நண்பர் கற்சுறா முகநூலில் அனுப்பியிருந்த தமிழினியின் மறைவு பற்றி அனுப்பியிருந்த தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியினைத்தந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. சிறிது நாள்களுக்கு முன்னர் கூட எழுத்தாளர் தாமரைச்செல்வி பற்றி நான் எழுதிய முகநூல் பதிவினைத்தனது முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் பின்வருமாறும் எழுதியிருந்தார்:
"அக்காவின் எழுத்துக்களை சிறு வயதிலிருந்தே நான் ஆர்வத்துடனும். ஆசையுடனும் வாசிப்பதுண்டு. வளர்ந்த பின்பும் அக்காவின் வன்னி மண்ணினதும் அதன் மக்களின் இயல்புகளையும் பற்றிய புரிதலை எனக்குள் ஏற்படுத்தியவை அக்காவின் எழுத்துக்கள் தான். அவை பற்றி அருமையான குறிப்பொன்றைத் தந்தமைக்கு சகோதரன் கிரிதரனுக்கு எனது மனமார்ந்த நன்றி."
தமிழினி விடுதலைப்புலிகளின் மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். யுத்தத்தின் பின்னர் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் தன் பங்களிப்பினை ஆற்றத்தொடங்கியிருந்தார். தமிழினி எழுதுவதில் திறமை மிக்கவர். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். பதிவுகள் இணைய இதழுக்கும் அவர் தன் படைப்புகளை அவ்வப்போது அனுப்புவார். பதிவுகள் இணைய இதழ் மேல் மிகுந்த மதிப்பு கொண்டிருந்ததோடு அல்லாமல் தன் முகநூல் பக்கத்தில் பதிவுகளில் அவரது படைப்புகள் பற்றி வெளியாகியுள்ள குறிப்புகளை பிரசுரிப்பதுடன் அதற்காக நன்றியும் கூறியிருப்பார். அவர் நோய் வாய்ப்பட்டிருந்த விடயம் அவரது மறைவின் பின்னர்தான் தெரிந்தது.
அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்து இன்னும் பல படைப்புகளைத்தருவார் என்றெண்ணியிருந்த சமயத்தில் அவரது மறைவுச்செய்தி வந்திருக்கின்றது. ஆனால் அவர் எழுதிய அனைத்துமே தமிழ் இலக்கியப்பரப்பில் முக்கியமானவையாக விளங்கப்போகின்றன என்பது மட்டும் நிச்சயம்.
பதிவுகளுக்கு அவர் தனது படைப்புகளை அனுப்புவது சம்பந்தமாக என்னுடன் முகநூல் வழியாகத்தொடர்ப்பு கொண்டிருந்தபோது ஒரு முறை 'வணக்கம் தமிழினி, உங்கள் படைப்புகளை 'பதிவுகள்' இணைய இதழில் மீள்பிரசுரம் செய்வதையிட்டு தங்களுக்கு ஆட்சேபணையேதுமுண்டா?' என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் 'வணக்கம் கிரிதரன் அண்ணா எனக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை. உங்களது விமர்சனங்கள் எனக்கு உற்சாகமளிப்பவை நன்றி.' என்று பதிலிறுத்திருந்தார். அதற்கு நான் 'நன்றி தமிழினி. உங்கள் எழுத்தில் சிறப்புண்டு. தொடர்ந்து எழுதுங்கள்; வாசிக்கக்காத்திருக்கின்றோம்.' என்று எழுதியபோது அவர் 'மிகவும் நன்றி, நிறைய விடயங்களை எழுதுவதற்கு விருப்பமுண்டு, உடல்நிலையும் காலமும் இடமளித்தால் நிச்சயம் எழுதுவேன்.' என்று எழுதியிருந்தார். அப்பொழுது கூட அவர் தன் உடல் நிலை பற்றி எழுதியதைப்பொதுவாக எழுதியதாகக் கருதிப் பெரிதாகக் கவனத்திலெடுக்கவில்லை. ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது அதன் பின்னாலிருந்த யதார்த்தம்.
அவரது திடீர் மறைவு 'பதிவுகள்' இதழைப்பொறுத்தவரையில் துயரகரமானது. அண்மைக்காலமாகப் 'பதிவுகள்' இதழில் தன் படைப்புகளால் வளம் சேர்த்த படைப்பாளிகளிலொருவர் அவர். அந்த வகையில் பதிவுகள் தன் படைப்பாளிகளிலொருவரை இழந்து விட்டதால் ஏற்பட்ட துயரம் அது. தனிப்பட்டரீதியில் என்னைத்தன் சகோதரனாகக்கருதி , அண்ணா என்று பாசமுடன் விளித்த சகோதரியொருவரின் இழப்பு. அந்த வகையில் தனிப்பட்ட இழப்பாகவும் கருதுகின்றேன். அடுத்தது அவரது எழுத்துகள் என்னைக் கவர்ந்தவை. தன் அனுபவங்களை எந்தவிதப் பிரச்சாரங்களுமற்றுப் பதிவு செய்யும் அவரது எழுத்து நடை என்னைக் கவர்ந்தது. அந்த வகையில் எனக்குப் பிடித்த சக எழுத்தாளர் ஒருவரின் இழப்பு.
என் முகநூல் நண்பர்களிலொருவர் ஜெயன் தேவன் (ஜெயக்குமாரன்) அவர்கள். அவ்வப்போது என் பதிவுகளைப்படித்து விட்டுத்தன் கருத்துகளைக்கூறுவார். அவரது துணைவியார்தான் தமிழினி என்னும் விடயமே தமிழினியின் மறைவின் பின்னரே தெரிய வந்தது. அந்த வகையிலும் இழப்பே.
உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களைப்பொறுத்தவரையில் அவர்களது மதிப்புக்குரிய ஒருவர் அவர். அவரது முகநூல் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களைப்பார்த்தால் அது தெரியும். அந்த வகையில் அனைவருக்குமே தமிழினியின் இழப்பு எதிர்பாராதது. துயரம் தருவது.
ஒரு பதிவுக்காக முகநூலில் அவர் தனது படைப்புகள் சம்பந்தமாக என்னுடன் தொடர்பு கொண்டபோது பரிமாறிக்கொண்ட கருத்துகளை, தனது முகநூல் பக்கத்தில் பிரசுரித்திருந்த கருத்துகளைக்கீழே தருகின்றேன்:
1. அண்மையில் தலைப்பில்லாமல் எழுதியிருந்த அவரது கவிதைக்கு 'அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்...' என்று தலைப்பிட்டுப் பிரசுரித்திருந்தேன். அதற்காகத்தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்த நன்றியே கீழுள்ளது.
Thamilini Jayakumaran September 20 at 10:34am : எனது கவிதைக்கு நல்லதொரு தலைப்பைத் தந்த பதிவுகள் ஆசிரியர் திரு, வ,ந,கிரிதரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..
இது போல் அவரது 'மழைக்கால இரவு' என்னும் சிறுகதையினைப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்து எழுதிய விமர்சனக்குறிப்புகள் பற்றித்தனது முகநூல் பக்கத்தில் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருந்தார்:
Thamilini Jayakumaran shared your photo. May 30 : ‘மழைக்கால இரவு’ என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையிலிருந்து அர்த்தம்பொதிந்த அருமையான கவிதையொன்றினை கிரிதரன் நவரத்னம் யாத்திருக்கிறார். உண்மையில் பாடசாலை நாட்களிலிருந்தே எனக்கு கதை எழுதுவது விருப்பமானது. கடந்த காலங்களிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய கதைகளை வெவ்வேறு பெயர்களில் எழுதியிருக்கிறேன். இப்போது அவை பதிவாக இல்லை. எப்படியிருப்பினும் ஒரு அடை மழைக்கால இரவில் நடந்த யுத்தம் பற்றிய கதையை ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தது மட்டுமன்றி, சிறந்த விமர்சனத்தையும் முன் வைத்த அவரது இலக்கிய பற்றுக்கும் சேவைக்கும், புதிய படைப்பாளிகளை உருவாக்குவதில் காட்டும் ஆர்வத்திற்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றி.
மேலும் பதிவுகளில் வெளியான சிறுகதைக்குரிய இணைப்பினைத் தனது முகநூல் பக்கத்தில் பிரசுரித்துப்பின்வருமாறும் குறிப்பிட்டிருந்தார்:
Thamilini Jayakumaran May 21: ‘மழைக்கால இரவு‘ என்ற எனது சிறுகதையை நல்லதொரு அறிமுகத்துடன் பதிவுகள் இணைய இதழில் பிரசுரம் செய்த ஆசிரியர் வ.ந. கிரிதரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். அத்துடன் இந்த சிறுகதை பற்றிய கருத்துக்களையும் நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி.
2. தனது படைப்புகள் சம்பந்தமாக என்னுடன் தொடர்பு கொண்டபோது பரிமாறிக்கொண்ட கருத்துகள்:
May 18 Giritharan Navaratnam 5/18, 6:09am
//மீண்டெழுந்த பிணங்களோ இன்னமும் மூச்சிழுத்துக்கிடக்கிறது.//
என்றிருப்பதை
மீண்டெழுந்த பிணங்களோ இன்னமும் மூச்சிழுத்துக்கிடக்கின்றன.
என்று மாற்றி விடுங்கள். மீண்டெழுந்த பிணங்கள் பன்மையென்பதால் மூச்சிழுத்துக்கிடக்கின்றன என்று வருவது பொருத்தமே.
Thamilini Jayakumaran 5/18, 7:25am
ஒ... மன்னிக்கவும் நான் அத்தவறைக்கவனிக்கவில்லை. உடனே சரி செய்கிறேன் மிக்க நன்றி.
Giritharan Navaratnam 5/18, 7:56am
இதுபோல் துளி 02 கவிதையில் வரும் வரிகளையும்
//கட்டளைகள் பறக்கின்றன.
காதோரம் பொருத்திய//
//ஊரும் உறவும் சொந்த
பேரும் கூட
நீங்கிப்போயிருந்தன//
என்று மாற்றி விடுங்கள். இவை போன்ற தவறுகள் பழக்கதோசத்தில் வருபவை. பல புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கவிதைகளில் கூட இவை போன்ற தவறுகளைக் காண முடியும்.
Thamilini Jayakumaran 5/18, 9:59am
Ok sure thank you very much for your advice
Thamilini Jayakumaran 5/20, 12:19am
வணக்கம் பதிவுகள் இணையதளத்தில் எனது இரு கவிதைகளையும் இடம்பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி. உங்களது ஊக்குவிப்பு எனக்கு உற்சாகமூட்டுவதாக உள்ளது.
Giritharan Navaratnam 5/20, 12:24am
உங்கள் படைப்புகளைப் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பி வையுங்கள். மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Thamilini Jayakumaran 5/20, 12:25am
சிறுகதை ஒன்று அனுப்பி வைக்கிறேன். மிக்க நன்றி.
Thamilini Jayakumaran 5/20, 1:58pm
சிறுகதை அனுப்பியுள்ளேன். தங்களது பார்வைக்கு தரமானதாக இருப்பின் பிரசுரிக்கவும். நன்றி
Giritharan Navaratnam 5/20, 6:16pm
சிறுகதை எதுவும் வரவில்லை. எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினீர்கள்?
Thamilini Jayakumaran 5/21, 12:17am
தாங்கள் உள் பெட்டியில் குறிப்பிட்டிருந்த மின்னஞ்சல் முகவரிக்குத்தான் அனுப்பியிருந்தேன்.Gmail முகவரியிலிருந்து வேறானவைகளுக்கு அனுப்பும்போது சிலவேளைகளில் இப்படியாகி விடுகிறது. மீண்டும் முயற்சிக்கிறேன். நன்றி
Giritharan Navaratnam 5/21, 2:13am
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் முகவரிக்கு அனுப்புங்கள். இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் முகவரியில் vngற்குப் பிறகு _ இருப்பதைத் தட்டச்சு செய்ய மறந்து விட்டீர்களோ தெரியவில்லை.
Thamilini Jayakumaran 5/21, 2:26am
மீண்டும் அனுப்பியுள்ளேன்.
Giritharan Navaratnam 7/7, 11:41pm
வணக்கம் தமிழினி, உங்கள் படைப்புகளை 'பதிவுகள்' இணைய இதழில் மீள்பிரசுரம் செய்வதையிட்டு தங்களுக்கு ஆட்சேபணையேதுமுண்டா?
Thamilini Jayakumaran 7/7, 11:52pm
வணக்கம் கிரிதரன் அண்ணா எனக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை. உங்களது விமர்சனங்கள் எனக்கு உற்சாகமளிப்பவை நன்றி.
Giritharan Navaratnam 7/8, 12:19am
நன்றி தமிழினி. உங்கள் எழுத்தில் சிறப்புண்டு. தொடர்ந்து எழுதுங்கள்; வாசிக்கக்காத்திருக்கின்றோம்.
Thamilini Jayakumaran 7/8, 12:21am
மிகவும் நன்றி, நிறைய விடயங்களை எழுதுவதற்கு விருப்பமுண்டு, உடல்நிலையும் காலமும் இடமளித்தால் நிச்சயம் எழுதுவேன்.
7/23, 7:26am Thamilini Jayakumaran
வணக்கம், தங்களது ஈமெயில் முகவரிக்கு எனது சிறுகதை ஒன்றை அனுப்பியுள்ளேன். தரமானதாக இருந்தால் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளவும். நன்றி
Thamilini Jayakumaran 9/20, 7:54am
வணக்கம், உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. மேலும் கவிதையின் நான்காவது வரி‘குடி பெயர்ந்தலையும்’ என்பது தங்களது பதிவுகளில் தவறவிடப்பட்டுவிட்டது என நினைக்கிறேன். நன்றி
Giritharan Navaratnam 9/20, 6:57pm
வணக்கம் தமிழினி, தவறினைச்சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.
கவிதை: அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.
- தமிழினி ஜெயக்குமாரன் -
போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது.
வெடியதிர்வுகளின் பேரோசைகளால
குடி பெயர்ந்தலையும்’
யானைக் கூட்டங்களாக
இருண்ட முகில்களும் கூட
மருண்டு போய்க் கிடந்தன.
பகலை விழுங்கித் தீர்த்திருந்த
இரவின் கர்ஜனை
பயங்கரமாயிருந்தது
அம்பகாமப் பெருங்காட்டின்
போர்க்களத்தில்.
காதலுறச் செய்யும்
கானகத்தின் வனப்பை
கடைவாயில் செருகிய
வெற்றிலைக் குதப்பலாக
சப்பிக்கொண்டிருந்தது
யுத்தம்.
மீளாப் பயணம் சென்ற தோழி
விடைபெறக் கை பற்றி
திணித்துச் சென்ற கடதாசி
செய்தி சொன்னது..
காலமாவதற்காக காத்திருக்கும்
அம்மாவின் ஆத்மா
கடைக் குட்டியவளின்
கையாலே ஒரு துளி
உயிர்த் தண்ணிக்காகத்
துடிக்கிறதாம்.
எவருக்கும் தெரியாமல்
என்னிடத்தில் குமுறியவள்
விட்டுச் சென்ற
கண்ணீர்க் கடலின்
நெருப்பலைகளில்
நித்தமும்
கருகிக் கரைகிறது
நெஞ்சம்.
தனி மனித
உணர்ச்சிகளின் மீதேறி
எப்போதும்
உழுதபடியே செல்கின்றன
போரின்
நியாயச் சக்கரங்கள்.
அக்கணத்தில்
பிய்த்தெறியப்பட்டிருந்த
பச்சை மரங்களின்
இரத்த வீச்சத்தை
நுகர்ந்த வல்லுாறுகளின்
நீண்ட நாக்குகளில்
உமிழ்ந்து
பெருகுகிறது
வெற்றிப் பேராசை.