வைத்தீஸ்வராக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. விழாவின் பிரதான அம்சங்கள் வருமாறு:
1. சுவாமி விபுலானந்தர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை, மகாலிங்கசிவம் ஆகியோர் உரையாற்றினர். மாணவர்கள் அனைவரும் பதினாறு வயதுக்குட்பட்டவர்கள். இளைஞர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதலாவது பரிசு தங்கபதக்கம். இரண்டாவது பரிசு வெள்ளிப்பதக்கம். மாணவ எழுத்தாளர்கள் இருவருக்கும் இரு பரிசுகள். சங்கீதக் கச்சேரி. திறமையான பாடசாலைக்கு வெள்ளிக்கிண்ணம். கலந்து கொள்ளும் அனைவருக்கும் மதிய போசனம். எழுத்தாளர் சோ.சிவபாதசுந்தரமே மேற்படி விழா ஈழகேசரியின் இளைஞர் சங்கத்துக்காக நடத்தப்பட வேண்டுமென்று தூண்டியவர்.
கனகசெந்திநாதன் அவர்கள் தெல்லிப்பளையிலிருந்து புகையிரதத்தில் யாழ்ப்பாணம் செல்கிறார். அவருடன் சிறுவர்களான அ.செ.முருகானந்தனும், அ.ந.கந்தசாமியும் பயணிக்கின்றனர். விழாவில் வழங்கப்பட்ட பரிசு விபரங்கள் வருமாறு:
முதற் பரிசு - நாவலர் தங்கப்பதக்கம்: சி.சிவானந்தன் , மகாதேவ வித்தியாசாலை , குரும்பச்சிட்டி.
இரண்டாவது பரிசு: இராமநாதன் வெள்ளிப்பதக்கம் - ஆ.நடராசா, அத்தியார் இந்துக் கல்லூரி, நீர்வேலி.
மூன்றாவது பரிசு: புத்தகபரிசு - நா.தம்பிராசா, அரசினர் பாடசாலை, புன்னாலைக்கட்டுவன்
முதற்பரிசு: அ.ந.கந்தசாமி (மகாஜனா ஆங்கில வித்தியாசாலை, தெல்லிப்பளை. அ.ந.கந்தசாமியின் வயது 15)
இரண்டாம் பரிசு: தி.ச.வரதராசன் (சைவப்பிரகாச வித்தியாசாலை, மூளாய்)
சிறந்த பாடசாலைக்கான வெள்ளிக்கிண்ணம் - உடுவில் பெண்கள் சுவிபாஷா பாடசாலை.
ஈழகேசரி இளைஞர் சங்கம் விழாவையொட்டிக் கல்வி மலரையும் வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றிருந்த முக்கிய படைப்பாளிகளின் ஆக்கங்கள்"
அ.ந.கந்தசாமி - ராணி துர்க்கா
அ.செ.முருகானந்தன் - பாரததேவியின் பாலிய வித்தகன்
தி.ச.வரதராசன் - பிரிந்தவர் கூடினால்
கனக செந்திநாதன் - காற்றில் விழுந்த கோது
மேற்படி மலரைப்பற்றிக் குறிப்பிடும் கனக செந்திநாதன் பின்வருமாறு கூறுவார்: 'அவை எழுப்பும் பசுமை நினைவுகள்தான் எத்தனை". ஆம்! 'வெள்ளி'யின் மேற்படி 'பசுமை நினைவுகள்' எழுப்பும் பசுமை நினைவுகள்தாம் எத்தனை! எத்தனை!
தம் இளைஞர் சங்கத்தை ஊக்குவிக்க விழாவெடுத்து அவர்களைச் சிறப்பித்த 'ஈழகேசரி'யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மேற்படி 'வெள்ளி' (1.9.1972) சஞ்சிகையை வாசிக்க: http://noolaham.net/project/174/17335/17335.pdf
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.