தினகரன் வாரமஞ்சரி யூன் 6, 20 : தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு கூழாங்கற்களும் அவர் கைகளில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாகும் - பி. பொன்னுத்துரை -
“இலங்கையின் தமிழ் நாடக உலகில் மறக்கமுடியாத ஒரு பேசும் பொருளாக மறைந்த லடீஸ் வீரமணி திகழ்கிறார். அவரின் படைப்புகளையும் ஆளுமைகளையும் முறையாக ஆய்வு ரீதியாகவும் பதிவு செய்தால் தமிழ் நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய வீரியமிக்க பணி வெளிப்படும். அவர் தமிழ் நாடக மேடைக்கு அளித்த பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருக்கும் அந்தனி ஜீவா சுறுசுறுப்பானவர் காத்திரமான தகவல்களை தேடி அவற்றை மக்களிடையே வெளிக்கொணர்வதில் மிகவும் சமர்த்தர். சில நேரங்களில் அவற்றை ஆத்திரமாகவும் வெளிப்படுத்த அஞ்சாதவர்”.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வாராந்தம் புதன்கிழமைகளில் நடத்தும் அறிவோர் ஒன்றுகூடலில் ‘தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் அந்தனிஜீவா உரையாற்றிய கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசும் போதே இவ்வாறு கூறினார். கடந்த மே மாதம் 26ம் திகதி இந் நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றவர்கள் தமிழ் நாடகம் பற்றிய முழுக்கவனம் செலுத்தியதுடன் வந்தாறுமுல்லை செல்லையா போன்ற நாட்டுக்கூத்து கலைஞர்களையும் அவர்களின் கூத்துக்களையும் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வந்து அவற்றை மேடை ஏற்றி அவர்களின் திறமைகளை வெளிகொணந்தவர். பின்னர் வந்த பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்கள் அவரின் செயல்பாடு களை பின் பற்றினாரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று தனது உரையில் மேலும் தெரிவித்தார் சபாஜெயராஜா. அந்தனிஜீவா உரையாற்றுகையில் தலைநகரில் தமிழ் நாடக மேடையில் விஸ்வரூபதரிசனம் தந்தவர் நடிகர் லடீஸ் வீரமணி என்றார்.
“தலைநகரில் தமிழ் நாடக வரலாறு தமிழ் நாடக மேடையின் முன்னோடி யும் முதல்வருமான இராஜேந்திரம் மாஸ்டர் அவர்களிடமிருந்தே தொடங்குகிறது. இந்தியாவில் தூத்துகுடியிலிருந்து வந்து கொழும்பு மத்தி ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் குடியேறிய கத்தோலிக்க குடும்பத்தில் கலையார்வமிக்க இளைஞர் ஒருவருக்கு இசைக்கருவிகளை வாசிப்பதிலும், கத்தோலிக்கக் கூத்துக்களிலும் ஈடுபாடு இருந்தது. ஈழத்து தமிழ் நாடக வரலாறு கலையரசு சொர்ணலிங்கத்துடன் தொடங்குவதைப் போல் கொழும்பு தமிழ் நாடகமேடையின் வரலாறு இராஜேந்திரம் மாஸ்டர் என்ற கலையார்வமிக்க இளைஞனுடனே தொடங்குகிறது. டவர் ஹோல் நாடக அரங்கின் முன்னோடிகளான ஜோன் டி சில்வா, டொன் பாஸ்ரியான், சார்ள்டயஸ் ஆகியோரின் நாடகங்களும் கொழும்பில் வாழ்ந்த இராஜேந்திரன் மாஸ்டர் என்ற கலைஞரை ஊக்குவித்தன.
ஜோன் டி சில்வா என்ற கலைஞரு டன் தொடர்பு கொண்டிருந்த இராஜேந் திரம் மாஸ்டர், அவரோடிருந்த டபிள்யூ. சதாசிவத்தின் தூண்டுதலால், ஜோன் டி சில்வா அவரது மகன் பீட்டர் சில்வா ஆகியோரின் நாடக மேடை ஏற்றத் திற்குத் திரைக்குப் பின்னால் இருந்து பல பணிகளில் ஒத்துழைப்பு வழங்கி யுள்ளார். இதனால் நாடகங்களை அனுபவ ரீதியாக கற்று அறிந்து கொண்டவர். மனோ ரஞ்சித கான சபா என்ற அமைப்பை உருவாக்கிய இராஜேந்திரன் மாஸ்டர், அதனை ஒரு குருகுலம் போன்று மிகுந்த கட்டுக்கோப்பாக இசை, நடனம், நாடகம் போன்ற கலைத்துறைப் பயிற்சிகளை வழங்கும் நிறுவனமாகச் செயற்படுத்தினார். இந்த சபாவில் கொழும்பு மத்தி என்றும் கொழும்பின் ஏனைய பகுதியிலும் வாழ்ந்த தமிழ் பேசும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்று பேசும் மொழியால் ஒன்றிணைந்து எவ்வித வேறுபாடுகளுமின்றி கலைகளைப் பயில்வதில் ஆர்வம் காட்டினார்கள். இந்த குருகுலத்தின் மூலம் உருவான வர் நடிகவேள் லடீஸ் வீரமணி.
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பிரதேசத் தில் இயங்கிய ‘மனோரஞ்சித கான சபா’விலிருந்து பல கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்கள். அவர்களில் பலர் அன்றிலிருந்து அரை நூற்றாண்டு காலம், தலைநகரில் தமிழ் நாடக மேடையில் தங்களது சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். இவர்களில் ஒரு தலைமுறையின் முன்னோடியாக நடிகவேள் லடீஸ் வீரமணியை கொள்ளலாம்.
அரைநூற்றாண்டு காலம் தமிழ் நாடக மேடையின் ஆற்றல் மிகுந்த கலைஞராக தனது ஆளுமையை நிலை நாட்டியுள்ளார். 1945ல் மல்லிகா என்ற நாடகத்தின் மூலம் தனது நாடகவுலக பிரவேசத்தை மேற்கொண்ட நடிகவேல் லடீஸ் வீரமணி 1995 மே மாதம் 05ந் திகதி அமரராகும் வரை சுமார் அரை நூற்றாண்டு காலம் நாடக உலகில் பங்களிப்பை செய்துள்ளார்.
என்னுடைய மிக இளவயது மாணவர் பருவத்திலிருந்து அவரின் ஆற்றலை கவனித்து வந்துள்ளேன். எதையுமே கூர்மையாக அவதானிக்கும் ஆற்றல் கொண்டவர் நடிகவேள் லடீஸ். ஒரு சிற்பி மண்ணை பிசைந்து சிற்பங்களை வடிப்பது போல் ஒன்றுமே தெரியாதவர்களை தனது பயிற்சியின் மூலம் சிறந்த நடிகராக உருவாக்கி விடுவார். அவரது நாடக பயிற்சிகளை நேரிடையாக பார்த்தவன் என்ற ரீதியில் இதை உறுதியாகக் கூறமுடியும்.
அவர் வாழ்ந்த காலத்தில் அவர் மூன்றே பேருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருந்தார் லடீஸ் வீரமணி. இந்த மாபெரும் ஆற்றல்மிக்க கலைஞர் உருவாக இந்த மூவரும் காரணகர்த்தாக்களாக இருந்தார்கள் என்ற உண்மை இன்றிருக்கும் பலருக்கு தெரியாது. அதற்கு சாட்சியாக உள்ளவர் கலைஞர் கலைச்செல்வன் ஒருவரே!
அந்த மூன்று பேரில் முதலாமவர் இந்த நாட்டின் தமிழக பகுத்தறிவு தந்தை பெரியாரின் சுயமரியாதை கருத்துக்களை நாடெங்கும் பரப்பிய இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய செயற்பாட்டாளர். ஆரம்ப காலங்களில் லடீஸ் வீரமணியின் நாடகங்களை தலைநகர் கொழும்பிலும் மலை நாட்டிலும் அரங்கேற்ற துணை நின்றவர். நாவலர் ஏ. இளஞ்செழியனே அவர்.கொழும்பு தமிழ் நாடக வளர்ச்சிக்கு ‘பகுத்தறிவுத் தந்தை’ ஈ.வே. ரா. ஒரு வகையில் உந்து சக்தியாக இருந்துள்ளார். 1932 ஆம் ஆண்டு தனது ரஷ்யப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் இலங்கையில் அவருக்கு இந்திய வம்சாவளியினர். கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த மகளிர் நட்புறவுச் சங்க மண்டபத்தில் ஒரு மகத்தான வரவேற்பினை அளித்தனர். அந்த கூட்டத்தில் பெரியார் சுயமரியாதை பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்தார். அவர் நாடு திரும்பினாலும் அவர் விதைத்த சுயமரியாதை கருத்துக்கள், கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் சிலர் இயக்கமாக அவற்றை முன்னெடுத்தனர். இவர்களில் ஒருவர் இளஞ்செழியன். இவர் இலங்கை திராவிடர் கழகம் என்ற அமைப்பில் செயல்பட்டு சுயமரியாதைக் கருத்துக்களை முன்னெடுத்து செல்லும் ஊடகமாக நாடகத்தை பயன்படுத்தினார்.
1954ம் ஆண்டு இங்கு வருகை தந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் - மதுரம் குழுவினரை கொழும்பில் நாடக துறையில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை நாவலர் ஏ. இளஞ்செழியன் தலைமையில் சந்தித்து உரையாற்றியுள்ளனர். அந்த குழுவினருடன் சென்ற நடிகவேள் லடீஸ் வீரமணி, நடிகவேல் எம். ஆர். ராதாவின் ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தில் சிதம்பரம் ஜெயராமனின் பாடலைப் பாடி வசனத்தையும் பேசி கலைவாணரின் பாராட்டைப் பெற்றாராம்.
- லடீஸ் வீரமணி, அறிஞர் அ.ந.கந்தசாமி, காவலூர் ராஜதுரை -
ஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாய நலன் கருதி நாடகங்களை மேடையேற்ற வேண்டும் என அறிவுறுத்தியதுடன் லடீஸ் வீரமணியின் நடிப்புக்காக ‘நடிகவேல்’ என்ற பட்டத்தை வழங்கினார். என். எஸ். கே. ஆரம்ப காலங்களில் இவரை நெறிப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் இளஞ்செழியன். மற்றவர் முற்போக்கு இலக்கிய முன்னோடியுமான அ. ந. கந்தசாமி. அவரை அறிமுகப்படுத்தியவர் நாவலர் ஏ. இளஞ்செழியனாவார். அப்போது கொழும்பு முதலாம் குறுக்குத் தெரு இல. 66ல் இளஞ்செழியனின் அலுவலகம் அமைந்திருந்தது. அங்கு பல தரப்பட்டவர்கள் வருகை தருவார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் அ. ந. கந்தசாமி. இடதுசாரி இயக்கத்தை சார்ந்த அ. ந. க. மீது நாவலர் இளஞ்செழியனுக்கு பெரிதும் மரியாதை. இருவரும் அரசியல், அன்றாட பிரச்சினை பற்றி கருத்து பறிமாறிக் கொள்வார்கள். இளஞ் செழியன் அ. ந. க. விற்கு லடீஸ் வீரமணியை அறிமுகப்படுத்தினார். நடிகவேல் லடீஸ் வீரமணியின் ஆற்றலை அறிந்து கொண்ட அ. ந. கந்தசாமி ஷேக்ஸ்பியர், இப்சன், பெக்கட் போன்ற ஆங்கில நாடகமேதைகளை பற்றி நடிகவேலுக்கு எடுத்துரைத்தார். இந்த இடத்தில் ஒரு உண்மை சம்பவத்தை சொல்ல வேண்டும். அ.ந. கந்தசாமி எழுதிய ‘மத மாற்றம்’ என்ற நாடகம் தமிழ் நாடக மேடையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதனை நெறியாள்கை செய்தவர் பேராசிரியர் கா. சிவதம்பியாவார். அந்த நாடகத்தின் நெறியாள்கை அ. ந. க. விற்கு திருப்தியை தரவில்லை. எனவே, நடிகவேல் லடீஸ் வீரமணியிடம் நீங்கள் நெறியாள்கை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் அந்த நாகடத்தில் லடீஸ் நடிக்க கூடாது என்ற வேண்டுகோளுடன் ஒப்படைத்தார். ‘மதமாற்றத்தை’ சிறப்பாக நெறியாள்கை செய்தார் லடீஸ் வீரமணி. அ. ந. கந்தசாமி மகாகவியிடம் லடீஸை அறிமுகப்படுத்தியதன் காரணமாக அவருக்காகவே கண்மணியாள்காதை என்ற வில்லுப்பாட்டை மகாகவி எழுதினார்.
அ. ந. கந்தசாமியுடன் உரையாடியதன் பின்னர் கண்மணியாள் காதை எழுத அவற்றை உடனே லடீஸ் வீரமணி பாடிக் காட்டுவார் அந்த சாதனையை நேரிடையாகவே கண்டவன் நான். 83 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின் தமிழகத்திற்கு சென்ற இனுவைமாறன் என்றழைக்கப்பட்ட இரத்தினசபாபதி தமிழகத்திலிருந்த நடிகவேள் லடீஸ் வீரமணியை ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்து சென்று ‘கண்மணியாள்காதை’ என்ற வில்லிசை நிகழ்ச்சியை நடத்தினார். அ. ந. கந்தசாமியுடனான உறவு அவரின் மறைவு வரை தொடர்ந்தது.
ஈழத்து தமிழ் நாடக மேடையில் முன்னோடிகளில் ஒருவராக கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி வி. வி. வைரமுத்து, நாட்டுகூத்து கலைஞர் பூத்தான் ஜோசப் ஆகியோர் வரிசையில் வைத்து போற்றப்பட வேண்டியவர் லடீஸ் வீரமணி என்று தனது உரையினை முடித்தார் அந்தனிஜீவா.
நன்றி: தினகரன் வாரமஞ்சரி http://archive.is/mpAkY#selection-111.0-111.3
நாடகக் கலைஞன் லடிஸ் வீரமணி - கே.எஸ்.பாலச்சந்திரன் -
கொழும்பில் 60களில் நடைபெற்ற நிழல் நாடகவிழா என்னைப்போன்ற நாடக அபிமானிகளுக்கு நல்விருந்தாக அமைந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தினமும் ஒன்றாக புகழ்பெற்ற இயக்குனர்களின் நாடகங்கள், சிறந்த கலைஞர்களின் பங்களிப்புடன் மேடையேறின. அவற்றில்; ஒன்றுதான் நடிகவேள் லடிஸ் வீரமணி இயக்கி நடித்த :'சலோமியின் சபதம்' பைபிளில் வரும் சலோமியின் கதையை ஒஸ்கார்வைல்ட் நாடகமாக எழுதியிருந்தார். அதுவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு லடிஸ் வீரமணியால் மேடையேற்றப்பட்டது. பார்த்தவர்கள் முற்றுமுழுதாக அந்த நாடகத்தின் தன்மையினால் கவரப்பட்டார்கள்.
ஆரம்பக்காட்சியில் ரோமாபுரி வீரர்கள், கலீலி வீரர்கள் கவர்ச்சியான ஆடை, அணிகலன்களுடன் மேடையில், நிரம்பியிருந்தார்கள். ஏரோது மன்னனின் மாளிகையின் முன்னுள்ள புற்றரையில் கைகளில் மதுக்கிண்ணங்களுடன் அவர்கள் பேசிக்கொள்வதும், உலாவிவருவதும் மிகச்சிறந்த நெறியாள்கையின் வெளிப்பாடாக சீருடன் இருந்தது. ஓஸ்கார் வைல்ட்டின் வசனங்களை அவர்கள் அழகு தமிழில் பேசினார்கள்.
நிலவைப் பார்த்து அவர்கள் பேசினார்கள். சிரியநாட்டு இளைஞன், நிலவு இளவரசி சலோமி போல இருப்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஹேரோதியா அரசியின் பணியாளோ 'நிலவு மரணக்குழியிலிருந்து எழுந்து வந்ததுபோல இருக்கிறது. அது சாவின் துர்க்குறி' என்கிறான்.
அவர்களுக்கு நடுவே கம்பீரமாக நடந்து வரும் ஏரோது அன்ரிபாஸ் (லடிஸ் வீரமணி) என்ற குறுநிலமன்னன். அவனது பிறந்தநாளைக்குறிக்குமுகமாக நடனமாடும் அவனது பெறாமகள் சலோமி(சந்திரகலா). பாதாளசிறையில் இடப்பட்டபோதும், அஞ்சாமல் யேசுவின் வருகையைக்கூறும் ஜோவான் (கலைச்செல்வன்) போன்ற பாத்திரங்கள்.
தனது பெறாமகளின் ஆட்டத்தினால் மகிழ்வுற்ற ஏரோது அன்ரிபாஸ், 'நீ எதை விரும்புகிறாயோ.. அது உன்னதாகட்டும்' என்று சலோமிக்கு சொல்கிறான். தனது தாயின் தூண்டுதலினால், தனது ஆட்டத்திற்கு பரிசாக ஜோவானின் தலையை ஏரோதுவிடம் கேட்டுப் பெறுகிறாள் சலோமி.
ஏறக்குறைய 50 வருடகாலத்திற்கு முந்திய ஒரு தமிழ்நாடகத்தில் சலோமியின் நடனத்தை, பொருத்தமான பின்னணி இசையுடன் புதுமையாக லடிஸ்வீரமணி நிகழ்த்திக்காட்டினார். சபையில் இருந்த நாங்கள் 'கண்கள் வெட்ட மறந்து' பார்த்திருந்தோம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அது என் மனதைவிட்டு அகலவில்லை.
லடிஸ் வீரமணி கொழும்பு ஜிந்துப்பிட்டிப் பகுதியில் இருந்த மனோரஞ்சிதகானசபா மூலமாக நாடகத்துறைக்கு வந்தவர். இவர் நடித்த முதலாவது நாடகமான 'மல்லிகா' 1945ம் ஆண்டில் மேடையேறியது. தொடர்ந்து அரைநூற்றாண்டு காலத்திற்கு மேலாக கலைத்துறையில் நின்று ஜொலித்தவர்.
'தாய்நாட்டுஎல்லையிலே', 'கங்காணியின்மகன்', 'நாடற்றவன்','சலோமியின் சபதம்', 'கலைஞனின் கனவு', 'மனிதர் எத்தனை உலகம் அத்தனை','ஊசியும் நூலும்' போன்ற பல நாடகங்களை தானே எழுதி, இயக்கி மேடையேற்றியிருக்கிறார்.
புகழ்பெற்ற இலக்கியகாரர்கள், படைப்பாளிகளின் அபிமானக்கலைஞராக லடிஸ் வீரமணி விளங்கியவர். நாடறிந்த எழுத்தாளர் அ.ந.கந்தசாமி தனது 'மதமாற்றம்' நாடகத்தை மேடையேற்ற தீர்மானித்தபொழுது, அதை இயக்கும் பொறுப்பை லடிஸ் வீரமணியிடமே ஒப்படைத்தார். இந்த நாடகத்தில் கவிஞர் சில்லையூர் செல்வராஜன் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்கள் நடித்தார்கள் என்பது குறிப்பிடற்குரியது.
அதேபோல கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி, தனது 'கண்மணியாள் காதையை' லடிஸ் வீரமணியே வில்லடித்துப்பாடவேண்டுமென்று விரும்பி எழுதியதாக கூறப்படுகிறது. ஆமாம். வில்லிசை நிகழ்ச்சியிலே புகழ்பெற்ற கலைஞனாகவும் லடிஸ் வீரமணி விளங்கினார்.
'உங்கள் மேடைநாடகமுன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர் யார்' என்று கேட்டபொழுது, லடிஸ் வீரமணி இப்படிப் அழகு தமிழில் பதில் சொல்லியிருக்கிறார். 'சிப்பியிலே முத்து, சேற்றிலே செந்தாமரை, குப்பையிலே குண்டுமணி, பாதையிலே வீரமணி என்றிருந்தவரை உயர்மட்டத்திற்கு கொண்டுவந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி'
'வாடைக்காற்று' திரைப்படமானபொழுது ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது. லடிஸ் வீரமணி சம்பந்தப்பட்டதுதான். பேசாலையில் வெளிப்புறப் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து, கொழும்பில் சிலோன் ஸ்ரூடியோ அரங்கில் உள்ளக காட்சி ஓன்று படம்பிடிக்கப்பட இருந்தது. ஒரு இளம்பெண்ணை பிடித்திருப்பதாக நம்பப்படும் பேயை விரட்டும் காட்சி அந்தக்காட்சியில் பேயோட்டியாக லடிஸ் வீரமணியே நடிக்கவேண்டும் என்று முடிவெடுத்து, அவரை அழைப்பித்தார்கள்.
வந்தவர் விஷயத்தை விபரமாகக் கேட்டுக்கொண்டு தயாரிப்பாளரிடம், கொஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு காணாமல் போய்விட்டார். காட்சி எடுப்பதற்கு தயார்நிலையில் இருந்தது. 'லடிஸைக் காணவில்லை' என்பதுதான் பேச்சு. ஒரு மணித்தியாலத்தின்பின் லடிஸ், தலையை 'மொட்டை'யாக சலூனில் வழித்துக்கொண்டு வந்தார். அழகிய 'பாகவதர்' கிராப்புடன் இருந்த லடிஸ் வீரமணி, நடிப்பதற்காக இந்தக்கோலத்தில் வந்து நின்றது எல்லோருக்கும் ஆச்சர்யமாகவிருந்தது.
ஆனால் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காமல், திருநீற்றை அள்ளி பூசிக்கொண்டு, உடுக்கெடுத்து அடித்து, ஆவேசமாகப்பாடி, லடிஸ் வீரமணி ஒரு பேயோட்டியை கண்முன்னால் கொண்டுவந்தார்.
ஒரு குறிப்பு. சிந்தாமணி பத்திரிகையில், 'வாடைக்காற்று'க்கான விமர்சனம் எழுதி, நடிகர்களுக்கு புள்ளி வழங்கியவர்கள், கதாநாயகர்களாக படம் முழுதும் வந்த நடிகர்களைவிட, அதிகப்புள்ளிகளை சில நிமிடங்களே வந்த கலைஞன் லடிஸ் வீரமணிக்கு வழங்கியிருந்தார்கள்.
'சலோமியின் சபதம்' 'கண்மணியாள் காதை' இரண்டும் மறைந்த அந்தக்கலைஞனின் புகழை என்றும் நினைவூட்டும்.
மகாகவி உருத்திரமூர்த்தி இப்படிச்சொல்கிறார், தணது கண்மணியாள் காதை தொடக்கத்தில் -
'புலவர் பெருந்தகை ஒருவர் புனைந்த
கப்பல் ஓட்டிய தமிழனின் கதையை
வீரமணி தன்வில்லடித் தோத
ஒரு நாட்கேட்டேன். உடல் சிலிர்ப்படைந்தேன்...'
நன்றி: http://ksbcreations1.blogspot.com/2007/02/