தமிழினி (சிவகாமி) ஜெயக்குமாரனின் கொண்டாடப்பட வேண்டிய இருப்பு!
அண்மையில் மறைந்த தமிழினியின் வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியதே தவிர , அநுதாபத்துக்குரியதல்ல. யுத்தம் முடிவடைந்த பின்னர் சுமார் நான்கு வருடங்கள் சிறையிலிடப்பட்டு வெளிவந்த தமிழினி தனக்கேற்பட்ட இன்னல்களையே எண்ணி மனந்தளர்ந்திடவில்லை. 'சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாமல் , 'இன்றுபுதிதாய்ப்பிறந்தோம் என்று எண்ணமதைத் திண்ணமுற இசைத்து' வாழ்ந்தவர்.
தமிழினியின் இறுதிக்கிரியைகள் பற்றிய நிகழ்வுகளிலும் சரி, அவர் பற்றி நினைவு கூர்ந்தவர்களின் நினைவுகளிலும் சரி தமிழினியின் கடந்த காலப்போராட்ட வாழ்வு பற்றிய விபரங்களே இடம் பெற்றிருந்தன. ஆனால் அவர் சிறையினின்றும் மீண்டு , வாழ்வை நம்பிக்கையுடன் எதிர் கொண்ட அவரது நிலை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருக்கவில்லை.
தமிழினி ஏற்கனவே வேறொரு பெயரில் எனக்கு முகநூலில் நட்புக்கரம் நீட்டி அழைப்பு விடுத்திருந்தார். பொதுவாக எனக்கு வரும் அழைப்புகளைச் சிறிது காலம் அவதானித்து விட்டு, அவர்களிடும் பதிவுகளின் அடிப்படையிலேயே அவர்களை நட்பு வட்டத்தில் சேர்ப்பது பற்றி முடிவெடுப்பேன். அவ்விதமே வேறொரு பெயரில் அழைப்பு விடுத்த அவரையும் அந்தப்பெயரிலேயே என் நட்பு வட்டத்தில் இணைத்துக்கொண்டேன். அவரது மறைவுக்குப்பின்னரே அந்தப்பெயரில் இயங்கியவர் தமிழினி என்று அறிந்து கொண்டேன்.
பின்னர் தமிழினி என்னும் பெயரில் அழைப்பு அனுப்பியிருந்தார். அந்த அழைப்பு அனுப்பியபோது அவரது முகநூலில் அவர் பாவித்திருந்த படம் (image) என்னை மிகவும் கவர்ந்திருந்தது. பல்வேறு கைகள் இணைந்து நிற்கும் காட்சி அது. பல்வேறு கருத்துள்ளவர்களுடனும் நட்புக்கரம் கோர்த்து, ஒன்றுபட்டுச் செயற்பட அவர் விரும்பியதை வெளிப்படுத்தும் படம் அது. அதனால்தான் அவரது முகநூல் நண்பர்களாகப் பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கிவர்களும் இணைந்திருக்க முடிந்தது. அவ்விதமாக அனைத்துப் பிரிவினருடனும் ஆக்கபூர்வமாக இணைந்து கலந்துரையாட அவர் முனைந்தது கூறும் செய்திதானென்ன?
படத்திலுள்ள கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அளவுகளில் வேறுபட்டவை. அவை அனைத்தும் ஒன்றுபட்டு ஆக்கபூர்வமாக இயங்குவதைப்போல், முரண்பட்ட கருத்துள்ளவர்களாலும் ஒன்றுபட்டு , முரண்பாடுகளுக்குள் ஓர் இணக்கம் கண்டு இயங்க முடியும். சமூக ஊடகமான முகநூலில் அவரது செயற்பாடுகள் இதனைத்தான் எமக்குக் கூறி நிற்கின்றன. பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கியவர்களெல்லாரும் அவருடன் முகநூலில் கைகோர்த்திருந்தார்கள். அனைவருடனும் அவர் நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல் கருத்துகளைப் பரிமாறியிருக்கின்றார். அதனால்தான் அவரது மறைவு அனைத்துப்பிரிவினரையும் பாதித்திருக்கின்றது.
இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனத்திலிருத்த வேண்டும். தமிழினி சிறை மீண்டு ஆரம்பித்த வாழ்வில் , திருமணம் முடித்துத் தன் மண வாழ்வினையும் ஆரம்பித்துள்ளார். இலண்டனில் வசிக்கும் ஜெயக்குமாரன் அவர்களை அவர் மணம் புரிந்து தன் வாழ்வின் அடுத்த கட்டத்தினை ஆரம்பித்துள்ளார். அவரது நோய் காரணமாக அவரால் இலண்டனுக்குச் செல்ல முடியாதிருந்திருக்கலாம்; அல்லது அரசியல் காரணங்களினால் இலண்டனுக்குக் குடிபெயர்வதில் சிரமங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவை பற்றி எமக்கு எதுவும் தெரியாது. அவரது குடும்பத்தவர்களுக்கு மட்டுமே உண்மை விபரங்கள் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சிவகாமி சிவசுப்பிரமணியம் இறக்கும்போது சிவகாமி ஜெயக்குமாரனாக மறைந்திருக்கின்றார்.
முகநூலில் கணவன், மனைவியாக இருவரும் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டிருக்கின்றனர் என்பதையே என்னால் அவதானிக்க முடிகிறது. தன் மனைவியின் இலக்கியச் செயற்பாடுகளை ஆதரித்து, அவரை அதில் தீவிரமாக ஈடுபட வைத்ததில் அவரது கணவர் ஜெயக்குமாரனின் பங்களிப்பை என்னால் அவர்கள்தம் முகநூல் குறிப்புகளிலிருந்து அவதானிக்க முடிகிறது. ஆனால் இலண்டனில் வசிக்கும் ஜெயக்குமாரன்தான் அவரது கணவர் என்னும் விடயத்தையும் நான் தமிழினியின் மறைவின்பின்னரே அறிந்து கொண்டேன்.
சிறை மீண்டதன் பின்னர் தன்னைப் புரிந்து கொண்ட ஒருவரை மணம் புரிந்து, அண்மையில் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையிலும் தன் எழுத்தாற்றலை வீணாக்காமல், தன் கடந்த காலத்து அனுபவங்களைக் கவிதைகளாகவும், புனைகதைகளாகவும் பதிவு செய்ததோடு, முரண்பாடுகளைக்கடந்து அனைவருடனும் கை கோர்த்து இருப்பினை ஆக்கபூர்வமாக மாற்றி நடைபோட்ட தமிழினியின் (சிவகாமி ஜெயக்குமாரனின்) வாழ்வு கொண்டாடப்பட வேண்டியது. அதிலிருந்து முரண்பாடுகளை மற்றும் அவரது மரணத்தைத் தமது நலன்களுக்காக ஊதிப்பெரிதாக்கி ஆதாயம் தேடுவோர் தொடக்கம் அனைத்துப் பிரிவினரும் கற்க வேண்டியவை நிறையவே உள.
முகநூலில் வெளியான அவரது படைப்புகள் அனைத்தும் (அவரது பெயரிலும், புனைபெயரிலும்) வெளியான படைப்புகள் (சிறுகதைகள், கவிதைகள்) எண்ணிகையில் குறைவாக இருந்தபோதும் தமிழ் இலக்கியப்பரப்பில் தமக்கென்றோரிடத்தைப் பெற்றுள்ளவையாக நிலைத்து நிற்கும் தன்மை மிக்கவை.
சு.ரா.வின் பார்வையில் தாஸ்தயேவ்ஸ்கியின் கனவு!
அண்மையில் சு.ரா.வின் தாஸ்தயேவ்ஸ்கி பற்றிய 'தாஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன்' என்னும் கட்டுரையினை வாசித்தபொழுது என் கவனத்தை ஈர்த்த பகுதியினைக் கீழே பதிவு செய்கின்றேன்:
"பரிபூரணமான மனிதனை உருவாக்க வேண்டும் என்பது தாஸ்தயேவ்ஸ்கியின் பெரிய கனவாக இருந்தது. பல்வேறு நாவல்களில் பல்வேறு கதாபாத்திரங்களைப் பரிபூரணத்தை நோக்கி நகர்த்த அவன் முயல்கிறான். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கி ஆசைகளால் ஆட்டுவிக்கப்படும் பக்தியுகக் காவியகர்த்தா அல்லன். அவன் ஒரு நாவலாசிரியன்; மற்றொரு விதத்தில் சொன்னால் யதார்த்த வாழ்க்கையைக் கண்டு சொல்ல வந்தவன். அதன் ஆழத்தையும் ஒளியையும் இருளையும் மனிதனின் பார்வை இன்று வரையிலும் படாத மூலைகளையும் பதிவு செய்ய வந்தவன். கரமசோவ் சகோதரர்களில் அலெக்சியையோ அல்லது 'மூடன்' என்ற நாவலின் இளவரசன் மிஷ்கின் என்ற கதாபாத்திரத்தையோ பரிபூரணத்தின் ஜீவ இயக்கமாக உருவாக்குவதில் அவன் வெற்றி பெறவில்லை. இந்தத்தோல்வி யதார்த்தத்தைப் பற்றிய அவனின் அறிவின் வெற்றியாகும். யதார்த்தத்தில் பரிபூரணம் என்பது இல்லாதவரையிலும் படைப்பிலும் பரிபூரணம் என்பது சாத்தியமில்லை. உண்மையின் பாரத்தைச்சுமந்து செல்லும் கலைஞன் வாழ்வின் இயற்கை விதிகளுக்கு உட்பட்டே தொழில் புரிகிறான்."
சுராவின், ஒருவரின் படைப்புகளைப்பற்றிய இந்த அவதானிப்பு வாசிப்புக்கு இன்பமூட்டுவது; சிந்தனைக்கு வேலை தருவது. பரிபூரணமான மனிதரைக்காண முடியாது என்பதுபோல் பரிபூரணமான படைப்பாளியொருவரையும் காண முடியாது சு.ரா உட்பட. முரண்பாடுகள் எப்பொழுதும் கூடவே வருபவை. ஆனால் அவ்வகையான முரண்பாடுகளினூடு படைப்பாளியொருவரின் சிறப்பு என்பது அவரது ஆழ்ந்த வாசிப்பு, சிந்தனை, தர்க்கச்சிறப்பு மிக்க வாதங்கள் மற்றும் பாவிக்கப்படும் மொழி ஆகியவற்றில்தான் தங்கியுள்ளது. சுராவும் அவ்வகையான படைப்பாளிகளிலொருவர் என்பதை வெளிப்படுத்தும் சான்றுகளிலொன்றுதான் மேலுள்ள அவரது தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் பற்றிய அவதானிப்பும்.
எழுத்தாளர் மைக்கல் (மான்ரியால்) ஓர் அறிமுகம்.
எழுத்தாளர் மைக்கல் (மான்ரியால்) கனடாத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் படைப்பாளிகளிலொருவர். மைக்கல் சமகால இலக்கிய நடப்புகளை அறிவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். இலக்கியத்துறையில் நடமாடும் பலரிற்கு தமது படைப்புகளை வாசிப்பது மட்டுமே இலக்கியத் தேடலாக இருந்து விடுகின்றது. இன்னும் சிலரிற்கோ ஒரு குறிப்பிட்ட அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகளின் எழுத்துகளை மட்டும் படிப்பது தான் இலக்கிய உலகில் தங்கள் புலமையைக் காட்டி நிலை நிறுத்திக் கொள்வதற்குரிய வழிகளிலொன்றாக இருந்து விடுகின்றது. இந் நிலையில் விருப்பு வேறுபாடின்றி சகல படைப்புகளையும் தேடலுடன் , ஒரு வித தீவிரமான ஆர்வத்துடன் வாசித்தறிபவர்கள் சிலரே. மைக்கல் அத்தகையவர்களில் ஒருவர். நவீன இலக்கிய முயற்சிகள் பற்றிய இவரது கடிதங்கள், கட்டுரைகள் எல்லாம் இவரது புலமையை வெளிக்காட்டுவன. ஒரு நல்லதொரு இலக்கிய விமர்சகராக, படைப்பாளியாக விளங்குவதற்குரிய தகைமைகள் பெற்று விளங்கும் வெகு சில கனேடிய இலக்கியவாதிகளில் மைக்கல் குறிப்பிடத்தக்கவர்.
இவரது 'யாத்ரா மார்க்கம்' என்னும் பத்தி எழுத்து ஆறு கட்டுரைகளாகப் 'பதிவுகள்' இணைய இதழில் ஆகஸ்ட் 2002 இதழ் 32 தொடக்கம் பெப்ருவரி 2003 இதழ் 38 வரை தொடராக வெளிவந்தது. அதில் 'நடுகல்', 'வான்கோழி நடனம்', 'காடேறி வலயம்', 'சூரையங்காடு', 'காற்றிலேறி நிலவைக் கொய்தல்' மற்றும் 'வீரன்' ஆகிய கட்டுரைகள் வெளியாகியிருந்தன.
இவரது நாவலான 'ஏழாவது சொர்க்கம்' 'பதிவுகள்' இணைய இதழில் பத்து அத்தியாயங்களாக ஆகஸ்ட் 2001 ,இதழ்-20 தொடக்கம் ஏப்ரல் 2002 இதழ் 28 வரையில் தொடராக வெளிவந்தது.
இவை மீண்டும் 'பதிவுகள்' இணைய இதழில் தமிழ் ஒருங்குறி எழுத்தில் பிரசுரமாகும்.
மீண்டும் புத்துணர்வுடன் மைக்கல் இலக்கியப்பங்களிப்பு செய்வதற்கு வரவேண்டுமென்பதே எமது அவா. அவ்விதமே வருவதாக 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு' என முகநூல் வாயிலாக அறிவித்திருக்கின்றார். நண்பரின் வருகை நல்வரவாகட்டும். கனடியத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கட்டும். வாழ்த்துகிறோம்.