இதன் சிங்கள மூலத்தை கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்த்ததில் அதன் கூறு பொருளை அறிய முடிந்தது. கூகுள் மொழிபெயர்ப்பு முற்றும் முழுதாகச் சரியாகவிருப்பதில்லை. இருந்தாலும் பாடல் கூறும் பொருளை அறிவதற்கு உதவுகின்றது. அதன் மூலம் இப்பாடலானது இனிமையான கடந்த காலக் காதல் நினைவுகளை இரை மீட்டுவதை அறிய முடிகின்றது. இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். இதயத்தை வருடிச்செல்லும் இசையும், குரலும் எம்மை மெய்ம்மறக்க வைப்பவையென்பதை உணர்வீர்கள்.
இப்பாடல் டி.எம்.ஜயரத்னவின் சிறந்த பாடல்களிலொன்று. இதற்கான வரிகளை எழுதியவர் இவரது மனைவி : மாலினி ஜயரத்ன (Malini Jayaratne). இசையமைப்பு: ரோகனா வீரசிங்க (Rohana Weerasinghe)
https://www.youtube.com/watch?v=uM2KYmdakeo
தென்னக்கோன் முதியான்செலாகே ஜயரத்ன (Tennakoon Mudiyanselage Jayaratne) டி.எம்.ஜயரத்ன (T.M. Jayaratne) என்று அழைப்படும் சிறந்த சிங்களப்பாடகர்களிலொருவர். இவர நான்கு தடவைகள், 1978, 1979, 1980 & 1987 ஆகிய வருடங்களுக்கான, ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். குருணாகல நகரிலுள்ள மலியதேவா கல்லூரியில் கல்வி கற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நாட்டுப்புற ஆய்வுப்பிரிவினால் பாடகராக உருமாறியவரிவர். அங்கு பணியாற்றிய சி.ஜே.எஸ் குலதிலக இவரைப் பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்படி வேண்டியதையடுத்துப் பல அவ்வகைப்பாடல்களைப் பாடியுள்ளார்.
இவரது முதற்பாடலான 'கானா தெல் சதும்" (Gana Thel Sadun") 1970இல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பின்னணிப்பாடகராக இவர் பாடிய 'லாகிரு தசாக்' (Lahiru Dahasak) பாடிய முதற்பாடல் சுனில் ஆரியரட்ன (Sunil Ariyarathne) எழுதி, பிரேம்சிறி கேமதாசா ( Premasiri Khemadasa) இசையமைத்ததாகும். 1978இல் இவர் தனது முதலாவது ஆல்பமான 'தரங்க பகுதி 01' இனை (Tharanga Volume - 01) வெளியிட்டார். தர்மசிறி பண்டாரநாயக்கவின் 'கன்ஷா விலாக்' , தர்மசேன பதிராஜாவின் 'பம்பரு அவித்' ஆகிய திரைப்படங்களுட்படப் பல சிங்களத்திரைப்படங்களுக்கு இவர் பின்னணிப் பாடகராகப் பணியாற்றியுள்ளார். மேற்படி இரு சிங்களத் திரைப்படங்களும் மிகச்சிறந்த சிங்களத் திரைப்படங்களாகக் கருதப்படுபவையென்பதும் குறிப்பிடத்தக்கது.
தர்மசேனா பதிராஜா எழுதி, பிறேமசிறி ஹேமதாசாவின் இசையமைப்பில் வெளியான "Hemin Sare Piya Vida" என்னும் பாடலை இவர் பெண் பாடகரான சுனிலா அபயசேகராவுடன் (Sunila Abeysekera) இணைந்து பாடியுள்ளார். 'கனஷா விலக்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் மிகவும் புகழ்பெற்ற சிங்களப் பாடல்களீலொன்று. 'நீலா விக்ரமசிங்க'வுடன் (Neela Wickramasinghe ) இவர் இணைந்து பாடிய பல பாடல்கள் புகழ்பெற்றவையென்பதும் குறிப்பிடத்தக்கது.
மாலினி ஜயரத்னவை மணம் புரிந்த இவருக்கு இரு குழந்தைகள். அவர்களில் இவரது மகனான இசுரு ஜயரத்ன'வும் ( Isuru jayarathne ) பாடகர் என்பதும் நினைவு கூரத்தக்கது. (* இக்குறிப்புகளை இவரைப்பற்றிய விக்கிபீடியா ஆங்கிலப்பக்கத்தை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டவை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.