‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ என்ற கிரேக்க இடதுசாரிப் பொருளியலாளார் யானிஸ் வருஃபாகிஸ் அவர்களது நூல் குறித்து பேச உள்ளேன். இதனை எஸ்.வி. ராஜதுரை தமிழில் மிகச் செழுமையாக மொழிபெயர்த்து க்ரியா வெளியீடாக 2020 இல் வெளிந்துள்ளமை மிகப் பாராட்டுக்குரியதாகும். 203 பக்கங்களை அடக்கியுள்ள இந்நூல் மிக நேர்த்தியாக, அடிக்குறிப்புகளோடு அச்சிட்டிருப்பது வாசகனை வாசிப்பில் ஆவல்கொள்ளச் செய்கிறது. பொருளாதாரம் பற்றிய புத்தகம் என்ற தலைப்பைப் பார்த்தபோது சிரத்தை எடுத்துப் படிக்க முடியாத வகையில் மிகவும் கடினமாக இருக்குமோ அல்லது சலிப்பைத் தரக்கூடியவிதமாக இருக்குமோ என்று எண்ணினேன். பொருளாதாரத்துறை சார்ந்த வல்லுநர்கள்தான் அதனை வாசித்து விளங்குவார்கள் என்றும் சிந்தனையைக் குழப்பிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்புத்தகத்தை வாசித்தபோது சாதாரண நடைமுறை விஷயங்களிலிருந்து மிக உன்னதமான விஷயங்கள்வரை எல்லாவற்றையும் பொருளாதார முடிவுகள்தான் தீர்மானிக்கின்றன என்றும், வாழ்க்கைச் சம்பவங்களோடும், கலைச் சொற்களோடும் யானிஸ் அவர்கள் மகள் ஸீனியாவுக்கு அளிக்கும் விளக்கம் அற்புதமானது. மகளுக்கு பொருளாதாரம் பற்றி விளக்குவதுபோல் சுவையாக விவரிப்பது விநோதமான முயற்சியாகவும் எனக்குத் தென்பட்டது.
கோவிட் -19 தொற்று உலக நாடுகள் எல்லாவற்றிலும் பேசிச்கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் இதனைப் பேசுவது பொருத்தமா என்று எண்ணும்போது உலக மக்கள் முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள் என்ற சில அறிஞர்களின் கருத்தும் இந்நூலில் எனக்குக் கிடைத்தது. இதுவரை அனுபவித்து வந்த வசதிகளில் பெரும்பாலானவை வரலாறாக மாறப்போவதையும் காணப்போகிறோம் என்ற ஒரு கருத்தும் உண்டு. கொரோனா நோய்த் தொற்று எப்படி மனித வாழ்க்கையின் ஒரு பகுதியோ அதே போலத்தான் புத்தகக் வெளியீட்டுச் செயற்பாடுகள் இன்னொரு பகுதி என்று கூறியவர் க்ரியா ராம் அவர்கள். அவர் கோரோனா தாக்கத்தால் மறைந்தாலும், அவரையும் இவ்வேளை என் மனதில் நினைந்து அஞ்சலித்து இதனை விதைக்கிறேன். உண்மையில் இலக்கியப் படைப்புக்கள், கவிதைகள், அறிவியல் புனைகதைத் திரைப்படங்கள் போன்றன இல்லாவிட்டால்; நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வது கடினம்.
பொருளாதாரம் பற்றிய விளக்கங்களை இந்த நூலில் எட்டு அத்தியாயங்களாக்கி முன்வைக்கின்றார் யானிஸ் அவர்கள். ’ஏன் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகள்? என்ற கேள்வியோடு முதலாவது அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றார். ‘அப்பா இந்த உலகில் ஏன் இந்த அளவுக்கு ஏற்றத் தாழ்வு இருக்கிறது? மனித குலம் அத்தனை அறிவற்றவர்களா?’ என்ற மகள் ஸீனியாவின் கேள்விக்கு அவுஸ்திரேலியாவின் பூர்வீகக்குடிகளின் வாழ்விலிருந்து விளக்குகிறார் யானிஸ். அந்த மக்களுக்கு வெள்ளை அவுஸ்திரேலியர் இழைத்த கொடூரமான அநீதிகளையும், அந்த அபாரிஜின்களின் (பூர்வீகக்குடி மக்கள்) நிலத்தைக் கைப்பற்றிய வரலாற்றையும். அவர்கள் இன்னமும் வறுமையில் வாழ்வதையும் விபரிக்கின்றார். இது போன்ற நிலைமையை அபாரிஜின் போர் வீரர்கள் டோவர் துறைமுகத்துக்கு வந்து லண்டனுக்கு முன்னேறிச் சென்ற சம்பவத்தைக் கூறி பிரிட்டிஷாரை அவர்களது அரசி உட்பட அவர்கள் அதாவது அந்தப் பூர்வீகக்குடிமக்கள் கொலை செய்யவில்லை என்பதை துணிவுடன் இதில் பதிவு செய்கிறார்.
தொழில் நுட்பத்தின் அடிமைகளாக இருந்துகொண்டிருக்கும் மனிதர்களை, அடிமைகளாக்கி - கண்ணுக்குத் தெரியாத முதலாளிகள் எப்படி உருவாகின்றார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார். அந்த வகையில் இது பற்றிய சிந்தனைகளின் மேதையான கார்ல் மார்க்ஸையும், ஜோன் மேய்னார்ட் கெயின்ஸ், பெர்டோல்ட் ப்ரெஹ்ட்டின் போன்ற மேதைகளையும் சுட்டிச் செல்கின்றார். மூலதனம் அல்லது முதலாளியம் என்ற சொற்களை மாற்றி சாதாரணமான இயந்திரங்கள், உற்பத்திக்கான உற்பத்திச் சாதனங்கள் போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்.
ஏறத்தாழ எண்பத்திரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் குரல் நரம்புகளைப் பயன்படுத்திப் பேசவும் ஒலிகளை எழுப்பவும் முடிந்தது. அதன் பின்னர் எழுபதாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் கத்தி ஒலி எழுப்புதல், சுற்றுச் சூழலில் இயற்கையாகவே கிடைக்கும் காட்டு விலங்ககள், பறவைகள், கொட்டைகள், காய்கள், மீன் போன்றவற்றை நுகர்வதற்கு ஆரம்பித்தோம். பின்னர் அதற்குப் பதிலாகப் பேசுவதற்கும் உணவு உற்பத்தி செய்வதற்கும் நாம் அடைந்த ஆற்றல்தான் தற்போது பொருளாதாரம் என்ற அழைக்கப்படுவதைத் தோற்றுவித்தது என்கின்றார்.
எழுத்தின் முதல் வடிவம் மெஸபடோமியாவில் தோன்றின என்பதை தொல்லியல் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தெரிந்துகொண்டோம். அவுஸ்திரேலிய, தென்னமெரிக்க பூர்வகுடி மக்களுக்கு காட்டு விலங்குகள், கொட்டைகள், காய்கனிகள் குறைவில்லாமல் கிடைத்து வந்ததால் அவர்களுக்கு வேளாண்மைச் சாகுபடிக்கான தேவை இருக்க வில்லை. அவர்கள் இசையிலும், ஓவியம் தீட்டுவதிலும் கவனம் செலுத்தினவேயன்றி எழுத்து முறையை உருவாக்கவில்லை.
உன்னுடைய உலகத்திலும்சரி, என்னுடைய உலகத்திலும்சரி, ஏன் சிலர் ஏழைகளாகவும், மற்றவர்கள் செல்வம் கொழுத்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற நிலையை மகள் ஸீனியாவுக்கு விளக்கும்போது, இந்த நிலை ஏற்பட்ட இடங்களில்தான் வேளாண்மை நிலைபெற்றது என்று விளக்கம் தருகின்றார் யானிஸ்;. அதாவது உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகளை மேம்படுத்தியபோது மனித சமுதாயம் பெரும் மாற்றத்தை அடைந்து பொருளாதாரம் என்று அழைக்கப்படுவதன் அடிப்படை அம்சத்தை வேளாண்மை உற்பத்தி உருவாக்கியது. அதுதான் உபரி என்கின்றார். எதிர்கால பயன்பாட்டிற்கு உதவுகிற வகையில் மிச்சம் மீதி உள்ளவைதான் உபரி என்பர். அதாவது அடுத்த ஆண்டில் கூடுதலாக விதைப்பதற்கோ கையிருப்பையும் அதிகரிப்பதற்கோ பயன்படுத்துவதற்கான சேமிப்புவகை என இதனைக் கொள்ளலாம். இதனை நான் வாசித்துக்கொடிருந்த வேளை ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ என்ற ராகுலசாங்கிருத்தியாயனின் நூலை எமது வீட்டு புத்தக அடுக்கிலிருந்து நான் வாசித்த நினைவுகள் காட்சிகளாக்கி மனதுள் என்னை நிறுத்தியது.
சந்தைச் சமுதாயத்தின் பிறப்பினை எடுத்துக்கொண்டால் உலக வாணிபம் எவ்வாறு தோன்றிது என்பது ஒரு நீண்ட கதை. சீனர்கள் தான் முதன் முதலில் திசை காட்டியைக் கண்டுபிடித்தார்கள். அதன் பின்னர் திசைகாட்டியின் பயன்பாடு தொடங்கியது. ஐரோப்பாவில் கப்பல் கட்டும் தொழில் வளர்ச்சியடைந்தது. கடலில் கப்பல்களைச் செலுத்தும் திறனில் முன்னேற்றங்கள் காணப்பட்டன. ஐரோப்பிய கடலோடிகளுக்குப் புதிய கடல் தடங்களை கண்டுபிடிக்க உதவின. அத்தகைய கடல் தடங்கள் தம் பங்குக்கு உலக வாணிபத்தைத் தூண்டிவிட்டன.
அதன்பின்னர் இங்கிலாந்து, ஹொலந்து, ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற நாடுகளில் வணிகர்கள் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து நாடுகளிலுள்ள கம்பளி நூல்களை கப்பல்களில் ஏற்றிச் சென்று பரிவர்த்தனை மூலம் வணிக முயற்சியில் ஈடுபட்டனர். பம்பாய் துறைமுகத்தில் உணவுக்கான வாசனை பொருட்களுக்கு கம்பளி நூலினை பரிவர்த்தனை நிகழ் முறையை மீண்டும் மீண்டும் மேற்கொண்டனர். வணிகரீதியான இத்தகைய நிபந்தனைகள் பரிவர்த்தனை மதிப்புகள் என்ற வடிவத்தை எடுத்தன. இவை எல்லாச் சமயங்களிலும் இல்லாவிட்டாலும் அவை பணம் என்ற வடிவத்திலே வெளிப்படுத்தப்பட்டன. இறுதியில் நிலமும் பரிவர்த்தனை மதிப்பைப் பெற்றது.
அடுத்து கடன் என்பது மக்களிடம் எப்போதும் இருந்தது. ஒருவர் தன் அண்டை வீட்டுக்காரருக்குத் தேவையான தருணத்தில் உதவினால் அண்டை வீட்டுக்காரர் நன்றி உணர்வை வெளிப்படுத்த ஏதோ வேறு வடிவத்தில் திருப்பி செய்யப்பட்டு தார்மீகக் கடன்கள் அடைக்கப்படும். கடன் புரிதலைப்பொறுத்து இரு வகைகளில் வேறுபட்டிருக்கிறது. ஒன்று ஒப்பந்தம் செய்து கொள்கிறோம். இரண்டாவதாக வட்டி என்ற விடயம் இப்போதும் இருக்கிறது.
அன்றைய நிலபிரபுத்துவ அமைப்பில் செல்வமும் போட்டியும் தலைகாட்ட ஆரம்பித்தன. நில உடைமையாளன் தன் பங்கை எடுத்துக்கொண்டது போக மீதியை வைத்துக்கொண்டு மேற்பார்வையின்றி உற்பத்தி செய்தனர். கூலி கொடுத்தல் என்பதோ அப்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கவில்லை, பெரும்பான்மையான மக்களுக்கு கடன் என்பது முக்கியமான பிரச்சனையாக இருக்கவில்லை. லாபம் ஈட்டுதல் என்பதும் உயிர்பிழைப்பதற்கான விஷயமாகவும் இருக்கவில்லை. அதன் விளைவாக செல்வம் நில உடைமையாளர்களின் மாளிகைகளிலும் கோட்டைகளிலும் குவிந்தது. அதிகாரம் படைத்தவர்கள் பிற நிலப்பிரபுக்களையும் மக்களையும் கொள்ளையடித்தும், தாங்கள் அரசனின் உள்வட்டத்திற்குள் போவதற்கான சதிவேலைகளில் ஈடுபட்டும், வெளிநாட்டுப் போர்களில் பங்கேற்றும், இன்னும் வௌ;வேறு வகைகளிலும் செல்வத்தைத் திரட்டிக் கொண்டனர். இப்படித்தான் தாங்கள் கனவு கண்டுவந்த அதிகாரத்தையும் புகழையும் பெற்றனர்.
நிலத்திலிருந்து உணவைக் கொண்டுவரும் திறமை எம்மிடம் இருந்தாலும் பசித்தவர்களுக்கு உணவு வழங்கக்கூடிய சமூக அமைப்பை உருவாக்க நம்மால் முடியவில்லை. இவைகளின் பிரதிபலிப்பே புகழ் பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் John Steinbeck அவர்கள் ‘வெஞ்சினத்தின் திராட்சைகள்’ ( The Grapes of Wrath) என்ற சிறந்த நாவலை எழுதத் தூண்டியதாகக் கூறுகின்றார். இப்படிப்பட்ட அமைப்பை உருவாக்கத் தவறியது, ‘ஒரு மாபெரும் துயரமாக அரசைக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது’ என்றும், அதேவேளை உணவில்லாமல் போன மக்களின் சினம் திராட்சைக் கொடிகளில் உள்ள திராட்சைகளைப்போல வளர்ந்துகொண்டிருக்கிறது என்றும் எழுதுகிறார். ‘மக்களின் ஆன்மாக்களை சினம் என்ற திராட்சைகள் நிரம்பி பழுப்பதற்காகக் கனத்துக் கொண்டிருக்கின்றன’ என்கின்றார்.
இவையெல்லாம் நடப்பதற்கு உனக்குப் பரிச்சயமான நபர் எனக்கூறி ‘வங்கியாளர்களை’ யானிஸ் தன் மகள் ஸீனியாவுக்கு விளக்குவது என்னை மிகவும் ஆகர்ஷித்தது. மத்திய வங்கி என்ற ஒன்றைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். ஓவ்வொரு நாட்டுக்கும் - அதாவது துல்லியமாகச் சொல்வதென்றால் ஒவ்வொரு நாணயத்துக்கும் - ஒரு மத்திய வங்கி உள்ளது. மத்திய வங்கிகளுக்கு ஒவ்வொரு நாட்டிலும் தனிதனிப் பெயர்கள் உள்ளன. பிரிட்டனில் பாங் ஒஃப் இங்கிலாந்து , அமெரிக்காவில் ஃபெடெரல் வங்கி, ஆஸ்திரேலியாவில் ரிசர்வ வங்கி, இங்கிலாந்து தவிர்ந்த பிற பகுதிகளில் ஐரோப்பிய மத்திய வங்கி என்றே அறியப்படுகிறது.. பெயர் எதுவாக இருந்தாலும் மத்திய வங்கி என்பது அரசு உடமையிலுள்ள ஒரு வங்கி. மற்ற எல்லா வங்கிகளும் இதன் வாடிக்கையாளர்கள். இந்த மத்திய வங்கியிலிருந்துதான் அவற்றுக்கு பெருமளவில் பணம் வந்து சேர்கிறது.
பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும்போது வங்கியாளர்கள் தொழில்முனைவோர்கள் - செல்வந்தர்கள் - அரசாங்கத்தை எதிர்க்கும் போக்குடையவர்களாக இருப்பார்கள். வரி விதிப்பின் மூலம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒட்டுண்ணியே அரசாங்கம் என்று சுட்டுகிறார். கிளிஞ்சல்களுக்கும் ஒரு மத்திய வங்கி வழங்கும் பணத்துக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்கின்றார். செல்வந்தர்களுக்கு அரசு எப்போதுமே மிக அருமையான ஆயுள் காப்பீட்டை வழங்கி வந்திருக்கிறது. அரசு செய்யும் உதவிக்குக் கைமாறாக, அந்தச் செல்வந்தர்கள் தங்கள் காப்பீட்டுத் தவணையைக் கட்டாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து வந்தனர். சொத்துக்கள் எல்லாவற்றிலும் பார்க்கப் பத்திரங்கள்தான் மிக எளிதாகப் பணமாக மாற்றப்படக்கூடிய சொத்தாகும். வங்கியமைப்பு என்னும் சக்கரத்தையும் அதன் பற்களையும் உராய்வின்றி சுழர வைப்பவை பத்திரங்கள்தான் என்று நவீனத்தின் வங்கிச் செயற்பாடுகளை மிகச் சிறப்பாக விளக்குகின்றார் யானிஸ்.
‘ஆரூடச் சக்தியின் கீழுள்ள இரு சந்தைகள்’, ‘பேய் இயந்திரங்கள’, ‘அரசியல்தன்மையற்ற பணம் என்ற அபாயகரமான அதிக கற்பனை’, ‘முட்டாள் வைரஸ்கள்?’ என்ற சுவையான தலைப்புகளோடும் மேலும் இனிதாக நகர்த்துகிறார் யானிஸ் பொருளாதார விளக்கங்களை. வெற்றி என்பது ஒவ்வொரு தனிமனிதரும் மற்றவர்களுடன் ஒத்துழைப்பதை மட்டுமல்ல, மாறாக ஒவ்வொரு தனிநபரும் மற்றவர்கள் ஒவ்வொருவரும் தன்னைப் போலவே செயல்படுவார் என்று நம்புவதையே முதன்மையாகச் சார்ந்துள்ளது என்கின்றார். ஒரு மனிதனுக்கு நேரக்கூடிய மிக மோசமான விஷயம் என்னவென்றால், விரக்தியில் அவன் தன் ஆன்மாவைப் பிசாசுக்கு விற்க முடிவு செய்யும் போது, பிசாசு அதை வாங்கத் தயாராக இல்லை? என்பது தான். தமது தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் அற்ற நிலைமைகள், கணணியால் உருவாக்கப்படும் மெய்நிகர் யதார்த்த உலகம், மனிதர்களுக்கு மாற்றீடாக இயந்திரங்களின் புதிய வருகை, மனிதன் இறந்துவிடுவான் என்றும் இயந்திரம் அறிந்த குறிப்பு என்று என்னை சுழட்டிச் சிந்திக்க வைத்தது இந்தநூல். உண்மைதான் மனிதன் இறந்துவிடுவான் ஆனால் இயந்திரங்கள் இருக்கும் தானே?
‘உண்மை என்னவென்றால் சில வைரஸ்கள் அவை எந்த செல்களில் உயிர்வாழ்கின்றனவோ அந்தச் செல்களை அழிப்பதில்லை. ஆனால் மனிதர்களாகிய நாமோ, நமக்கு இடம் தரும்சுற்றுச் சூழலை முற்றிலுமாக நாசப்படுத்த உறுதி பூண்டவர்களாக இருக்கிறோம்’ என்பதை ‘த மெட்ரிக்ஸ்’ என்ற திரைப்படத்தில் வரும் ஏஜென்ட் ஸ்மித் என்ற மானுட வடிவத்திலுள்ள பாத்திரத்தினுடாக காட்சிகளை விஸ்தரிக்கிறார் யானிஸ். ஏஜெணட் ஸ்மித் மனிதர்கள் தனக்கு அருவருப்பூட்டுகிறார்கள் என்று கூறி அதற்கான விளக்கத்தைத் தருகிறான்.... ‘இந்தக் கோளத்தில் உங்களைப் பின்பற்றக்கூடிய இன்னொரு உயிர் இருக்கிறது. அது என்ன என்று உனக்குத் தெரியுமா? வைரஸ்தான் அது. மானுட ஜீவிகள் ஒரு வைரஸ் என்கின்றார் யானிஸ்;. இந்தக் கோளத்தைப் பீடித்துள்ள புற்று நோய். நீ ஒரு கொள்ளை நோய். நாங்கள்தான் அதைக் குணப்படுத்தும் மருந்து’ என்கின்றார்.
தாவரங்கள் விலங்குகள் ஆகியவை பெருந்திரளாக அழிந்தொழியும்படி செய்துள்ளோம், புவிக்கோளத்தில் காடுகளில் மூன்றில் இரண்டு பகுதியை அழித்துள்ளோம், அமில மழையை உருவாக்கிக் கோளத்தின் ஏரிகளை நச்சுத்தன்மையுள்ளனவாக ஆக்கியுள்ளோம், மண்ணரிப்பை உண்டாக்கியுள்ளோம், ஆறுகளின் நீரைத் தேக்கி அவற்றை முற்றிலுமாக வற்றச் செய்துள்ளோம், வளிமண்டலத்தை கரியமில வாயுவால் நிரப்பியதுடன், நமது கடல்கள் அமிலத்தன்மை அடையும்படியும், பவளப் பாறைகள் ஒழித்துக்கட்டப்படும் படியும், பனிக்கட்டிகள் உருகும்படியும், கடல் மட்டம் உயரும்படியும், பருவ நிலை சீர்குலையும்படியும், பல்வேறு பகுதிகளில் வாழும் பல்வேறு மக்கள் சமூகங்கள் அனைவரது வாழ்க்கையையும் அபாயத்துக்குள்ளாகும்படியும் செய்துள்ளோம். நமது ஒரே புகலிடமாக உள்ள உயிர்க்கோளத்தைக் கடுமையான ஆபத்துள்ளாக்கியதன் மூலம் நாம் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒட்சிசனை நாங்களே நச்சுப்படுத்தும் விண்வெளி வீரர்களை ஒத்திருக்கிறோம். உண்மையில் நாம் அப்படிப்பட்டவர்களாகவே இருக்கிறோம். ஏஜெண்ட் ஸ்மித் கூறியது தவறு என்று யாரால் சந்தேகிக்க முடியும்? என்று ஒரு அருமையான கேள்வியைத் தொடுக்கிறார் யானிஸ் இந்த நூலில்.
கற்பனையில் உதித்த ஒரு உருவம்தான் என்று ஏஜெண்ட் ஸ்மித்தை நீ கூறலாம். எமக்கு உரிமையும் உண்டு ஆனால் மனச்சாட்சிகளைத் தட்டி எழுப்பி நமக்கு அபாய எச்சரிக்கை விடுப்பதற்காக Christopher Marlowe, Mary Shelley, Frankenstein ஐப் படைத்ததுபோல, நாம் இந்த உலகத்தை அச்சுறுத்தும் வைரஸோ, புற்றுநோயோ அல்ல. சுயவிமர்சனம் செய்து கொள்கிற, நமது செயல்களைச் சிந்தித்துப்பார்க்கின்ற ஆற்றல் கொண்ட மனச்சாட்சியுடைய ஒரு ஜீவராசியே என்பதை ஏஜெண்ட் ஸ்மித் என்ற கற்பனைப் பாத்திரம் நிரூபிக்கின்றது’ என்று மனிதர்களைச் சாடும் பாணி என்னைக் கவர்ந்தன. உண்மையில் இவை வரவேற்கத்தக்கன. இத்துடன் எனது உரையை நிறைவு செய்கின்றேன். இறுதியில் முக்கியமாக இந்நூலை நிட்சயமாக எல்லோரும் படித்து யானிஸ் வருஃபாகிஸின் விளக்கங்களோடு தெளிவு பெறவேண்டும் என்று விரும்பி, இவை எமக்கு முன்பே தெரிந்திருக்கலாம். இருந்தும் யானிஸ் அவர்கள் குறிப்பிட்ட டி.எஸ்.இலியட்டின் அருமையான கருத்துக் கவியும் வரிகளை முன்வைத்து விடை பெற விரும்புகிறேன்.
"தேடுதலிலிருந்து நாம் ஓயமாட்டோம்
தேடுதலின் இறுதி என்பது
எங்கிருந்து தொடங்கினோமோ
அங்கு வந்து சேர்ந்து
அதை முதல் முறையாக
அறிவது போல அறிவதுதான்."
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.