நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

பாண்டிய மன்னர்கள் தாம் அரசாண்ட காலத்தில் முச் சங்கங்களான தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் ஆகிய சங்கங்களை அமைத்து இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்து வந்தனர். அதில் தலைச் சங்கம், இடைச் சங்கம் ஆகியவற்றில் எழுந்த பல சிறந்த நூல்கள் யாவும் (தொல்காப்பியம் ஒன்றைத் தவிர) கடலன்னையின் சீற்றத்தால்  அழிந்து விட்டன. இருந்தும் கடைச் சங்கக் காலத்தில் எழுந்த ஒரு சில நூல்களைச் சங்க இலக்கியங்கள் என்று அழைத்தனர். இச் சங்க இலக்கியங்களான பத்துப் பாட்டு, எட்டுத் தொகை ஆகிய நூல்களைப் பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும், சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் வகுத்துக் காட்டுவர் ஆன்றோர்.

சங்க இலக்கியங்களில் தமிழர் தம் வாழ்வியல், அறவியல், அறிவியல், தொன்மை வாய்ந்த மொழி, பெருமை மிகுந்த பண்பாட்டுச் சிறப்பு, சிந்தனை வளமுடைய இலக்கண இலக்கியங்கள், இயற்கை வளம், நாகரிகம், கலாசாரம், களவியல், கற்பியல், பழக்க வழக்கங்கள், தலைமுறைத் தத்துவங்கள், கரணத்தோடு கூடிய சடங்கு முறைகள் ஆகியன பரந்து செறிந்து கிடக்கின்றன. இவற்றில் மடலேறல் பற்றி ஆய்வதுதான் இக் கட்டுரையின் நோக்காகும்.

மடலேறல்
தான் காதலித்த தலைவியை அடைய முடியாத நிலையில் உள்ள தலைவன் ஒருவன் இரு பக்கங்களிலும் கருக்குள்ள காய்ந்த பனை மட்டையால் குதிரை ஒன்றை அமைத்து, அதை அலங்கரித்து, சிறு மணிகள் பூட்டி, மயிற் பீலி சூட்டி, பூமாலை தொடுத்து, தன் காதலியின் படம் வரைந்து குதிரையின் கழுத்தில் தொங்க விட்டு, தலைவன் தன் கழுத்தில் எருக்கலம் பூமாலை அணிந்து கொண்டு குதிரையில் ஏறி அமர, பக்கத்திலுள்ள சிறுவர்கள் அக் குதிரையை இழுத்துக் கொண்டு தெரு வழியே செல்வார்கள். தெருவிலுள்ளோர் இக் காட்சியைப் பார்த்துச் சிலர் மகிழ்வதும், வேறு பலர் பார்த்து மனம் குலைவதும் நிகழும். குதிரையை இழுத்துச் செல்லும் பொழுது பனங்கருக்குத் தலைவனை வெட்டி உதிரம் பெருக்கெடுப்பதும் நிகழும். தலைவன் காமவெறியுடன் இருப்பதினால் இதனை அவன் பொருட்படுத்த மாட்டான். இவற்றைக் கவனித்த ஆன்றோர் இரு பக்கத் தமருடன் கதைத்து இருவருக்கும் திருமணம் நடாத்தி வைப்பதும் நிகழும். இனி, சங்க இலக்கியங்கள் மடலேறல் பற்றிப் பேசும் பாங்கினையும் காண்போம்.

தொல்காப்பியம்
இடைச் சங்க காலத்தில் எழுந்த தொல்காப்பியம் என்ற மூத்த நூலைத் தொல்காப்பியர் (கி.மு.711) எனும் புகழ் பெற்ற புலவர் யாத்துத் தந்தனர். அவர் மகளிரைப் பற்றிக் கூறுகையில், மடலேறுதல் அழகுதரும் செயல் அல்லாமையினால் அதை எக்குலப் பெண்களும் மேற்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.

'எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மை யான.'  - (பொருள் 38)

தலைமகனுக்கே உரிய மடலேறுதலும், இளமை நீங்கி முதுமையுற்ற காலத்தும் ஆசை தவிராது தம்முள் கூடி இன்பம் துய்த்தலும், தெளிவித்தற்கரிய நிலையில் காமத்தின்கண் மிகுதிப்பட்டு நிற்றலும், ஐந்திணையாகிய ஒத்த காமத்தின் மாறுபட்டுவரும் நிகழ்சியும் ஆகிய நான்கும் பெருந்திணை எனப்படும். கைக்கிளை புணராது நிகழும் என்றமையால், பெருந்திணை நிகழ்ந்தபின் நிகழும் என்று கொள்ளவும்.

'ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடும் தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.' – (பொருள். 54)

களவின்கண் தலைவனும், தலைவியும் இருப்பது வழக்கம். இது நீடித்துப் போவதைத் தலைவியும், தோழியும் விரும்பாது, அவன் வரைந்து கொள்ள வேண்டுமென்று கேட்டு நிற்பர். ஆனால் தலைவன் பல காரணங்களைச் சொல்லி நீடித்துக் கொண்டே செல்ல விரும்புவான். இந்நிலையில், தோழி தலைவனை நாடி 'இவ்விடத்துக் காவலர் மிகவும் கொடியர். தாயும் இதை அறிந்து விட்டாள். இனிப் பகற் குறிதானும் கைகூடாது. தலைவியை வீட்டுடன் சிறை வைத்தும் விடக்கூடும.;' என்றும் கூறி நிற்பாள். இதற்குத் தலைமகன் 'மடலேறுவேன்' என்றும், 'பொய்யாக மடலேறுவேன்' என்றும் கூறும் இடங்களும் உள.

'....மடல்மா கூறும் இடனுமா ருண்டே.' – (பொருள். 99)
'... பொய்தலை அடுத்த மடலின் கண்ணும்...' – (பொருள். 109)

குறுற்தொகை
கடைச் சங்கக் காலத்தில் எழுந்த எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுற்தொகையில் மடலேறுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளதையும் காண்போம். அமிழ்தத்தின் இனிமைத்தன்மை பொதிந்த செவ்விய நாவினையுடைய மங்கையே! நேரியதாய் விளங்கும் கூரிய பல்லினையும் சில சொல்லினையுமுடைய அரிவையை யானே பெறக் கடவேனாவேன். இவ்வூர் வருந்தி நல்லவளான அவள் கணவன் இவன் என்று கூற யாம் சிறிது வெட்கமடைவோம். இனி அச்சிறு நாணையும் நீக்கி மடலேறுவல் யான். 'மறுகி ... கூற' என்றது, மடலேறுவல் என்னும் குறிப்பு.

'அமிழ்துபொதி செந்நா வஞ்சி வந்த
வார்ந்திலங்குவை எயிற்றுச்சின் மொழியரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு
அறிகதில் அம்மவிவ் ஊரே மறுகி
நல்லோள் கணவன் இவனெனப்
பல்லோர் கூறயாஅம் நாணுகஞ் சிறியதே.' – (தொல்கபிலர்- 14)

காமம் முதிர்ச்சி அடைந்தவிடத்தில் பனைமடலையும், 'மா' வென ஊர்வர். எருக்கலம் பூவையும் அணிவர். தெருவில் தங்குறைகளை எல்லாரும் அறிய வைப்பர். பிறிதும் ஆவர்.

'மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கலங் கண்ணியுஞ் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமம் காழ்க்கொளினே.' – (பேரெயின்முறுவலார்- 17)

தோழியிற் கூட்டம் வேண்டி இரந்து நிற்கின்றான் தலைவன். காலை, பகல், மாலை, இரவு, விடியல், வைகறை ஆகிய சிறு பொழுதுகள் எல்லாம் வேட்கை நோய் கொண்டாரை வருத்துகின்றனவே. இதை உணர்ந்தால் பொய்யாகுமா காமம்? மறுத்து மடலேறச் செய்தலும் உமக்குப் பழிதருவதே. உயிர் வாழ்தலும் எனக்குப் பழியே என்று கூறுகின்றான்.

'காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியின் பொய்யே காமம்
மாவென மடலொடு மறுகில் தோன்றித்
தோற்றெனத்  தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.' – (அள்ளுர் நன்முல்லையார்- 32)

இது,  தோழியாற்  குறைமறுக்கப்பட்ட  தலைமகன்  தன்நெஞ்சிற்குக்  கூறியது. பனையின் மடலின்மேல், மணியாலாகிய  மாலையை மார்பிற் கட்டி, வெள்ளெலும்பை அணிந்து, பிறர் இகழத் தோன்றி, ஒரு நாளில் பெருநாணை விலக்கித் தெருவிடத்தில் நடக்கவும் தருவது கொல்? அசைந்த நடையையுடைய தோழி, இரங்கிலள் நாம் விடற்குப் பொருந்திய தூதில்.

'விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணிஅணி பெருந்தார் மார்பிற் பூட்டி
வெள்ளென்பு அணிந்துபிற ரௌ;ளத் தோன்றி
ஒருநாள் மருங்கில் பெருநாண்நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ
கலிங்கவிர் அசைநடைப் பேதை
மெலிந்திலள் நாம்விடற்கு அமைந்த தூதே.' – (மடல்பாடிய மாதங்கீரன்- 182)

கலித்தொகை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில் தலைவன்; மடலேறுதல் தொடர்பான பாங்கினையும் பார்ப்போம். தலைவி ஒருத்தி, தன் காதலை ஏற்றுப் பின் தனக்கு இணங்காதது கண்டு துயருற்ற தலைவன் ஒருவன், அவளிடத்தே சென்று 'நீ எனக்குத் தந்த காமநோயின் துயருக்கு மாற்றாக உன் சுற்றத்தாரைத் தண்டிக்க வேண்டும். இந்நோய் பொறுக்கும் எல்லை கடந்து பெரிதானால், இவ்வூர் மன்றத்திலே மடலேறி வந்து, நீ எனக்குத் தந்த பெரும் பழியை ஊரறியச் செய்வேன்.' என்றுரைத்துச் சென்றான்.

'...ஒறுப்பின், யான் ஒறுப்பதுநுமரை, யான், மற்றுஇந்நோய்
பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயின், பொலங்குழலாய்!
மறுத்து இவ்வூர் மன்றத்து மடல்ஏறி,
நிறுக்குவென் போல்வல்யான், நீ படு பழியே.' – (கபிலர்- குறிஞ்சிக்கலி- 22)

மடலேறி வந்த ஒருவன் சான்றோரை நோக்கி 'வாழ்க! சான்றோரே, இவ்வூரவள் ஒருத்தி, மின்னலைப்போல் என்முன் வந்து, தன் மேனியை எனக்குக் காட்டி என் நெஞ்சைப் பற்றிச் சென்றாள். அன்றிலிருந்து உறக்கமின்றி வருந்துகிறேன். ஆவிரை எருக்கு மாலை அணிந்து, மணிகள் ஒலிக்க, இப் பனைமடற் குதிரை ஏறி வருகின்றேன். அவள் எனக்குத் தந்த காமநோய் சூளை நெருப்பாய் என்னை வதைக்கின்றதே. சான்றோர்களே! என் துயரைத் தீர்த்து வைப்பீர்களாக!.' என்று கேட்கும் காட்சி இதுவாகும்.

'சான்றவிர் வாழியோ! சான்றவிர்! .....
துளியிடை மின்னுப்போல் தோன்றி, ஒருத்தி,
ஒளியோடு உருவு என்னைக் காட்டி, அளியள், என்
நெஞ்சாறு கொண்டாள், அதற்கொண்டும் துஞ்சேன்,
அணியிலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின்
பிணையல் அம் கண்ணி மலைந்து, மணி ஆர்ப்ப,
ஓங்குஇரும் பெண்ணை மடல்ஊர்ந்து, ...... என்
துயர்நிலை தீர்த்தல் நும்தலைக் கடனே.' – (நல்லந்துவனார்- நெய்தற்கலி- 22)

காதல் கைகூடாது பலநாள் துயருற்றிருந்தான் தலைவன் ஒருவன். புpன்னர் காதலித்தவளையே மணந்து வந்தான். இது எவ்வாறமைந்தது என்று நண்பர் கேட்க, அவன் 'நான் காதலித்தவள் காம நோயைத் தந்துவிட்டுச் சென்றாள். நான் மடல்மா ஊர்ந்து சென்று அவள் ஊர் மன்றத்தில் நின்று பாடினேன். ஏன் படையெடுப்புக்குப் பணிந்து, அந்த அழகியை எனக்கு மணம் செய்து வைத்தனர்' என்று கூறினான்.
'
....வருந்த மா ஊர்ந்து, மருகின்கண் பாடத்
திருந்திழைக்கு ஒத்த கிளவி கேட்டு, ஆங்கே,
பொருந்தாதார் போர்வல் வழுதிக்கு அருந்திறை
போலக், கொடுத்தார் தமர்.' – (நல்லந்துவனார்- நெய்தற்கலி- 24)

தலைவி, தலைவன்மேல் வைத்த காதலால் மெலிந்து துயருற்றாள். ஊரவர் தலைவி நிலை கண்டு வருந்தினர். தலைவி, கனவிலாவது அவனைக் கண்டு மகிழலாமென்றால் இமை மூட மறுக்கிறதே!. 'ஞாயிறே! கனவிலாவது அவனை என்கண்முன் கொண்டு வந்து காட்டு' என்று இரக்கின்றாள். நீ காட்டாது போனால் 'பனைமடல் குதிரையிலே' ஊர்ந்து அவன் இங்கே வருமாறு உதவக் காமதேவனை வேண்டப் போகின்றேன் என்கின்றாள். அப்பொழுது அவள் காதலன் வந்ததும் பொலிவுற்றாள்.

'......  ஞாயிறே! காட்டாய் நீ ஆயின்,
பனைஈன்ற மாஊர்ந்து அவன் வரக், காமன்
கணை இரப்பேன், ..... ஒண்ணுதல்
காதலன் மன்ற அவளை வரக்கண்டு, ஆங்கு
ஆழ்துயரம் எல்லாம் மறந்தனள், பேதை,.....
தகை ஆகத் தையலாள் சே;ந்தாள் - நகை ஆக,
நல்லெழில் மார்பன் அகத்து!'  - (நல்லந்துவனார்- நெய்தற்கலி- 30)

நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் மடலேறுதல் காட்சிகள் பற்றியும் காண்போம். 'மடலேறி மன்றம் போயாவது அவளை அடைவேன்' என்று திடங்கொண்டுள்ளான் தலைவன். அழகிய, பாவையொத்த, மாமை நிறமுடையவளை, விலை மதிப்பற்ற பூளைப்பூவின் மாலை அணிந்து, 'இவனுக்கு நன்கு பித்தேறிவிட்டது' என்று பிறர் கூறுமாறு பனைமடற் குதிரையேறி அடைவேனென்று புறப்படுகிறான்.

'விலாப் பூவின் கண்ணி சூடி
'நல்ஏ முறுவல்' எனப் பல்லூர் திரிதரு
நெடுமாப் பெண்ணை மடல்மா னோயே! .......
காண்தகு வனப்பின் ஐயள் மாயோய் அணங்கிய
மையல் நெஞ்சம் என்மொழிக் கொளினே!' –  (கந்தரத்தனார்-146)  

தலைவன், தோழியின் உதவியை வேண்டி நின்றான். தோழி உதவ மறுத்து விட்டாள். மனங்குலைந்த தலைவன் 'நான் தலைவிமேற் கொண்ட காமமானது என்னை மடலேற வைத்தது, ஊரார் தூற்றல் எருக்கம்பூவின் மாலையைத் தந்தது, ஞாயிற்று மண்டிலம் மேற்றிசை சென்றது. இவை எனக்கு மேலும் துன்பத்தைத் தந்தன.' என்றான்.

'மடலே காமம் தந்தது, அலரே
மிடைபூ எருக்கின் அலர்தந் தன்றே
இலங்குகதிர் மழுங்கி, எல்விசும்பு படரப்
புலம்பு தந்தன்றே புகன்றுசெய் மண்டிலம்,
எல்லாம் தந்ததன் தலையும் பையென....' – (ஆலம்பேரி சாத்தனார்-152)    

'அன்பின் தலைவியே! குதிரை என நினைத்து மடலூர்ந்து வருதலும், மதிலென மதித்து வெண்தேர் ஏறலும், தலைவன் பித்தாகினன் என்பதைக் குறிக்கும். நம் சேரிக்கு வந்தவருக்கு நாம்தான் அருள்செய்தல் வேண்டும். இதை நான் கண் சைகையாலும் குறிப்பாலும் பல முறை காட்டியும், நீ ஒரு முடிவையும் கூறவில்லையே!' என்று தோழி வருந்துவதையும் காணலாம்.

'மாவென மதித்து மடலூர்ந் தாங்கு
மதிலென மதித்து வெண்தேர் ஏறி,
என்வாய் நின்மொழி மாட்டேன் நின்வயின்
சேரி சேரா வருவோர்க் கென்றும்
அருளல் வேண்டும்  அன்புடை யோய்! ஏன,
கண்ணினி தாகக் கோட்டியும் தேரலள், .......' – (மோசி கீரனார்-342)

பாங்கியின் உதவியோடு தலைவியை அடைய விரும்புகிறான் தலைவன். அவன் வரைந்து கொள்ளாது களவுறவில் நாட்டமுள்ளான் என அறிந்த பாங்கி, அவனக்கு உதவ மறுக்கிறாள். இதை விரும்பாத தலைவன் தன் நெஞ்சோடு பின்வருமாறு கூறுகிறான். 'நிலாப் போல ஒளி வீசும் கூந்தலோடு சேர்ந்த சிறு நுதலையுடைய என் தலைவியானவள், என்னை வதைக்கும் காம நோயைத் தந்து விட்டாள். இதைத் தணிக்க, யாம் பனைமடலேறி, எருக்கம் பூச்சூடீ, ஊர்தோறும் ஊர்ந்து, அவள் சிறப்புப் பாடிச்செல்வதை மேற்கொள்ளோம். அவள் தந்த காமநோய் பிணியாக முதிர்ந்து இறந்து போகவும் மாட்டோமா? நெஞ்சமே! இனி, என் செய்வோம்?' என்று கவலைப்பட்டான்.

'மடல்மா ஊர்ந்து மாலைசூடிக்
கண்ணகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப்
பண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று
அதுபிணி யாக விளியலங் கொல்லோ...
அளகஞ் சேர்ந்த சிறுநுதல்
கழறுபு மெலிக்கும் நோயா கின்றே?' – (மடல் பாடிய மாதங்கீரனார் - 377)

திருக்குறள்
சங்கமருவிய காலத்தில் எழுந்த பதினெட்டு நூற்தொகுதிகளைப் பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் என்றழைத்தனர். திருக்குறள் இவற்றில் ஒன்றானது. தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்த திருவள்ளுவர் (கி.மு.31) இந் நூலினை யாத்துத் தந்துள்ளனர். இனித் திருக்குறள் கூறும் மடலேறல் பற்றிய காட்சிகளையும் காண்போம்.

காதலியின் அன்பு பெறாமல், காமத்தால் துன்புற்று வருந்துபவர்க்கு மடலூர்தல் ஒன்றுதான் துணையாகும். காதலியின் பிரிவைத் தாங்காத என் உடலும், உயிரும் வெட்கத்தை மறந்து மடலேறத் தூண்டுகின்றது.

'காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி. – (1131)

'நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.' – (1132)

முன்பு, நாணமும், ஆண்மையும் பெற்றிருந்தேன். இன்று, காமம் மிக்கவர் ஏறும் மடலையே விரும்புகிறேன். மாலைக் காலத்தில் காம மிகுதியால் மடலேறல் பற்றிய நினைவைச் சிறு வளையல் அணிந்த காதலி எனக்குத் தந்து விட்டாள்.

'நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.'  -  (1133)

'தொடலைக் குறுற்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.' – (1135)

மடலூர்தல் பற்றியே நள்ளிரவிலும் நினைக்கின்றேன். காதலியின் பிரிவால் என் கண்கள் என்றும் உறங்காது இருக்கின்றன. கடல்போன்ற காம வேதனை அடைந்தாலும் பெண்கள் மடலேறுவதில்லை என்பதனால் அப் பெண் பிறப்பைப் போல் பெருமையுடைய பிறவி வேறில்லை.
'\
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா  பேதைக்கென் கண்.' – (1136)

'கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்.' – (1137)

நிறைவாக
இதுகாறும் தொல்காப்பியம், குறுற்தொகை, கலித்தொகை, நற்றிணை, திருக்குறள் ஆகிய நூல்களில் தலைவிமேற் கொண்ட காதல் கைகூடாதவிடத்துத்  தலைவன் மடலேறும் காட்சிகளைப் பார்த்தோம். இது தொடர்பில், தலைவி மடலேறிய செய்தியை எந்தவொரு நூலிலும் கண்டிலேம். இதற்குத் தொல்காப்பியரே முழுமுதற் காரணமாவார். மடலேறுதல் ஓர் அழகுதரும் செயல் அல்லாமையினால், அதை எக்குலப் பெண்களும் கைக்கொள்ளக் கூடாது என்று சூத்திரம் அமைத்துப் பெண்குலத்தை மேம்படுத்தியுள்ளார். எனவேதான் பெண்கள் மடலேறுவது இல்லை.
தலைவன் பல சிரமங்களுக்கிடையில் மடலேறித் துன்பப்பட்டாலும், ஈற்றில் அவன் விரும்பியிருந்த  தலைவியைத் திருமணம் புரிந்து இன்புற்றிருப்பதையும் காண்கின்றோம். இது விடயத்தில் ஊரிலுள்ள சான்றோர்கள் தலையிட்டு அவர்களுக்குக் கரணத்தோடு சேர்ந்த திருமணங்களை நடாத்தி வைத்துள்ளனர். அதிகமாக மடலேறுபவன் தோல்வி கண்டது கிடையாது. சங்க காலத்தில் மலிந்திருந்த மடலேறல், தற்பொழுது செயலளவில் இல்லாது, பேச்சளவில் மட்டும்தான்; நிலைத்துள்ளது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்