பதிவுகள் விவாதம்: ஸைபர் வெளியும் மனித உடல்களும்!
- யமுனா ராஜேந்திரன் -
முதலில் ஸைபர் வெளி ஜனநாயக வெளி என்பதை திட்டவட்டமாக தெளிவபடுத்தி விட வேண்டியிருக்கிறது. தணிக்கை என்பதைத் தகர்த்திருக்கிற வெளி இது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் சீனாவும் இந்தியாவும் கூட ஸைபர் வெளியைத் தம் நிலப்பிரப்பில் கட்டப்படுத்த பற்பல சட்டதிட்டங்களை வகுத்துவருவதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய அறிவுஜீவி என்பவன் யார் எனும் பிரம்மாண்டமான கேள்வியையும் ஸைபர் வெளி எழுப்பியிருக்கிறது. கல்வித்துறைசார் பல்கலைக் கழக அறிவுஜீவிகள், வாய்ப்புப் பெற்ற மரபுசார் அறிவாளிகள் மேட்டுக்குடியினர் ஆர்வமுள்ள தேடித் திரியம் சாதாரண மனிதன் போன்றவர்களுக்கிடையிலான அறிவதிகார எல்லைகளை இவ்வெளி உடைத்திருக்கிறது. முக்கியமான ஆதார நூல்கள், சிந்தனையாளர்களின் தொகுப்பு நூல்கள், சிறப்புத்தறைசார் கட்டுரைகள் அனைத்தையும தேடலுள்ள வாசகன் இன்று எந்த அதிகார எல்லைகளையும் தாண்டாமல் ஸைபர் வெளியில் நேரடியாகப் பெற்றுவிட முடியும்.
அச்சு எந்திரம் தேவாலயத்தின் செல்வாக்கை உடைத்ததைப் போல ஸைபர் வெளி அரசுகளினதும் கலாச்சார அதிகாரிகளினதும் செல்வாக்கை உடைத்திருக்கிறது.
ஸைபர் வெளி பற்பலருக்கு ஒளிந்து விள¨யாடும் இடமாகவும் தத்தமது போக்கிரித்தனங்களைக் கொட்டும் இடமாகவும் இருக்கிறது என்பதனை தமிழ் ஸைபர் வெளியிணை நுண்தளத்தில் அனுமானித்து வந்திருப்பவர்கள் அவதானிக்க முடியும். சோவியத மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஸமீட்சாட் வகை முகத்திரைகளோடு தமிழ்ச்சூழலில் பலர் ஸைபர் வெளியில் நடமாடி வருகிறார்கள்.
தமது அடையாளங்களை புனைபெயரிலும் போலி மின்னஞ்சல் முகவரியிலும் பரிபாலித்துவரும் இவர்கள் தமக்கு எதிர்வினை புரிபவர்களை துட்பமான வகையில் பெயர் குறிப்பிட்டு விவாதங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.
ஸைபர் வெளி நிழல் மனிதர்களை அணுகுவதில் நேரடியாக விவாதத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு மிகுந்த சிக்கல்கள் இருக்கிறது.
முதலாவதாக இவர்கள் தமது அடையாளங்களை முற்றிலுமாக மறைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் முன்வைக்கும் விவாதங்கள் ஆழந்த நுண்அரசியல் சார்ந்ததாக இருக்கிறது. இவர்களுக்கு எதிர்விணை செய்பவரின் குறிப்பான சாதிய,மத,பால்,இன,கருத்தியல் அடையாளங்களை முன்னிறுத்தி விவாதங்களைச் மேற்கொள்கிற இவர்கள் தமது அடையாளத்தை முற்றிலும்; மறைத்துக் கொள்கிற நிலையில் எதிர்வினையாற்றுபவர் ஒரு கட்டத்திற்கு மேல் இத்தகைய நிழல மனிதர்களோடு தொடர்ந்து உடையாடுவது என்பது சாத்தியமில்லாமல் போகிறது.
இரண்டாவதாக இத்தகைய நிழல் மனிதர்கள் முன்வைக்கும் விவாதங்களை ஆதரித்து எழதுகிறவர்களும் நிழல் மனிதர்களாக இருக்கும் போது எதிர்வினையாற்றுபவரின் நிலைமை இன்னும் சிக்கலாகிறது. ஒரே பிரச்சினையை முன்வைக்கிற நிழல் மனிதனும், அதனைச் சார்ந்தும் ஆதரித்தும், ஒரு கட்டத்தில் அவதூற்று மொழியைப் பிரயோகிப்பவரும் ஒரே நிழல் மனிதரின் பல்வேறு நடமாடும் நிழல்களா எனும் சந்தேகமும் நியாயமாகவே தோன்றுகிறது. ஆதாரமான நிழல்மனிதனும் ஆதரித்து எழுதும் நிழல் மனிதர்களும் சஞ்சரிக்கும் சிந்தனைத் தளம் ஒன்றே என ஆகுமானால் ஆதாரமான நிழல் மனிதனின் பின்னிருக்கும் நிஜமனிதன் ஓரு புதைந்த திட்டத்தினடிப்ப¨யில் செயல்படும் மனிதன் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
இவ்வாறான நிழல் மனிதர்களைக் கண்டடைவதற்கு சில சூசங்கங்ளதை தொடர்ந்து சென்றே தேட வேண்டியிருக்கிறது. எதற்காக இந்தத் துப்பறிகிற வேலை என்கிற சோர்வு கூடச் சில வேளைகளில் தோன்;றுகிறது. இரண்டு காரணங்களுக்காக இந்தக் காரியத்தைச் செய்யத் வேண்டியிருக்கிறது. முதலாவதாக இவர்கள் எதிர்விணையாற்றுபவர்களை மறைந்த நின்றுகொண்டு கபடமான மொழியில் அவதூறு செய்கிறார்கள். இரண்டாவதாக இவர்களது மறைந்த நிலையிலான சமூகக் கலாச்சாரத் திட்டங்கள் மனித உடல்கள் மரணமுற்றுச் சரிகிற வெறிச்செயல்களுக்கான கருத்தியல் அடிப்படைகளை வழங்குவதாக இருக்கிறது.
நீண்ட நாட்களாகவே இவ்வகைக் கட்டுரை எழதுவதைத் தீர்மானிப்பதில் இருந்த சிக்கல் ஜெயேந்திரர் பிரச்சினை தொடர்பாக தமிழகத்திலிருந்து வந்த சுரா, காலச்சுவடு, ஞாநி போன்றவர்களின் அபிப்பிராயங்களால் விலகியது என்றே சொல்ல வேண்டும்.
ஜெயந்திரர் பிரச்சினையும் அவர் செய்ததாகச் சொல்லப்படும் கொலை, பாலியல் சுரண்டல், மோசடி போன்றவற்றில் அவர் ஈடுபட்டது மெய்யா பொய்யா என்பதனை நீதிமன்ற நடைமுறைகள் தீர்மானிக்கட்டும். ஆனால் ஜெயேந்திரர் போன்று சட்டங்கள் இந்திய யாப்பு போன்றவற்றுக்கு அப்பால் பெற்றிருக்கும் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பது இந்திய வரலாற்றில் ஒரு முன்னுதாரணமாக இருப்பதால் ஜெயேந்திரர் மீதான நடவடிக்கை வரவேற்க்கப்படவேண்டும் என இந்த அபிப்பிராயங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்த அடிப்படையிலிருந்தே இக்கட்டுரையின் அணுகுமுறையும் எழுகிறது. இந்தக் கட்டுரை முன்வைக்கும் கேள்விகளுக்கான திறவுகோல் கட்டுரை குறிப்பிடும் சம்பந்தப்பட்ட மனிதர்கள் நிழல் மனிதர்களிடமே இருக்கிறது.
நீதிமன்றம் ஜெயேந்திரரை திரைவிலக்கி நிஜமுகத்தடன் முன்வைப்பதற்கான சாத்தியம் போல எனது அவதானங்கள் பொய் மெய்;கள் சம்பந்தப்பட்டவர்கள் திரைகளை விலக்கி வெளிவருவதிலேயே இருக்கிறது. ஜெயேந்திரர் விவகாரத்தில் எழுத்தாளர்கள் மெளனம் கலைத்து தமது அபிப்பிராயங்;களை முன்வைக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
தமிழ் இலக்கியத்தில் இந்துத்துவம் நுழைந்தவிட்டது என கலாப்ரியா முன்னொருபொழுது கூறியதாக ஞாபகம். கருணாநிதி, ஜெயலலிதா, அரசு ஊழியர் வேலை நிறுத்தம், திகசி, ரெஜி சிறிவர்த்தனா, சுனாமி என அனைத்து குறித்தும் அபிப்பிராயம் தெரிவிக்கும் ஜெயமோகனுக்கு ஜெயேந்திரர் குறித்து ஏதும் அபிப்பிராயங்கள் இல்லை என எவரும் நம்ப முடியாது.
ஸைபர் வெளியை அறிந்தருக்கும் வாசகன் எனும் அளவிலும், ஜெயமோகனது இலக்கிய எழுத்துக்கள், அவரது கருத்தியல் குறித்த எழுத்துக்கள, அவரது அரசியல் சர்ச்சைகள் போன்றவற்றைத் தொடர்ந்து வாசித்து வருபவன் எனும் அளவிலும் ஜெயேந்திரர் கைதைத் தொடர்ந்து திண்ணையில் நேசகுமார் எனும் பெயரில் வந்த ஆதங்கக் கட்டுரை, அதனைத் தொடரந்து வந்த இஸ்லாம் தொடர்பான கட்டுரைகள் ஜெயமோகனுடையதுதான் என நம்புவதற்கு இடமுண்டு. இதுமட்டுமன்று சூர்யா எனும் பெயரிலும் பிற்பாடு சூரியா எனும் பெயரிலும் எழதுகிறவரும் ஜெயமோகன்தான் என்றும் தர்க்க அளவில் நான் நம்புகிறேன்.
இதனைத் தெளிவபடுத்துவதன் மூலம் என்ன பயன்? இதைச் சொல்வதற்கான தர்க்கம் என்ன? நியாயமான கேள்விகள். தமிழக இலக்கியச் சூழலில் ஒரு சிலர் தவிரவும் பெரும்பாலுமான எழுத்தாளர்கள் தொடர்ந்து ஸைபர் ஸ்பேசில் நடமாடுபவர்கள் என்று சொல்ல முடியாது. சூர்யா அல்லது சூரியா, நேசகுமார் போன்றவர்கள் ஸைபர் ஸ்பேசில் மட்டுமே நடமாடும் எழத்தாளர்கள். அவர்கள் சிறுபத்திரிக்கை சார்ந்து தெரிந்த எழுத்தாளர்கள் அல்ல. மேலாக ஜெயமோகனின் ஸைபர் ஸ்பேஸ் எழுத்தக்களின் கருத்தியல் சார்பாளர்களும் விசுவாசிகளும் இவர்கள் தான்.
ஜெயமோகனது பிரதிகளை விதந்தோதி வழிபடுபவர், எதிர்விணையாற்றுபவர்களை நக்கல் செய்பவர் வன்சொல் வீசுகிறவர் சூரியா எனும் நிழல் மனிதர். இவரது இதுவரைத்திய எழுத்துக்கள் அனைத்துமே ஸைபர் ஸ்பேஸ் சார்ந்தவைதான். தமிழகத்தில் அரைநூற்றாண்டுகாளக நடந்த அனைத்து இலக்கிய அரசியல் கருத்தியல் விவாதங்களை அறிந்த இவரை தமிழகத்திலுள்ள எழத்தாளர்கள் யாரைக் கேட்டாலும் தெரியவில்லை என்கிறார்கள். இவர்; இதுவரை எழுதிய எழுத்துக்கள் தொண்ணாறு சதம் ஜெயமோகனது எழுத்துக்கள் எப்படிப் பாரக்கப்பட வேண்டும் என ஜெயமோகன் சொல்கிறாரோ அப்படியே பார்த்து அதை நிலைநாட்ட எழதும் எழத்துக்கள்தான். இவர் ஒன்று ஜெயமோகனது மூளையின் பகுதியாக இருக்க வேண்டும் அல்லது ஜெயமோகனது குளோனிங் ஆக இருக்க வேண்டும் அல்லது ஜெயமோகனிடம் அன்றாட குறிப்புகள் எடுத்துக்கொண்டு எழுதும் பிரச்சார எழுத்தாளராக இருக்க வேண்டும்.
வ.ஐ.ச.ஜெயபாலன் பிரச்சினை தொடங்கி, காடு நாவல் வாசிப்பு வரை ஜெயமோகனது சிந்தனா உலகத்தின் கூறாக நடமாடும் நிழலின் பெயர்தான் சூரியா.
விஷ்ணுபுரத்திலும் பின்தொடரும் நிழலின் குரலிலும் பன்முக மனிதர்களாகப் பரிமாணம் பெறுகிற பாத்திரங்கள் அவ்வப்போது ஜெயமோகனது குரலினை ஏற்பதை நாம் அழகியல் புனைவு என்று கொள்வதில் பிரச்சினையில்லை. படைப்பில் படைப்பாளியின் பிளவுன்ட ஆளுமை நடமாடுவதென்பது ஜெயகாந்தன் முதல் பேசப்பட்ட வரும் படைப்பின் சிக்கலை விடுவிக்கும் பிரச்சினைகள் சார்ந்தவை. நடைமுறை வாழ்வில் ஒரு மனிதனின் பிளவுன்ட ஆளுமை வேறு வேறு பெயர்களில் கருத்தியல் விவாதங்களில் ஈடுபடுவது மிகவும் சிக்கலானதாகும். நிஜ வாழ்வில அனாமதேயக் கடிதங்கள் போல ஸைபர் பேஸ் உருவாக்கியிருக்கம் தர்மசங்கடங்களில் இதுவொன்று.
ஜெயமோகனது எழுததுக்களை எழுத்து வன்முறை மூலம் பாதுகாத்து நிற்க சூரியா. இஸ்லாம் தொடர்பான அவரது இந்துத்துவ நேசத்தை முன்வைக்க நேசகுமார், அந்த நேசகுமாரின் எழத்துக்களை தொகுத்துவிட வேண்டும் எனப் பிரச்சாரம் மேற்கொள்கிற சூர்யா இவர்களெல்லாம் ஒரே ஆளுமையின் பகுதிகள் என்ற கொள்வதில் என்ன பிரச்சினையிருக்க முடியும்?
விவாதங்கள் அபிப்பிராயங்கள், அது வலைத்தள விவாதங்கள் உள்பட தொகுத்துவிடுவதென்பது ஜெயமோகனது சிந்தனையைமப்பின் ஒரு பகுதி. தன்னை மதச்சார்பற்ற தாராளவாதி எனக் காண்பித்துக்கொள்ள நினைக்கிற ஜெயமோகனுக்கு அவரது ஜெயேந்திரர் சார்புக் கட்டுரையும் இஸ்லாம் தொடர்பான விவாதக் கட்டுரைகளையும் எப்படி தன் சொந்தப் பெயரில் கொண்டுவர முடியும்? ஆனால் கட்டுரைகளைத் தொகுத்து அதனை மதம் சார்ந்த விவாதமாக்கிவிட வேண்டும் என நினைப்பது ஒரு சமூக - அரசியல்- கலாச்சாரத் திட்டத்தின் பகுதி அல்லாமல் பிறிதொன்றில்லை.
இஸ்லாம் தொடர்பான நேசகுமாரின் கட்டுரைகளை சொந்தப்பெயரில் எழுத முடியாது என்கிறார் சூரியா. அரவிந்தன் நீலகண்டன் இதை விடவுமான இஸ்லாமிய எதிர்ப்புக் கட்டுரைகளை தனது சொந்த அடையாளத்தடன் எழுதுகிறார். இந்திய அளவில் நிறைய இந்துத்துவ எழுத்தாளர்கள் தமது சொந்;தப் பெயரில்தான் இம்மாதிரி கட்டுரைகளை எழதி வருகின்றனர். நேசகுமாரின் பிரச்சினை தன் சொந்த தாராளவாத முகமூடி கலைந்துவிடக் கூடாது என்பதுதானேயொழிய உயிராபத்து அல்ல. மேலாக ஜெயேந்திரர் தொடர்பான நேசகமாரின் கட்டுரை அவரது சிந்தனையமைப்பு செயல்படும் தளத்தைக் காண்பித்துவிடுகிறது.
ஜெயேந்தரர் கைது ஜெயகாந்தனுக்கு மிகுந்த மனச்சங்கடத்தை அளித்திருக்கிறது. நிச்சயமாக நேசகுமார் போல ஜெயேந்திரர் கைது கோவை ஞானிக்கு சங்கடத்தை அளித்திருக்காது என்று சொல்லமுடியும். மதத்தையும் அது உருவாக்கும் அரசியல் அதிகாரத்தையும் ஞானிக்குத் தெரியும். நேசகுமாரும் ஜெயமோகனும் கால்வைக்கத் தயங்கும் வெளியும் விவாதிக்கத் தயங்கும் வெளியும்; இதுதான். துரதிருஷ்டவசமாக அதுதான் ஜெயேந்திரரின் அரசியல் பின்னனியாகவிருக்கும் பிஜேபி சஞ்சரிக்கும்; வெளி. அடிமுதல் முடிவரை அரசியல் அபிப்பிராயங்களும் அஞ்சலிகளும் தெரிவிக்கும் ஜெயமோகன் இதுவரைக்கம் பிஜேபி குறித்தோ அதனது பிண அரசியல் குறித்தோ அல்லது இந்தியாவையே உலுக்கியிருக்கும் அரசியல்-கலாச்சார-ஆன்மீகப் பிரச்சினையான ஜெயேந்திரர் குறித்தோ தன் பெயரில் அபிப்பிராயங்கள் தெரிவிக்காமல் தன் நிழல் பெயரில் விளையாடும் விளையாட்டே நேசகுமார் சூரியா பெயரிலான வி¨யாட்டுக்கள் என நம்பமுடிகிறது. சூரியாவுக்கு நிச்சயம் நேசமாரைத் தெரியும். அவர் எழுதுவது புனைபெயரில்தான் என அறிந்திருக்கும் சூர்யா அவரது நிஜப்பெயரை முன்வைத்தலும், சூர்யாவுக்கு ஜெயபாலன் தொடர்பான தனது தனிக்கடித்ததை அனுப்பிய ஜெயமோகன் சூர்யாவின் அடையாளத்தை முன்வைத்தலும், பல புதிர்களை விடுவிக்கும். இந்த புதிர் ஜெயமோகனது அரசியல்- ஆன்மீகம்-இலக்கியம் தொடர்பான பல பதிர்களை விடுவிக்கும். ஜெயமோகனது கருத்துலகம் அவரது நாவல்கள் இந்து சிந்தனை தொடர்பான அவரது நூல் என விரிந்து கிடக்கிறது. அவரது அன்மீக அரசியலின் நீட்சியாக ஞானியின் சிந்தனையூடே, நடைமுறை மாரக்சிய இயக்கங்களை நிராகரித்த இந்து வாழ்முறையொன்றை அவர் முன்வைக்கிறார். ஆன்மீக மதம், அரசியல் மதம், சூபி நம்பிக்கை, இலக்கியத்தின் ஆன்மீகக் கூறு போன்றன குறித்த அவரது கருத்தாக்கங்களைத் தொகுத்துக் கொள்கிறவர்களுக்கு, அவருக்கும் சூரியா நேசகுமார் போன்ற நிழல் ஆளமைகளுக்கும் இருக்கும் மையப் புள்ளியைப் புரிந்து கொள்வதில் பிரச்சினையிருக்கப் போவதில்லை.
தனது தாராளவாதி மதச்சார்பற்ற முன்னிறுத்தலை நிறுத்திவிட்டு ஜெயமோகன் தனது அசல் முகத்துடன் வெளிவரும்போது எதிரிநிலையிலிருந்த கருத்தாடல் மேற்கொள்பவர்கள் இலக்கியம்-அரசியல்-ஆன்மீகம் சார்ந்து நுண்தளத்தில் அவரை எதிர்கொள்ள அவர் உதவமுடியும்.
திண்ணையில் நடந்து கொண்டிருக்கும் இந்துத்துவம்-.இஸ்லாம் தொடர்பான விவாதம் அடிப்படைவாதங்களுக்கு இடையிலான விவாதமேயல்லாது, இஸ்லாம் குறித்து இன்று தாராளவாத நோக்கிலும் ஜனநாயகவாத நோக்கிலும் எழுத்திக் குவித்திருக்கும் எந்த ஒரு இஸ்லாமிய அறிஞரையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத விவாதமாகும். ஜியாவுதின் சர்தார், இக்பால் அகமது, ஸமிர் அமின், தாரிக் அலி, அய்ஜஸ் அகமது போன்றவர்கள் இஸ்லாம் குறித்து நிறைய எழுதியிருக்கிறார்கள்.
தாரிக் அலியை முட்டாள் என அழைத்து நாகூர் ரூமி முன்வைத்திருக்கும் இஸ்லாம் அடிப்படைவாத இஸ்லாம் என்பதில் சந்தேகமில்லை. நேசகுமார் நாகூர் ரூமியை மையப்படுத்தி உருவாக்க விரும்பும் அல்லது ஜெயேந்திரர் கைதை ஆதங்கத்தினால் திசை திருப்பி உருவாக்க விரும்பம் விவாதக்களமும் இந்துத்தவ அடிப்படைவாதம் நோக்கிய சிந்தனைக் கட்டமைப்புத்தான் என்பதிலும்; சந்தேகமில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எதிர்வினை 1: ஒரு ஸ்டாலினிஸ்டின் அவதூறு! - ஜெயமோகன் -
யமுனா ராஜேந்திரனின் கட்டுரை கண்டேன். நான் யமுனா ராஜேந்திரன் ரவி ஸ்ரீனிவாஸ் போன்ற ஆழமற்ற, உள்நோக்கம் கொண்ட கட்டுரையாளர்களை பொருட்படுத்த விரும்பவில்லை.ஆனால் இது அவதூறு என்பதனால் மறுப்பு . நான் என்பெயரில் மட்டுமே எழுதுகிறேன். என் கருத்துக்களுக்கு முற்றாகப் பொறுப்பேற்று எழுதுகிறேன். கடந்த வருடங்களில் இம்மாதிரி வெளிப்படையாகக் கருத்துக்களைச் சொல்லி தக்குதல்களை எதிர்கொண்டவர்கள் அதிகம்பேர் இல்லை. எனக்கு மறைக்க மழுப்ப ஏதும் எப்போதும் இல்லை.
முற்போக்கு பிம்பத்தைக் கட்டமைக்க எப்போதும் நான் விழைந்தது இல்லை. சுபமங்களா வந்தபோது கோமல் கேட்டுக் கொண்டதற்கேற்ப ராஜன், கெ விஸ்வநாதன் என்ற பெயர்களில் எழுதியதுண்டு. சொல் புதிதில் அதேபோல சில சமயம் கட்டுரைகளை எழுதியதுண்டு.
இணையம் ஒருவர் தன் பெயரை அடையாளத்தை மறைத்து எழுத வசதி அளிக்கிறது. இதில் எழுதுபவர்களில் கணிசமானவர்கள் அவ்வசதிக்காகவே எழுதுபவர்கள். இன்றைய நவீன தொழிற்சூழலில் இம்மாதிரி புறச்செயற்பாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது கண்கூடு. விதிவிலக்காக இருப்பவை அரசுத்துறைகள். கடந்த 5 வருடங்களாக அரசுத்துறைகளிலும் இலக்கியம் அரசியல் போன்ற ஈடுபாடுகள் கடுமையாக தடுக்கப் படுகின்றன. பல எழுத்தாளர்கள் விருப்ப ஓய்வை நோக்கிச் செல்வது இதனாலேயே எனது துறை தனியார்மயமாகுந்தோறும் எனக்கே கடுமையான சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக கருணாநிதி விவகாரத்துக்குப் பின். என் படைப்புகளை காலச்சுவடு நிறுவனமும் காவ்யா பதிப்பகமும் எனக்கு தெரிவிக்காமல் அச்சிட்டு நூலாக்கும்போதுகூட எதிர்வினையாற்றமுடியாத சூழல்.
சென்ற வருடம் ஜெயலலிதா உருவாக்கிய சட்டத்திருத்தம் மூலம் தமிழக அரசு ஊழியர்கள் கடுமையான கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
இதுதான் இன்றைய நிலை.
இன்னொருபக்கம் இலக்கிய விவாதங்களை சட்டப்போர்களாக மாற்றுவது, வேலைசெய்யும் நிறுவனத்துக்கு புகார்கள் அனுப்புவது என்று இலக்கியச்சூழலில் நிலைமை மிகச்சிக்கலாகப் போய்க்கொண்டிருக்கிறது. இச்சூழலில் ஓர் எழுத்தாளனின் அடையாளத்தைக் கோருவதும் கட்டாயப்படுத்துவதும் மிக அபாயகரமான உள்நோக்கம் கொண்ட செயல்கள்.
ஆகவே இனி இணையத்தில் எழுதும் புனைபெயர்கள் மேலும் அதிகமாகலாம். இன்று இணையத்தில் எழுதுபவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இணையத்தில் மட்டும் எழுதுபவர்கள் என்பதை எவரும் அறிவர்.
நான் எழுத ஆரம்பித்த நாள் முதல் அரவிந்தன், சூத்ரதாரி முதலிய பெயர்களில் எழுதுவது நானே என்று குற்றம்சாட்டியுள்ளனர். பிறகு இணையத்தில் எழுதியபோது ஜீவா, குமாரபாரதி, விஷ்னுதாசன், பிரியதரிசன், சூர்யா, ஆசாரகீனன், சின்னக்கருப்பன், பல்லவன், நேசகுமார் ஆகியபெயர்களில் எழுதுவது நான்தான் என்று அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை நானும் சம்பந்தப்பட்டவர்களும் மறுத்தாலும் வேறுவேறுபெயர்களில் இக்குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இது என் ஆளுமையையும் நேர்மையையும் கறைப்படுத்திக் காட்டச் செய்யப்படும் முயற்சி . மீண்டும் நான் மறுத்தாகவேண்டியுள்ளது. அவ்வளவுதான் செய்ய முடியும்.
என் கருத்துக்களை இலக்கியம் இலக்கியத்துடன் இணைந்த கருத்துவிவாதம் சார்ந்து மட்டுமே வெளிப்படுத்தி வருகிறேன். அரசியல் சார்ந்து நான் பேச விரும்புவதில்லை. நான் அதில் நிபுணன் அல்ல. எனக்குத் தெரிந்தவை எல்லாம் செய்திஇதழ்கள் வழியாகத் தெரிந்தவையே . ஓர் அளவுக்குமேல் கூர்ந்து அவற்றைப் அடிக்கும் வழக்கௌம் எனக்கு இல்லை. என் அக்கறைகளும் மனநிலைகளும் வேறு. மேலும் எனக்கு திடமான அரசியலும் எப்போதும் இல்லை.
அதேசமயம் தத்துவ, சமய நோக்கில் சங்கர மடம் குறித்து இந்த விவாதங்கள் வருவதற்கு முன்பே பல வருடங்களாக நான் எத்தகைய கடுமையான கருத்துக்களை பதிவுசெய்துள்ளேன் என என் நூல்களை, இணைய எழுத்துக்களை படிப்பவர் அறிவார்கள்.
ஒருவர் தன்னை எப்படி முன்வைக்கிறாரோ அப்படித்தான் அவரை எதிர்கொண்டாகவேண்டும். அதுவே சாத்தியம். யமுனா ராஜேந்திரன் ரவி சீனிவாஸ் போன்றவர்கள் தங்களை மார்க்ஸியப் போராளிகள் போல முன்வைக்கிறார்கள். இதை நாம் விவாதம் என்ற அளவில் ஏற்றுக் கொண்டுதான் பேசமுடியும். இவர்களைப்பற்றி நான் தனிப்பட்டமுறையில் அறிந்தவரை இப்பிம்பங்கள் முற்றிலும் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டவையே. ஆனால் அதை எப்படி நாம் நிரூபிக்க முடியும்?
ஒன்றுசெய்யலாம். முற்றாக புறக்கணிக்கலாம். கோவையில் ஒரு பொதுக்கூட்டத்தில் நாஞ்சில்நாடன் ஞானி சூத்ரதாரி போன்ற பல நண்பர்கள் முன்னிலையில் யமுனா ராஜேந்திரன் [பின் தொடரும் நிழலின் குரலை எழுதியமைக்காக] என்னை 'bastard ' 'son of a bitch ' போன்ற சொற்களைப் பயன்படுத்தி திட்டினார் என்று கேள்விப்பட்ட பிறகு அதையே செய்துவருகிறேன். காரணம் அவருக்கு ஒருவகை சுயபிம்பக் கட்டமைப்பு அது சார்ந்த குரோதம் தவிர கருத்துவிவாதம் சார்ந்த நோக்கம் ஏதும் இல்லை. இவர்களால் மேய்ந்த தகவல்களை கக்குவது தவிர ஒருவரிகூட சுயமாகச் சிந்திக்கவும் முடிவதில்லை.
தமிழில் எழுதவரும் எவரும் இம்மாதிரி தாக்குதல்களை தாண்டித்தான் எழுதவேண்டியுள்ளது. நேற்றும் இன்றும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எதிர்வினை 2: ஸைபர் வெளியும் மனித உடல்களும்! யமுனா ராஜேந்திரன்
ஜெயமோகன் இடங்களுக்குத் தக்கமாதிரி மாற்றிப் பேசகிறவர் என்பது பிரசித்தம். எனது கட்டுரைகளை ஆழமும்; தெளிவும் கொண்ட கட்டுரைகள் எனப் பிறிதொரு நண்பரிடம் அவர் சொன்னதற்கான ஆதாரம் என்னிடமுண்டு. அந்த நண்பரை நட்புடனும் அன்பு கனிந்தும் நேசிக்கிற காரணத்தினால் நான் அதனை அதனை வெளிப்படு;த்த இயலாது இருக்கிறேன். அப்படியான சங்கடங்களை நான் எனது நண்பருக்கு உருவாக்க விரும்பவில்லை. சூத்ரதாரி,நாஞ்சில்நாடன்,ஞானி போன்ற மூன்று பேரும் கலந்து கொண்ட பொதுக்கூட்டம்;
ஒன்றிலும் நான் பேசவில்லை. ஜெயமோகனை வன்சொற்களால் நான் ஏசியதாகச் சொல்வதை எவர் சொன்னாரோ அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். கோவையில் நடந்த கூட்டத்தில் ஞானியைச் சந்தித்தேன். நாஞ்சில் நாடனை பிறிதொரு இடத்தில் சுப்ரபாரதிமணியன் அறிமுகம் செய்து வைத்தார். சூத்ரதாரியை யார் என்றே நேரடியாக எனக்குத் தெரியாது. அவர் ஈரோட்டைச் சேர்ந்தவரென்றும் அங்கு நடந்;த கூட்டமொன்றுக்கு வரலாம் எனவும் குறிஞ்சி தெரிவித்தார். சில வேளை அவர் அங்கு வந்திருக்கலாம்.
நான் பேசிய இரண்டு கூட்டங்களும் மாற்றுச்சினிமா நூல் தொடர்பான கூட்டங்கள். அதில் ஜெயமோகன் பற்றிப் பேச வேண்டிய அவசியமே எனக்கு இல்லை. கேள்விப்பட்டதை அரசியலாக்க வேண்டிய அவசியம் ஜெயமோகனுக்கு வந்திருப்பதை நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது.
ஜெயமோகன் ஒரு விசயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்வது நல்லது எவரும் எவருக்கும் அவரவரது தத்துவச்சார்பு நேர்மை தொடர்பாகச் சான்றிதழ் தர வேண்டிய அவசியமில்லை.
நடந்து கொண்டிருக்கும் விவாதம் சில சைபர் ஸபேஸ் நடைமுறைகள் தொடர்பானது. சிலரது கருத்துக்கள் தொடர்பான மெளன இடைவெளிகள் தொடர்பானது. பொதுமேடைக்கு வந்துவிட்டால் இதுவெல்லாம் விவாதத்துக்கு வந்துதான் தீரும். ஜெயமோகன் மனநிலை பிறழ்ந்தவன் மாதிரி திரும்பத் திரும்ப என்னைச் ஸ்டாலினிஸ்ட்டு என்று வசை பாடிவிட்டார். அது பற்றி பல சந்தர்ப்பங்களில் விரிவாக நான் எழுதிவிட்டேன். அது பற்றி அதிகம் நான் பேச விரும்பவில்லை.
சூரியா கோணிக்குள் இருந்து வெளியாகிவிட்டாகிற்று. ஜெயமோகனும் தனது புனைபெயர்களைப் பட்டியலிட்டாயிற்று. நேசகுமார் எப்போது தனது திரையைவிலக்கி விட்டு வெளியே வரப் போகிறார்? பல விடயங்கள் தெளிவுபட்டிருக்கிறது. ஜெயமோகனுக்கு நன்றி.
அவதூறு என்பதற்கு என்ன அர்த்தம் எனறே சமயங்களில் எனக்குப் புரிவதில்லை. அதியுணர்ச்சியிலோ அல்லது பாசாங்கிற்காகவோ ஸைபர் வெளி தொடர்பான எனது கட்டுரையை நான் எழுதவில்லை. நிதானமாக யோசித்து கடப்பாட்டு உணர்வுடன்தான் சான் கட்டுரையை எழுதியிருக்கிறேன். கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதோ புனைபெயர் வைத்துக்கொள்வதை விமர்சிப்பதோ கட்டுரையின் நோக்கம் அல்ல. சிறுபத்திரி;க்கையில் எழுதுகிற பலர் புனைபெயரில் எழுதுகிறார்கள். பிரச்சினையென்று வருகிறபோது அவர்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. எனது பெயரும் கூட புனை பெயர்தான். ஆகவே புனை பெயர் என்பது பெரிய பிரச்சினையே இல்லை. மாறாகப் பொதுத்தளத்தில் எழுதுவதற்கும் இரண்டு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவுகளைப் பொதத்தளத்தில் கடைவிரிப்பதற்கும் வித்தியாசமிருக்கிது.
வித்தியாசம் சமயங்களில் மீறப்படுகிறபோது வாசகனுக்கு எரிச்சல் மட்டுமெ மிஞ்சுகிறது. எடுத்துக்காட்டாக ஜெயபாலன் தொடர்பான ஒரு சிக்கலான கடிதத்தை ஜெயமோகன் தனிப்பட்ட முறையில் சூர்யாவுக்கு எழுத அதை சூர்யா ஸைபர் ஸ்பேசில் முன்வைக்கிறார். இது போக்கிரித்தனம். கடிதத்தை ஒன்று ஜெயமோகன் தந்திரமாகப் பிரசுரித்திருக்க முயன்றிருக்க வேண்டும். அல்லது சூர்யாவின் உற்சாகத்தினால் பிரசுரமாகியிருக்க வேண்டும். அந்த விவகாரத்தில் திண்;ணைதான் வருத்தம் தெரிவித்ததே ஒழிய ஜெயமோகனோ அல்லது சூர்யாவோ தமது முகங்களைக் காண்பிக்கவேயில்லை.
ஆட்கள் நேரடியிலாகத் தெரிந்து மேற்கொள்கிற இன்றைய நேரடியிலான விவாதங்களில் கூட மெளன இடைவெளிகளை வாசிப்பதால் பல அர்த்தங்கள் துலக்கம் பெறுகிறது. காரணம் குறைந்த பட்சம் விவா¢க்கிற விடயங்களில் விவாதிக்கிற ஆளுமைகளின் குணச்சித்திரம் வெளிப்படையாக வெளிப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதுதான். இன்றைய நிலையில் புதையுண்ட அர்த்தங்களிலான சொற்களோடு சாதி,மத, இன விவாதங்களை மறைந்து நின்று மேற்கொள்வது மிகுந்த சிக்கலான ன்மை கொண்டது. காரணம் விவாதிப்பவர் பாசாங்கு செய்கிறாரா அல்லது ஆழ்ந்த உணர்வுடன் விவாதிக்கிறாரா என்ற கூடத் தெரிவதில்லை.
வன் அரசியலும் மனித உயிர்களும் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினைகளில் நேரடியாகச் சொல்கிற கருத்துக்குப் பொறுப்பேற்று விமர்சிப்பதுதான் நேர்மையானது. மத பிரச்சினைகளில் என்னளவில் ஆச்சாரகீனன் (அவரது கருத்தாக்கங்கள் அனைத்தும் அரவிந்தன் நீலகண்டன் கட்டுரைகள் முன்வைக்கும் கருத்தாக்கங்கள் - அரவிந்தன் நீலகண்டனை நேரடியிலாக அடையாளம் காணமுடிவதால் ஆச்சாரகீனன் எனக்கு ஒரு பிரச்சினையாகவே படுவதில்லை) அடிப்படைவாத இந்துத்துவவாதி என்றால், நாகூர்ரூமி அடிப்படைவாத இஸ்லாமியவாதிதான் என்று வெளிப்படையாகச் சொல்வேன். சூர்யா, நேசகுமார், ஜெயமோகன் போன்றவர்கள் குறித்தும் நான் இப்படித்தான் எதிர்பார்க்கிறேன்.
சொந்த முகத்தை மறைத்துக் கொண்டு சைபர் ஸ்பேஸ் தரும் சுதந்திரத்தில் கண்ணாமூச்சி ஆடுகிற விசயம் என்றுதான் இதனை நான் நினைக்கிறேன்.
வேற்று மொழி சைபர் ஸ்பேஸ்களில் இப்படியான விளையாட்டுக்கள் இருக்கும்; என நான் நினைக்கவில்லை. அரசுகளை எதிர்த்த கிளான்டஸ்டைன் பிரசுரங்கள் வேறு பிரச்சினை. ஆனால் இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கும் சாதிய, மத,இன விவாதங்கள் அப்படிப்பட்டதல்ல. இந்துத்துவத்தை ஆதரிக்கிற அறிவுஜீகள் வெளிப்படையாகவே இருக்கிறார்கள். பொதுநீரோட்ட விவாதத்தில் இப்பிரச்சினைகள் வெளிப்படையாகப் பேசப்படுகிறது. அப்படியிருக்க இந்தப் பிரச்சி¨னைகளைப் பேசுகிறவர்கள் ஏன் மறைந்து நின்று வாள் வீச வேண்டும்;?
சூர்யா போன்றவர்கள் மட்டுமல்ல இன்னும் சில நிழல் மனிதர்களும் சைபர் ஸ்பேசில் இருக்கிறார்கள். இவர்களது சுயதம்பட்டம் தாங்கமுடியாத அளவு அகந்தை கொண்டதாக இருக்கும். மிகக் கடுமையாக அபிப்;பிராயம் வைப்பார்கள். ஆனால் முகத்தை விளிம்பநிலைப் புனை பெயர்களுக்குள் ஒளித்துக்கொண்டு விளையாடுவார்கள். எமது அடையாளங்ளை வெளிப்படையாக முன்வைத்து இந்த நிழல் மனிதர்களோடு விவாதிப்பது கடினம். அந்த விவாத்தினைத் தூண்டவென முகாந்திரமாக இப்படி ஒரு கட்டுரை எழதினேன.
உங்கள் நிஜமுகத்;தையும் கருத்தையும் அறியத்தராத வகையில் உங்களோடு உறைபவருக்கு நீங்கள் துரோகம் செய்யமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? ஆகவேதான் இத்தகைய விவாதங்களில் வெளிப்படையாக இருங்கள் என்கிறேன்.
மற்றபடி காதல் கவிதை எழுதுவதற்கோ அல்லது மணிரத்தினத்தின் படங்களின் மகிமை அல்லது கேவலம் பற்றி எழதுவதற்கோ நீங்கள் எத்தனை புனைபெயர்கள் வைத்துக்கொண்டாலும் எவருக்கும் பிரச்சினை வரப்போவதில்லை.
மரணத்திற்கு முன்பாக தெரிதாவிடம் ஒரு நிருபர், தத்துவத்திற்கும் தத்துவாதியின் வாழ்வுக்கும் தொடர்பு இருக்க வேண்டியதில்லை எனச்சொல்கிறார்களே, நீங்கள் இதபற்றி என்ன கருதுகிறீர்கள் எனக் கேட்கிறார். அப்படி இருப்பது சாத்தியம்தானா என்று நிருபரைத் திருப்பி தெரிதா கேட்கிறார். ஒரு செய்தியாகவே இதனை நான் இங்கே குறிப்பிட்டு வைக்கிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எதிர்வினை 3: எதிர்வினை: சைபர் வெளியும் மனித உடல்களும்! - நேசகுமார்-
யமுனா ராஜேந்திரன் அவர்களின் சைபர் வெளியும் மனித உடல்களும் பற்றிய கட்டுரை படித்தேன். தமிழிலக்கிய உலகோடு பரிச்சியம் இல்லாததாலோ என்னவோ, அவரது கட்டுரையில் பாதிக்குமேல் புரியவில்லை. மையக் கருத்து என்னது என்பதும் விளங்கியும் விளங்காததாயுமே உள்ளது. என்னளவில் புரிந்து கொண்ட அளவில், கீழ்க்காணும் விளக்கங்களை முன்வைக்க விரும்புகிறேன் :
ஜெயமோகனும் நானும் :
ஐயா, ஜெயமோகன் எழுத்துக்கள் பலதை நான் படித்ததில்லை. விஷ்ணுபுரம் படித்திருக்கிறேன். அதுகூட ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியதே தவிர, மேலும் அவரது எழுத்துக்களையெல்லாம் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டவில்லை. ஜெயமோகன் எனும் மகாவிருட்சத்தை, அது புரியும் மாயாஜாலங்களை நெருங்க பயப்படவே வைத்தது அவரது எழுத்து. ஆனால், அவரின் மீது ஏகப்பட்ட மரியாதையும் வந்து செர்ந்து கொண்டது. புத்தகத்தினால் ஈர்க்கப் பட்டு அல்ல, அதன் பின்னர் எனக்குப் புலப்பட்ட கடுமையான உழைப்பே எனக்கு அவர் மீது மரியாதையும், வியப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியது. ஏனெனில் உழைப்பின் மீது எப்போதுமே எனக்கு பெரும் மதிப்பு இருந்து வந்திருக்கிறது.
அதை விடுத்துப் பார்த்தால், நான் ஜெயமோகனின் எழுத்துக்களை படித்திருக்கிறேனா என்று எனக்கு நினைவில் இல்லாத அளவுக்குத்தான் அவரது தாக்கம் என்மேல் இருந்திருக்கிறது. அவர் மட்டுமல்ல, பொதுவாகவே எனக்கு தமிழிலக்கிய உலகில் பரிச்சியம் கிடையாது.
அப்போது, இப்போது என்று எதாவது சில பெயர்கள் காதில் விழும், ஆங்காங்கே தட்டுப் படும். எனது வாழ்வோட்ட வேகத்தில், வெலை, குடும்பம், ஆன்மீகம், சுகங்கள் என்ற மிகக் குறுகிய நடைமுறை வாழ்க்கையில் இலக்கியம், அது தூண்டும் சிந்தனைகள், அறிவு பூர்வ சுகங்கள் ஆகியவற்றை அற்பமாகக் கருதி உதாசீனம் செய்து வந்த சாமான்ய மேல் நடுத்தர வர்க்க உலகின் அற்ப வாசியாகவே இருந்து வந்தவன் நான்.
இணையமும் இலக்கியமும் :
இவ்வாழ்வில் சிறிய மாற்றம் ஏற்பட்டது இணையம் மூலமாகத்தான். தமிழ்நாட்டில் படித்து வளர்ந்து, வாழ்ந்த்¢ருந்தும், தமிழை (மற்ற மொழிகளையும் கூடத்தான்) உருப்படியாக அறியாதவனாகவே இருந்து வந்த சாதாரணன் தான் நான். இதை பெருமையாகவோ அல்லது சிறுமைப் பட்டோ சொல்லவில்லை இங்கு. நிஜத்தைச் சொல்கிறேன், நடைமுறையைச் சொல்கிறேன்.
இணைய வசதியோடு கூடவே தமிழும் சேர்ந்து வந்தது. முரசு கண்டு புல்லரித்துப் போன நாட்கள் உண்டு. அதை இயக்கி, வலைத்தளங்கள் தமிழில் முதல் முறையாக தமிழில் இறங்கிய போதுதான் என் மொழியின் மீது எனது அடிமனதில் இருந்த அன்பை என்னாலேயே புரிந்து கொள்ள முடிந்தது. மதுரைத் திட்டத்தின் மூலம், நான் மனப்பாடச் செய்யுள்களாக மட்டுமே படித்திருந்த ஒரு சிறு வட்டத்தைத் தாண்டி, ஓங்கி உயர்ந்து நின்ற எம் பாட்டன்களின் சிந்தனைக் கவிகளை சற்றே காண முடிந்தது. பண்டைய இலக்கியம் மட்டுமல்ல, பழகிவரும் இலக்கியத்தையும் சிறிதே அறிந்து கொள்ள முடிந்தது.
இதனைத் தொடர்ந்து இன்றைய இலக்கிய உலகின் விவாதங்கள், வாதங்கள் அதைத் தொடர்ந்த சண்டைகள் சச்சரவுகள் என்று ஒரு மயக்க உலகத்தின் மீதும் ருசியேற்பட்டது இந்த இணையத்தாலேயே. இணையம் இல்லாவிட்டால், குமுதத்தை மட்டுமே படித்திருப்பேன், தீராநதியை பார்த்திருக்க மாட்டேன், அசோக மித்திரனை அறிந்திருக்க மாட்டேன், ஜெயமோகனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டேன்.
இணையமே என்னை சிறிதளவாவது படிக்கத் தூண்டியது. இணையமே என்னை தமிழில் எழுதத் தூண்டியது. இணையத்துக்கு வெளியே இருக்கும் தமிழிலக்கிய உலகை இன்றும் சரியாகத் தெரியாது. தெரிந்து கொள்ள நேரம் இல்லை . நாங்கள் தவறாயிருக்கலாம், ஆனால்
இன்றைய விரைவு வாழ்க்கையின் கோட்பாடுகள், தூண்டுதல்கள் அப்படி. எழுதத்தூண்டிய இணையம் :
ஒரு ஓரமாக நான் வலைப்பதிவை தயங்கித் தயங்கி ஆரம்பித்தேன். கூட வேலைபார்க்கும் நன்பர்களுக்கும் காண்பிக்க தயக்கம். தப்பும் தவறுமாக எழுத ஆரம்பித்தேன் (இப்போதும் அப்படியே, கொஞ்சம் முன்னேறியிருக்கிறேன்). பக்கத்திலிருப்பவர்கள் என் சிந்தனைகளை பார்த்து பரிகசிப்பார்களோ என்று ஐயுற்ற எனக்கு பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் யாரோ ஒருவர் கூகிளில் எதையோ தேடி, எனதைப் படித்து எழுதிவிட்டுச் சென்ற ஒற்றை வரி சாஹித்ய அகாதமியின் விருதானது. உற்சாகம் கொப்பளித்தது, அவ்வப் போது கிறுக்க ஆரம்பித்தேன்.
மரத்தடி என்றொரு இணையக் குழு,முதலில் பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டுமிருந்தேன். எப்போவதாவது சென்று எதையாவது படித்துவிட்டு மகிழ்வுறுவது வழக்கம். பின் அதீத ஈர்ப்புற்று அதில் இணைந்தேன். அத்தனை பேர் கூடிய அவையில் எதையாவது உள்ளிட்டால் இகழ்வார்களோ என்ற கூச்ச உணர்வில், மூலையில் அமர்ந்து ஓடும் இணையக் குழுவை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் தான் நான். அப்போது அங்கே விழாக்காலம். விழாக்குழுவில் ஒருவர் எனக்கென ஒரு நாள் ஒதுக்கி எழுத அழைத்து மடலிட்ட போது நிறையத் தயங்கினேன்.
பின், ஆவது ஆகட்டும். எழுதித்தான் பார்ப்போமே என்று எனது பயனக் கதை, பிலிப்பஸ் பால்டஸ் 350 வருடங்களுக்கு முந்தி பார்த்து வியந்து எழுதிவிட்டுப் போன தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிபலிப்பு (நல்லூர் பற்றி அதில் வருவதை கிரிதரனிடம் கூட விவாதிக்க ஆசையாயிருந்தது அப்போது), பாரதியாரைப் பற்றி வெங்கடாசலபதி வெந்து, நொந்து போய் எழுதியது என்று பழம்பாய்களையே படையலாக அளித்தேன் மரத்தடிக்கு. எதிர்பார்த்ததற்கும் மேலாக இந்த எளியோனுக்கு கரகோஷமும், கைத்தட்டலும் கிட்டவே களிப்புற்று எழுத்தின் மேல் காமுற்றேன். யமுனாராஜேந்திரன் என்னைப் பற்றிய ஐயம் ஏற்பட்ட போது எனது வலைப்பதிவில் சென்று பார்த்திருந்தால், இதெல்லாம் புலப்பட்டிருக்கும்.
வம்பும் விவாதமும் :
நாகூர் ரூமி அவர்கள் தாம் எழுதிய இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலைப் பற்றி புகழ்ந்து வந்த கருத்துக்களை மரத்தடியில் வைத்துவிட்டுச் சென்றிருந்தார். அவ்வளவு இட்ட அவருக்கு ஓர் வேண்டுகோள் வைத்தேன், இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக உங்களைப் போன்ற அறிஞர்களாவது எதாவது செய்ய வேண்டுமென்று. நான் அப்படிப் பட்ட வேண்டுகோள் இட்டதே தவறு, இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி என் முன்முடிவுகளை, ஆதாரமில்லாமல் முன்வைத்துள்ளேன் என்று கிழக்குப் பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி என்னை எதிர் கொண்டார். எனக்கு நாகூர் ரூமி எழுதிய புத்தகத்தையும் இலவசமாய் அனுப்பி வைத்தார். புத்தகம் வருவதற்கு முன்பு, மரத்தடியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி நான் கூறியவற்றுக்கான ஆதாரங்களை வைத்து விவாதம் செய்து வந்த நான், புத்தகம் கிடைத்த பிறகு அதைப் படித்து, என்னளவில் சரியென நம்பிய விமர்சனத்தை திண்ணை இணைய இதழுக்கு அனுப்பினேன்.
திண்ணையில் வந்த விமர்சனம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனோ தெரியவில்லை, எனக்கு முன்னர் எவரும் அப்படி ஒரு கடுமையான விமர்சனத்தை எழுத்தில் வெளிப்படுத்தவில்லை. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூவே சர்க்கரையாக ஆகியதைப் போல், வேறு யாரும் இது மாதிரி விமர்சனம் எழுதாததாலோ என்னவோ, திண்ணை அதைப் பிரசுரித்திருந்திருந்தது.
நானே எதிர்பார்க்காத வகையில் , பேராசிரியர் ரூமி அவர்கள் எனது தவறான புரிதல்களை தெரிவிக்க முன்வந்தார். முன்வந்த அவர் சில விமர்சனங்களையும் என்னை நோக்கி வீசிச் சென்றார். ஏற்கெனவே என்னை அவர் விமர்சனம் வந்ததால் ஓடிவிட்டார் என்று விமர்சித்திருந்ததால் (தவறான குற்றச் சாட்டு அது என்பதை திண்ணையிலேயே தெளிவாக விளக்கியிருந்தேன்), அமைதியாக இருந்தால், இக்குற்றச் சாட்டுகள் தொடரும் என்பதால் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். விவாதத்துக்கும் அழைத்தேன் பேராசிரியர் ரூமியை.
விவாதங்களின் வளர்ச்சி :
தனியொருவனாய் நின்றிருந்த என்னை எதிர்கொள்ள ஒரு பெரிய கூட்டமே களம் இறங்கியது. எனக்கு எதிராக எழுதுவது ஒவ்வொரு முஸ்லீமுக்கும் கடமையாக்கப் பட்டுள்ளது என்று இஸ்லாமிய விவாத தளமொன்றில் அழைப்பு விடுக்கப் பட்டது. நிறைய இஸ்லாமியச் சகோதரர்கள் எனது கருத்துக்களை மறுத்து, அவர்களுக்குச் சரியெனப் பட்டதை முன்வைத்தார்கள், வலைப்பதிவுகளைத் துவக்கி இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்களை தமிழ் இணைய அன்பர்களுக்கு வாசித்துக் காட்டினார்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செய்கை தம் போன்றவர்களுக்கு ஒப்புமை இல்லை என்பதை அழகிய முறையில் எடுத்துச் சொன்னார்கள்.
பர்தா பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரை பலத்த வரவேற்பைப் பெற்றது (என்னளவில் இதை பலத்த வரவேற்பாகக் கருதுகிறேன். இலக்கிய உலகில் உலாவுபவர்களுக்கு இது சாதாரண விஷயமாகவே படக்கூடும்). சார்பு, எதிர் கருத்துக்கள் என விவாதம் சூடு பிடித்தது.
இதில் சரிவு இல்லையா என்றால், இருந்திருக்கிறது. கடுமையும்,காட்டமான எதிர்தாக்குதல்களும், மிரட்டல்களும் வந்தன.இவையெல்லாம் ஓரிருவரிடமிருந்து மட்டும் தான், மற்றபடி பொதுவாக இஸ்லாமிய சகோதரர்கள் உட்பட நாகரிகமாய்த்தான் விவாதம் புரிகின்றனர். எனது கருத்துக்கள் , கட்டுரைகளின் விளைவாக இஸ்லாத்தைப் பற்றிய சந்தேகங்கள் மிகுந்துள்ள இந்தச் சூழலில், ஒரு விவாத வெளி இணையத்தில் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியச் சகோதரர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்லாம் பற்றி அறிந்தது மிகக் குறைவே, நீங்கள் ஏற்படுத்திய விவாதத்தினால் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டுள்ளது என்றனர் பலர். என் கருத்துக்களை எதிர் கொண்டு பல விஷயங்களைத் தெளிவு படுத்த முன்வந்தனர் பல இஸ்லாமியச் சகோதரர்கள்.
விவாதமும் மதவாதமும் :
இவ்விவாதம் மதவாதத்தை ஏற்படுத்துமா என்றால், உங்களது மனச் சாட்சியையே கேட்டுக் கொள்ளுங்கள், இஸ்லாமியர் யாரும் இல்லையென்றால் எத்தகைய விவாதங்கள், அவதூறுகள் நமது சமூக நிகழ்சிகளில் செய்யப் படுகின்றன என்பதை, மசூதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் நிகழ்த்தப்படும் உரைகளைப் பற்றி அறிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். தொடர்ந்து தமிழகத்தில் எத்தனை மதக் கலவரங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
கோவை குண்டு வெடிப்புக்களில் எழுபது இந்துக்கள் இறந்தனர் என்றால், உயிருடன் கொடூரமாக பல இஸ்லாமியர்கள் கொளுத்தப் பட்டதும் விவாதங்களே இல்லாத நம் சமூகத்தில்தான். பேராசிரியர் ரூமியின் பூர்வீக ஊரில் தான் பார்சல் பாம் அனுப்பி நாகூர் தங்கம் கொலை செய்யப் பட்டார், தங்களின் அரபி மூலத்தை 'தேடிக் கண்டுபிடித்தவுடன்' இஸ்லாமிய சகோதரர்களால் கீழக்கரையிலிருந்து குடும்பம் குடும்பமாக இந்துக்கள் விரட்டப் பட்டார்கள் என்றால், கொடுங்கையூரில் 30,000 ஜெலட்டின் குச்சிகளும், வெடி குண்டுகளும் கைப் பற்றப் பட்டதை அடுத்து அனைத்து முஸ்லீம்களும் அல் உம்மாக்காரர்கள் என எண்ணிய போலீஸ் ரெய்டு மேல் ரெய்டாக சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் (கலைஞர் அவர்களின் நேரடி உத்தரவில்) நிகழ்த்தவே முஸ்லீம்கள் எல்லோரும் குடிபெயர்ந்து போன அவலமும் இத்தமிழகத்திலேதான் நிகழ்ந்தது.( இதெல்லாவற்றையும் விளக்கி தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிய தெளிவானதொரு கட்டுரையை பதிவுகளுக்கே எழுதி அனுப்புகிறேன் விரைவில்). இதுதான் அய்யா இன்றைய நிலவரம். உள்ளுக்குள் ஒருவரையொருவர் சந்தேகித்துக் கொள்கிறோம், மறைவாக நெருப்பை நெஞ்சில் ஏற்றிக் கொண்டுள்ளோம். நமது சமுதாயம் வெந்து தணியாமலிருக்க வேண்டுமென்றால், இந்த அக்கினிக் குஞ்சை வெளியில் கொண்டு வருவோம், விவாதிப்போம், நமது ஆதங்கங்களை, குறைகளை அவர்களிடம் சொல்லுவோம். இங்கே உள்ள குறைகளை அவர்கள் சொல்லட்டும். விவாதித்து, மதவாதத்தையும், அப்பட்ட மத அடிப்படைவாதம் கிளறிவிடும் வன்முறை எண்ணங்களையும் வேரறுப்போம்.
இதற்காகத்தான் இந்த விவாதம் நடைபெறுவது நல்லது என்று எண்ணினேன், எண்ணுகிறேன். இதை எனது வலைப் பதிவில் விளக்கியும் உள்ளேன்.( பார்க்க : http://islaamicinfo.blogspot.com மற்றும் முந்தைய விவாதங்களை அறிய : http://islaam.blogdrive.com)
ஒளிந்து விளையாடும் நரிவிளையாட்டு :
இதில் எனது முழு முகவரியையும், போட்டோவையும், சிவியையும் முன்வைக்காதது உண்மைதான். அப்படி வைக்கும் அரவிந்தனுடன் என்னை ஒப்பிட்டுள்ளார் யமுனாராஜேந்திரன். அய்யா, அரவிந்தன் ஓர் அமைப்பு சார்ந்து செயல்பட்டு , எழுதி வருபவர். அமைப்பின் பின்புலம் அளிக்கும் பாதுகாப்புணர்வோடு செயல்படும் அவரை, தனியாய் மனதிற்கு சரியெனப் பட்டதை இருபக்க மதவாதமும் ஏற்படுத்தும் விளைவுகளை விளக்கி விவாதத்திற்குள் நுழைந்த என்னுடன் ஒப்பிட முடியாது.
அரவிந்தனைவிட ஆக்ரோஷமாக செயல்பட்டு வருபவர்கள் பலர் இருக்கின்றார்கள் என்றால், அவர்களில் யாராவது அமைப்பு சாராமல் செயல் பட்டு வருகின்றனரா, அப்படியெல்லாம் எழுதி வருகின்றனரா என்பதை யமுனா ராஜேந்திரன் அவர்கள் தாம் தெரிவுபடுத்த வேண்டும். என்னளவில், நான் கண்டிருக்கும் வரையில் அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
அப்படி தைரியமுள்ளவர்கள் இருக்கலாம். நான் அதிகமாகக் கூட பயந்து போயிருக்கும் கோழையாய்க் கூட தென்படலாம். ஆனால், இணையத்தில் இப்படி ஒரு வசதி இருக்கும் போது நான் எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற நடுத்தரவர்க்கத்து சிந்தனையால் உந்தப் பட்டு, பயங்கரவாதத்துக்கு எதிராக எழுப்பும் மிகச் சிறிய குரலைக் கூட அக்கம் பக்கம் பார்த்து எழுப்பும் பயமுள்ளவாதியே நான். இதைச் சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது, மறுக்க வில்லை. சொந்த நாட்டில், சரியெனப் பட்டதை மென்மையான முறையில் நாகரிகமாய் சொல்வதற்குக் கூட அஞ்சும் ஒரு சீஜ் மெண்டாலிட்டி நிலவும் சூழலிலே வசித்து வருபவன் நான்.
என்னளவிற்குக் கூட குரலெழுப்பாமல், முணுமுணுப்புக் கூட எழுப்பாமல், ஆனால் நெஞ்சில் நஞ்சைத் தேக்கிவைத்துக் கொண்டிருக்கும் நிறையப் பேரை நான் இங்கு பார்த்திருக்கிறேன். அம்மாதிரியானவர்களைப் பார்த்து நானாவது எதோ மெல்லிய குரலை எழுப்புகிறேனே என்ற சிறு நிறைவே எனக்கு ஏற்படுகிறது.
எனது புகைப்படம் இல்லை, முகவரியைத் தெரிவிக்கவில்லை என்பதால் தரம் கெட்டு யாரையும் நான் திட்டவோ, காழ்ப்புற்று வெறுப்பை அள்ளி வீசவோ செய்ததில்லை நான். இனியும் செய்ய மாட்டேன். முழுமையாக மதச்சார்பின்மை நம்பும் நான், மதச் சார்பற்ற ஜனநாயகத்தின் சுதந்திரக் காற்றே காலத்தால் எல்லா வேற்பாடுகளையும் களைந்து நம் சமுதாயத்தில் அன்பும், பரிவும் பரிணமிக்க வைக்கும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளேன்.
இதிலெல்லாம் யமுனாராஜேந்திரனுக்கு நம்பிக்கை இல்லை என்றால், இன்னமும் நானும் ஜெயமோகனும் ஒன்றே என நெஞ்சார நம்புகிறார் என்றால், எனக்கு மடலிடலாம் தாராளமாக. அவர் கேட்கும் எல்லா விவரங்களையும் அவரிடமே அளிக்க நான் தயாராகவே உள்ளேன். ஆனால், இம்மாதிரியான வாதங்களைக் கிளரி, விவாதங்களை நிறுத்தும் பாசிசச் சிந்தனைக்கு அவர் பலியாகிவிடக் கூடாது என்பதே எனது வேண்டுகோள்.
- நேசகுமார் -
http://islaam.blogdrive.com
http://islaamicinfo.blogspot.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எதிர்வினை 4: பெயர்கள், புனை பெயர்கள், இணையம்! - ரவி ஸ்ரீநிவாஸ் -
ஒரு முறை தான் எழுதிய கடிதம் தன் இயற்பெயரான ராஜ முருகபூபதி என்ற பெயரில் திண்னையில் வெளிவந்துவிட்டது என்று திண்ணைக்கு சூர்யா எழுதியிருப்பதாக நினைவு.2003 ஆண்டு வெளியான கடிதம் அது. ஜெயமோகன் விவேகன் என்ற பெயரில் திண்ணையில் ஒரு தொடர் எழுதத்துவங்கி அது பாதியில் நின்றுவிட்டது.அதை எழுதியது அவர்தான் ஒரு வாசகர் கடிதம் மூலமே அறிய நேர்ந்தது.இதை நினைவிலிருந்து குறிப்பிடுகிறேன். ஒருவர் எத்தனை புனைபெயரில் வேண்டுமானாலும் எழுதலாம். அதற்கான பல நியாயமான காரணங்கள் இருக்கலாம். அதே சமயம் ஒரு கட்டத்தில் புனை பெயரில் எழுதுவது யார் என்ற கேள்வி எழுவதும் வியப்பளிக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஒருவர் நிழல் நடவடிக்கைகளுக்கும் இணையத்தினை பயன்படுத்தலாம். தங்கள் உண்மையான பெயரில் பத்திரிகை நடத்தி அதில் அரசை, நிர்வாகத்தை விமர்சிக்கும் தொழிற்சங்க தோழர்களை நானறிவேன். அவர்கள் தங்கள் மேலதிகாரிகளுக்கு ஜால்ரா போட்டு எழுதமாட்டார்கள். நிழல் நடவடிக்கையல்ல தொழிற்சங்க இயக்கம் என்பது. அதே சமயம் ஒருவர் வெளியில் இடதுசாரி அல்லது இடதுசாரிகளின் நண்பர் போலவும், இணையத்தில் ஹிந்த்துவ ஆதரவாளர் போலவும் காட்டிக் கொள்ள புனைபெயர்களை பயன்படுத்த முடியும். ஒருவரை நேரடியாகக் திட்டாமல் இன்னொருவர் மூலம் அவர் புனைபெயரைப் பயன்படுத்தி திட்ட முடியும். அல்லது அதை வெளியிட்டு அது என் கருத்தல்ல என்று கூறிவிட முடியும்.
திண்ணையில் நான் ஜெயமோகனை விமர்சித்து எழுதும் போது என்னை விமர்சித்து எனக்கு மின்னஞ்சல்கள் வரும்.கிட்டதட்ட ஒரே கருத்து, பல்வேறு வாக்கியங்களில். அதை எழுதியிருப்பது ஒருவர்தான் என்பதை எளிதாக ஊகிக்க முடியும்.தெரிந்தும் நான் பதில் போடுவதுண்டு.பின்னர் அவை நின்று விட்டன. நான் பதிலில் உங்கள் கருத்தை திண்ணையில் எழுதுங்கள் அங்கு பதில் தருகிறேன் என்று குறிப்பிடுவேன்.அந்த நபர்களின் பெயரில் திண்ணையில் கடிதங்கள் எதுவும் வரவில்லை. வெங்கட் சாமிநாதன் தன் கட்டுரை ஒன்றில் 1970 களில் நடந்த இலக்கிய சர்ச்சைகளின் போது போலிப் பெயர்கள், முகவரிகளுடன் தங்களை, அதாவது வெ.சா,பிரமீள் விமர்சித்து அவர்கள் கட்டுரைகள்,கருத்துக்களை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு கடிதங்கள் வந்துள்ளன என்று எழுதியிருப்பதாக நினைவு.
இணையம் உளவு பார்க்கவும் பயன்படலாம்.போலிப் பெயர்களில் ஒருவர் கருத்துத் தெரிவித்து எதிர்வினை ஆற்றுவோர் யார் யார் எத்தகைய எதிர்வினைகள் என்பதை அறிவதற்காக வேண்டுமென்றே provocative ஆக எழுதலாம்.எதிர்வினை ஆற்றுவோர் நிஜப் பெயர்களில் எழுதும் போது அதில் ஆபத்துமிருக்கிறது. இதை தெரிந்து கொண்டு வெளிப்படையாக எழுதுவோருமிருக்கிறார்கள். ஒரு அடிப்படைவாதி கூட போலிப்பெயரில் ஒளிந்து கொண்டு தான சார்ந்துள்ள மதம் அல்லது இயக்கம் மீது கடுமையான விமர்சனம் வைத்து அதற்கு வரும் எதிர்வினைகளைக் கூட கருத்து ரீதியான எதிரிகள் யார் எனக் கண்டுகொள்ள முடியும். இப்படிப் பார்த்தால் ஒருவேளை நேசக்குமார் என்பது கூட ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியின் புனைபெயராக இருக்கலாம். அரசின் ஒற்றர்கள் எதிர் இயக்கங்களில் ஊடுருவி தகவல் சேகரிப்பது போல்தான் இது. இணையம் இது போல் பல சாத்தியப்பாடுகளுக்கு இடமளிக்கிறது. சில ஹிந்த்துவதளங்களில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. அப்படிப்பட்ட ஒரு தளத்தில் பல முறை என் கருத்துக்கள் நான் இட்டும் இடம் பெற்றதில்லை. இங்கு இயற்பெயரில்தான் கருத்துத் தெரிவித்திருக்கிறேன். அவர்கள் தொடர்ந்து அதை இணையத்தில் இட மறுக்கும் போது அங்கு கருத்து பதிவு செய்வதை நிறுத்தி விட்டேன். அதே சமயம் அது போன்ற தளங்களில் புனைபெயர்களில் கருத்துகள் இடம் பெறுவதுமுண்டு.
ஹிந்து யுனிட்டி இணையதளம் ஒரு பட்டியலை, நபர்கள் குறித்த தகவல்கள், புகைப்படங்களுடன் தருகிறது. இவர்கள் அவர்கள் பார்வையில் ஹிந்து விரோதிகள். இப்படி பட்டியலில் தங்கள் பெயர் இருப்பது தெரிந்தும் தொடர்ந்து ஹிந்த்துவ எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிடுபர்களும் இருக்கிறார்கள். இதையெல்லாம் தெரிந்து கொண்டே ஒருவர் இன்று செயல்பட வேண்டியிருக்கிறது. புனைபெயர்களில் வெளியாகும் கருத்துக்களுக்கு புனைபெயர்களிலேயே எல்லோரும் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும். ஒரு வேளை
அதுதான் சரியான எதிர்வினையோ.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எதிர்வினை 5 : ஸைபர் வெளியும் மனித உடல்களும்: நிழல் மிருகம் யமுனா ராஜேந்திரன்
விவாதம் தெளிவானதொரு கட்டத்தை அடைந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். இது தொடர்பாக நான் எழுதும் இறுதிக் கட்டுரை இதுதான். எனது கருதுகோளைத் தெளிவாக முன்வைத்துவிட்டு பிற வேளைகளுக்கு நகர்ந்து விடத் திட்டம். காரணம் : எனது நோக்கம் நிழல்மனிதர்கள் குறித்த ஒரு சித்திரத்தைப் பொதுமகனின் முன் வைப்பதன்றி வேறில்லை. மேலாக விவாதங்கள் என்றும் முற்றுப் பெறுவதில்லை என நம்புகிறவன் நான்.
1.முதலாவதாக இந்த விவாதம் புனைபெயர்கள் தொடர்பானது இல்லை. மனித உயிர்களின் உதிர்வு தொடர்பான மத,சாதிய,இன விவாதங்களை நிழல் பெயர்களில் மேற்கொள்கிறவர்கள் உருவாக்குகிற தீய விளைவுகள் தொடர்பானது. எனது அடையாளங்களை முன்வைத்து என்னைப் பற்றி ஓரு சித்திரத்தை அடைந்து விவாதங்களை வரையருக்கிற ஓருத்தரின் அடையாளங்கள் தெரியாமல் நான் விவாதிப்பது சாத்தியமில்லை. நான் ஒரு ஸ்டாலினிஸ்ட் என வரையறை செய்வதற்கான ஆதாரங்களை நான் முன்வைக்கும் எனது வாழ்வு கருத்துக்கள் போன்றவற்றிலிருந்து உருவாக்கும் ஒரு நிழல் மனிதன், குஜராத் கொலைகளில் சம்பந்தப்பட்டு விட்டு தமிழ் நாட்டுக்கு ஓடி வந்துவிட்ட ஒரு கொலைகாரன் என்றோ, கிறித்தவக் கன்னியாஸ்திரிகளை பாலியல் பலாத்காரப்படுத்திவிட்டு தப்பித்திரிகிற ஒரு கயவன் என்றோ, அல்லது மணிரத்தினம் தொடர்பாக காரசாரமாகக் கட்டுரைகள் எழுதிவிட்டு அவரிடமே உதவி இயக்குனராக வேசம் கட்டுகிற ஒரு போக்கிரி என்றோ தெரியாமல் எப்படி சம்பந்தப்பட்ட நபரோடு நான் விவாதிப்பது என்பதுதான் எனது கேள்வி.
இதுதனிப்பட்ட இருவர் தொடர்பான விவாதங்கள் குறித்த எனது கேள்வி. ஜங்க் மெயில் பில்ட்டரை உபயோகித்துவிட்டு ஒரு தனிநபராக புத்தகம் படிக்க அமர்ந்துவு¢டுவது ஒரு இதற்கான சாதாரணமான விடை என்பது எனக்குத் தெரியும். அமைப்பு பற்றி சூர்யா குறிப்பிடுகிறார். அமைப்பு என்றால் என்ன? இந்தியாவில் எந்த கம்யூனிச அமைப்பு ஆட்சியதிகாரத்தை வைத்து ஸ்டாலினிய வழிமுறைகளைக் கையாண்டு கொண்டு இருக்கிறது? எனது அமைப்பு என்று இப்போது ஒன்று இருக்குமானால் அது குஜராத்தில் தாய்மார்களின் கருவைக்கிழித்து வெளியிலெடுத்து நரவேட்டையாடியவர்களை விவரணப்பட இயக்குனர் போல உளவறிந்து மனித உரிமை அமைப்புக்கு தகவல் தருகிற அமைப்பாகத்தான் இருக்கும். பிஜேபிக்கார்கள் செயல்பட இன்று இந்தியாவில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்கு எதிர்விணை செய்வதுதான் இன்று ஆபத்து. பொத்தாம் பொதுவாக அமைப்பு பற்றிய பேச்சு வெற்றுப்; பிதற்றல்.
2.பிரச்சினை தனிநபர் தொடர்பானது அல்ல. ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் தொடர்பானது. ஐம்பது ஆண்டு காலம் உலகில் நடைபெற்ற பெரும்பாலுமான பெருங்கொலைகள்; மதம்,இனம் போன்றவற்றையே மையமாகக் கொண்டிருந்திருக்கிறது. இந்தியாவில் சாதியமும் இதில் சேர்ந்திருக்கிறது. இந்தியாவில் தற்போது மதமே இதனது குவி மையமாக இருக்கிறது. அரசியல் தற்போது மூன்று தளங்களில் நடக்கிறது. 1. அன்றாட அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள். 2. இலக்கியக் களத்தில் நடக்கும் அரசியல் 3. சைபர் வெளியில் நடக்கும் அரசியல். தமிழகத்தில் இலக்கியக் களத்தில் இன்று போல அரசியல் அணிகள் பிரிந்திருக்கிற காலம் முன்னெப்போதும் காணவியலாதது. பிஜேபி அரசியல் தமிழகத்தின் புதிய பரிமாணம் எனில் தமிழ் இணையத்தில் ஒரு கருத்தியல் பரப்பாக உருவாகிவரும் கலாச்சார இந்துத்துவம் இன்னொரு பரிமாணம். இந்த மூன்று நிலைகளிலும் நடக்கும் கருத்தியல் விவாதங்களில் விடுபட்ட புள்ளிகளையும், மெளன இடைவெளிகளையும் இணைப்பதுதான் எனது நோக்கம்.
3.சமகாலம் சமஇடத்தில் பற்பலர் சந்தித்து உரையாடுதென்பது ஒரு அரசியலையும் செயல்பாட்டையும் இணைக்கும் தன்மை படைத்தது. தரையிலிருந்து சைபர் வெளிக்கும் இது நகர்ந்திருக்கிறது. சியாட்டிலிலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் உலகவயமாதல் எதிர்ப்பு அரசியல்காரர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் திரள்வதற்கான வாய்ப்பையும் தகவல் பறிமாற்றத்தையும் இணையமே சாத்தியமாக்கியது.
பிற்பாடு அது ஒரு சமூக சக்தியாகவும் ஆனது. வோர்ல்ட் சோசியல் போரம் அத்தகையதுதான். இதனை வலதுசாரிகளும் இதே வகையில் பயன்படுத்த முடியும். எங்கெங்கோ இருக்கும் சூர்யா, நேசகுமார், ஜெயமோகன் பேன்றோர் சமவேளையில் சம இடத்தில் சந்திக்கிறார்கள்.
அவர்களது சார்புகள் ஒன்றாக இருக்கிறது. அவர்கள் எதிர்க்கிற விசயங்களும் ஒன்றாக இருக்கிறது. இதில் நிஜமனிதர் விட்ட மெளன இடைவெளிகளை நிழல் மனிதர்கள் முழுமைப்படுத்தி உருவாக்குவது என்பது ஒரு கருத்தியல் உருவாக்கச் செயல்பாடு. அரவிந்தன் நீ¢லகண்டனுக்கு ஜெயமோகன் திண்ணையைக் கைகாட்டி விடுகிறார். ராம கோபாலன் போல அரவிந்தன் நீலகண்டனுக்கு நெகிழ்வு காட்டக் கூடிய மனிதராக ஜெயமோகன் இருக்கிறார். நிழல் மனிதனான சூர்யா இவர்கள் அனவரும் முன்வைக்கும் விவாதங்களை மையப்படுத்தித் தொகுக்கிற மனிதனாக இருக்கிறார். இது ஒரு கருத்தியல் உருவாக்;கச் செயல்பாடு. இந்தக் கண்ணி இன்னும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்கிறார் சூர்யா. ஜெயமோகனும் அதையே தான் சொல்கிறார். இடைவெளிகளை இணைக்கும் வெளியாக இருக்கிற சைபர் வெளியில் இவர்களது செயல்பாடு உருவாக்க விரும்புவது இந்துத்துவம் அல்லாது வேறென்ன? வேசம் கட்ட வேண்டாம் வெளியே வாருங்கள் என ஏன் சொல்கிறேன் எனில், நிழல் மனிதர்களோடும் மெளனம் சாதிக்கிற மனிதர்களோடும் விவாதிப்பதை விட அரவிந்தன் நீலகண்டனோடு விவாதிப்பது ஆரோக்கியமானது என்கிற காரணத்துக்காகத்தான்.
4.சினிமாவில் சாதிக்க நினைக்கிற நிழல்மனிதராக சுர்யாவால் ஏன் வெளிப்படையாகப் புத்தகங்களைச் சுமக்க முடியாது வெளிப்படையாக எழுத முடியாது என்பதற்கான கேள்விக்கு நேரடியிலான பதிலே இல்லை. மாறாக சைபர் வெளி தரும் சுதந்திரத்தில்தான் நேசகுமார் பல விசயங்களை எழுத முடிகிறது என்கிறார். நேசகுமார் முன்வைக்கும் பல விசயங்கள் ஆங்கில மொழியில் திரும்பத் திரும்ப முன்வைக்கபட்டவைதான். அதில் கண்டுபிடிப்புகள் என ஏதும் இல்லை. நான் ஏற்கனவே சொன்னப இதனைவிடவும கடுமையான விசயங்களை அரவிந்தன் நீலகண்டன் நேரடியாகத் தான் எழுதி வருகிறார்.அரவிந்தன் நீலகண்டனை அடியொற்றி அதனை ஒரு திட்டமாகவே ஆசாரகீனன் செய்த வருகிறார். ஜெயமோகன் பொதுவாகச் சொந்தப் பெயரில் எழுதவியலாததற்கான தொழில்முறை சார் காரணங்கள சொல்கிறார். அரசுத் துறை தனியார் துறை எனக் காரணங்கள். இந்தக் காரணங்களைத் தாண்டித்தான் எல்வோரும்; எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அரசுத் துறையோ தனியார் துறையோ எதுவாயினும் முழுநேர எழுத்தாளனாக ஆசைப்பட்டுக்கொண்டு வேலை பார்க்க முடியாது. அரசியல் கருத்தியல் நெருக்கடிகள் ஆளுகிற அரசுகள் தனியார் முதலாளிகளின் சார்புகள் போன்றவற்றுக்கு ஏற்பத்தான் இருக்கும். இதனை மீறித்தான் எழுத்தாளன் செயல்பட வேண்டும். தமிழக அளவிலும் இந்திய அதிகார மட்டத்திலும் இன்று இந்துத்துவ அரசியலை எழுத அஞ்ச வேண்டியதில்லை. ஜெயமோகன் அரசு நிறுவனம் சார்ந்து கூட தனது சார்பு நிலைகளைச் சரியாகவே முன் வைத்திருக்கிறார். ஆகவே இது குறித்தெல்லாம் ஒரு பொறுப்புள்ள எழுத்தாளன் கவலைப்படக் கூடாது. திகசி பிரச்சினையில் ஜெயமோகன் சாகித்ய அகாதமி பற்றி மட்டும்; பேசவில்லை. அதன் பிரதியில் மார்கசிஸ்ட்டுகளின் இந்திய அதிகார மட்ட ஊடுறுவல், நிறுவனங்களில் அவர்களது ஊடுறுவல் பற்றியெல்லாம் அவர் எழுதியிருக்கிறார். பிஜேபி, இந்திய வரலாற்றுக் கழக மார்க்சிய வரலாற்றாசிரியர்களின் நூல்களைத் தடை செய்து, அவர்கள் கழகத்திலிருந்து வெளியேறிய காலத்தில்தான் ஜெமோ இவ்வாறு எழுதுகிறார்.
இந்துத்துவ வரலாறு எழுதுமுறையை பாடநூல்களில் பிஜேபியினர் நுழைத்த வேளையில்தான் ஒரு இலக்கிய விவகாரக் கட்டுரையில் ஜெமோ இவற்றையெல்லாம் எழுதுகிறார். அரசு அதிகாரம் பற்றிய காரணங்களெல்லாம் அறுதப் பழசு. அதைப்போலவே 9 பெயர்களில் ஜெமோ எழுதுகிறார் என அவர் மீது மட்டுமே ஏன் குற்றச்சாட்டு வருகிறது என அவர் யோசிக்கவில்லையா? அதுவும் இவ்வாறு குறிப்பிடப்படும் எழுத்தாளர்களில் பெரும்பலுமானவர்கள் இந்துத்துவச்சார்பு உள்ளவர்கள் என்கிற பொது உண்மை அவரது பார்வைக்குள் வரவில்லையா? ஜெமோ, சுபமங்களா, சொல்புதிது, திண்ணை என புனைபெயர்களின் சந்தையாக அவர் இருப்பது விசித்திர விளையாட்டு இல்லாமல் றேறென்ன? இலக்கியத்துடன் இணைந்த கருத்து விவாதம் எனும் பெயரில் ஜெமோ புரியும் அரசியல் சாகசத்திலுள்ள இடைவெளிகளை இவர்களது கட்டுரைகள் நிரப்புகிறது. சூர்யா ஜெமோவின் மெளன இடைவெளிகளை நிரப்புவது போல. மேலாக இலக்கியத்தடன் இணைந்த கருத்து விவாதத்தின் நீட்சியாக ஜெமோ சொல்லாதுவிட்ட அரசியலாக பிஜேபியின் அரசியல் இருப்பதுதான் துரதிருஷ்டம்.
5.ஸ்டாலினியம் தொடர்பான விவாதங்களில் தனது வகை மார்க்சிய சார்புக்கு இரு வகையான ஆளுமைகளை ஜெமோ அடிக்கடி வலிந்து வரவழைத்துக் கொள்கிறார். ஒருவர் கோவை ஞானி. பிறிதொருவர் சோவியத் யூனியன் உடைவு பற்றி எழுதிய காலஞ்சென்ற ரெறி சிறிவர்த்தனா. கோவை ஞானி இந்திய வாழக்கையும் மார்க்சியமும் நூலை எழுதியவர். நடைமுறை அரசியல் சார்ந்து அவர் ஏதும் காத்திரமாக எழுதியவர் அல்ல. தத்துவம் சார்ந்தே பல பிரச்சினைகளையும் பார்க்கிறவர் அவர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கண்கள் மங்கிய நிலையில் அவர் பிறரது உதவியையே தனது அறிதலுக்காக முற்றிலும் சார்ந்திருக்கிறார். அவர் மீதான அன்பும் மரியாதையும் கொண்டு எனது இந்தியப் பயணத்தின் போது பலமுறை நான் அவரைச் சந்தித்து தகவல்கள் பறிமாறியிருக்கிறேன். அவரது பத்து ஆண்டுகளுக்கும் மேலான அறிதல்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாகும். குறிப்பாக இணையத்தில் நடைபெறும் விவாதங்களை அவர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. அவர் தனது இந்திய வாழக்கையும் மார்க்சியமும் நூலில் முன்வைத்த விவாதங்கள் ஜெயமோகனுக்கு ஒரு வற்றாத சுணை. நடைமுறைக்குச் சாத்தியமில்லாததான வெறும் தத்துவ மீ¢ட்டல்கள் அவை என்பது தவிர அவற்றுக்கு இப்போது ஏதும் பெறுமதியில்லை. கிறித்தவம் போலவோ இஸ்லாம் போலவோ ஏன் இந்துத்துவம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை இறையியலைத் தரமுடியவில்லை என்பதற்கான பதில் ஞானியின் தத்துவ நீட்சியில் இல்லை. ஜெமோ ஞானியைத் துணைக்கழைப்பது அவரது கருத்தியல தந்திரோபாயமன்றி வேறில்லை. றெஜி சிறவர்த்தனா ஜெமோவினால், றெஜியின் ஆளுமைக்கு எதிரான எல்லைகளுக்காக உள்வாங்கப்பட்டவர். ரெஜி ஒரு சிங்கள தேசியவாத பெளத்தவ மதமைய திட்டத்தைக் கொண்டிருந்தவரல்லர். ஸ்டாலினியச் சித்திரவதைகள் தவிர்த்த, சிங்கள பெளத்த தேசியவாதம் தவிர்த்த, ஒரு சமுத்துவ சமதாயம் ரெஜி கனவு கண்ட சமுதாயம். ஆனால் ஜெமோவின் கனவுராஜ்ஜியம். இந்துத்தவ தரிசனம் சார்ந்த இந்திய தேசியம். றெஜியை தனது திரிபார்ந்த மார்க்சிய விரோதத்திற்கே ஜெமோ பயன்படுத்தியிருக்கிறார்.
6.ஜெமோவின் அரசியல் மீதான விமர்சனங்களை அவரது படைப்புகள் அனைத்தினதும் மீதான விமர்சனமாகத் திசை திருப்புவதை அவர் ஒரு திட்டமாகக் கொண்டிருக்கிறார். ஜெமோவுடன் மார்க்சியர்கள் விவாதத்தில் ஈடுபட்ட தருணங்கள் பெரும்பாலுமானவை அவரது அரசியல் கருத்துக்கள் தொடர்பானதாகும் மார்க்சின் சொந்த வாழ்வு குறித்து, மார்க்சியர்களின் அதிகார மட்ட ஊடுறுவல்கள் குறித்து,.ஸ்டாலினியம் குறித்து, நாவாவின் நாட்டுப்பறவியல் குறித்து அவர் பேசிய தருணங்களாகும். எந்த முக்கியமான தமிழகத்து எழுத்தையும் போலவே ஜெமோவின் நாவல்கள் சிறுகதைகள் என அனைத்தையம் தேடி வாசிக்கிற வாசகன் நான். இலக்கியத்திற்கும் அரசியலுக்கும நேரடியிலான சமன்பாடு இல்லை என்பது குறித்து அதிகம் எழுதியவர்கள் மார்க்சியர்கள்தான். ஜெமோவின் எல்லாப் படைப்புகளிலும் அவர் அரசியல் செய்கிறார் என்பதல்ல எனது வாசிப்பு. ஒரு மனிதனாக மானுட வாழ்வின பல பரிமாணங்களைப் பேசுகிற படைப்பாளி எனும் அளவில் அவரது நாவல்களிலும் சிறுகதைகளிலும் மனித மனதின் சிக்கல்கள் அறபுபதமாக வெளிப்படுவதை என்னால் பல சந்தர்ப்பங்களில் உணரமுடிந்திருக்கிறது. சமீபத்தில் சுராவின் குழந்தைகள் ஆண்கள் பெண்களையடுத்து எனது துணைவிக்கு நான் தேர்ந்து வாசிக்கக் கொடுத்த நாவல் காடு. ஆனால் அவரது அரசியல் சமூகக் கருத்துக்கள் அவரது படைப்பில் உள்ளார்ந்தும் விட்டுவிலகியும் இருக்கும் என்பதனை ஒரு இயல்பான நியதியாக அவரால் ஒப்ப இயலாது இருக்கிற அகந்தையோடும் மூடுண்ட மனதோடும் ஜெமோ இருப்பதுதான் சிக்கலான பிரச்சினையாக இருக்கிறது.
7.ஜெமோ தனது கருத்துக்களை எப்போதும் தன் பெயரில்தான் எழுதிவந்திருப்பதாகச் சொல்வது கடைந்தெடுத்த பொய். தளையசிங்கம் கருத்தரங்கு சம்பந்தமான பிரச்சினையில் ராஜநாயகம் குறித்து நாஞ்சில்நாடன் பெயரில் ஜெமோ கட்டுரையை எழதிப் பிரசுரித்தது தமிழகத்தின் பிரபலமான மாறுவேச விளையாட்டு;. அந்தக் கட்டுரையைத் தான் எழதவில்லை எனப் பொதுமேடையில் நாஞ்சில்நாடன் ஒப்புக்கொண்டதும் ஒரு பிரபலமான இலக்கிய வாக்குமூலம். தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் அனைவருக்கும் உள்நோக்கம் இருப்பதாகப் பிரமையுடன் குறிப்பிடும் ஜெமோ, தான் உள்நோக்கம் இல்லாமல்தான் பிறர் பெயரில் எழுதிப் பிரசுரித்தார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. தான் முற்போக்காளராகத் தன்னைக் காட்டிக் கொண்டதில்லை என்று அவர் சொல்வதும் ஒரு வேடிக்கை.
தொழிற்சங்க இயக்கம் பற்றி அவ்வப்போது பேவதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் தான் ஓட்டுப் போட்டதாகச் சொல்வதும், இ.எம்.எஸ்.பற்றி அவ்வப்போது குறிப்பிடுவதும், ஸ்டாலினிய விமர்சகராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்வதும், மனித உரிமை அக்கறையாளராகத் தன்னைக் காட்டிக் கொள்வதும் அவருடைய முற்போக்கு வேசம் இல்லையென எம்மை நம்பச்சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. புனைபெயர்களில் தான் நடமாடுவதும், புனைபெயர்களில் உள்ளவர்களைத் தனது கருத்துக் கடத்திகளாகப் பாவிப்பதும், பிறர் பெயரில் எழுதிப் பிரசுரிப்பதும் இலக்கியக் கலைசார்ந்த பிரச்சினை என ஜெமோ கருதுவாரானால் அது ரொம்ப ரொம்பத் துரதிருஷ்டம்.
8.பொறுப்புணர்வடனும் விவாத நாகரிகத்துடனும் பதிலளித்திருக்கும் நிழல் மனிதரான நேசகுமாருக்கு முதலில் எனது நன்றி. நிழல் மனிதர்களை ஒன்றுபடுத்தும் கருத்துரு சம்பந்தமான எனது அவதானமும், சூர்யா போன்று பிறரது அடையாளங்களை முன்னிறுத்தி, ஆனால் தன்னை மறைத்துக்கொண்டு, வைக்கும் அதிரடிப் பேத்தல்கள் தொடர்பானதே எனது கரிசனம். கருத்து விவாதங்களை முடக்குவதென்பதோ அவ்வாறான விவாதங்களை வெளியிடாதீர்கள் என வலைத்தளங்களைக் கோருவதோ அல்ல எனது நோக்கம்.
வேலை கடும்பம் ஆன்மீகம் அது தொடர்பான சுகங்கள் என்பதனை மீறாமல் கருத்து விவாதம் மேற்கொள்வதாக நேசகுமார் அப்பாவித்தனம் போல விசயங்களைக் குறிப்பிட்டாலும் கூட, அவர் எடுத்திருககும் நிலைபாடு அப்படியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது அல்ல. நாகூர் ரூமியினுடையதும் நேசகுமாரினுடையதுமான திசைகளின் நீட்சி இரு அடிப்படைவாதங்களின் நிலை நிறுத்தலுக்கும் சமரசத்துக்கும் இட்டுச்செல்லுமேயொழிய, மதநீக்கம் பெற்ற ஒரு மனிதன் வாழமுடிகிற ஒரு சமூகத்துக்கு இட்டுச்செல்லாது. மனிதர்களை மதஜீவிகளாகவே அடையாளம் காண்பதும் அதனையே மனிதர்களுக்கிடையிலான முதல் முரணாக முன்னிறுத்துவதும் ஒரு சமூகத்திட்டம். இதனைத் தான் புஸ்சும் பின்லாடனும் சாவர்க்கரும் செய்கிறார்கள்.
9.எந்த மத சமூகத்திலும் அந்தந்த மதப்பண்பாடு மற்றும் வரலாறு சார்ந்து மதநீக்க அடிப்படையில் சிந்திக்கிற பாரவையொன்று இருக்கிறது. நிறுவனங்களிலிருந்தும் மதபீடங்களிலிருந்தும் விலகிய பார்வை இது. இந்தப் பார்வையை இந்தியாவில் இந்துத்துவ இஸ்லாமிய அமைப்புகள் சாராத சிந்;தனையாளர்கள் முன் வைத்து வருகிறார்கள். இஸ்லாமிய சமூகங்களிலும் இத்தகைய சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் ரொமிலா தாப்பர், ஹிர்பான் ஹபிப், அய்ஜஸ் அஹமது, அஸ்கர்அலி என்ஜினியர் என்றால், இஸ்லாமிய நாடுகளிலும் மேற்கிலும் இவர்கள் தாரிக் அலி, சமிர் அமின், ஜியாவுதின் சர்தார், இக்பால் அஹமது என இருக்கிறார்கள். இவர்களில் எவரும் தத்தமது மதங்களைப் பாதுகாத்து நிற்க எழுதுபவர்கள் அல்ல. இவர்களில் ஜியாவுதின் சர்தார் போன்றவர்கள் நம்பிக்கை¨யாளர்கள், விஞ்ஞான சிந்தனையைப் பற்றி நிற்பவர்கள், பயங்கரவாத்திற்கு எதிரானவர்கள். இதுவன்றி கால இடப் பிரமாணத்தில் வைத்து இஸ்லாமையும் குரானையும் பிரதியையும் விளக்குகிறவர்கள் இருக்கிறார்கள். காலம் கடந்த பிரதியாக குரானைக் கருதுகிறவர்களல்ல இவர்கள். மாற்றத்திற்குரிய. அதே வேளை ஒரு வாழ்வியல் அறநெறிசார் தொகுப்பாக குரானை விளக்குகிறவர்கள் இவர்கள். இவர்கள் சஞ்சரிக்கும் தளமல்ல நேசகுமாரும் நாகூர்ரூமியம் சஞ்சரிக்கும் தளம். இணையும் தரும் பாதுகாப்பில் ஆபத்தான பிரச்சினையை எழுதுகிற நேசகுமாரும் நாகூர்ரூமியும் இருதுருவங்களில் நிழலில் கைகுலுக்கிக் கொள்கிறபோது,
இதனைப் படிக்கிற, படித்துத் தெருவில் இறங்குகிறவர்கள்தான் பிணங்களைப் புரட்டுகிற பாமரர்கள் என்பதை இவர்கள் இருவரும்; உணரவில்லையா?
10. கோவையில் மரணமுற்ற இந்துக்கள்; நேசகுமாரிடம் குறிப்பான எண்ணிக்கையாக இருக்க இஸ்லாமிய சகோதரர்கள் அருவங்களாக இருக்கிறார்கள். இந்து முஸ்லீம்களிடம் அடிப்படையான இறையியல் புரியாமையினால் அல்ல கொலை அரசியல் அரங்கேறியது. அரசியல் அதிகாரம் நோக்கிய இந்துத் துவக் கருத்தியலை முன்நிறுத்தியவர்களால் மேற்கொள்ளப்பட்ட பாப்ரிமஜீத் தகர்ப்பைத் தொடர்ந்தே ஐம்பது ஆண்டுகளின் பின் இந்து முஸ்லீம் கொலைகள் நடைமுறையாக ஆகியிருக்கிறது. சொந்த நாட்டில் முற்றுகையிடப்பட்ட மனநிலையில் தான்; வாழ்வதாக நேசகுமார் எழுதுகிறார். ஜெயேந்திரர் விவகாரததில் பதட்டப்படுகிறார். அவர் நிற்கிற இடம்தான் அவரை ஜெமோவை நோக்கி மகாவிருட்சமென பிரமிக்க வைக்கிறது. அப்படியான பிரமிப்புகள் எனக்கில்லை. அரவிந்தன் நீலகண்டன் போன்று அமைப்புசார் பாதுகாப்பில்லாமல் தனது உயிர்பயம் கருதி இணையப் பாதுகாப்பை நாடியிருப்பதாகச் சொல்கிறார் நேசகுமார். ஏன்ன துரதிருஷ்டம் பாருங்கள், கோவையிலோ குஜராத்திலோ கொலையுண்ட மனிதர்களுக்கு இப்படியான இணையப் பாதுகாப்புகள் இல்லை. ஆனால் அவர்களைச் செலுத்திய கருத்தியலுக்கான விவாதப்பொருட்களை நேசகுமார் நாகூர்ரூமி போன்ற பாதுகாப்பு வேண்டும் நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்துதான் பெற்றுக்கொண்டிருந்தார்கள். நேசகுமார் நிழலிருந்து தரும் சொந்தச் செய்திகளை நானும் அவரும் இரு தனிமனிதர்கள் எனும் அளவில் அவரது நாகரிகமான தொனி சார்ந்து நல்லெண்ணத்தின் அடிப்படையில் மட்டுமே அங்கீகரிக்க முடியும். ஆனால் சூர்யா, ஜெமோ,நேசகுமார், மற்றும் பிற இந்துத்துவச் சார்பு நிழல்மனிதர்கள் ஒரு வகையான கருத்துருவ உருவாக்கத்தைச் சைபர் வெளியில் உருவாக்குகிறார்கள் என்கிற அவதானத்தில் இந்த வெளிப்பாடு எந்தவிதமான மாற்றத்தினையும் உருவாக்கப்போவதில்லை. நிழல்மனிதர்கள் பற்றியும் மெளனங்களின் அர்த்தங்களைத் தேடுவது பற்றியுமான கட்டுரை கறுப்பு வெள்ளை போலத் தெளிவாக இருக்க வேண்டும என இவர்கள் எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? நிழல் வெளியிலிருந்து வெளியே அவர்கள் வருகிறபோது எனது கட்டுரை இவர்களுக்குத் தெளிவுபடும். அப்போது பிற பக்கப் பாதைகள் விரிவதையும் இவர்களால் காணவியலும்.
முற்றுப் பெறவியலாத எனது விவாதக்; கட்டுரையின் இறுதியாக இரண்டு விசயங்கள். இந்துத்துவம் உயிர்களை வேட்டையாடித் திரியும் நிழல் மிருகமாக ஸசபர் ஸ்பேசில் தன்னை ஸ்தாபித்துக் கொண்டுவிட்டது என்பது எனது ஒரு அவதானம். தமிழக அரசியலையும் மதவிவாதங்களையும் அறியாத சில அப்பாவி ஈழ இலக்கியவாதிகள் ( ஈழத்தில் ஏற்பட்ட விசேசமான இஸ்லாமியத் தமிழர்; தொடர்பான
அனர்த்தம் இதற்கொரு காரணம்) அதனது கருத்;துருவ பாதிப்புக்கு ஆட்பட்டு வருகிறார்கள் என்பது எனது இன்னொரு அவதானம். மாறாக இந்துத்துவம் ஒரு காலாச்சார சக்தியாகத் திரண்டுவிட்டது, கணிசமான எழுத்தாளர்கள் அதன் பின்பு திரண்டு வருகிறார்கள் என்பதான ஒரு சமூகவியல் உண்மையாகவும் இது இருக்கலாம். நிழல் மிருகத்தின் தொகை அதிகமாகும் போது அது நூறு றூறு கால்கள் கொண்டு தெருவில் இறங்கி பிணவெளியில் பசியாறும் என நினைக்கிறபோது மனசுக்குள் பதற்றமாக இருக்கிறது. இதிலிருந்து மீள ஜங்க் மெயில் பில்ட்டரைத் தேர்வதற்கும் மேலான பிறிதொன்றையே மனித நேசிப்பவனாக என்னால் தேற முடியும் என்று தோன்றுகிறது. அந்தப் பிறிதொன்று என்னவாக இனி இருக்கப் போகின்றது என்பதுதான் இப்போது எனக்கு முன் உள்ள கேள்வி. முற்றுப்பெறாத விவாத்தினை விட்டு தற்போது விலகுகிறேன். எங்கேனும் நண்பர்களாய் அல்லது எதிரிகளாய்ச் சந்திப்போம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எதிர்வினை 6: ஸைபர் வெளியும் மனித உடல்களும்! அவதூறு-- வாழையடி வாழை! - ஜெயமோகன்
நாஞ்சில்நாடன் பற்றிய யமுனா ராஜேந்திரனின் கூற்று ஒரு அவதூறு வெட்டவெளிச்சமாக்கப்படும்போது இன்னொன்றுக்குத் தாவும் ஸ்டாலினிஸ்டின் கீழ்த்தர உத்தி மட்டுமே. அதேகட்டுரை அப்படியே காலச்சுவடில் கைப்பிரதியாக நாஞ்சிலநாடனால் அனுப்பபட்டு பிரசுரமாகியுள்ளது. அதில் உள்ள எட்டு சொற்கள் [பொருள் மாற்றம் இல்லாமல்] திண்ணை கட்டுரையில் மாறியுள்ளன என்பதே காலச்சுவடு கண்ணன் முன்வைத்த குற்றச்சாட்டு. அதை டைப் செய்து அனுப்பியது நான் என்பதை அவரது வாசகர்களுக்குச் சுட்டிக்காட்டும் உத்தியாக அதை மேற்கொண்டார். அதை நான் மறுக்கவுமில்லை. நாஞ்சில்நாடனின் மூலம் என்னிடம் உள்ளது. இம்மாதிரி சில்லறை சர்ச்சைகளுக்குள் புக நேரமில்லை என நாஞ்சில்நாடன் ஒதுங்கிக் கொண்டார். நாஞ்சில்நாடன் என்னைவிடக் காலச்சுவடுக்கு நெருக்கமானவர். அவரது பிரசுரகர்த்தர்களும் கூட . மேலும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்களைப் படிப்பவர்களுக்கு அவரது நடை தெரியாமலிருக்காது.
அவதூறை மறுத்தால் புதிய அவதூறே வரும் என்பது என் அனுபவம்.ஆனாலும் வேறு வழி இல்லை. நான் புனைபெயர்களை பயன்படுத்தும்போது அக்கட்டுரைகள் வெறும் இலக்கியத் தகவல் கட்டுரைகளாகவே இருக்கும். அதே இதழில் என்னுடைய வேறு கட்டுரையும் இருக்கும். ஒருபோதும் என் கருத்துக்களை நான் வேறு ஒருவராக நின்று சொன்னது இல்லை. என் வாசகர்களுக்கும் நான் எது எழுதினாலும் உடனே அடையாளம் தெரியும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
[பதிவுகள் விவாதத்தளத்திலிருந்து; http://www.geotamil.com/forum/]