“ மனிதர்கள் முதல் வகுப்பில் பயணம் செய்யும் போது இலக்கியம் சரக்காகப் போகும் இந்த உலகம் நாசமாகப் போகட்டும் “ புயேந்தியா வம்சத்தின் ஆறாவது தலைமுறையைச் சார்ந்த ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது. 100 வருடங்களாக அலைந்து திரிகிறவன் நடப்பியலை எழுதி வைக்கிறான். அது லத்தீன் மொழிப் புத்தகமாக இருக்கிறது. கடைசித்தலைமுறை வெளியிலிருந்து வந்தவன் குடும்பத்தின் வரலாற்றை எழுதியிருப்பதைச் சொல்கிறான். திரைப்படம் என்ற தொழில் நுட்பத்தைக் கூட யதார்த்தம் அற்ற கற்பிதங்கள் நிறைந்ததாக கண்டு நிராகரிக்கிற அவர்களின் இலக்கியம் குறித்த வாக்குமூலம் முக்கியமானதே.
மகோந்தா எனும் சிற்றூரின் வரலாற்றுக் கதை இந்தநாவல்.. நான்கு மலைகளுக்கு நடுவில் அமைந்த ஊர். புயேந்தியா என்பவரின் தலைமையிலான ஒரு குடும்பம்.. வெளியுலகத்துடன் தொடர்பேதுமின்றி வாழும் வாழ்க்கை விரிகிறது. தனிமை படுத்தப்பட்ட உலகம் . அந்த ஊருக்கு அவ்வப்போது வந்து போகும் நாடோடிகள், புதிய விசயங்களைக் கொண்டு வருகிறார்கள்.. . புயெந்தியாவுக்கு புதியவை மீது ஆர்வம் அதிகம். அவருக்கு பனிக்கட்டி தொலைனோக்கிக் கருவிகள் அறிமுகமாகின்றன. புதியவை பற்றி தங்கள் தனிமைமீறி ஈடுபாடுகொள்பவர்களாக அவரின் குடும்பத்தினர் அமைகின்றனர்..மெல்ல. பிற ஊர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. ஊர்கள் சேர்ந்து நாடாகிறது. . மகோந்தோவில் உள் நாட்டுக்கலவரங்களும் தொடர்ந்த மரணங்களும் நிகழ்கின்றன..ஆட்சி மாற்றங்கள் ...அக்குடும்பத்தினைச் சார்ந்த மூர்க்கமான ஒருவர் ஒருவர் சர்வாதிகாரியாகிறார். மரண தண்டனையில் சாகிறார்.. அடுத்து வரும் மேயர் ஒருவரும் கொல்லப்படுகிறார். அவருக்குப் பின் கலகம் முடிவுக்கு வருகிறது; சமாதான உடன்பாடுக்குப் போகிறார்கள். தவிர்க்க இயலாத , தவிர்க்க முடியாத வகையில் வரலாற்றின் தொடர்ச்சியாக வாழும் ஆர்லினோ மக்கள் இதில் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
புயேஃதியா குடும்பத்தின் ஆறு தலைமுறைகளின் வாழ்வும் வீழ்ச்சியும் மகோந்தா என்ற புனைவு நகரக் கட்டமைபோடு விவரிக்கப்பட்டிருக்கிறதுலத்தின் அமெரிக்காவின் கலாச்சார அம்சங்கள் நாவலின் எடுத்துரைப்பில் பிண்ணிப்பிணைந்துள்ளன.காலம் ஒரு வட்டமாய் சுழன்று பழைய அம்சங்களை நிர்மூலமாக்கி நிற்கிறது
இதில் வரும் குறீயீட்டு அம்சங்கள் நாவலை இன்னொரு படிம நிலைக்குக் கொண்டு செல்கிறது. தங்க மீனகள் துள்ளி விளையாடுகின்றன.தனிமைப்படுத்தப்பட்ட இரண்டாவது ஆர்லினோ போர் வாழ்க்கையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு தாத்தாவுடன் இணைந்து தங்க மீன்களை உருவாக்குவதில் மூழ்கிப்போகிறான். ஒரு நிலைமைக்கு மேல் போர் என்பது தேவையில்லை. உயிரிழப்புகள் சகித்துக் கொள்ள முடியாதாய் போய் விடுகிறது.தனிமையும் தாத்தாவும் தங்க மீன்களை உருவாக்கப் பயன்படுகிறது. புதிய உலகத்தின் குறியீடுகளாக புகைவண்டிப் பாதைகள் அமைகின்றன. புதிய மாற்றங்கlளுக்கு வழி சொல்கின்றன. மகோந்தா நவீன நகரமாக உருப்பெருகிறது. நவீனம் நரகத்திற்கு பாதையை இட்டுச் செல்கிறது. நகரத்திற்கு வெளியே ஒரு வாழைப்பழத்தோட்டம் நிறுவப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அங்கு வேலை செய்கிரார்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதை எதிர்த்து அய்ந்தாம் தலைமுறையினர் போராடுகிறார்கள். பழத்தோட்டத் தொழிலாளர்களை விருந்திற்கு அழைத்து பீரங்கியால் சுட்டு வீழ்த்துகிறார்கள். புகை வண்டியில் பிணங்களைப் போட்டு கடலில் எறிகிறார்கள். மகோந்தா தொத்து வியாதி நகரமாகிறது. மறதி என்ற வியாதி எல்லோரையும் தொத்திக் கொள்கிறது. யாரையும் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. யாரும் நகரத்தை விட்டு வெளியே போக முடிவதில்லை. வாழைமரங்கள் இரத்தக்கறைகளுடன் அடித்துச் செல்லப்படுகின்றன. தேடித்தேடி கொலை செய்யப்படுகிறார்கள்.செகுண்டோ தன் தாத்தாவின் சுரங்கத்தில் ஒளிந்து கொள்கிறான். தாத்தாவுடன் சேர்ந்து தங்க மீன்களை உருவாக்குகிறான்.சைக்களோப்பிடியா மிமி உருவாக்கமும் முக்கிய நிகழ்வாகிறது. முதலில் சித்திரங்கள் மூலம் சொல்லப்பட்டது. பின்னர் கதைகள் சம்பவங்கள் மூலம் சொல்லிக் கொடுக்கும் நிலை வருகிறது. மொழி தெரியாததால் தங்களை வெளிப்படுத்த முடியாத நிலை கடந்து போகிறது.பியந்தியா குடும்பத்தினருக்கு வழிகாட்டிகள் இல்லை. அடுத்த சந்த்திக்கு மிமியின் அறிவு பயன்படப்போகிறது.
பூர்வீக இந்தியர்களுக்கும் கறுப்பு அடிமைகளுக்குமான தொடர்பும் லத்தின் அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு முந்திய உள்நாட்டுக் கலவரங்களும்ம் தொடர்ந்து காட்டப்பட்டிருகின்றன.அமெரிக்கர்களின் வருகை நவீன ஏகாதிபத்தின் ஆதிக்கமாக அமைகிறது. வாழைத்தோட்ட உற்பத்திமுறைகளும் அந்த தொழிலாளர்களின் கொடூர கொலைகளும் கொலம்பியாவின் சரித்திர நிகழ்வுகளிலிருந்து எடுக்கப்பட்டவை.வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கமும் சர்க்கரை, காபி, பெட்ரோலியம் போன்றவற்றில் அவர்களின் ஆதிக்கத்தையும் குறிப்பவை. வாழைத்தோட்ட தொழிலாளர்களின் கொலைகள் கொலம்பிய அரசுப் படைகளுக்கும் பழக்கம்பனி தொழிலாளர்களுக்குமிடையிலான 1928 ம் ஆண்டின் நிகழ்வுகளை மையமாக்க் கொண்டிருக்கிறது. இந்த நாவலின் காலநிகழ்வுகள் புதிய ஏற்பாடு சார்ந்த சொர்க்க பூமியாகத் திகழ்ந்த காலம், பின் அந்த சொர்க்கம் மறதி நோயால் மூழ்கடிக்கப்ப்டுகிறது. புயந்தியா வம்சத்தைச் சார்ந்த கலப்பு இந்திய வேலைக்கார்களால் அந்த் நோய் கொண்டு வரப்படுகிறது. அந்த இந்தியர்கள் அமெரிக்காவின் இந்திய மக்களின் பிரதிநிதிகளாக அமைக்கிறார்கள். மறதி வியாதி அரசியல் சமூக சரித்திரங்களையும், மொழியின் சிறப்பையும், யதார்த்த்த்தின் முந்திய நிகழ்வுகளையும் நிராகரிக்கிற குறியீடாக அமைகிறது.
அரசியல் தளத்தில் ஆக்கிரமிப்புகளும், போர்களும் வன்முறையும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.ஆர்லினோ கர்னல் வெளியேற அர்காடியோ வெற்றி பெருகிறான். போரில் 17 மகன்கள் செத்துப் போகிறார்கள். சமூகத்தில் நடப்பவை வெளித்தொடர்பு மூலம் கொண்டு வரப்படுகின்றன,சரித்திரம் திரும்பவும் நிகழ்த்தப்படுகிறது, மனிதர்கள் திரும்பத்திருமப் ஒரே மாதிரியானவர்களாய் வந்து போகிறார்கள். ஒரே தோற்றம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். பவுதீக ஒற்றுமைகள், நினைவுகளுடன் கூடவே பலரின் பெயர் ஒரே மாதிரியாகவும் , முனோர்களின் பெயர்களைக் கொண்ட்தாகவும் அமைந்திருக்கிறது. காலமும் சில சமயம் உறைந்து போகிறது. ( காற்றைப்பார் . சூரியனின் ரீங்காரத்தை கேள். நேற்றையும், முந்திய நாளையும் போல் இன்றைக்கும் திங்கட்கிழமைதான் “ பக்கம் 86 )சிறுமி ரெமேதியோ குழந்தைப் பருவப் பழக்கங்களைத் தாண்டும் முன்பே பூப்படைந்திருந்தாள் 88 ) சிதைந்து போனவர்கள் தங்களின் மனவுறுதியை இழந்து முற்றிலும் சிதைந்து போய் சுவற்று மண்ணைத் தின்கிறார்கள் எது யதார்த்தம், எது கறபனை என்பதை கண்டு கொள்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்த நாவலில் காணப்படுபவர்களில் உடல் பலத்துடன் மூர்க்கத்தனத்துடன் பலர் இருக்கிறார்கள்.புயெந்தியாவின் முதல் மகன், உடல் பலத்துடன் இருப்பவன். . சிந்தனை இரண்டாம் பட்சம்தான்.அறிவைத்தேடிப்போகிறவர்களாகவும் தனிமைப்படுத்திக் கொண்டவர்களாகவும் பலர் இருக்கிறார்கள் உதாரணமாக் அவரின். இரண்டாவது மகன், சமூக நிகழ்வுகளில் அக்கறை கொண்டவனாகவும் விசித்திரமானவனாகவும் இருக்கிறான்.பெண்கள் நாலைந்து வகையினராக இருக்கின்றனர். முக்கியமாக உருசுலா இகுவாரா. மற்றவர்கள் தனிமையில் ஞாபகச்சக்தி இழந்தவர்களாக இருக்கும் போது இவள் அபாரமான ஞாபகச் சக்தி கொண்டவளாக இருக்கிறாள். குடும்பத்தின் நூறு வருடங்களுக்கு வழி காட்டி கொண்டு செல்பவளாக இருக்கிறாள்.
புயெந்தியாக்களின் வாழ்க்கை நிகழ்வுகளில் சாவு., திருமணம், காதல், எல்லாம் விரிவாய் இடம் பெறுகிறது, மாற்றங்களின் அடையாளமாக வாழைத்தோட்டங்கள் காட்டப்பட்டிருகின்றன.அமெரிக்க
முதலாளித்துவம் சுரண்டலை ஆரம்பிக்கிறது.. சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் வாழைத்தோட்டத்திடில் வேலை செய்வோர் ஆளாகிறார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கொல்லப்பட்டு அவர்களின் . உடல்கள் கடலுக்குள் வீசப்படுகின்றன.பிணக்குவியலிலிருந்து தப்பித்ஹ்டு வரும் ஜோஸ் ஆர்கடியோ செகுண்டோ மகோந்தாவிற்குச் திரும்பிச் செல்கிற போது அந்நகரம் படுகொலைகள் பற்றிய எந்த நினைவும் இல்லாமல் அவ்வாறு எதுவும் நிகழவில்லை என்ற அரசாங்கத்தின் பிரச்சாரத்தில் அமிழ்ந்து போய் இருப்பதைக் காண்கிறான். ஐந்தாண்டுகள் நிற்காத மழைபெய்து . மகோந்தோ உருக்குலைகிறது. வன்முறையும், மக்களுக்கு பயனில்லாத முன்னேற்றமும் மக்களை அலைக்கழிக்கிறது. . புயெந்தியாவின் குடும்பத்தின் சீரழிவு ஊரின் சீரழிவின் ஒரு பகுதியாகக் காட்டப்படுகிறது.
தனிமைப்பட்டுப்போகிறது. அக்குடும்பத்தில் எஞ்சிய ஒருவர் பழைய சுவடிகளை ஆராய்கிறபோது நடந்தவை முன்பே எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. புயேந்தியா வம்சத்தின் முதல் நபர் ஹோசே அர்க்காதியோ முதற் கொண்டு கடைசியாகத் தென்படும் அவுரேலியானோ வரை பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் தனிமைக்குள் உழன்று வாழ்க்கையை முடித்துக் கொள்றவர்கள் தான். பல கதாபாத்திரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட கால அளவை நிகழ்வுகள் கொள்ளாமல் தாறுமாறாகக் கட்டமைப்படிருக்கிறது.
கற்பனையின் உச்சமும் எதார்த்தமும் கலந்து உருவாகும் புனைகதை காவியத்தன்மை பெருகிறது.. நம்பகத்தன்மையும், நடக்க சாத்தியங்கள் கொண்ட விசயங்களும் புனைவுக்கதையை வெற்றியாக்கும். நடப்பு கதை சொல்லலில் மிகையானதாகவும் அறிவுக்குப் பொருந்தாத நிகழ்வுகளையும் சேர்த்து வழங்குவது ஒரு வகை எழுத்தாக உருவான கால கட்டத்தின் உச்சமான வெளிப்பாடாக இது விரிகிறது. யதார்த்தம் பழங்கதைகள், மரபானத் தொன்மக்கதைகளின் இயைந்த தன்மையில் புது வெளிப்பாட்டு முறையாக அமைக்கப்பட்டிருக்கிறது. 1940களில் அமெரிக்க மனநிலையை வெளிப்படுத்தவும் யதேச்சையான வெளிபாட்டு முறையாக கால் கொள்ள ஆரம்பித்து மாய யதார்த்தமாக உருக்கொண்டது இந்நாவலில் பரிணமித்துள்ளது. பின்நவீனத்துவ நவீனவாதிகளும் பின் காலனிய எழுத்தாளர்களும் சரித்திரத்தை மறு உருவாக்கம் செய்ய மாய யதார்த்த எழுத்து பயன்பட்டிருக்கிறது.
நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் மார்கெஸ் உருவாக்கியுள்ள முறை சிறப்பு மிக்கது. நினைவோடை உத்தி சார்ந்து இயங்குவது விலகுவதும் மாயத்தன்மையை இணைப்பதும் லாவகமாகச் செய்யப்பட்டிருக்கிறது.இதில் , சமூக, அரசியல், பண்பாட்டுக் கூறுகளை இணைந்து கொள்கின்றன.. அவருடைய ஆரமப புதினங்கள் இதற்கான அடிப்படையாக அமைந்துள்ளன. யதார்த்த வாழ்க்கையினூடே கற்பனை சித்திரங்கள் உயிரோட்டமாய் கொலம்பியாவின் கறைபடிந்த வரலாற்றையும் அரசியல் சூழல்களையும் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை நினைவுகளை அடுக்கிச் செல்வதன் மூலம் வரலாறு கட்டமைக்கப்படுகிறது. நினைவுகளும் சரித்திரக்குறிப்புகளும் நாவலை ஆக்கிரமிக்கின்றன. நினைவிழந்து மனிதர்கள் வாழ்கிற போது நினைவுகளை கட்டமைப்பது இழையாக எங்கும் படர்ந்திருக்கிறது.விளிம்பு நிலை மக்களின் மீதான சுரண்டல் முதலாளித்துவத்தின் மனித உரிமைமீறல் அம்சங்களையும் வன்முறையையும் தொடர்ந்து காட்டிக்கொண்டிருக்கிறது.இது மகோந்தாவின் பூர்வக்குடிகளூக்கும் அதிகார பலம் கொண்ட இராணுவத்திற்குமான போராட்டமாக அமைகிறது.
இந்த நாவலில் அறிமுகமாகும் மகந்தோ நகரம் முன்பே அவரின் முதல் நாவலான லீப் ஸ்ட்ராமில் இடம் பெறுகிறது. மகந்தோ என்றால் வாழை என்று பொருள். வாழைப்பயிர் செய்யும் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை நடத்தும் முறையும், அதுமூடப்பட்ட பின்பு நடக்கும் சிரமங்கள் அந்த மக்களை மிகவும் பாதித்திருக்கிறது. 1928ல் நடைபெற்ற யுனைடெட் ப்ரூட் வேலை நிறுத்தம் அவரின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்ததாகும்.முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் அவர்களின் கோரிக்கைகளைமுன் நிறுத்தி கூடிய ஒரு இரவில் ஆர்ப்பாட்டம் நடத்த் கூடிய போது அவர்கள் மேல் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. நூற்றுக்கணக்ககான விவசாயிகள் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போய் விட்டனர். அப்படி ஒரு கலவரம் நடக்கவேயில்லை என்று அரசு மறுத்தது. வரலாற்று நூல்களில் அந்தச் சம்பவம் நடைபெறவே இல்லை என்றப்டி இல்லாமல் போனது. அவரின் தாத்தா, பாட்டி,, அத்தைகளோடு வளர்ந்த வீட்டுச்சூழலையும் அவர்களையும் இந்நாவலில் கொண்டு வந்திருக்கிறார். காப்ரியேல் அவரது தகப்பனாருக்கு பதினோறாவது குழந்தை. அவரின் பெற்றோர் அவரை தாத்தா, பாட்டியிடம் விட்டு விட்டு வேறு நகரத்திற்குச் சென்று விட்டனர். பாட்டியின் வளர்ப் பின் போது பாட்டியின் தொன்மக்கதைகள் அவரை மிகவும் பாதித்தன.அங்கிருந்த ஊழல் அரசியலை எதிர்த்துக் குரல் கொடுத்த ஜார்ஜ் எலீசர் கெய்டன் முந்திய பல படுகொலைகள் பற்றி விசாரணை செய்ய தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். மிதவாதக்கட்சியில் பிளவு ஏற்படுத்தும் அளவு வளர்ந்தார். ஆயிரக்கணக்காணோட் கொல்லப்பட்டனர். பழமைவாதிகளின் அச்சுறுத்தல் மீறி மதவாதிகள் ஆட்சிக்கு வருகிறார்கள். கெயடன் கொலை செய்த பின் ந்ட்ந்த தொடர்ந்த வன்முறை, மூவாயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். இரண்டு கட்சிகளும் கொரில்லா படைகளைத் தயார் செய்து குழப்பம் விளைவித்தனர். பத்து லட்சம் விவசாயிகள் வெனிசூலாவுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர். மிதவாதிகள் கொல்லப்பட்டனர். கொலம்பியா துண்டாடப்பட்ட காலத்தில் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்ட வன்முறையும் காப்ரியலை மிகவும் பாதித்து அவரின் படைப்புகளில் அதன் தாக்கத்தை உண்டு பண்ணியது.
சாவு, பிறப்பு, சுயபிரக்ஞயற்ற வாழ்வு, துன்பங்கள், சடங்குகளின் ஆதிக்கம்,புதிய பெயர்களிலும் புதிய சடங்குளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது, தங்களின் பூர்வ அடையாளங்களைக் கண்டு கொள்வது என்று நகர்கிறது. காலம் முடிந்து போனதிற்கும் ., நிகழ் காலத்திற்குமாக அலைக்கழிகிறது,அடிமைத்தனத்தின் கோரமும், காலனிய ஆதிக்க வன்முறையும் அலைகழிப்பும் மாந்திரீக அம்சங்களோடு சொல்லப்படும் போது யதார்தத்தை மீறிய வலிமை சேர்கிறது.தமிழ்க் கலாச்சார சூழலில் பல அம்சங்களைப் பொருத்திப் பார்க்கவும் இயல்பாக அமைந்திருக்கிறது, இன்றைய இந்தியச் சூழலின் அரசியல் கலாச்சார பொருளாதார அம்சங்களை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவலின் பல அம்சங்கள் கோடிடுவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழிபெயர்ப்பு வெகு சிரத்தையுடன் செய்யப்பட்டிருப்பதை ஆங்கில மொழிபெயர்ப்பின் சிக்கல் சொற்றொடர்களை ஒப்பிட்டு கண்டு கொள்ள முடியும் வறக்காப்பி முதல் பாஷாணம் வரையிலான பல சொற்களின் பிரயோகங்கள் மொழிபெயர்ப்பின் இயல்புதன்மையை வளப்படுத்துகிறது.உதிரி உதிரியாக மார்க்கேஷின் படைப்புகள் தமிழில் கிடைத்து வந்த சூழலில் ஒரு முழு நாவல் வெளியிடப்பட்டிருப்பது மொழிபெயர்ப்பின் மூலம் தமிழ்வாசகன் சென்றடையும் அதிக பட்ச வாசிப்பு சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது.
( தனிமையின் நூறு ஆண்டுகள் : காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் நாவல், பக்கங்கள் 406 ;ரூ 350 : வெளியிடு : காலச்சுவடு , நாகர்கோவில் )
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.