அண்மையில் ஜனவரி 2007 வெளிவந்த ஞானம் சஞ்சிகை பார்த்தேன். வரதர் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அதில் செ.சுதர்சன் எழுத்தாளர் வரதருடன் நிகழ்த்திய நேர்காணல் வெளியாகியுள்ளது. 'வரலாறு ஒன்றின் மூலமும் கடைசியுமான கதை சொல்லி' - அதில் வரதர் மறுமலர்ச்சி இயக்கம் பற்றியும், சஞ்சிகை பற்றியும் அளித்த பதில்கள் வியப்பினை அளிப்பவையாகவிருந்தன. இதுநாள் வரை அவர்மேல் வைத்திருந்த மதிப்பினை ஓரளவுக்குக் குறைக்கும் வகையிலான வகையில் அவர் எழுத்தாளர் ஒருவரை இருட்டடிப்பு செய்துள்ளார். அதுவும் முழுப் பூசுணைக் காயைச் சோற்றில் மறைப்பதைப்போன்றது. அந்த நேர்காணலில் ஓரிடத்திலாவது அவர் அ.ந.க பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. இது அ.ந.கந்தசாமியின் மறுமலர்ச்சி இயக்கத்துக்கான பங்களிப்பைத் திட்டமிட்டே மூடி மறைப்பதாகும். ஒருவர் மறைந்து விட்டால், அவரில்லையென்ற துணிவில் இது போல் சாதனையொன்றுக்குத் தாமே அதிக உரிமையினைக் கோரி வரலாற்றை மாற்ற முற்படுவர் சிலர். வரதர் எவ்விதம் அவ்விதம் தாழ்ந்தார்? எப்படி அ.ந.கந்தசாமியை மறுமலர்ச்சி இயக்கம் பற்றிக் குறிப்பிடுகையில் மறைக்க முடிந்தது? [ ஞானம் சஞ்சிகையி வெளியான வரதரின் நேர்காணல் - http://noolaham.net/project/11/1024/1024.pdf ]
மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கிய இளைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் மேற்படி இதழில் வெளியான 'ஒரு காலத்தின் காலாக அமைந்தவர்' என்னும் கட்டுரையில் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பை மறக்காமல் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு கூறுவார்: "1940களில் மறுமலர்ச்சிச் சங்கம் நிறுவப்பட்டது. இதனை வரதராசன், சோ.தியாகராசா, நாவற்குழியூர் நடராஜன், பஞ்சாட்சர சர்மா, அ,ந,கந்தசாமி ஆகியோர் நிறுவினர்" ஆனால் இங்கு பேராசிரியர் அ.செ.முருகானந்தனைத்தவற விட்டு விட்டார். சோ.தியாகராஜாவுக்குப் பதிலாக அ.செ.மு என்றிருக்க வேண்டும்.
எழுத்தாளர் பஞ்சாட்சரசர்மா 1987இல் வெளியிட்ட 'பஞ்சாஷர்ம்' தொகுப்பு நூலில் 'மறுமலர்ச்சிக்காலத்து மறக்க முடியாத நண்பர்' என்னும் கட்டுரையில் வரதர் மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கிய ஐவர்களாக அ.செ.முருகானந்தன், தி.ச.வரதராசன், க.செ.நடராசா, அ.ந.கந்தசாமி, பஞ்சாட்சரசர்மா ஆகியோரைக் குறிப்பிடுவார். ஆனால் 2007இல் அவர் 'ஞானம்' சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில் அவர் அ.ந.கந்தசாமி பற்றி நேர் காணலில் எங்குமே குறிப்பிடவில்லை. இது திட்டமிட்ட இருட்டடிப்பாகவே நான் கருதுகின்றேன். அந்தச் சங்கத்தை உருவாக்கியதில் அ.ந.கந்தசாமியின் பங்கு முக்கியமானது. அவரே பஞ்சாட்சர சர்மாவுக்குக் கடிதம் எழுதிச் சங்கத்துக்குள் கொண்டு வந்தவர். அதனைப் பஞ்சாட்சர சர்மா வெளியிட்ட பஞ்சாஷரம் தொகுப்பு நூலிலுள்ள அ.ந,கந்தசாமி பஞ்சாட்சர சர்மாவுக்கு 10.6.1943 எழுதிய கடிதத்தின் மூலம் அறியலாம். அதற்கான புகைப்படப்பிரதியினை இப்பதிவில் இணைத்துள்ளேன்.
இவ்விதம் உருவாக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தின் இணைக்காரியதரிசிகளாக இருந்தவர்கள் அ.ந.கந்தசாமியும், வரதருமே. இதனை மார்ச் 1970 மல்லிகையில் வெளியான அ.ந.கந்தசாமி எழுதிய கடிதத்தில் காணலாம். அதனையும் இப்பதிவுடன் இணைத்துள்ளேன். அக்கடிதம் 17.9.69 எழுதிய கடிதம் என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது எழுதப்பட்ட ஆண்டு 17.9.67 என்றிருக்க வேண்டும். அ.ந.க 14.2.68 இறந்து விட்டார். அக்கடிதம் மல்லிகையில் 1967இல் வெளியான வில்லூன்றி பற்றி எழுதிய கட்டுரையை வெளியிடுவது பற்றியது. அதில் அவர் தான் மறுமலர்ச்சி இயக்கத்தின் தாபகர்களில் ஒருவன் என்றும், அதன் முதலாவது இணைக்காரியதரிசிகளில் ஒருவன் (வரதர் மற்றவர்) என்றும் குறிப்பிட்டிருப்பார்.
உண்மை இவ்விதமிருக்க எதற்காக வரதர் அ.ந.கந்தசாமியின் மறுமலர்ச்சிச் சங்கத்துக்கான பங்களிப்பை மூடி மறைக்க வேண்டும்.
மறுமலர்ச்சிச் சங்கம், அதன் இதழ்கள் பற்றிய தெளிவான புரிதல் அனைவருக்கும் அவசியம்.
1. மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கியவர்கள்: வரதர், அ.ந.கந்தசாமி, அ.செமுருகானந்தன், பஞ்சாட்சர சர்மா & நாவற்குழியூர் நடராசா.
2, மறுமலர்ச்சி சஞ்சிகை கையெழுத்துச் சஞ்சிகையாக 24 இதழ்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் வெளிவந்துள்ளனவா என்பது அறியப்பட வேண்டியதொன்று. அத்துடன் அக்கையெழுத்துச் சஞ்சிகைகளில் யார் யார் எழுதினார்கள் என்பதுவும் அறியப்பட வேண்டும். ஆனால் தற்போதுள்ள சூழலில் அதற்கான சாத்தியங்கள் குறைவே.
3. மறுமலர்ச்சி இதழ் (அச்சில் வெளியானது) - இவ்விதழில் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் ஒன்றைத்தவிர வெளிவரவில்லை என்பதற்காக அ.ந.கந்தசாமியின் மறுமலர்ச்சி அமைப்புக்கான பங்களிப்பை மறக்க முடியாது.
இவ்விடயம் பற்றி என்னுடன் தொடர்பு கொண்டு இந்நேர்காணலை எடுத்த செ.சுதர்சன் பின்வரும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்:
நேர்காணல் எடுத்தபோது வரதர் உடல் நிலை சீரற்றிருந்தார். அதனால் நினைவு கூர்தலில் தவறிழைத்திருக்கலாம்; மறந்திருக்கலாம்.அப்படியுமிருந்திருக்கலாம். இருந்தாலும் என்னைப்பொறுத்தவரையில் மேற்படி நேர்காணலானது முக்கியமான கலை, இலக்கியச் சஞ்சிகைகளிலொன்றான 'ஞானம்' சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. இதனை ஆதாரமாகக்கொண்டு எதிர்காலத்தில் சிலர் மறுமலர்ச்சி அமைப்பு பற்றித்தவறாக எழுதவும் வாய்ப்புண்டு. எனவே இவ்விதமானதொரு விளக்கப்பதிவு அவசியம்.
அத்துடன் அவர் மறுமலர்ச்சி இதழ் தொகுப்பில் மறுமலர்ச்சி அமைப்பின் காலம் பற்றி எழுதிய விரிவான கட்டுரையின் சில பக்கங்களை அனுப்பியுள்ளார். அதிலிருந்து பெற்ற விபரங்கள் வரலாற்று முக்கியத்துவம் மிக்கவையாதலால் அவற்றை இங்கு பதிவு செய்கின்றேன்.
1. ஆரம்பத்தில் அ.ந.க மாணவனாக இருந்த சமயம் மறுமலர்ச்சி என்னும் கையெழுத்துச் சஞ்சிகையை நடத்தியுள்ளார்.
2. அவர் மறுமலர்ச்சி அமைப்பில் இணைச்செயலாளராக இருந்துள்ளார். அப்பொழுது அவர் யாழ் இந்துக்கல்லூரி மாணவனும் கூட.
3.
மறுமலர்ச்சி அமைப்பு முதலில் மறுமலர்ச்சி என்னும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டுள்ளது காலம் 1943 -1946. பின்னரே மறுமலர்ச்சி அச்சிதழாக (1946 -1948) வெளியானது.
முகநூலில் இப்பதிவுக்கான எதிர்வினையொன்று...
Sutharsan Sellathurai : "வரலாறு ஒன்றின் மூலமும் முடிவுமான கதைசொல்லி" - ஈழத்தின் மூத்த எழுத்தாளர் வரதர் ஐயாவுடன் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது. பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்களின் மேற்பார்வையில் மறுமலர்ச்சி இதழ்கள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டிருந்தபோது, அந்த ஆய்வின் தேவை கருதி, வரதர் ஐயாவை நேரில் சந்தித்து நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். 2004இல் அவரைச் சந்தித்து மேற்கொண்ட நேர்காணலே, நான் அறிந்தவரையில், அவருடன் இறுதியாகச் செய்யப்பட்ட நேர்காணல் ஆகும். 21.12.2006 அவர் மறைந்தார். அவரின் மறைவையொட்டி ஞானம் சஞ்சிகை 2007 ஜனவரி வெளியீட்டை, "வரதர் நிறைவு மலர்" என்ற கனதிமிக்க தலைப்புடன் வெளியிட்டது. ஞானம் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்கி நான் மேற்கொண்ட நேர்காணலைப் பேராசிரியர் எம். ஏ. நுஃமானின் ஒப்புதலோடு ஆய்வேட்டிலிருந்து படியெடுத்து ஞானம் - வரதர் நிறைவு மலருக்கு அனுப்பியிருந்தேன். 2007 இல் வெளியானது அந்த நேர்காணலே. அது அவர் ஞானம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணல் அல்ல. அவர் எனது ஆய்வுத்தேவைக்கு அளித்த நேர்காணல். அதை நிறைவு மலரின் பொருத்தம் கருதி ஞானம் பிரசுரித்து உதவியது.
நான் வரதர் ஐயாவைச் சந்தித்தபோது அவர் மிகவும் சுகவீனமுற்றிருந்தார். பழைய நினைவுகளை மீட்பதற்குச் சிரமப்பட்டார். பல நாட்கள் அவரிடம் சென்று, அவர் மறதியுற்ற காலத்திலும் அவரைச் சற்றுச் சிரமப்படுத்தியே நேர்காணல் செய்ய முடிந்தது. கிரி அண்ணை நீங்கள் சொல்லுவதை நான் தவறு எனக் கூறவில்லை. வரதர் ஐயா நன்றாக இருந்த காலத்தில் வழங்கிய நேர்காணல்கள், எழுதிய எழுத்துக்களில் அவர் அ.ந.க. பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா எனத் தேடவேண்டும். அவ்வாறு தேடி அ.ந.க. பற்றி எந்தப் பதிவும் இல்லையெனில் நீங்கள் சொல்லும் முடிவுக்கு வரலாம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். எனது ஆய்வு குறித்த தங்கள் பதிவுக்கு எனது நன்றி.
Giritharan Navaratnam: சுதர்சன், உங்கள் கருத்துகளை அறிந்த பின்னர் ஏற்கனவே பதிவின் இறுதியில் அவற்றை உள்வாங்கி மாற்றம் செய்துள்ளேன். இருந்தாலும் இந்நேர்காணல் ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளதால், அதிலுள்ள தவறினைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இதனை வாசிக்கும் ஒருவர் அதிலுள்ளதை அவ்வாறே ஏற்றுக்கொண்டு ஆய்வுகளுக்குப் பாவிக்கும் சாத்தியமுண்டல்லவா? அதிலும் அவர் மறுமலர்ச்சி இயக்கத்தின் முக்கியமான தூண்களில் ஒருவரல்லவா? இதனால் முக்கிய தவறினைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.