இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையில் நிலவும் முரண்பாடுகள் அண்மைக்காலத்தில் ஏற்பட்டவையல்ல. இரண்டாயிரம் வருடங்களுக்கும் அதிகமானவை. குடங்கிப் படுத்திருக்கும் சிறுவன் துட்டகெமுனு அதற்குக் காரணமாகக் கூறுவான் " தெற்கில் கடலும், வடக்கில் தமிழரும் இருக்கையில் எவ்விதம் நீட்டி நிமிர்ந்து படுப்பது?" என்று. துட்டகெமுனுவை சிங்கள தேசிய விடுதலை வீரனாகச்சித்திரிக்கும் சிங்கள மக்களின் வரலாற்று நூல்கள் தமிழர்களை எதிரிகளாகவும் சித்திரிக்கும். குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழர்களைச் சிங்கள மக்களின் எதிரிகளாகச் சித்திரிக்கும் இவ்விதமான வரலாற்று நூல்கள் திருத்தி எழுதப்பட வேண்டியது அவசியம். டெறிக் த சில்வாவின் 'தொன்மம்' என்ற இந்தக் கவிதை அந்த வரலாற்றைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. [இங்குள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகள் சோ.பத்மநாதனின் 'தென்னிலங்கைக் கவிதை' நூலிலுள்ள மொழிபெயர்ப்புக்கவிதைகளாகும்.]
ஒரு பிள்ளையின் அச்சமாகிய
அந்தகாரத்தில்
பளபளக்கும் வாள்கள் தந்த
அழிவு எவ்வளவு?
ஆறாய் ஓடிய குருதி
எவ்வளவு?
என்று அந்தக்குழந்தையின் அச்சம் ஏற்படுத்திய அழிவுகளை எடுத்துக்காட்டுகின்றது.
கவிதை: தொன்மம்
ஆங்கில மூலம்: டெறிக் த சில்வா | தமிழ்: சோ.பத்மநாதன்
ஒரு புறம் ஊமைக்கடல்
மறுபுறம் ஆரவாரிக்கும் தமிழர்
இரு ஒலிகளாலும்
அச்சுறுத்தப்படும்
குழந்தை கெமுனு
எழுந்து வந்து
தன் பிறந்த நாட்டிலிருந்து
புரியாத மொழிபேசும் அந்நியனை
ஓட்டும்படி ஆணையிடும் குரல்களைக்
கேட்கிறான் அவன்
படுக்கையில் சுருண்டபடி
ஒரு பிள்ளையின் அச்சமாகிய
அந்தகாரத்தில்
பளபளக்கும் வாள்கள் தந்த
அழிவு எவ்வளவு?
ஆறாய் ஓடிய குருதி
எவ்வளவு?
உதய பிரசாந்த மெத்தகமவின் 'முன்னோர்' பெளத்த மதகுருமார்களால் புனையப்பட்ட வரலாற்றைக் கடுமையாகச்சாடும். சிங்கமென்ற விலங்குக்கும் வங்கத்து இளவரசிக்கும் பிறந்த பில்ளையான விஜயனின் வாரிசுகளாகச் சிங்கள இனத்தைக்குறிக்கும் வரலாற்றை எழுதிய துறவிகளைச் சாடும் உதய பிரசாந்த மெத்தகம 'உண்மையான விஞ்ஞான முறைப்படி வரலாற்றைத் திருப்பி எழுதும்' காலம் வந்துவிட்டது என்பார்"
"வரலாறு என்ற பெயரில் அவர்களால்
புனைகதை எழுதவே முடிந்தது." என்று சாடும் அவரது கவிதையான 'முன்னோர்'
"எல்லாப் பொய்களையும் புனைவுகளையும்
அவ்வேடுகளிலிருந்து வெளியேற்றும் காலம் வந்துள்ளது.
உண்மையான விஞ்ஞான முறைப்படி
வரலாற்றைத்திருப்பி எழுதுக." என்று அறைகூவல் விடுக்கும்.
நன்றி: சோ.பத்மநாதனின் 'தென்னிலங்கைக்கவிதை' (மொழிபெயர்ப்புக்கவிதைகள்).
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.