தேடி எடுத்த கட்டுரை! - அறிஞர் அ.ந.கந்தசாமி சுதந்திரன் பத்திரிகை ஆசிரியராகவிருந்தபோது (1949 - 1952) கவீந்திரன் என்னும் பெயரில் எழுதிய கட்டுரைகளிலொன்று.
பகுதி 2: 14.1.51 சுதந்திரன்
கலையிலே பிரச்சாரம் இடம் பெறலாமா அல்லது கலை கலைக்காகவா - இந்தப்பிரச்னை இலக்கியத்துறைகளில் ஈடுபட்டோரிடையே காணப்படும் தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. கலை என்பது வாழ்வின் கண்ணாடி, அத்துடன் வாழ்வின் வழி காட்டி என்று அதனை உன்னதமாக மதிப்பவர்கள் கலையை வழிகாட்டும் நல்லறிவுப் பிரச்சாரத்துக்காகவே உபயோகிக்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றனர். ஆனால் இன்னொரு சாரார் கலையை வெறுமனே பொழுதுபோக்குப் பொருளாகக் கருதுகின்றனர். இவர்கள் வெறும் அழகு மட்டும் இருந்தால் போதும் என்று வாதமிடுகின்றனர். அறிவிப்பிரச்சாரம் தலைகாட்டும் நேரத்த்தில் 'அந்தோ அழகு குன்றியதே' என்று தலையில் கை வைத்து ஓலமிடுகின்றனர். பாரதிதாசன் முன்னைய கட்சியைச் சேர்ந்தவர். இது விஷயத்தில் அவருக்கும் அவர் குரு பாரதிக்கும் ஒருமைப்பாடுண்டு.
இன்றைய இலக்கிய மறுமலர்ச்சி யுகத்தின் அதிகர்த்தா பாரதி என்பது எல்லோரும் ஒப்புக்கொண்ட விஷ்யம். அந்தப் பாரதி ஒரு மகத்தான பிரச்சாரக் கவி என்பதும் மறுக்க முடியாத விஷயமாகிவிட்டது. பாரதி தேசிய உணர்வின் எக்காளமாக, புதுமைத்தாகத்தின் பேரொலியாக, சுதந்திரத்தின் சங்க நாதமாக, புரட்சி உணர்வின் சிம்ம கர்ஜனையாக தமது கவிதையையும் , வசனத்தையும் செப்பமிட்டார். அதுதான் அவரை மக்கள் கவியாக , மகா கவியாக ஆக்கி வைத்ததென்பதில் சந்தேகமில்லை.
பாரதி பரம்பரையில் வந்த பாரதிதாசனும் குரு சென்ற பிரச்சாரப் பாதையையே தாமும் மேற்கொண்டார். ஆனால் அந்தக் குருவின் கொள்கைகளிலும் நூற்றுக்கு நூறு எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளவில்லை இந்த சிஷ்யர் பல துறைகளில் புத்தப்புதுக் கொள்கைகளை இந்தப்புரட்சிக்காரர் அனுசரித்து வருவது கண்கூடு. பாரதியே ஒரு தீவிரவாதி என்பது பிரசித்தம். அவரிலும் தீவிரவாதியாக - அதாவது தீவிரவாதத்தில் கடைந்தெடுத்த, தீவிரவாதத்தை மேற்கொண்ட மகாதீவிரவாதியாக விளங்குகின்றார் நமது புதுவை செங்கரும்பு என்றால் அது மிகைபடக் கூறுவதன்று. உலகம் அறிந்த ஒன்றாகும்.
பாரதியின் பலவீனமல்ல அவரது தேசியப்பிரச்சாரம். அதுதான் அவர் பக்க பலமாக அமைந்து கவிதா வானிலே தனியிடம் பெற்றுத்தந்தது என்பது எமது முடிவு. தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இன்று அவரது கவிதையின் முழக்கம் கேட்பதும் அதனால்தானாகும்.
பாரதிதாசனுக்கும் அவரது அறிவுப்பிரசாரம் பலவீனமென்று கூறுதல் பொருந்தாது. அதுவே அவர் பராக்கிரமாக விளங்குகின்றது. அவரது கவிதையில் தீ நாக்குகள் போன்ற ஒருவித ஒளி வீசுவதற்கும் அதுவே காரணம்.
ஆனால் ஒரு சாரார் இக்கவிதைகளை வெறுக்கிறார்களே என்று கூறப்படலாம். அதே நேரத்தில் இன்னொரு சாரார் அதைக் கண்மணி போன்று பாதுகாப்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்தக் காரணத்தால் எதிர்ப்பு அவர் கவிதையை ஒழித்து விடாதென்பது வெளிப்படை.
மேலும் ஒழிக்கக் கங்கணம் கட்டுவது தேய்ந்துவரும் ஒரு பழமைச் சமுதாயம்; காக்கக் கங்கணம் கட்டுவது மலர்ந்து வரும் ஓர் புத்துலகம். புதுமை பழமையை வெல்வதே உலக இயற்கை. காரணம் பழமை சக்தியை இழந்து நிற்க புதுமை சக்தி மிகுந்து நிற்பதே என்று கூறலாம்.
*** *** ***
சரி இனி நாம் சஞ்சீவி பர்வதத்தில் மிதந்து வரும் புதுவைப் பூந்தென்றலை நுகர்வதற்குச் செல்வோம்.
இதோ வஞ்சியும் குப்பனும் மலைமேல் ஏறிச் செல்கின்றனர். வஞ்சியை அவன் கைகளால் வாரி விரைந்து செல்கிறான் மலை உச்சிக்கு.
" கண்ணின் கடைப் பார்வை
காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமரருக்கு
மாமலையும் ஓர் கடுகாம்"
மலையினுச்சியை அடைந்தார்கள் அங்கு மூலிகை இரண்டும் கிடைத்தன. ஒன்று 'ரேடியோ' மூலிகை. அதைச் சாப்பிடவுடனே உலகில் பேசப்படுவதெல்லாம் காதிலே கேட்கும். மற்றது 'டெலிவிஷன் (அதாவது கம்பியில்லாக் காட்சி) மூலிகை. அதைத் தின்றதும் உலகத்துக்காட்சிகளெல்லாம் கண் முன் விரியும்.
குப்பனும் வஞ்சியும் ஒரு மர நிழலிலே உட்கார்ந்து ரேடியோ மூலிகையைச் சாப்பிட்டனர். காதிலே உலகத்துப் பேச்சுகள் அலைபோல் வந்து மோதுகின்றன.
*** *** ***
பிரெஞ்சுக்காரர் நடத்தும் ஒரு ஹொட்டல். ஒரு வெள்ளை வெறி பிடித்த இத்தாலியன் அங்கு தங்குகிறான். அவன் தனக்கருகே கறுப்பன் ஒருவன் உட்கார்ந்து உணவருந்தியதைக் கண்டதும் கோபத்தால் துள்ளுகிறான். ஹோட்டல் முதலாளியான பிரெஞ்சுக்காரரிடம் 'இது அடுக்குமா? தர்மந்தானா?' என்று கேட்கிறான். பிரெஞ்சுக்காரன் பதிலுக்கு ஏளனஞ்ச் செய்கிறான்.
" இத்தாலிச் சகோதரனே! என்ன மதியுனக்கே
செத்துமடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும்
இவ்வுலக மக்களிலே என்ன பேதங்கண்டாய்?
..............
எங்கள் பிராஞ்சியர்கள் இப்பேதம் பாராட்டித்
தங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய ஒப்பார்கள்;
பேதப்புத்தி சற்றும்பிடிக்காது போ! போ! போ!
பேதங்கொண்டோர்க்கும் பிராஞ்சில் இடமில்லை"
*** *** ***
வஞ்சியும் குப்பனும் பிரெஞ்சுக்காரர்களை நாக்குளிர வாழ்த்தினார்கள். அதன்பின் அமெரிக்கன் பேசுவது காதிலே வீழ்கிறது.
" நல்ல அமெரிக்கன் நானிலத்தில் வாழ்கின்ற
எல்லாரும் என்றாய் இருக்க நினைத்திடுவான்.
பொல்லா அமெரிக்கன்
பொன்னடைந்து தான் மட்டும்
செல்வனாய் வாழத் தினமும் நினைத்திடுவான்"
*** *** ***
இங்கிலாந்திலிருந்து ஆங்கிலேயன் ஒருவன் பேசுகிறான். இந்தியாவின் நிலை பற்றிய அவன் கூற்று குப்பனையும் வஞ்சியையும் கவர்கின்றன. இந்தப்பகுதியிலேதான் பாரதிதாசனின் அறிவுப் பிரசாரம் உச்ச நிலை அடைகிறது.
ஆங்கிலேயன் தன் தோழனிடம் கூறுகிறான்:
"ஓ! என் சகோதரரே! ஒன்றுக்கு மஞ்சாதீர்!
நாவலந்தீவு நம்மை விட்டுப்போகாது"
(நாவலந்தீவு - இந்தியா)
எவ்வளவு உறுதியுடன் அவன் பேசுகிறான். இவ்வளவு திடநெஞ்சம் , நம்பிக்கை அவனுக்கு ஏற்படுவதற்குக் காரணம் தான் என்ன? அவனே அந்தக் காரணத்தையும் எக்களிப்புடன் தெரிவிக்கின்றான். இந்தியாவில் முப்பத்து முக்கோடி மக்கள் வாழ்கின்றனர். அதனால் என்ன? அவர்களிடையே இருக்கும் பேதங்களும் முப்பத்து முக்கோடி இருக்குமே. ஆகவே அங்கே ஒன்றுபட்ட ஒரு சமூகத்தோடு நாம் போராடவில்லை. தனித்தனியாக விளங்கும் தனி நபர்களோடுதான் நாம் போர்புரிகிறோம். எனவே வெற்றி நிச்சயந்தானே.
" வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்களங்கே
சூழ்கின்றபேதமும் அந்தத் தொகையிருக்கும்.
ஆகையால் எல்லோரும் அங்கே தனித்தனிதான்.
ஏகமனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே? "
இந்திய நாட்டிலே காணப்பட்ட ஒற்றுமையீனத்தை இதைவிட அழகாக எவ்வாறு வர்ணிக்க முடியும்? அழுத்தம் திருத்தமாகக் கவிஞர் இடித்துரைக்கும் பண்பு பாராட்டிற்குரியதாகும். எளிய வார்த்தைகளில் உயர்ந்த கருத்தை சுருக்கமாகக் கூறி விடுகிறார் புதுவைப் புலவர்.
ஆங்கிலேயன் வாய் மொழியாக இதை அமைத்திருக்கும் சாதுரியமும் மெச்சப்பட வேண்டியதே. தேசபக்தி கொண்ட இந்தியருக்கு இதுவே மிக உணர்ச்சி ஊட்டும் வழி என்பது கவிஞரின் முடிவு அது சரியான முடிவே தான் ஐயமில்லை.
ஆங்கிலேயன் வழியாக தமது வயிற்றெரிச்சலை மேலும் வெளியிடுகிறார் அவர்:
" பேதம் வளர்க்க பெரும் பெரும் புராணங்கள்!
சாதிச் சண்டை வளர்க்கத் தக்க இதிகாசங்கள்!
கட்டிச் சமுகத்தின் கண்வைத்துத் தாமுண்ணக்
கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்.
தேன்சுரக்கப் பேசி இந்து தேசத்தைத் தின்னுதற்கு
வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார்."
இவற்றையெல்லாம் சமாளித்து அவர்களால் நம்மை எதிர்க்க முடியுமா? மேலும்,
" ..... இன்னமும்
சிந்தனாசக்தி சிறிது மின்றி மக்களுக்கு
தம்தோள் உழைப்பினிலே நம்பிக்கைதானுமின்றி
ஊறும் பகுத்தறிவை இல்லாதொழித்துவிட்டு
சாறற்ற சக்கையாய்
சத்துடம்பைக் குன்றவைத்து
பொற்புள்ள மாந்தர்களை கல்லாக்கிய அந்தக்
கற்கள் கடவுள்களாய்க் காணப்படும் அங்கே!"
மக்கள் அங்கே கல்லுக்குச் சமானம். ஆனால் அக்கற்களோ அங்கு கடவுள் ஸ்தானத்தில் இருக்கின்றன. இந்திய மக்களின் மதபக்தியைக்கண்டு ஒரு ஆங்கிலேய உலோகாயதவாதி இவ்விதம் பேசுவதில் ஆச்சரியமில்லை. நமது தெய்வீக விக்கிரகங்கள் அவனுக்கு வெறுங் கருங்கற்களாகக் காட்சி அளிக்கின்றன. கவிஞர் பாரதிதாசனும் ஒரு நாஸ்திகவாதியானதால் இவற்றை அவரது கருத்துகளாகவும் கொள்ளலாம். அது எவ்விதமாயினும் சொல்லப்படும் விதம்தான் நம்மால் கவனிக்கபடவேண்டியது.
"இந்த நிலையில் சுதந்திரப் போரெங்கே?
கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்பதெங்கே?
தேசம் அழிந்துவிடும்! சுற்றத்தார் செத்திடுவார்!
போகங்கள் வேண்டாம்! பொருள் வேண்டாம்!
மற்றுமிந்தப்
பாழுலகம் பொய்யே. பரமபதம் போ என்னும்
தாழ்வகற்ற எண்ணுங்கால் சாக்குருவி வேதாந்தம்!
சாதிப்பிரிவு சமயப் பிரிவுகளும்
நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்
மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சி செய்தே
ஓடச் செய்தால் தமையும் ஓடச்செய்வார் என்பேன்"
*** *** ***
வஞ்சியும் குப்பனும் சர்வதேச சஞ்சாரஞ் செய்து விட்டார்கள்.
தமது நாட்டின் உண்மை நிலையை ஆங்கிலேயன் வாய்மொழியில் அவர்கள் உணர்ந்தார்கள். ஆம் இந்த நிலையில் அவன் இறுமாப்போடு " நாவலந்தீவு நம்மைவிட்டுப் போகா" என்று கூறுவதில் ஆச்சரியமென்ன?
இனிச் சொந்த நாட்டின் பச்சைப்பசுந் தமிழை அவர்கள் கேட்டார்கள். அதை அடுத்த கட்டுரையிலே நாம் ஆராய்வோம்.
நன்றி: சுதந்திரன் 14.1.51