நீர்கொழும்புக்கு வந்திருக்கிறீர்களா? அந்த ஊர் குறித்து கர்ணபரம்பரைக்கதைகளும் சுவாரஸ்யமான வரலாற்று செய்திகளும் இருக்கின்றன. அங்கிருந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாறிவிட்டார்கள் என்று கேள்விஞானத்தில் வாய்க்கு வந்தபடி பேசிவருபவர்களும் இருக்கிறார்கள் ஏராளமான கத்தோலிக்க தேவாலயங்கள் அங்கு இருப்பதனால் சின்னரோமாபுரி என்றும் அழைப்பார்கள். அங்கு பூர்வீகமாக வாழ்பவர்களும் அவர்களின் அடுத்த சந்ததியினரும் சகோதர மொழியான சிங்களத்தை சரளமாக பேசுவதனால் அம்மக்கள் சிங்களவர்களாகிவிட்டதாக பலர் கற்பனை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மேல்நாடுகளுக்கு வந்து தமிழை மறந்து ஆங்கில மோகத்தில் ஆங்கிலம் மாத்திரம் பேசிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் ஆங்கிலேயர் என்ற முடிவுக்கு வந்துவிடமுடியுமா? அவ்வாறு நீர்கொழும்பு வாழ் தமிழர்கள் சிங்கள மோகத்தில் தம்மை மாற்றிக்கொள்ளவில்லை. தோப்பு - கொச்சிக்கடை முதலான நீர்கொழும்பை அண்டியிருக்கும் ஊர்களில் வசித்த தமிழ் கத்தோலிக்கர் சிலர் சிங்களம் கற்றால் அரச உத்தியோகம் கிடைக்கும் என நம்பி சிங்களம் படித்தனர். சில சிங்கள கத்தோலிக்க மதகுருமார் நீர்கொழும்பு பிரதேசத்தில் தேவாலயங்களில் சிங்கள மொழியில் பிரார்த்தனை நடத்தினார்கள். இந்தப்பின்னணியிலிருந்து அவ்வூர் தமிழர்கள் சிங்களவர்களாக மாறிவிட்டனர் என்ற முடிவுக்கு வந்தவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார்கள்.
இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் இலங்கையின் மேற்குக்கரைதனில் போர்த்துக்கீசர் காலத்தில் கடலோரக்கிராமமாக விளங்கிய இந்த ஊர், பின்னர் ஒல்லாந்தர் அவர்களையடுத்து பிரிட்டிஷாரின் பிரவேசத்தையடுத்து படிப்படியாக நகரமாகி மேற்கு இலங்கையில் மாபெரும் நகரமாக காட்சியளிக்கிறது. நீர்கொழும்பில் ஒரு புறம் ஆர்ப்பரிக்கும் கடல் மறுபுறம் ஒல்லாந்தர் உருவாக்கிய டச்சுக்கால்வாய் இவை இரண்டுக்கும் மத்தியில் நேர்வகிடு இழுத்தது போன்று அமைந்துள்ளது ஒரு காலத்தில் கன்னாரத்தெரு என அழைக்கப்பட்ட கடற்கரைவீதி ( Sea Street). டச்சுக்கால்வாயும் இந்து மா கடலும் சங்கமிக்கும் கலப்பு எனப்படும் முன்னக்கரைக்கு சமீபமாக ஒல்லாந்தர் கட்டி எழுப்பிய கோட்டை. அந்தக்கோட்டையிலிருந்து தென்படும் முச்சந்தியிலிருந்து ஓடுகிறது கடற்கரை வீதி. முடியும் எல்லையில் புனித செபஸ்தியார் தேவாலயத்தின் பரிபாலனத்தில் இருக்கும் குதிரையில் ஆரோகணித்து நிற்கும் செபஸ்தியாரின் சிலை. டச்சுக்கோட்டைக்கும் அந்தச்சிலைக்கும் இடைப்பட்ட தெருவான கடற்கரைவீதியில் முத்துமாரியம்மன் - சித்திவிநாயகர் - சிங்கமாகாளி அம்மன் ஆகியோர் எழுந்தருளும் பிரசித்தி பெற்ற ஆலயங்கள். தமது வாழ்நாளில் நீர்கொழும்புக்கு என்றைக்குமே செல்லாத எவரும் அந்த வீதியில் நடந்தால் ஒரு தமிழ்ப்பிரதேசத்திற்குள் பிரவேசித்தவிட்ட உணர்வே தோன்றும்.
அங்கேதான் சித்திவிநாயகர் கோயிலுக்கு முன்பாக - கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ்ப்பாடசாலையாக விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அமைந்துள்ளது. அந்தக்கல்விச்சாலை அந்த ஊர் தமிழ்மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம். இந்த ஆண்டு (2014) அக்கல்லூரி தனது அறுபது வயதை நிறைவுசெய்யும் வேளையில் அங்கே தனது ஆரம்பக் கல்வியை பெற்றுக்கொண்ட எமது இனிய நண்பர் லண்டனில் வதியும் நூலகர் - தமிழ் ஆய்வாளர் நடராஜா செல்வராஜா அவர்களுக்கும் மணிவிழா வருகிறது.
கடற்கரை வீதியில் செபஸ்தியார் தேவாலயத்தை கடந்து சென்றால் வலதுபுறம் லக்ஷ்மன் ஒழுங்கை என்ற சிறிய பாதை ஒல்லாந்தரின் புத்தள வெட்டு வாய்க்காலை நோக்கிச்செல்கிறது. அந்த வீதியில் 1960 களில் ஒரு இல்லம். அதன் பெயர் தமிழகம். யாராவது நம்புவார்களா? அந்த வீட்டில் ஐந்து ராஜாக்கள் வாழ்ந்தனர். அவர்கள் மன்னர்கள் அல்ல. தமிழையும் தமிழ்த்தேசியத்தையும் நேசித்த சாதாரண மனிதர்கள். அந்தக்குடும்பத்தின் தலைவர் தந்தை ஓவர்ஸியர் நடராஜா. தலைமகன் சிவராஜா. அவரையடுத்து விக்னராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா, செல்வராஜா. விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயருடன் இயங்கிய காலத்தில் என்னுடன் படித்தவர் ஸ்ரீஸ்கந்தராஜா. விக்னராஜா அங்கே சிறிதுகாலம் படித்துவிட்டு கொழும்புக்குச் சென்றுவிட்டதாக அறிகின்றேன். சிவராஜா எமது பாடசாலைக்கு அவ்வப்பொழுது வந்து தொண்டர் ஆசிரியராக எமக்கு ஆங்கில வகுப்பு எடுத்துள்ளார்.( இவர் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் மருத்துவராக பணியாற்றுகிறார். அத்துடன் சமூகப்பணியாளர்) அச்சமயம் செல்வராஜா சிறுவன். அவரும் அங்கே கற்றார்.
ஸ்ரீஸ்கந்தராஜா எனது வகுப்புத்தோழன் என்பதனால் லக்ஷ்மன் ஒழுங்கைக்குள் இருக்கும் அவர்களின் தமிழகம் இல்லத்துக்கு அடிக்கடி செல்வேன். அந்த இல்லத்தை என்னால் மறக்கவே முடியாது. ஓவர்ஸீயர் நடராஜா தீவிர தமிழ்ப்பற்றாளர். இந்து இளைஞர் மன்றத்தின் தலைவராக பணியாற்றி நல்ல பல சேவைகளைச்செய்தவர். அவர் வீதிகளை நிர்மாணிக்கும் ஓவர்ஸீயராகவிருந்தமையினால் அவர்கள் வசித்த ஒழுங்கையில் பல பெரிய தார் பெறல்களை காணமுடியும். ஓவர்ஸீயர் நடராஜாவிடம் ஒரு கார் இருந்தது. அதில் தமிழரசுக்கட்சியின் கொடி எப்பொழுதும் பறந்துகொண்டிருக்கும். இந்தக்காட்சிகள் யாவும் 1960 - 1965 காலப்பகுதியில். ஆறாம் வகுப்பில் புலமைப்பரிசில் சித்திபெற்ற நானும் எனது மைத்துனர் முருகானந்தனும் யாழ். ஸ்ரான்லிக்கல்லூரிக்கு ( இன்றைய கனகரத்தினம் மத்திய கல்லூரி) மாற்றலாகிச்சென்றபொழுது எமது வகுப்புத்தோழன் ஸ்ரீஸ்கந்தராஜா சக மாணவ நண்பர்களிடம் பணம் சேகரித்து எம்மிருவருக்கும் விடுதியில் உதவும் என்பதற்காக ஒரு பெரிய தேமஸ் ஃபிளாஸ்கை வாங்கி அன்பளிப்புச்செய்தார்.
எனது கல்விக்கான இடப்பெயர்வின் பின்னர் அவ்வப்பொழுது ஸ்ரீஸ்கந்தராஜாவுடன் கடிதத்தொடர்பில் இருந்தேன். விடுமுறையில் வரும்பொழுது அவரை சந்திப்பேன். அந்த தமிழகம் இல்லத்தில் அவருடன் மாத்திரமே உரையாடும் எனது அன்றைய இயல்புக்கு என்னிடம் அப்போதிருந்த கூச்ச சுபாவம்தான் காரணம். அதனால் அந்த இல்லத்திலிருந்த மற்றவர்களை நான் கண்டுகொள்ளவில்லை.
காலம் நிற்காது. சக்கரம் பூட்டிக்கொண்டு அதி வேகத்தில் ஓடிவிடும். ஆனால் - கடந்துசென்ற அந்த வசந்தகாலங்கள் அழியாத கோலங்களாக மனக்குகை சித்திரங்களாக ஆழப்பதிந்தே இருக்கும். இடப்பெயர்வு புலப்பெயர்வு தமிழர்களிடம் இணைந்துகொண்ட நிரந்தரப்பெயர் அல்லவா? இலங்கையின் வசந்தகாலத்தை விட்டு விலகி தினமும் நான்கு பருவகாலங்கள் தோன்றும் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் 1987 இற்குப்பின்னர் வாழத்லைப்பட்ட பின்னரும் எனது எழுத்துப்பணியும் வாசிப்பு அனுபவமும் தொடர்வதால் இலங்கையின் இலக்கிய இதழ்கள் நாளேடுகள் மற்றும் அவற்றின் வாரப் பதிப்புகளில் எனது கண்களுக்கு அடிக்கடி தட்டுப்பட்ட பெயர் நூலகர் நடராஜா செல்வராஜா. யார் இவர்? யாரோ ஒருவர் லண்டனிலிருந்து இயங்கிக்கொண்டிருக்கிறார் என்பது மாத்திரம் தெரிந்தது. ஒரு நாள் சிட்னியிலிருக்கும் கவிஞர் அம்பி நூல் தேட்டம் என்ற ஒரு பெரிய நூலை என்னிடம் காண்பித்து அதில் தனது நூல்கள் பற்றிய குறிப்புகள் இருப்பதாகச்சொன்னார். அதனைப்புரட்டிப்பார்த்தபொழுது எனது முதலாவது சிறுகதைத்தொகுப்பு நூல் சுமையின் பங்காளிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நூல் மிகவும் பெறுமதியானது. பல்கலைக்கழகங்கள் ஆவண காப்பகங்கள் செய்து முடிக்கவேண்டிய பெரிய பொறுப்பினை அந்த நூல் சுட்டிக்காண்பித்தது. ஆனால் - பல்கலைக்கழகங்களோ ஆவண காப்பகங்களோ அதனைக்கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதனால் அந்த நூலின் தொகுப்பாளர் நூலகர் செல்வராஜா தொடர்ந்தும் தமது தீவிர தேடுதலின் மூலம் அடுத்தடுத்து நூல்தேட்டத்தின் தொகுப்புகளை வெளிக்கொணர்ந்தார். அதற்காக அவர் செலவிட்ட நேரம் பெறுமதியானது. இங்கிலாந்தில் தனது உழைப்பில் தனது குடும்பத்தையும் பராமரித்துக்கொண்டு சிறுகச்சிறுக சேமித்து அந்தப்பணியை தொடர்ந்தார். இவ்வளவு காலமாக இந்த அரியபணியை மேற்கொண்டு வருபவர் யாராகவிருக்கும் என்ற யோசனையில் பல மாதங்களை கடத்திவிட்டேன். ஒரு நாள் இரவு எனக்கு இன்ப அதிர்ச்சி. வந்த தொலைபேசி அழைப்பில் மறுமுனையில் நூலகர் செல்வராஜா. உரையாடல் தொடர்ந்தபொழுது தான் நீர்கொழும்பிலிருந்த நடராஜா ஓவர்ஸீயரின் மகன் எனச்சொல்லி மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி தந்தார். உடனே சிவராஜா, விக்னராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் இவர்களின் தந்தையார் நடராஜா , ஸ்ரீஸ்கந்தராஜாவின் முகச்சாடையிலிருக்கும் அவர்களின் தாயார் உட்பட குடும்பத்தினர் அனைவரையும் விசாரித்தேன். எனது நினைவாற்றலை மெச்சிக்கொண்டு செல்வராஜா உரையாடலைத் தொடர்ந்தார். அன்று ஒரு நாள் எனக்கு இங்கிலாந்திலிருந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த செல்வராஜாவை மெல்பனுக்கும் அழைக்க விரும்பினேன். அவருக்கும் இங்கு வரும் எண்ணம் இருந்தது. அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களை சந்திப்பதற்கும் அவர்களின் நூல்களைப்பெற்று நூல்தேட்டம் தொகுப்பில் பதிவு செய்வதற்காகவும் விரும்பியிருந்தார்.
எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் அவரை அழைத்திருந்தோம். மெல்பனில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இயங்கிவரும் விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழாவிலும் அவரை உரையாற்றச்செய்யவேண்டும் என விரும்பி அப்பொழுது அந்த அமைப்பின் தலைவராகவிருந்த திரு. சிவகுமார் அவர்களுடன் தொடர்புகொண்டேன். நூலகர் செல்வராஜா பற்றிய விபரங்களை அவருடையதும் ஈழத்தமிழ்ச்சங்கத்தினதும் பார்வைக்கு அனுப்பினேன். எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் செல்வராஜாவுக்கு வரவேற்பு அளிப்பதற்காக ஒரு மண்டபத்தையும் தெரிவுசெய்து அழைப்பிதழ்களையும் அச்சிட்டு வெளியிட்டு வானொலி ஊடகங்களுக்கும் செய்திகளை அனுப்பியிருந்தேன். அவர் மெல்பன் விமான நிலையத்தில் வந்திறங்கும் நாளன்று லீவும் எடுத்துக்கொண்டு அவரது தொலைபேசிக்காக காத்திருந்தேன். அவர் வந்திறங்கவேண்டிய நாளுக்கு முதல் நாள் இரவு துபாய் விமான நிலையத்திலிருந்து தமது பயணம் எதிர்பாராமல் தாமதிப்பதாகவும் துபாயிலிருந்து புறப்படவேண்டிய பல விமானங்கள் புறப்படுவதில் தொடர்ந்தும் தாமதங்கள் நீடிப்பதாகவும் சொன்னார்.
துபாய் நேரத்தையும் மெல்பன் நேரத்தையும் கணித்துக்கொண்டிருந்தேன். சிலவேளை விமானநிலையத்திலிருந்து அவரை அழைத்துக்கொண்டு வரவேற்பு - சந்திப்புக்கூட்டம் நடைபெறவிருந்த மண்டபத்திற்கு செல்லலாம்தானே என்ற யோசனையும் பிறந்தது. ஆனால் - அந்த அரிய யோசனையும் பலிதமாகவில்லை. உரியநேரத்தில் அவர் புறப்பட்ட விமானம் மெல்பனுக்கு வராது என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டு குறிப்பிட்ட கூட்டத்தை இரத்துச்செய்ய நேர்ந்தது. பலருக்கும் தொலைபேசி ஊடாக அவசர தகவல் பறந்தது. செல்வராஜா புறப்பட்ட விமானம் நீண்ட தாமதத்தின் பின்னர் பறந்துவந்து தரையிறங்கியது. \மெல்பன் விமான நிலையத்தில் அவர் எனக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியை தந்தார் சின்னஞ்சிறு பையனாக 1960 களில் நான் நீர்கொழும்பில் பார்த்த செல்வராஜா , அவரது தந்தையார் ஓவர்ஸீயர் நடராஜாவின் தோற்றத்தில் வந்திறங்கினார். ஓவர்ஸீயர் நடராஜா நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தில் தலைவராக இருந்தவர் என்று இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? எங்கள் மன்ற மண்டபத்தின் சுவரில் படமாக காட்சியளிக்கும் ஓவர்ஸீயரின் படத்தைப்பார்ப்பவர்கள் - சிலவேளை நூலகர் செல்வராஜா நீர்கொழும்பில் அந்த மன்றத்தின் மண்டபத்திற்குள் எதிர்பாராதவிதமாக பிரவேசிக்க நேரிட்டால் மறைந்த ஓவர்ஸீயர் நடராஜாதான் மீண்டும் உயிர்பெற்று வந்துவிட்டாரோ என ஆச்சரியப்படக்கூடும். தந்தைக்கும் தனயனுக்கும் உருவ ஒற்றுமை அப்படி. அதனால்தான் அவர் நடராஜா செல்வராஜா என்று இன்றும் அழைக்கப்படுகிறாரோ தெரியவில்லை.
எனது பால்யகாலத்தில் நான் சந்தித்த செல்வராஜா சுமார் அரைநூற்றாண்டு காலத்திற்குப்பின்னர் தேர்ந்த இலக்கிய சுவைஞராகவும் பன்னூல் ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் தொகுப்பாசிரியராகவும் அறிமுகமாகி நெஞ்சத்துக்கு நெருக்கமானார். தமிழில் நூலகவியல் என்ற சொற்பதம் பேசுபொருளானதற்கு செல்வராஜாவும் காரணகர்த்தராக விளங்குகிறார். இலங்கை தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகளை தமது நூல்தேட்ட தொகுப்புகளில் நயந்து அறிமுகப்படுத்திவரும் செல்வராஜா, தமிழ் ஊடகத்துறையினரின் பணிகளையும் பதிவுசெய்துள்ளார். கிராம நூலகங்களின் அபிவிருத்தி , நூலகப்பயிற்சியாளர் கைநூல், நூலகர்களுக்கான வழிகாட்டி, ஆரம்ப நூலகர் கைநூல், யாழ்ப்பாணம் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத்தொகுப்பு உட்பட தமிழ் உலகத்திற்கு அவசியம் தேவைப்பட்ட ஆவணப்பதிவுகளையும் எழுதியிருப்பவர்.
நூல்கள் எமது இனத்தின் பண்பாட்டை கலாசார விழுமியங்களை அறிவியல் தேடலை, அளவிட உதவும் சாதனங்களாகும். அத்தகைய அறிவேடுகளின் பதிவு எமது வளத்தை அறிவின் தேட்டத்தை எமது தலைமுறைக்கும் அடுத்துவரும் தலைமுறைக்கும் எடுத்துச்சொல்லும் வல்லமை படைத்தன. இத்தகைய பதிவுகள் நாகரிகம் மிக்க ஒவ்வொரு இனத்திற்கும் மிக அவசியமானதாகும். நேற்றைய பதிவுகள் இன்றைய வரலாறு. இன்றைய பதிவுகள் நாளைய வரலாற்றாசிரியர்களுக்கு ஆதாரங்களாக இருக்கப்போகின்றன. - என்பது செல்வராஜா அழுத்தமாக பதிவு செய்துள்ள கருத்தாகும். இக்கருத்தை தாம் செல்லுமிடம் எங்கும் மேலும் விரிவுபடுத்தி பேசிவருகிறார்.
அவர் காற்றிலே பேசிவருபவர் அல்ல. தனது கருத்துக்களை மேடையில் - கலந்துரையாடல்களில் சொன்னாலும் அக்கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அயராது பாடுபட்டு வருகிறார். அவரது உழைப்பு பெறுமதியானது. எனவே அன்று அவரை நாம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்தது சாலவும் பொருத்தமானதே. அவருக்கு நாம் பயணத்திற்கான செலவு எதனையும் வழங்கவில்லை. அவராகவே புறப்பட்டு வந்து எனது வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்து அவுஸ்திரேலியாவில் பெற்றுக்கொண்ட தகவல்களை பதிவுசெய்தார்.
விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழாவிலும் எமது இல்லத்தில் நடந்த சந்திப்பு கலந்துரையாடலிலும் தமது தேடல் குறித்தே ஆழமாக உரையாற்றினார். செல்வராஜா ஈழத்து இலக்கிய உலகிற்கு மட்டுமல்ல மலேசியா தமிழ் அறிஞர்களின் வேண்டுகோளை ஏற்று மலேசியாவில் வெளியான நூல்கள் , மலர்கள் பற்றிய விரிவான நூலையும் தொகுத்து அந்நாட்டு தமிழ் மக்களுக்கு வழங்கியிருப்பவர். மொத்தத்தில் செல்வராஜா ஒரு பொக்கிஷம். இந்த மனிதரின் அயராத உழைப்பை தமிழ் உலகம் கனம்பண்ணுதல் அவசியமானது. இலங்கையில் உடத்தலவின்ன என்ற மலையகப்பிரதேசத்தில் இயங்கும் சிந்தனை வட்டம் என்ற அமைப்பும் ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பும் செல்வராஜாவின் உழைப்பினை உலகிற்கு தெரியப்படுத்திவந்துள்ளன.
தமிழ் வரலாற்றாசிரியர்களும் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வுத்துறையில் ஈடுபடும் பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் , மாணவர்கள் அனைவரும் இலங்கையிலும் புகலிடத்திலும் வாழும் எம்மவர்கள் நூல்கள் தொடர்பான தேடுதலில் ஈடுபட்டால், அவர்களுக்கு செல்வராஜாவின் நூல் தேட்ட தொகுப்புகள் பெரும்புதையாலாகவே காட்சிதரும். 2007 ஆம் ஆண்டு இறுதியில் நானும் நண்பர் விலங்கு மருத்துவர் நடேசனும் ( இவரும் நாவல்கள், சிறுகதைகள், பத்தி எழுத்துக்கள் படைப்பவர்) கனடா, கியூபா சென்றுவிட்டு லண்டனுக்கு வந்திருந்தோம்.
செல்வராஜா எமக்காக ஒரு உணவு விடுதியில் இலக்கிய சந்திப்பை ஒழுங்குசெய்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அச்சந்திப்பில் மு.நித்தியானந்தன், தாஸீஸியஸ், பாலேந்திரா - ஆனந்தராணி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், பத்மநாப அய்யர், பாலசுகுமார், தேசம் ஜெயபாலன், நவஜோதி யோகரத்தினம், இளைய அப்துல்லா, நடராஜா மோகன் ஆகியோருடன் நேருக்கு நேர் உரையாட முடிந்தது. மறக்கமுடியாத அந்தக்கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்த செல்வராஜா , என்னை தீபம் தொலைக்காட்சியில் நேர்காணலுக்கும் மேலும் சில வானொலிகளின் நேர்காணல்களுக்கும் ஒழுங்குசெய்து கொடுத்தார் என்பதை நன்றிப்பெருக்குடன் நினைத்துப்பார்க்கின்றேன். அவருடைய இல்லத்தில் அவரது அன்புமனையாள் மற்றும் செல்வங்களுடன் ஒன்றாக அமர்ந்து இராப்போசன விருந்துண்டு களித்தமையும் மனதைவிட்டு அகலாத நினைவுகள்தான். செல்வராஜாவுக்கு அகவை அறுபது என அறிந்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சியின் உந்துதலால் இந்தக்கட்டுரையை எழுதினேன். அவரது பணிகள் தொடர வாழ்த்துகின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.