'தமிழ் ஹிந்து' இணைய இதழில் (அக்டோபர் 16, 2013) அமரர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் 'தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்' என்றொரு கட்டுரையினை எழுதியிருந்தார். அதில் அவர் 'வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும்.' என்று எழுதியிருந்தார்.\
அவர் குறிப்பிட்டிருந்த 'வியாளம்' என்னும் சொல் பற்றிய எனது கருத்துகளை அங்கு பதிவு செய்திருந்தேன். அதனையும், அது பற்றிய கருத்துகளையும் (அமரர் வெங்கட் சாமிநாதனின் கருத்து உட்பட) இங்கு பதிவு செய்கின்றேன்.
வ.ந.கிரிதரன் on October 21, 2013 at 8:30 am
வெ.சா.வின் ‘தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்’ கட்டுரையும், வியாளம், வியாளி பற்றிய கருத்துகள் சிலவும். \
வெ.சா.அவர்கள் தனது ‘தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்’ கட்டுரையில் “வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும்.” என்று வேண்டுகோளொன்றினை விடுத்திருந்தார். அது பற்றிச் சில வார்த்தைகளைப் பதிவு செய்வதே இக்குறிப்புகளின் நோக்கம். தமிழ் இலக்கியத்தில் வியாளம் என்ற சொல் பாம்பு, புலி, யாளி, கெட்ட குணமுள்ள யானை போன்ற பல அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. தோலாமொழித்தேவர் இயற்றிய ‘சூளாமணி’யில் 912 பாடலாகப் பின்வரும் பாடல் வருகிறது.
அடுகடா மாவி நாறு மழிமதங் கருவி வீழத்
தொடுகடா வயிரத் தோட்டி யுடையன 3தொடர்க ளூன்ற
விடுகொடா வியாள நிற்ப மெல்லவன் பணிகள செய்யும்
படுகடாக் களிறுந் தேரும் புரவியும் பண்ணு கென்றான்.
இங்கு ‘விடுகொடா வியாள நிற்ப’ என்பது ‘நம் பட்டத்து யானையும் ஒழிக’ என்னும் அர்த்தத்தில் வருகிறது.
சூடாமணி நிகண்டு வியாளம் பாம்பின் இன்னுமொரு பெயர் என்னும் தகவலினைத் தரும்:
பாம்பின் பெயர்: அரவு, கட்செவி, போகி, அகி, அரி, வியாளம், சர்ப்பம், உரகம், பன்னகம், நாகம், மாசுணம், சக்கிரி, புயங்கம், பாந்தள், அங்கதம், பணி,
அருணகிரிநாதரும் ஓரிடத்தில் வியாளம் என்பதை பாம்பு என்னும் அர்த்தத்தில் பாவித்திருப்பார்.
அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ
டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த
அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்து …… அமுதாக என்னும் திருப்புகழ் வரிகளில் வரும் ‘மணிமுடிவி யாள மிட்ட ழுந்த’ என்னும் வரிகள் ‘ரத்தின முடிகளை உடைய பாம்பாகிய வாசுகியை கயிறாகப் பூட்டி’ என்னும் அர்த்தத்தில் வருகின்றன. இங்கு பாம்பாகிய வாசுகியைக் குறிப்பதற்கு அவர் வியாளம் என்னும் சொல்லினைப் பாவித்திருப்பார்.
கம்பராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் வரும் சடாயு காண் படலத்தில் வரும் மிகைப் பாடல்களில் வியாளம் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது:
வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்;
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள்;
அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி, உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்;
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள், செலசரம் ஆகிய பலவும், தெரிக்குங்காலை. 24-4
மகாபாரத யுத்தத்தின் நான்காம் நாள் பீஷ்மர் வியாளம் என்ற வியூகத்தை அமைத்ததாக வருகிறது.
இது பற்றி அவருக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதிலளித்த அவர் தனது கடிதத்தின் இறுதியில் ‘கடைசியில் எந்த சொல் வியாளத்துக்கு பொருத்தமான அர்த்தமாக இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள். சொல்லுங்கள்’ என்றொரு வேண்டுகோளினையும் விடுத்திருந்தார்.
மேற்படி ‘வியாளம்’ என்னும் நூலானது ‘மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது’ என்று வெ.சா. தனது கட்டுரையில் ‘வேலாயுதம்’ என்ற அந்தக் கலைனைப் பற்றி அறிமுகம் செய்திருப்பார்.
இது பற்றிய எனக்கெழுதிய தனது கடிதத்தில் வெ.சா. அவர்கள் ‘ஒரு வேளை இது யாழ்ப்பாணத் தமிழோ – {ஒளி விதானிப்பு போன்ற பல சொற்கள் அந்த புத்தகத்தில் வருகின்றன. வேலாயுதத்தின் நண்பர்கள், கோபி போன்றவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் )’ என்றொரு சந்தேகத்தினையும் எழுப்பியிருந்தார்.
வியாளமும், கீரிமலை ‘வியாளி’யும்
சிறிது சிந்தனையினை இந்த விடயத்தில் ஓட விட்டபோது யாழ்ப்பாணத்தில் இச்சொல்லைப் பாவிப்பது பொதுவான வழக்கம் போல் தெரியவில்லை. ஆனாலும் ‘வியாளம்’ என்ற சொல் உடனே எனக்கு ஒருவரின் ஞாபகத்தை ஏற்படுத்தியது. அதற்குரியவர் ஒரு பெண்மணி. அந்தப் பெயரினைக் கேட்டாலே எல்லோரும் ஒரு காலத்தில் நடுங்குவார்கள். குறிப்பாகக் கீரிமலையில் அவரது பெயர் மிகுந்த பிரபலம். அவர் ஒரு சண்டிராணி. யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் சண்டியர்கள் பலருக்குப் பெயர்பெற்றிருந்தது. ஆனால் பெண்கள் ஓரு சிலரே ‘சண்டிச்சி’யாகப் பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களில் கீரிமலை ‘வியாளி’யைத் தெரியாதவர்கள் சிலரே அன்றிருந்தார்கள். அவரது குடும்பத்தில் அவரது பிள்ளைகளெல்லாரும் பெயர் பெற்ற சண்டியர்களென்று கேள்விப்பட்டிருக்கின்றேன். வியாளி கீரிமலையில் சாராயக் கடை நடத்தி வந்ததாகத் தெரிகிறது. எனக்கும் ஒரு முறை அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
அப்பொழுது பல்கலைக் கழகப் புகுமுகக் கல்வியை முடித்துவிட்டு பல்கலைக்கழகப் பிரவேசத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அக்காலகட்டத்தில்தான் யாழ்ப்பாணத்து மாணவர்கள் முதல்முதலாக பனங்கள்ளிலிருந்து தொடங்கி ‘லயன் லாகர்’ பியர், ‘குரங்கு’ என்று திரியும் காலகட்டம். எங்களது காலகட்டத்தில் ஆனைக்கோட்டையில் உடன் கள், றீகல் தியேட்டர், யாழ் புகையிரத நிலையம், மற்றும் ‘யாழ்ட்டா’வில் பியர், இவற்றுடன் ‘மொக்கங்கபே’யில் கொத்துரொட்டி, குருமா போன்ற அசைவ உணவு வகைகளென்று நண்பர்களுடன் காலத்தைக் கழிப்பார்கள். நாங்களும் அதற்கு விதி விலக்கானவர்களல்லர். இவ்விதமானதொரு சமயத்தில் நண்பர்கள் பலருடன் கீரிமலைக்குச் சென்றிருந்தோம். எல்லோரும் கள்ளுண்டு மந்திகளாக ஆடிக்கொண்டிருந்தோம். நாங்கள் அவ்விதம் ஆடிக்கொண்டிருந்தது ‘வியாளியின்’ கடைக்கு அண்மையிலிருந்த ஆலமரத்து விழுகளில்தாம். எமக்கு அப்பொழுது வியாளியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், ஒரு முறையாவது நேரில் சந்தித்திருந்ததில்லை. அத்துடன் நாங்கள் அப்பொழுது ஆடிக்கொண்டிருந்தது வியாளியின் கடைக்கு முன்புறத்தில் என்பதும் அச்சமயத்தில் தெரிந்திருக்கவில்லை. அச்சமயத்தில்தான் வியாளி புயலெனச் சீறியபடி தனக்கேயுரிய ‘மங்கல’ வார்த்தைகளால் எங்களை அர்ச்சித்தபடி வந்தார். அவரை யாரென்று தெரியாததால் நாமும் அவரை எதிர்த்து வார்த்தைகளை விட முனைந்தபோது ஊரவர்கள் சிலர் ஓடி வந்து ‘தம்பிமாரே, வியாளியுடன் வீண் வம்புக்குப் போகாதீர்கள்’ என்னும் கருத்துப்பட அறிவுரைகளைப் பகர்ந்தபோது எங்கள் அனைவருக்குமேற்பட்ட திகைப்பில் மெல்ல மெல்ல கணகணப்பாக அதிகரித்துக்கொண்டிருந்த கள்வெறி போன இடமே தெரியவில்லை. நாங்கள் அனைவரும் நல்ல பிள்ளைகளாக அவ்விடத்தைவிட்டு நகர்ந்தோம்.
வியாளியைப் பற்றி இன்னுமொரு கதையினையும் ஏற்கனவே கேட்டிருந்தோம். கீரிமலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சராகவிருந்த சுகததாசா கட்டிய மண்டபமொன்றினைத் திறந்து வைப்பதற்காக தந்தை செல்வாவுடன் வந்து கொண்டிருந்தார். அவர்களை வரவேற்பதற்காக மக்கள் மாலைகளுடன் நின்றிருந்தார்கள். அவர்களில் வியாளியும் ஒருவராக நின்றிருந்தார். அமைச்சர் சுகததாசா வியாளியின் அருகில் வந்தபோது மாலையினைப் பெறுவதற்காகத் தலையைக் குனிந்தார். ஆனால் வியாளி மாலையைப் போட்டதோ தந்தை செல்வாவின் கழுத்தில். இதனை எனது அப்பாவின் மூலம்தான் முதலில் கேட்டிருந்தேன். இது பற்றிய உண்மையினை யாராவது அறிந்தவர்கள்தாம் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த வியாளி என்ற சொல் வியாளம் என்ற சொல்லிலிருந்து வந்திருக்க வேண்டும் [வியாளியின் இயற்பெயர் விசாலாட்சி என்றும் செவிவழியாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது பற்றியும் யாராவது அறிந்தவர்கள்தாம் உறுதிப்படுத்த வேண்டும்]. வியாளம் என்பது கொடிய புலி, யாளி, அரவம், கொடிய யானை போன்றவற்றைக் குறிப்பதாலும், வியாளி யாவரும் அஞ்சத்தக்க சண்டிராணியாக விளங்கியதாலும் , அவர் பெண் என்பதாலும் ‘வியாளி’ என்றழைக்கப்பட்டிருக்கலாமென்றே படுகிறது. அவ்விதம் அவர் அழைக்கப்பட்டது சாதாரண மக்களால். அதிலிருந்து தெரிவதென்னவென்றால் ‘வியாளம்’ என்ற சொல் சாதாரண மக்கள் மத்தியில் சாதாரணமாக விளங்கியியிருக்க வேண்டுமென்றே படுகிறது. ஒருவேளை வெ.சா. அவர்களின் ‘ஒரு வேளை இது யாழ்ப்பாணத் தமிழோ’ என்ற சந்தேகமும் நியாயமான சந்தேகமாகவிருக்கக்கூடும்.
வெ.சா.வின் ‘கடைசியில் எந்த சொல் வியாளத்துக்கு பொருத்தமான அர்த்தமாக இருக்கும் என்று சொல்லுங்கள்’ என்ற வேண்டுகோளினையும் மேலதிகமாக எண்ணிப்பார்த்தேன். வேலாயுதம் அவர்களின் நண்பர்கள் எந்த அர்த்தத்தில் பாவித்தார்களோ தெரியவில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் வியாளம் என்ற சொல்லின் ஓர் அர்த்தமான ‘புலி’ என்னும் அர்த்தமே நன்கு பொருந்துவதாகத் தெரிகின்றது. ‘புலி வாலைப் பிடித்த நாயர்’ என்ற பேச்சு வழக்குத்தான் ஞாபகத்துக்கு வருகிறது. வாலின் மீதான பிடியைத் தவற்விட்டால் புலிக்கு இரையாக வேண்டும். இல்லாவிட்டால் வாலைப் பிடித்துக்கொண்டே புலியிடமிருந்து தப்ப முனைய வேண்டும்.
கலைஞர் வேலாயுதத்துக்கு நடந்தது என்ன? இருப்பு என்ற புலியின் வாலைப் பிடித்துக்கொண்டு தப்பிப் பிழைத்துக்கொண்டிருந்தவரின் பிடி ஒரு தருணத்தில் நழுவி விட்டது. விளைவு .. புலிக்கு அவர் பலியாகி விட்டார். இந்த அர்த்தத்தில் , வியாளம் புலியைக் குறிக்கும் அர்த்தத்தில் சிந்திக்கையில் ‘வியாளம்’ என்ற பெயர் மிகவும் பொருத்தமாகவே எனக்குப் படுகிறது
க்ருஷ்ணகுமார் on October 21, 2013 at 3:59 pm
வேலாயுதம் என்ற அற்புத கலைஞரின் நினைவைப் பகிர்ந்துகொண்ட ஸ்ரீ வெ.சா அவர்களுக்கு நன்றி. வியாளம் பற்றி….. அருமை ஸ்ரீ கிரிதரன் அவர்களே.
அதுவும் பல தமிழிலக்கியங்களிலிருந்து குறிப்பு கொடுத்தமை மிகவும் அருமை. ஊடே வள்ளல் அருணகிரிப்பெருமானின் திருப்புகழையும் நீங்கள் உடனெடுத்துக் கொண்டதில் வியாளம் பற்றிய குறிப்பு வேல் விருத்தத்திலிருக்குமே என நினைவில் வந்தது…. உடன் நினைவுக்கு வந்தது:-
வேல் விருத்தத்தில் மூன்றாவது பாடல் …… வேதாள பூதமொடு
ஆதார கமடமும் கணபண வியாளமும்
அடக்கிய தடக்கிரி எலாம்
கணபண வியாளமும் — கூட்டமான படங்களை உடைய ஆதிசேஷன்
அருமையான குறிப்புகளுக்கு மீண்டும் நன்றி
Venkat Swaminathan on October 21, 2013 at 7:52 pm
திரு கிரிதரன் அவர்களுக்கும் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இம்மாதிரியான எதிர்வினைகள் தான் நமக்கு வளமூட்டும். இவை நமக்குத் தெரியாத விஷயங்களை,தெரியவைப்பதுடன், எந்த விஷயம் பற்றியும் ஒரு நல்ல சம்வாதம், ஒருவருக்குஒருவர் புரிந்து கொள்ள வழிசெய்தல் எல்லாம் தான் நமக்கு வேண்டும்.
தமிழ் இலக்கியத்தில் எனக்குள்ள ஞானம் வெட்டவெளிச்சமாகியுள்ளது பற்றிக் கவலையில்லை. மீண்டும் நண்பர்கள் இருவருக்கு என் மனமார்ந்த நன்றி.
http://www.tamilhindu.com/2013/10/a-society-that-drives-an-artist-to-suicide/