ஐயரின் 'ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்' – ஆய்விற்கான அவசியம் – பகுதி ஒன்று!
தத்துவம்… கோட்பாடு… திட்டமிடுதல்… செயற்பாடு……
[நண்பர் மீராபாரதி தனது முகநூலில் ஐயரின் 'ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்' நூல் பற்றி எழுதிய பதிவினை 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றது. - பதிவுகள்] ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான அனுபவங்களின் பதிவுகளாக, நினைவுக் குறிப்புகளாக, புனைவுகளாக, சுயசரிதைகளாக, ஆய்வுகளாக சில நூல்களே வெளிவந்திருக்கின்றன. இவ்வாறு வெளிவந்தவற்றில் பலவற்றை சசீவன் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அவையாவன, அருளரின் லங்காராணி, கோவிந்தனின் புதியதோர் உலகம், சி. புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து, அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை, நேசனின் புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள், சீலனின் புளொட்டில் நான், அன்னபூரணாவின் தேசிய விடுதலைப் போராட்டம் மீளாய்வை நோக்கி, அலியார் மர்சூஃப்பின் ஒரு போராளியின் டயறி, அற்புதனின் துரையப்பா முதல் காமினி வரை, மணியத்தின் புலிகளின் வதைமுகாம் அனுபவங்கள், ரயாகரனின் வதைமுகாமில் நான், ராஜினி திராணகம, ராஜன் ஹூல், கே.. சிறீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகியோர் இணைந்து எழுதிய முறிந்த பனை, செ. யோகரட்ணத்தின் தீ மூண்ட நாட்களும் தீண்டாமைக் கொடுமைகளும், மற்றும் பாலநடராஜ ஐயர் எழுதிய நூலொன்றும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இவை எல்லாவற்றையும் வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த வரிசையில் இறுதியாக வந்துள்ள நூல், கணேசன் என்கின்ற ஐயரின் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்பதாகும். இதை இணையத்தில் வெளிவந்தபோது வாசித்து பின் நூலாக வெளிவந்தபின் இரண்டாம் தரமாக வாசிக்கின்றேன். சில நூல்களைப் பல மீள் வாசிப்புகளுக்கு உட்படுத்தப்படும் பொழுதுதான் அதன் பல்வேறு விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அவ்வாறான அவதானிப்பினை அடிப்படையாகக் கொண்ட சில குறிப்புக்களே இந்தப் பதிவு.