இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்
நாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கியப் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விடயங்களை ஆதாரத்துடன் ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாத தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா? சிறிய சமூகத்திற்கு இத்தனைப் பிரச்சனைகளா? என்று வியக்காதவர்கள் யார்? காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 'லாக்கா'ப்பில் இந்திய இளைஞர்களின் தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. திட்டமிட்டே,கல்விமான்களும், நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் தங்களுக்குச்சாதகமாக இருக்கிறது என்ற தெனாவெட்டில் பொறுப்பற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகளை மூடச்சொல்வதும், தமிழ்மொழியின் அழிவிற்குப் பாதகமான கருத்துகளைக் கூறும் நிலை தொடர்வதைக் காணும் போது,இந்தியர்கள் இந்த நாட்டில் மாற்றான் தாய் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுவிட்டார்களோ என்ற ஐயமும் பீதியும் எழுகின்றன.மேலும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய சமுதாயம் எக்கேடாவதுக் கெட்டுப்போகட்டும் என்று மெத்தனப் போக்கினைக்கொண்டிருக்கிறது வருத்தமளிக்கிறது.இந்திய சமுதாயம் கேட்பாரற்ற சமூதாயமாக இருக்கும் சூழல் தொடர்ந்து இருக்க வேண்டுமா? தடுமாறிக் கொண்டிருக்கும்இந்திய சமுதாயத்திற்கு அரசு கருணை காட்டக்கூடாதா? இந்திய அரசியல்வாதிகளும்,சமுதாயத்தலைவர்களும் சொந்த சகோதரர்களின் மேம்பாட்டுக்காகத் தங்களுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் சுயநலப்போக்கையும் சற்று தள்ளி வைத்துவிட்டு நேசக்கரம் நீட்டக் கூடாதா?