சாந்தி சச்சிதானந்தம் நாடறிந்த சமூக சேவையாளர்; எழுத்தாளர். விழுது அமைப்பின் ஸ்தாபகர். இலங்கையிலேயே தொடர்ந்தும் தங்கியிருந்து பெண்களின் உரிமைக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் போராடி வந்தவர். இவரை எனக்கு 1978இலிருந்து தெரியும். என்னுடன் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றவர். இவரது தந்தையார் சச்சிதானந்தம்தான் லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் 1970இல் நல்லூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர். சிறிது காலத்தின் முன்புதான் என் முகநூல் நண்பர்களிலொருவராக இணைந்து கொண்டார். இவரது திடீர் மறைவு யாரும் எதிர்பாராதது. நீண்ட நாள்களாக இவர் நோய்வாய்ப்பட்டிருந்த விடயமே இவரது மறைவினையொட்டி வெளியான செய்திகளின் வாயிலாகவே அறிந்துகொண்டேன். இவரது திடீர் மறைவானது பழைய நினைவுகள் சிலவற்றை அசைபோட வைத்துவிட்டது.
மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் எங்கள் வகுப்பில் இவர் ஒருவரே தமிழ்ப்பெண். மிகவும் துணிச்சல் மிக்கவர். மிகவும் இனிமையாகப்பாடும் குரல் வளம் மிக்கவர். மொறட்டுவைப்பல்கலைக்கழக நிகழ்வுகளில் தமிழ்த்திரைப்படப்பாடல்களைப்பாடி அனைவரையும் கவர்ந்திருக்கின்றார். பெண் உரிமை பற்றி அக்காலகட்டத்திலேயே தீவிரமாக வாதிடுவார். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தில் நான் இதழாசிரியர் குழுத்தலைவராக இருந்தபொழுது இவர் சங்கத்தின் உபதலைவராகக்கடமையாற்றினார்.
ஒருமுறை எம் வகுப்பைச்சேர்ந்த சிங்கள, தமிழ் மாணவர்கள் அனைவரும் 'மலைநாட்டிலிருந்த World's Endற்குச் சுற்றுலா சென்றிருந்தபொழுது இவரும் வந்திருந்தார். இவர் பொதுவாக மாணவர்களின் சுற்றுலாக்களுக்கு வருவதில்லை அந்த ஒரு சுற்றுலாவைத்தவிர.
அவ்வப்போது நாம் ஓய்வாகக்கூடியிருக்கும் வேளைகளில் மட்டக்களப்பைச்சேர்ந்த மோகன் அருளானந்தனையும், இவரையும் பாடல்களைப்பாடச்சொல்லி வற்புறுத்துவோம். 'அமுதைப்பொழியும் நிலவே' பாடலை மிகவும் இனிமையாகப்பாடுவார்.
இவரை நான் இறுதியாகச்சந்தித்தது 83 கலவரத்தைத்தொடர்ந்து தங்கியிருந்த சரஸ்வதி மண்டப அகதி முகாமில். மொறட்டுவைப்பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் அங்கு தொண்டர்களாகப்பணியாற்றிக்கொண்டிருந்தப்பொழுது ஓரிரு நாள்கள் அங்கு வந்து தன் கணவர் மனோ ராஜசிங்கத்துடன் தங்கியிருந்தார். அச்சமயத்தில் என்னை அவர் கணவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மிகுந்த ஆளுமை பெற்றிருந்தவர் சாந்தி சச்சிதானந்தம். எழுத்துத்துறையிலேயே மிகவும் தீவிரமாக ஈடுபடுவார் என்று ஒரு சமயம் எண்ணியிருந்தேன். ஆனால் இவரோ எழுத்துடன் மனித உரிமைகளுக்காகப்போராடுமொரு செயல் வீரராகவும் தன்னை உருவாக்கி மக்களுக்காகத்தன் வாழ்வினை அர்ப்பணித்துக்கொண்டார். விழுது அமைப்பின் மூலம் இவர் ஆற்றிய பணிகளை. வெளியிட்ட சஞ்சிகைகள், செய்திக்கடிதங்கள் போன்ற விபரங்களை விழுது அமைப்பின் இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
சாந்தி சச்சிதானந்தம் எழுதிய 'சரிநிகர் சமானமாக', 'பெண்களின் சுவடுகளில்..'. மற்றும் 'வறுமையின் பிரபுக்கள்' ஆகிய மூன்று நூல்களை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம்.
இவரது மறைவையொட்டி வெளியாகும் செய்திகளிலிருந்து இவரது பரந்துபட்ட பங்களிப்பை அறிய முடிகின்றது. சமூக, அரசியலின் பல்வேறு தளங்களிலும் இவர் ஆற்றிய பங்களிப்பை அவை வெளிப்படுத்துகின்றன. இலங்கையின் அனைத்துச் சமூகத்தினர் மத்தியிலும் நன்கறியப்பட்ட, நன்கு மதிக்கப்பட்ட இவரது திடீர் மறைவானது மிகப்பெரிய இழப்பாகும். இவரது எழுத்துகளும், ஆற்றிய மனித உரிமைச்செயற்பாடுகளும், நிறுவிய அமைப்புகளும் இவரை வரலாற்றில் நிலை நிறுத்தி வைக்கும் தன்மை மிக்கவை.