பிரித்தானியத் தமிழர் பேரவை: தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் (UCL) இல் இடம்பெற்றது
தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு இடம் பெறுகின்றமையை கண்டித்தும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து எவ்வாறு அவற்றை வென்றெடுக்க முடியும் என்பது தொடர்பான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் இடம்பெற்றது. நிகழ்வின் முதல் அம்சமாக தமிழ் மகா பிரபாகரனின் கடின உழைப்பில் தயாரிக்கப்பட்ட 'திஸ் லான்ட் பிலோங்ஸ் ரு ஆமி ' எனும் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. யுத்தத்திற்கு பிந்திய இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் எவ்வாறு பேரினவாத அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டுள்ளன என்பதை காட்சிகள் சித்தரித்திருந்தன. தொடர்ந்து உரை நிகழ்திய இஸ்ரேலிய நாட்டு பேராசிரியர் ஒரின் - நில உரிமைத்துவம் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார் குறிப்பாக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் நில அபகரிப்பின் ஊடாக தமிழர்களது உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் அல்லது தடுக்கும் வகையில் சர்வதேச சமுகத்துடன் இணைந்து எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பது குறித்தும் தெளிவுபடுத்தினார். சர்வதேச தரத்திலான தரவுகள் சட்டம் மற்றும் கோட்பாடு ஆகியவற்றை ஒப்பிட்டு இலங்கை விடயத்தில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் போன்றவற்றையும் அறிவுறுத்தினார். சேபியா, ஈரான், எஸ்தோனியா, சூடான் மலேசியா துருக்கி இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் மக்கள் எதிர் கொண்டிருந்த இவ்வாறான பிரச்சினைகளை உதாரணமாக எடுத்துரைத்து இதன் மூலம் பாதிக்கப்படும் தமிழ் தாயக மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் அல்லது நீதியை பெற்றுக் கொடுக்க முடியும் என்பது குறித்து பரிசீலித்தார்.