வாழ்வினை ஒவ்வொரு நாளும் தென்புடன், நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதற்குக் கடந்தவற்றை நினைத்து வாடக் கூடாது. ' இன்று புதிதாய்ப்பிறந்தோம்' என்று புத்துணர்ச்சியுடன் மகாகவி பாரதியின் கூற்றுக்கேற்ப வாழ வேண்டும். அருமையான , ஆரோக்கியமான ஆலோசனை. பாரதியின் அந்தத் துடிப்பு, கருத்தும் மிக்க ஒரு திரைப்படப்பாடல்தான் 'புதிய வானம்! புதிய பூமி' பாடலும். கவிஞர் வாலியின் கருத்தாழம் மிக்க, ஆரோக்கிய உணர்வினையேற்படுத்தும் சக்தி மிக்க பாடல். 'உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே', 'புதிய வானம்! புதிய பூமி! எங்கும் பனி மழை பொழிகிறது! நான் வருகையிலே என்னை வரவேற்கவண்ணப்பூ மழை பொழிகிறது!' என்று எண்ணியவாறே ஒரு நாளை எதிர்நோக்குங்கள். எவ்வளவு புத்துணர்ச்சி மிக்க அணுகுதல் அது. அதுதான் இந்தப்பாடலின் சிறப்பு, அதுவே என்னை இப்பாடல் மிகவும் கவர்ந்ததற்குக் காரணமும் கூட.
இது தவிர இப்பாடலிலுள்ள கருத்துகளும் முக்கியமானவை. கவிஞர் வாலியின் சிறப்புமிகு வரிகள் அவை. 'அன்று இமயத்தில் சேரன் கொடி பறந்த அந்தக் காலம் தெரிகிறது! அந்தக் காலம் தெரிகிறது!' என்று பாடும் கவிஞர் வாலியின் இவ்வரிகளில் ஒரு விடயத்தையும் சிறப்பாகப் புகுத்தியுள்ளார். எம்ஜிஆரை அவரது எதிரிகள் மலையாளிகள் என்று கூறுவதுண்டு. ஆனால் அவர் மலையாளிகளே சேரர்கள். சேரர்கள் பண்டைத்தமிழர்கள். எம்ஜிஆரும் ஒரு சேரரே. இதனை அடிக்கருத்தாக வைத்துப் பண்டைத்தமிழரின் பெருமையை நினைவு கூரும் கவிஞர் அதற்காகத் தேசிய வெறிகொள்ளவில்லையென்பதை அடுத்து வரும் வரிகள் வெளிப்படுத்துகின்றன.
'எந்த நாடு என்ற கேள்வியில்லை! என்ன ஜாதி என்ற பேதமில்லை! மனிதர்கள் அன்பின் வழி தேடி இங்கு இயற்கையை வணங்குகிறார்! மலை உயர்ந்தது போல் மனம் உயர்ந்ததென்று இவர் வாழ்வில் விளக்குகிறார்! இவர் வாழ்வில் விளக்குகிறார்!' என்று 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' பாடிய சங்கத்தமிழ்க் கவிஞன் வழியில் உலகை நோக்குகின்றார். இந்நோக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது; பிடித்திருக்கின்றது. தேசிய வெறியில் மானுட நேயத்தை மறக்காத கவித்துவ வரிகளிவை. தேசியப்பெருமை ஒருபோதுமே ஏனைய தேசியங்களை நிராகரிப்பதாகவோ, எதிரிகளாகப்பார்ப்பதாகவோ இருக்கக் கூடாது. தேசியப்பெருமைகள் எவ்வளவு முக்கியம் அவ்வளவு முக்கியம் தேசிய வெறியற்றுத் தேசியப்பெருமைகளிருப்பதும். அதனையே இப்பாடலின் வரிகள் புலப்படுத்துகின்றன. சரியான நோக்கு.
கூடவே எம்ஜிஆர் சார்ந்திருந்த தி.மு.க கட்சியின் சின்னமும் உதயசூரியன். அதனையும் வலிந்து திணிக்காமல் காட்சிக்கேற்ப இயல்பாகப் புகுதியுள்ளார் கவிஞர்.
இவ்விதமான ஆரோக்கிய சிந்தனைகளை ஏற்படுத்தும் பாடல்களை உள்ளடக்கியதால்தான் எம்ஜிஆர் படப்பாடல்கள் பலருக்கு வாழ்வின் வழிகாட்டிகளாக விளங்குகின்றன. அவர் நினைத்ததால்தான் இத்தகைய கருத்துகளை உள்ளடக்கிய பாடல்களை அவரது படங்களில் கவிஞர்கள் எழுதினார்கள் .அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.
https://www.youtube.com/watch?v=tY7wmv-UDGQ
பாடல் முழுமையாக:
புதிய வானம்!
புதிய பூமி!
எங்கும் பனி மழை பொழிகிறது!
நான் வருகையிலே
என்னை வரவேற்க
வண்ணப்பூ மழை பொழிகிறது!
புதிய வானம்...
உதிய சூரியனின்
பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட
வேளையிலே
இமயத்தில் இருக்கும்
குளிர் காற்று
இன்று இதயத்தைத் தொடுகிறது!
அன்று இமயத்தில் சேரன்
கொடி பறந்த
அந்தக் காலம் தெரிகிறது!
அந்தக் காலம் தெரிகிறது!
புதிய வானம்...
பிள்ளைக் கூட்டங்களைப்
பார்க்கையிலே
பிஞ்சு மொழிகளைக்
கேட்கையிலே
நல்லவர் எல்லாம்
நலம் பெறுவார் என்று
நம்பிக்கை பிறக்கிறது!
இவர் வர வேண்டும்
புகழ் பெற வேண்டும்
என்று ஆசை துடிக்கிறது!
என்று ஆசை துடிக்கிறது!
புதிய வானம்...
எந்த நாடு என்ற கேள்வியில்லை!
என்ன ஜாதி என்ற பேதமில்லை!
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை வணங்குகிறார்!
மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்!
இவர் வாழ்வில் விளக்குகிறார்!
புதிய வானம்...