அன்றிலிருந்து இன்று வரை இசையென்னும் தண்ணொளியை இசை மழையாகப் பொழிந்துக்கொண்டிருந்த இளைய நிலா தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. பாட்டு, நடிப்பு என்று தன் பங்களிப்பைக் கலையுலகுக்கு நல்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். அந்தபுன்னகை தவழும் முகமும், கேட்பவர் இதயங்களை வருடிச் செல்லும் குரலும் மீண்டும் மீண்டும் நினைவிலாடுகின்றன. கூடவே அந்தக் காணொளியும் நினைவிலாடுகின்றது. மருத்துவ நிலையத்துக்குத் தன்னைத் தனிமைப்படுத்தச் செல்லும்போது, வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்தாமல் , மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்பாமல் செல்வதாகக் கூறிய அந்தக் காணொளியும் நெஞ்சில் துயரத்தை ஏற்படுத்துகிறது.
யாழ்ப்பாணத்தில் நான் பார்த்த ஒரேயொரு தெலுங்குத் திரைப்படம் சங்கராபரணம். யாழ் ஶ்ரீதர் திரையரங்கில் பெரும் வரவேற்புடன் ஓடிய திரைப்படம். அத்திரைப்படத்தில் பாடிய பாடல்களுக்காகப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த பாடகருக்கான தேசிய விருதினை முதன் முறையாகப் பெற்றாரென்பதும் குறிப்பிடத்தக்கது.
மானுட வாழ்க்கையில் பிறப்பும், இறப்பும் தவிர்க்க முடியாதவை. அதுபோல்தான் இன்பமும், துன்பமும். மானுடர்களாகிய நாம் இவற்றுக்கு விதிவிலக்கானவர்கள் அல்லர் என்று சமாதானம் கூறிக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. 'ஆயிரமும் நிலவே' வாவிலிருந்து இன்று வரை இளைய நிலாவாகப் பரிணமித்தவர் எஸ்.பி.பி அவர்கள். அவர்கள் இனி என்றுமே தன் பாடல்களின் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்பார். அவர் இருந்தபோதும் அவர் குரலினூடுதான் அவரை இரசித்தோம். இனியும் அவர் குரலினூடு இரசித்துக்கொண்டிருப்போம்.
அவர் நினைவாக இளைய நிலாவைப் பாடும் இளைய நிலாவின் நிகழ்ச்சியொன்றினை உள்ளடக்கிய இக்காணொளியினைப் பகிர்ந்துகொள்கின்றேன்: https://www.youtube.com/watch?v=-lbTHGNqmx8
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.