ஏ தாழ்ந்த யாழ்ப்பாணமே!
தமிழகத்தின் நிலை கண்டு அறிஞர் அண்ணா 'ஏ! தாழ்ந்த தமிழகமே!' என்று மனம் நொந்து நூலெழுதினார். உரைகள் பல ஆற்றினார். மக்களைத் தட்டி எழுப்பினார். விழிப்படைய வைத்தார். என் பிரியத்துக்குரிய யாழ் மண்ணின் அண்மைக்கால நிகழ்வுகள் யாழ்ப்பாணம் தாழ்ந்து விட்டதா என்னும் ஒரு கேள்வியை எழுப்புகின்றன. அல்லது யாழ்ப்பாணத்தின் மேன்மையினை கீழ்மைத்தனமான செய்லகள் சில மூடி மறைத்துவிட்டனவா என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.
இலங்கையில் தமிழர்கள் வடகிழக்கில் செறிந்து வாழ்கின்றார்கள். ஏனைய பகுதிகளில் நடக்காத பல செயல்கள் யாழ் மாவட்டத்தில் தற்போது நடக்கின்றன. அவை யாழ் மண்ணின் எதிர்காலம் பற்றிக் கேள்விகளை எழுப்புகின்றன.
அடிக்கடி நடக்கும் வாள்வெட்டுச் சம்பவங்கள்! பணம் சம்பாதிகக் வேண்டுமென்ற வெறியில் நிகழும் முறைகேடான நிகழ்வுகள். அடிக்கடி நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள். அண்மையில் வீட்டுச் சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவர் ஒருவரின் வீட்டினுள் அத்துமீறிப்புகுந்த ஒருவன் அவரது தாலிக்கொடியைப்பறித்தெடுத்துச் சென்றிருக்கின்றான். இளம் அரசியல்வாதிகள் சிலர் நடந்து கொள்ளும் அநாகரிக முறை. பெண்களைப்பற்றிய பகிரங்கமான அவதூறுகள். போலி முகநூற் கணக்குகள் மூலம் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரியிறைத்தல். யாழ் பல்கலைகக்ழக மாணவ்ர்கள பட்டமளிப்பு விழாவைக் களியாட்ட விழாவாக மாற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். இது போதாதென்று யு டியூப் அங்கிள், அன்ரிமாரின் இளம் சமுதாயத்தின் மீதான எதிர்மறையான தாக்கங்கள்.
இவையெல்லாம் யாழ் மண்ணின் ஆரோக்கியமான அம்சங்களையெல்லாம் கருமுகிற் கூட்டங்களாக மூடி மறைத்து விடுகின்றன. இந்நிலை தொடர்வது எதிர்காலத்துக்கு நல்லதில்லை. இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்திச் சரியான பாதையில் கொண்டு செல்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டமிது. தென்னமெரிக்க நாடுகள் பலவற்றில் வன்முறைக் குழுக்களின் ஆதிக்கத்தால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளதை அவதானித்திருக்கின்றோம். தற்போதுள்ள சூழலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் , நாளை யாழ் மண்ணின் நிலையும் இவ்விதமே மாறும்.
தமிழர் வாழும் ஏனைய பகுதிகளை விட யாழ் மாவட்டத்தில்தான் இவ்விதமான சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாக எனக்குத் தோன்றுகின்ற்து. இதற்கெல்லாம் அடிப்படைக்காரணமாக நான் கருதுவது...
புலம்பெயர் தமிழர்களில் அதிகமானவர்கள் யாழ் மாவட்டத்தை அடியாகக்கொண்டவர்கள். குறுகிய நிலப்பரப்பிலிருந்து அதிகமானவர்கள் புலம்பெயர்ந்திருக்கின்றார்கள். இன்று நாட்டில் யுத்தம் முடிந்துள்ளது. வெளிநாடுகளில் செல்வச் செழிப்புடன் இருப்பவர்களின் பணம் பல்வேறு வழிகளில் யாழ் மண்ணைப் பாதிக்கின்றது. பலர் நல்ல விடயங்களுக்கு உதவுகின்றார்கள். உண்மை. ஆனால் அதே சமயம் அவ்ர்களது பணம் பல வழிகளில் யாழ் சமுதாயத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
காணிகளை வாங்கிக்குவிக்கின்றார்கள். கோடிக்கணக்கில் செலவழித்து வீடுகளைக்கட்டுகின்றார்கள். இவ்விதம் வீடுகளைக் கட்டுபவர்கள் பலர் தாம் வாழும் நாடுகளின் குடியுரிமையை விட்டு பிறந்த மண்ணுக்கு வரப்போவதேயிலலை. இவற்றால் அங்கு உழைத்து வாழும் வீடற்ற மக்களுக்கு வீடு ஒரு கனவாகவே இருக்கின்றது. வாடகை உழைப்பில் பெரும் பங்கினை எடுத்து விடுகின்றது. உறவினர் அனுப்பும் பணத்தில் குழுக்களாக இளைஞர்கள் இயங்குவதே அவர்களது வாழ்க்கையாக மாறுகின்றது. பணத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லும் தன்மை அதிகரிக்கின்றது. உழைப்பதிலுள்ள ஆர்வம் குறைககின்றது. வெளிநாட்டுக் கனவு தரும் போதையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.
இலக்கியம் அரசியல் , விடுதலைப்போராட்டம்,விளையாட்டு, கல்வி, கலை என்று பல் துறைகளில் சாதித்த மண் யாழ் மண். யாழின் மக்கள் கடும் உழைப்புக்குப் பேர் போனவர்கள். இந்த மண்ணில்தான் இன்று வன்முறை தாண்டவமாடுகின்றது. கல்வி கேளிக்கையாகிக்கிடக்கின்றது. அரசியலில் பாவிக்கப்படும் சொற் பிரயோகங்களால் இம்மண் நாறுகின்றது.
இந்நிலை மாற வேண்டும். எதிர்காலத்து நாயகர்களான இளைஞர்கள் விழித்தெழ வேண்டும். தம் ஆளுமையினை வளர்த்தெடுக்க வேண்டும். சக இளைஞர்களைச் சரியாக வழி நடத்தும் தலைமைத்துவ பண்பு மிக்க ஆளுமைகளாக அவர்கள் உருவாக வேண்டும். வளர்ந்தவர்கள் வழி காட்ட வேண்டும். இல்லாவிட்டால் தாழ்ந்து செல்லும் யாழ்ப்பாணம் மேலும் தாழ்ந்து செல்வதை யாராலும் தடுக்க முடியாது போய்விடலாம். "யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும்" என்று பொப் பாடகன் ஏ.ஈ.மனோஹரன் பாடிச்சென்றான். அது ஒரு கனவாகவே மாறி விடலாம்.