கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய ;ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....   - வ.ந.கிரிதரன் -dr_n_subramaniyan.jpg - 12.37 Kbகலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததது. குமரன் புத்தக இல்லம்' பதிப்பகத்தினரால் தமிழகத்தில்; 2009இல் வெளியான நூலது. இதுவரையில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிப் பலர் எழுதியிருக்கின்றார்கள். இரசிகமணி கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் என்று பலர், அவர்களது நூல்கள் பெரும்பாலும் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய பொதுவான அறிமுக நூல்களாகத்தான் அமைந்துள்ளன. அவற்றின் முக்கியம் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றீய தகவல்களை வழங்குகின்றன என்பதில்தான் தங்கியுள்ளது. ஆனால் கலாநிதி நா.சுப்பிரமணியனின் மேற்படி நூல் அவற்றிலிருந்தும் பெரிதும் வேறுபடுவது நூலாசிரியரின் ஈழத்து நாவல்கள் பற்றிய திறனாய்வில்தான். ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய தகவல்களை வழங்கி நல்லதோர் ஆவணமாக விளங்கும் அதே சமயம் ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய நல்லதொரு திறனாய்வு நூலாகவும் இந்நூல் விளங்குகின்றது. அந்த வகையில் இந்த நூலின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது. இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களிலொன்று: நூலாசிரியரின் இந்த நூலானாது அவர் தனது முதுகலைமானிப் பட்டப்படிப்புக்காக, இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத்தில் , ஈராண்டுகள் (1970- 1972) நடாத்திய ஆய்வின் விளைவாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். வெறும் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் அவரது கடும் உழைப்பினால் நல்லதொரு திறனாய்வு நூலாகவும் மேற்படி கட்டுரை வளர்ச்சியுற்றிருக்கின்றது.

இந்நூல் 1885ஆம் ஆண்டில் வெளியான அறிஞர் சித்திலெப்பையின் 'அசன்பேயினுடைய கதை' லிருந்து 1977ஆம் ஆண்டுவரை வெளிவந்த ஞானரதனின் 'ஞானபூமி' வரை சுமார் 450 நூல்களை ஆராய்கிறது. இந்நூலின் முதல் பதிப்பு 1978இல் வெளியானது. நான் வாசித்தது திருத்தி, விரிவாக்கப்பட்ட அண்மைய பதிப்பு, குமரன் புத்தக இல்லத்தினால் 2009இல்  வெளியான பதிப்பு. அதில் 1977ற்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்ளடக்கிய பின்னிணைப்புகளுமுள்ளன.


நூலின் உள்ளடக்கம் பற்றி...

இந்நூலின் திருத்திய பதிப்பானது ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம், சமுதாயச் சீர்திருத்தக்காலம், எழுத்தார்வக்காலம், சமுதாய விமர்சனக்காலம், பிரதேசங்களை நோக்கி, நிறைவுரை மற்றும் பின்னிணைப்புகள். பின்னிணைப்புகள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1977ற்குப் பிற்பட்ட வரலாற்றுச்செல்நெறிகள், தனிக் கவனத்தைப்பெற்ற  இரு நாவல்கள் பற்றிய ஆய்வுரைகள், ஈழத்துத் தமிழ் நாவல்கள் பட்டியல் மற்றும்ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வுகள் ஆகியனவே அவை.

அ. ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம்

இப்பகுதியில் நாவல் என்னும் சொல்லின் பயன்பாடு எவ்விதம் ஏற்பட்டது, ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பில் ஆற்றப்பட்ட ஆய்வுகள் பற்றிய விபரங்கள், ஈழத்தில் தமிழ் நாவல் தோன்றிய காலகட்டத்துச் சூழ்நிலை, ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்தின் ஆரம்ப முயற்சிகள் போன்ற விடயங்கள் ஆராயப்படுகின்றன. நாவல் என்னும் சொல்லின் தோற்றம் பற்றி மிகவும் சுருக்கமாகவே கூறப்படுகிறது. "'நாவல்' (novel) என்ற ஆங்கிலச் சொல் புதுமையெனப் பொருள்தரும் நோவா (Nova) என்னும் இந்து- ஐரோப்பிய மூல மொழிச் சொல்லடியிலிருந்து உருவாகியது. " என்று குறிப்பிடுகின்றார். Nova என்பது இலத்தீன் சொல். உண்மையில்  புதியது என்னும் கருத்துடைய novus என்னும் இலத்தீன் பெயர்ச்சொல்லின் பெண்ணியல்பான சொல்தான் Nova. சில மொழிகளில் ஒரு சொல்லுக்கு ஆணியல்பான, பெண்ணியல்பான சொற்களுள்ளன. Nova Stella என்பதன் சுருக்கமான வடிவம்தான் Nova. இலத்தீன் மொழியில் நட்சத்திரம் என்னும் சொல்லுக்குரிய சொல் பெண்ணியல்பான stella. இலத்தீனில் stella என்னும் பெண்ணியல்பான சொல் பாவிக்கப்படுவதால் புது நட்சத்திரம் என்பதற்கு Nova Stella என்னும் சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன (Nova பெண்ணியல்பான சொல்; Stella பெண்ணியல்பான சொல்). "நாவல்' (novel)  என்ற ஆங்கிலச் சொல் புதுமையெனப் பொருள்தரும் நோவா (Nova) என்னும் இந்து- ஐரோப்பிய மூல மொழிச் சொல்லடியிலிருந்து உருவாகியது' என்பது "நாவல்' (novel) என்ற ஆங்கிலச் சொல் புதுமையெனப் பொருள்தரும் néwos, néwios என்னும் இந்து- ஐரோப்பிய மூல மொழிச் சொல்லடியிலிருந்து உருவாகியது" என்றிருக்க வேண்டுமென்று படுகிறது.

"ஸ்பானியாவிலும் இத்தாலியிலும் மத்திய காலத்தில் வழக்கிலிருந்த கதைகள் பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் படிக்கப்பட்ட போது அவற்றை ஆங்கிலேயர் 'நாவல்' என்னும் பெயரால் வழங்கினர். அக்கதைகளைப் போலவர் தாமும் சுயமாக எழுதமுயன்ற வேளையில் அவற்றுக்கும் அப்பெயரையே வழங்கலாயினர்." என்று முதல் பந்தியில் வருகிறது. அடுத்த பந்தியில் "பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய சமூக அமைப்பிற் பெருமாற்றங்கள் நிகழ்ந்தன. கைத்தொழில் வளர்ச்சி, வாணிகப் பெருக்கம் ஆகியவற்றின் விளைவாகப் பாரம்பரிய சமூக அமைப்பு நிலைகுலைந்து புதிய 'சமூக பொருளாதார' உறவுகள் தோன்றின. இவற்றைப் புலப்படுத்தத்தக்க வகையில் 'நாவல்' பரிணாமம் பெற வேண்டியதாயிற்று. உண்மைச் சம்பவங்களுடன் கூடிய நடைமுறை வாழ்க்கையைச் சித்திரிக்கும் நீண்ட புனைகதை வடிவமே நாவல் என வழங்கும் மரபு பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாகியது." என்று வருகிறது.

"ஸ்பானியாவிலும் இத்தாலியிலும் மத்திய காலத்தில் வழக்கிலிருந்த கதைகள் பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் படிக்கப்பட்ட போது அவற்றை ஆங்கிலேயர் 'நாவல்' என்னும் பெயரால் வழங்கினர்" என்பது சிறிது குழப்பத்தை வாசகர்களுக்குத் தருகிறது. பதினைந்தாம், பதினான்காம் நூற்றாண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்ட இத்தாலிய மற்றும் ஸ்பானிஸ் கதைகள் இங்கிலாந்தில் நாவல் என்று அழைக்கப்பட்டதாக இக்கூற்று கருத்தினைத் தருகின்றது.  ஆனால் பின்னர் வரும் "உண்மைச் சம்பவங்களுடன் கூடிய நடைமுறை வாழ்க்கையைச் சித்திரிக்கும் நீண்ட புனைகதை வடிவமே நாவல் என வழங்கும் மரபு பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாகியது: என்னும் கூற்று அதற்கு முரணாகவல்லவா அமைந்திருக்கிறது.

அடுத்து நூலாசிரியர் ஈழத்தின் தமிழ் நாவல்கள் தோன்றிய காலகட்டத்தையும், அக்காலகட்டத்தில் நிலவிய சூழ்நிலையினையும், அச்சூழல் எவ்விதம் நாவல் தோன்றக் காரணமாயிருந்தது என்பது பற்றியும் ஆராய்கின்றார். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பத்தில் கிறிஸ்த்தவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்த 'மிசனரி; இயக்கங்கள் தமது மதமாற்ற முயற்சிகளோடு ஆங்கிலக் கல்வி வளர்ச்சிக்கும் மிகுந்த பங்காற்றியுள்ளன. அக்காலகட்டத்தில் குருகுல முறையிலான தமிழ்க்கல்வி முறையும் நடைமுறையிலிருந்தது. இது பற்றிக் குறிப்பிடுகையில் நூலாசிரியர்,

"பரம்பரையடிப்படையிலமைந்த சமூக பொருளாதார உறவுகளைக் கொண்ட ஈழத்தமிழரின் பண்பாட்டில் ஆங்கிலக் கல்வியும் ஐரோப்பொய பழக்கவழக்கங்களும் மாற்றங்களைத் தோற்றுவித்தன. பழைமையில் நம்பிக்கையிழந்தவர்களும் புதியராய் கிறித்தவ மதத்தைத் தழுவியவர்களும் அக் காலப்பகுதியில் ஐரோப்பிய நடையுடை பாவனைகளையும் வாழ்க்கை முறைகளையும் பின்பற்றத் தொடங்கினர். இவற்றின் விளைவாகத் தேசியப் பண்பாடு சீர்குலையும் என அஞ்சிய ஈழத்தறிஞர் சிலர் தேசியப் பண்பாட்டுப் பாதுகாப்பு நோக்கில் இயக்கங்களைத் தொடங்கினர். கலாயோகி ஆனந்த கெ. குமாரசுவாமி (1877-1947) 1905ஆம் ஆண்டில் நிறுவிய இலங்கை சமூக சீர்திருத்தக் கழகம் (Ceylon Social Reforms League) இத்தகைய நோக்கில் எழுந்ததொன்றேயாகும். ஈழத்துத் தமிழ் பேசும் மக்களுள் ஒரு பிரிவினரான முஸ்லிம்களிடையிலும் சமயம், அரசியல், கல்வி ஆகிய துறைகளில் மறுமலர்ச்சி இயக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஆரம்பமாகியது. அறிஞர் சித்தி லெவ்வை இம்மறுமலர்ச்சிக்குத் தலைமை தாங்கி இஸ்லாமிய எழுத்துலக முன்னோடியாகப் பணியாற்றினார். சமூகத்திற் புதிதாக உருவான நடுத்தர வர்க்கத்தினரின் தொகை பெருகியபோது அவர்களது கருத்துப்பரிமாற்றத்திற்குரிய வெளியீட்டுச் சாதனமாகப் பத்திரிகைகள் தோன்றின. சமயக் கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் பரப்பும் நோக்கில் வெளிவரத் தொடங்கிய பத்திரிகைகள் தமிழ் மக்களிலே குறிப்பிடத்தக்க தொகையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தன." என்கின்றார்.

இதே சமயம் ஆறுமுகநாவலரால் தமிழ் இலக்கியத்தில் நிலவி வந்த செய்யுளின் ஆதிக்கம் படிப்படியாக வசனநடைக்கு மாறுகின்றது. இவ்வசன நடையினைப் பத்திரிகைகள் மேலும் வளர்த்தன. இவ்விதமாக நாவல் இலக்கியம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் தோன்றுவதற்கு அக்காலச் சூழல் எவ்விதம் விளங்கியது என்பதை ஆசிரியர் விளக்கிச் செல்லுவார். மேலும் ஆரம்பத்தில் உருவான நாவல்கள் தமிழகத்தின் பாதிப்பினால் உருவானவையென்றும், சி. வை. சின்னப்பபிள்ளையே  ஈழத்தைக் களமாகக் கொண்டு வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் (1905) என்னும் நாவலினை முதலில் எழுதினார் என்பதையும் நூல் விபரிக்கின்றது. அது பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர் பின்வருமாறு விளக்குவார்:

"வீரசிங்கன் கதை அல்லது ச்ன்மார்க்க ஜெயம் என்ற எனது கன்னிப் படைப்பான இந்த நாவலைப் பொதுமக்களுக்குச் சமர்ப்பிக்கும் வேளையிற் சில குறிப்புக்களைக் கூறவேண்டியுள்ள்து. இது எனது கன்னி முயற்சியாதலினால் பல இடர்பாடுகளை நான் எதிர்நோக்க வேண்டியிருந்தது. வாசகர்களின் உள்ளங்களிலே சன்மார்க்கத்தின் மகத்துவத்தையும் அதனாலடையக் கூடிய நன்மைகளையும் பதிய வைப்பதும் இந்திய வாசகர்களுக்கு ஈழத்து மக்களின் சாதாரண கிராம வாழ்க்கையையும் பழக்க வழக்கங்களையும் தெளிவாக விளக்குவதுமே இப்படைப்பின் நோக்கமாகும். தற்பொழுது தமிழ் நாவல்கள் பெரும்பாலும் இந்திய வாழ்க்கையயும் குறிப்பாகப் பிராமணரது வாழ்க்கையையுமே விபரிக்கின்றன. இக் கதை ஓர் இளைஞனுக்கு உண்மையில் ஏற்பட்ட அநுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் காதல், வீரம் போன்ற சுவைகளையும் தமிழ்ச் சான்றோரிலக்கியங்களின் பொருத்தமான மேற்கோள்களையும் இணைத்து இதனைப் படைத்துள்ளேன். இத்தகைய கன்னிப்படைப்பில் குறைபாடுகள் காணப்படுவது தவிர்க்க முடியாததே. அவ்வகைக் குறைபாடுகளை மன்னிக்குமாறு எனது வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்."

அத்துடன் மதமாற்றத்திற்காக கிறிஸ்தவ மிசனரிகளால் பாவிக்கப்பட்ட நாட்டுக் கூத்து, நாடகம் ஆகியன நூல் வடிவம் பெற்றமையும் , அதன் தொடர்ச்சியாகவே இலங்கையில் நாவல் இலக்கியம் தோன்றியது என்ற சில்லையூர் செல்வராசனின் தனது ஈழத்து நாவல்கள் நூலில் கூறுவதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுவார்.

இவ்விதமாக ஈழத்தில் தமிழ் நாவல் தோன்றுவதற்கு அக்காலகட்டத்தில் நிலவிய சூழ்நிலை எவ்விதம் உதவின என்பதை நூலின் இந்த முதற்பகுதி சுருக்கமாக விபரிக்கும்.


ஆ.  சமுதாய சீர்திருக்கக் காலம், எழுத்தார்வக்காலம்  மற்றும் சமுதாய விமர்சனக்காலம்

இப்பகுதிகள் அனைத்தும் அப்பகுதிகளுக்குரிய காலகட்டங்களில் நிலவிய சூழல், அவை எவ்விதம் நாவல்கள் உருவாகக் காரணமாக விளங்கின என்பதை விளக்கிப் பின்னர் அக்காலகட்டங்களில் வெளியான பல்வேறு வகையான நாவல்களை இனங்கண்டு, வகைப்படுத்தி இறுதியாக ஆசிரியரின் அவை பற்றிய மதிப்பீடுகளையும் விபரிப்பன. இவ்விதமாக ஆசிரியர் படைப்புகளை நுணுகி ஆராய்ந்து, தரம் பிரித்துத் திறனாய்வு செய்திருப்பது இவரது இந்த நூலை ஏனைய நூல்களிலிருந்து பெரிதும் வேறுபடுத்திக் காட்டுகிறது. மேலும் இவ்விதமாக ஆசிரியர் வந்தடைந்த முடிவுகளுக்குத் தான் ஏன் வந்தேன் என்பதையும் அவர் விளக்கிச் செல்கின்றார். அவற்றை அவர் தர்க்கரீதியாக விளக்குவது நூலுக்குச் சிறப்பளிக்கின்றது.

இ.சமுதாய சீர்திருக்கக் காலம்

சமுதாய சீர்திருத்தக் காலமான பத்தொன்பதாம் நூற்றாண்டினின் இறுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பது ஆண்டுகள் வரையில் 'சைவம், கிறித்தவம் ஆகிய இரு சமயங்களினடிப்படையிலான சமுதாய சீர்திருத்த உணர்வே ஈழத்துத் தமிழிலக்கியத்தை நெறிப்படுத்தும் உந்து சக்தியாய்த் திகழ்ந்தது' என்கின்றார். சைவர்களுக்கும், கிறித்தவர்களுக்குமிடையில் நிலவிய போட்டி நிலை சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அவரவர் சமயம் சார்ந்த அறம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்வு கூறும் இயல்பினைத் தூண்டியது என்கின்றார். இதன் விளைவாக ஏனைய இலக்கியத் துறைகளைப் போல் நாவலிலும் சமய அடிப்படையிலான சமுதாயச் சீர்திருத்தம் ஒரு பொதுப்பண்பாக அமைந்தது என்று இனங்கண்டு இக்காலகட்டதை அவர் சமுதாய சீர்திருத்தக்காலம் என்ற முடிவுக்கு நூலாசிரியர் வருகின்றார். மேலும் நூலாசிரியர் அக்காலகட்ட நாவலாசிரியர்கள் தமது நாவல்களுக்கு வழங்கிய முன்னுரைகள் மற்றும் சக நாவலாசிரியர்களின் படைப்புகளுக்கு வழங்கிய அணிந்துரைகள் ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளைத் தனது வாதத்துக்கு வலுச்சேர்ப்பதற்குப் பயன்படுத்துகின்றார்.

உதாரணத்துக்கு 'நொறுங்குண்ட இதயம்' என்னும் நாவலுக்கு அதன் ஆசிரியையான திருமதி மங்களநாயகம் தம்பையா கூறும் ""சன்மார்க்க சீவியத்தின் மாட்சியை உபதேசத்தால் விளக்குவதிலும் உதாரணங்களால் உணர்த்துவது மிகவும் நன்மை பயத்தற்கு ஏதுவாகும் என்றெண்ணி இக் கதையை எழுதத் துணிந்தேன். ஒரு விஷயத்தை உவமைகளாலும் ஒப்பனைகளாலும் மனதிற் பதியப் பண்ணுதல் இலகுவென்றது யாவருங் கண்ட நல்வழி. ஆகையினால் சில காரியங்களைப் போதனையாகவும் புத்திமதியாகவும் இப் புத்தகத்தில் அடக்க மனமேவப்பட்டேன்." என்ற கூற்றினைக் குறிப்பிடும் நூலாசிரியர் இது போன்ற மேலும் பல சான்றுகளைக் குறிப்பிடுவார்.

"ஆங்கில ஆட்சியின் விளைவுகளிலொன்றான ஐரோப்பிய பண்பாட்டுத் தாக்கத்தாலே தேசிய பண்பாடு நிலை தளரத் தொடங்கியிருந்த சூழ்நிலையும் பாரம்பரிய சமுதாய அமைப்பிற் புதிய கல்வி முறை ஏற்படுத்திய மதிப்பீடுகளும் இக்காலப்பகுதி சீர்திருத்தம் வேண்டி நின்றமையை உணர்த்தும்" என்று அக்காலகட்டத்தில் எதற்காக சீர்திருத்த உணர்வு மேலோங்கக் காரணமாகவிருந்த விடயங்களைக் குறிப்பிடும் நூலாசிரியர் அதற்காதாரமாக . சுதேச நாட்டியம் பத்திரிகையின் ஆசிரியரான வசாவிளான் க. வேலுப்பிள்ளை  தமது யாழ்ப்பாண வைபவ கௌமுதி நூலிலே தெரிவித்துள்ள " "சீர்திருத்தம் அதிகப்பட்டுவரும் இக்காலத்தில் நல்ல மரத்திற் புல்லுருவிகளைப் போலச் சில மோசங்களும் சிறிது சிறிதாய்ப் பெருகுவதைக் காண்பது துக்கமான சம்பவம். மதுபானம் பாவித்தல், அலங்கார மாளிகை, விலைபெற்ற வர்ணப் பட்டாடை முதலியவைகளில் அதிக பணத்தைச் செலவிடுதல், வாணவேடிக்கை, கூத்து முதலியவைகளுக்கு வீண் செலவு செய்தல், ஐரோப்பிய நாகரிக பழக்கவழக்கங்கள் ஆதியன யாழ்ப்பாணத்தின் ஏற்றத்தையும் தோற்றத்தையும் அழிக்கும் குருவிச்சைகளாம்." எடுத்துக்காட்டுவார்.

அக்காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து பெருமளவில் பொழுதுபோக்கு நாவல்கள் ஈழத்துக்கு இறக்குமதியாகின. இவற்றில் பல மனிதருடைய கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன என்னும் கருத்தொன்று நிலவியதை இந்து சாதனம் பத்திரிகையில் வெளியான குமரன் என்பவர் எழுதிய 'நாவல் வெள்ளம்' என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ""அன்பர்களே! உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷமும் மிகவும் அருமையானது. ஆகவே.... புண்ணிய நூலல்லாத தீய நாவல்களைத் தீக்கிரையாக்குங்கள். இந் நாவல் வெள்ளத்தைத் தடுத்தற்கு நாம் த்தகைய அணை கோலுதல் வேண்டும்? முள்ளை முள்ளாற் களைந்தெறிவது போல், இத்தீய நாவல் வெள்ளத்தை நல்ல நாவல்களை வெளியிட்டே தடுத்தல் வேண்டும். ஆங்கிலமும் தமிழும் பாங்குடன் கற்ற தமிழாசிரியர்கள் நல்ல நாவல்களை எழுதி வெளியிடல் வேண்டும். ஆகவே நாவல்களெழுதுதல் பாமரர் கரத்திலிருந்து பண்டிதர் கரத்திற்கு மாறுதல் வேண்டும். தீய நாவல்களை வாசித்தல் கூடாது என்று பிள்ளைகளைப் பெற்றோரும் மனைவியை நாயகனும் மாணவனை ஆசிரியரும் அழுத்தமாகக் கண்டிக்க வேண்டும்." என்னும் கூற்றின் மூலம் ஆசிரியர் எடுத்துக்காட்டுவார்.

அக்காலகட்டத்தில் வெளியான சமுதாயப் பிரச்சினைகளை உள்ளடக்கிய நாவல்கள், சம்பவச்சுவை மிக்க மர்ம நாவல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு அல்லது தழுவல் நாவல்கள் ஆகியவற்றை உதாரணங்களுடன் குறிப்பிடும் நூலாசிரியர் இவை பற்றிய தனது மதிப்பிட்டில் "சீர்திருத்த உணர்வு மேலோங்கி நின்ற இக் காலப் பகுதியில் வெளிவந்த நாவல்களை வரலாற்று நோக்கிலே நோக்கும்போது தொடக்கத்தில் நடப்பியல்புக்கு முக்கியத்துவம் அளித்தும் அடுத்து மர்மப் பண்புக்கும் சம்பவச் சுவைக்கும் முதன்மை தந்தும் எழுதப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது." என்ற முடிவுக்கு வருகின்றார்.

ஈ. எழுத்தார்வக் காலம்

இக்காலகட்டத்தைப் பற்றிக்குறிப்பிடும் நூலாசிரியர் :மேனாட்டு நாவல்களையும் தமிழ் நாட்டு நாவல்களையும் வாசித்ததன் காரணமாக ஏற்பட்ட அருட்டுணர்வுடனும் எழுத்தாளனாக மதிக்கப்பட வேண்டுமென்ற ஆர்வத்துடனும் ஒரு புதிய எழுத்தாளர் பரம்பரையொன்று இக்காலப் பகுதியில் ஈழத்துத் தமிழ் நாவலுலகில் அடியெடுத்து வைத்தது. இவர்களது முயற்சிகட்கு அடிப்படையாக அமைந்தது எழுத வேண்டும் என்ற ஆர்வமேயாம். இந்த ஆர்வம் தொடக்கத்திலே மொழிபெயர்ப்பு, தழுவல் முயற்சிகளாகவும் பின்னர் சுயமாகப் படைக்கும் ஆற்றலாகவும் வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் ஏறத்தாழப் பதினைந்தாண்டுக் காலம் இவ்வகையில் வெளியிடப்பட்ட எழுத்தார்வம் அடுத்து ஏறத்தாழப் பத்தாண்டுக் காலத்திற் சமூக, தேசிய உணர்வுகளுடன் இணைந்து புதிய பரிணாமம் பெறலாயிற்று. இவ்வகையில்முப்பதுகளின் முடிவில் ஈழகேசரி தனது நவீன இலக்கியக் களத்தினை விசாலித்த காலம் தொடக்கம் அறுபதுகளின் ஆரம்ப ஆண்டுகள் வரை ஏறத்தாழக் கால் நூற்றாண்டுக் காலத்தை எழுத்தார்வக காலம் எனலாம்."

இவ்விதமான எழுத்தார்வம் தோன்றி வளர்வதற்கு சாதகமான முக்கியமான காரணம் செய்திப்பத்திரிகைகளின் தோற்றம் என்று குறிப்பிடும் ஆசிரியர் ஈழகேசரி, தினகரன், வீரகேசரி மற்றும் சுதந்திரன் ஆகிய பத்திரிகைகள் புனைகதைத்துறைக்கு பங்காற்றியுள்ளன என்பார். எச்.நெல்லையா, ரஜனி (கே.வி.எஸ்.வாஸ்) போன்றோர் பரந்த வாசகர் கூட்டத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் தொடர்கதைகளை வீரகேசரியில் எழுதினர். எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் பீஷ்மன் என்னும் பெயரில் ஈழகேசரியில் எழுதிய 'யாத்திரை' என்னும் நாவல் ஈழகேசரி 1958இல் நின்று விடவே நின்று போன விடயத்தினையும் நூல் பதிவு செய்கின்றது.

இக்காலகட்டத்தில் எழுத்தார்வம் பெருகிட முக்கியமான காரணங்களிலொன்று தமிழகத்துடனான இலக்கியத் தொடர்பாகும் எனக் குறிப்பிடும் நூலாசிரியர் அதற்காதாரமாக அக்காலகட்டத்தில் தமிழகத்தில் தோன்றிய வெகுசன படைப்புகள், அவற்றினைப் படைத்த கல்கி, அகிலன் போன்ற எழுத்தாளர்கள், அவற்றினைப் பிரசுரித்த விகடன், கல்கி, கலைமகள், கிராம ஊழியன், கலாமோகினி, சூறாவளி போன்ற இலக்கிய சஞ்சிகைகள் பற்றியெல்லாம் , அவை எவ்வகையில் ஈழத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தின என்பதுபற்றியெல்லாம் விபரித்திருப்பார். நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும் நாவல்கள் பலவற்றைப் படைத்தவர்களின் படைப்புகள் தமிழகத்தின் புகழ்பெற்ற வெகுசன எழுத்தாளர்களின் படைப்புகளின் கலவையாக விளங்குவதை விமர்சகரொருவர் குறிப்பிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுவார். அதே சமயம் எழுத்தார்வக் காலகட்டத்தில் ஐம்பதுகளில் தேசிய உணர்வுகள் படிவதை அவதானிக்கலாம் எனக் குறிப்பிடும் நூலாசிரியர் ஆயினும்இக்காலகட்டத்தின் முக்கிய நாவல் பிரிவுகளாக மொழிபெயர்ப்பு (அல்லது தழுவல்) நாவல்கள், காதல் நாவல்கள், மர்மப்பண்பு நாவல்கள் ஆகியவற்றையே வகைப்படுத்துவார். இவ்வகை நாவல்களுக்கு உதாரணங்களைக் குறிப்பிட்டுச் செல்லும் நூலாசிரியர் "சமுதாய சீர்திருத்தக் காலத்திலே எழுதப்பட்ட மர்மப்பண்பு நாவல்கட்கும் எழுத்தார்வக்கால மர்மப்பண்பு நாவல்கட்குமிடையில் வேறுபாடுண்டு. முதல் வகையின சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கூற எடுத்துக் கொண்ட கதைக்குச் சுவைநோக்கி மர்மப்பண்பு புகுத்தப்பட்டவை. எழுத்தார்வக் காலப்பகுதியிலே மர்மச் சுவையுடன் நாவல்கள் எழுத வேண்டுமென்ற ஆர்வமே தூண்டி நின்றது. பிறமொழிகளிற் படித்த புதுவகை மர்மக் கதைகளைப் போலத் தமிழில் எழுத முயன்ற பல தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்திருந்தனர். அவ்வகை வாசகர் வட்டத்தைத் திருப்தி செய்யும் நோக்கில் எழுத வேண்டிய சூழ்நிலை இருந்தது. இவ்வண்ணம் எழுதியவர்கள் தமது நாவல்களில் சமகாலக் குடும்ப உறவுமுறைகள் காதல் ஆசாபாசங்கள் முதலியவற்றையும் சித்திரிக்கத் தவறவில்லை" என்று தன் அவதானிப்பினைக் குறிப்பிடுவார். இவ்விதமான அவதானிப்புகள். நூலாசிரியரின் படைப்புகளை வாசித்து, ஒப்பிட்டு முடிவெடுக்கும் திறனாய்வுத் திறமையினை வெளிப்படுத்துகின்றன. திறமையான திறனாய்வாளர் ஒருவருக்கு இவ்விதமாகப் படைப்புகளை நுணுகி வாசித்து, ஒப்பிட்டு, முடிவுகளைத் தர்க்கரீதியாக எடுக்கும் திறமை நிச்சயமிருக்க வேண்டும். நூலாசிரியருக்கு இத்திறமை நிறையவே உள்ளது.


உ. சமுதாய விமர்சனக் காலம்

அறுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து சுமார் பதினைந்து ஆண்டுகாலப் பகுதியை ஆசிரியர் 'சமுதாய விமர்சனக்காலம்' என்று வரையறுக்கின்றார். இக்காலகட்ட நாவல்களை சாதிப்பிரச்சினை நாவல்கள், அரசியல் பொருளாதாரப் பிரச்சினை நாவல்கள், தோட்டத் தொழிலாளர் பிரச்சினை நாவல்கள்,  மற்றும் பாலியற் பிரச்சினை நாவல்கள் என்னும் நான்கு பிரிவுகளில் பிரித்து நோக்கலாமென்பது நூலாசிரியரின் வாதம். அதே சமயம் மேற்படி அத்தியாயத்தின் இறுதியில் வரும் பல்வகைப்படைப்புகள் என்னும் பகுதியின் உப பிரிவுகளாக அவர்களுக்கு வயது வந்து விட்டது, நகைச்சுவை நாவல்கள், வரலாற்று நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்கள் மற்றும் குடும்ப நாவல்களும் மர்ம நாவல்களும் என நூலாசிரியர் பிரித்திருப்பார்,

சமுதாய விமர்சனக் காலத்தின் நாவல்களில் சாதிப்பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்ட படைப்புகளாக செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம், சடங்கு, போர்க்கோலம் ஆகிய நாவல்களையும், கே.டானியலின் பஞ்சமர், தெணியானின்  விடிவை நோக்கி, சொக்கனின் சீதா, செங்கை ஆழியானின் பிரளயம் , செ..யோகநாதனின் காவியத்தின் மறுபக்கம், ஜானகி, தி.ஞானசேகரனின் 'புதிய சுவடுகள்' போன்ற நாவல்களையும் ஆராயும் நூலாசிரியர் அதன் பயனாகப் பினவரும் முடிவுகளுக்கு வருகின்றார்:

1. சொக்கன், செங்கை ஆழியான், தி.ஞானசேகரன் ஆகியோர் மனிதாபிமானக் கண்ணோட்டத்தினூடாகச் சாதிப் பிரச்சினைக்குத் தீர்வை நாடுகின்றனர். இதன் காரணமாகச் சாதிப் பிரச்சினையின் வெளிப்பரிமாணத்தை மட்டுமே இவர்களது நாவல்களால் வெளிப்படுத்த முடிந்தது.
2. செ.கணேசலிங்கன், கே.டானியல் ஆகியோர் சாதிப்பிரச்சினையை வர்க்கச்சார்புடைய பிரச்சினையாகக் கருதித் தீர்வை நாடுகின்றனர். இதன் விளைவாக மார்க்க்சியச் சித்தாந்த அடிப்படையில் போராட்டத்தின் மூலம் தீர்வு சாத்தியப்படுமென்பது இவர்களது நோக்கு. இதற்காக  செ.கணேசலிங்கனை மார்க்சிய நோக்கு நாவலாசிரியர்களில் முதன்மையானவராக் காணும் நூலாசிரியர் செ.க.வின் நாவல்கள் கலைத்தன்மையைப் பொறுத்தவரையில்  சிறிது குறைபாடுடையன என்னும் முடிவுக்கும் வருகின்றார் மேலும் செ.க.ம் கே.டானியல் போன்றோர் சாதியப் பிரச்சினையையும், வர்க்கப்பிரச்சினையையும்  ஒன்றாக இனங்காண முற்பட்டதால் அவர்களது சாதிப்பிரச்சினை பற்றிய நாவல்களில் வரும் பாத்திரங்கள் யதார்த்தபூர்வமாக அமையாமல் போய் விட்டன என்ற க.சண்முகலிங்கனின் கருத்தினையும் ஏற்றுக்கொள்கின்றார்.

இவ்விதமாக சமுதாய விமர்சனக் காலகட்டதில் வெளியான ஏனைய பிரிவு நாவல்களான வரலாற்று நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்கள், குடும்ப நாவல்கள், நகைச்சுவை நாவல்கள், பாலியற் பிரச்சினை நாவல்கள். மற்றும் இவற்றுள் அடங்காதவர்களின் படைப்புகள் எல்லாவற்றையும் ஆய்வுகுள்ளாக்கும் நூலாசிரியர் இவை அனைத்திலும் பொதுவாக அமைந்திருக்குமோர் அம்சமாக அவற்றில் காணப்படும் மொழி நடை இருப்பதாக முடிவு செய்கின்றார். புனைவுகளில் கதை மாந்தர்களை உயிரோட்டத்துடன் சித்திரிப்பதற்கு அவர்களது மொழிநடை உரையாடல்களில் புகுத்துவது அவசியமாகவிருந்தது. குறிப்பாக அறுபதுகளின் ஆரம்பத்தில் நடைபெற்ற மரபு பற்றிய போராட்டங்களின் விளைவாக எழுத்தாளர்கள் மத்தியில் பேச்சு வழக்கினைக் கையாள்வதில் தீவிரமானதோர் ஆர்வமேற்பட்டது. இதனாலேயே அக்காலகட்டப் படைப்புகள் அனைத்திலும் ஒரு தனிச்சிறப்புப் பண்பாக அப்படைப்புகளில் பாவிக்கப்பட்ட மொழிநடை அமைந்திருந்தது என்ற முடிவுக்கு நூலாசிரியர் வருகின்றார். அதே சமயம் மொழிநடை சிறப்பான பொதுப்பண்பாக இருந்தாலும், பேச்சு வழக்கினைக் கையாள்வதில் படைப்பாளிகளுக்கிடையில் வேறுபாடுகள் காணப்படுவதாக முனைவர் எம்.ஏ.நுஃமான், முனைவர் அ.சண்முகதாஸ் போன்றோர் இவ்விடயத்தில் ஆற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் நூலாசிரியரும் வருகின்றார்.

ஊ. பிரதேச இலக்கியப் படைப்புகள் பற்றி...

ஈழத்துத் தமிழ் நாவல்களில் காணப்பட்ட பிரதேசச்சித்திரிப்புகளை இனங்கண்டு குறிப்பிடும் நூலாசிரியர் குறிப்பாக அ.செ.மு, வ.அ.இராசரத்தினம் ஆகியோரின் படைப்புகளைக் குறிப்பிடுவார். இவர்களது படைப்புகளில் பிரதேசச்சித்திரிப்புகள் பகைப்புல வர்ணனைகளாக மட்டுமே வெளிப்பட்டனவே தவிர பிரதேசப் பண்பாட்டம்சங்கள் பற்றிய ஆழமான நோக்காக அவை அமைந்திருக்கவில்லை என்ற முடிவுக்கு நூலாசிரியர் வருகின்றார். இக்காலகட்டத்து வன்னிப் பிரதேசத்து நாவல்களைப் பொறுத்தவரையில் அ.பாலமனோகரனின் நிலக்கிளி, செங்கை ஆழியானின் காட்டாறு, தாமரைச்செல்வியின் சுமைகள் ஆகியவற்றை முக்கியமான வெளிவந்த படைப்புகளாகக் குறிப்பிடும் நூலாசிரியர் இவை அனைத்துமே வீரகேசரி பிரசுரங்களாக வெளிவந்தவைதாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றார். இவ்விதமாக வீரகேசரி பதிப்பகத்தின் மூலம் நாவல்கள் பல வெளியிடப்படுவதற்கு முக்கியமான காரணங்களிலொன்றாக, அன்றைய இலங்கை அரசின் வெளிநாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதித்தடையினைக் குறிப்பிடுவார். மேலும் வெளியான பிரதேசத்து நாவல்களை ஆராய்கையில், வன்னிப் பிரதேச நாவல்கள், கிழக்கிலங்கைப் பிரதேச நாவல்கள், யாழ்ப்பாணப் பிரதேசத்து நாவல்கள் என வகைப்படுத்தி ஆய்வினை நடாத்தியிருப்பார்.

எ. பின்னிணைப்புகள்..

இப்பகுதியில் 1977ற்குப் பின் வெளியான நூல்களாக வெளியான நாவல்கள், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நாவல்கள் ஆகிய விடயங்கள் பற்றி ஆராயும் நூலாசிரியர் புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்களில் முதன்மையாக தேவகாந்தனின் பெரு நாவலான கனவுச்சிறை நாவலினைக் குறிப்பிட்டு விரிவானதொரு விமர்சனக் குறிப்பினையும் எழுதியிருக்கின்றார்.

நூல் பற்றி மேலும் சில கருத்துகள்.....

ஆசிரியர் ஒரு விடயத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வரும்போது தான் ஏன் அந்த முடிவுக்கு வந்தார் என்பது பற்றிய தனது சிந்தனையினை விளக்குவார். உதாரணமாக எதற்காக ஆசிரியர் இளங்கீரனின் படைப்புகளை எழுத்தார்வக்கால நாவல்கள் பிரிவுக்குள் அடக்குகின்றார் என்றொரு எண்ணம் உடனடியாகவே எழுந்தது. நான் எழுத்தாளர் இளங்கீரனின் நாவல்களைப் பற்றி ஆய்வு நூல்களில், திறனாய்வு நூல்களில் படித்திருக்கின்றேன். அவரது நாவல்களை இன்னும் படிக்கவில்லை. நான் அவரைப்பற்றி வாசித்ததன் அடிப்படையில் அவரது படைப்புகளை 'சமுதாய விமர்சனக் காலகட்டப் படைப்புகளுக்குள்' அடக்கியிருக்கலாமே என்றெண்ணினேன். ஆனால் நூலாசிரியரோ இளங்கீரன் போன்றவர்களின் படைப்புகளை எழுத்தார்வக் காலகட்டத்தினுள் 'சமூக உணர்வும், தேசிய உணர்வுச் சாயலும் மிக்க படைப்புகள்' என்னுமொரு உபபிரிவினை உருவாக்கி அதற்குள் அடக்குவார். அவ்விதம் அடக்கினாலும் அப்படைப்புகளும் எழுத்தார்வக் காலகட்டத்துக்குரிய படைப்புகளே என்று கூறுவார். அதற்கு அவர் கூறும் காரணங்கள் வருமாறு:

1. உதாரணமாக சமூக உணர்வும், தேசிய உணர்வுச் சாயலும் மிக்க படைப்புகளைத் தந்த படைப்பாளிகளாகக் குறிப்பிடும் அ.செ.முருகானந்தன், உபகுப்தன் என்னும் பெயரில் எழுதிய கனக செந்திநாதன், கசின், வ.அ.இராசரத்தினம், சொக்கன், சி.வி.வேலுப்பிள்ளை, ஹமீதா பானு என்னும் புனைபெயரில் எழுதிய டி.எம்.பீர் முகமது, இளங்கீரன் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடும்போது "பெரும்பாலோர்  கதையம்சத்திலும் பாத்திரப்படைப்பு முதலியவற்றிலும் தனித்தன்மையைப் புலப்படுத்தவில்லை. ' அ. செ. முருகானந்தன், கனக. செந்திநாதன், கசின், வ. அ. இராசரத்தினம், சொக்கன், சி. வி. வேலுப்பிள்ளை முதலியோர் சமகால ஈழத்து மக்கள் வாழ்க்கையைக் கதைக்குக் களமாகக் கொண்டோர் என்ற அளவிலேயே குறிப்பிடத்தக்கவர்கள்.' என்ற மதிப்பீடுக்கே நூலாசிரியரால் வர முடிகின்றது.

2. "ஈழத்தில் ஐம்பதுகளிலே சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளெக்கெதிராக முன்வைக்கப்பட்ட சமுதாய விமர்சனக் கண்ணோட்டம் சமகாலச் சிறுகதைகளில் பிரதிபலித்தது.  செ.கணேசலிங்கன், டொமினிக் ஜீவா முதலியோர் இக்கண்ணோட்டத்திற் பல சிறுகதைகளை எழுதினர். ஈழத்துச் சூழ்நிலையில் நாவல்கள் எழுத விழைந்த இளங்கீரன் தமது நாவல்களிலும் இப்பிரச்சினைகளை அணுகினார்.  எனினும் எழுத்தார்வத்தால் உந்தப்பட்ட அவரது நாவல்களில் இச்சமுதாய விமர்சனக் கண்ணோட்டம் கதையம்சத்திற்குத் துணைபுரியும் வகையிலேயே பயன்படுத்தப்பட்டது. பிரச்சினைகளையே கதையம்சமாகக்கொண்டு அவற்றின் வரலாற்று முறையிலான வளர்ச்சியையே கதை வளர்ச்சியாகக் கொண்டு நாவல்களை எழுதும்போக்கு அறுபதுகளின் நடுப்பகுதியிலிருந்தே ஈழத்தில் உருவாகியது." (பக்கம் 64) இவ்விதமாக நூலாசிரியர் கூறும் கூற்று எதற்காக இளங்கீரனின் படைப்புகளை எழுத்தார்வக் காலகட்டத்தில் அவர் உள்ளடக்கினார் என்பதற்கான முக்கியமான காரணங்களிலொன்று. எனினும் ' எழுத்தார்வத்தால் உந்தப்பட்ட அவரது நாவல்களில்' என்று அவர் குறிப்பிடுவதற்குரிய சான்றுகளை இன்னும் விரிவாக அவர், நூலாசிரியர், விளக்கியிருக்கலாமென்று தோன்றுகிறது. ஏனென்றால் ஆரம்பத்தில் இளங்கீரனின் படைப்புகளில் திராவிடக் கட்சிகளின் பாதிப்பு இருந்ததாகப் பல ஆய்வாளர்கள் அவ்வப்போது குறிப்பிட்டுள்ளார்கள். அதன் பின்னரே இலங்கையில் முற்போக்கு முகாமில் புகுந்த இளங்கீரனின் நாவல்கள் வெளிவரத் தொடங்கியிருந்தன. அவற்றை எழுத்தார்வத்தால் உருவான நாவல்கள் என்று கூறுவதில் எனக்குச் சிறிது தயக்கமே. அவ்விதம் கூறுவதானால் அதற்குரிய வலுவான சான்றுகளையும் வைப்பது அவசியமென்று எண்ணுகின்றேன். இருந்தாலும் நூலாசிரியர் ஈழத்து நாவல்களின் காலகட்டங்களை நிர்ணயம் செய்தபின்னர், அவற்றுக்குள் அடங்கிய நாவல்கள் பற்றிப் பொதுவாகக் கூறாமல், தன் நோக்குக்கேற்ப அவற்றைப் பற்றிக் கூறுவது வரவேற்கத்தக்கது. அது ஏற்படக்கூடிய சந்தேகங்களிலிருந்து நூலாசிரியரின் சிந்தனை தப்பியோடவில்லை என்பதைப் புலப்படுத்துகிறது. எழுத்தார்வக் காலத்தில் இளங்கீரனின் படைப்புகளை அடக்கிய நூலாசிரியருக்கும், சமுதாய விமர்சனக் காலகட்டப் படைப்புகளைப் பற்றிக் கூறும்போது இவ்விதமானதொரு சந்தேகம் தோன்றியிருக்கிறது. அதனால்தான் தன் நோக்கத்தை நியாயப்படுத்தும் வகையில் 'ஈழத்துச் சூழ்நிலையில் நாவல்கள் எழுத விழைந்த இளங்கீரன் தமது நாவல்களிலும் இப்பிரச்சினைகளை அணுகினார்.  எனினும் எழுத்தார்வத்தால் உந்தப்பட்ட அவரது நாவல்களில் இச்சமுதாய விமர்சனக் கண்ணோட்டம் கதையம்சத்திற்குத் துணைபுரியும் வகையிலேயே பயன்படுத்தப்பட்டது' என்று அவரால் கூற முடிகிறது.

இவ்விதமான முடிவுக்கு அவர் ஏன் வந்தார் என்பதை அவர் குறிப்பிடும் எழுத்தாளர்களின் படைப்புகளினூடு விபரித்திருக்கலாமே என்ற எண்ணம்தான் இதனைப் படித்தபொழுது தோன்றியது. என்னைப்பொறுத்தவரையில் எழுத்தார்வக் காலகட்டத்தில் அ. செ. முருகானந்தன், கனக. செந்திநாதன், கசின், வ. அ. இராசரத்தினம், சொக்கன், சி. வி. வேலுப்பிள்ளை போன்றோரை உள்ளடக்காமல் 'சமூக உணர்வும், தேசிய உணர்வுச் சாயலும் மிக்க நாவல்கள்' என்னுமொரு பிரிவினை எழுத்தார்வக்காலகட்டத்தின் உப பிரிவுகளிலொன்றாக்காமல், புதியதொரு பிரிவாக உருவாக்கி அவர்களின் படைப்புகளை அப்பிரிவினுள் உள்ளடக்கி இன்னும் விரிவாக ஆராய்ந்திருக்கலாமே என்று படுகிறது.

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நாவல்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் பொதுவாகக் குறிப்பிடாமல் கனடாத் தமிழ் நாவல்கள், ஆஸ்திரேலியத் தமிழ் நாவல்கள், பிரெஞ்சுத் தமிழ் நாவல்கள், நோர்வேத்தமிழ் நாவல்கள், சுவிஸ் தமிழ் நாவல்கள், டென்மார்க் தமிழ் நாவல்கள், ஜேர்மனித் தமிழ் நாவல்கள் என்று... பல்வேறு பிரிவுகளை உருவாக்கி ஆராய்ந்திருக்கலாமென்று தோன்றுகின்றது. நூலின் திருத்திய பதிப்பு வெளிவந்த 2009ஆம் ஆண்டினை  விடத்தற்போது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் படைப்புகள் பற்றிய விபரங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. எதிர்காலத்தில் மேற்படி நூலானது இன்னும் விரிவாக்கப்பட்டு, மேற்படி பிரிவுகளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் படைப்புகள் ஆராயப்பட்டால் இந்நூலின் கனம் இன்னும் அதிகமாகும். இந்நூலின் அமைப்பானது இவ்விதமான திருத்தங்களை உள்வாங்கி விரிவாக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது (ஏற்கனவே குறிப்பிடப்பட்ட விடயங்களில் எந்தவிதப் பெரிய மாற்றங்களையும் செய்யாமல்) இந்நூலின் சிறப்புகளிலொன்று.

1978 ஆம் ஆண்டுவரையில் வெளியான ஆய்வுகள் பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர் " 1978 ஆம் ஆண்டுவரையிலான நாவலிலக்கிய வரலாற்றை நோக்கியபோது நூல் வடிவில் வெளிவந்தனவற்றை மட்டுமின்றிப் பத்திரிகை சஞ்சிகை என்பவற்றில் தொடர்களாக வெளிவந்தனவும் கவனத்திற்கொள்ளப்பட்டன.  1978ற்குப் பிற்பட்ட இந்த நோக்கிலே நூலாக்கங்கள் மாத்திரமே இப்போது கவனத்திற்கொள்ளப்படுகின்றன.  முற்சுட்டிய சூழ்நிலைக்காரணியே தொடர்கதைகளைத் தொகுத்து நோக்கத் தடையாயிற்று" (பக்கம் 148) என்று குறிப்பிட்டிருக்கின்றார்.  இதன்படி ஆசிரியர் 1978ஆம் ஆண்டுவரை வெளியான அனைத்து நூல்களையும், தொடர்கதைகளையும் தொகுத்திருக்கிறார் என்னும் தொனி தென்பட்டாலும் அது நடைமுறைச் சாத்தியமில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே. அது மிகவும் சிரமமான செயற்பாடு. இதற்கு வெளியான அனைத்து பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். இலங்கை சுவடிகள் திணைக்களம் அனைத்து வெளியான நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகளை தன்வசம் வைத்துள்ளதென்பதற்கில்லை. இருந்தாலும் இயலுமானவரையில் ஆசிரியர் ஆய்வுக்குத் தேவையான படைப்புகள் பற்றிய விபரங்களைத் திரட்டியுள்ளார் என்று குறிப்பிடலாம்.

பல எழுத்தாளர்களின் வெளியான தொடர்கதைகள் பற்றிய விபரங்கள் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள வெளியான நாவல்கள் பற்றிய விரிவான பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஈழத்தின் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஒரேயொரு நாவலான , தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்து வெளிவந்த காலத்தில் பல வாசகர்களின் பாராட்டினைப் பெற்ற 'மனக்கண்' பற்றிய விபரங்களை அப்பட்டியலில் காணமுடியாதது ஆச்சரியம்தான். இவ்வாய்வு நூலின் திருத்திய பதிப்பு 2009இல் வெளியாகியுள்ளது. இச்சமயத்தில் 'மனக்கண்' பதிவுகள் இணையத்தளத்திலும் தொடராக வெளிவந்திருக்கிறது. அதே சமயம் எழுபதுகளின் இறுதியில் 'தணியாத தாகம்' முடிந்த கையோடு , சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் வெளிவந்திருக்கின்றது. நிச்சயமாக நாவல்கள் பட்டியலில் இந்நூல் பற்றிய விபரங்கள் வெளிவந்திருக்க வேண்டும்.

இது போல் 1978ற்குப் பின்னர் வெளியான நாவல்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 2008 வரையிலான நாவல்கள் பல சேர்க்கப்பட்டிருக்கின்றன. இக்காலகட்டத்தில் வெளியான எனது நாவல்கள் பற்றிய விபரங்கள், மண்ணின் குரல் (கனடா, 1987; புரட்சிப்பாதையில் வெளியான சிறுநாவல், மற்றும் கவிதைகள், கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு. மங்கை பதிப்பக வெளியீடு.), அமெரிக்கா (1996; அமெரிக்கா என்னும் தாயகம் பத்திரிகையில் தொடராக வெளிவந்த சிறுநாவல், மற்றும் சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு; ஸ்நேகா/மங்கை பதிப்பக வெளியீடு), மண்ணின் குரல் (1998; மண்ணின் குரல், கணங்களும் குணங்களும், அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும், வன்னி மண் ஆகிய நாவல்களின் தொகுப்பு; குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடு) எதனையும் மேற்படி பட்டியலில் காண முடியவில்லை. இவை பற்றிய விபரங்கள் இணையத்தில் (பதிவுகள் இணையத்தளமுட்பட) பல தளங்களிலுள்ளன. இவையும் விடுபட்டுள்ளன. மேலும் எத்தனைபேரின் படைப்புகள் பற்றிய விபரங்கள் விடுபட்டுப்போயுள்ளன என்பது தெரியவில்லை.  இவ்விதம் நூல்கள் விடுபட்டதற்கு நூலாசிரியரைக் குறை கூற முடியாது. அவர் பலரிடமிருந்து நாவல்கள் பற்றிய விபரங்களைப் பெற்றிருப்பார். அவருக்குப் பட்டியல்களைக் கொடுத்தவர்களுக்கு மேற்படி நூல்களைப் பற்றிய விபரங்கள் தெரியாமலிருந்திருக்கக்கூடும். இந்த நாவல் பற்றிய பட்டியல் தட்டச்சு செய்யப்பட்ட நிலையில் யாரிடமாவதிருந்தால் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அதனை இணையத்தில் பிரசுரிப்பதன் மூலம் இதில் விடுபட்ட படைப்புகள் பற்றிய விபரங்களைக் கோரலாம். பட்டியலை எதிர்காலத்தில் மேலும் செழுமைப்படுத்த அது உதவும்.

இன்னுமொரு முக்கியமான எண்ணமொன்று இந்த நூலினை வாசிக்கையில் தோன்றியது. ஈழத்தில் வெளியான நாவல்கள் என்னும் போது சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்கள், பிரதேச நாவல்கள், மர்ம நாவல்கள் என்றெல்லாம் குறிப்பிடும் நூலாசிரியர் இக்காலகட்டங்களில் படைக்கப்பட்ட சிறுவர் நாவல்களை மறந்து விட்டார். உண்மையில் சிறுவர் அல்லது குழந்தைகளுக்காகப் படைக்கப்பட்ட நாவல்களையும் மேற்படி நூல் உள்ளடக்கியிருக்க வேண்டும். அறுபதுகளில், எழுபதுகளிலெல்லாம் பத்திரிகைகளில் குழந்தைகளுக்கான தொடர்கதைகள் பல வெளியாகியுள்ளன. ஈழநாடு மாணவர் மலரில் கூடத் சிறுவர் தொடர் நாவல்கள் வெளியாகியுள்ளன. சிந்தாமணியில் மாஸ்டர் சிவலிங்கத்தின் குழந்தைகளுக்கான தொடர் நாவல்கள் பல வெளியாகியுள்ளன. அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'சங்கீதப் பிசாசு' என்னும் சிறுவர் நாவலொன்று சிரித்திரனில் வெளியாகியதாக அறிய முடிகின்றது. பின்னர் எழுபதுகளில் சிரித்திரன் வெளியிட்ட கண்மணி சிறுவர் இதழில் இந்நாவலில் ஓருரு அத்தியாயங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் கண்மணியும் அற்ப ஆயுளுடன் முடிந்து போனது. எதிர்காலத்தில் இந்நூலின் திருத்திய பதிப்பு வெளியாகும் போது ஈழத்தில் வெளியான குழந்தைகளுக்கான நாவல்களைத் தனியானதொரு இணைப்பாக, பிரதேச நாவல்களைப் போல் , ஒரு தனிப்பிரிவாக உள்ளடக்குவது நல்லதென்பதென் கருத்து.

இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிடலாமென்றெண்ணுகின்றேன். நூலாசிரியர் எழுத்தார்வக்காலம், சமுதாய விமர்சனக் காலம் என்று ஈழத்து நாவல்களின் காலகட்டங்ளை நிர்ணயிப்பதற்கு, எத்தனை நாவல்களை வாசித்த பின்னர் அவ்வகையான முடிவுக்கு வந்தார் என்பதைச் சிறிது விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கலாம். உதாரணமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியான நாவல்களின் எண்ணிக்கை எத்தனை, இவற்றில் எத்தனை படைப்புகளைத் தான் வாசித்து மேலுள்ளவாறு நாவல்களின் காலகட்டங்களைப் பிரிப்பதற்கு முன்வந்தார் என்பவை பற்றி இன்னும் விரிவாக விளக்கியிருந்தால் ஆய்வின் கனம் இன்னும் அதிகரித்திருக்கும்.

இன்னுமொரு விடயம் ஈழத்தின் நகைச்ச்சுவை நாவல்களைப் பற்றியது. பொ.சண்முகநாதன் நகைச்சுவைப் படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவரது நாவல்களிரண்டு 'சேறும் தண்ணீரும்', 'அக்கரை அறுவடை' ஆகியன வெளிவந்துள்ளதாக அறிகின்றோம். அவரைப் பற்றிய விபரங்கள் எதனையும் நான் இந்நூலில் காணவில்லை.

எழுபதுகளில் இன்னுமொரு நகைச்சுவை எழுத்தாளரின் படைப்புகளை சிந்தாமணி பத்திரிகையில் வாசித்திருக்கின்றேன். வாசித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றேன். அவரது நகைச்சுவைத் தொடரொன்று சிந்தாமணியில் வெளிவந்தது. யாழ் மணிக்கூட்டுக் கோபரத்திற்கு அண்மையில் முற்றவெளியிலிருந்து பனங்கள்ளினை எரிபொருளாகப் பாவித்து விண்வெளிக் கப்பலினூடு யாழ்ப்பாணத்தமிழர்கள் சிலர் விண்வெளி செல்வது பற்றியது. அவரது பெயர் த.இந்திரலிங்கம். அவரைப் பற்றிய விபரங்கள் எதனையும் நான் இந்நூலில் காணவில்லை.

ஈழத்துத் தமிழரின் நகைச்சுவை நாவல்கள், தொடர்கதைகள் இன்னும் அதிகமிருக்கலாமென்று எண்ணுகின்றேன். இவை பற்றிய மேலதிக ஆய்வுகள் செய்வது பயனுள்ளதென்பதென் கருத்து.

மொத்தத்தில் ஆய்வு மற்றும் திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் படைக்கப்பட்ட மேற்படி நூலானது இதுவரை வெளியான இத்துறை பற்றிய நூல்களில் முதலிடத்திலுள்ளது என்பதைக் கூறுவதில் எனக்கு எத்தகைய தயக்கமுமில்லை. எதிர்காலத்தில் மேலும் திருத்திய விரிவான பதிப்பாக வெளிவந்து, ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு மற்றும் திறனாய்வு நூலாக இந்நூல் விளங்கிட வேண்டுமென்பதென் அவா.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்