அண்மையில் தமிழினி ஜெயக்குமாரன் 'மழைக்கால இரவு' என்றொரு சிறுகதையினைப் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதியிருந்தார். இதுவே தமிழினியின் முதலாவது சிறுகதை என்று கருதுகின்றேன். இந்தச்சிறுகதையின் இறுதியில் வரும் வரிகள் அழகானதொரு கவிதையாக அமைந்திருந்தன. 'பசியடங்காத பூதம்' போல் மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம். உவமையில் வெளிப்படும் நல்லதொரு படிமம் இது. எவ்வளவு பேரைக்கொன்றொழித்தும் யுத்தமென்ற பூதத்தின் பசி அடங்கவில்லை. கண் முன்னால் நிணமும், குருதியும் கடை வாயில் ஒழுகக்காட்சிதரும் பூதமாக யுத்தம் விசுவரூபமெடுத்து நிற்கிறது.
பசியடங்காத பூதம்!
கரு மேகங்கள் சூழ்ந்த வானம்
இருள்மூடிக் கிடந்தது.
நசநச வென்று வெறுக்கும்படியாக
மழை பெய்து கொண்டேயிருந்தது,
இடை வெளியில்லாமல் காது கிழியும்படி
பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.
நிணமும் குருதியும் கடைவாயில்
வழிய வழிய
பசியடங்காத பூதம்போல மீண்டும்
பயங்கரமாக வாயைப்
பிளந்து கொண்டது
யுத்தம்.
மேலுள்ள வரிகளுடன் சிறுகதையின் மேலும் சில வரிகளையும் சேர்த்து விட்டால் யுத்தம் என்றொரு முழுமையான கவிதை கிடைக்கின்றது. அது கீழே:
யுத்தம்!
போரில் ஈடுபட்டு மரித்துப்
போன
இராணுவத்தினரதும், போராளிகளினதும்
சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு
கிடந்ததை என் கண்களால் கண்டேன்.
பகைமை, விரோதம், கொலைவெறி
இவைகளெதுவுமே
அப்போது அந்த முகங்களில்
தென்படவில்லை.
உயிர் போகும் தருணத்தின்
கடைசி வலி மட்டும்
அந்த முகங்களில் எஞ்சியிருந்தது
கரு மேகங்கள் சூழ்ந்த வானம்
இருள்மூடிக் கிடந்தது.
நசநச வென்று வெறுக்கும்படியாக
மழை பெய்து கொண்டேயிருந்தது,
இடை வெளியில்லாமல் காது கிழியும்படி
பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.
நிணமும் குருதியும் கடைவாயில்
வழிய வழிய
பசியடங்காத பூதம்போல மீண்டும்
பயங்கரமாக வாயைப்
பிளந்து கொண்டது
யுத்தம்.
உண்மையில் சிறுகதைக்கு மேற்படி 'மழைக்கால இரவு' என்பதை விட 'யுத்தம்' என்ற தலைப்பே மிகவும் பொருத்தமாக எனக்குத்தென்படுகிறது. இச்சிறுகதை யுத்தத்தைப் பற்றியது. அதன் செயற்பாடுகளைப் பற்றியது. அதன் விளைவுகளைப் பற்றியது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.