அத்தியாயம் ஐந்து
சினிமாவின் சுமார் 80 வருட சரித்திரத்தில், அது தந்துள்ள சினிமா குப்பை குவியலில் சினிமா என்று சொல்லக்கூடியது ஒன்று கூட இல்லை யென்றும், ஐம்பது வருடங்களுக்கு முன் நான் பார்த்த பழைய படங்களின் சில காட்சிகளைச் சுட்டிக் காட்டி, இம்மாதிரியான காட்சிகள் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழ்ந்த போதிலும், அவற்றுடனே நாம் வாழ்ந்து வந்த போதிலும், அத்த்கைய காட்சிகளை நம் தமிழ் சினிமாவில் காண்பதற்கில்லை என்று நான் சொன்னதும், அன்பர்க்ள் சிலருக்கு வருத்தமும், சிலருக்கு கோபமும், இன்னம் சிலருக்கு ஏதோ நான் தமிழனை, தமிழ் சினிமாவைத் தாழ்த்திக் கேவலப் படுத்துவதற்கே எழுதுவது போலும், அவர்கள் தமிழ் ரத்தம் கொதிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் ரசனைக்கேற்ற படங்கள் தான் என்று அவர்கள் உரத்துச் சொல்கிறார்கள். வேறொரு இணையத்தில் ஒரு பட்டியலையே கொடுத்து இவையெல்லாம் சிறந்த படங்கள் என்று என் முன் வைத்திருக்கிறார்கள். அந்தப் பட்டியல் இதோ:
1. சந்தியா ராகம்
2. வீடு
3. உன்னைப் போல் ஒருவன்
4. உதிரிப் பூக்கள்
5. முள்ளும் மலரும்
6. உச்சி வெயில்
7. சில நேரங்களில் சில மனிதர்கள்
8. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
9. அவள் அப்படித்தான்
10. அழியாத கோலங்கள்
11. கண் சிவந்தால் மண் சிவக்கும்
12. மெட்டி
13. ராஜ பார்வை
14. மகா நதி
15. குணா
16. அந்த நாள்
17. முதல் மரியாதை
18. ஹே ராம்
19. ஒருத்தி
20. நாயகன்
21. மொழி
22. சுப்பிரமணியபுரம்
23. சென்னை 28
24. ஆயுத எழுத்து
25. வெயில்
26. புதுப்பேட்டை
27. பருத்திவீரன்
28. அஞ்சாதே
29. நண்பா நண்பா
30. இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்
31. சங்க நாதம்
32. அக்ரஹாரத்தில் கழுதை
33. விருமாண்டி
இவையெல்லாம் நல்ல தமிழ் படங்கள் இல்லையா என்று கேள்விகள் எழுந்துள்ளன. இந்த படங்களின் பட்டியல், 32 Best Tamil Movies – Best Arthouse films – 10 Hot – ல் கொடுக்கப்பட்டுள்ளது போக இன்னும் சில சேர்க்கப்பட்டுள்ளன, அன்பர்களால். கேட்க வேண்டிய கேள்விதான். இந்தப் பட்டியலும் சர்ச்சைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று தான். இப்பட்டியலுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்தே ஆகவேண்டும். முதலில் எனக்குத் தோன்றுவது கவனமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், மோகமுள், பாரதி, பெரியார் ஆகிய ஞான ராஜசேகரனின் பட்ங்களோ, கிராமத்து மண் வாசனையைத் தன் பட்ங்களில் கொணர்ந்தவராக, ஸ்டுடியோவை விட்டு கிராத்துக்குக் காமிராவை எடுத்துச் சென்ற பெருமை படைத்தவராகப் பாராட்டப்படும் பாரதி ராஜாவின் படங்களோ ஏன் இடம் பெறவில்லை என்று எனக்கு யோசிக்கத் தோன்றுகிறது. இவர்களை ஒதுக்கும் என் காரணங்களும் பார்வையும் வேறு. ஆனால் மேற்கண்ட பட்டியலைத் தயாரிக்க ஐம்பது வருடங்கள், உன்னைப் போல் ஒருவனைத் தொட (1963 அல்ல்து 1964 என்று நினைக்கிறேன் ,) பின்னோக்கிச் சென்றவருக்கு ஞான ராஜ சேகரனையும் பாரதி ராஜாவையும் சேர்க்கத் தோன்றவில்லையே, ஏன்? இப்பட்டியலில் காணும் பல் படங்கள் வித்தியாசமானவை, வழக்கமான தமிழ்ப் படங்களிலிருந்து விலகி வேறு தடத்தில் பயணிக்கவேண்டும் என்ற எண்ணமும் முயற்சியும் காணும் படங்கள் தான் என்பது எனக்குத் தெரியும். அனேகம் படங்கள் வேறு தடத்தில் பயணிப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் செயபாடுமே கொண்ட படங்களும் உண்டு. உதாரணமாக, கமல ஹாஸனின் படங்கள் அத்தனையும். இனி வரப் போவனவற்றையும் சேர்த்து. அவரது ஆளுமை தன் படங்களில் தானே மையமாகவும் தன்னைச் சுற்றியே உலகம் இயங்குவதாகவும் காட்டிக்கொள்ளும் ஆசை கொண்ட ஆளுமை அவரது. ஒவ்வொரு படமும் முந்தைய்திலிருந்து வித்தியாசமாக முயற்சிக்கப்பட்டதாகக் காட்டிக்கொள்ளலாம். காட்டிக்கொள்ளலாம் தான். அவ்வளவே மையம், அவரே தான். இதெல்லாம் போக, ஒரு படம் அசாதாரண வெற்றி பெற என்னென்ன மசாலாக்கள் இருக்கவேண்டும் என்பது சினிமா உலகில் இப்போதைய கால கட்டத்தில் தீர்மானமாகியுள்ளதோ அவையெல்லாம் கொண்ட ஒரு தயாரிப்பைத் தான் அவரது வித்தியாசமான படங்களும் தரும். இதையே மணிரத்தினத்திற்கும் சொல்ல வேண்டும். இவையெல்லாம் சினிமாவே அல்ல.இவை எதுவும் சினிமா என்ற கலை சார்ந்தவை அல்ல. சினிமா என்ற சூதாட்டமாகிப்போன வியாபாரம் சார்ந்தவை.
கமலஹாஸன் நல்ல நடிப்புத் திறமையுள்ளவர் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அவரிடம் திறமை மட்டுமே உண்டு. அந்தத் திறமையை அவர் என்றும் ஒரு கலையாக பரிணமிக்க விட்டதில்லை. அவரது திறமையெல்லாம் தன்னைப் பூதாகாரமாக முன்னிறுத்திக் கொள்வதற்கும், அதை முதலீடாக வைத்து, சந்தைக்கான மசாலாக்களையும் சேர்த்து வியாபாரம் செய்யும் வணிகர் தான் அவர். லாவகமாக உடல் வளைத்து ஆடத் தெரிந்தால், ரிக்கார்ட் டான்ஸ் ஆட் தேர்ந்துகொள்வது போன்றதே, கமலஹாஸனின் நடிப்புத் திறமை பெற்ற வடிகால். இந்த வணிகத்தில் அவர் கணக்குகள் தவறாகி நஷ்டம் ஏற்பட்டால் அது ஒரு கலைஞனின் புதிய பாதைத் தேர்வில் எதிர்ப்படும் தோல்வி அல்ல. பங்குச் சந்தைக்காரனின் கணக்குகள் தோற்கும் சமாசாரமே அது. இது அவருக்கு மட்டுமலல, சினிமா வர்த்தகம் ஒரு சூதாட்டமாகி இதில் தம் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க வந்தவர்கள் எல்லோருக்கும் நேர்வது தான். மணி ரத்னத்துக்கும், ரஜனி காந்துக்கும், சங்கருக்கும், நேர்வது தான். எஸ் எஸ் வாசனுக்கும் நேர்ந்தது தான். இயக்குனர் சிகரத்துக்கும் நேர்ந்தது தான். இது கலைத் தோல்வி அல்ல. பங்குச் சந்தையில் சூதாடிக் கிடைத்த தோல்வி. இதில் சாமர்த்தியமாக தான் தப்பித்துக் கொண்டு தயாரிப்பாளர் தலையில் விழச் செய்வதில் தான் நம் உலக நாயகர்கள சூப்ப்ர் ஸ்டார்கள, இளைய தளபதிகள் இத்யாதிகள கவனமாக இருப்பார்கள்.
ஆனால் உண்மையிலேயே இந்த வணிகப் பாதையின் சூதாட்டத்திலிருந்து விலகி சீரிய முயற்சிகள் சில செய்து பார்க்கவேண்டும் என்று துணிந்தவர்கள் என முதலில் ஜெயகாந்தனைச் சொல்வேன். பின் அதைத் தொடர்ந்தவர்கள் என பாலு மகேந்திராவையும், மகேந்திரனையும் ஞான ராஜசேகரனையும் சொல்வேன். இவர்களைப் பற்றி பேசலாம்.
அறுபதுகளின் ஆரம்பத்தில் ஜெயகாந்தனிடம் இருந்த வேகமும் போராட்ட மனமும் உன்னைப் போல் ஒருவனை உருவாக்கச் செய்தது. ரூ. 80,000 மட்டுமே அந்தப்படத்தைத் தயாரிக்க செலவாகியது என்று சொல்லப்பட்டது. அந்தப் பணமும் ஜெயகாந்தனிடம் மிகுந்த நம்ப்க்கை கொண்டிருந்த ரசிக நண்பர்கள் உதவியது என்றும் சொல்லப்பட்டது. (இது அறுபதுகளின் 80,000 ரூபாய் என்றாலும் இன்றைய பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் இது மிக சல்லிசாகத் தயாரிக்கப்பட்டது தான்). ஆனாலும் அது ஒரு landmark என்று சொல்லக்கூடிய அந்தஸ்து பெற்றது தான். சினிமாவா இல்லையா என்பதெல்லாம் பின்னர் வாதித்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள். ஏன் அது ஒரு landmark? ஜெயகாந்தன் தன் முதல் படத்தில் முயன்றது, தன் கதை ஒன்றை ப்டமாக்கியது தான். அதை அவர் நேராக, மற்ற எந்த சாய்வுகளுக்கும் இடம் கொடாமல் செய்தது முதன் முறையாக தமிழ் சினிமாவில் நடந்த நிகழ்வு. அதுவரை தமிழ் சினிமாவில் சந்தைக்குத் தயாராக்க எந்தெந்த மசாலாக்கள் சேர்க்க வேண்டும் என்று மரபு இருந்ததோ அதையெல்லாம் பற்றிய சிந்தனை எதுவுமில்லாமல், ஒரு நேரிய முயற்சி செய்தார். அதில் அவர் கதை சலன்ம் பெற்றது. அவ்வளவே. தமிழ் சினிமாவின் அது வரைத்திய பாதையை முற்றிலுமாக ஒதுக்கி புதிய பாதையில் முதல் அடிவைப்பு என்று சொல்ல வேண்டும். முதல் அடி வைப்பு. ஒரே அடிவைப்பு அன்றைய தினம். இது அறுபதுகளின் ஆரம்பத்தில். இதை நான் முதன் முதலாக 1950 மார்ச் ஏப்ரலில் சம்பல்பூர் விஜய லக்ஷ்மி டாக்கீஸில் பார்த்த வங்கப் படத்தில் நிகழ்ந்திருந்தது. எந்த வித ஆரவாரமும், இல்லாது. முதல் அடி வைப்பு, சோதனை முயற்சி என்ற கோலாகல டமாரம் ஏதும் இல்லாமலே.ஏனெனில் அது தான் வங்கப் படங்களின் வழமையாக இருந்தது. அந்தப் படத்தை இப்போது யாரும் நினைவு கொள்வதில்லை, நாம் உன்னைப் போல் ஒருவனை ஒரு புரட்சி கர முயற்சியாக நினைவு கொள்வது போல. இதிலிருந்து ஜெயகாந்தன் தன் அடுத்த அடி எடுத்து வைக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். அவரது படம் ஏதும் மகத்தான வணிக வெற்றி அல்ல. இருப்பினும், ஜெயகாந்தன் அந்த பாதையில் தொட்ர்ந்து விடக்கூடாது என்பதில அன்றைய சினிமாப் பெருந்தலைகள் முனைந்திருந்ததாக செய்திகள் வந்தன. இது எவ்வளவு தூரம் உணமை என்பது தெரியாது. அது உண்மையல்ல என்று இருந்தாலும், ஜெயகாந்தனே பின்னர் தான் முதல்டி எடுத்து வைத்த் பாதையில் தொடர முடியவில்லை. நாகேஷை வர ஆரம்பித்தார். லக்ஷ்மி கதாநாயகியானார். கண்ணீரையும் கதறலையும் வசனப் பெருக்கத்தையுமே உணர்ச்சிச் சித்திரம் என்று பெயர் சூட்டி மெய்சிலிர்த்துப் போகும் தமிழ்மரபில் பெயர் வாங்கியவரான பீம் சிங் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்துக்கு இயக்குனரானார். அந்தக் கதையே ஒரு ரகம் தான். பொதுவாகவே தன் கருத்துக்களையே பாத்திரங்களாக்கும் சிறப்புக்குரியவர் ஜெயகாந்தன். அந்த விதத்தில் இந்த நாவலும் ஜெயகாந்தனுக்கே உரிய புரட்சிகர கருத்துக்களையே பாத்திரங்களாகக் கொண்டது. இம்மாதிரியான ஒரு ஜோடியை ஜெயகாந்தனின் சிந்தனையிலும் கற்பனையிலும் தான் பார்க்கமுடியும். ஒரு தொடர்கதை எழுத்தாளனை, நாலு பெண்கள் காதலிக்கிறார்கள் என்றால் அதை அகிலனினுக்கே உரிய கற்பனையிலும் அவர் எழுதும் தொடர்கதையிலும் தான் பார்க்கமுடியும் என்பது போல.. பின் தமிழ் சினிமாவில் ஜெயகாந்தன் போன்ற ஒரு போராளியே அதிக நாள் இருக்க முடியவில்லை. உன்னைப் போல் ஒருவன் எடுத்து வைத்த முதல் அடிக்குப் பின் அடுத்த வந்த அடிகள் பின்னோக்கியவை தான்., முதல் அடியே சினிமா இல்லை, இனி வரப்போகும் சினிமாவுக்கான முதல் அடி தான். என்னும் போது மற்றவை பற்றி என்ன சொல்ல? 1950-ல் நான் பார்த்த முதல் வங்காளிப்படம் முதல் அடி வைப்பு அல்ல. அது நிலைத்துவிட்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியின் ஒன்றுடன் நான் பெற்ற அறிமுகம். அது நிலைத்த பாரம்பரியமானதால் தான் அடுத்த சில வருடங்களில் அங்கு ஒரு ரித்விக் காடக்கையும், சத்யஜித் ரேயையும் அடுத்த வளர்ச்சிக்கட்டங்களாகக் காணமுடிந்தது.
கழிசடைகளை எல்லாம் கழித்துச் சுத்தப்படுத்திய வெற்றிடத்தில் வைத்த முதல் காலடி வைப்பே நமக்கு அறுபதுகளில். அதுவும் பின்னர் ஒரே படத்துடன் முடிந்த கதையாகிவிட்ட் பிறகு.....? என்ன நடப்பது சாத்தியம்?. இங்கு ஆட்சி செலுத்திய சினிமா கலாச்சாரமே எந்த எளிய முயற்சியையும் ஒன்றுமில்லமல் ஆக்கிவிடும் அசுர சக்தி கொண்ட வ்ணிக கலாசாரமாக இருக்கிறது.