எதிர்வினை 4: பெயர்கள், புனை பெயர்கள், இணையம்! - ரவி ஸ்ரீநிவாஸ் -
ஒரு முறை தான் எழுதிய கடிதம் தன் இயற்பெயரான ராஜ முருகபூபதி என்ற பெயரில் திண்னையில் வெளிவந்துவிட்டது என்று திண்ணைக்கு சூர்யா எழுதியிருப்பதாக நினைவு.2003 ஆண்டு வெளியான கடிதம் அது. ஜெயமோகன் விவேகன் என்ற பெயரில் திண்ணையில் ஒரு தொடர் எழுதத்துவங்கி அது பாதியில் நின்றுவிட்டது.அதை எழுதியது அவர்தான் ஒரு வாசகர் கடிதம் மூலமே அறிய நேர்ந்தது.இதை நினைவிலிருந்து குறிப்பிடுகிறேன். ஒருவர் எத்தனை புனைபெயரில் வேண்டுமானாலும் எழுதலாம். அதற்கான பல நியாயமான காரணங்கள் இருக்கலாம். அதே சமயம் ஒரு கட்டத்தில் புனை பெயரில் எழுதுவது யார் என்ற கேள்வி எழுவதும் வியப்பளிக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஒருவர் நிழல் நடவடிக்கைகளுக்கும் இணையத்தினை பயன்படுத்தலாம். தங்கள் உண்மையான பெயரில் பத்திரிகை நடத்தி அதில் அரசை, நிர்வாகத்தை விமர்சிக்கும் தொழிற்சங்க தோழர்களை நானறிவேன். அவர்கள் தங்கள் மேலதிகாரிகளுக்கு ஜால்ரா போட்டு எழுதமாட்டார்கள். நிழல் நடவடிக்கையல்ல தொழிற்சங்க இயக்கம் என்பது. அதே சமயம் ஒருவர் வெளியில் இடதுசாரி அல்லது இடதுசாரிகளின் நண்பர் போலவும், இணையத்தில் ஹிந்த்துவ ஆதரவாளர் போலவும் காட்டிக் கொள்ள புனைபெயர்களை பயன்படுத்த முடியும். ஒருவரை நேரடியாகக் திட்டாமல் இன்னொருவர் மூலம் அவர் புனைபெயரைப் பயன்படுத்தி திட்ட முடியும். அல்லது அதை வெளியிட்டு அது என் கருத்தல்ல என்று கூறிவிட முடியும்.
திண்ணையில் நான் ஜெயமோகனை விமர்சித்து எழுதும் போது என்னை விமர்சித்து எனக்கு மின்னஞ்சல்கள் வரும்.கிட்டதட்ட ஒரே கருத்து, பல்வேறு வாக்கியங்களில். அதை எழுதியிருப்பது ஒருவர்தான் என்பதை எளிதாக ஊகிக்க முடியும்.தெரிந்தும் நான் பதில் போடுவதுண்டு.பின்னர் அவை நின்று விட்டன. நான் பதிலில் உங்கள் கருத்தை திண்ணையில் எழுதுங்கள் அங்கு பதில் தருகிறேன் என்று குறிப்பிடுவேன்.அந்த நபர்களின் பெயரில் திண்ணையில் கடிதங்கள் எதுவும் வரவில்லை. வெங்கட் சாமிநாதன் தன் கட்டுரை ஒன்றில் 1970 களில் நடந்த இலக்கிய சர்ச்சைகளின் போது போலிப் பெயர்கள், முகவரிகளுடன் தங்களை, அதாவது வெ.சா,பிரமீள் விமர்சித்து அவர்கள் கட்டுரைகள்,கருத்துக்களை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு கடிதங்கள் வந்துள்ளன என்று எழுதியிருப்பதாக நினைவு.
இணையம் உளவு பார்க்கவும் பயன்படலாம்.போலிப் பெயர்களில் ஒருவர் கருத்துத் தெரிவித்து எதிர்வினை ஆற்றுவோர் யார் யார் எத்தகைய எதிர்வினைகள் என்பதை அறிவதற்காக வேண்டுமென்றே provocative ஆக எழுதலாம்.எதிர்வினை ஆற்றுவோர் நிஜப் பெயர்களில் எழுதும் போது அதில் ஆபத்துமிருக்கிறது. இதை தெரிந்து கொண்டு வெளிப்படையாக எழுதுவோருமிருக்கிறார்கள். ஒரு அடிப்படைவாதி கூட போலிப்பெயரில் ஒளிந்து கொண்டு தான சார்ந்துள்ள மதம் அல்லது இயக்கம் மீது கடுமையான விமர்சனம் வைத்து அதற்கு வரும் எதிர்வினைகளைக் கூட கருத்து ரீதியான எதிரிகள் யார் எனக் கண்டுகொள்ள முடியும். இப்படிப் பார்த்தால் ஒருவேளை நேசக்குமார் என்பது கூட ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியின் புனைபெயராக இருக்கலாம். அரசின் ஒற்றர்கள் எதிர் இயக்கங்களில் ஊடுருவி தகவல் சேகரிப்பது போல்தான் இது. இணையம் இது போல் பல சாத்தியப்பாடுகளுக்கு இடமளிக்கிறது. சில ஹிந்த்துவதளங்களில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. அப்படிப்பட்ட ஒரு தளத்தில் பல முறை என் கருத்துக்கள் நான் இட்டும் இடம் பெற்றதில்லை. இங்கு இயற்பெயரில்தான் கருத்துத் தெரிவித்திருக்கிறேன். அவர்கள் தொடர்ந்து அதை இணையத்தில் இட மறுக்கும் போது அங்கு கருத்து பதிவு செய்வதை நிறுத்தி விட்டேன். அதே சமயம் அது போன்ற தளங்களில் புனைபெயர்களில் கருத்துகள் இடம் பெறுவதுமுண்டு.
ஹிந்து யுனிட்டி இணையதளம் ஒரு பட்டியலை, நபர்கள் குறித்த தகவல்கள், புகைப்படங்களுடன் தருகிறது. இவர்கள் அவர்கள் பார்வையில் ஹிந்து விரோதிகள். இப்படி பட்டியலில் தங்கள் பெயர் இருப்பது தெரிந்தும் தொடர்ந்து ஹிந்த்துவ எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிடுபர்களும் இருக்கிறார்கள். இதையெல்லாம் தெரிந்து கொண்டே ஒருவர் இன்று செயல்பட வேண்டியிருக்கிறது. புனைபெயர்களில் வெளியாகும் கருத்துக்களுக்கு புனைபெயர்களிலேயே எல்லோரும் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும். ஒரு வேளை
அதுதான் சரியான எதிர்வினையோ.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.