ஈழத்துத்தமிழ்க்கவிதை வாசிப்போமா? (1) : மூட்டைபூச்சியினைத்தூது விடும் கவிஞன்!
தமிழ்க்கவிஞர்கள் அன்னத்தைத் தூது விட்டதைப் படித்திருக்கின்றோம். வெண்ணிலாவை, வெண்முகிலை, நதி அலையினை, புறாவினையெல்லாம் தூது விட்டிருப்பதை அறிந்திருக்கின்றோம். ஆனால் மூட்டைப் பூச்சியினை யாராவது தூதனுப்பியிருப்பதைப் பார்த்திருக்கின்றீர்களா? நம்மூர்க்கவிஞனொருவன், மீன்பாடும் தேனாட்டுக் கவிஞனொருவன் மூட்டைப்பூச்சியினைத்தூதுவிட்டுக் கவி பாடியிருக்கின்றான். அவன் வேறு யாருமல்லன். அமரக் கவிஞன் இராஜபாரதிதான் அவன். 'ஓடையிலே என் சாம்பர் ஓடும்போதும், ஓண்தமிழே சலசலத்து ஓட வேண்டும்' என்று பாடிய அதே கவிஞன் இராஜபாரதிதான் அவன்.
அவன் யாருக்கு மூட்டைப்பூச்சியினைத்தூதனுப்புகின்றான்? தன் அன்பு மனையாளுக்குத்தான் தூதனுப்புகின்றான். 'நெட்டுயிர்த்து நள்ளிரவில் நீள் குறட்டை விட்டுத்தூங்குகின்றாள் அவன் மனைவி. அவளைத்தட்டியெழுப்பி தான் காத்துக்கொண்டிருப்பதைக்கூறும்படி மூட்டைப்பூச்சியிடம் கூறுகின்றான் அவன். 'கட்டில் இடுக்கில் , கதவோர மூலைக்குள் ஒட்டி மறைந்து ஊர்ந்திடும் வட்ட உடல்கொண்ட பெட்டகமான' மூட்டைப்பூச்சியிடம்தான்
"நெட்டுயிர்த்தே நள்ளிருட்டில் நீளக் குறட்டைவிடும்
பெட்டையவள் காதிற்போய்ப் பேசு." என்று கூறுகின்றான்.
"என்னைக்கடித்து எடுத்த இரத்தத்தை , பொன்னைப்பழிக்கும் அவள் பூவுடலில் , உன் சின்னக்கொடுக்காலே குற்றி 'உனக்குக் கொடுந்துயரத் தூங்கல் அடுக்காதென்று அறை'" என்று மூட்டைப்பூச்சியிடம் கூறும் கவிஞன் மேலும் கூறுவான்:
'அவள் மின்னுடலில் என் உதிரம் பரவியதும்
"கண்ணாளன்
தன்னுடைய எண்ணம் தலைக்கேறும்
வண்ணமகள்
நெஞ்சிற் கடித்தே நினைப்பூட்டி அன்னானைக்
கொஞ்சப்போ என்றிடித்துக் கூறு." என்று கூறுகின்றான்.
இவ்விதமாகத் தொடர்ந்தும் மூட்டைப்பூச்சியிடம் வேண்டிக்கொள்ளும் கவிஞன் 'கொட்டும் பனியிலென்னை விட்டுத் துயில்பவளை விட்டு மாமா, மாமியரைத் தொட்டாயேல் கெட்டுவிடும் எம் கூத்து. கேட்டுக்கொண்டாயாயன்றோ. எட்டி நட' என்றும் எச்சரிக்கவும் செய்கின்றான்.
இது போன்ற கற்பனைச்சிறப்பும், மொழி வளமும் மிக்க கவிதைகளை இன்று வெளியாகும் எத்தனை நவீனக்கவிதைகளில் காணமுடிகின்றது. கவிதையின் பரிணாம வடிவமான நவீன கவிதையின் பண்பினை உணராமல் வெறும் படிமங்களாலும், மொழி வளமற்ற சொற்களாலும் நிறைத்து கவிதைகளை உற்பத்திசெய்கின்றார்கள் பலர். அதே சமயம் பிரமிள், கவிஞர் விக்கிரமாதித்தயன், தேவதச்சன், கவிஞர் சேரன், கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், எம்.ஏ.நுஃமான் போன்ற கவிஞர்கள் பலர் நவீன கவிதைக்கு வளம் சேர்த்து வருவதையும் குறிப்பிடத்தான் வேண்டும். கவிதையில் மொழியினைக் கையாள்வதில் இவர்களைப்போன்ற கவிஞர்களிடம் இளங்கவிஞர்கள் கற்க வேண்டியவை நிறைய உள. அதே சமயம் மரபுக்கவிஞர்கள் பலரிடம் கற்பனைச்சிறப்பு மிக்க கவிதைகள் பலவற்றைப்படைப்பது பற்றிய அறிவினைப்பெற முடியும். ஆனால் பல நவீன கவிஞர்களுக்கு மரபுக்கவிதைகளில் எந்தவிதப்பரிச்சயமுமில்லை. அதனால்தான் மொழிச்சிறப்பற்ற, கற்பனைச்சிறப்பற்ற, ஒரு சில படிமங்கள் நிறைந்த சொற்கூட்டங்களைக்கவிதைகளென்ற பெயரில் எழுதித்தள்ளுகின்றார்கள். அடிப்படை இலக்கணப்பிழைகள் மலிந்த பல நவீனக்கவிதைகளை வாசிக்கும்போது இவ்விதம்தான் எண்ணத்தோன்றுகிறது.
மூட்டை விடு தூது!
- இராஜபாரதி -
கட்டில் இடுக்கிற் கதவோர மூலைக்குள்
ஒட்டி மறைந்தூரும் வட்ட உடற்
பெட்டகமே
நெட்டுயிர்த்தே நள்ளிருட்டில் நீளக் குறட்டைவிடும்
பெட்டையவள் காதிற்போய்ப் பேசு.
என்னைக் கடித்தே எடுத்த இரத்தத்தைப்
பொன்னைப் பழித்தாள்தன் பூவுடலில்
சின்னக்
கொடுக்காலே குற்றிக் கொடுத்தயரத் தூங்கல்
அடுக்கா துனக்கென் றறை.
மின்னுடலில் என் உதிரம் மேவியதும் கண்ணாளன்
தன்னுடைய எண்ணம் தலைக்கேறும்
வண்ணமகள்
நெஞ்சிற் கடித்தே நினைப்பூட்டி அன்னானைக்
கொஞ்சப்போ என்றிடித்துக் கூறு.
கிள்ளாமற் கிள்ளு; கிளுகிளுப்பைக் பட்டாடை
உள்ளாலே ஊட்டின் உறங்காள்அக்
கள்ளி;கடை
வாயில் திறந்தே வருவாள் எனைத்தேடி!
போஅப்பா, ஊராமற் போ!
கொட்டும் பனியிலெனை விட்டுத் துயில்வாளை
மட்டும்; மாமா மாமியரைத்
தொட்டாயேல்
கெட்டுவிடும் எம்கூத்து! கேட்டுக்கொண் டாயன்றோ
எட்டிநட தூதுக் கியைந்து.
நன்றி: சிலோன் விஜயேந்திரன் தொகுப்பில் வெளியான 'கவிதைக்கனிகள்' நூலிலுள்ள கவிதைகளிலொன்று 'மூட்டை விடு தூது!'
கருந்துளைகள் பற்றி ஹார்கிங்!
//Prof Hawking said there is "a way out" of black holes, adding that he has discovered a mechanism "by which information is returned out of the black hole". He said information lost in a black hole may be translated into a kind of "hologram", or break out into an alternative universe//
பேராசிரியர் ஸ்டீபன் ஹார்கிங் 'கருந்துளைகள்' (Black Holes) பற்றி கூறிய இரு கருத்துகள் என்னைக் கவர்ந்தன. இவற்றிலொன்றான 'கருந்துளைகள்' இன்னுமொரு பிரபஞ்சத்திற்கான வழியாக இருக்கக்கூடுமென்பது ஏற்கனவே பல வானியற்பியல் ஆய்வாளர்களால் அவர்களது நூல்கள் பலவற்றில் எதிர்வு கூறப்பட்டதொன்று. ஆனால் அடுத்து அவர் கூறியிருப்பதை இப்பொழுதுதான் நான் முதல் முறையாகக்கேட்கின்றேன். அது: 'கருந்துளை'களினுள் இழக்கப்படும் தகவலானது ஒரு விதமான 'ஹோலோகிராம்' ஆக உருமாற்றம் அடையலாம் என்பதும், 'கருந்துளைக'ளினுள் இழக்கப்படும் தகவலானது அதிலிருந்து வெளியேறும் வகையிலான பொறிமுறையினை தான் கண்டுபிடித்துள்ளதாக அவர் கூறியிருப்பதுமே. ஏற்கனவே அவர் கருந்துளைகளின் மேற்பரப்பிலிருந்து கதிரியக்கம் வெளியேற வாய்ப்புள்ளதாகத் தனது ஆய்வுகளிலிருந்து கூறியிருக்கின்றார்; எழுதியிருக்கின்றார். ஆனால் கருந்துளைகளினுள்ளிருந்து தகவல்கள் வெளியேற வாய்ப்புள்ளதாக அவர் கூறியிருப்பது இதுவே முதல் முறையென்று எண்ணுகின்றேன்.
'கருந்துளை'களினுள் இழக்கப்படும் தகவலானது ஒரு விதமான 'ஹோலோகிராம்' ஆக உருமாற்றம் அடையலாம் என்றால் ஒருவேளை நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம்கூட அந்த வகையான 'ஹொலோகிராம்'களிலொன்றாக இருக்கலாமோ என்ற சிந்தனையும் எழுகிறது. இன்னுமொரு பிரபஞ்சம் அதன் கருந்தளையினுள் இழக்கப்பட்டு, அதற்கீடான 'ஹோலோகிராம்' பிரபஞ்சமாக உருவான பிரபஞ்சமொன்றில்தான் நாம் வாழுகின்றோமோ?
இவ்விதமான உடல் நிலையிலும், தன் மூளையின் திறனை மட்டுமே துணையாகக்கொண்டு பேராசிரியர் ஸ்டீபன் ஹார்கிங் ஆற்றிவரும் சாதனைகள் எப்பொழுதும் என்னைப்பிரமிக்க வைப்பவை.
முழுக்கட்டுரையையும் வாசிக்கக் கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
http://news.sky.com/…/hawking-black-holes-may-lead-to-other…
ஓடையிலே என் சாம்பர் கரையும் போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓய வேண்டும்.
இந்த வரிகளைப் பார்த்ததும் என் மனதிலொரு காட்சி விரியும். சிறுவனான என்னைக் கைப்பிடித்து அப்பா வவுனியா நகரசபை மைதானத்துக்குக் கூட்டிச்செல்கின்ற காட்சிதான் அது. வவுனியா வேட்பாளராகப் போட்டியிட்ட செல்லத்தம்புவை ஆதரித்து நடைபெற்ற தமிழரசுக்கட்சியினரின் கூட்டம். என் வாழ்க்கையில் முதல் முறையாக அரசியல் கூட்டமொன்றுக்குச் செல்வது அதுதான் முதல் முறை.
அப்பொழுதே குடுகுடு கிழவராகக் காட்சியளித்த தந்தை செல்வாவைத்தாங்கிப்பிடித்தபடி அருகில் 'தானைத்தலைவர்' அமிர்தலிங்கம் காட்சியளித்தார். திருமதி அமிர்தலிங்கத்தின் தமிழ் வாழ்த்துப்பாடலுடன் கூட்டம் ஆரம்பமாகியது. அக்கூட்டத்தில் பங்குபற்றி அன்று என்னைக் கவர்ந்த இன்னுமொருவர் ஆலாலசுந்தரம். அவரது கிண்டலும் , சுவையும் மிக்க உரை கேட்டவுடனேயே அனைவரையும் கவர்ந்துவிடும் தன்மை மிக்கது.
அந்தக்கூட்டத்துடன் அக்காலத்தில் என் அபிமானத்துக்குரிய அரசியல் தலைவர்களாகத் தமிழரசுக்கட்சியினர் ஆகிவிட்டனர்.
அந்தக் கூட்டத்தின் இறுதியில் நான் என்னிடமிருந்த 'ஆட்டோகிராப்'பில் மேடையின் பின்னாலிருந்து திருமதி அமிர்தலிங்கத்திடம் கையெழுத்தினை நாடியபோது அவர் அதில் எழுதிய வரிகள்தாம் மேலுள்ள வரிகள். என்னைப்போல் மேலும் பலர் அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் மாணவர்களாகிய நாம் 'ஆட்டோகிராப்'பில் வருடாவருடம் வகுப்பு மாறிச்செல்லும்போதெல்லாம் கையெழுத்து வாங்குவது வழக்கம்.
நீண்ட காலமாக என்னிடமிருந்த அந்த 'ஆட்டோகிராப்' 83ற்குப்பின் தோன்றிய அரசியற் சூழலில் தொலைந்துபோன எனது நூல்களுடன் தொலைந்து போனது.
என்னை நீண்ட காலமாக ஆட்கொண்டிருந்த கேள்வியொன்று திருமதி மங்கையர்க்கரசி எழுதிய அந்த வரிகளுக்குச்சொந்தக்காரரான கவிஞர் யார் என்பதுதான். அண்மையில்தான் அதற்கான விடை கிடைத்தது. சிலோன் விஜயேந்திரன் தொகுப்பில் வெளியான 'ஈழத்துக்கவிதைக்கனிகள்' தொகுப்பில் அந்த விடையிருந்தது, அதனை எழுதியவர் அமரர் ராஜபாரதி (மட்டக்களப்பு) அவர்கள். 'தமிழ்த்தாகம்; என்ற தலைப்பிலுள்ள அந்தக் கவிதையின் முழு வடிவமும் கீழே:
கோடையிலே எரிவெயிலிற் காயும்போது
கொப்பளிக்கும் தமிழ்வெள்ளம் தோயவேண்டும்.
வாடைதரு மூதலிலே நடுங்கும் போது
வயந்ததமிழ்க் கதிரென்னைக் காயவேண்டும்.
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழுமோசை கேட்கவேண்டும்.
ஓடையிலே என்சாம்பர் கரையும் போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓயவேண்டும்.
மேற்படி தொகுப்பிலுள்ள க.சச்சிதானந்தனின் 'தமிழ்க்கவிப்பித்து' என்னும் கவிதையின் இறுதியும் இதனை ஒத்ததாக அமைந்திருக்கின்றது. அது கீழே:
சாவிற் தமிழ் படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்,
என்னதான் சொல்லுங்கள் மொழிவளமும், கற்பனைச்சிறப்பும் மிக்க மரபுக்கவிதைகளை வாசிப்பதில் அடையும் இன்பமே தனி.
மேற்படி கவிஞர் ராஜபாரதியின் கவிதை வரிகள் ஏற்படுத்திய நனவிடை தோய்தலிது. நீங்களும்தாம் சிறிது தோயுங்களேன்.
ஒரு கணத்து மின்னலும், அரைக்கணத்து மின்னலும் இரு கவிஞர்களும்.... '
ஒரே கருவை வைத்துப் பல கவிஞர்கள் கவிதைகளை அவ்வப்போது எழுதுவதுண்டு. அந்த வகையில் அண்மையில் எம்.ஏ. நுஃமான் எழுதிய 'அரைக்கண நேரத்து மின்னல் எனினும்' என்னும் கவிதையை வாசித்தபோது கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி) எழுதியிருந்த ஆரம்பகாலக்கவிதையொன்றின் ஞாபகம் வந்தது. முதலில் நுஃமானின் கவிதையைச்சிறிது பார்ப்போம்.
நட்சத்திரங்களற்ற வானம் இருண்டு கிடக்கிறது. செல்லும் பாதையும் தெரியவில்லை. ஆயிரக்கணக்கில் மின்மினிப்பூச்சிகளின் ஒளியும் போதவில்லை. ஆனால் அரைக்கணமே தோன்றி மறைந்த மின்னலில் செல்ல வேண்டிய பாதை தெரிகிறது. அவ்விதம் வழி தெரிகையில் மீண்டும் இருள் கவியும். இருந்தபோதும் மீண்டும் ஒரு மின்னல் அடிக்கும். வழி தெரியும்.
ஆயிரக்கணக்கான குருட்டு விளக்கொளி மின்மினிப்பூச்சிகள் தராத ஒளியை அரைக்கணத்து மின்னல் தரும். 'அரைக்கண நேரத்து மின்னல் எனினும், அது பெரிதே.' என்கின்றார் கவிஞர் (முழுக்கவிதையினை இப்பதிவின் கீழ் வாசிக்கலாம்)..
கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமியின்) 'சிந்தனையும் மின்னொளியும்' அவரது ஆரம்பகாலத்துக் கவிதைகளிலொன்று. அவருக்கு மிகவும் பிடித்த கவிதைகளிலொன்று. அவரது வாழ்க்கைப்பாதையினை அர்த்தமுள்ளதாக வழிகாட்டும் கவிதை. அது கூறும் பொருள் என்ன? அர்த்த ராத்திரி வேளை. உலகமெல்லாம் ஆழ உறங்கிக்கிடக்கிறது. ஊளையிடும் நரியைப்போல் பெருங்காற்று உதறுகிறது. வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க மோனத்தை வெட்டி இடியொன்று மோதுகிறது. அப்போது கணப்பொழுதில் மின்னலொன்று தோன்றி மறைகிறது. கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னலின் செய்கையான கவிஞரின் சிந்தனைக்குதிரையைத்தட்டி விடுகிறது.
"மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?' என்று கவிஞரின் சிந்தனை விரிகின்றது.
"வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்" என்று கவிஞரின் சிந்தனை மேலும் விரிவடைகின்றது.
கணப்பொழுதே வாழ்ந்தாலும் உலகுக்கு ஒளிதந்து மறையும் மின்னலைப்போல் மானுடராகிய நம் வாழ்வும் இருக்க வேண்டும் என்னும் சிந்தனையைக் கவீந்திரனின் கவிதை வெளிப்படுத்துகிறது. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளிலொன்று. இது பற்றி அ.ந.க தனது 'நான் ஏன் எழுதுகின்றேன்' என்னும் கட்டுரையில் பின்வருமாறு கூறுவார்:
"இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம். இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை,வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?"
அ.ந.கவின் கவிதையில் கணப்பொழுதில் தோன்றி ஒளிர்ந்து மறையும் மின்னலானது மானுட வாழ்வு எவ்விதம் இருக்க வேண்டுமென்பதைக் கவிஞருக்கு வெளிப்படுத்துகின்றது. இதை இன்னுமொரு விதத்தில் கூறுவதானால் செல்ல வேண்டிய பாதையினைக்காட்டுகிறது என்றும் கூறலாம். பேராசிரியர் நுஃமானின் கவிதையிலோ ;அரைக்கணத்தில் ஒளிர்ந்து மறையும் மின்னலின் வெளிச்சத்தில் செல்ல வேண்டிய பாதை தெரிகிறது.
"இருட்டிலே நாங்கள்
வழி நடக்கின்றோம்.
இதோ எரியும்
குருட்டு விளக்கொளி
மின்மினிப்பூச்சிகள்
வழி துலக்கி
வரட்டும் என் இன்னும் காத்திருப்போமா?
வழி நடப்போம்;
அரைக்கண் நேரத்து மின்னல் எனினும்\
அது பெரிதே.'
அ.ந.க.வின் கவிதை மின்னலைப்போல் ஒளிர்ந்து வாழ வேண்டுமென்று கூறினால், ஒரு விதத்தில் மானுட வாழ்வானது செல்ல வேண்டிய பாதையினைக்காட்டினால்., நுஃமானின் கவிதையோ
இருண்டு கிடக்கும் மானுட இருப்பில் செல்ல வேண்டிய வழியினைக்காட்டுவதற்கு அரைக்கணத்து மின்னலின் ஒளிர்வானது உதவுகின்றது என்று கூறுகிறது. ஆழ்ந்து நோக்கினால் இரண்டுமே ஒரே கருத்தையே மையமாகக்கொண்டவையென்பேன். ஒரு கணத்து மின்னலும், அரைக்கணத்து மின்னலும் கவிஞர்கள் இருவரது சிந்தனையிலும் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவான கவிதைகளிவை. அ.ந.க.வின் கவிதை ஏற்படுத்திய மறைமுகத்தாக்கத்தின் விளைவாக நுஃமானின் கவிதை உருவாகியதா அல்லது அ.ந.க.வின் கவிதையின் பாதிப்பில்லாமல் நுஃமானின் சிந்தையில் உருவான கவிதை இதுவா என்பதை அவரே அறிவார்.
சிந்தனையும் மின்னொளியும்!
- அறிஞர் அ.ந.கந்தசாமி -
சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ? -
*அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. ஈழகேசரியில் வெளிவந்தது.
எம்.ஏ.நுஃமான் : அரைக்கண நேரத்து மின்னல் எனினும்
வான் இருண்டுள்ளது.
நட்சத்திரங்கள் மறைந்தன.
ஓ,
நான் போகும் பாதை இதுவா?
இருட்டின் நடுவில் ஏதும்
தோன்றவே இல்லை.
எது என் திசை?
நீள் தொலைவில் அதோ
வான் இருண்டுள்ளது;
நட்சத்திரங்கள் மறைந்துளவே.
இன்னும் என் வண்டி வரவில்லை.
ஆயின், இருட்டில் அதோ
மின்மினிப்பூச்சிகள் ஆயிரம்
ஏற்றும் விளக்கொளியில்
என் வழி கண்டு நடத்தல் இயலுமா?
இல்லை; ஒரு
மின்னல் அரைக்கணம் ஏனும்
ஒளிர்ந்தால் மிக உதவும்.
ஆம், இதோ மின்னல் அடித்தது;
தூர அகன்று செலும்
நாம் போகும் பாதைகள்
நன்கு தெரிந்தன;
நான் நடப்பேன்.
போம் வழி நன்கு புலப்படும்போதில்
இருள் கவியும்,
ஆம், ஒரு மின்னல் அடிக்கும்
பிறகும் அது தெரியும்.
இருட்டிலே நாங்கள்
வழி நடக்கின்றோம்.
இதோ எரியும்
குருட்டு விளக்கொளி
மின்மினிப்பூச்சிகள்
வழி துலக்கி
வரட்டும் என் இன்னும் காத்திருப்போமா?
வழி நடப்போம்;
அரைக்கண் நேரத்து மின்னல் எனினும்\
அது பெரிதே.
(சிலோன் விஜயேந்திரன் தொகுத்த 'கவிதைக்கனிகள்' நூலிலிருந்து)
* எனது முகநூல் குறிப்புகளிலிருந்து.
பதிப்பகத்தார் விடும் தவறுகள் பற்றி....
எழுத்தாளர் முல்லை அமுதன் தொகுத்த 'இலக்கியப்பூக்கள் தொகுதி இரண்டு' இன்று கிடைத்தது. மிகவும் நேர்த்தியான, அழகான வடிவமைப்பில் நூல் வெளிவந்திருக்கின்றது. முல்லை அமுதனின் தொகுப்பில் வெளிவந்திருக்கும் இலக்கியப்பூக்கள் தொகுதிகள் இரண்டும் ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆவணச்சிறப்பு மிக்கவை. இவ்விதமான தொகுதிகளைத் தொகுத்தளித்து வழங்கிய முல்லை அமுதன் பாராட்டுக்குரியவர். வாழ்த்துகள்.
இத்தொகுப்புகளைக்கொண்டு வருவதற்காக அவர் கடந்த சில வருடங்களாக அடைந்த சிரமங்களை, தேடல்களை நான் அறிவேன். இவ்விதமாகச் சிரமங்களுக்கு மத்தியில் வெளிவரும் நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் எந்தவிதத்தகவற் பிழைகளையும் தம் பொறுப்பின்மையால் விடக்கூடாது. அவ்விதம் விடுவது தொகுப்புகளை வெளிக்கொணரும் எழுத்தாளரின் முயற்சிக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துவிடுமென்பதைப் பதிப்பகங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். செய்யும் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். இவ்விதம் கூறுவதற்கொரு காரணமுள்ளது. அது: நூலின் கட்டுரைகளை எழுதியவர்கள் பற்றிய விபரங்கள் நூலின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் என்னைப்பற்றிய விபரத்தில் சில தவறுகள் ஏற்பட்டிருப்பதை அவதானித்தேன் (இத்தொகுப்பில் தேவன் -யாழ்ப்பாணம் பற்றிய எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது). தொகுப்பிலுள்ள இன்னுமொரு கட்டுரையாளரான சு.சா.அரவிந்தனின் புகைப்படத்தையே என்னைப்பற்றிய விபரத்திலும் பிரசுரித்துள்ளார்கள். நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகக்கட்டடக்கலை பட்டதாரி. அதற்குப்பதிலாக மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியல் பட்டத்தைப்பெற்றவராகக் குறிப்பிட்டுள்ளார்கள். இத்தவறுகள் பதிப்பகத்தாரின் தவறுகள். இலக்கியப்பூக்கள் தொகுதி ஒன்றிலும் என்னைப்பற்றிய சரியான விபரங்கள் உள்ளன. அவ்விதமிருக்கையில் யார் இவ்விதம் தகவல்களைப்பிழையாக எழுதியது, புகைப்படத்தைத்தவறாகப் பிரசுரித்தது என்பதைத்தொகுப்பாளர் முல்லை அமுதன் நூலைப் பதிப்பித்த 'காந்தளகம்' பதிப்பகத்தாரிடமிருந்து அறிய வேண்டும்.
மேலும் இலக்கியப்பூக்கள் இரு தொகுதிகளுமே வேறு வேறானவையல்ல. ஒரு நூலின் இரு பாகங்கள். அவ்விதமிருக்கையில் இரு பாகங்களிலும் கட்டுரைகளை எழுதிய எழுத்தாளர்களின் விபரங்கள் ஒன்றாகவே இருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறாக இருத்தல் சிறப்புக்குரியதல்ல.
இவ்விதமான தொகுப்பு நூல்கள் அமரர்களான எழுத்தாளர்களைப்பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துவதுடன் , அவ்வெழுத்தாளர்களைப் பற்றி எழுதிய எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களையும் ஆவணப்படுத்துகின்றன. அதனால் இவ்விதமான பதிப்பகத்தாரின் தவறுகள் ஏற்படுவது பாரதூரமான தகவற் பிழைகளுக்குக் காரணமாகிவிடுகின்றன.
இச்சிறுதவறினால் நூலின் சிறப்போ, முக்கியத்துவமோ குறைந்து விடவில்லையென்பதையும் கூற வேண்டும். காந்தளகம் பதிப்பகத்தாரின் தரமான அச்சமைப்பும் பாராட்டுதற்குரியது. எதிர்காலத்தில் இவை போன்ற தவறுகள் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதற்காகவே இப்பதிவினை இடவேண்டியவனாகின்றேன்.