சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் டிவோலி, லிபர்ட்டி திரையரங்கில் போடப்படும் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் . அந்த சமயத்தில் நான் ஹைதராபாத் திரைப்பட சங்கத்தில் உறுப்பினர் ஆகவில்லை. தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து டிவோலி ,லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை நேரத் திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன் அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள், தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன்.ஞாயிறுகளில் வார விடுமுறை வந்தால் சவுகரியமாகப் போய்விடும், பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே, மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி திரையரங்கில் பார்த்தேன் .அது ஒரு வகை அனுபவம் .
இன்னொரு பக்கம் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்க கூட ஆவலாக இருக்கும் .எப்போது ,எந்த காட்சியில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில தினசரியில் விளம்பர பக்கத்தில் 2க்கு 2 இஞ்ச் வடிவத்தில் ஒரு சிறு செய்தியாக வந்து இருக்கும். அதை பார்த்து தமிழ்த் திரைப்படத்திற்கு போகிற திட்டத்தைப் போட வேண்டும். வீடியோ இல்லாத காலம். தமிழ் திரைப்படம் பார்க்க ஞாயிற்றுக்கிழமை திரையரங்கின் காலை காட்சிக்கு செகந்திராபாத் ஹைதராபாத் இரட்டை நகர தமிழர்கள் தவம் இருக்க வேண்டியிருக்கும். ஒரே ஒரு காலை காட்சி பெரும்பாலும் இருக்கும். அப்படம் தமிழ்நாட்டில் வந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டிய கட்டாய நிபந்தனைகளை ஒன்றாய் அதில் திரையிடப்படும் தமிழ் படங்களின் வகை இருக்கும். அப்படித்தான் ஒரு ஞாயிறு காலையில் ரிக்சாக்காரன் திரைப்படம் டிவோலியில் திரையிட்டிருந்தார்கள். படம் பார்க்கிற மனநிலை இல்லை. ஆனால் பொழுது போக வேண்டி இருந்தது. அதனால் டிவோலி திரையரங்கிற்கு சென்று இருந்தேன். ஏதோ ஒரு உந்துதல் காரணமாக பதிவுச்சீட்டு பெற்று உள்ளே சென்று உட்கார்ந்தேன். பலர் குறிப்பிடும்படியாக தங்களின் அருகில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஹைதராபாத் செகந்திராபாத் பகுதிகளில் இருக்கக்கூடிய சின்னாளப்பட்டி சேர்ந்த சிறு வியாபாரிகள். மிதிவண்டிகளில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு செகந்திராபாத் ஹைதராபாத்தில் வெளிப்புற பகுதிகளுக்கும் தெரிந்த இடங்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்பவர்கள். ஞாயிற்றுக்கிழமை கண்டோன்மென்ட் பகுதியில் ராணுவ வீரர்கள், தமிழ்க் குடும்பங்களில் இவ்வகைத் துணிகளை வாங்குவார்கள் . பார்வையிடுவார்கள். பெரும்பாலும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு தான் இந்த துணி வியாபாரிகள் செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பது அவர்களின் வியாபாரத்தில் மிக முக்கியமான நாளாகும் .அதை விட்டுவிட்டு தமிழ் திரைப்படத்தை பார்க்க அவர்களில் பலர் அங்கு இருப்பது எனக்கு அதிசயமாகவே பட்டது. பிறகு அவ்வகை கூட்டத்தை பலர் பல சமயங்களில் பார்த்திருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையை இரட்டை நகர தமிழர்கள் அவசரகதியில் தான் புரட்டுவார்கள் .எட்டாம் அல்லது ஒன்பதாம் பக்கத்தில் கொசகொசவென வரி விளம்பரங்கள் மத்தியிலும் சிறு சிறு பெட்டி விளம்பரங்கள் மத்தியிலும் தமிழ் திரைப்படம் திரையிடல் செய்தி இருக்கும். கோணல்மாணலாக எழுதப்பட்டபடி காட்சி நேரமும் திரைப்படத்தின் பெயரும் பிளாக் செய்யப்பட்டு அச்சிடப்பட்டிருக்கும் அல்லது ஆங்கிலத்தில் தமிழ் திரைப்படத்தின் பெயர் அச்சாகி அடைப்புக்குறிகளுக்குள் தமிழ் சினிமா என்ற குறிப்பும் இருக்கும். எந்த தரத்திலான படம் எந்த வருடத்தில் ஆனது என்பதை மீறி ஞாயிற்றுக்கிழமை காலை காட்சி தமிழர்கள் திரண்டு வருவார்கள். மலையாளிகள் கன்னடர்கள் குஜராத்திகள் அவரவர் மொழிப்படங்கள் எங்காவது நகரின் மையத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படும் ஞாயிறின் ஒரு பகல் காட்சிக்கு மேலான காட்சிகளும் அந்த படங்களுக்கு வாய்க்கும். தமிழ் படங்களுக்கு இது போல் பெரிய வாய்ப்புகள் இல்லை.
செகந்திராபாத் பேடேடுக்ரவுண்டை தாண்டி ஒரு நடை போட்டால் திவோலி திரையரங்கம் வந்துவிடும். மரங்கள் அடர்ந்த பகுதிகள் சுவாரசியமானவை. செம்மண் கட்டிடம் போல பல இருக்கும். திரையரங்கை சுற்றிலும் பச்சையாய் செடிகளில் மரங்களும் நடப்பட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்கு ஒரு சிறு பயணம் போவது போல இருக்கும். தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் நண்பர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாக இந்த திரையரங்கு காட்சிகள் அமையும் .சிறு சிறு குழுக்களாக நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது முன்பும் இடைவேளையிலும் பின்னும் என்றிருக்கும். உரையாடலில் முக்கிய கருப்பொருளாக அன்றைக்கானத் தமிழ் திரைப்படம் பற்றி தவறாமல் இருக்கும். செகந்திராபாத்தை விட்டு தமிழ்நாட்டிற்கு கடைசியாய் போய்வந்தது தமிழ்நாட்டின் அரசியல் நிலை, பரஸ்பரம் உடல்நலம் பற்றிய விசாரிப்புகள் ஆகவும் அமைந்திருக்கும். கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள் கொஞ்சம் தென்படுவர். கன்டோன்மென்ட் முகாம்களிலேயே அவர்களுக்குத் தமிழ் திரைப்படங்கள் போட பெரிய இடம் வசதி இருப்பதால் அவர்களை அதிக அளவில் காண முடியாது. தமிழ் காதலர்கள் கலந்து பேசி உறவாட வாய்ப்பாகவும் அந்த திரையரங்கம் இருந்தது .இளம் காதலர்கள் மற்றும் திருமணமான தம்பதிகளை பார்க்க முடியும் .தமிழ் திரைப்படத்தை பார்ப்பதில் சாபவிமோசனம் கிடைத்துவிடும் என்பது போல் வியந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.
அன்றைக்கு ஒருநாள் 16 வயதினிலே என டெக்கான் கிரானிக்கல் விளம்பரம் பார்த்தேன். நான் போன போது திரை அரங்கின் முகப்பில் இருந்த கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. நான் அங்கு செல்லும்போது படப்பெட்டி வராமல் இருந்திருக்கும் என நினைத்தேன். திரையரங்கு வாசலில் ஆங்கிலப்பட சுவரொட்டி இருந்தது .16 வயதினிலே படம் இல்லை என்பதால் வழக்கமாய் மற்ற காட்சிகளுக்கான படமாய் இருக்கும் ஆங்கில படமே அந்த காலை காட்சிக்கும் என்று ஆகியிருந்தது. பாரதிராஜாவின் தம்பி ஒருவர் அன்றைக்கு செகந்திராபாத் வந்து இருக்கிறார். அவர்தான் அந்தப்படத்தின்பிற மாநிலங்களுக்கான விநியோகஸ்தர். அவர்தான் படம் பிற மாநிலங்களுக்குச் செல்வதை கண்காணிப்பவர். பெரும்பாலும் அங்கு வரும் தமிழ் படங்களை யாரோ பெட்டியைக் கொண்டுவந்து ஒரு காட்சிக்கு திரையிட்டு விட்டு கையோடு எடுத்துக் கொண்டு போவதுதான் வழக்கமாக நடைபெறுவது விநியோகஸ்தரின் அனுமதியும் தகவலும் இன்றி 16 வயதினிலே பெட்டி வந்திருக்கிறது .காவல்துறையில் வழக்கு என்று பாரதிராஜா சம்பந்தப்பட்டவர்கள் திரையரங்குகளை மிரட்டி இருக்கிறார்கள். எனவே 16 வயதினிலே காட்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. அன்றைக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது பெரும்பாலும் கூட்டம் கலைந்து போயிருந்தது. ஆங்கில திரைப்படத்திற்கு சொற்ப கூட்டம் இருந்தது .செகந்தராபாத்தில் சங்கீதா ரம்பா போன்ற திரையரங்குகளில் புதிய ஆங்கில படங்கள் திரையிடும் போது இந்த திவோலி திரையரங்கில் மிகவும் பழைய படங்கள் திரையிடப்படும் . அப்படித்தான் மூன்றாம்தர மலையாள படங்களுக்கான திரையிடலுக்கான இடமாகும் அவை இருக்கும் .
பல சமயங்களில் ஞாயிறு மாலைகளில் ரவீந்திர பாரதியில் ஹைதராபாத் திரைப்பட சங்கங்களின் திரையிடலுக்கு சென்றிருக்கிறேன். ஞாயிறு மாலைகளில் பப்ளிக் கார்டன் பிர்லா மந்திர் டேங்ட் பேண்ட் என்று திரிந்த ஒரு நாளில் ஹைதராபாத் பிலிம் கிளப் அறிமுகமானது.மினி ஆடிட்டோரியத்தில் அல்லது ரவீந்திர பாரதியில் ஏதாவது நிகழ்ச்சியில் இருந்து கொண்டே இருக்கும். எல்லா மாநிலங்களிலும் ரவீந்திர பாரதி என்ற பெயரில் ஆடிட்டோரியம் உண்டு .தமிழகத்தில் கிடையாது. அதற்காக அப்போது வந்த நிதியை செலவழித்து விட்டதால் அரசாங்க பொது ஆடிட்டோரியம் ஒன்றை தலைநகரங்களில் நாம் இழந்து விட்டிருக்கிறோம் என்று பரிக்சா ஞானி அவர்கள் ஒருமுறை பேச்சின்போது சொன்னார் .ஒரு ஞாயிறு மாலையில் ரவீந்திர பாரதியின் மாடியில் மினி ஆடிட்டோரியத்தில் சிறு கூட்டம் தென்பட்டது அங்கே நுழைய முற்பட்டு தடுக்கப்பட்டேன். திரைப்பட உறுப்பினர்களுக்கு மட்டும் தான் என்றார் வாசலில் இருந்த ஒருவர் .அங்கு தென்பட்ட ஓவியர் வைகுந்தன் நீ ஏன் பிலிம் கிளப்பில் சேரக் கூடாது என்றார். செகந்திராபாத்தில் இயக்குநர் பி நரசிம்மராவின் பட அலுவலகத்திற்கு செல்கிறபோது ஓவியர் வைகுந்தனைச் சந்தித்து இருக்கிறேன், பிறகு வெவ்வேறு ஓவிய கண்காட்சிகளிலும் அவரை சந்தித்து இருக்கிறேன், அவரின் ஓவியங்களில் ஆந்திரா கிராம மக்களில், பெரும்பாலும் பெண்கள் பற்றிய சித்தரிப்புகள் விசேஷமாக இருக்கும், ,மார்புகள், திமிரும் உடம்பு ,பெருத்த தொப்புள், நெற்றிப் பொட்டுகள் உள்ள உருவமாய் இருக்கும் . அழுத்தமான வண்ணங்களில் தென்படுவார்கள். அங்கு பி நரசிங்கராவ் வந்து செல்வார். ரங்குல்கலா , மாபூமி போன்ற பல கலை படங்களை எடுத்தவர். அன்றைக்கு வைகுந்தன் ஹைதராபாத் பிலிம் கிளப் செகரட்டரி பிரகாஷ் ரெட்டியிடம் என்னை அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்தினார் . அதன்பின் நான் அங்கு சென்றேன். அன்றைக்கு பிலிம் கிளப்பில் சிந்துபாத் என்ற படம் திரையிடல் இருந்தது. தினத்தந்தி லைலாவை மனதில் கொண்டு நான் அப்படத்தில் அவளைத் தேடினேன். சிந்துபாத் பெண்களிடம் ஈடுபாடு கொண்டவனாக இருந்ததால் பல பெண்களிடம் உறவு கொள்வதாக காட்சிகள் இருந்ததால் மிகவும் கிளர்ச்சி தரத்தக்க படமாக அது இருந்தது.
ஹைதராபாத் பிலிம் கிளப்பை போல் வேறு திரைப்பட சங்கங்கள் இரண்டும் இருந்தன அவற்றில் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு .பின்னர் ஹைதராபாத் திரைப்பட சங்கம் மட்டும் நிலைத்தது .அதன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நகரின் ஒதுக்குப்புறமான சாரதா ஸ்டூடியோவில் நடக்கும். சாரதி ஸ்டுடியோ அமீர் பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து போகும் தொலைவில் இருந்த்து அலுவலகம் வேறு பக்கம் . செகந்திராபாத்தில் வீடு. இவற்றிற்கும் அது தொலைவானதாக இருந்தது. திரைப்பட சங்க நிகழ்ச்சிகளில் அங்கு தொடர்ந்து நடந்தன, அங்கு இருந்த சாரதி ஸ்டுடியோவில் பட நிகழ்ச்சி என்றால் தூரத்தை மீறி உற்சாகம் வந்துவிடும் எனக்கு . காரணம் அங்கு தொடர்ச்சியாக ஏதாவது படப்பிடிப்பு இருந்து கொண்டே இருக்கும் கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முட்டி தள்ளி கொண்டிருக்க திரைப்பட சங்க உறுப்பினர் என்ற வகையிலும் எழுத்தாளர் என்ற வகையிலும் அன்றைய திரைப்பட நிகழ்ச்சியைச் சொல்லியும் சுலபமாக உள்ளே போய் விடலாம். திரைப்பட நிகழ்ச்சி கூட்டம் சேர்வதற்காக காத்திருக்கும் போது படப்பிடிப்பினை வேடிக்கை பார்ப்பேன். அங்கு பெரும்பாலும் ஹிந்தி தெலுங்கு படப்பிடிப்பில் இருக்கும் அபூர்வமாய் தமிழ் மற்றும் கன்னட படப்பிடிப்புகளும் நடைபெறும் வேடிக்கை பார்க்கவும் திரைப்பட கலைஞர்களுடன் பேசவும் வாய்ப்பாக இருக்கும். சிலர் பேச்சை சிறு பேட்டிகள் ஆகும் செய்ய வாய்ப்பு இருந்தது. கமல்ஹாசன், குஷ்பூ என சந்தித்துள்ளேன்.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அப்போது இருந்த இரட்டை நகரங்களில் நாலைந்து தமிழர்களே திரைப்பட சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். அதில் ஒருவர் அமிர்தன் .ராசி சிமெண்ட் கம்பனியில் முக்கிய பொறுப்பில் இருந்தார். அவருக்கு உலகத்திரைப்படங்களில் தென்படும் பாலியில் காட்சிகளில் ஈடுபாடு உண்டு. அது இல்லாத படங்கள் அவருக்கு அலுப்பூட்டும் .படத்தின் கதையை புரிந்து கொள்ள முயல்வார். பாலியல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் படமென்றால் உட்காருவார்.இல்லையெனில் கிளம்புவார் . அவர் போல் கிளம்புவதற்கு ஒரு பெரிய கோஷ்டியே இருந்தது .அவர் கிளம்பியபின் பாலியல் படுக்கை காட்சிகள் ஏதாவது இருந்து விட்டால் பின்னர் தொலைபேசியில் தகவல் கேட்டு விட்டு மனம் உடைந்து போவார். .திரைப்பட சங்கத்தின் திரையிடல்கள் மீது எப்போதும் அதில் துக்கம் கொள்வார் .அங்கங்க ஊர்ல அவங்கவங்க ஓடாத படங்கள் தான் இங்கே கொண்டு வந்து காட்றாங்க போல என்பதுதான் அவரின் தீர்மானமான விமர்சனமாக இருந்தது. நல்ல படங்கள் நல்ல இயக்குனர்கள் படங்கள் என்று குறிப்பிடப்படுபவை பற்றி கேட்டுக்கொண்டு இருப்பார்.ஆனால் தவறாமல் திரைப்பட சங்கத்தின் நிகழ்ச்சிக்கு வருவார் அபூர்வமாக மணி வருவார் .அவர் ராமா நாயுடுஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளராகவும் பொறியாளராக இருந்தார் வேலை இல்லாத சமயங்களில் திரைப்பட சங்கம் நிகழ்ச்சிகளுக்கு வருவார் .நவீன இலக்கியம் பற்றிப் பேச தகுதியான நபர் என்ற அளவில் இருந்தார். நல்ல திரைப்படங்கள் பற்றிய அக்கறை அவருக்கு இருந்தது .இரட்டையர்களாக திரிந்து கொண்டிருந்தோம் உள்ளூரின் முக்கிய கலை இலக்கிய கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் வெளியூர் பயணங்களில்- தில்லி ரிஷிகேஷ் வரையிலான பயணம் செய்தபோது கூட இருந்தார் .சாகித்ய அகாதமியின் பயண நிதி பெற்று சென்றபோது கோவாவில் ஒரு வார பயணம் என்று சேர்ந்து இருந்தோம்.ரிஷிகேஷ் என்று பல பயணங்களில் கூட இருந்தார். முன்பு நான் கதிர்வேலன் உடன் இரட்டையர்கள் போல திரிந்து கொண்டிருந்தோம் .. கதிர்வேலன் சென்னைக்கு சென்ற பின்பு மணி அந்த இடத்தை பிடித்துக்கொண்டார் .கதிர்வேலன் தற்போது குங்குமம் பத்திரிகையின் தலைமையாளராக இருக்கிறார்.மணி பெருங்குன்றூர் கிழார் என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார் ..தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
ஒருமுறை கோல்கொண்டா குறுக்கு வீதியில் உள்ள ராமகிருஷ்ணா திரைப்பட அரங்கில் ஒரு திரைப்பட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ராமகிருஷ்ணா ஸ்டுடியோ பெரிய கட்டிடமாக இருந்தது .வேறு இடம் கிடைக்காத அவசரத்தில்தான் அங்கு நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது என்றார்கள் ஸ்டுடியோ என்டி ராமராவ்க்குச் சொந்த இடம் என்று கேள்விப்பட்டிருந்தேன். ராமகிருஷ்ணன் என்பவர் அவரின் மகன்களில் ஒருவர். ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில்தான் ஆரோக்கியராஜ் பார்த்தேன் தமிழ் பேசிக் கொண்டிருந்தவர்களிடம் வந்து கலந்துகொண்டு தெலுங்கானாவின் தெலுங்கின் பாதிப்பில் தமிழில் பேசினார். பின்னர் இன்னொரு முறை ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்பட விழா என்று 5 திரைப்படங்கள் அங்கு திரையிட்ட போதும் ஆரோக்கியராஜ் இருந்தார். அங்கு பணிபுரிபவர் என்ற முறையில் அவர் மீது என் கவனம் இருந்தது. ஆஸ்திரேலியா படங்களில் படுக்கையறை காட்சிகளும் நிர்வாண கோலங்களும் நிறைய இருந்தன. அந்த திரைப்பட விழாவிற்கு அமிர்தன் தென்படவில்லை. ஏதோ ஒரு வேலையாக தமிழ்நாட்டிற்கு சென்றிருந்தார். ஆஸ்திரேலிய படங்களில் பாலியில் ரீதியான காட்சிகள், அதன் மகாத்மியம் பற்றி பின்னர் கேள்விப்பட்டு மனம் உடைந்து போய் இருந்தார். அப்படி ஒரு வாய்ப்பை இழந்தது பற்றின உறுத்தலை எல்லோரிடமும் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார் பிரகாஷ் ரெட்டி அது போன்ற படங்கள் வந்தால் நினைவுபடுத்துவதாக வாக்குறுதி தந்தது அவருக்கு ஆறுதல் தந்தது. ஆனால் பிரகாஷ் ரெட்டையால் பின்னர் அமிர்தனைத் திருப்திப்படுத்த முடியவில்லை அமிர்தன் திரைப்பட சங்கத்தின் செயல்பாடுகளில் நம்பிக்கையை இழந்திருந்தார் .ஆரோக்கியராஜ் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் ஒருவரைத் திரைப்பட்திரையிடலில் அறிமுகப்படுத்தினார். அவரை டேபிளில் ஒரு அங்கம் என்றார். எடிட்டிங் டேபிள் என்ற வாசகம் என்னை தொந்தரவு படுத்தியது .அவர் நோய்வாய்ப்பட்டும் களை இழந்தும் இருந்தார். அவரின் ஒல்லியானத் தோற்றம் சங்கடம் தந்தது. காரணம் எடிட்டிங் டேபிளில் வேலை செய்தவர்களுடைய தொடர்ந்த வேலையும் அந்த படச்சுருள் தருகிறார் வாசனையும் ரசாயன காற்றும் உடம்பை பாதித்திருப்பதை நான் தெரிந்து கொண்டேன்.
கலைப்பட இயக்குனர் பி நரசிங்க ராவ் அவர்களின் திரைப்பட அலுவலகம் செகந்தராபாத் பகுதியில் இருந்தது. நானும் செகந்திராபாத்தில் குடியிருந்ததால் அந்த அலுவலகத்திற்கு செல்வது சுலபமாக இருந்தது அங்கு தான் நான் புரட்சிகர பாடகர் கத்தார் அவர்களை சந்தித்தேன். அப்போது நரசிம்மராவ் ரங்குல கலா என்ற ஒரு படத்தை எடுத்து இருந்தார் ரங்குல கலாவின் கதாநாயகன் ஓர் ஓவியன் அவனின் நவீன ஓவியங்களை வீதியில் மக்கள் பார்வைக்கு வைக்கிறான் .அதன் மூலம் மக்களை அரசியல் விடுதலைக்கு இட்டுச் செல்வது அவனின் குறிக்கோளாக இருந்தது. நவீன ஓவியம் வரைபவன் என்பதால் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகிறான். அதே சமயம் அவளின் இன்னொரு ஓவிய நண்பன் பேனர்கள், விளம்பர பலகைகள் வரைந்து நிறைய சம்பாதிக்கிறான், இந்த முரண்பாடு கதாநாயகியை வெகுவாகப் பாதிக்கிறது நவீன உணவு விடுதிகளுக்கு கொண்டுபோய் ஓவியங்களை விற்கும் அனுபவத்தில் அவமானம் அடைகிறான். ஒரு நவீன ஓவியனின் வாழ்க்கை அனுபவங்களை சொல்லும் படம் அது .அப்படம் வெளியானதை ஒட்டி ஒரு வித்தியாசமான கண்காட்சி ரவீந்திர பவன் கலா பவனில் நடைபெற்றது. அந்த கண்காட்சியில் அரங்கு மற்றும் படத்தில் இடம்பெற்ற கலைப் பொருட்கள், உடைகள், செட் பொருட்கள், பிலிம் சுருள்கள், கேமரா உட்பட பல முக்கியமான கருவிகள் எல்லாம் கண்காட்சியில் வைத்திருந்தார்கள் .அந்த படத்தில் ஒரு பாடலில் போது கத்தார் தோன்றுவார். அந்த படத்தில் பயன்படுத்திய அவரின் தோளில் கிடக்கிற கருப்பு சிவப்பு வர்ணப் போர்வை இந்த கண்காட்சியில் இடம் பெறாதது பலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள் .அவர் ஒரு போராளி என்ற வகையில் ஆந்திர மக்களிடம் பெருத்த செல்வாக்குப் பெற்றிருந்தார், அப்படத்தில் கர்த்தர் ஒரு பாடல் காட்சியில் தோன்றுவதே முக்கி ய அம்சமாக இருந்தது. மக்கள் யுத்தக் குழு இயக்கத்தைச் சேர்ந்த அவர் தெருவில் நடத்தும் பிரச்சாரக் கூட்டத்தில் ஒரு பாடல் பாடுவதாக காட்சி ஒன்று அப்படத்தில் இடம் பெற்றிருந்தது. அவர் ஒரு போராளி என்ற வகையில் ஆந்திர மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார். சாதாரணமாய் காவல்துறையின் அடக்குமுறை ஆதிவாசிகள் மீதான வன்முறை போன்றவற்றை எதிர்த்து புரட்சிகர செய்திகளையும், ஆயுதம் ஏந்தி போராடுவது மையமாக கொண்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்த காலம். கத்தார் ஒரு பாடல் காட்சியில் நடிக்கிறார் என்பதே ஒரு திரைப்படத்திற்கு பெருமை அளிப்பதாகும். அவர் இடம்பெறும் பொதுக் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் செல்வர் என்பதை நிசாம் கல்லூரி மைதானத்தில் கண்டிருக்கிறேன். கத்தர் எப்போதும் தன் உடம்பின் மீது அந்த கருப்பு சிவப்பு போர்வையை போர்த்திக் கொண்டு இருப்பார். நரசிங்க ராவ் மார்க்சிய இயக்கங்களில் அக்கறை கொண்டவர். அவர் உடம்பில் எப்போதும் கிடைக்கும் போர்வை எப்படி சினிமா தயாரிப்பு பொருட்களில் ஒன்றாக இருக்கும் என்றும் சிலர் கேள்வி கேட்டார்கள் .அந்தக் கண்காட்சியில் படத்தின் முழு திரைக்கதை ஸ்கிரிப்ட்டும் அங்கு வைக்கப்பட்டிருந்தது அவற்றில் சில பிரிவுகளை நரசிங்க ராவ் ஓவியமாய் வரைந்து இருந்தார். இது மாதிரியான முறையை சத்தியஜித்ரே கையாளுவார். நரசிங்க ராவ்க்கு சத்யஜித்ரேயின் கதை சொல்லும் இயல்பில் அக்கறையும் நிதானமும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களாக சொல்லியிருக்கிறார். பின்னால் நரசிங்க ராவ் சில படங்கள் எடுத்தார் ஆனால் சமீப ஆண்டுகளில் அவர் திரைப்படங்கள் எடுப்பதில்லை. அவருடனான பட அனுபவங்களும் அதை அவர் பகிர்ந்து கொண்டதும் அப்பட அலுவலகத்திற்கு நான் பலமுறை சென்றதும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது.
அசோகமித்திரன் அவர்கள் ஹைதராபாத் நடக்கும் உலகத் திரைப்பட விழாக்களுக்கு வந்திருக்கிறார் அங்கு ஈநாடு என்ற தெலுங்கு தினசரி பத்திரிக்கை இருந்தது அவர்கள் ஆங்கிலத்தில் நியூஸ்லேண்ட் என்று ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார்கள் .அந்த சமயத்தில் நடந்த திரைப்பட விழாவிற்கு அசோகமித்திரன் வந்திருந்தார் .அவர் முன்பே எனக்கு அறிமுகமானவர். செகந்திராபாத்தில் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவரின் இளமை காலம் செகந்திராபாத்தில் கழிந்திருக்கிறது அவர் குடியிருந்த கண்டோன்மென்ட் ரயில்வே க்வாட்டர்ஸ், செகண்ட் பஜார் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்றிருக்கிறார் .அசோகமித்திரன் அந்த திரைப்பட விழாவில் தினசரி திரையிடப்படும் 5,6 திரைப்படங்களை ஒரு நாளில் பார்க்க விருப்பப்படவில்லை. ஓரிரண்டு படங்களை மட்டும் பார்க்க விருப்பப்பட்டார் பிறகு அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டு அந்த விமர்சனங்களை எழுதி உடனே அந்த ஆங்கிலப்பத்திரிக்கை தரும் வேலையாக இருந்தார், அவருக்கு ஒதுக்கப்பட்ட நட்சத்திர ஓட்டலில் அறை வாடகையும் செல்வ செழிப்பும் ஆடம்பரமும் அவரை சிரமப்படுத்தின . என்ன இவ்வளவு வாடகை கொடுத்து இருப்பதற்கு பதிலாக அந்த பணத்தை சன்மானமாக கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் சொன்னார். அப்போதுதான் பாரதிராஜாவின் முதல் மரியாதை திரைப்படம் வெளிவந்து ஓடிக் கொண்டிருந்தது அந்த படம் அந்த உலகத்திரைப்பட விழாவில் இந்திய பிரிவில் காட்டப்படுவதாக இருந்த ஞாபகம். அவரின் உதவியாளராக இருந்த ராஜா சந்திரசேகர் வந்திருந்தார் அவரை சந்தித்தேன் அப்போது வந்திருந்த குங்குமத்தின் வண்ணக்கதிர் இதழில் என் கவுண்டர் கிளப் குறு நாவலில் இருந்து இந்த படம் கதை எடுக்கப்பட்டிருப்பது பற்றிய கட்டுரையை தந்திருந்தேன். முதல் மரியாதை திரைக்கதை உருவாக்கத்தில் ராஜா சந்திரசேகர் பெரும் பணி புரிந்தவர் என்ற வகையில் அவருக்கு என் பேச்சு எரிச்சில் தந்தது. இதைக் கேட்டு அவர் என்னை பின்னர் சந்திப்பதைத் தவிர்த்தார். சந்தித்த பின்னாலும் என்னைத் தவிர்த்து விட்டு விலகிச் சென்றார். அசோகமித்திரனிடம் இதை பற்றி சொன்ன போது ( அவர் அப்போது கணையாழியில் ஆசிரியராக இருந்தார் கணையாழிக்கு இது குறித்து வந்த ஒரு கடிதம் பற்றி சொன்னார்) அது தான் குங்குமம் வண்ணத்திரை இதழில் கூட வந்திருந்தது அந்த படத்தில் கி ராஜநாராயணன் கோபல்லகிராமம் கதையின் ஒரு பகுதியை பயன்படுத்தி இருக்கிறார்கள். வல்லிக்கண்ணன் மூலமாக அணுகி சிறு தொகை கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் வல்லிக்கண்ணனை அணுகுங்கள் என்று சொன்னார் .நான் அதற்கு உடன்படவில்லை. தொடர்ந்து அந்த திரைப்பட விழா படங்களைப் பற்றி பத்து நாட்களும் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் முக்கிய கட்டுரைகளாக இடம் பெற்றிருந்தன. பின்னால் அவர் அந்த கட்டுரைகளை ஏதாவது தொகுப்பாக்கினாரா என்பது தெரியவில்லை. தொடர்ந்து ஹைதராபாத் செகந்திராபாத் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஹிந்தி உருது திரைப்படங்கள் பற்றி அசோகமித்திரன் அவர்கள் நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.அவரின் பேச்சில் பழைய படங்கள் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். கன்னட்த்தில் நடிகர் ராஜ் குமார் பற்றி சுஜாதா சொன்னபின்புதான் அவரை சரியாக புரிந்து கன்னடப்படங்களைப் பார்த்ததாகச் சொன்னார்.
நான் முதல் பக்கத்தில் எழுதிய துணிமூட்டை வியாபாரிகளுக்கு மீண்டும் வருகிறேன் அதுபோல் அந்த சமயங்களில் அவர்கள் போல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செகந்திராபாத்தில் இருந்தார்கள். பின்னால் நான் என் முதல் நாவலை எழுதுகிற போது அந்த சிறு துணி மூட்டை வியாபாரிகள் குடும்பங்களைப் பற்றி எழுதினேன் அதுதான் என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர்,, இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின் சில இந்திய ஆசிரியர்களுடைய பணி விலக்கப்பட்டது அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஹைதராபாத்திற்கு வந்து உறவினர் ஒருவருடன் வியாபாரம் செய்கிற வேலையை செய்து வந்தார். அவர் பின்னால் தெலுங்கானா போராட்டம் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது காவல்துறையால் தாக்கப்பட்டு அவளின் உடம்பு சீர்கேட்டது. என்ன தான் தமிழ் தெலுங்கு உருது பேச கற்று இருந்தாலும் தெலுங்கு பெண்ணையே கல்யாணம் செய்து இருந்தாலும் ஒரு தமிழன் எப்படி அந்த தெலுங்கு பகுதியில் அந்நியனாக ஆக உணர்கிறான் என்பதை சொன்ன நாவல் தான் என்னுடைய மற்றும் சிலர் இந்த மற்றும் சிலர் நாவலிலும் பல சிறுகதைகளிலும் என் திரைப்படங்களுக்கு நான் சென்ற அனுபவங்கள் கலவையாக வந்திருக்கின்றன.பல பகுதிகளில் அக்காலத் திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.( மற்றும் சிலர் நாவலின் மூன்றாம் பதிப்பை டிஸ்கவ்ரி புக் பேலஸ் வெளியிட்டிருக்கிறது
செகந்திராபாத் அனுபவங்களை நினைக்கிறபோது திரைப்பட ரசிப்புத் தவிர்க்கமுடியாததாக இருக்கிறது.அசோகமித்திரனின் பல படைப்புகளில் செகந்திராபாத்தில் திரைப்படங்கள் பார்த்த அனுபவங்கள் ஊடாடி நிற்கும். என இரட்டை நகரம் சார்ந்த பல படைப்புகளில் அவை இடம் பெற்றிருப்பதை வாசகர்கள் படித்துணரலாம்.குறிப்பாக மற்றும் சிலர், நகரம் 90, சுடுமணல் போன்ற நாவல்களிலும் 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகளிலும். சமீபத்தில் திருப்பூர் 100 ஆம் ஆண்டை எட்டியதை ஒட்டி திருப்பூர் 100 என்ற தலைப்பில் 20 கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டேன் ( கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் வெளியீடு ). அதே போல் திருப்பூரை மையமாகக் கொண்ட 15 சிறுகதைகளை திருப்பூர் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன் ..( நிவேதிதா பதிப்பகம், சென்னை வெளியீடு ). அ.ராமசாமி அவர்கள் இது போல் நக்ரம் சார்ந்த கதைகள் தொகுக்கப்படவேண்டிய அவசியத்தை அத்தொகுப்பு உணர்த்துவதாக எழுதியிருந்தார். ஓ.. செகந்திராபாத் என்ற தலைப்பில் அந்நகரம் பற்றிய பல அனுபவக்கட்டுரைகள் உயிர்மை.காமில் முன்பு பிரசுரமாகி என்சிபிஎச் வெளியீடாக பின்னர் நூலாக வந்துள்ளது. அதேபோல் செகந்திராபாத், ஹைதராபாத் இரட்டை நகரங்கள் பற்றியப் படைப்புகள் தொகுக்கப்படுகிறபோது அந்நகர்களின் திரைப்பட அம்சங்கள் அதில் பொதிந்திருப்பது தெரியும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.