'மேலும் அறியாத ஒன்று' இத்தலைப்பிலுள்ள கவிதை கருணாகரனின் 'ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள்' தொகுப்பிலுள்ள கவிதைகளிலொன்று. இக்கவிதையினை வாசிக்கும்போது ஏற்பட்ட என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் இப்பதிவின் நோக்கம். அதற்கு முன:
பால்யகாலத்தில் என் வாழ்வு வவுனியா நகரிலுள்ள குருமண்காடு என்னும் காடு மண்டிக்கிடந்ததொரு சூழலில் கழிந்தது. பல்லினப் பறவைகளும், மிருகங்களும் மலிந்த கானகச்சூழல். எங்கள் வீட்டிலிருந்த கொவ்வை மரத்தில் எப்பொழுதும் கிளிகள் படையெடுத்த வண்ணமிருக்கும். மாம்பழத்திகளும், மைனாக்களும், குக்குறுபான்களுமெனப் பறவைகளின் இராச்சியத்தில் மூழ்கியிருந்த கானகச்சூழல். ஆனால் அக்காலகட்டத்தில் நான் இயற்கையை இரசித்த அளவுக்கு, அங்கு வாழ்ந்த புள்ளினங்களின், மிருகங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியெல்லாம் சிந்தித்ததில்லை. ஆனால் இன்று நான் உலகின் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற மாநகரொன்றில் வசிக்கின்றேன். ஆரம்பத்தில் இயற்கையுடன் வாழ்ந்த சூழலைத் தவற விட்டு விட்டேனோ என்று மனம் சஞ்சலப்பட்டதுண்டு. ஆனால் மாநகரினைக் கூர்ந்து அவதானிக்கத் தொடங்கியதும் எனக்குப் பிரமிப்பே ஏற்பட்டது. குழி முயல்கள், சிறு நரிகள், கயோட்டி என்னும் ஒருவகை நாயின மிருகங்கள், கடற் பறவைகள், புறாக்கள், பல்வேறு வகையான வாத்தினங்கள், பல்வேறு வகையான சிட்டுக்குருவிகள், 'ரொபின்' பறவைகள், பருந்தினங்கள், அணில்கள், ரக்கூன்கள், மான்கள்..இவ்விதம் பல்வேறு வகையான பறவைகளை, மிருகங்களை அவதானிக்க முடிந்தது.
கானகச்சூழலில் வாழ்ந்த காலத்தில் என் பருவம் காரணமாக அவற்றின் தனிப்பட்ட வாழ்வையெல்லாம் கூர்ந்து கவனிக்கத் தவறினேன். ஆனால் 'டொராண்டோ' மாநகரில் இவ்விதமான பறவையினங்கள், மிருகங்களையெல்லாம் காணும்போது அவற்றின் தனிப்பட்ட வாழ்வினைக் கூர்ந்து அவதானிக்கத் தொடங்கினேன். அவ்விதம் அவதானிக்கத் தொடங்கிய சிறிது காலத்திலேயே அவை எவ்விதம் தம் பொழுதினைப் போக்குகின்றன, தம் சந்ததிகளைப் பெருக்குவதற்காகப் போராடுகின்றன, உழைக்கின்றன என்பதையெல்லாம் அவதானித்து அவற்றின் மீது பெரு மதிப்பும், பெரு விருப்பும் கொண்டேன். அதன் பின்னர் நகரில் அபிவிருத்தி என்ற பெயரில் அவற்றின் இருப்பிடங்கள் அழிக்கப்படும் போதெல்லாம், அவை எவ்விதம் துன்பமுறும் என்று எண்ணி வருந்தியிருக்கின்றேன். அதே நேரம், நகரினூடு பயணிக்கையில் விண்ணில் அவை தம்மைக் காத்துக்கொள்வதற்காக நடாத்தும் போராட்டங்களையுக் கண்டிருக்கின்றேன். உதாரணமாக ஒரு புறாவினைப் 'ஃபால்கன்' என்ற பருந்தினப் பறவையொன்று விண்ணில் துரத்துவதையும் அச்சமயங்களில் அதனிடமிருந்து தப்ப விரைந்து பறக்கும் புறாவினையும் நகரில் பயணிக்கும் ஏனையோர் கவனித்திருக்க மாட்டார்கள். என்னைபோல் பறவைகளை, மிருகங்களை அவதானிப்பவர்கள் மட்டுமே கவனித்திருப்பார்கள். அது போல் வருடாவருடம் வசந்த காலத்தில் மாநகருக்குப் படையெடுக்கும் கனடா வாத்துகள் , கூடுகள் கட்டி, முட்டைகளிட்டு, குஞ்சுகள் பொரித்ததும் அவற்றைக் கண்ணுங்கருத்துமாய் பறக்கும் தன்மை வரையில் வளர்த்தெடுத்துப் பின் இலையுதிர் காலம் முடிவடையும் சமயம தெற்கு நோக்கிப் பறந்து பின் மீண்டும் அடுத்த வருடம் வந்து மீண்டும் தம் வாழ்வினைத் தொடர்வதும்... புறாக்கள் மேம்பாலங்களின் கீழ், தொடர்மாடிக்கட்டடங்களின் பால்கனிகளில் கூடுகள் கட்டி, முட்டைகளிட்டு, பொரித்ததும் கண்ணுங்கருத்துமாய் வளர்த்தெடுத்து குஞ்சுகள் பறக்கும் வரையில் பொறுப்பான தாய், தந்தையராக வாழ்வதும்.... இவை போல் அணில்களின் வாழ்க்கை வாழ்வின் போக்குகளையும்.. அவதானித்து மகிழ்ந்திருக்கின்றேன். இவையெல்லாம் விண்ணில் சிறு வாயுக் குமிழியைப்போல் விரைந்தோடும் நாம் வாழுமிந்தக் கிரகத்தின் குழந்தைகள். அவ்வகையில் எம் நண்பர்கள். அவர்களுக்கும் எமக்குள்ளதைபோல் வாழுவதற்குரிய எல்லா உரிமைகளுமுள்ளன.
இவ்விதமான சிந்தனைப்போக்கினை, இயல்பினைக் கொண்ட எனக்குக் கருணாகரனின் 'மேலும் அறியாத ஒன்று' கவிதையினைப் படித்த உடனேயே கருணாகரனும் நாம் வாழுமிந்த உலகை, வாழும் உயிர்களை அவதானிக்கும் இயல்பு மிக்க ஒருவர் என்பதை உணர முடிந்தது. அவரது அவதானிப்பின் விளைவான இக்கவிதையின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அக்கவிதை வரிகள் இதோ:
பறவைகளின் துயரங்களை நாமறிவதில்லை.
அவற்றின் கஷ்டங்களையும், அலைச்சல்களையும்
பறப்பதினால் அவை அடையும் களைப்பையும் கூட
பறப்பதெல்லாம் ஆனந்தமேயென்ற எண்ணத்தில்
நாம் அறியத் தவறியதும் உணரத்தவறியதும்
எங்கெங்கும் அறியாமலும் உணராமலும்
விட்டதைப்போலத்தான்.
தானியங்களை , பூக்களை, தேனை , கனிகளைத் தேடியலையும்
விதியும் வாழ்க்கையும்
ஒரு கூட்டை அமைப்பதும் காப்பதும்
சந்ததிகளைப் பெருக்கிக்கொள்வதும்
அத்தனை எளிதல்ல பறவைகளுக்கும்
பறவைகளுக்கும் எதிரிகளும் எதிர்நிலைகளும் இருப்ப
நாமுணர்வதில்லைப் பலவேளைகளிலும்
பறத்தலின் அதிசயமுண்டாக்கும் ஆனந்தத்தில்
பறவைகளின் துயரங்களை நாமறிவதில்லை
மேலும் அவற்றின் கஷ்ட்டங்களையும் அலைச்சல்களையும்
பறப்பதினால் அவை அடையும் களைப்பையும்
நம்மை நாமறியாததைப் போலவே
'பறப்பதினால் அவை அடையும் களைப்பையும் கூட', 'ஒரு கூட்டை அமைப்பதும் காப்பதும், சந்ததிகளைப் பெருக்கிக்கொள்வதும், அத்தனை எளிதல்ல பறவைகளுக்கும்' , 'பறவைகளுக்கும் எதிரிகளும் எதிர்நிலைகளும் இருப்பதை, நாமுணர்வதில்லைப் பலவேளைகளிலும்' போன்ற வரிகளைப் பறவைகளை அவற்றின் வாழ்வினை அவதானிக்காத ஒருவரால் உணர்வுபூர்வமாக எழுதிவிட முடியாது.
இக்காரணங்களினால் இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்துப் போனாலும், இக்கவிதை கூறும்பொருள் ஈழத்தமிழர்களை அவர்கள் இறுதி யுத்தத்தில் அடைந்த துயர்களை இந்த உலகம் கண்டும் காணாமாலும் இருந்து விட்டது என்பதைத்தான். 'நம்மை நாமறியாததைப் போலவே' என்னும் வரியுடன் கவிதை முடிகிறது. மனிதரை மனிதர் அறிய முடியாததைப் போல என்னும் வரியினைப் பின்வரும் அர்த்தத்திலும் விளங்கிக்கொள்ள முடியும். நம்மை (ஈழத்தமிழர்களென்னும் மனிதரை) நாமறியாததை ( ஈழத்தமிழர்களுக்கு நடந்த இன்னல்களைக்கண்டும் அவற்றில் பொதிந்துகிடந்த துயரங்களை ஏனைய மனிதர்கள் அறியாததைப் போலவே). நம்மை என்பது ஈழத்தமிழர்களையும் அடுத்து வரும் நாம் என்பது ஈழத்தமிழர்களின் துயரங்களை அறியாத ஏனைய மனிதர்களையும் என்று கருதலாம். பறவைகளின் மீதான அவதானிப்பின் மூலம் பறவைகள் போன்ற இப்பூவுலகின் ஏனைய உயிர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் சூழல் அழிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மனிதரையும், பல்வேறு காரணங்களினால் அழிவுக்குள்ளாகிக்கொண்டிருக்கும் சக மனிதரின் வாழ்க்கைப் போராட்டங்களின்பால் கவனம் செலுத்தாமல் வாழும் இன்றைய உலகின் நேர்மையீனத்தையும் கேள்விக்குள்ளாக்கும் கவிதையிது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.