தேடி எடுத்த கட்டுரை! - அறிஞர் அ.ந.கந்தசாமி சுதந்திரன் பத்திரிகை ஆசிரியராகவிருந்தபோது கவீந்திரன் என்னும் பெயரில் எழுதிய கட்டுரைகளிலொன்று. -
- இவ்வாரத்திலிருந்து 'புதுமைத் தமிழ்ப் பூங்கா' என்னும் விஷேச அம்சத்தை நாம் ஆரம்பிக்கிறோம். தமிழ் நாட்டின் இன்றைய கவிஞரிலே பாரதிதாசன் என்னும் திரு கனக சுப்புரத்தினம் இணையற்றவர். அவர் கவிதையிலே சொல்லழகு, கருத்தழகு என்பவற்றோடு அபூர்வமான ஒரு வேகமும் காணப்படுகிறது. இந்தக் கவிஞர் பெருமானின் 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்' தமிழுக்கு வாய்த்த ஒரு அரிய பொக்கிஷம். அந்த அருங்காப்பியத்தைப் பற்றிய 'கவீந்திரனின்' இக்கட்டுரை தற்கால இலக்கியத்தை ஊன்றிக் கற்கும் மாணவருக்கும் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம். - ஆசிரியர் -
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் மனோரம்மியமானது. குளிர்ச்சியும், அழகும், செழிப்பும் நிறைந்த அந்தச் சாரலிலே,
" குயில் கூவிக்கொண்டிருக்கும்;
கோலம் மிகுந்த
மயிலாடிக்கொண்டிருக்கும்;
வாசம் உடைய நற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும்;
கண்ணாடி போன்ற நீர்
ஊற்றுக்கள் உண்டு;
கனிமரங்கள் மிக்க உண்டு
பூக்கள் மணங்கமழும்;
பூக்கள் தோறும் சென்று தேன்
ஈக்கள் இருந்தபடி
இன்னிசை பாடிக்களிக்கும்;
வேட்டுவப் பெண்கள்
விளையாடப் போவதுண்டு;
காட்டு மறவர்களும் காதல்
மணம் செய்வதுண்டு;
நெஞ்சில் நிறுத்துங்கள்;
இந்த இடத்தைத்தான்
சஞ்சீவ பர்வதத்தின் சாரல்
என்று சொல்லிடுவார்"
இப்படிப்பட்ட இடத்தில்தான் கவிஞர் பாரதிதாசனின் அழகுக் காவியம் ஆரம்பமாகிறது.
கவிஞரிலே பாரதிதாசன் தனிப்பெருமை வாய்ந்தவர். எளிமைக்கு எளிமை, அதே நேரத்தில் அழகுக்கழகான கொஞ்சும் செந்தமிழை அவர் கவிதைகளில் கண்டு களிக்கலாம். சஞ்சீவி பார்வதத்தின் சாரலிலே இந்தப்பண்பு தலைசிறந்து விளங்குகிறது.
எதுகை மோனைக்காக அனாவசிய நடைமொழிகளைச் சேர்த்துச் சொற்பந்தலிடும் வழக்கம் பழைய பண்டிதர்களிடம் மட்டுமன்றி இன்றைய மறுமலர்ச்சிக்கவிஞர்கள் என்று மார்தட்டும் கவிராயர்களிடமும் நிறைந்திருப்பது கண்கூடு. இந்நிலையில் பாரதிதாசன் கவிதை மிகமிக விஷேச தன்மை வாய்ந்தது. ஆனால் அடைமொழிகள் இல்லாவிட்டாலென்ன? எதுகை மோனைப்பஞ்சம் அவருக்கு ஏற்படுவதில்லை. அழகான முறையில் சுவை அமையும் சிறப்பே சிறப்பு.
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் இன்றைய தமிழில் வெளியான பெருங்காப்பியங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது. எவ்விதமெனில் பாரதியாரின் பாஞ்சாலி சபதம் பால பண்டைய கதைகளை அடிப்படையாகக் கொண்டோ அல்லது கவிஞர் தேசியவிநாயகம் பிள்ளையின் 'ஆசிய ஜோதி' போல் ஆங்கில நூலை அடிபடையாகக்கொண்டோ எழுதப்படாமல் அதன் கருத்து, கதை முதலிய எல்லாவற்றிலும் சுயமாக படைப்பாக விளங்குகிறது இக்காவியம்.
இதனால் பாரதிக்கு இழிவு கற்பிப்பது எமது நோக்கமல்ல. பாரதிதாசனின் இந்நூலுக்குள்ள விஷேசித்த பண்பையே இவ்விதம் சுட்டிக்காட்டினோம். இக்கதையிலே சொல்லப்படும் சம்பவம் மிகவும் நுட்பமான ஒன்றாகும். அத்துடன் கவிஞரின் முற்போக்குக் கருத்துகளை வெளியிட ஓர் இயற்கையான ரசாபாசமற்ற பின்னணியும் சிருஷ்டிக்கப்படுகிறது. சரி இனிக்கவிதைப் பூங்காவில் நுழைவோம்:
சஞ்சீவி மலையின் சாரலிலே ஒரு நாள் மாலை குப்பனென்னும் குமரன் 'வாடாத பூ முடித்த வஞ்சி' என்னும் தன் காதலியைச் சந்திக்கிறான். ஆனால் அவளோ குப்பன் காதல் பெருக்கால் முத்தமிடப் போகும்பொழுது அவனைத் தடுத்து விடுகிறாள். அவனுக்கோ பெரிதும் ஏமாற்றம். அவன் கூறுகிறான்:
" கண்ணுக்குப் பாவையே..
தொட்டறிந்த கையைத்
தொடாதே என்றாய் நேற்றுப்
பட்டறந்த தேகசுகம்
விட்டிருகக் கூடுவதோ?"
வஞ்சி பதிலளிக்கிறாள்:
" ... காதலரே
அன்று நீர் சொன்னபடி
அவ்விரண்டு மூலிகையை
சஞ்சீவி பர்வதத்தில் தைய
லென்னைக் கூட்டிப்போய்
கொஞ்சம் பறித்துக்
கொடுத்தாலுயிர் வாழ்வேன்"
குப்பன் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி இதனைத்தட்டிக்கழிக்கப் பார்க்கிறான்: "கல்லில் நடந்தால் உன் கால்கடுக்கும்" என்கிறான். "பரவாயில்லை" என்கிறாள் வஞ்சி. குப்பனுக்குப் புதிய யோசனை உதிக்கிறது. "பெண்தானே , பயங்காட்டுவோம்" என்றெண்ணி, "பாழ்விலங்கால் அந்தோ படுமோசம் நேரும்" என்கிறான். வஞ்சியா பயப்படுவாள்? " சாவு என்பது வாழ்க்கையில் எல்லோருக்கும் நிச்சயமான விஷயம்தானே? இதற்குமா பயம்" என்று கூறி விடுகிறாள்.
குப்பன் யோசித்துவிட்டு அந்த மூலிகைகள் தரக்கூடிய தொல்லைகளை வர்ணிக்கிறான்:
"ஒன்றைத் தின்றாலிவ் வுலக மகள் பேசுவது
நன்றாகக் கேட்கும் மற்றொன்றைவாயில் போட்டால்
மண்ணுலகக் காட்சியெல்லாம் மற்றிங்கிருந்தபடி
எண்ணுக்கெதிரிலே காணலாம்"
வஞ்சி வாயாடி அல்லவா? இதைக் கேட்டதும் " அதனால்தான் ஆசை அதிகப்படுகிறது" என்று கூறுகிறாள் அவள்.
" அடியே நீ பெண்ணல்லவா? பெண்ணுக்குப் பிடிவாதம் தகுமா?' என்கிறான்.
இந்தச் சந்தர்ப்பத்தை அழகாக உபயோகித்துத் தமது முன்னேற்றக் கருத்துகளை வெளியிடுகிறார் கவிஞர் வஞ்சியின் வாயிலாக
" பெண்ணுக்குப்பேச்சுரிமை வேண்டாம் என்கிறீரா?
பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.
ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு
புலன் அற்ற பேதையாய்ப் பெண்ணைச் செய்தாள் அந்
நிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே"
இவ்வாறே கூறி வஞ்சி " நீங்கள் வராவிட்டால் என்ன நானே போய் மூலிகையைத் தேடுவேன். மூலிகை கிடைக்காவிட்டால்
" மேலிருந்து கீழே விழுந்திறக்க நானறிவேன்" என்கிறாள்.
அத்துடன் நிற்கவில்லை. குப்பனுக்கு ரோஷத்தை உண்டாக்கினால் தன் காரியம் சாதிக்கப்பட்டுவிடும் என்பது அவளுக்குத் தெரியும் எனவே அவள் பெண்மைக்குரிய இயற்கையான சாகசத்தோடு கூறுகிறாள்:
" ஊரிலுள்ள பெண்களெல்லாம்
உள்ளத்தைப் பூர்த்தி செய்யும்
சீரியர்க்கு மாலையிட்டுச்
சீரடைந்து வாழ்கின்றார்"
குப்பனுக்கு ரோசம் பொங்குகிறது. இனிமேலும் பொறுப்பானா? ஆனால் வஞ்சி இருக்கிறாளே அவள் பலே சாகசக்காரிதான். இப்படிப்பட்ட புருஷனுடன் இனிமேல் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது. அவனுடன் அவள் இனிமேல் பேசப்போவதில்லை.
மலைச்சாரலிலே மயிலொன்று போகிறது. சாகசக்காரி குப்பனோடு பேச மறுத்து மயிலோடு பேசுகிறாள்:
" தோகை மயிலே! இதை நீ கேள் சொல்லுகிறேன்.
நாகம்போல் சீறுகின்ற நாதரிடம் சொல்லிவிடு.
பச்சிலைக்குச் சஞ்சீவி பர்வதம் செல்வேன்"
திட்டவட்டமாகக் கூறிவிட்டாள் அவள். குப்பனும் வழிக்கு வந்து விட்டான்.
" அச்சுப்பதுமையே! ஆரணங்கே" என்று அன்பொழுக அவளைக்கட்டித்தழுவி ஓ! அவசரப்பட்டுவிடாதே! நானும் வருகிறேன். நில்லேடி. கூட்டிப்போய் பச்சிலையைச் செய்து தருகிறேன்" என்று கிளம்பினான் அவன்.
ஆனால் அவனும் லேசாவனல்ல. "உன்னைக்கூட்டிப்போய் மூலிகையைக் கிள்ளிக்கொடுத்தால் நீ எனக்கு என்ன தருவாய்?" என்று பேரம் பேசுகிறான் அவன்.
வஞ்சிக்குத் தலைவனின் கருத்துத் தெரியாதா என்ன? அவன் வேண்டியது அவளது ஆலிங்கன சுகமே. ஆகவே 'முத்தம் கொடுக்கிறேன்' என்கிறாள். ஆனால் அவள் பலே கைக்காரி. அதிலும் பேரம் பேசி விடும் அவள் சாமர்த்தியம் மெச்சப்பட வேண்டியதுதான். அவள் கூறுகிறாள்:
"முன்னே இலைகொடுத்தால் முத்தம் பிற கென்றாள்"
குப்பன் குறும்புக்காரன். முத்தம் கொடுப்பது பற்றி அவளுடன் பேசுவதிலேயே தனிப்பெரும் இன்பத்தைக்காண்கிறான் அவன். சரிதான் வஞ்சி' என்று பேரத்தைத் தொடர்கிறான் அவன்.
சிருங்கார ரசத்தைக் கவி இந்த நிலையில் உச்ச நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறார்.
அழகொழுகும் பச்சைப் பசுந்தமிழிலே அவன் கேட்கிறான்
" என்கிளியே நீ முத்தம்
எத்தனை தருவாய்?"
வஞ்சி சொல்கிறாள் " வேண்டுமானால் நூறு முத்தம் தருகிறேன்" அதுவும் எப்படிப்பட்ட முத்தங்கள்?
" என்றன் கரத்தால் இறுக உமைத்தழுவி
நோகாமல் முத்தங்கள் நூறு கொடுப்பேன்" என்கிறாள்.
குப்பனுக்குப் பொறுத்திருக்க முடியாது. இளமையின் தாபம் அவளது முத்தங்களின் இன்பத்தைக் காணத் துடியாய்த் துடிக்கிறது. உடனேயே அந்த நோக்காத முத்தங்களை அனுபவித்தால்... எனவே பேரம் மேலும் தொடர்கிறது. " நூறு ரூபாய் கொடுப்பேன் என்று கூறிவிட்டால் மட்டும் போதுமா? அச்சாரம் ஒரு ஐந்து ரூபா ஆவது கொடு" என்று கூறும் வணிகர்கள்போல் இந்தக் காதல்வணிகன் கூறுகிறான்.
" ஆசையால் ஒருமுத்தம்
அச்சாரம் போடென்றான்"
பேசு இத்துடன் முடிவடைந்தது. பின்னால் இருவரும் மலைமேல் போனார்கள். அங்கே நடந்தவற்றை நனது இரண்டாவது கட்டுரையில் பார்ப்போம்.
மேலே கூறிய பகுதியிலே பாரதிதாசனின் எளிய பதங்களும் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் பண்புமே வாசகர்களக் கவர்வன. நமது மறுமலர்ச்சிக்கவிஞர்கள் என்று கூறும் இளைஞர்கள்போல் நீட்டி வளர்த்துவது என்பது இப்புதுவைத்தமிழ்க் குயிலிடம் கிடையாது. சொற்செட்டிலே சங்க காலத்துப் பைந்தமிழ்தான் பாரதிதாசனின் பாடல்களுக்கீடு.
சிருங்கார ரசத்தைச் சிறப்பாகக் கையாளும் முறமையும் அதே சங்க கால காலத்தையே நமக்கு நினைப்பூட்டுகின்றன. இன்றைய தமிழ்க் கவிகளிலே இந்த ரசத்தை அழகாகக் கையாளுந் திறமை இவருக்கு மட்டுமே உண்டு என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மை.
எல்லாவற்றிலும் மேலாக அவரது அறிவுப்பிரச்சாரம் மேலே கூறிய பகுதியிலே பெண்ணடிமை பற்றி அவர் வஞ்சிவாயிலாகக் கூறும் வார்த்தைகள் சிந்தையைத் தூண்டிச் செயலுக்கு ஊக்குவன. இந்த அறிவுப்பிரச்சாரம் பாரதிதாசன் கவிதையின் பலகீனமென்பாருமுளர். இன்னொரு சாரார் அதுவே அவர் சிறப்பென்பர். இந்த விஷயத்தையும் நமது இரண்டாவது கட்டுரையில் கவனிப்போம்.
நன்றி: சுதந்திரன் 7.1.1951