மீள்பிரசுரம் ('குளோபல் தமிழ் நியூஸ்'): வித்யாவும் இசைப்பிரியாவும்:
யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி வித்யா சிவலோகநாதனின் பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம், வருடக்கணக்காகத் தமிழ்ச் சமூகத்துக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து வெளிக்கிளம்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, அதன் அதிர்வு தெற்கில் உள்ள பல்வேறு சமூகக் குழுமங்களையும் பாதித்தமையைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும், அது தெற்கில் வழமையாக வழங்கிவரும் “எதிர்ப்புக் கலாசாரத்தின் ” மற்றோர் அங்கமே என்று யாரேனும் கூறுவார்களெனில், அதனை அப்படியே ஒப்புக்கொள்வதற்கு முன் அவர்கள் தத்தமது மனசாட்சியை ஒருதரம் தொட்டுப்பார்த்துக் கொள்ளுமாறு முதற்கண் வேண்டிக் கொள்கின்றோம். இதன் கருத்து, சிறுமி வித்யாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தெற்கில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் பேரணிகள் எந்தப் பயனும் அற்றவை என்பதல்ல. அதன் மூலம், தெற்கில் வாழும் சமூகங்கள் மத்தியில் தமிழ்ச் சமூகத்தின் துன்பியலான வாழ்வியல் துயரம் அவ்வாறேனும் கலந்துரையாடலுக்கு உட்படுவது முக்கியமானதாகும் என எவரேனும் வாதிட்டால், அதனை நாம் புறந்தள்ள முடியாதுதான்.