நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

உலகிலுள்ள உயிரினங்கள் அத்தனையும் தத்தம் ஆண், பெண் பாலார்மேற் காதல் கொண்டு, ஒன்றறக் கலந்து, தம் இன விருத்தியைப் பெருக்கி, உலகை உயிருடன் நிலைநாட்டிப் பூமித்தாய்க்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. அதில், மற்றைய உயிரினங்களை விட மனித இனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிக விமரிசையாகத் திருமணம் நடாத்தி இன்புறுவர். திருமணங்கள் நாட்டுக்கு நாடு, காலத்துக்குக் காலம் வேறுபட்டிருக்கின்றதையும் காண்கின்றோம். இனி, திருமணங்கள் பற்றிப் பண்டைத்தமிழர் இலக்கியங்கள் பேசும் பாங்கினையும் ஆராய்வோம்.

தொல்காப்பியம்
(1)    எண்வகை மணங்கள்:- ஒத்த ஆணும் பெண்ணும் தம்முள் நட்புக் கொண்டு ஒழுகிய காதலை 'களவு' என்று அழைத்தனர். பின்வரும் சூத்திரத்தில் 1) அசுரம், 2) இராக்கதம், 3) பைசாசம், 4) காந்திருவம், 5) பிரமம், 6) பிரசா பத்தியம், 7) ஆரிடம், 8) தெய்வம் ஆகிய எண் வகை மணங்கள் பற்றிக் கூறுகின்றார். இவற்றுள் முதல் மூன்றான அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகியவை கைக்கிளையைச் சாரும் ('முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே-' –பொருள்.102)  என்றும், கடைசி நான்கான பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகியவை பெருந்திணையைச் சாரும் ('பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' – பொருள்.103) என்றும் சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியர். எண்வகை மணத்துள் எஞ்சிய 'காந்திருவம்'- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைக்குரியதாகும். இவ்வண்ணம் எண்வகை மணத்தையும் கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை ஆகிய ஏழு திணைகளுக்கும் வகுக்கப்பட்டமை சிறப்பாகும்.

(2)    கரணம்:- ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்கு, முதல் நிலையாய் இருந்த நிகழ்ச்சியைத் தமிழர் 'தீருமணம்' என்று அழைத்தனர். 'கரணம'; என்பது சடங்கொடு கூடிய மணநிகழ்வாகும். 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப' – (பொருள். 143) என்கின்றது தொல்காப்பியம். தலைவன் தலைவியரிடையே பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான்றோரும் சடங்கு முறைகளை வகுத்து, வரையறைகளையும் அமைத்தனர்.

தலைவி பெற்றோரை விட்டுத் தலைவனுடன் ஒன்றிணைந்து தனிவழி போகுமிடத்தும், கொடுப்பதற்குத் தலைவியின் தமர் இல்லாதவிடத்தும், சடங்குமுறையோடு கூடிய மணம் நடைபெறுதலும் உண்டாம்.
'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே,
புணர்ந்துடன் போகிய காலை யான.' – (பொருள். 141)

அகநானூறு
கடைச் சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் 86 ஆவது செய்யுளில் தமிழரின் பண்டைய திருமணம் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. இப் பாடலை நல்லாவூர் கிழார் என்னும் புலவர் பாடியுள்ளார். வதுவை மணம்:- உழுந்து சேர்த்துக் குழைவாகச் சமைத்த உழுத்தம் பருப்புப் பொங்கலின் பெரிய உருண்டைகளை மணவிழாக் காணவந்தோர் புசித்துக்கொண்டிருந்தனர். வரிசைக் கால்கள் நாட்டிப் பந்தலிட்டு, தரையில் வெண்மணல் பரப்பி, மனை விளக்கேற்றி, எங்கும் பூமாலை தொடுத்திருந்தனர். நல்லவேளை வந்ததும், தலையில் நீர்க்குடமும், கைகளில் புதிய மண் கலயங்களும் தாங்கி, திருமணம் நடாத்துபவராகிய மங்கல மகளிர்கள் முன்னேயும், பின்னேயும் தருவனவற்றை முறையாகத் தந்துகொண்டிருந்தனர். மகனைப் பெற்ற தேமல் படர்ந்த வயிற்றினையுடைய, புத்தாடை அணிந்த மகளிர் நால்வர் கூடி நின்று 'கற்பில் வழுவாது, நல்லவை உதவி, உன்னை மனைவியாகப் பெற்ற கணவனைக் காக்கும் துணைவியாவாயாக!' எனக் கூறி வாழ்த்தி நின்றனர்.
பூக்களையும், நெல்லையும் நீருடன் கலந்து அவள் தலைமேல் தூவினர். அவள் கரிய கூந்தலில் அவை தங்கி நிற்ப, அவளை மங்கல நீராட்டி வதுவை மணமும் நிகழ்ந்து முடிந்தது. அதன் பின்னர், தலைவியின் தமர் (பெற்றோர், உற்றோர்) விரைந்து வந்து 'பெரிய இல்லக் கிழத்தி ஆவாய்!' என்று கூறித் தலைவியைத் தலைவனிடம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து ஒரு தனி அறையில் முதல் இரவும் நடந்தது.

''உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக்.....

கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்,

புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று
வால்இழை மகளிர்  நால்வர் கூடிக்,
'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக' என
நீரொடு சொரிந்த ஈர்இதழ்
பல்இருங் கதுப்பின் நெல்லொட
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுந்து,
'பேர்இற் கிழத்தி ஆக' எனத் தமர்தர:
ஓர்இற் கூடிய உடன்புணர் கங்குல் .... ''  -  (அகம் 86)

மேலும், திருமணம் பற்றிய இன்னொரு செய்தியை அகநானூற்றில் உள்ள 136 ஆவது பாடலையும் பார்ப்போம். இப் பாடலை விற்றூற்று மூதெயினார் என்ற புலவர் பாடியுள்ளார்.

'குற்றம் தீர நெய்யில் ஊறிய இறைச்சியோடு கலந்த வெண் சோற்றை மணவினை காணவந்த உயர்ந்தோற்குக் குறைவின்றிக் கொடுத்து, உரோகிணி கூடிய குற்றமற்ற சுபநேரத்தில் மணவீட்டினைச் சோடித்து, கடவுளை வணங்கி, மணப்பறையுடன் பெரிய முரசம் ஒலிக்க, தலைவியை நீராட்டிய மங்கல மகளிர் விலக, வாகையிலையையும் அறுகின் முகையையும் ஒன்றுசேர்த்துக் கட்டிய வெண்நூலைச் சூட்டி, தூய ஆடை உடுத்தி, மணப்பந்தலில் ஒன்று கூடி, ஆபரணங்கள் அணிவித்த சிறப்பினால் எழுந்த வியர்வையைத் துடைத்து, தமர்கள் நமக்கு இற்கிழத்தியாகத் தந்த, தலைநாள் இரவும் வந்தது,' என்று வதுவை மணம் முடிவுறுகின்றது.

'மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் ....
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்,
கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்,
படுமண முழுவொடு பரூஉப்பணை இமிழ,

வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை,

பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத் ......
தண்நறு முகையொடு வெந்நூல் சூட்டித்,
தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி,

மழைபட் டன்ன மணன்மலி பந்தர்,
இழைஅணி சிறப்பின் பெயர்வியப்பு ஆற்றித்
தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின் ......'   -   (அகம். 136) 

மகாபாரதம்
காசி நாட்டு வேந்தன் தன் கன்னியர் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவருக்கும் சுயம்வரம் செய்வதை அறிவித்தான். சுயம்வர மண்டபத்தில் காசி நாட்டு வேந்தன், அவன் மூன்று இளவாசிகள், பல நாட்டு மன்னர்கள் ஆகியோர் கூடியிருந்தனர். இதை அறிந்த பீஷ்மர் அங்கு தோன்றி:- 'அரசர்களே! மணங்களில் எட்டு வகை உண்டு. அதில் பெண்ணைப் பலாத்காரமாகக் கவர்ந்து சென்று திருமணம் செய்யும் 'இராக்கதம்' என்பதே சிறந்தது என்று தர்மசாத்திரம் கூறும். அதைப் பின்பற்றி இம் மூன்று மகளிரையும் பலவந்தமாக நான் கவர்ந்து செல்லப்போகிறேன். அரசர்களே! உங்களுக்கு ஆற்றல் இருக்குமானால் இதைத் தடுத்து நிறுத்துங்கள் பார்க்கலாம்' என்று அதிகாரத் தொனியில் கூறிவிட்டு, தன்னை எதிர்த்த அரசர்களை வென்று, அம் மூவரையும் அழைத்துச் சென்றுவிட்டார்.
ஐங்குறுநூறு

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு என்ற நூலில் திருமண நிகழ்வு ஒன்றினைக் காண்போம். பண்டைக் காலத்தில் திருமணம் இரு கூறு கொண்டது. முதற்கூறு சிலம்பு கழித்தல் என்னும் சடங்கு நிகழும். இரண்டாம் கூறு திருமணம் என்பது நிகழும். உடன் போக்கில் தலைவன் தலைவியைத் தன் இல்லத்துக்குக் கொண்டு போனான். அப்போது அவன் தாய் அவளுக்குச் சிலம்பு கழிநிகழ்வை நடாத்தினாள். இதை அறிந்த நற்றாய் வருந்தினாள். சிலம்பு கழிநிகழ்வு மணமகன் வீட்டில் நிகழ்ந்து விட்டதால் தன் இல்லத்தில் வதுவையேனும் நிகழ வேண்டும் என்று நற்றாய் விரும்பினாள். தலைவிக்கு மணமாகாமுன்  பெற்றோர் அணிந்த சிலம்பு 'கன்னிமைச் சிலம்பு' என்றும், திருமணம் நிகழும்போது கணவன் அணிவிக்கும் சிலம்பு 'கற்புச் சிலம்பு' என்றும் கூறுவர். 

'நும்மனைச் சிலம்பு கழீஇய அயரினும்
ஏம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே – வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்,
பொய்வல் காளையை ஈன்றதாய்க்கே?' – (பாடல் 399)

சிலப்பதிகாரம்
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தில் திருமணம் பற்றிப் பேசப்படும் பாங்கினையும் காண்போம். கோவலன் 16 அகவையானுக்கும், கண்ணகி 12 அகவையாளுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்கள் பெற்றோர் முடிவு செய்தனர். யானைமீது மகளிரை அமரச் செய்து புகார் நகரெங்கும் திருமணச் செய்தியை அறிவித்தனர். இது அக்கால வழக்கமாகும். மண நாளன்று, திருமண மண்டபத்தில் முரசு முழங்கின, மத்தளம் அதிர்ந்தன, சங்குகள் மங்கல ஓசை எழுப்பின, வெண்கொற்றக் குடைகள் ஊர்வலமாக எழுந்து பூம்புகார் வீதியூடாக மாலைகள் தொங்கும் வயிரமணித் தூண்கள் நிறைந்த மண்டபத்தில் நுழைந்து, நீலப்பட்டினால் அமைந்த முத்துப் பந்தரில், வானில் உறையும் மதியமானது உரோகிணியைச் சேரும் சுபவேளையில், வானத்து அருந்ததி போன்ற கற்புடைய கண்ணகியை மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, கோவலன் மணம் புரிந்து, இருவரும் தீவலம் வந்த காட்சியைக் கண்டோர் வியப்பால் பூரித்து நின்றனர். இங்குதான் பார்ப்பான் திருமண வைபவத்தில் முதன்முதலாகப் புகுந்துள்ளான்.

'இருபெரும் குரவரும், ஒருபெரு நாளால்,
மணஅணி காண, மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி,
யானை எருத்தத்து, அணியிழையார், மேல் இரீஇ,
மாநகர்க்கு ஈந்தார் மணம்.
அவ்வழி,
முரசு இயம்பின, முருடதிர்ந்தன, முறை எழுந்தன பணிலம், வெண்குடை
அரசு எழுந்ததோர் படி எழுந்தன, அகலுள் மங்கலஅணி எழுந்தது.
மாலை தாழ் சென்னி வயிரமணித் தூணகத்து,
நீலவிதானத்து, நித்திலப்பூம் பந்தர்க் கீழ்,
வானூர் மதியம் சகடு அணைய, வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்,
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!  - (1: 41-53) 

கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணியைக் கவிச் சக்கரவர்த்தி சயங்கொண்டார் பாடியள்ளார். இதிற் பாட்டுடைத் தலைவன் முதற்குலோத்துங்க சோழமன்னன் (கி.பி.1070 – 1120) ஆவான். இவனின் படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமான் எய்திய கலிங்க வெற்றியே சயங்கொண்டார்  கலிங்கத்துப் பரணியைப் பாடுவதற்குக் காரணமாம்.

பரணியில் குலோத்துங்க மன்னன் போர்க்களம் இறங்கினான். பகையரசர் படைகள் அஞ்சிப் பின்வாங்கி ஓடின. இப்படித் தோற்றோடிய பகையரசர்களின் வெற்றி மகளைக் குலோத்துங்க மன்னன் திருமணம் புரிந்து கொண்டான். இதைக் கண்ணுற்ற தோற்றோடிய அரசர்கள் தங்களுடைய குதிரைகள், ஆண் யானைகள், பொருட்குவியல்கள் ஆகியவற்றைக் குலோத்துங்க மன்னனுக்குச் சீதனப் பொருட்களாகக் கொடுத்தனர்

'சரி களம்தொறும் தங்கள் சயமகள்
தன்னை மன் அபயன் கைப் பிடித்தலும்
பரிகளும் களிறும் தன ராசியும்
பாரிபோகம் கொடுத்தனர், பார்த்திபர்.' – (256)   

(பாரிபோகம் - சீதனப் பொருள்)

நிறைவாக
அசுரம், இராக்கதம், பைசாசம், காந்திருவம், பிரமம், பிரசா பத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய எட்டு வகையான மணங்களும், கரணம் (சடங்கொடு கூடிய மணநிகழ்வு) என்பதும் தொல்காப்பியத்திலும்,  பூவும், நெல்லும், நீருடன் கலந்து மணமகளை நீராட்டும் வதுவை மணமும,; உழுந்து சேர்த்துச் சமைத்த உழுத்தம் பருப்புப் பொங்கல் உருண்டைகள், நெய்யில் ஊறிய இறைச்சியோடு கலந்த வெண்சோறு ஆகியவற்றை மணவினை காணவந்தோருக்கு அளிப்பது அகநானூற்றிலும், மணநிகழ்வான சுயம் வரம் என்பது மகாபாரதத்திலும், சிலம்பு கழித்தல், வதுவை மணம் என்பவை ஐங்குறு நூற்றிலும், யானைமீது மகளிர் அமர்ந்து திருமணச் செய்தியை அறிவிப்பதும், மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் வந்து திருமணம் முடிவுறல் சிலப்பதிகாரத்திலும், குலோத்துங்கன் பகைமன்னர்களை வென்று அவர் மகளிரைக் கடிமணம் புரிந்ததும், தோற்ற அரசர் தங்கள் குதிரைகள், யானைகள், பொருட்குவியல்கள் ஆகியவற்றைக் குலோத்துங்கனுக்குச் சீதனமாகக் கொடுத்தமை கலிங்கத்துப் பரணியிலும் பேசப்பட்டுள்ள செய்திகளாகும்.

இவற்றில் சடங்கொடு கூடிய மணநிகழ்வான கரணம் என்பது தொல்காப்பியர் காலத்திலிருந்து இற்றைவரை 2,800 ஆண்டுகளாகத் தமிழரோடு ஒட்டி உறவாடி நின்று, ஒவ்வொரு திருமண விழாவிலும் பங்காற்றி, மணமக்களை ஆசீர்வதித்து, அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தி நிற்கும் அருஞ்செயல் நம் அனைவரின் பாராட்டுக்குரியதாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்