அழகான தலைப்புக்கொண்ட நூல். மகரந்தம் பறந்து சிதறிப் பூக்களிலிருந்து பூக்களுக்குத் தாவிச் சூல் கொள்ள வைக்கின்றது. நவஜோதி ஜோகரட்னம் ஈழத்தில் தோன்றிய மகரந்தம். இன்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இலண்டனில் தன் மகரந்தத்தைப் பலவாயிரம் புலம்பெயர் பெண்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தவும் தமிழ் பணியை உறுதியுடன் செய்யவும் பயன்படுத்துவது யாவரும் அறிந்ததே. பிரித்தானியாவில் பெண்கள் உயர்வுக்காகக் குரல் கொடுக்கும் நவஜோதி ‘மகரந்தச் சிதறல்’ ஊடாக வானொலியால் பெண்களின் பங்களிப்பை முன்னிலைப்படுத்திப் பின்னர் நூல்வடிவில் நூல்வடிவில் பதிவுகளாக வெளிக்கொணர்ந்து பேசாப் பொருளைப் பேசத் துணிந்து தூண்டியுள்ளார்.
பௌவியமாகத் தெரிவு செய்து எழுதப்பட்ட இந்நூலில் உள்ளடக்கப்பட்டவர்கள் பற்றிய விமர்சனங்கள் மூன்று விடயங்களை விவாதத்திற்கு உள்ளாக்கலாம். முதலாவதாக இலைமறைகாய்களாக இருந்த சில பெருமாட்டிகள் பற்றி எழுதப்படவில்லை எனவும், வாழ்ந்துகொண்டிருப்போரில் முக்கியமான சிலர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனவும் அடுத்ததாக, அடுத்தவர் அறியாது பிரித்தியானியாவில் வந்து அவலப்பட்ட அகதிகளுக்கான உதவிகளைச் செய்தவர்களையும், பெண்கள் மீதான வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருந்தும், தாய் மண்ணின் அநாதைகளின் வாழ்வு உயரவும், கல்வி பெறவும் பணி செய்து வாழ்ந்த, வாழும் உத்தமிகளது பதிவுகள் இடம்பெறவில்லை என்ற ஆதங்கங்களும் எழலாம். ஒரே நூலில் எல்லாமுமே இடம்பெறமுடியாது. அவை இடம்பெறவேண்டும் என்ற தேவையை இந்நூல் வற்புறுத்துகிறது எனலாம்.
பிரித்தானியாவாழ் தமிழ்ப் பெண்கள் பற்றிய நோக்கத்தை – பரு வரைபாக வெளிப்படுத்தி வௌ;வேறு துறைகளில் அவர்கள் வகுக்கும் முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்து, பிரிவுகளாக இசை, நாட்டியம், நாடகம், ஓவியம், இலக்கியம், அரசியல், மருத்துவம், தொழில் முயற்சி என வகுக்கப்பட்டுள்ளது. ஓவியம், நாடகம், தொழில் முயற்சி ஆகிய பிரிவுகளிலும் தலா இரு பெண்களே பதியப்பட்டுள்ளமையும் பிதாவழிச் சமூக அமைப்பின் தாக்கம் முதலாம் உலக நாடுகளில் வாழும் நமது பெண்களுக்கும் தொடரும் ஒன்று என்பதை நிரூபிக்கின்றது. நவஜோதி இத்தகைய பகுப்பைக் கையாண்டுள்ளமை ‘ஈழத்து மாண்புறு மகளிர்’ பற்றி பத்மா சோமகாந்தன் எழுதிய நூலிலிருந்து வேறுபடுகிறது. இலண்டன்வாழ் சிவானந்தனின் றூநn அநஅழசல னநைள’ போன்ற படைப்பு ஒத்த படைப்பாளிகள் பெண்களிடையே தோற்றம் அளிக்கவில்லை என்பது புலம் பெயர்ந்த மக்களின் இலக்கியத் தேடலின் மூலம் அறிய முடிகிறது. எனினும் நவஜோதியின் முயற்சி எங்கள் சுயத்தை மீட்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
ஆசிரியர் தன் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களை அவர்களின் செயல்வீரம், கலைத்துவம், படைப்பாற்றல், அரசியல் ஆளுமை அடிப்படையில் அனுபவரீதியாக அறிந்து நேர்காணலைச் செய்து பிரித்தானியாவின் பனிமலைகளின் முகடுகளில் வெயில் பட்டுப் பிரகாசிக்கும் பனிக்கட்டிகளாக 33 பெண்களை இனங்கண்டு நேர்காணலைச் செய்து தந்திருக்கின்றார். பனி மலைகள் உருகித் தேம்ஸ் நதியில் ஆறாக உருவெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் திசையில் இன்று பல தமிழ்ப் பெண்கள் பல்வேறு துறைகளில் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களை இனங்காண்பதற்கான உந்து சக்தியை மகரந்தச் சிதறல் வழங்கியுள்ளது.
மேற்படிப்புக்காக மத்திய தரவர்க்கமும் பெண்களை பிரித்தானியாவுக்கு அனுப்பாது ஆண்களையே அனுப்பினர். அவர்கள் லண்டன் முதலாம் நகர்களில் படித்து வேலைபார்க்கத் தொடங்கிய பின்னர்தான்; மனைவியராகப் பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இக்காலம் ஈழத்துச் சமூக அரசியலில் காலனித்துவம் ஆட்டம் காணத் தொடங்கிச் சுதேச உணர்வு முகிழ்ந்த காலம். புளு கொலர் வேலைகள் ஆண்களுக்குச் சிங்கப்பூர், மலேயாவிலும் கிடைத்த காலம். இந்த மரபில் வந்தவர்கள்தான் க. கனகசபாபதியும் ‘எம்மை வாழ வைத்தவர்கள்’ என்ற நூலில் கண்ட 21 பேரும் (இருவர் வெள்ளைக்காரர்). இங்கும் கூடப் பெண் அதிபர்கள் இருவரே.
நவஜோதியின் நேர்காணலில் 7 இசைக் கலைஞர்களும், 5 நாட்டிய ஆசிரியைகளும் நேர்காணப்பட்டுள்ளனர். தையல்சுந்தரம் பரந்தாமன், சரஸ்வதி பாக்கியராஜா, அம்பிகா தாமோதரம், மாதினி சிறீஸ்கந்தராஜா, சிவசக்தி சிவசேன், பொன்னையா ஜெய அழகி, துஷி-தனு சகோதரிகள் என்ற கர்நாடக சங்கீத மேதைகளையும் நளாயினி ராஜதுரை, விஜயாம்பிகை இந்திரகுமார், ராகினி ராஜகோபால், ஜெயந்தி யோகராஜா, பிரேமளா ரவீந்திரன் ஆகிய பரத நாட்டிய ஆசிரியர்களும் அடங்குவர்.
நாடகமேதை பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளைபற்றி ஆய்வு செய்த மாதவி சிவலீலன் புதைந்த வடிவில் இருந்த பொருள் பொதிவான கருத்துக்களை ஆய்வுமூலம் வெளிக்கொண்டு வந்ததன் மூலம் நாட்டுப்புறக்கலைக்கு புத்தொளி கொடுப்பதுடன் பழைய கூத்துமூலம் சமூக மாற்றத்துக்கான புரட்சிகர கருத்துக்களை மேடையில் பிரச்சாரமாகக கொண்ட சீர்மையை எடுத்துக் காட்டுவதன் மூலம் கலை உலகிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
‘பரதம்’ இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுக்குள் நிற்கும் ‘பரதசாஸ்திரம்’ என்று மரங்களை வீதியோரம் வைத்துவிட்டு அதற்கு தடுப்புக் கூடுகள் அமைத்து அதனைப் புறத்தாக்கமின்றித் தன்பாட்டில் வளரவிடும் நிலையில்தான் பொதுவாகப் பரதக்கலையை தேவதாசி முறையிலிருந்து பிரித்து எடுத்துப் ‘புனிதம்’ கொடுப்போரே பெரும்பான்மைத் தமிழ் நாட்டிய ஆசிரியைகளாக உள்ளனர். மாற்றம் என்றால் குரளழைn என தங்களுக்கு உள்ளேயே ஒரு மனக் குளப்பத்தை (ஊழகெரளழைn) ஏற்படுத்தி மேற்கு உலகின் அதிரடிப் போக்குடைய வடிவங்களைச் சேர்த்து தாம் புதுமை படைத்ததாகக் கொள்கின்றனர். இந்த நிலைமையைத் தவிர்த்து எங்கள் கலைவடிவங்கள் என பாரம்பரியமாகப் பேணிவந்தவற்றில் மரபைப் பேணி எவ்வாறு புதுமைகாணக் கையாளலாம் என்ற கருத்தைச் சமூகத்துக்கு ஊட்டுவதாக அமைந்துள்ளது.
உதாரணமாக ‘பிரபல எழுத்தாளர் பிரமிள் தர்மமு சிவராமின் கவிதைகளுக்கு நாட்டுப் பாடலும் ஓர் ஆதாரமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதைச் சற்று விளக்குவீர்களா?’ என்ற தமிழரசி சிவபாதசுந்தரத்தின் கேள்வியில் சமூகஞானத்தின் விசாலம் புரிகிறது. சமூக அடிமட்டத்திலிருந்து உயர்வு எய்திய பெண்களாக எவரும் இந்நூலில் உள்ளாக்கப்படாமை பிரித்தானியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களில் அடிமட்டத்திலிருந்து வந்து சாதனைகள் செய்தவர்கள் இல்லை என்று கொள்வதா என்ற கேள்வியும் அவர்கள் பற்றிய தேடல் பூரணத்துவமானதா என்பதும் அலசப்படவேண்டியதும் இனிவரும் பதிவுகளுக்கான உசாவல்களாகவும் கொள்ளமுடியும்.
மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமையாக அஞ்சுகத்தை மு. நித்தியானந்தன் ‘கூலித்தமிழ்’ என்ற நூல் மூலம் எமது கண்முன்னே நிறுத்தினார். அத்தகைய ஆளுமைகள் புலம்பெயர்ந்து வாழும் எம்மவரிடையே தோன்றத் தொடங்கியுள்ளன. கல்வியின் எழுச்சியின் பிற்பட்ட பகுதிகளில்தான் பெண்களின் எழுச்சியின் மொட்டுக்கள் அரும்புகின்றன. ஆரம்ப காலத்தில் ஆண் கல்விதான் காலனித்துவ ஊட்டலில் முனைப்புற்று நின்றமையை யாழ்ப்பாணத்துப் பெண்கள் பலர் நவஜோதியின் நேர்காணலுக்கு உட்பட்டோராக இருக்கின்றனர்.
மங்களம்மாள் பற்றிய வரலாற்றை எழுதிய குறமகள்(வள்ளிநாயகி) யாழ்ப்பாணத்துச் சமூக முன்னேற்றம் என்பது எத்தகைய சமூகப்பரிமாணங்களைக் கொண்டிருந்தது என்பதை ‘யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் பெண்கல்வி’ என்ற நூலில் விளக்குகின்றார். அந்தப் பரிமாணங்களுக்கூடாக வெளிவந்த பெண்களாகவே பலரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதை நவஜோதியின் நேர்காணல் ஊடாகவும் காணமுடிகிறது. நாட்டியம், ஓவியம் பெண்களுக்கல்ல என்ற நிலையில் இருந்த யாழ்ப்பாணச் சமூகத்தில் நாட்டியத்தாரகைகளாகவும், கருத்து ஆழம்மிக்க ஓவியங்களை வடிக்கும் ஓவியங்களாகவும் முகிழ்ந்து லண்டன் மாநகரில் புலம் பெயர்ந்து கலைவளர்க்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பது பெண்களின் முன்னேற்றப் பாதையில் இருப்பதையும் இசை, நாட்டியத்துறையிலும் ஓவியம் போன்ற கவின் கலைகளில் எல்லாம் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டனர் என்பதையும் நவஜோதி ‘மலையகத்தின் முதல்பெண் ஆளுமை அஞ்சுகம் என மு.நித்தியானந்தன் ‘கூலித்தமிழ்’ என்ற நூலில் அறிமுப்படுத்துவதுபோல நவஜோதியைப் பிரித்தானிய தமிழ் பெண்களி;ல் முனைப்பாக நின்று சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் சமகாலப் பெண்களை முகர்ந்து தேர்ந்து எடுத்து அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த முதல்பெண்மணி எனலாம்’
பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைக்கும் பரம்பரை இன்னமும் மறையாத, செக்குமாடுகளாக வேலைவாங்கும் கூட்டம் இருக்கும்போது ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண்களுக்கு உற்சாகத்தை அளிக்க நவஜோதியின் நூல் தூண்டலாக அமையும்.
கோவிற்பணி என்ற பெயரில் பெண்களை அடிமைகளாக்கி தேவதாசிகள் என்ற குழுவாக இசை, நாட்டியத்தில் வலிமை பெற்று வாழ விடப்பட்டனர். இக்காலத்திலும் கூட வெறும் பண்டங்களாகப் பயன்படுத்தப்பட்டுச் சுயமாக இயங்க முடியாதவர்களாகவே வாழ்கின்றனர். இதனால் கோவில்களில் யாழ்ப்பாணப் பகுதிகளில் திருவிழா இறுதியில் ‘சின்ன மேளங்கள்’ இந்த மரபில் வந்தவர்களால் ஆடப்பட்டு வந்தது. இதனால் யாழ்ப்பாணத்தவரிடையே கூத்துக்கலை வளர்ந்திருந்தமை போல நாட்டியக்கலை வளரவில்லை. நாட்டிய ஆரம்பம் ‘சுப்பையா மாஸ்ரரிடம்’தான் ஆரம்பித்திருக்கலாம். மகரந்தச் சிதறலில் வரும் நாட்டிய ஆசிரிகைகளும் சுப்பையா மாஸ்டரிடம் கற்றதை ஒப்புக்கொள்கிறார்கள். நாட்டியத்திற்கு யாழ்ப்பாணச் சமூகம் கொடுத்த மதிப்பு மிகக்குறைவாகவே இருந்தது. இன்று குறிப்பாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் பரதநாட்டியம் ஒரு ‘ஸ்திரீ லட்சணமாக’ வளர்ந்துள்ளது. நாட்டியக் கலையை வளர்க்கும் நளாயினி இராஜதுரை பத்மா சுப்ரமணியத்தின் மாணவி. மிகுந்த கலை ஆர்வம் மிக்க புதுமை புகுத்தும் நாட்டம் மிகுந்தவர். எனது புதல்வர்களான அபேதன் - சுகந்தன் நளாயினியிடம் அரங்கேற்றம் கண்டவர்கள். கீதை உபதேசத்தை அக்கால நாட்டுச் சூழலுக்கு ஏற்ற உபதேசமாக்கி சோ.பத்மநாதனின் இயற்றல் ஆளுமைக்கு உயிர் கொடுத்தார். அவரது நேர்காணலும் இந்நூலில் இடம்பெற்றமை எனக்கு யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவ அட்டகாச காலத்திலும் நளாயினி சளைக்காது அரங்கேற்றிய மனவைராக்கியத்தைப் போற்றவேண்டும். அந்தத் துணிவும் இந்நூலை அலங்கரிக்கிறது. லண்டனையும் வாய்மொழியற்ற நாட்டிய உருப்படியில் அதிக ஆர்வம் உள்ள கலைஞரை அடையாளம் கண்டது நவஜோதியின் பன்முக அறிவைக் காட்டுகிறது.
விஜயாம்பிகை இந்திரகுமார் பரதநாட்டிய மரபுகளிலிருந்து மீறி நாட்டியத்தை மக்கள்கலையாகக் கண்டவர். ரஷ்யாவில் பார்த்த பலே நடனத்தை பரதநாட்டியத்தூடாக வடிக்கும்- நவீனத்துவத்தை உள்வாங்கும் ஆற்றல் வாய்ந்த முற்போக்கு எண்ணங்களை நாடகத்தில் நுழைத்த விஜயாம்பிகையை இனங்கண்டுள்ளார் நவஜோதி. நினைவு எழுச்சிகளில் முனைப்புடன் பங்கு எடுத்துக்கொண்ட ராகினி இராஜகோபால், எல்லை கடந்து பலமொழி பேசுவோர்க்கும் நடனம் பயிற்றுவிக்கும் ஜெயந்தி யோகராஜாவை கணவர் என்ற பிதாவழிச் சமூக ஆதிக்கத்தால் பெண்கள் விவாகத்தின் பின் அடங்கி ஒடுங்கிவிடுவதாக வருத்தப்படும் தாரகைகளை உணர்வுகளால் இதயம் தொட வைக்கிறார் நவஜோதி.
மீன்பாடும் தேனோடும் மட்டுநகர மங்கை பிறேமளாதேவி ரவீந்திரன் நமது நாட்டிய முன்னோடி சாந்தா பொன்னுத்துரையிடம் நாட்டியத்தைப் பயின்றுகொண்ட பிரேமளா லண்டனிலும் வறுமை – செல்வந்தரின் ஏற்றத்தாழ்வுகள் கற்ற மாணவர்களின் அரங்கேற்றத்தில் பலி எடுப்பனவாக உள்ள நிலை பற்றித் துயரக்குரல் எழுப்புகிறார்.
பெண்களை வீட்டுக்குள் வைத்த சமூகமாக தமிழ் சமூகம் பிறநாட்டார் கண்களில் காண்பிக்கப்படுவதாக உள்ளது. பாரதியின் குரலும் பெண்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவே ஒலித்தது. மேற்கு நாடுகள் போல அல்லாது நமது சமூகம் தாய்வழிச் சமூகமாகவே இயங்கி வந்துள்ளது. தேசவழமையை பிரதேச வழமை அடிப்படையில் தொகுத்தவர்கள் ‘சீதனம்’ என்று பெண் தனது விவாகத்தின் மூலம் கொண்டு வந்தவற்றைத் தனியாகத் தன் விருப்பப்படி விற்க முடியாத இன்னல்களுக்கு உள்ளாகி தன்னை விருத்தி செய்ய முடியாத சிக்கலில் மாட்டப்பட்ட மாட்டுப் பெண்ணாகிறாள். பெண்கள் பொருள் ஈட்டலில் ஈடுபட கல்வி அடிப்படையானது அந்தக் கல்வியைப் பெற்று சர்வதேச வர்த்தகத்தில் இன்று ஈடுபடும் சிலர் முகிழ்த்துள்ளனர். இதனை நவஜோதி சுவர்ணா, இராஜேஸ்வரி ஆகிய பெண்களின் நேர்காணலில் தொகுத்துள்ளார். வெறுமனே பணம் சேர்க்கும் நோக்கு இன்றி நலிந்த தமிழ்ப் பெண்களின் முன்னேற்றத்துக்கான வழிகளைத் தேட உதவுபவர்களாகவும் முகிழ்த்தவராக காட்டுவதால் இவர்கள் ஏனைய பெண்களுக்கான பனை ஓலையின் நரம்புகளானவர்களாகக் காணப்பட்டுள்ளனர்.
நாடகம் என்ற பகுதியில் ஈழத்திலும், லண்டனிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பேசப்படும் ஆனந்தராணி தனித்துவமான ஆளுமைகள் நிறைந்தவர். இப்பகுதியில் நிர்மலாவும் சேர்க்கப்படவேண்டியவர்தான். மேலாக அரசியலில் முன்நின்றமையால் அதனுள் அவர் பேசப்படுகிறார். ஆனந்தராணியை ‘கண்ணாடி வார்ப்புகள்’ மூலம் இலங்கையிலேயே துணிவாக நாடகமேடை ஏறிய பெண்கள் வரிசையில் அறிந்துகொள்ளப்படவேண்டிய அன்றைய காலகட்டத்தின் இளம் நடிகை ஆனந்தராணி. ஆண்களே ‘பெண்வேடம்’ இட்டு நடிக்கும் மரபுதான் எங்கள் கூத்துமரபாக இருந்தது. மட்டக்களப்பும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வைரமுத்துவின் கூத்துக்கள்தான் பெண்களைப் பெண்பாத்திரம் ஏற்க வைத்தது. விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே 70களில் நாடக மேடை ஏறினர். இதற்கு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பக்கபலமாக இருந்தது. பெண்களின் பல்வேறு ஆளுமைகளும் நாடகக் கலைஞர்களில் கவிந்திருப்பதை நவஜோதி படம் பிடித்துள்ளார். சிறுவர் நாடக வளர்ச்சிக்கு ஆனந்தராணி ஆற்றும் பணி சமூக வளம்படுத்தலுக்கும் சமூகத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றப் புத்துணர்வு கொள்ளவும் வடிகாலாகின்றது. ரோகினியின் தொலைக்காட்சித் தொடரின் பங்கு ஒரு மைக்கல் எனலாம்.
வெள்ளிவீதியார் முதலான சங்ககாலப் பெண் கவிஞர்களை அதிமாகக் கொண்ட தமிழர் பண்பாட்டில் நாட்டார் இலக்கிய மரபிற்கு உரம் தந்தவர்கள் பெண்கள். வாய்மொழி மரபில் உருவாகிய ஏராளமான பாடல்களின் சொந்தக்காரர்களாகப் பெண்கள் இருப்பதும் அப்பாடல்களைத் தொடர்ந்து பாடுவோர் பெண்களாக இருப்பதும் தெளிவு. ஓராட்டுப் பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள், வயல்வெளிப்பாடல்களில் பெண்களது முத்திரை புலனுறுகிறது. எழுத்துமொழியைப் படிப்பதற்கான வாய்ப்புகள் ஆண்களுக்கே இருந்தன. இதனால் எழுத்திலக்கியப் பாரம்பரியத்தில் மங்களம்மாள், அஞ்சுகம் போன்றோர் சிலரே. உயர் குழாத்தினூடே கல்விப் பாரம்பரியம் சார்ந்த அறிவுக் கையளிப்பு இருந்திருக்கும் சான்றுகள் உண்டென சிவத்தம்பி ‘யாழ்பாணத்துச் சமூகத்தில் பெண்கல்வி’ என்ற நூலின் முகவுரையில் கூறுகின்றார். கிறிஸ்தவ மிசனறிகளும் இப்பங்கைத் தொடர்ந்தன.
நவஜோதி தேர்ந்தெடுத்த இலக்கிய வித்தகிகள் ஏழுபேர். ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் முதல் நிலா வரையும் எழுதுபவர்கள் கிழக்குப் பிராந்தியம், வட புலத்தைச் சேர்ந்தவர்கள். தொழில் மூலம் சமூக அநீதிகளைக் கண்ட ராஜேஸ்வரி தாதியத்தொழில் ஊடான பார்வையில் எழுதும் மூத்த எழுத்தாளர். தனது பார்வையை சர்வதேச அரசியலிலும் புகுந்து எழுதி விசாலப்படுத்தியவர். தமிழ்ப் பண்பாட்டை தமிழரல்லாத சமூகத்திலும் சுவறவிட்டவர்.
புலமை மரபும் புதுமையும் தரும் எழுத்துக்கள் மிகுந்த தமிழரசி மறைலை அடிகளின் தாய் சின்னம்மை என மறைவாக இருந்த செய்திகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். மாந்தை பற்றிய ஆய்வுகளிலும் புதிய தகவல்கள் கிடைக்கின்றன. தர்மு சிவராமின் நாட்டுப்புறப்பாடலின் மீள் வடிவத்தைப் புகழும்போது நாட்டார் பாடல் புத்துயிர் பெறுகிறது.
நூல் ரசனையை விசாலித்த யமுனா, மரபையும் நவீனத்துவத்தையும் வானொலிமூலமும் படைப்பிலக்கிய மூலமும் குழைத்துத் தரும் றீற்றா, புதுக்கவிதையுடன் மரபுக்கலையையும் ஆய்ந்து பொன்னாலைக் கிருஷ்ணனையும் வெளி உலகுக்குக் காட்டிய மாதவி, அம்புஜம், நிலா என்ற புனைபெயரில் போராட்ட வாழ்வுடன் இணைந்த படைப்புக்களை படைத்தவருகிறார் உதயகுமாரி.(வலுவிளராக இருந்து)
எங்கள் மக்கள் சமூகசேவகிகளைக் காணாத தமிழ் நிலங்களில் வாழ்ந்தவர்கள். தங்கள் நோய்க்கு மாத்திரமன்றி மனதில் ஏற்படும் குடும்ப வன்முறை, போரின் பாதிப்பு, சுனாமி பாதிப்பு, குழந்தைகளின் பண்பாடு தளர்த்தும் சிச்கல்களில் உழலும்போது அந்த இன்னலுக்கான வடிகால்களில் முதல் நிலையில் அணுகுபவர்கள் எங்கள் வைத்தியர்கள். மொழி- பண்பாடு-கருணை - மனிதம் கலந்த நிலையில் இருப்பவர்கள் மக்கள் மனதில் வெகுவாக இடம்பிடிப்பர். அத்தகையவர்களை நவஜோதி நேர்கண்டிருக்கிறார். வைத்தியர் மாலா சமூகசேவகியாகவே மக்களை அணுகிக் காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்துள்ளார்.
மீனாள் நித்தியானந்தன் கறுப்பினத் தாதிகளின் மறைக்கப்பட்ட சேவை வரலாற்றை வெளியில் ‘அஞ்சல்’ பத்திரிகை மூலம் வெளிக்கொணர்ந்தவர். மேரி சீக்கோலின் மருத்துவ சாதனைகளைக் கூறி ‘வெள்ளையை’ கொடி தூக்கிக் கண்மூடித்தனமாகக் கொண்டாடும் நம்மவருக்கு ஒரு செய்தியாகிறது. ‘சுத்தம்’ என்ற பெயரில் மக்களைக் கொள்ளையடிக்கும் பிளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தல்களின் பூஞ்சணம் மக்களிடையே உணர்வைத் தட்டி எழுப்பும் பாணமாகப் பிரயோகிக்கிறார். மீனாளின் ஆழ்ந்த வாசிப்பு அவரை மனிதநேயக் கண்கள் பூட்டப்பட்டவராக்குகின்றது. யோகாசனம், ஆயுர்வேதக் கலைஞர்களான முறையே ஜெயானி, வசந்தியும் நேர்காணப்பட்டுள்ளனர்.
அரசியலில் கால் வைக்கப் பயந்தவர்களாகவும், அடக்கப்பட்டவர்களாகவும் பெண்கள் எமது நாடுகளில் இருந்து வந்துள்ளனர். கணவனுடன் தோள் கொடுக்கும் பெண்களாக அடையாளம் காணப்பட்ட பெண்கள் சிலர். வாலாம்பிகை (கார்த்திகேயன்), பரமேஸ்வரி (சண்முகதாசன்) கம்யூனிஸ்ட்;டுக்களின் மனைவியராக அரசியலுக்குத் துணையோயினர். இதேபோல மங்கையற்கரசி அமிர்தலிங்கமும் பங்கேற்று மேடைகளில் எழுச்சிப் பாடல்கள் பாடி கணவனுக்கு வாக்குச் சேர்த்தவர். நான் 8ஆம் வகுப்பில் நெல்லியடியில் படிக்கும்போது அத்துளுவில் அமைந்த மு.சிவசிதம்பரத்தின் மேடைகளில் ‘மங்கையர்க்கரசியாம் கண்ணான கண்ணு
அவ கொண்டோடி வரும் வளையல்,
அவ பூவோடு வருவா,
பொட்டோடு வருவா வட்டுக்கோட்டைப் பொண்ணு’ என ஏளனப்படுத்திப் பாடிய பாடல் என் நினைவில் நிற்கின்றது. தடுப்புக் காவலுக்குள்ளும் வைக்கப்பட்ட போராட்டக் குரலாக மங்கையற்கரசியின் குரல் ஓங்கியிருந்தது. இவர் இறக்கும் முன்னர் இவரை நேர்கண்ட நவஜோதியின் முன்னறி மாண்பு போற்றப்பட வேண்டும்.
‘நிர்மலா’ தமிழ் வரலாற்றில் ஒரு ஆளுமை என்பதை யாரும் மறுக்கமுடியாது. நீண்டகால நட்புடைய நிர்மலா நவஜோதியின் நேர்காணலுக்குள் உட்பட்ட போர்க்கோலமாகவே வாழ்க்கையைத் தொடரும் ஒரு சமூகவிடிவு நோக்கிய விடுதலைக்கான மனிதாபிமானம் மிக்க குழுக்களுடன் தன்னை இணைத்த பெண். தனது நிலைப்பாட்டை மொழிபெயர்ப்பு நாடகங்கள் மூலம் நிலைநாட்டியவர். அமெரிக்க வீற்றன் கல்லூரிப் படிப்பை முடித்த நிர்மலா இனத்துவமக்கள் குடிவரவு தொடர்பான உரிமைகள் பெற சட்டபூர்வமான வெற்றிகளைப் பெற்ற மனதாபிமானம் பொதிந்த பெண்விடுதலைக்காக வீரியத்துடன் பல ஆளுமைகளுடன் நின்று போராடும் ஒரு பெண்ணை நவஜோதி அரசியல் பார்வைக்குள் அலசியுள்ளார். லண்டன் அரசிலுள் புகுவதற்கு முனைந்த ரதியின் ஆளுமையையும் எடை போட்ட நேர்காணல்கள் தமிழ்ப்பெண்கள் படிகளில் ஏறத்தொடங்கி விட்டதைக் காட்டுகின்றது.
‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’ என்ற கவிதைத் தொகுப்பை அகஸ்தியரின் 10 ஆவது ஆண்டு நினைவாக வெளியிட்ட நவஜோதியின் தொலைக்காட்சி, வானொலி நேர்காணல் அனுபவம் ஆய்வறிவுப் பண்பு மிக்கதாகவும் சமூகப் பண்பு பொதிந்ததாகவும் தீர்க்கதரிசனம் கொண்டும் அமைந்துள்ளன. பெண்களின்பால், பாலினப் பிரச்சினைகள் பூதாகாரமாக இருக்கும் தமிழர் மத்தியில் அவை பற்றிய அறிவு போதாது. நந்தினி, வித்தியா, வைஸ்ணவி எனப் பெண்கள் பாலியல் ரீதியிலான வன் கொடுமைக்கும் கொலைக்கும் உள்ளாக்கப்படும் நிலைமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ்ப்பெண்களையும் நேர்காணுதல் தமிழ்ப்பெண்களின் மேல் உள்ள ஒட்டுமொத்தமான கரிசனையைக் காட்டும். தீர்க்கதரிசனத்துடன் கூடிய விடைகளைப் பகிரக்கூடிய கேள்வி ஞானம் கொண்ட நவஜோதி பெண்கள் வரலாற்றை கேள்வி பதிலாகக் கொடுத்தமை ஈழத்தமிழ்ப் பெண்களுக்கு அவர் அளித்த ஒரு தேட்டத்திறன் எனலாம்.
16.2.2017.