4
“நேத்தே வருவியளெண்டு பாத்துக்கொண்டு இருந்தம்.” என தயாநிதி சொன்னதற்கு தனபாலன் சலிப்போடு சொன்னான்: “நேற்றே வெளிக்கிட்டிட்டன். வரேலாமப்போச்சு. ஒரு பக்கம் சன நெரிசல். சாமான் ஏத்தின மாட்டு வண்டிலுகள் ஒரு பக்கம். ட்ராக்ரர் லாண்ட் றோவருகள் இன்னொரு பக்கம். காருகள் வானுகளெண்டு அதுகள் வேற. வன்னியில உவ்வளவு வாகனங்கள் நிக்கிறது நேற்று ராத்திரித்தான் தெரிஞ்சுது எனக்கு. அதுக்குள்ள பாதையெல்லாம் வெள்ளமும் சேறுமாய்க் கிடக்கு. பிரமந்தனாறு மேவிப் பாயுது ஒரு பக்கத்தால. அதுக்குள்ள மாட்டுப்பட்டு அரக்க ஏலாமல் நிண்டுகொண்டிருக்கு வாகனமெல்லாம். கண்டாவளை, தறுமபுரம், விசுவமடு எங்கயும் வெள்ளம்தான். வெள்ளம் வீடுகளுக்குள்ள ஏறி நிக்குது. இப்ப வந்ததே கடவுள் புண்ணியத்திலதான்.”
“சரியான நேரத்திலதான், தம்பி, வந்தியள். இல்லாட்டி இந்தக் குஞ்சுகளையும் வைச்சுக்கொண்டு என்ன செய்யிறது, எங்க ஓடுறதெண்டு தெரியாம ரா முழுக்க தலை விறைச்சுப்போயிருந்தன்” என்றாள் நாகி.
“அப்பிடி நீங்கள் செய்ததுதான் நல்லம், அன்ரி. வெளிக்கிட்டிருந்தியளெண்டா இந்தச் சனத்துக்குள்ள லேசில தேடிக் கண்டுபிடிச்சிடேலாது.”
வாகனம் மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தது.
வண்டில்களும், ட்ராக்ரர்களும், லாண்ட் றோவர்களும் சாமான்களோடு ஊர்ந்து செல்ல, வீட்டுக்குரியவர்களும் அவர்களது குழந்தைகளும் பின்னால் சென்றுகொண்டிருந்தனர். சைக்கிளில் சாமான்களைக் கட்டி சிறுகுழந்தைகளையும் அதில் ஏற்றிக்கொண்டு தள்ளியபடி செல்லும் கணவர்களைப் பின்தொர்ந்து மனைவிகளும் மற்றும் உறவினர்களும். பைகளை தோளில் கொளுவிக்கொண்டு, மூட்டைகளை தலையில் சுமந்தபடி நடந்துகொண்டிருந்தார்கள் பலர். அந்த நெரிசலுள் கார்களும், வான்களும் உள் நுழைய முயன்று உறுமிக்கொண்டு இருந்தன. அவை எரிந்து கக்கிய மண்ணெண்ணெய்ப் புகை காற்றிலெங்கும் கனத்திருந்தது.
வழியெங்கும் நிறைந்திருந்த அந்த ஆரவாரத்துள் இறைந்து கிடந்தது மௌனமான சோகம்.
பின்னால் எழுந்துகொண்டிருந்த ஆர்.பி.ஜி.யினதும், பல்குழல் பீரங்கிகளதும் சத்தங்களைவிட்டு விலகி விலகி ஜனத் திரள் போய்க்கொண்டிருந்தது. வடக்கு முஸ்லீம்களின் புலப்பெயர்வினதும், 1995இன் வலிகாமம் புலப்பெயர்வினதும் ஒட்டுமொத்தமான சோகம் அங்கே உறைந்திருந்தது.
வருவழியில் நாகி கண்டிருந்தாள், எறிகணை வீச்சில் தகர்ந்த பின்பும் புகை கக்கிக்கொண்டிருந்த சில வீடுகளை. அதில் ஜனங்கள் கூடிநின்ற ஒரு வீட்டில் ஒப்பாரி எழுந்துகொண்டிருந்தது. சிதறிய உடலை அல்லது உடல்களை பொருத்தி வைத்து ஒரு சவ அடக்கத்துக்கு அங்கே அவர்கள் முயன்றுகொண்டிருக்கலாம். அவ்வாறான பல சவங்களின் ஒற்றை ஊர்வலத்தைத்தான் தாங்கள் அப்போது நடத்திக்கொண்டிருப்பதாய் நினைக்க நாகியின் சதிரம் நடுங்கியது.
புலிகளின் துறைமுக நகரான முல்லைத்தீவு ராணுவத்திடம் வீழ்ந்துவிட்டதை சிறீலங்கா வானொலிச் செய்தி சொல்லிக்கொண்டு இருந்தது. அது மேலும் சொல்லியது: ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மைச் சூழ லட்சக்கணக்கான மக்களைத் திரட்டிக்கொண்டு, தம் நகரங்களைக் கைவிட்டபடி பின்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். மக்களை விடுவிக்கும்படி இலங்கை மனிதாபிமான அமைப்புக்களும், சர்வதேச அமைப்புக்களும், ஐ.நா.மனித உரிமை அமைப்பும் விடுத்த வேண்டுகோளை புலிகள் நிராகரித்தனர். மக்களை விடுவிப்பதென்ற பேச்சே அர்த்தமற்றது, ஏனெனில் மக்கள்தான் புலிகள்… புலிகள்தான் மக்களென விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பேச்சாளர் ஒருவர் லண்டனிலிருந்து தெரிவித்தார்.’
கலாவதி செய்தியை நிறுத்தினாள்.
‘மக்கள்தான் புலிகள்… புலிகள்தான் மக்கள்! எப்படி அந்த முடிவு எட்டப்பட்டது?’ செய்தி கேட்ட தயாநிதி யோசித்தாள்.
சென்றிக்கு இயக்கத்தினர் நின்றபோதெல்லாம், அவர்களது தாகமும் பசியுமுணர்ந்து அதை தாமாக முன்வந்து தீர்த்தவர்கள் அந்த மக்கள். தம்முடைய பசியே நாளைக்கு என்ற கேள்வியைக் கொண்டிருந்தபோதும், தங்களால் இயன்றதை அவர்கள் செய்தவர்கள். அதனால்தான் அந்த முடிவு எட்டப்பட்டதா? ஓ… இன்னுமொன்றுகூட உண்டு.
சாதாரண குடும்பத்து ஆண்களும் பெண்களும் புலிகளிடம் ‘ஆயுத’ பயிற்சி பெற்றிருந்தார்கள். ‘தமிழீழம் அடையிறமட்டும் நீங்களும் போராடித்தான் தீரவேணும்’ எனச் சொல்லி அழைக்கப்பட்டவர்கள் அவர்கள். ஒருவகையில் அது கட்டாய பயிற்சியாகவே இருந்தது. முதலாம் குழு, இரண்டாம் குழு என பல்வேறு அணிகள் அவ்வாறு பயிற்சிகொடுத்து அனுப்பப்பட்டிருந்தன. அவர்கள் ஆயுதம் பாவிக்கக்கூடியவர்களாய் இருந்தார்கள். யுத்தமொன்று ஆரம்பிக்கிறபோது, புலிகள் கொடுக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்த அவர்களுக்கு போதிய அறிவு பயிற்சியில் புகட்டப்பட்டிருந்தது. மரக்கட்டைகளால் செய்த துவக்குகளை வைத்து அவர்கள் எடுத்த பயிற்சி வீணாய்ப் போய்விடாது. முதலில் அவர்கள் எல்லைக் காவலுக்கு போவார்கள். பிறகு சிங்கள ராணுவம் முன்னேறி வருகிறபோது புலிப்படையாய் மாறி அவர்களை எதிர்கொள்வார்கள். ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையிலும், மற்றும் புலம்பெயர் தேசங்களிலுள்ள தமிழ்ப் பத்திரிகைகளிலும் மக்கள் அணிவகுத்திருந்து பயிற்சியில் ஈடுபட்ட படங்கள் வெளியாகியமை பங்குபற்றியோரை நெஞ்சு நிமிர்த்தி நடக்கவைத்தது. அந்தப் படங்களைக் கண்டு புலம்பெயர் தமிழ் மக்கள் இறும்பூதடைந்தனர். தமிழீழத்துக்கு இல்லை வெகுதூரமென்று அதன் நிதர்சனம் காண அனைவர் கண்களும் அவாவில் மிதந்திருந்தன. அவ்வாறான செய்தியினால் துக்கப்பட்டவர்கள் அங்கு சிலரே இருந்தார்கள்.
‘புலிகளே மக்கள்… மக்களே புலிகள்’ என்ற இந்த வார்த்தை இந்த இடத்திலிருந்து பொழிந்தெடுக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் நினைக்க தயாநிதிக்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது. அப்பொழுது அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. மக்களை புலிகளாகவே சிங்கள அரசாங்கமும், வெளிநாடுகளும் கருதியிருக்கின்றனவா? அவ்வாறாயின் யுத்தத்தின் விளைவுகள் மிகமிகப் பயங்கரமானவையாக இருக்கும்.
மதியம் ஒரு மணியளவில் அவர்கள் புதுக்குடியிருப்பை அடைந்தபோது, வட்டக்கச்சியிலிருந்தும் முரசுமோட்டையிலிருந்தும் இராமநாதபுரத்திலிருந்தும் வந்திருந்த ஜனங்களால் அந்நகர் பிதுங்கத் துவங்கியிருந்தது.
வாகனத்தை ஊர்ந்து செல்வதும் சிரமமாயிருந்தது. அவர்களை இறங்கச் சொல்லி எதிரிலிருந்த வடலிகளும் புதர்களும் மண்டியிருந்த ஒரு ஒழுங்கை வழியே அழைத்துச் சென்று ஒரு வெறுவீட்டுக் காணியை அவர்களுக்குக் காட்டினான் தனபாலன். புலிகளின் தும்பாய்ப் போன ஒரு கொடி பறந்துகொண்டிருந்ததில் இயக்கத்தின் இடமென நினைத்து அந்த இடத்தை மக்கள் ஆக்ரமியாது ஒதுங்கியிருந்தார்கள்போலும்.
“மண்ணணை எழுப்பி வலுவாய் புலியள் மாத்தளனில இருக்கினம். ஆமி இஞ்சால லேசில வந்திடாது. ஷெல் அடிப்பாங்கள். கவனமாய் இருங்கோ. அப்பிடி அரண் சரிஞ்சு ஆமி வாறானெண்டா, சனம் என்ன செய்யுதோ அந்தமாதிரிச் செய்யுங்கோ. நான் அடிக்கடி வரப்பாக்கிறன். எனக்கு இஞ்சயே நிக்க ஏலாது. காயம்பட்ட போராளியள கவனிக்கவேணும். என்ன நடந்தாலும் மாத்தளன் பக்கம் போயிடாதயுங்கோ. ஷெல்லடி மும்முரமாய்த் துவங்குமெண்டா அங்கயிருந்துதான் துவங்கும். நான் வாறன்.”
தனபாலன் போய்விட்டான்.
வெள்ளம் நிறைந்திருந்த இடங்களை விலகிச் சென்று தறப்பாளை கட்டை இறுக்கி உயர்த்தினாள் நாகி.
அதிர்ஷ்டவசமாக அந்தக் காணியில் ஒரு பதுங்கு குழி ஏற்கனவே வெட்டப்பட்டிருந்தது. தென்னங் குற்றிகள் போட்டு மேல் மறைப்பும் செய்யப்பட்டிருந்தது. முன்புறத்தில் மண்மூட்டைகளின் சரிந்த அடுக்கொன்றும் இருந்தது. புலிகள் நிலையெடுத்திருந்த இடமாய் இருக்கலாமென நாகி எண்ணினாள். பிறகு சொன்னாள்: “கணா இஞ்சனதான் நிக்கிறானோ தெரியாது.”
“போராளியளும் இஞ்சதான்... சனங்களும் இஞ்சதான். அங்க இஞ்ச போய்வரேக்க அவனைத் தேடிப் பாக்கோணும்” என்றாள் தயாநிதி.
“எல்லாச் சனமும் என்னத்துக்கு ஒண்டடி மண்டடியாய் இஞ்ச வந்துதுகளெண்டு எனக்கெண்டா ஒண்டும் விளங்கேல்ல” என்று அலுத்தாள் கலாவதி.
“சனங்களாய் இஞ்ச வரேல்ல, கலா. எல்லாச் சனத்தையும்… எல்லாப் போராளியளையும் ஒரு இடத்தில குமிக்கிறமாதிரி ஆமிக்காறன்தான் அடிச்சிருக்கிறான். பாக்கப்போனா அவன்தான் இப்ப சண்டையை நடத்திக்கொண்டிருக்கிறான். போராளியளும் நாங்களும் ஓடிக்கொண்டிருக்கிறம்.”
தயாநிதி சொன்னது கேட்ட நாகி, “அம்மாளாச்சீ…! எப்ப இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரப்போகுதோ?” என்று அலுத்தாள்.
அவள் புறுபுறுத்தது கேட்டு சிரித்தாள் தயாநிதி. “எதுக்கம்மா முடிவு வாறது?”
“இந்த நேரத்திலயும் உன்னால சிரிக்க எப்பிடி ஏலுது? எதுக்கு முடிவு வாறதெண்டா… சண்டைக்குத்தான்.”
“சண்டை முடிவுக்கு வாற நேரம் நாங்களெல்லாம் மிஞ்சுவமோ தெரியாது. ஆமியில ஒண்டரை லட்சம் பேர் இருக்கிறாங்களாம். புலியளில மிஞ்சி மிஞ்சி பத்தாயிரத்துக்கு மேல இரா.”
“அந்தளவுதானோ?”
“பதினைஞ்சு இருவதாயிரமெண்டு இருந்திருக்கும். ஆனா எல்லாம் கலியாணம் செய்துகொண்டு ஓடியிட்டுதுகளெல்லே.”
தயாநிதி சொன்னது கேட்டு வெகுநேரம் யோசித்துக்கொண்டிருந்தாள் நாகி. ‘ம்…! அவையெல்லாம் கலியாணம் செய்யேக்க, அதுகளும் மனிசர்தான… அதுகளுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும்தானயெண்டு நினைச்சம். சண்டையிலயிருந்து தப்புறதுக்காண்டி செய்த கலியாணங்களைவிட, இயக்கத்திலயிருந்து விலக செய்த கலியாணங்கள்தான் கனக்கப்போல கிடக்கு.’ நாகியின் யோசனையை கவனமெடுக்காத தயாநிதி தொடர்ந்துகொண்டிருந்தாள்: “கனபேர் இயக்கத்திலயிருந்து தப்பத்தான கலியாணம் கட்டினதுகள். இனிமே அவைக்கு குடும்பத்தில மட்டும்தான் பாசமிருக்கும். முல்லைத்தீவைப்போலயும் ஆனையிறவைப்போலயும் வீரமான, ஆவேசமான சண்டை இனி புலியள் தரப்பில நடக்குமெண்டு நான் நினைக்கேல்லயம்மா. எவ்வளவு இடங்களில அடிவாங்கி அடிவாங்கி இப்ப இதில வந்து ஒதுங்கியிருக்கிறம். இஞ்ச ஒரு முடிவிருக்கு. அது எங்களுக்கு நன்மை தாறமாதிரி இருக்காது. வேணுமெண்டா இருந்து பாருங்கோ.”
“அப்ப… இயக்கப் போராளியள் கலியாணம் செய்ததாலதான் இப்பிடி வந்ததெண்டு சொல்லுறியோ, அக்கா?”
கலாவதியின் கேள்விக்கு சிறிதுநேரம் மௌனம் காத்த தயாநிதி சொன்னாள்: “கலியாணமெண்டிறது குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விஷயம், கலா. இப்ப பார், கலியாணம் செய்த பெடியன் சண்டையில செத்திட்டாலும் அந்தப் பிள்ளையை ரண்டு குடும்பத்தில ஒண்டு எப்பிடியும் பாத்துக்கொள்ளும். அந்த நிம்மதி சண்டைக்குப் போற அவனுக்குமிருக்கும். ஒரு ஆறுதல் அவளுக்கும் இருக்கும். ஆனா ரண்டு பேர் மட்டுமாய்க் கலியாணம் செய்யேக்க இந்தப் பாதுகாப்பு இல்லை. அவன் அவளைத்தான், பிள்ளையிருந்தா பிள்ளையையும் சேத்து, முழுக்கவனமெடுத்து காக்கிறதுக்கு நெப்பான். அது போராட்டத்திலயிருந்து அவனை தள்ளி வைச்சிடும். இனி ஆரும் செய்ய ஒண்டுமில்லை. நடக்கிறதக் காணுவம்.”
நாகிக்கும் கலாவுக்கும் அது வெகு துக்கமாயிருந்தது.
நாகி தன் மகனை யோசித்தாள். ‘இந்தநேரத்தில போய் இந்தப் பிள்ளை இயக்கத்தில சேர்ந்துதே. வற்றாப்பளை கண்ணகை அம்மா… அவனை திரும்பக்கொண்டுவந்து என்னிட்ட விட்டிடு. மாசமொரு பொங்கல் வைக்கிறன் உனக்கு!”
சிறிதுநேரம் எதிரே பார்த்துக்கொண்டிருந்த நாகி, “சனமெல்லாம் அங்க இடிபட்டுக்கொண்டு நிக்குதுகள். தின்ன கின்ன எதாச்சும் ஒழுங்கிருக்கோ தெரியாது. எதுக்கும் சாக்கை அவிட்டு அந்த குண்டுச் சட்டியை எடுத்துத்தா, கலா. போய் என்னெண்டு பாத்துக்கொண்டு வந்திடுறன்’ என்று வெளிக்கிட்டாள்.
திரும்ப நாகி வந்தபோது மூன்று மணிக்கு மேலே. “தமிழர் புனர்வாழ்வுக் கழகம்தான் கஞ்சி ஊத்துது. மாத்தளன் பக்கத்தில நடக்கிற ஷெல்லடியில கன சனம் காயம்பட்டுப்போய்க் கிடக்குதுகளாம். கொஞ்சப் பேர் செத்துப் போட்டுதுகளெண்டும் கதைக்கின. செத்த ஆக்கள அங்கன அங்கன கிடங்குவெட்டி இயக்கம் தாட்குதாம். அம்மாளாச்சி…!” என்றபடி கஞ்சிச் சட்டியை கலாவதியிடம் நீட்டினாள். “அதென்னம்மா பையில?” கலாவதி கேட்டாள்.
“தெருவுக்கு ரண்டு பக்கத்திலயும் கடையள் போட்டிருக்கிறாங்கள். அறா விலைதான். எண்டாலும் அஞ்நூறு ரூவாய்க்கு விஸ்கற் வாங்கினன்.”
“அஞ்நூறு ரூவாய்க்கு விஸ்கற்றோ?” கலாவதி கூவினாள்.
“இதயே இன்னும் கொஞ்சநேரத்தில இந்தக் காசுக்கு வாங்கேலாது. சனம் அப்பிடி அடிபட்டுக்கொண்டு வாங்குதுகள். இதுகின்ர அருமை இப்ப தெரியாது உனக்கு.”
அப்போது ஒரு தந்தையும் ஒரு பெண்பிள்ளையும் சின்ன வயதுப் பையனொருவனும் வளவுக்குள் வந்தனர். சிறிய பெண்தான் முன்னே வந்து கேட்டாள்: “இந்த இடத்தில நாங்களொரு கூடாரம் போடவோ, அன்ரி ?”
“போடுங்கோ, பிள்ளை. பங்கரும் பின்னால ஒண்டிருக்கு.”
பெண் திரும்பிப் போனாள்.
அவளது முகம் காய்ந்துபோய்க் கிடந்தது. சிறுவனும் சந்தோஷமாயில்லை. தகப்பனும் பாதி உயிரோடுதான் நின்று கூடாரத்தை எழுப்பினார். அதுபற்றி பின்னர் கேட்கவேண்டுமென நாகி நினைத்துக்கொண்டாள்.
கஞ்சி குடித்து முடிய தனித்தனியாய் இருந்து நினைவுகளுள் அழுந்தினர் மூவரும். பிள்ளைகள் புதிய இடத்தில் சத்தமாய் விளையாடிக்கொண்டு இருந்தன. தூரத்தில் சண்டைச் சத்தம் மெதுவாய் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்தது. அது எப்போது தங்களை வந்தடையும்? எல்லோரது நினைப்பும் அதுவாகவேயிருந்தது.
[தொடரும்]