2009 - 5
கிளிநொச்சியிலிருந்து வந்து சுமார் ஒன்றரை வருஷத்தை வடமராட்சியில் கழித்த பரஞ்சோதி பாதியாக சுருங்கிப் போனாள். எலும்பும் உருகிச் சிறுத்துப் போயிருந்தாள். துயரத்தின் வேர்கள் அவளுள் ஆழமாய் இறங்கியிருந்தன. சாந்தமலருக்கு தாயைப் பார்க்கவே முடியவில்லை. அவளால் செய்ய எதுவுமிருக்கவில்லை. வன்னியில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அது தொடங்குகிற காலத்தில், போன வருஷம் ஜுன் மாதமளவில், ஏ9 பாதை மூடப்பட்டது. யுத்தம் முடிந்து ஒரு ஸ்திரமான நிலைமை தோன்றும்வரை அது மீண்டும் திறக்கப்போவதில்லை. அம்மாவுக்கான கதவுகள் அடைத்தே இருக்கும். யுத்தம் எப்போதும் நடந்துகொண்டிருந்தது. அது வெளிவெளியாய் நின்றிருந்தால், உள்ளுள்ளாய் நடந்தது. சமாதான காலத்திலும் நடந்தது. எப்போதும் நடந்தது. கிழக்கு மாகாணத்தில், வன்னியின் எல்லைகளில் குறிவைத்த தாக்குதல்களாய் அது வடிவங்கொண்டிருந்தது. துல்லியமான விமானக் குண்டு வீச்சினால் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் அழிக்கப்பட, ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதல்களால் புலிகளுக்கு ஆதரவான ‘கிளி பாதர்’ கனகரத்தினம் அடிகள்போன்ற கத்தோலிக்க மதகுருமாரும் இல்லாமல் ஆக்கப்பட்டதற்கான முன்னெடுப்பும் யுத்தம்தான். நாடாளுமன்ற அங்கத்தவர்கள் சந்திரநேரு, ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்களும் கொலைக் குறியில் மறைந்தனர். அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்பிற்கு எதிரானதும், புலிகளின் செயற்பாட்டுக்கு ஆதரவுமான நிலைப்பாடு கொண்டிருந்த தராகி சிவராம்போலவே, லசந்த விக்ரமதுங்கபோன்ற பத்திரிகை ஆசியர்களும் காட்சியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். சிங்கள ஊடகவியலாளர்களே நாட்டைவிட்டு தப்பித்து ஓடுமளவு நிலைமை பயங்கரம்கொள்ள வைக்கப்பட்டிருந்தது. புத்துயிர் பெற்றிருந்த தேசப் பாதுகாப்புக்கான ஊடக மையம் ஊடகத் துறையிலுள்ள மாற்றுக் கருத்தாளரை முற்றாக அழித்தது. அவையெல்லாம்கூட யுத்தத்தின் உபகூறுகளே.
சற்.ஓ.ஏ., அக்ஷன் கொந்ற பா(ய்)ம் போன்ற அனைத்துலக தொண்டு நிறுவனங்களும், ஐநா, செஞ்சிலுவைச் சங்கம் போன்ற மனிதவுரிமை அமைப்புக்களும் 2008 செப்ரெம்பரின் ஒரு அவசர சட்டத்தின்மூலம் வன்னியைவிட்டு வெளியேற்றி முடிந்தது. வன்னிமீதாக தொடரப்பட்ட அந்த யுத்தத்தை பல்வேறு மனிதாயத அழிவுகளின்மேலும் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஜனவரி 18, 2008இல் அரசு செய்த யுத்தப் பிரகடனத்தின் பின் சண்டை வலுத்தது என்பதே சரியானது. மற்றும்படி உள்ளுள்ளாய் யுத்தம் எப்போதும் நடந்துகொண்டே இருந்தது.
அதனால்தான் ஏ9 பாதை மூடப்பட்டதையே வன்னியின் மீதான யுத்தம் உண்மையில் தொடங்கப்பட்டதன் அடையாளமாக யாழ் குடா மக்கள் கண்டனர். அது முடியும்வரை குடாநாட்டு மக்களின் நிலையும் ஒரு கூட்டுக்குள் அடைத்ததுபோல இருத்தல் தவிர்க்கமுடியாதது. பலாலியிலிருந்து உள்ஊர் விமான சேவை மூலமோ, காங்கேசன்துறையிலிருந்து கப்பலிலோ பயணித்து கொழும்பை அடைவதற்கு மிகுந்த வசதியும் செல்வாக்கும் வேண்டியிருந்தது.
அவ்வாறு நிலைமை இறுக இறுக, சங்கவியின் நிலைமையை எண்ணுகிறபோது சாந்தமலருக்கு அவள்மேல் கோபம்தான் வந்தது. அம்மாவின் துயரமே அவள்மீதான அக்கறையின் காரணமானதென்று தெரிந்தபோதும், கோபத்தையே கொள்ள அவளால் முடிந்திருந்தது. அது ஒரு வன்மத்தின் வெளிப்படுத்தல்போல் அத்தனை காட்டமாகத் தோன்றியது.
எல்லாவற்றுக்கும் சங்கவியே முழுக் காரணமென்பதை அவளது மனம் திட்டமாகவுரைத்தது. தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தின் திசையெடுப்பை சகோதரங்களின் எதுவித ஆலோசனையுமின்றி அவள் முடிவெடுத்தவள். நினைத்தவுடன் இயக்கத்துக்கு ஓடினாள். மூன்று வருஷங்களின் பின் அதிலிருந்து விலகினாள். கல்யாணம் செய்வதற்காக இயக்கத்திலிருந்து விலகினாளா, இயக்கத்திலிருந்து விலகுவதற்காய் கல்யாணம் செய்தாளா? ஆனால் இயக்கத்திலிருந்து விலகியதும் கல்யாணம்தான் செய்தாள். எல்லாம் அவளிஷ்டத்தில்தானே நடந்தது? பிறகு குழந்தை பிறந்தது. அதற்கு வயதும் நான்கு ஆனது. அக்கா வீடென்று ஒருநாள் அந்த வீடு அவள் ஏறியதில்லை.
ரூபிகூட தன் எண்ணத்தின்படி திருமணம் செய்துகொண்டு போனவள்தான். ஆனாலும் பின்னால் குடும்ப உறவுகளை அவதானமாய் அமைத்துக்கொண்டிருந்தாள். முல்லைத்தீவிலிருந்து வவுனியாவுக்கு குடிபெயர்ந்த பின் வடமராட்சிக்கு சாந்தமலரிடம் இரண்டு தடவைகள் வந்து போய்விட்டாள். அவளோடு உறவில் விருத்தி உண்டாகும். ஆனால் சங்கவியோடு...?
புருஷன் காணாமல்போன நிலைமையில் இரண்டு தடவைகள் யாழ்ப்பாணம் வந்தபோது வீட்டுக்கும் வந்திருந்தாள். சாந்தமலர்தான் சொன்னாள், தனியே தன்னிடம் மட்டுமானால் வரும்படியும், வேறுவேறு இடங்களுக்குப் போய் ஊர்வலம் ஆர்ப்பாட்டமென்று அலைந்துவிட்டு அங்கே வரவேண்டாமென்றும். சங்கவி பிறகு வரவில்லை. அதற்கும், அவ்வளவு ரோஷமோவென்று சாந்தமலர் கோபிக்கத்தான் செய்தாள். பின்னால் எல்லாம் யோசித்தபோது கொஞ்சம் கடுமையாக தான் சொல்லிவிட்டேனோவென்று அவளுக்குத் தோன்றிதுதான். தானாவது அவளைச் சென்று பார்த்துவர எண்ணமுமிருந்தது. அதற்கு வேளை இல்லாதிருந்தது. வேளை வந்தபோது இறுதியுத்தம் தொடங்கிவிட்டிருந்தது. ஏ9 பாதை மூடியாகிவிட்டது.
அம்மா வந்தபோது அவளையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தால் ஒரு கஷ்ரமும் நேர்ந்திருக்காதேயென சிலதடவைகளேனும் அவள் எண்ணியிருந்தாள். அம்மா சங்கவியின் நிலைமையை எண்ணி அவ்வளவு பாதிக்கப்படக்கூடுமென சாந்தமலர் கருதியதேயில்லை. கடைக்குட்டிகளில் தாயருக்கு ஒரு கூடுதல் பற்று இருக்கிறதோ?
பரஞ்சோதி காலையிலெழுந்து முற்றம் கூட்டி, வீடு கூட்டி, முகம் கழுவிவந்து சமையல் வேலைகளைத் தொடங்குவாள். பெரும்பாலும் காலையில் பலகாரம் ஏதாவது செய்வாள். மாலையில் எல்லோரும் பள்ளியிலிருந்து திரும்பிவந்த பிறகுதான் சோறு கறி வைப்பது. அதுவரை பரஞ்சோதி என்ன செய்வாள்? கூடத்துள் வழக்கமான அந்த இடத்தில் சுவரோடு சாய்ந்தமர்ந்துகொண்டு அவள் என்ன நினைக்கக்கூடும்? சங்கவியைப்பற்றி மட்டும்தானே? ஏ9 திறக்கும்வரை அம்மாவின் நிலைமைக்கு மீட்சியில்லையென்று சாந்தமலருக்கு அறுதியானது.
அம்மன் கோவிலுக்கும், முருகன் கோவிலுக்கும், பிள்ளையார் கோவிலுக்கும், நாச்சியமார் கோவிலுக்கும், ஐயனார் கோவிலுக்கும் போய்வந்துகொண்டிருந்தவள், ஒரு ஞாயிற்றுக் கிழமை சற்கோட்டை மாதா கோவிலுக்குப் போனாள். அவளேதான் மாதா கோவிலுக்கு போய் வந்ததை பிறகு சாந்தமலரிடம் சொன்னாள். ஏன் அந்த திடீர் மாற்றமென்று சாந்தமலர் கேட்கவில்லை. அவளிடம் சரியான பதில் இருக்காது. அப்போது அவளுக்கு கண்ணீர்தான் வரும். அம்மாவும் எத்தனை காலம்தான் அழுதுகொண்டேயிருக்க முடியும்? ஏதோ ஒருவகையில் மாதா கோவிலின் நிமிர்ந்தும் உயர்ந்துமான தோற்றத்தாலோ, அதன் தொன்மையான கதைகளினாலோ அம்மாவுக்கு மாதாமேல் ஒரு பக்தி ஏற்பட்டிருக்கிறதென அவள் கருதினாள்.
சற்கோட்டை மாதா கோவிலின் சூழலே வெகு அழகாயிருக்கும். ஓங்கி உயர்ந்துநின்ற கோபுரத்தின் முன்புறமுள்ள மாதா சொரூபம் எதிரே பரந்து கிடந்த கடலைப் பார்த்தபடியிருக்கும். மாதா கோவிலுக்கும் கடலுக்கும் இடையே கிடந்த கடற்கரைச் சாலையில் இருபுறமும் மண் வழிந்துகொண்டு கிடந்தது. ஆழ ஆழ காலைப் புதைக்கிற சொரி மணல். அமர்ந்திருந்தால் மணல் நழுவி நழுவி உட்குழிந்து இருப்புக்கு இதம் செய்யும். மாதாவின் பாதம் தொடப்போல் மூசி மூசி கடலலை அடித்துவரும் அழகு அற்புதமாயிருக்கும். ஒவ்வொரு அலையும் தன் முயற்சியின் எல்லையாய் போடுகிற நுரைக் கோடு இன்னுமொரு அழகு.
அது பரவசம் கிளர்த்தக்கூடிய இடம்தான்.
அம்மாவுக்கு அவ்வாறான ஒரு பரவசமும், அவ்வாறான ஒரு நம்பிக்கையும் அவசியமேயென சாந்தமலர் எண்ணினாள்.
அவர்கள் சிறுவயதாக இருந்தபோது, வெகு காலத்துக்கு முன்னாலும், அதே கடற்புறத்தைப் பார்த்தபடி அவள் நின்றிருந்தது சாந்தமலருக்கு ஞாபகம். சாந்தமலருமே அவ்வாறு கடலைப் பார்த்தபடிதான் அப்போது நின்றிருந்தாள். அவள் அலை பார்த்தாள். வானமும் கடலும் தொலைதூரத்தில் தொட்டுக்கொண்டிருந்த அடிவானமும் பார்த்தாள். கடலுக்குள் அமிழ்ந்துகொண்டிருந்த சிவப்புச் சூரியனும், சூரியன் சிவப்புச் செய்த மேகமும் கண்டாள். தான் பார்த்தவைகளை அம்மா அன்று பார்த்திருக்கவில்லை என்பது வளர்ந்த பின்னாலேதான் சாந்தமலருக்குத் தெரிந்தது.
தன்னையும் நான்கு பிள்ளைகளையும் அவ்வாறாக அந்தரிக்கவிட்டு இயக்கத்துக்காய்ப் போய்த் தொலைந்த அப்பாவையன்றி வேறு யாரை அவள் நினைத்திருக்க முடியும்?
அம்மாவின் பொட்டிலிருந்தே அவர் உயிரோடு இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பா இலங்கையிலேதான் இருக்கிறாரா? அல்லது இந்தியாவில் அகதி முகாமில் இருக்கிறாரா? துவக்குகளே பூசல்களையும் கருத்து வேற்றுமைகளையும் தீர்மானிக்கிற காலமானதால் அவருக்கேதாவது நடந்துவிட்டதா? உண்மை எதுவாகவும் இருக்கலாம். அது அவர்களுக்கு முக்கியமில்லாத விஷயம் அப்போது.
சற்கோட்டை மாதாவிடத்திலும் அம்மா வைத்திருந்த நம்பிக்கை குறைவதுபோல் இருந்தது. ஞாயிறு தவறாமல் மாதா கோவில் போகிறதிலுள்ள ஒழுங்கிலிருந்து அவள் பிசகத் துவங்கினாள். அப்போதும் சாந்தமலர் ஏனென்று கேட்கவில்லை. சங்கவி அவ்வாறிருக்கிற நிலைமையில், கும்பிட்ட நாளிலேயே இந்தா பிடியென்று அருளை வழங்குகிற ஒரு தெய்வமே பரஞ்சோதிக்கு வேண்டியிருந்தென்பதை அவள் புரிந்தாள்.
ஒருநாள், யாழ்ப்பாணம் போய் சந்திரிகாவைப் பார்த்துக்கொண்டு வரவேணுமென அம்மா சொன்னாள். வன்னியில்தான் யுத்தமென்றாலும், குடாவிலும் படையினரின் கெடுபிடி அதிகம், அவசரமில்லாவிட்டால் போகவேண்டியதில்லை என்றுவிட்டாள் சாந்தமலர்.
சில வாரங்களில் மாதா கோவில் போவதை முற்றாக நிறுத்திவிட்டாள் பரஞ்சோதி. நிறுத்திய பிறகுதான் சாந்தமலருக்குச் சொன்னாள், ‘நான் சேச்சுக்கு இப்ப போறேல்ல.’ ஏறக்குறைய அவள்போலத்தான் சங்கவியும். இவள் செய்துவிட்டுச் சொல்கிறாள். சங்கவி சொல்லாமலே செய்கிறாள். அதுதான் அவர்களுக்குள் இருந்த வித்தியாசமென எண்ணிவிட்டு, சாந்தமலர் அம்மாவுக்கு பதில் சொன்னாள்: ‘கவனிச்சன். போகாமலிருந்து என்ன செய்வியள்? போனா… பொழுது போனமாதிரியும் இருக்குமெல்லோ?’
‘நான் செய்தி கேப்பன்.’
செய்தி கேட்பதே அம்மாவின் வேலை தவிர்ந்த நேரத்து வேலையாகிவிட்டது பிறகு.
பூநகரி விழுந்தது, கிளிநொச்சி விழுந்தது, முல்லைத்தீவு விழுந்தது, மாத்தளன் விழுந்தது எல்லாம் அம்மாதான் செய்தியில் கேட்டுச் சொன்னாள். புதுக்குடியிருப்பில் அடைந்து கிடக்கும் ஜனங்களின் அவலம் எப்படியிருக்குமோவென அம்மா அழுதாள். சங்கவிக்கானதுதான் அக் கண்ணீரின் பெரும்பங்கும்.
யுத்தத்தின் முடிவு எல்லோர் மனங்களிலும் எழுதப்பட்டிருந்ததில், தோல்வியின் சம்பவ அடுக்குகைகளைக் கேட்க சாந்தமலர் விரும்பாதவளாய் இருந்தாள். ஆனாலும் அம்மா சொல்வதற்கு ஒரு ஆள் வேண்டுமே, அல்லாமல் செய்தியைக் கேட்டு வைத்திருந்து அம்மாவால் என்ன செய்ய முடியுமென்று தானே கேட்டாள்.
‘இன்னும் மூண்டு நாளைக்கு சண்டை இருக்காதுபோல, சாந்தி’ என்றாள் அம்மா ஒருநாள்.
‘ஏனம்மா?’
‘நாளைக்கு மாசி நாலெல்லே? சுதந்திர தினம். அப்பிடியெண்டா புதுக்குடியிருப்பிலயிருந்து சனம் வெளியபோக கொஞ்சம் ஏலுமெல்லோ?’
‘ஆருக்கம்மா, தெரியும்? விசுவமடுப் பக்கத்தில பாதுகாப்பு வலயமொண்டை அரசாங்கம் அறிவிச்சிருக்கெல்லோ, அந்த எல்லைக்குள்ள போனவைக்கு கொஞ்சம் கஷ்ரமில்லாமலிருக்கும். எண்டாலும் சனத்தை இப்ப ஆர் பிடிச்சு வைச்சிருக்கிறதெண்டு தெரியாமலிருக்கே.’
மௌனமாயிருந்தவள், ‘சங்கவி அங்க போயிடுவாளோ, சாந்தி?’ என பிறகு கேட்டாள்.
‘அங்க போனா நல்லதுதான்.’
‘போகாம தறுமபுரம் கண்டாவளையெண்டு நிண்டிட்டா…? அங்க சனத்துக்கு அவ்வளவு கஷ்ரமாயிருக்குமோ?’
‘இலங்கைச் செய்தியில சொல்லுறதக் கேட்டுத்தான நாங்கள் எதையெண்டான்ன அறியவேண்டியிருக்கு, அம்மா. பேப்பரில வாறதும் ஒருநாள் பழைசுதான? எப்பிடிப் பாத்தாலும் சனங்களின்ர நிலமை இப்ப கஷ்ரமெண்டுதான் தெரியுது.’
அது துயரமான காலம்தான். யாரும் அனுபவிக்க முடியாத துயரங்கள் செறிந்த காலம். எந்த விசையிலிருந்து அது பிறந்திருந்தது என்று சிலபேராவது தெரிந்திருந்தார்கள். சாந்தமலரும் தெரிந்திருந்தாள். ஆனால் அவள் அதை என்றும் வெளியே சொல்லியதில்லை. சர்வதேச நிலைமைகளின் ஒரு கூறாக ஈழ யுத்தம் பார்க்கப்படவில்லையென்றும், அவை குறித்த அனுபவமோ அறிவோ இல்லாதவர்களே அப்போது யுத்தத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்களென்றும் கூறுவதில் இனி என்ன நன்மை விளையக்கூடும்?
கடந்த தை 30ல் ஜனாதிபதியின் புலிப் போராளிகளுக்கான பொது மன்னிப்பு வழங்குவதுபற்றிய அறிப்பு வெளிவந்தது. ஆயுதங்களைக் கைவிட்டு அரசபடைகளிடம் சரணடையவேண்டுமென்ற நிபந்தனை இருந்தது. யாரும் சரணடையவில்லை. சரணடைவதற்கான நாற்பத்தெட்டு மணி நேர கால அவகாசத்தின் பின் பரஞ்சோதி கேட்டாள்: ‘ஆயுதங்களைப் போட்டிட்டு ஆமியிட்ட போராளியள் சரண்டர் பண்ணியிருந்தா சண்டை நிண்டிருக்குமெல்லே, சாந்தி?’
‘எல்லாரும் சரணடைஞ்சா நிண்டிருக்கும்.’
‘பிரபாகரனுமோ?’
‘எல்லாரும்… பிரபாகரன், நடேசன், பொட்டம்மான், தமிழேந்தியெண்டு எல்லாத் தலைவர்மாரும்.’
‘அது நடக்காதெல்லோ?’
‘நடக்காது. ஆனா சண்டை நிக்க வேற வழி இல்லை.’
பரிவோடுதான் அப்போதெல்லாம் அம்மாவுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் சாந்தமலர்.
அம்மாவின் கோலம் பாவமாக இருந்தது. அவளது கேள்விகளில் இன்னும் அவள் பரிதாபமாகத் தெரிந்தாள். ஒரு குழந்தைக்குச் சொல்வதுபோல விளக்கமாய் அவள் சொல்வதைப் பார்த்து அவளது பிள்ளைகளே ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
பள்ளியிலிருந்து திரும்பி வரும்போதெல்லாம் செய்திகளின் பின்னணியில் ஒரு கேள்வியோடேயே பரஞ்சோதி இருப்பது இயல்பாகிப் போனது. ஒருநாள் கேட்டாள்: ‘புலம்பெயர்ந்த நாடுகளிலயிருந்து மருந்தும் சாப்பாட்டுச் சாமான்களும் ஏத்திக்கொண்டு தமிழ்க் கப்பலொண்டு வரப்போகுதாமே? நீயும் கேள்விப்பட்டியோ, சாந்தி?’
‘அப்பிடி ஒரு கதை இருக்குதுதானம்மா.’
‘வெறும் கதையோ, இல்லாட்டி உண்மையோ?’
‘ஆருக்கம்மா தெரியும்? கப்பல் வந்தாத்தான் தெரியும் உண்மை பொய்யை.’
அவளுக்கு நிச்சயமிருந்தது அம்மாதிரியான எந்த முயற்சியும் சாத்தியமில்லையென்று. வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு கப்பலில் மருந்தும் உணவுப் பொருட்களும் ஏற்றி அனுப்ப புலம்பெயர் சமூகத்திடம் ஒரு முயற்சியும் வசதியும் இருந்திருக்கலாம். ஆனால் இலங்கையின் எத்திசைக் கரையையும் அதனால் அடைந்துவிட முடியாது. இஸ்ரேல் தொடுத்த பாலஸ்தீன மேற்குக்கரை யுத்தத்தில் அவ்வாறான சர்வதேசம் அளாவிய ஒரு மனிதாபிமான முயற்சி அண்மையில் தோல்வியடைந்திருந்தது. ஆக்ரமிப்பாளர்கள் அவ்வகையான எந்த முயற்சியையும் அனுமதித்துவிடுவதில்லை. அந்த நிஜத்தை அவள் தாயிடம் சொல்லவில்லை.
இணைய தளத்தில் இதுமாதிரி எத்தனையோ தகவல்களைக் கண்டதாய் பலரும்தான் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சக ஆசிரியையே மிக இரகசியமாக அதைக் கேட்டாள். ‘வணங்கா மண் எண்ட கப்பலொண்டு வரப்போகுதாமே?’
சாந்தமலருக்கு எரிச்சல்தான் வந்தது. ஏன் தன்னிடமே இதுபற்றியெல்லாம் கேட்கிறார்கள்? தானும் அவ்வாறு கேள்விப்பட்டதாக பதிலைச் சொல்லி முடித்துக்கொண்டாள்.
கப்பல் வரலாமென்ற பரவலான பேச்சின் பின் கடற்கரைவரை மாலையிலே பரஞ்சோதி சென்றுவர ஆரம்பித்தாள்.
போய்விட்டு வந்து, ‘கொஞ்சம் நடந்தால் நல்லம்தான?’ என்றாள் ஒருநாள். ‘கடல் காத்து உடம்புக்கு சுவாத்தியமெல்லோ?’ என்றாள் இன்னொரு நாள். ‘நடந்தால் நேரம் போறதே தெரியுதில்லை, சாந்தி’ என்றாள் அதற்கடுத்த முறை. சாந்தமலருக்குத் தெரியும், அம்மா கப்பல் பார்க்கப் போய்வருகிறாளென்று.
அவ்வாறு அவள் கடற்கரை போய்வந்த ஒருநாள் சாந்தமலர் அலுவலாக இருந்த ஒரு பொழுதில் பரஞ்சோதியிடத்தில் கேள்வியொன்று தோன்றியது.
உலக உருண்டையின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்கள் குடியேறியிருந்ததாக ஒரு தகவல் இருந்தது. கனடாவில், இங்கிலாந்தில், பிரான்ஸில், ஜேர்மனியில், அவுஸ்திரேலியாவிலென பல்வேறு நாடுகளில் யுத்தத்தை நிறுத்தும்படி இலங்கை அரசையும், தங்கள் நாடுகளின் அரசுகளையும் கோரிய பேரணிகள் நடைபெற ஆரம்பித்திருந்தன. சில நாடுகளின் அரசியல் தலைவர்கள் இலங்கையின் நிலைமையை நேரில் வந்து காண்பதற்கு உந்துதல் பெற்றனர். விசாவை மறுப்பதன் மூலம் அவ்வாறான முயற்சிகளுக்குத் தடைபோட்டிருந்தது இலங்கை அரசு. சாந்தமலர் அலுவல் முடித்து வர பரஞ்சோதி தன் ஐயத்தைக் கேட்டாள். “புலம்பெயர்ந்த சனத்தின்ர ஊர்வலங்களால இஞ்ச வன்னியில இருக்கிற சனத்துக்கு எதாவது பிரயோசனமிருக்குமோ, சாந்தி?”
அப்போது அம்மாவை முகம் வாடிப்போய் யோசனையில் அமர்த்தும் பதிலை அவள் சொல்லவேண்டியவளானாள். “இஞ்ச பக்கத்தில இருக்கிற தமிழ்நாட்டிலயே எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் நடக்குதம்மா. ஒரு பிரயோசனமுமில்லையெல்லோ? அதுமாதிரித்தான் அங்க நடக்கிறதுகளும்.”
“ஒருவேளை அமெரிக்கா நினைச்சா…? அப்ப சண்டை நிக்குமெல்லோ?”
அம்மாவின் கேள்விகள் இனிமேல் அப்படித்தான் வரப்போகின்றன. இருந்தும் சினக்காமலே, “இனி அமெரிக்காவும் அப்பிடி நினைக்காது” என்றாள் சாந்தமலர்.
“ஏன்?”
“ஏனெண்டா… இப்ப அமெரிக்காவும் புலியளை பயங்கரவாதியளெண்டுதான் சொல்லுது.”
அம்மா தனது இடத்தில் போயமர்ந்து சுவரோடு சாய்ந்தபடி யோசித்துக்கொண்டிருந்தாள்.
சாந்தமலருக்கே வருத்தம்தான் சங்கவியை எண்ணுகிறபோது. யுத்தத்திற்குள் அகப்பட்டுள்ள மக்களின் நிலைமையும் அவளுக்கு வருத்தம். ஆனால் அம்மாவின் கற்பனைகளை வளரவிடுவதும் ஆரோக்கியமானதில்லையே! ஒருநாள் எல்லாம் அவளது எதிர்பார்ப்புக்கு எதிராக திரண்டுவந்து நிற்கிறபோது அம்மா உடைந்துவிடாமல் இருப்பது சாந்தமலருக்கு முக்கியமானது.
அவள் அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள்.
அம்மாவின் கண்களில் கண்ணீர் மின்னிக்கொண்டு இருந்தது.
[ தொடரும் ]